வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஜூலை 31

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான்


எப்போது பற்று ஆசையை விட அடர்த்தி அடைகிறது? எப்போது பற்று வெறியாகி விரட்டுகிறது? பிறந்த மண் என்றால் வாத்ஸல்யமாகத்தான் இருக்கிறது. வளர்ந்த ஊர் என்றால் ஆசையாகத்தான் இருக்கிறது. கோவை, கொங்கு என்றால், உடனே நா.கணேசனார் எட்டிப்பார்ப்பார். அது பிராந்தீயப்பற்று. இயல்பு. பிறகு மாநிலம், நாடு, கண்டம், உலகு...இதை எதற்கு சொல்கிறேன் என்றால், வரலாற்று பதிவுகளில், பூலித்தேவன்,ராணி வேலு நாச்சியார்,மருது சகோதரர்கள், வீர பாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, தீரன் சின்னமலை போன்றோர் ஆங்கிலேயனுடன் மல்லுக்கட்டி நின்றபோது, தலை தூக்கியது, பிறந்த மண் வாத்ஸல்யமா, ஊரின் மிது காதலா, பிராந்தீய ஆசையா, நாட்டுப்பற்றா அல்லது தேசாபிமானமா அல்லது வேறு ஒரு பிணையா? வரலாற்று பார்வையில் இந்த கேள்விக்கெல்லாம், தகுந்த விடையும், அதற்கு ஆதாரமும் கிடைக்க வேண்டும். மலபார் கேரள வர்மா, அரிசிக்கரை கிருஷ்ணப்ப நாயக்கர், கன்னடத்து விட்டல் ஹெக்டே, பெல்காம் தூந்தாஜி வாக் ஆகியோரின், ஏன், தாந்தியா தோப்பின், தேசாபிமானத்தைக் குறைத்து மதிப்பிட முடியுமா? அவர்களை பற்றி என்ன தெரியும் நமது வரலாற்று பதிவுகளில்? இன்று நம்மிடம் இருக்கும் வரலாற்று பதிவுகள், ஆவணங்கள், ஆய்வுகள் சொல்வது என்ன என்று விசாரிக்கும்போது, வரலாற்றியல் பேராசிரியர் கே. ராஜய்யன் சொல்வதைக் கேட்போம்.


“வரலாற்று ஆய்வு என்பது தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் புறக்கணிக்கப்பட்ட களமாகவே உள்ளது...1749 ஆம் ஆண்டு முதல் 1753 ஆம் ஆண்டு வரையிலும் திரிச்சிராப்பள்ளியில் நடை பெற்ற பெரும் போரில் தான் ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவில் அமைய அடிக்கல் நாட்டப்பட்டது...1800 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் நாள் புரட்சிப்படையினர் தமது செயல் திட்டத்தை வகுப்பதற்குக் கூடினர். ‘பழனிச்சதித்திட்டம்’ எனப்படும் இக்கூட்டத்தில் புரட்சியணிகளின் தலைவர்களோ அல்லது அவர்களின் உதவியாளர்களோ கலந்து கொண்டனர்...”


இன்று தீர்த்தகிரிச் சர்க்கரைக்கவுண்டரின் நினைவு தினம்; ஜூலை 31, 1805 அன்று, நிழல் போல் என்றும் உடனிருந்த சகோதர்களுடன் தூக்கிலிடப்பட்டார். அதன் பின்னணி என்ன? தெளிவான விடை கிடைக்கவில்லை. தீரன் சின்னமலையின்(தீர்த்தகிரிச் சர்க்கரைக்கவுண்டர்) திட்டம், மிகுந்த பிரயாசையுடன் வகுத்த ‘கோவைப்புரட்சித் திட்டம்: 03.06.1800’. அது தவிடுப்பொடியாகி, அவரும், அவருடைய குழுவும் உயிரிழக்கக்காரணங்கள் நான்கு புலப்படுகின்றன, மங்கலாக. ஏனெனில், பின்னணியை பற்றிய தகவல்கள், ‘தந்தி போல் பாவிக்கவும்’ வகையில் உள்ளன. எனக்கு தெரிந்தவரை எழுதுகிறேன். யாராவது மேலதிக விவரங்களை, ஆதாரத்துடன் கொடுத்தால் நல்லது தானே. அவரும், அவருடைய குழுவும் உயிரிழக்கக்காரணங்கள், என் கணிப்பில்:

புரட்சிக்காரர்களில் வலிமை மிகுந்த தூந்தாஜி வாக் அவர்களிடமிருந்து தகவல் ஏதும் வரவில்லை. (ஏன்? என்று கிடைத்த ஆய்வுகள் சொல்லவில்லை. அவருடன் நடந்த பேச்சு வார்த்தையின் போது கொடுத்த வாக்கை மீறினாரா? அல்லது தமிழ்த்தலைவர்கள் தவறாக புரிந்துகொன்டனரா? திப்பு சுல்தான் நெப்போலியனை நம்பியது அப்படித்தானோ?)
இஸ்லாமிய வீரர்கள் ஆங்கிலேயரின் கோட்டையை பாதுகாத்தனர். எனவே, மொஹரம் அன்று தாக்குவதாக, அருமையான திட்டம். ஆனால், ஆர்வமிகுதியால் (?) முதல் நாளே ஆயத்தம்! எதிரி புரிந்து கொண்டான். குற்றவாளி யார்? தீரன் சின்னமலை அவர்களின் கூட்டாளிகள்?
சமையல்க்காரனின் துரோகம், சின்னமலை சகோதர்களை காட்டிக்கொடுத்தது. அத்துடன் விட்டால் போதுமா? அவனை நியமித்த பின்னணி?
புரட்சிக்காரர்கள் நோட்டம் விட்டனர்; வெள்ளைக்காரன் உளவு பார்த்தான். ஒரு இந்திய தாசில்தார் சரியான மோப்பம் பிடித்து சொல்லி விட்டார்.


எது எப்படி இருந்திருந்தாலும், இன்று தமிழர்கள் யாவரும், உலகில் எங்கு வசித்தாலும், தீரன் சின்னமலை, அவரைப்போல திருமணம் செய்து கொள்ளாத சகோதரர்கள், பெரிய தம்பி, கிலேதார் ஆகிய மூவருக்கும், அவர்களின் ‘கோவைப்புரட்சித் திட்டம்: 03.06.1800’ குழுவுக்கும், தொழுகை நடத்தவேண்டும். எனக்கு கிடைத்த பதிவுகளில் இரண்டு, புலவர் செ. இராசு அவர்களால் எழுதப்பட்டவை. அவற்றில் ஒன்றை இணைத்துள்ளேன், அருமை நண்பர் நா.கணேசாரின் தெரிவுடன்.

படிப்பினை: வரலாற்று ஆய்வை புறக்கணிக்காதே.

இன்னம்பூரான்

31 07 2011

இணப்பு:

http://kongu-usa.org/theeranChinnamalaiTamil.pdf

உசாத்துணை:

ஸ்டாலின் குணசேகரன்.த. (தொகுப்பாசிரியர்) (2000): விடுதலை வேள்வியில் தமிழகம்( பாகம் - 1 ): ஈரோடு: நிவேதிதா பதிப்பகம்.











--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:50, 1 ஆகஸ்ட் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 1 August 2011, at 16:50. This page has been accessed 1,992 times.