சில நாட்கள் ஏற்புடைய தகவல்கள் கிடைப்பதில்லை. சில தேதிகளில் பிரமுகர்கள் பலரை பற்றி எழுதவேண்டியிருக்கிறது. இன்றைய பட்டியலின் மூவரும் மிக வித்தியாசமானவர்கள். ஒருவர் நாசகாரி; மற்றொருவர் நாசத்தின் பலி; மூன்றாவது நபர் நாசம் என்ற சொல்லை அறியாதவர்.
இது நான் கேள்விப்பட்டது. சர்ச்சிலுக்கும், அவரது மகனுக்குமோ/ மாப்பிள்ளைக்குமோ ஒரு நாள் பலத்த வாக்குவாதம். சர்ச்சில் சொன்னாராம், ‘என்னை விட முஸோலினி தான் மேல். அவன் மாப்பிள்ளையையே சுட்டுப்பிட்டான் இல்லையா!’ என்று. இன்று அந்த கொடுங்கோலன் பிறந்த நாள், 1883. பாசிஸிசத்தை 1919ல் அறிவித்து, ‘கறுப்புச்சட்டை’ படைகளை குவித்து, இத்தாலி நாட்டின் குடியரசு பண்புகளை ஒழித்து, 1925ல் தன்னை சர்வாதிகாரியாக பிரகடனம் செய்து கொண்டான். இருபது ஆண்டுகள் நாட்டை கொடுங்கோல் ஆட்சியினால் குலைத்தது போறாது என்று எதியோப்பாவை 1935ல் கைபற்றினான். இந்த அட்டூழியத்தை பார்த்து, வாளாவிருந்தது அகில உலக அமைப்பு (The League of Nations). பிறகு, ஜெர்மனியின் ஹிட்லருடனும், ஜப்பானின் டோஜோவிடனும் கூடாநட்பு, இரண்டாம் உலக யுத்தத்தில். நிஜமாகவே மரண அடி. கொடுங்கோல் தாங்காமல், இவனுடைய கை தாழ்ந்தவுடன், இவனுடைய ஆட்களே, மக்களுடன் சேர்ந்து கொண்டு, இவனை சுட்டுத்தள்ளினர், ஏப்ரல் 22, 1945 அன்று. சடலத்தை தலைகீழாகத் தொங்கவிட்டு, கற்களால் அடித்தனர் என்று, அன்று படித்ததாக, ஞாபகம்.
ஒரு தலைமாந்தன் ஆத்மார்த்தமாக கடவுளுடன் பேசி வருகிறான், இளங் காளையாக இருந்த நாட்களிலிருந்து, திருவிதாங்கூர் சித்திரை திருநாள் மஹாராஜாவைப் போல. ஒரு துளி:
‘Tomorrow we shall meet,
Death and I -.
And he shall thrust his sword
Into one who is wide awake’
‘காலதேவன் வந்தெ ன்னை
தழுவுவான் நாளை.
அகாலத்தில் குத்திக்கிழிப்பான்
விழித்திருக்கும் என்னை...’
அப்படியே நடந்ததே! இவரும், பதினைந்து பேர்களும் சென்ற விமானம், செப்டம்பர் 17/18, 1961 அன்று நொறுங்கியது. அனைவரும் மரணம். இது விதியா, இல்லை, சதியா? இன்றும் மர்மாக இருக்கிறது. உண்மையிலேயே, இவர் தலைமாந்தர் என்பதுடன், அவரது தந்தையும், பல துறைகளில் தலைமாந்தராகத் திகழ்ந்ததையும் குறிப்பிடவேண்டும். தந்தை இவருக்கு சொன்ன மந்திரம், “ நம் வம்சமே பணி செய்யும் வம்சம். தன்னலமற்ற தேசாபிமானமும், மனித நேயமும் முன்னுரிமை பெற வேண்டும். அதற்காக ஆசாபாசத்தைத் துறந்து, அசாத்திய துணிச்சலுடன் தனது கோட்பாடுகளை காப்பாற்றிக்கொள்ளவேண்டும். அன்னையின் ஆணை, ‘இறைவனுக்கு முன் நாம் எல்லாரும் சமம் என்று செயல்படு’. அத்தகைய உயர்குடும்பத்தில் இவர் ஜனித்த தினம், ஜூலை 29, 1905. பிறந்த நாட்டின் பிரதமர் தந்தை. சர்வ தேச மன்ற நீதிபதியாகவும், உலகப்புகழ் வள்ளல் மன்றம் ஒன்றின் தலைவராகவும் புகழ் ஈட்டியவர். இவரும் கல்விதுறை, மத்திய வங்கி, நிதி அமைச்சரகம் எல்லாவற்றிலும் உயர்பதவிகள் வகித்த பின்னர், வெளி நாட்டு உறவு அமைச்சரகத்தில் ராஜதந்திரியாக பணி புரிந்த பின், தன் தேசத்தின் பிரிதிநிதியாக ஐ.நா.வில் திறம்பட தொண்டாற்றி, அந்த அமைப்பின் தலைவராக 1953லும், மறுபடியும், 1957லும் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இந்த ஸ்வீடன் நாட்டின் மைந்தனும், உப்பஸாலா பல்கலைக்கழக மாணவரும் ஆன திரு. டாக் ஹாம்மெர்ஷீல்ட். அவருடைய சாதனைகள் பல:
சைனாவிடமிருந்து, அமெரிக்க சிப்பாய்களை மீட்டது;
பாலஸ்தீன பிரச்னைகளை தணித்தது;
சூயஸ் கால்வாய் பிரச்னையில் வல்லரசுகளை வழிக்குக்கொண்டுவந்தது;
லெபனான், ஜார்டான் முடிந்துகொன்ட முடிச்சுகளை அவிழ்த்தது;
கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் பிரச்னைகளை தீர்த்தது, இத்யாதி. தன்னுடைய ராஜதந்திரத்தை, ‘வருமுன் காப்போன் உத்தி’ என்று அவர் சொன்னது உண்டு.
‘தெய்வம் மனுஷ ரூபேண...’ என்ற லுமும்பா (ஜூலை 2) ஞாபகம் இருக்கிறதோ? அவரை காப்பாற்ற தவறினாலும், காங்கோவின் அழிவை நிறுத்த, அங்கு முளை விட்ட இனவெறி போரை நிறுத்த, ஒரு ஐ.நா. அமைதி நாட்டும் குழு சென்றது. தலைமை, பெரும்தலைவர், திரு. டாக் ஹாம்மெர்ஷீல்ட் அவர்களே, வழக்கத்துக்கு மாறாக. காங்கோ கொடுங்கோலன் ஷோம்பேயை (கடாங்கா பிராந்தியத்தை பிரித்தாள முனைந்தவன்) சந்திக்க தலைவரே மனிதநேயத்துடன் சென்றார். விமானம் நொறுங்கியது, அமைதி தூதருக்கு வீர மரணம்.
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
முற்றிலும் உண்மை. இவரின் தந்தை உலகப்புகழ் வள்ளல் மன்றமாகிய நோபல் அமைப்பின் தலைவராக இருந்தவர். அவருடைய அரும்தவ புதல்வனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1961ல் அளிக்கப்பட்டது, மகனே மறைந்தபின் கிடைத்த மேன்மை என்றாலும், தன் புதல்வன் பெறும் பெருமைகளை தந்தை இருந்து பார்க்க நேரிட்டால், எப்படி இருக்கும் என்று நினைத்து பதைபதைத்தேன். இத்துடன் நிறுத்தியும் விடுகிறேன்.
3. ‘ தயங்கி, தயங்கி, எதையும் தொடங்காதே. தன்னம்பிக்கையுடன் தொடங்கு. வெற்றி கிடைத்தபின், சமுதாயத்துக்குத் திருப்பிக்கொடு. யோசித்துப்பார். சமுதாயம் நமக்கு அளித்த போஷாக்கை. வாழ்க.’
இது ஸுதா நாராயணமூர்த்திக்கு, பாரத ரத்னா ஜே.ஆர்.டீ.டாடா என்ற செல்வத்தில் திளைத்த திருமகன் அளித்த அறிவுரை. இன்று நன்னாள். அவருடைய ஜென்ம தினம் (ஜூலை, 29, 1904). இந்தியாவின் முதல் இரும்பாலை, ஆய்வுக்களங்கள் பல, கல்விக்கொடை மன்றங்கள் அமைத்த ஜம்ஷெட்ஜீ டாடா அவர்களின் வம்சாவளி. பள்ளிப்படிப்புக்கு மேல் கல்வியை தொடராத ‘ஜேஹ்’ (நிறுவனத்தில் செல்லப்பெயர்) இந்தியாவின் முதலாளித்துவத்தின் புனித சிகரம் எனலாம். மாபெரும் டாடா குழு நிறுவனங்களின் தலைமையை 34 வயதில் ஏற்றுக்கொண்டு, 100 மிலியன் டாலர் சொத்துக்களை 5 பிலியனுக்கு உயர்த்தினார். கனஜோராக விமானம் செலுத்துவார். ஏன்? 25 வருடங்கள் ஏர்-இந்தியாவை மேற்பார்வை செய்தவர். அவருக்கு அப்பவே அரசு ‘கெளரவ ஏர் கமோடார்’ என்ற ராணுவ விருது அளித்தது. நான் ராணுவ அமைச்சரகத்தில் இருந்த போது அடிக்கடி அங்கு வருவார். நான் பார்த்த பெரிய பணக்காரர். கொஞ்சம் கூட ஹோதா கிடையாது. ஆனால் மேதா விலாசம் ‘பளிச்’.
கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு மேல் ஸர் டோராப்ஜீ டாடா அறக்கட்டளை மூலம் எத்தனை விதமான தர்மங்கள்! - புற்றுநோய் நிவாரணம், சமூகவியல் உயர்கல்வி/ஆய்வு, உலகத்தரம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சி, நுண்கலை மன்றம் இத்யாதி. எனக்கு கொடுப்பினை, இவை யாவற்றையும் அருகில் இருந்து பார்க்க முடிந்தது.
தொழிலாளர்களின் நலனில் இவர் காட்டிய அக்கறை: பேச்சுரிமை, எட்டு மணி நேர வேலை, இலவச மருத்துவம், சேமிப்பு உதவி, விபத்து நிவாரண உதவி ஆகியவை. அவை சட்டரீதியாக வந்த உரிமைகளுக்கு முன்னோடி. இவர் கொனர்ந்த உன்னதமான கோட்பாடு: ஒரு தொழிலாளி இல்லத்தை விட்டு வேலைக்கு கிளம்பிய உடனேயே பணியில் அமர்ந்ததாக பதிவு. இது பெரிய விஷயம். வழியில் விபத்து நேர்ந்தால், நிவாரணம் கம்பெனியிடமிருந்து.
சுருங்கச்சொல்லின், ‘ஜேஹ்’ ன் நற்பண்புகள், சிநேகிதம், இணக்கம், செய்வன திருந்தச்செய்தல் போன்ற குணாதிசயங்களை வானளாவ புகழ்வது, கேசுப் மஹீந்தரா, மற்றொரு தொழிலதிபர்.
நவம்பர் 29, 1993 அன்று இவரை இழந்தோம்.
இன்னம்பூரான்
29 07 2011
http://www.glogster.com/media/1/4/11/21/4112140.jpg
http://www.ub.uu.se/Global/Juridik/RTEmagicC_logo-130x130_jpg.jpg
http://www.universalstamps.com/files/def11-08.jpg
உசாத்துணை:
http://www.bbc.co.uk/history/historic_figures/mussolini_benito.shtml
http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1961/hammarskjold-bio.html#not_3
http://www.india-today.com/itoday/millennium/100people/tata.html
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 15:19, 1 ஆகஸ்ட் 2011 (UTC)