புலவர் முத்து.வேங்கடேசன்
தமிழ்ச் செவ்வியல் நூல்கள் பலவற்றில் இராமன் பற்றிய குறிப்புகள் காணப்படுவதால், கம்பனுக்கு முன்பே வேறு
யாராலாவது இராமகாதை எழுதப் பட்டிருக்கிறதா இல்லையா?
கம்பருக்கு முன்பே தமிழில் இராமாயண நூல்கள் இருந்திருக்கின்றன என்பதை, சங்கம் மற்றும் சங்கம் மருவிய நூல்கள் வழி அறிய முடிகிறது.
பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர்,"பாரதம் - சீராமகதை" எனக் குறிப்பிடுகிறார்.இராமாயணத்தைச் "சீராமகதை" என்றே முன்பு வழங்கினர் என்கிறார் பெரும்புலவர் மு.இராகவையங்கார்.
கம்பர் விருத்தப்பாவில் இராமாயணம் பாடினார். ஆனால்,வெண்பாவிலும் இராமாயணம் இருந்தது என்ற தகவலை,"யாப்பருங்கலவிருத்தி" என்னும் யாப்பிலக்கண நூல் கூறுகிறது. மேலும்,"பஃறொடை வெண்பாவில்" இராமாயணம்
எழுதப்பட்டதாகவும் கூறுவது நோக்கத்தக்கது. "வீரசோழியம்" என்ற இலக்கண நூல்உரையாசிரியர், "இராமாயண வெண்பா" உண்டு என்கிறார். வீரசோழியம் உரையில் காணப்படும் இராமாயண வெண்பாபின் வருமாறு:-
"மற்றிவனை மாலென்று அறிந்தால்
அவ்வாளரக்கன்
பெற்றிதருவதென் பேதையர்காள்
மற்றிவன் தன்கண்டான் கடைசிவத்தற்கு
- உண்டோ
கடலிலங்கை வண்டார் அரக்கன்வலி!
இவ்வெண்பா யாப்பின் மூலம்,கம்பருக்கு முன்பு இராமாயண நூல் இருந்தது என்பதை அறிய முடிகிறது.
புறத்திரட்டில்,"ஆசிரியமாலை" என்ற நூலில்,கம்பருக்கு முன்பே இராமாயண நூல் உண்டு என்பதும் அறியப்படுகிறது.
"ஸ்ரீபுராணம்" என்ற ஜைன நூல் மூலம் முன்பே
இராமாயணம் உண்டு என்பதை அறியலாம்.
மணிப்பிரவாள நடையில் அமைந்த இந்நூலில்,இராமாயணம்
பற்றிய நிகழ்ச்சிகள் எழுதப்பட்டுள்ளன.
ஸ்ரீபுராணத்தில் காணப்படும் ஆசிரியப்பா வரிகள் பின் வருமாறு:-
"மாற்றிவன் செய்தமாயா மானின்
நோற்றிலாதே நோக்கிய நோக்கின்
அருவினையேனை அருளிய மனத்தால்
மருவிய மாயஉருவுதரற்கு எழுந்த
மான்மறி தொடர்ந்து செல்வாள் அரிபோலக்
கான்நெறி விடுத்துக் கடுவனம் புகுந்து
மாயாப்புணர்ப்பின் மன்னனை நினைந்து
ஆயரும் தாயமும் தோழியும் இன்றியோர்
நொதுமல் ஆனவன் விதிவழி ஒழுகி
இடனிடையிட்ட சேய் மைத்தன்றியும்
கடலிடையிட்டகாப்பிற்றாகிய
இலங்கை மூதூர் இடு சிறைப்பட்டு..!
தமிழ்நாடு அரசின் கையெழுத்துப் புத்தகச்சாலையில், "பலதிரட்டு" என்ற சுவடியில்,"இராமாயண வெண்பாக்கள்"
உள்ளதையும் மு.இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். அந்த வெண்பா இதுதான்.
"வசிட்டனும் கோசிகனும் மன்னவனும் கூடி
விசித்திரமா மங்கலச்சொல்விண்டு-
சசிக்கு நிகர்
மாமுகத்துச் சீதைக்கும் வாழும் உருமிளைக்கும்
மாமுகுர்த்தம் இட்டார் மகிழ்ந்து!
நச்சினார்க்கினியர்,தொல்காப்பியப் பொருளதிகார உரையில் மேற்கோள் வரிகளாக,
"ஆள்வினை முடித்த அருந்தவ
முனிவன்
வேள்வி போற்றிய இராமன் அவனோடு
மிதிலைமூதூர் எய்திய ஞான்றே
மதியுடம்பட்ட மாக்கண் சீதை
கடுவிசைவில் நாண்இடி ஒலிகேளா
கேட்ட பாம்பின் வாட்டம் எய்தித்
துயில் எழுந்து மயங்கினன் அதான்று.
என்ற இராமாயணச் செய்திகளைக் கூறியுள்ளார். வால்மீகி இராமாயணத்தில்,இராமனும் சீதையும் திருமணத்துக்கு முன்பு சந்திக்கவில்லை என்ற குறிப்பு உள்ளது. ஆனால்,கம்பர் காட்டிய இராமனும் சீதையும் திருமணத்துக்கு முன்பே நோக்குகின்றனர்.
"அண்ணலும் நோக்கினான்,அவளும் நோக்கினாள்
என்பது கம்பர் வரி. இது தமிழ்மரபு.
இதனாலேயே, மேற்காணும் நச்சினார்க்கினியர் உரையின் மேற்கோள் பாடலும் காட்டுகிறது. சங்க இலக்கியமான அகநானூறு,
"வெல்போர் இராமன்
அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம்போல.
என,ஆலமர நிழலில் இராமன் ஆலோசனை செய்த தகவல் கூறப்படுகிறது.
"இந்தத்தகவல் அகநானூறு காலத்துக்கு முன்பே தமிழில் இராமாயண நூல் இருந்திருக்க வேண்டும்",என்ற
உண்மையைப் புலப்படுத்துகிறது. புறநானூற்றிலும்,
"கடுந்தேர் இராமன் உடன்புணர்
சீதையை
வலித்தகை அரக்கன் வவ்விய
ஞான்றை
நிலஞ்சேர்மதுரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாங்கு
என்ற வரிகள் மூலம்,"இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது,தன் அணிகலன்களை சீதை வழியில் போட்டுவிட,அவற்றை வானர வீரர்கள் கண்டெடுத்து அணிந்த நிகழ்வைஅறியலாம்.
இந்நிகழ்ச்சியைக் கம்பராமாயணத்திலும் காணலாம். சங்கம் மருவிய நூலான சிலப்பதிகாரத்திலும்,
"பெருமகன் ஏவல் அல்லதுயாங்கணும்
அரசே தஞ்சமென்று அருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர்பெரும்பே துற்றதும்.
என்றும்,
"தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக்கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீ அறிந்திலையோ நெடுமொழி அன்றோ
என்றும் கூறப்ப கள்,இராமாயணத் தகவல்களை எடுத்தியம்புகிறது. தந்தை சொல் ஏற்று,சீதையைப் பிரிந்து,இராமன்
கானகம் அடைந்த செய்தி இவ்வரிகளில் காணப்படுகிறது. மணிமேகலைக் காப்பியத்திலும்,
"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடலரு முந்நீர் அடைந்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை
எல்லாம்
அணங்குடை அரக்கர் வயிறுபுக்காங்கு.
இவ்வரிகள்,இராமபிரான்,குரங்குகளின் துணையுடன் சேதுபந்தனம்(சேதுபாலம்) கட்டியதை எடுத்துக்காட்டுகிறது.
ஆழ்வார் பாடல்களின் தாக்கமும்,கம்பன் காவியத்தில் பல இடங்களில் காணப்படுகின்றன. எனவே,அகநானூறு,புறநானூறு,சிலப்பதிகாரம்,மணிமேகலை, ஆழ்வார் பாசுரங்கள் ஆகியவற்றின் மூலம் கம்பனுக்கு முன்பே இராமாயண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. கம்பனுக்கு முன்பிருந்த இராமாயண நூல்கள் காலவெள்ளத்தால் அழிந்திருக்கக்கூடும் என்றே கருத வேண்டியுள்ளது.
--Ksubashini 17:30, 18 மே 2010 (UTC)