|
வாராணசியில் வேதம் ஓதுகிற அபஞ்சிகன் என்பவனுக்குச் சாலினி என்று ஒரு மனைவி. சாலினி இல்லறவழி தவறிவிடுகிறாள்; அந்தக் குற்றம் தீர்ப்பதற்காகத் தென் திசையில் உள்ள குமரியில் தீர்த்தமாட வருகிறாள். வழியில் ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டுத் தன் பயணம் தொடர்கிறாள். அழுகின்ற குழந்தையை ஒரு பசு பாதுகாக்கிறது; ஏழு நாட்கள் அருகே இருந்து பாலூட்டிக் காக்கிறது. அப்போது அந்த வழியில் தன் மனைவியோடு போய்க்கொண்டிருந்த பூதி என்ற அந்தணன் அழுகின்ற குழந்தைக் குரல் கேட்டு அங்கே வந்து குழந்தையைக் கண்டு "இவன் பசுவின் மகனில்லை; என் மகன்" என்று அன்போடு சொல்லி எடுத்துக்கொண்டுபோய் வளர்க்கிறான். "பசுவின் மகன்" என்பது "ஆபுத்திரன்."

பூதியின் மகனாய் வேதம் ஓதி வளரும் சிறுவன் ஆபுத்திரன் ஒரு நாள் ஓர் அந்தணரின் வேள்விச்சாலையில் நுழைகிறான். அங்கே வேள்விக்காகக் கட்டிப்போட்டிருந்த பசுவைப் பார்த்து இரக்கம் கொள்கிறான். அந்தப் பசுவைக் காப்பாற்றவேண்டி, யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து இரவில் கடத்திக்கொண்டு செல்கிறான். பசுவைக் காணமல் தேடிப் போன அந்தணர்கள் பசுவைக் கடத்திச் சென்ற சிறுவனைக் "கையும் களவுமாக"ப் பிடித்துவிடுகிறார்கள். ஆபுத்திரனை அலைக்கோலால் அறைந்து ...
"புலை-ச்-சிறுமகனே போக்கப்படுதி" என்று வெருட்டுகிறார்கள்.
சிறுவனை நையப்புடைத்த வேத வாத்தியாரை அந்தப் பசு முட்டி, அவர் குடலைக் கிழித்துவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிடிகிறது.
ஆபுத்திரன் சொல்கிறான்:
"நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின் விடு நில மருங்கின் படு புல் ஆர்ந்து நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம் பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம்பால் அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் இதனொடு வந்த செற்றம் என்னை"
மேலும் வாசிக்க...
|