வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 1 தொடர்ச்சி 2

From மரபு விக்கி

Jump to: navigation, search

 புதிய கற்கோயில்


பொழுது விடிந்தது. இடியினால் கறை படிந்து போன அன்னையின் அற்புத சுருபத்தை மக்களின் பார்வைக்கு வைக்கும்படியாக அவர் அதனை மாடியிலிருந்து கீழே இறக்கி புனித இராயப்பர் ஆலயத்தில் வைத்தார். தூத்துக்குடி வாழ் மக்கள் திரள் திரளாக வந்து அன்னையின் கருமையான கோலத்தைக்கண்டு மனம் வெதும்பி அழுது புலம்பினார். தங்களின் பாவங்களுக்குப் பலியாகவே அன்னை கறை படிந்து உருமாறிப் போனாள் என்று எண்ணி, மக்கள் தங்கள் மார்புகளில் அடித்துக் கொண்டு நீண்ட நேரம் கதறி அழுதனர்.


பனிமய மாதாவுக்குப் புதிதாகக் கற்கோவில் அமைக்கும் தனது திட்டத்தை சுவாமி விஜிலியுஸ் மான்சி உடனடியாக செயல்படுத்த முனைந்தார். இடி விழுந்த அதே இடத்திற்கு நேர் எதிரிலே புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்ட விரும்பினார். கற்கோவில் எழுப்ப டச்சுத் தளபதியின் அனுமதி தேவை என்பதை அறிந்தார். சுவாமி விஜிலியுஸ் மான்சிக்கு டச்சு மொழி நன்றாகத் தெரியும். அதனால் டச்சுத் தளபதியிடம் புதிய ஆலயத்தைப் பற்றி டச்சு மொழியில் விளக்கமாகப் பேசி அவருடைய அனுதாபத்தைப் பெற்றார். டச்சுத் தளபதியும் பனிமய அன்னைக்குப் புதிய ஆலயம் கட்ட அனுமதி வழங்கினார். ஆனால் அந்த ஆலயத்தைக் கற்களால் கட்ட அனுமதி மறுத்துவிட்டார். காரணம் போர்க்காலங்களில் எதிரிகள் அந்தக் கற்கோவிலை அரணாகப் பயன்படுத்தக் கூடும் என அஞ்சினார். அதனால் சுவாமி விஜிலியுஸ் மனமுடைந்து போனார். இருப்பினும் அன்னையின் ஆதரவை நம்பி அவர் கொழும்பிலிருந்த டச்சு ஆளுநருக்கு முடங்கல் எழுதி, அதில் புதிய ஆலயத்தின் அளவுகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு, அதனைக் கற்களால் கட்டுவதற்கு அனுமதி வேண்டினார். டச்சு ஆளுனரும் சுவாமி விஜிலியுஸ் மான்சி தனது முடங்கலில் கூறியிருந்த காரணங்களை அலசிப் பார்த்துவிட்டுப் புதிய ஆலயத்தைக் கற்களால் கட்டுவதற்கு அனுமதி வழங்கினார். இதனால் டச்சுத் தளபதி சுவாமி விஜிலியுஸ் மான்சி மீது சற்றுக் கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். அதன் விளைவாக ஆலயம் கட்டுவதில் அவ்வப்போது சில தடைகள் குறுக்கிட்டன. ஆனால் பனிமய அன்னையின் அருளால் தடைகளெல்லாம் விரைவில் நீங்கின.


அடிக்கல் நாட்டு விழா


இறுதியில் 1712-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி (இடி விழுந்த அதே நினைவு நாளில்) மங்கிய மாலை வேளையில் பனிமய அன்னையின் புதிய கற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பல ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் மகிழ்ச்சியோடு பங்கு பெற்றனர். இதில் வியப்பு என்னவென்றால் ஆலயம் எழுப்புவதற்குப் பல தடைகளை ஏற்படுத்திய அதே டச்சுத் தளபதியும், சில டச்சு வீரர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த வகையில் அவர்கள் தங்களின் வணிகத்திற்கு மக்களின் ஆதரவைப் பெற விரும்பினர். அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற மக்கள் ஒவ்வொருவரும் அன்னைக்குத் தங்களின் அன்பின் அடையாளமாக ஒரு கல்லை அடித்தளத்தில் பதித்து விட்டுச் சென்றனர்.


அன்னையின் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகும் எதிர்ப்புகள் தொடர்ந்தன. தூத்துக்குடிக்குப் புதிதாக வந்த டச்சுத் தளபதி, ஆலய அளவுகள் பற்றிச் சில பொய்யான தகவ்ல்களையும், சுவாமி விஜிலியுஸ் மான்சி பற்றிச் சில பொய்யான குற்றச்சாட்டுகளையும் பட்டியலிட்டு கொழும்பிலிருந்த டச்சு ஆளுனருக்கு அனுப்பி வைத்தார். இதனால் ஆலயக் கட்டுமானப் பணி தடைபட்டுக் கொண்டிருந்தது. இதற்கு ஒரு முடிவு காணும் நோக்குடன் சுவாமி விஜிலியுஸ் மான்சி புதிதாக உருவாகயிருக்கும் அன்னையின் கற்கோவிலின் உண்மையான அளவுகளை வரைபடத்துடன் குறிப்பிட்டு, அத்துடன் தூத்துக்குடி டச்சுத் தளபதி தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பும் தெரிவித்து முடங்கல் ஒன்று தயாரித்து அதனை அன்றைய பரதகுல சாதித்தலைவரான தொன் எஸ்தேவான் தெ குருஸ் மூலம் கொழும்பிலிருந்த டச்சு ஆளுனருக்குக் கொடுத்து அனுப்பினார். சுவாமி விஜிலியுஸ் மான்சி அனுப்பிய முடங்கலைப் படித்த ஆளுனர், உண்மை நிலவரங்களைப் புரிந்து கொண்டு, புதிய ஆலய கட்டுமான வேலையை ஆரம்பிக்குமாறு மிகவும் பரிவோடு அனுமதி எழுதிக் கொடுத்தார். அத்துடன் பொய்க்குற்றச்சாட்டுகளைக் கூறிய தூத்துக்குடி டச்சுத் தளபதியை உடனே பதவியிலிருந்து நீக்கிக்கொழும்புக்கு வரும்படி உத்தரவு பிறப்பித்தார்.


மகிழ்ச்சிப் பெருக்கோடு சுவாமி விஜிலியுஸ் மான்சி பனிமயத் தாய்க்குப்புதிதாகக் கற்கோவில் கட்டும் பணியை ஆரம்பித்தார். ஆலயத்தின் வேலைகள் துரிதமாக நடந்தன. ஒரே ஆண்டில் வேலை முற்றுப் பெற்றது. ஆலயக்கூரையில் ஓடுகளும் பதிக்கப்பட்டன.


ஆலயத் திறப்பு விழா


பனிமயத் தாயின் அதிசயமான இந்தக் கற்கோவில், 1713-ஆம் ஆண்டு ஆகஸ்டு 5-ஆம் தேதி பனிமய மாதாவின் திருவிழா தினத்தன்று வெகு விமரிசையோடு திறந்து வைக்கப்பட்டது. திருச்சபையின் கொச்சி மாநிலத் தலைவர் எம்மானுவேல் பெரைரா இப்புதிய ஆலயத்தை அர்ச்சித்துத் திறந்து வைத்தார். அங்குத் திருவிழா பலி பூசையையும் நிறைவேற்றினார். முத்துக்குளித்துறையின் எல்லா ஊர்களிலிருந்தும் வந்து மக்கள் இத்திறப்பு விழாவில் பங்கேற்று மகிழ்ந்தனர். உள்நாட்டிலிருந்தும் பல மக்கள் அன்னையின் கலையழகு மிக்க இப்புதிய கற்கோவிலை வியப்புடன் பார்த்துச் சென்றனர். அதிசயம் என்னவென்றால் டச்சுக்காரர்களின் அதிகாரி ஒருவர் தனது மனையாளோடு இவ்விழாவில் கலந்து கொண்டார். ஏறக்குறைய நூறு டச்சு வீரர்கள் மனம் திருந்தி கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்து திருவிழா தினத்தன்று நற்கருணை உட்கொண்டனர். இது பனிமயத் தாயின் அற்புதங்களில் ஒன்று. மேலும் அந்த டச்சு அதிகாரி முற்றிலும் வெள்ளியால் பிறை போல் ஒன்று செய்து அன்னையின் பாதத்தில் வைத்துப் போனார்.


திறப்பு விழாவுக்குப் பின்னர் வந்த ஆண்டில் அன்னையின் ஆலயம் பலவிதமான அம்சங்களையும், மாற்றங்களையும் பெற்றுப் பேராலயமாக முத்து நகரில் வானளாவ உயர்ந்து நிற்கின்ற, 1982-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி திருத்தந்தை 23-ஆம் அருளப்பர் இவ்வாலயத்தைப் "பேராலயம்" (Basilica) என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தினார். புனிதப் பனிமய அன்னையின் எழில்மிகு பேராலயம், வரலாற்றுப் பாதையில் சீர்குலைவுகளையும் அதே நேரத்தில் பல அற்புத நிகழ்வுகளையும் சந்தித்து இவ்வாண்டில் 425-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடி வரலாற்றுப் பேரேட்டில் பொன் எழுத்துக்களால் பொறித்துப் பெருமைப்பட வேண்டிய ஓர் அற்புதம் என்பதில் ஐயமில்லை.


--Geetha Sambasivam 09:34, 24 ஜூலை 2012 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 24 July 2012, at 09:34. This page has been accessed 1,302 times.