வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள் - மருதி

From மரபு விக்கி

Jump to: navigation, search

from rajam rajam@earthlink.net
to மின்தமிழ் <mintamil@googlegroups.com>


மருதி


யார் இந்த மருதி? அவளுக்கு மணிமேகலைக் காப்பியத்தில் என்ன வேலை?


மருதி ஒரு சாதாரணப் பார்ப்பினி. காவிரியில் நீராடி வருகிறாள். தனியாக வரும் அவளைக் காவிரித் துறையில் பார்க்கிறான் ககந்தன் என்பவனுடைய மகன். தனியாக வருவதனால் அவளுக்குக் காப்பு இல்லை, அவள் மன உறுதி இல்லாதவள் என்று நினைத்து "நீ வா" என்று அவளை அழைக்கிறான். அதனால் மருதி மனம் கலங்கிப்போகிறாள்.

"தெள்ளு நீர்க் காவிரி ஆடினள் வரூஉம்
பார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி-க்
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
'நீ வா' என்ன, நேரிழை கலங்கி ..."


அப்படிக் ககந்தனுடைய மகன் கூப்பிட்டதனால் மருதி என்ன செய்கிறாள்? தன் வீட்டுக்குப் போக அவளுக்கு மனம் வரவில்லை. இனிமேல் தனக்குத் தன் கணவனின் இல்லத்தவளாக இருக்கும் உரிமை போயிற்று என்று கலங்குகிறாள்.


"மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்;
புக்கேன் பிறன் உளம்; புரி நூல் மார்பன்
முத்தீப் பேணும் முறை எனக்கு இல்-என..."

[சுருக்கமான பொருள்: மண்ணுலகில் மழைவளம் தரும் பெண்கள் பிறருடைய எண்ணத்தில் புகமாட்டார்கள். ஆனால், நானோ பிறன் ஒருவனுடைய நினைப்பில் புகுந்தேன். இனிமேல், பூணூல் அணிந்த என் கணவனோடு சேர்ந்து மூன்றுவகைத் தீயைப் பேணும் தகுதி எனக்கு இல்லை ...]


இப்படி நெஞ்சம் கலங்கிய மருதி என்ன செய்கிறாள்?

அந்த நகரத்தில் உள்ள பூதசதுக்கத்துக்குப் போகிறாள். போய், புலம்புகிறாள்.


"கொண்டோன் பிழைத்த குற்றம் தானிலேன்;
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிது ஆயினேன்;
வான் தரு கற்பின் மனையறம் பட்டேன்
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்;
பொய்யினைகொல்லோ? பூத சதுக்கத்துத்
தெய்வம் நீ?"

[சுருக்கமான பொருள்: என்னைக் கொண்டவனுக்கு (== கணவனுக்கு) நான் பிழை செய்ததில்லை. என்னைப் பார்த்தவன் மனதில் எளிதாகப் புகுந்துவிட்டேன். மழையைத் தரும் கற்புடைய இல்லறவழியில் நடந்தேன். யான் செய்த குற்றம் என்ன என்று தெரியவில்லை. பூதசதுக்கத்துத் தெய்வம் நீ பொய்த்துப்போனாயோ?]


(குறிப்பு: இங்கே "வான் தரு கற்பின் மனையறம் பட்டேன்" என்பதற்கு உரையாசிரியர் கூறுவதிலிருந்து என் பொழிப்புரை வேறுபடுகிறது.)


மாபெரும்பூதம் மருதியின்முன் தோன்றுகிறது.


"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய்-எனப் பெய்யும் பெரு-மழை என்று அ-ப்
பொய்-இல் புலவன் பொருள் உரை தேறாய்;
பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு
விசி பிணி முழவின் விழாக்கோள் விரும்பி-க்
கடவுள் பேணல் கடவியை, ஆகலின்"

[சுருக்கமான பொருள்: தெய்வத்தைத் தொழாமல், கொண்ட கணவனைத் தொழுது எழுபவள் 'பெய்' எனச் சொன்னால் பெருமழை பெய்யும் என்று சொன்ன அந்தப் பொய்க்காத புலவனின் பொருள் பொதிந்த சொற்களை நீ புரிந்துகொள்ளவில்லை. பிசி (== புதிர்), நொடி (== விடுகதை) இவையெல்லாம் பிறர் சொல்லக்கேட்டு, முழவு ஒலிக்கும் விழாக்கொண்டாடுதலை விரும்பி, கடவுளைப் போற்றுதலை கடமையாகக் கொண்டாய். அதனால் ... .]


"மடவரல் ஏவ மழையும் பெய்யாது;
நிறையுடைப் பெண்டிர் தம்மே போல-ப்
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை;
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின், ஆயிழை
ஓங்கிரு வானத்து மழையும் நின் மொழியது,
பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போல-க்
கட்டாது உன்னை என் கடும் தொழில் பாசம்"

[சுருக்கமான பொருள்: நீ ஏவினால் மழையும் பெய்யாது, பிறர் நெஞ்சைச் சுடும் தகுதியும் உனக்கு இல்லை. அந்தச் செயல்களை (== பிசி, நொடி கேட்டல், விழாவை விரும்புதல், கடவுளைப் பேணுதல்) நீ விட்டொழித்தால் ... உயர்ந்த வானத்து மழையும் உன் சொல் கேட்கும்; மனம் விரும்பியபடி நடக்கும் பெண்டிரைக் கட்டுவதுபோல என் கடுமையான பாசம் (== பாசக் கயிறு?) உன்னைக் கட்டாது.]


"மன்-முறை எழுநாள் வைத்தவன் வழூஉம்
பின் முறை அல்லது என் முறை இல்லை;
ஈங்கு எழு-நாளில் இளங்கொடி நின்பால்
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்
ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டு ... "

[சுருக்கமான பொருள்: மன்னவன் முறையாக ஏழு நாட்கள் காத்திருந்து முறைவழங்குவதைத் தவிர, அது என் முறை இல்லை. இன்னும் ஏழு நாட்களில், உன்பால் மனம் வைத்த மயக்கம் கொண்ட அவனைக் ககந்தனே விசாரித்து வாளால் வெட்டுவான்.]


அப்படி அந்தப் பூதம் குறித்துச் சொன்ன நாளில் அந்தக் கயவன் [ககந்தனின் மகன்] அவனுடைய தந்தையின் [ககந்தனின்] வாளால் வெட்டப்பட்டான்.


(குறிப்பு: அதன்பிறகு மருதியின் நிலை என்ன என்று தெரியவில்லை.)



ககந்தன் சிறுவன் கதை


மருதியைப் பார்த்துத் தன்னிடம் வா என்று சொன்னவன் யார்? அவன் கதை என்ன?


அரசர்களை வேரோடு அழிப்பது என்ற உறுதி பூண்டிருந்தான் பரசுராமன் ("மழுவாள் நெடியோன்"). அவனிடமிருந்து காந்தன் என்ற மன்னனைக் காப்பாற்றவேண்டி, அந்த ஊர்த் தெய்வம் ("கன்னி") அவன்முன் தோன்றி அவன் ஒளிந்துகொள்ளவேண்டும் என்று சொல்லுகிறது. தான் ஒளிந்துகொள்ளவேண்டுமானால் அந்த நகரத்தை யார் காப்பது என்று நினைத்துப்பார்த்த காந்தன் ஒரு காவற்கணிகையிடம் தனக்குப் பிறந்த, யாருக்கும் சிறப்பில் குறைவில்லாத, ககந்தனைக் கூப்பிட்டுச் சொல்கிறான்.


"அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின்
பரசுராமன் நின்பால் வந்து அணுகான்;
அமர முனிவன் அகத்தியன் தனாது
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்றளவும்
ககந்தன் காத்தல் காகந்தி என்றே
இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டு ..."

[சுருக்கமான பொருள்: அரசு ஆளும் உரிமை உனக்கு இல்லை அதனால் பரசுராமன் உன்னை நெருங்கமாட்டான். அகத்திய முனிவன் சொற்படி நான் வெளிப்பட்டுவரும்வரை ககந்தன் ஆகிய நீ காப்பது உன் கடமை என்று சொல்லி, அந்த ஊருக்குக் காகந்தி என்ற பெயரிட்டு, தான் மாற்றுருவம் கொண்டு அந்த இடத்தைவிட்டு நீங்கிப்போகிறான்.]


அப்படி, காகந்தி என்ற பெயரைப் புதிதாகப் பெற்ற இடத்தைக் காக்கும் பொறுப்புச் சுமத்தப்பட்டவனே, கணிகை ஒருத்தியின் மகனே, ககந்தன். அவனுடைய மகனே மருதியின்பால் தவறான முறையில் மனம்வைத்தவன். அவனே தன் தந்தை ககந்தன் வாளால் வெட்டுண்டான்.



இந்த மருதிக் கதைக்கும் மணிமேகலைக்கும் என்ன தொடர்பு?

விசாகையின் கதையை இன்னொரு பதிவில் பார்த்தோம். தவ வழிப்பட்ட மணிமேகலைமேல் மனம்போக்கி அதன் காரணமாக வாளால் வெட்டுண்ட உதயகுமரனின் தந்தையாகிய சோழ அரசனுக்கு விசாகையின் கதை ஏன் சொல்லப்படுகிறதோ அதே காரணத்தால்தான் இந்த மருதியின் கதையும் சொல்லப்படுகிறது.


"இன்றே அல்லது இப்பதி மருங்கில்
கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து
பத்தினிப்பெண்டிர்பால் சென்று அணுகியும்
நல் தவப் பெண்டிர்பின் உளம்போக்கியும்
தீவினை உருப்ப உயிர் ஈறு செய்தோர்
பாராள் வேந்தே பண்டும் பலரால் ..."

[சுருக்கமான பொருள்: பார் ஆளுகின்ற வேந்தனே! காமத்தின் வயப்பட்டு, பத்தினிப்பெண்டிரை நெருங்கியும் நல்ல தவவழிப்பட்ட பெண்கள்மேல் மனம் வைத்தும் தம் தீய செயலால் உயிர் இழந்தவர் பலர் இன்றைக்கு மட்டுமில்லை, பண்டைக்காலத்திலும் உண்டு.]


இந்தப் பீடிகையோடு தொடங்கி, மருதி விசாகை அகியவர்களின் கதையைச் சொல்லி அரசனையே "இன்றைக்கும் அப்படி நடக்கிறதா?" என்று கேட்கவைத்து அதன்பின் மெல்ல அவன் மகனுக்கு நேர்ந்ததைத் தெரிவிக்கும் நுணுக்கம் பாருங்கள்!


அதோடு, ஒரு சிறு கிளைக்கதைக்குள் பொதிந்துகிடக்கும் கருத்துச் செறிவையும் பாருங்கள்!


கொழுநனைத் தவிர பிற கடவுளைத் தொழுவதை ஏற்காத ஒரு நிலை, அப்படிப் பிற கடவுளைப் பேணுவதால் பெண்ணுக்கு ஏற்படும் இழப்பு (== மழை பெய்விக்கும் ஆற்றலை இழத்தல்), தன் ஈடுபாடு இல்லாமல் எவனோ ஒரு கயவன் தன்னை விரும்பினால் தான் விரும்பிச் செய்யாத குற்றத்துக்காகப் பெண் தன்னை நொந்துகொள்ளுதல், பூதசதுக்கத்துப் பூதத்தின் முன் தானே போய்த் தன்னை ஒப்படைத்துக்கொண்டு முறையிடல், பூதசதுக்கத்துப் பூதம் நீதியைத் தன்கையில் எடுத்துக்கொள்ளாமல் மன்னவன் கையில் விட்டுவிடுதல், ... இன்ன பிற செய்திகளும் ...


அதோடு ... "பொய்யில் புலவன்" என்று திருக்குறள் செய்த புலவனைக் குறிப்பிடல், பரசுராமன் கதை, அகத்தியன் பெயர்க்குறிப்பு, காகந்தன் என்ற அரசன் பெயர், கணிகையின் சிறுவனுக்கு அரசாளும் உரிமை இல்லாமை, காகந்தி என்ற ஊர்ப்பெயர், ... இன்ன பிற செய்திகளும் ...

அள்ளித்தருவதோடு ...


"மணிமேகலை, திருக்குறள் என்ற இரண்டு இலக்கியங்களை இருவேறு 'சமயப் பெட்டியில்' அடைத்துக் காண முடியுமா?" என்ற கேள்வியையும் முன்வைக்கிறது இந்த மருதியின் கதை.


அதோடு ... பூதம் ஒன்றின் வாயிலிருந்து வந்தது இந்த "தெய்வம் தொழாள் ...." என்ற மேற்கோள் என்பது இதுவரை எத்தனைப் பேருக்கு உறுதியாகத் தெரிந்திருக்கும்?


அதோடு ... "கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை" என்றெல்லாம் மேடையில் முழக்கம் கேட்டிருப்போம். அதன் தொடக்கம் இங்கே பார்க்கிறோம்.

அதனால்தான் மணிமேகலையைப் படிக்கவேண்டும்! :-)


அன்புடன்,
ராஜம்

--Ksubashini 06:34, 29 அக்டோபர் 2011 (UTC)

Contributors

Ksubashini

This page was last modified on 29 October 2011, at 06:35. This page has been accessed 2,218 times.