வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

Sulgi KaNda Sivan

From மரபு விக்கி

Jump to: navigation, search

Sulgi's Siva


Recovered from the archives and already included in Google Site on SumeruTamil Text; Sulgi;s Hymn B See


https://sites.google.com/site/sumerutamiltex/sulgi-s-hymn-b/lines-56-81


சூல்கி கண்ட சிவன்.

முனைவர் கி. லோகநாதன்


அன்பர்களே,

சூல்கியின் முதரீபியத்தில் வரும் வரிகள் 73-74 களை ஆழ ஆழ சிந்திக்க உலக சமயங்கள் அனைத்தையும் ஒத்து நோக்கி அவை எவ்வகையில் ஒன்றுபடுகின்றன எவ்வகையில் பேதப்படுகின்றன என்று ஓரளவு தெளிவாக அந்தத் தெளிவின் அடிப்படையில் இந்தக் கட்டுரை. சுமேருத் தமிழில், சுமேரு மக்கள் வளர்த்த சமயத்தில் எழுந்த கருத்துக்களே திரிபுற்று சைவம் வைணவம் சாக்தம் என்றும் கிறித்துவம் இசுலாம் என்றும் இன்னொரு வகையில் புத்தம் வேதாந்தம் என்றெல்லாம் பிளவு பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ஒன்றாகிய மூலக் கருத்தை, சுமேருத் தமிழில் புதைந்து கிடப்பதை இந்த உலக சமயங்கள் வரலாற்று சூழல்களுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் அந்தப் பழைய சுத்தசமயத்தையே நிலைநிறுத்த முயன்றிருக்கின்றன என்றும் தெரிகின்றது. அதனை விளக்குவதாகவே இக்கட்டுரை அமைகின்றது.
இந்த சமயத்தை 'சுத்த சமயம்' என்றே அழைப்போம். இந்த சுத்தசமயம் சுமேருத் தமிழர்களின் சிந்தனையில் இருந்த ஒன்றாகத் தெரிய அதனை சற்று விளக்குவதாக ந்தக் கட்டுரை.

சிபனே சிவன்

வரலாற்று சிறப்புமிக்க அந்த இரண்டு வரிகள் கீழ் வருவன
73. sipa ildum-ma-bi su-bi hu-mu-dug
(and) for the shepherds and pack dogs it was a pleasant (time)
சிப எழு(ந்)தும்ம சூ-பி தூக்கும்மு

74. u-me-da u-ul-li-a-se
(though) always and always
உண்மையொடு ஊ ஊழியசே

இங்கு நிச்சயமாக முதல்வரியின் மொழி பெயர்ப்பு தவறானது, இரண்டாவது வரி ஓரளவுப் பொருந்துவது: "உண்மையோடு ஊழி காலம் வரை" என்பதாகக் கொள்ளலாம். இங்கு நிச்சயமாக தமிழ் 'ஊழி' கருத்து இருக்கின்றது. அண்டசராசரம் அனைத்தும் ஊழித்தீயில் அழிந்து முற்றிலும் இல்லாமற் போவதே இங்கு குறிக்கப்படும் காலக் குறிப்பு ஆகும். இது மிக ஆழமான பிரபஞ்சக் கோட்பாட்டினை சூல்கி கொண்டிருந்தான் என்பதைக் காட்டுகின்றது. சைவ சமயத்தில் இதைத் தான் சாதாரண பிரளயங்களுக்கு வேறாக 'மகாப்பிரளயம்" என்பார்கள். ":உண்மையொடு" என்பதை " மெய்யாக" , "அகச் சுத்தத்தோடு மெய் பக்தியின்" என்றெல்லாம் கூறலாம். அடுத்து "su-bi hu-mu-dug" "சூர்பி தூக்கும்மு" என்பது. இங்கு "கரம்குவித்து கும்பிடல்” (su=sur>சூர்> கரம்) சுட்டப்படுகின்றது என்பது தெளிவு. இன்று இந்து மக்களிடையே விளங்கும் பழக்கம் அன்றும் சூல்கியின் மாட்டும் ஆகவே மக்களிடையேயும் விளங்கிற்று என்பது தெளிவாகின்றது. இப்படி அவன் கையெடுத்து ஊழிகாலம் வரை கும்பிட்டுக் கொண்டே இருப்பேன் என்று கூறுவது யாரை? என்று கேள்வி எழ "sipa" என்னும் சிவனைத்தான் என்று தெளிவாகின்றது. ஆனால் யார் இந்த "sipa"? இங்குதான் "sipa ildumm-ma" என்பதை இன்னும் ஆழமாகக் கருத வேண்டும். சுமேருவில் 'il' என்பது ' இயல்' என்றோ 'எழு' என்றோ ஆகும். எவ்வாறு கொண்டாலும் "இயல்தும்ம" அல்லது "எழு(ந்)த்தும்ம" என்றாகிறது. இயல்வது அசைவது எழுவது என்பதற்கெல்லாம் உள்நின்று அவற்றின் சத்தியாக, அந்த உயிர்ப்பிக்கும் அசைவிற்கும் காரணமாக இருப்பது இந்த சிவன் ஆகின்றான். பிற்காலத்தில் இதேப் பெயரில் தமிழில் "நாத தத்துவம் " அதாவது உயிர் மூச்சிற்கு முச்சாக இருக்கும் சத்தி இவ்வாறு விளம்பப்படுகின்றது. எனவே இதனை "நாதசிவன்" என்று பிரித்தறிவோம்.

இன்னும் ஒன்று. சுமேரு மொழியில் அடிக்கடி வரும் ஒர் சொற்றொடர்: sipa sag-gig-ga என்பது. இதனைப் பொதுவாக " the shepherd of the black-headed people" என்றே மொழிபெயர்க்கின்றனர். iதுவும் முற்றிலும் பொருந்தாத ஒன்று என்றே தெரிகின்றது. " சிவ சான் கிங்க> சிவன் சான் கிரிங்க> சிவ சான் கிலிங்க> சிவன் சான் கலிங்க" என்று கொண்டால் "கலிங்க சனத்தின் சிவன்" அதாவது "கலிங்க சனத்தின் காவலன், சேவியன் " என்றாகின்றது. சீனர்களை தமிழர்களை கருப்பர்கள் என்ற குறிப்பில் "kling" என்றே iன்றளவும் அழைத்து வருகின்றனர் என்பதைக் காண்க. iங்கு 'சிவன்' சேவகன் அல்லது சேவியன் ஆகின்றான. மாணிக்கவாசகரின் "சேயோன்" என்பதின் பொருளும் இதுவாக இருக்கலாம். எவ்வாறு இருப்பினும் தொடர்ந்து உயிர் வாழ்தலைத் தரக்கூடிய 'நாத சிவன்' இங்கு சுட்டப்படுவதைக் காண்க.

பிற்காலத்தில் கிரேக்கர்களால் தொழப்பட்ட தெய்வங்களுள் 'zeus" என்றோர் தெய்வம் உண்டு. இச்சொல்லை "zi-us" என்பதின் திரிபாகக் கொள்ளலாம். அதன் பொருளை "உசிரின் ஜீவன்" என்று கொண்டால் மீண்டும் 'நாத சிவன்" வருவதைக் காண்க.


சிவனும் ஆண்ணும்

சுமேரியர்கள் பல தெய்வ வழிபாட்டினர். ஐம்பூதங்களைக் கண்டு அவற்றை அதிட்டித்து நின்று ஆட்டிவைக்கும் தெய்வங்களாக ஏண்வளி (Enlil, வளியின் தெய்வம் ) ஏண்அயம் (En-a> Ea, அயம் எனும் நீரின் தெய்வம்) ஏன்கீழ் (Enki, நிலத்தின் தெய்வம்) ஏண்அன்னா( Enanna; வானின் தெய்வம் ) என்றும் முடிவாக ஏண்முருகர் (Enmerukar, முருகாகிய நெருப்பின் தெய்வம்) என்றும் கொண்டிருந்தனர். மேலும் ஈன்னனை போன்று உலகியல் கிருத்தியங்களைக் கண்டும் அவற்றிற்குரிய தெய்வங்களையும் கண்டுள்ளனர். ஆயினும் இந்த எல்லா தெய்வங்களுக்கும் தெய்வமாக "ஆண்' எனும் தெய்வத்தையே கொண்டிருந்தனர் என்பதும் காணக்கிடக்கின்றது. எல்லா தெய்வங்களும் இந்த ஆண் இடமிருந்துதான் தத்தம் சக்தியைப் பெருகின்றன என்று ஏண் உடு அண்ணா தெள்ளத் தெளிவாக தமது சீர்பியத்தில் கூறியிருக்கின்றார்கள். அதனை மீண்டும் சிறிது காண்பம்.

1. nin-me -sar-ra u-dalla-e-a
நின் மெய் சர்வ உள் தெள்ளிய (அல்லது தள்ளிய)
2. mi-zi me-lam gur-ru ki-aga-an-uras-a

மை ஜீ மேளம் கூரை காங்க வான் ஊரஸ்ய
3. nu-gig an-na suh-kesda gal-gal-la
நுங்கி ஆண்ண சிக கட்டு கள்கள்ள

இங்கு சர்வ சத்திகளின் தலைவியாகிய அம்மை, சீர்மகள் விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தாலும் விரும்பப்படுகின்றவள், ஒளியையே தன் ஆடையாகக் கொண்டிருக்கும் பராபரை ஆண்ணது கிழத்தி என்று விளிக்கப்படுவதைக் காண்க. மேலும் வரலாற்று சிறப்பு மிக்க கீழ் வரும் வரிகளையும் நினைவு கூர்வோம்.

14. an-ne me-si-ma nin ur-ra u-a
ஆண்ணே மெய் சீயிம்ம நின் ஓரிய உய்வ (ஓய்வ)

15.inim-ku-an-na-ta inim-du-du
எனம் கோ அண்ணாத்தே எனம் தூத்தூ

எல்லா சக்திகளின் தலைவியாக விளங்கும் ஈனன்னை, தனக்கென்று எந்த சக்தியும் இல்லாதவள். ஆண் அருளத்தான் இவள் கொற்றவையாக துர்க்கையாக வெல்லாம் திகழ்கின்றாள். இதை அவள் அறியாதவளும் அல்ல. அதனால்தான் ஆண் சொற்பிழையாதே இவள் உலக நாடகத்தை நடாத்துகின்றாள்.

ஆக இந்த "ஆண்"னிற்கு மேலாக எந்த தெய்வமும் இருக்கமுடியாது, இவனே திருமூலர் விளம்பியவாறு, தானே தனக்குத் தலவனாகிய தற்பரன், தனக்கு தலைவனாக யாரையும் கொண்டவன் அல்லன்
இந்த "ஆண்" என்ற தெய்வத்தை வரலாற்று காலத்தில் தமிழர்கள் கொண்டிருந்தார்களாக? அப்படிக் கொண்டிருந்தால். அதற்கு என்ன சான்றுகள்?

தமிழர்களின் ஆண்

தமிழர்கள் இன்றளவும் இறைவனை " ஆண்டவன்" என்றே அழைக்கின்றனர். இது வடமொழியில் பயிலாத ஓர் தூய தமிழ் சொல். " ஆண்-அவன்" என்பதின் எழுத்துப் புணைச்சியால் வரும் விகாரம். சித்தர் திருவள்ளுவர் "ஆண்டே" "ஆண்டையே" "ஆண்டகையே" என்றெல்லாம் சீடனை "தெய்வமே " என்ற பொருளில் விளிப்பர்.
தொல்காப்பியத்தில் "ஆண்" என எந்த தெய்வமும் சுட்டப்படவில்லையனினும் சங்க இலக்கியத்தில் அதிலும் குறிப்பாக சேரநாட்டுத் தமிழில் இச்சொல்" முழுமுதல் தெய்வம் " என்ற கருத்தொடு பயின்றிருப்பதைக் காண்கின்றோம். (தொல். பொருளதிகார சூத்திரங்கள் அனைத்தும் நமக்குக் கிட்டவில்லை என சில அறிஞர்கள் கூறுவர்.)
பதிற்றுப்பத்து தொகை நூலில் மூன்றாம் பத்தில் வரும் "கான் உணங்கு கடுநெறி" என்னும் தலைப்பில் வரும் 25ஆம் பாடலின் கீழ்கண்ட வரிகளைக் காண்க:

மாஆடிய புலன் நாஞ்சில் ஆடா
கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை
இனம்பரந்த புலம் வளம் பரப்பு அறியா
நின் படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி
நீ, உடன்றோர் மன்னெயில் தோட்டி வையா;
கடுங்கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்துப்
பசும்பிசிர் ஒள்ளழல் ஆடிய மருங்கின்
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடுநெறி
முனையகன் பெரும்பாழாக மன்னிய.

இங்கு எட்டாவது வரியில் வரும் 'ஆண்டலை' என்பதே நம் ஆய்விற்கு உரியது. இச்சொல் "ஆண்-தலை" என்பதின் திரிபு, இதற்கு உரையாசிரியர்கள் "ஆண் மகனது தலையை உடைய பறவை" என்று கூறுவது மிகவும் பொருத்தமற்றதாகும், வீணான கற்பனை. அப்படி யென்றால் உண்மைப் பொருள்தான் என்ன? ஆண் என்னும் தெய்வம் தலைப்பட்டு , அதாவது வெளிப்பட்டு நிற்கும் வெப்பமும் கனலும் நிறைந்த கடுநெறி அதாவது வழி என்பதே உண்மையானப் பொருள் என்று கொள்ளவேண்டும். இங்கு இவ்வாறு தலைப்பட்டு நிற்கும் ஆண் சுடலையாடியாகிய உருத்திர சிவன் தான். சுடர் சிறந்து உருத்த ஒள்ளழலாகிய நெருப்பில் ஆடுகின்றவன் வேறு ஆராக இருக்கமுடியும்? சுடலையாடியாக வர்ணிக்கப்படும் உருத்திர சிவன் தானே?

காரைக்கால் பேயாரின் கீழ்கண்ட பாடலைக் காணுங்கள்.

கொங்கை திரங்கி நரம்பு எழுந்து குண்டுகண் வெண்பல் குழிவயிற்றுப்
பங்கி சிவந்து இருபல் நீண்டு பரடு உயர் கணைக்காலோர் பெண்பேய்
தங்கி அலறி உலறு காட்டில் தாழ் சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்து அனல் ஆடும் எங்கள் அப்பன் இடந் திருவாலங்காடே!

"அனல் ஆடும் எங்கள் அப்பன்" என்று காரைக்கால் பேயாரால் துதிக்கப்படும் சங்கார தாண்டவத்து உருத்திர சிவனே மேற்கூறிய பதிற்றுப்பத்து பாலைக் கௌதமனார் பாட்டிலும் வரும் " ஆண்டலை" யாகும் என்பது வெளிப்படை. தொல்காப்பியத்தில் விடப்பட்ட பாலைதெய்வம் இந்த ஆண்டலையாக இருக்கலாம். பாலைப் பாடி சிறப்புற்ற கௌதமன் பாலை தெய்வத்தை பாடாது இருப்பாரா?

ஆயினும் இன்னும் சிந்திக்க "ஆண்" என்னும் பெயர் திருமாலுக்கும் உரியதாக விளங்கிற்று என்று கொள்வதற்கும் இடம் உண்டு. பல பாடல்களில் "அண்ணல்" என்றாலே திருமாலே என்று குறிக்கவும் படுகின்றது.
பதிற்றுபத்து நான்காம் பத்தில் அடங்கும் காப்பியாற்று காப்பியன் பாடிய "கமழ்குரல் துழாஅய்" என்ற தலைப்பில் திருமாலைத் துதிக்கும் பாட்டில் "ஆண்கடன்" என்ற ஓர் அழகிய சொல் வருகின்றது.
...
கண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி
நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர,
மணிநிற மையிருள் அகல நிலா விரிபு
கோடுகூடு மதியம் இயல் உற்றாங்குத்
துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்டு
ஆண்கடன் இறுத்த நின் பூண்கிளர் வியன்மார்பு
.....
இங்கு மக்கள் திருமாலை செவ்வே வழிப்பட்டு மனநிறைவோடு துஞ்சுபதி செல்லும் வகையில் அவனது ஓர் சாதனை போற்றப்படுகின்றது. ஆக இங்கு 'ஆண்கடன்" என்பது உரையாசிரியர்கள் கொள்வது போல "ஆண்மையின்" கடன் அதவாது பகைவரை வென்று வாகை சூடுதல் என்றல்லாது, திருமாலுக்குரிய "தெய்வகடன்" செய்தான் என்று கொள்வது பொருத்தமாகும். "ஆண்கடன்" என்பது "தெய்வகடன்" என்றே பொருள் படுகின்றது.

ஆக "ஆண்' என்ற சொல் சங்க காலத்தில் "முழுமுதல் தெய்வம்" "தானே தனக்கு தலைவனாகிய தற்பரம் " என்ற பொருளில் ஓரிடத்தில் உருத்திர சிவனாக பிறிதோர் இடத்தில் திருமாலாக என்றெல்லாம் தலைப்பட்டு வெளிப்பட்டு மக்கள் உணரத் தன்னைக் காட்டியுள்ளது என்றே கொள்ளவேண்டிருக்கின்றது.

சூல்கியின் சிவனும் ஆண்ணும்

இதுகாறும் விளக்கியவற்றிலிருந்து உயிர்ப்பிற்கு காரணமாக இருக்கும் zi-us ஆகிய நாதசிவன் முழுமுதல் தெய்வம் அல்ல, இந்த "ஆண்' அல்ல மாறாக இந்த ஆண் தன்னைக் காட்டும் ஓர்வடிமே, தான் தலைப்படும் ஓர் வடிவமே என்றாகின்றது. உருத்திர சிவனைப் போல தந்துழாய் திருமாலைப் போல, இந்த நாத சிவனும் அனைத்திற்கும் மூலமாக நிற்கும் இந்த 'ஆண் " தலைப்படும் வடிவங்களே யாகும்.

இனி அடுத்த பகுதியில் எவ்வாறு சுத்தசமயம் என்பது இந்த ஆணையே தெய்வமாக் கொண்டது என்றும் பிறகு உலக சமயங்கள் அனைத்தும் எவ்வாறு இந்த சுத்த்சயத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் என்றும் காண்போம்.







Contributors

Ulagankmy

This page was last modified on 22 January 2011, at 03:18. This page has been accessed 2,262 times.