சித்தாந்தத் திருநெறி
கி.லோகநாதன் 1984
வினையதிகாரம்
1.0
எடுத்த விருப்புக்களை அடைய இயற்றப் படுபவை வினைகள் (அல்லது செயல்களாகும்) . ஓர் வகைய அறிவின்றி வினையில்லை; வினையின்றி அறிவின் வளர்ச்சி இல்லை.
1.1
பலதன்மையக் கட்டுகளின்றி செயல் நடவாது, மெய்யாகாது: ஒன்றினைக் குறித்து ஒன்று செய்யப்படுவதால் , கட்டுகள் வேண்டியதாகின்றது. இதனின் வினைகளும் உழற்சி வினைகள், கழற்சி வினைகள், ஊழ்ச்சி வினைகள் மலர்ச்சி வினைகள் என்று பலவகைப் படும். இவற்றின் விளக்கம் பின்பு.
1.2
பசுக்களின் உண்மை வினைகளது உண்மையால் தெளிவு. வினைகளின் உண்மை சித்துப்பொருட்களாலேயே ஆகக்கூடிய தோற்ற மாற்றங்களால் தெளிவு. பசுக்கள் வினைமுதல்கள் -- வினைத்திறம் அவற்றிடம்தான் அமைந்திருக்கிறது.
1.2.1
வினைமுதலாம் தன்மை அறிவுப் பொருட்களிடையேத் தான் அமையும்.
1.3 வினைமுதல் ஆகமுடியாது ஆயினும் வினை நிகழ்ச்சிக்குப் பல்வேறு வகையில் ஏதுக்களாய் கரணியங்களாய் இருப்பன அறிவில் பொருள் -- சடப்பொருள், அசித்து.
1.31
இவ்வாறு அறிவுப்பொருள் (சித்து) அறிவில்பொருள் (அசித்து) என்ற பொருட்பாகுபாடு, வினைகளின் வழி பெறப்படும்.
1.32
வினைகளின் உண்மைக்கு அறிவுப் பொருள்களும் அறிவில் பொருள்களும் ஒருங்கே வேண்டியதாகின்றது. இவ்விரண்டு தன்மைய பொருட்களும் இல்லையெனில், வினை என்ற பொருள் நிகழ்ச்சியாகாது-- உண்மையாகாது.
2.0
கற்றல் என்பது ஓர் வினை; வினைக்குரிய எல்லா இலக்கணங்களும் இதற்கு உண்டு.
2.1
அறியாமையை ஒரு சிறிதே அகற்றி, அகத்துச் செறி அஞ்ஞான இருள் கடிந்து அறிவினைப் பெருக்குதற்கு ஏதுவாய் நிற்கும் செய்திகளே கல்விச் செய்திகள்.
2.11
இவையும் பல திறத்தன. அறியவரும் பொருள் வகையால் இவையும் பலவகையாகின்றன. அநாதிப் பொரூட்களாக பதி பசு பாசங்கள் இருப்பதின், எல்லாக் கற்றல்களும் இம் முத்திறம் ஆகின்றன.
2.2
கற்றலின்றி மேம்படுதல் இல்லை. உயர்தல் எல்லா உயிர்களுக்கும் சாத்தியமான ஒன்றாயினும், தகுந்த செயல்களை செய்யாக்கால் அது மெய்யாகாது.
2.21
சமயச் செய்திகள் அனைத்தும் கற்றல் வினைகள் ஆகும்.
2.3
உயர்வதற்கு ஏதுவாகியச் செய்திகள் புண்ணியங்கள்; உயர்வதைத் தடுத்து நிற்பதும் கீழ்செலற்கு ஏதுவாயதும் பாபங்கள்.
2.3.1
அனைத்து புண்ணியச் செய்திகளும் சமயச் செய்திகளே.
3.0
புண்ணிய பாப பாகுபாடுகளில் வேற்றுமை உண்டெனினும், அவை மறுக்கவும் படும் எனினும். வினை நிகழ்ச்சிகள் மறுக்கப் படாத உண்மையாகும்.
3.1
வினைகள் பொய்யென்றோ, இல்லையென்றோ வரும் எந்தவொரு மறுப்பும் ஓர் வினையே யாதலால், மறுக்கும் முகத்தானே செயலின் உண்மையும் நிறுத்தப் படுகின்றது.
3.2
செயல்களின் உண்மை ஐயத்திற்கும் திரிபிற்கும் அப்பாலானது. ஐஅயப்ப்ட்டேன் என்றலும், திரித்துக் கண்டேன் என்றலும் வினைகளே.
பசுவதிகாரம்
4.0
ஒருங்கே எல்லா உயிர்களும் ஒரே வினையைச் செய்யாமையாலும், ஒன்றின்மேல் ஒன்று பல்வேறு வினைகளை யாற்றுவதினாலும், இதனைப் போன்ற பிற காரணங்களாலும் பசுக்கள் பலவாகின்றன.
4.1
பசுக்களின் வகை அவை நிகழ்த்தும் வினை வகையால் நிறுத்தப்படும்.
4.11
மனமே கொண்டு புலன்களில் பேறுபடுபவை: மனத்தொடு புத்தி; புத்தியொடு ஆங்காரம்; ஆங்காரத்தோடு சித்தம் என்றவாறு அந்தக் கரணங்கள் வேற்பாட்டாலும் இவையெல்லாம் கழன்ற நிலையில் செயல்படுவதாலும், செய்வினைகளிலும் வேறுபாடுகள் அமைகின்றன.
4.2
எல்லாப் பசுக்களும் மனத்தோடு கூடிய காயத்தொழில் செய்ய வல்லவை.
4.3
மானிடப் பசுக்களின் சிறப்புத் தன்மை என்னவெனின், உள்நோக்கி சிந்திக்கும் வினையாற்றலைப் பெற்றிருப்பதுதான்.
4.3.1
செய்யும் செயலையும், அதனால் வரும் பயன்களையும், செய்யத் தூண்டிய காரணங்களயும் கண்டு இணைத்து, அவற்றிடையே நின்றிலங்கும் தொடர்புகளைக் கருதும் வினைத்திறன் இத்தன்மைய பசுக்களின் சிறப்பு வினைத்திறன்.
4.4.
இந்த திறத்தின் அடிப்படையில் தான் உயர்திணை அஃறினை என்ற பொருட்டிணைகள் அமைந்துள்ளன.
4.5
கருதும் வினைத்திறன் பெற்ற பசுக்கள் எண்ணி, நினைத்து , விரும்பி காரியங்களைச் செய்கின்றன. இவ்வாறு அமையாத செயல்களைக் கண்டு திடுக்கிட்டு, அவற்றின் காரணத்தையும் கண்டறிய முயல்கின்றன.
5.0
பசுக்களது விருப்பு வெறுப்புக்களாலும், வினைகள் செய்வதற்கு வேண்டிய அறிவு விளக்கத்தினாலும், செயல் நிகழ்த்துவதற்கு வேண்டிய கருவி கரணம் காலம் இடம் சூழ்நிலை போன்றவையாலும், செயல்களால் வரும் பயன்களாலும் , செய்யப்படு பொருளது பண்பாலும், செயலுடன் ஊர்ந்துவரும் உத்தியாலும் வினைகளின் இலக்கணங்கள் அமையும்.
5.1
சிந்தனைகளின் ஏரணவொழுங்கு, வினைகளின்பால் அமையும் ஒழுங்கினின்று முகிழ்த்தவை.
5.2
தன்னுணர்வு அமையப் பெற்ற பசுக்கள், ஒன்றினையொன்று உணர்ந்து உறவாடுகின்றன. இந்த உறவாடலின் போக்கை நிறுத்துவது செயலுக்கு காரணமாகிய அறிவு.
5.21
ஒன்றினைக் கருதி, நோக்கு ஒன்றினைத் தேற்றி, அதனை அடைய ஓர் பசு ஒன்றினைச் செய்ய, செய்யப்பட்ட வினைவழி, பிறிதோர் பசு அந்நோக்கினை அறிகின்றது; அறிந்து தக்கவாறு தன்நோக்கொன்றினைத் தேற்றி எதிர்வினை ஒன்றினை ஆற்றுகின்றது. இவ்வாறு உறவாடல் செல்லும்.
6.0
இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பிக்கும் மனோவினைத்திறன் உய்ர்திணைகட்கே உண்டு. பண்பாட்டின் அடிப்படையே இந்த வினைத் திறன் தான். தன்னையே மாற்றி அமைத்துக் கொள்ளும் முயற்சியும், இந்த மனோவினைத் திறத்தின்பால் அமைந்தது.
6.1
தான் ஓர் இச்சா ஞான கிரியா சொரூபி என்ற அறிவு, உயர்திணைக்கே உண்டு.
6.11
இதனாலேயே தான் கட்டப்பட்டவோர் உயிர் என்றும் அவை அறிகின்றன.
6.12
இதனாலேயே மெய்யறிவு வேட்கையும், சமய வாழ்க்கையும் அமைகிறது.
6.2
கட்டுகளின்றி செயல்படல் நோக்கி சமய வாழ்க்கை அமைகிறது.
பதியதிகாரம்
7.0
ஒன்றொன்றாய்ப் பகுத்து " இது இஃது" "இது இன்னது" என்றவாறு சுட்டியறிதற்கு ஏதுவாதலாலும்; உயர்திணை அஃறிணை என்று எல்லா உயிர்களும் பேதப்பட்டு நிற்பதாலும், சுட்டுணர்வுகளும் அதனின் அறியவருவனவும் பிறத்தல் வளர்தல் தேய்தல் மாய்தல் மறைதல் என்ற வினைகட்கும் யாண்டும் யாங்கும் ஆளாவதாலும் , இவ்வுலகு ஓர் காரியப்படு தொகுதியாகின்றது.
7.1
இவ்வாறு இதனைக் காரியப்படுத்தி உடனாயும் வேறாயும் ஒன்றாயும் நிற்கும் சித்துப்பொருளே பதி
7.11
இறைவனும் இச்சா ஞனக்கிரியா சொரூபி. அவனது இச்சை அருளின் வெளிப்பாடாக உயிர்களின் அறிவுப் பிரகாசத்தை தடைசெய்து நிற்கும் கட்டுகள் நீக்கி, எவ்வகை கட்டுகளுமின்றி சர்வ சுதந்திரமாக செயல்பட உதவும் பெருங் கருணையே.
7.2
அறிவு அறியாமை என்ற இருமை இறைவன் மாட்டில்லை. அவன் சர்வக்ஞன்; அனைத்தொடும் அநந்நியமாக நின்று உள்ளதை உள்ளவாக் காண்பவன். அருட்கண்ணன்.
7.21
இறைவனால் இது செய்தல் கூடும் இதுசெய்தல் கூடாது என்ற வினைத்திறக் குறைவும் இல்லை; எல்லா வல்லபங்களும் தானேயாய் நிற்கின்ற தனிபெருந் தலைவன்.
7.22
இறைவன் செயல் இங்குண்டு ஆங்கில்லை என்று கூறவும் வாராவகை சர்வ வியாபியாகி நிற்கின்றவன். அவன் அருளின்றி யாதும் அசையாது.
7.23
அருளே வடிவாக நிற்கும் இறைவன் இவனுக்கு அருளுவேன் அவனுக்கு அருளேன் என்ற பேதங்கள் பாராட்டான்; விருப்பு வெறுப்புக்கள் இல்லாத பரிபூரணன். இவ்வகையில் நிற்குணன்.
7.24
அநாதியே எவ்விதக் கட்டுகளுமின்றி செயல்படுவதின், தானே தனக்குத் தலைவனாய் நிற்பவன்; அவன் அருளாலன்றி அவன் அருளும் கிட்டாது.
7.3
இனி எவ்விதக் கட்டுக்களுமின்றி செயல்படும் சித்துப்பொருளேக் கட்டு நீக்கும் வல்லமையது என்பதின், ஐந்தொழிற் பதியே இறைவன்.
7.4
தனக்கென்று இலாது, பிறர்கென்றே இறைத் தொழில்களாதலால், அவை திருவிளையாடல்கள் ஆகின்றன.
7.41
ஓர் ஊதியங் கருதி ஆற்றப்படுவனவல்ல விளையாட்டுகள்
8.0
சுர அசுர வடிவத்து புதைமங்களாக (archetypes) சுத்தம் அசுத்தமெனத் திரியும் மாயையில் இறையருள் பதிய, மாயைத் திரிந்து உருபெற்ற பொருட்களாய் உலகாய் உலகத்தில் ஒன்றாய் ஆகின்றது.
8.1
அறிவு ஆற்றல் அன்பு என்ற மூன்று அருட்பண்புகளோடு, அநாதியே நிற்கும் மும்மலங்களின் தாக்கத்திற்கும் ஆட்பட்டு , அருட்குணங்களோடும் அவற்றின் திரிபுகளோடும் இந்த புதைமங்கள் விளங்குகின்றன. இந்த அருட்குணங்கள் நிறைந்தவை சுரர்களாகவும், குறைந்தவை அசுரர்களாகவும் விளங்குகின்றன.
8.11
இதனாலேயே உயிர்களிடையே திறமை வேறுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் அவற்றால் எழும் பலவகையான போராட்டங்களும்.
பாசவதிகாரம்
9.0
எல்லா ஆன்மாக்களுக்கும் உரித்தாக நிற்கும் சிவானுபவத்தை பெறவொட்டாது தடைசெய்து நிற்பவைகளேப் பாசங்கள், தளைகள்.
ஆன்மாக்களைப் பசைத்து சிற்றறிவின் பசு வாக்களின் இவை பாசங்கள் எனப்படுகின்றன.
9.1
எல்லா உயிர்கள் மாட்டிலும் அறிவினைச் சூழ்ந்து நிற்கும் அறியாமை இருளிற்குக் காரணமானது ஆணவம் என்பது. இஃது சடம். அன்பு அறிவு என்பன போன்ற நற்குணங்கள் விளங்கவொட்டாதும், நல்லது தீயது என்ற நந்நயச் சிந்தனையை (moral judgements) எழவொட்டாதும் தடுத்து ஒருவனை விலங்கினன் ஆக்கும் பண்பிற்று. ஞானப்பிரகாசம் விளங்கவொட்டாதும், இருக்கின்ற பிரகாசத்தையும் விழுங்கி சித்தக் கலக்கத்தையும் ஏற்படுத்த வல்லது.
9.11
உயிர்கள் மாட்டெழுந்து, அதனை சிற்றறிவினதாக்கி அணுத்துவப் படுத்தலின் இது ஆணவம் ஆயிற்று. ஏனைய மலங்கள் தோன்றுதற்கு மூலமாக இதுவே நிற்றலின், இது மூலமலம் என்றும் படும்.
9.2
முற்றிலும் அநாதிபொருளாகிய ஆணவமலத்தால் மறைக்கப்பட்டு துன்னிருளில் யாதொன்றுமின்றி கிடந்த ஆன்மாக்கள், இறைவனது, ஆணவ வல்லிருளை சிதைத்து அழித்து தான் சுடரும் திறத்தின், ஆன்மாக்கள் மாட்டு ஞானமும் கிரியையும் எழ, அவற்றைத் தனதாக்கி இச்சைகள் தேற்றி இச்சா ஞானக் கிரியா சொரூபிகளாய் வடிவெடுத்து தக்க தனுவொன்றையும் பெற்று பிரபஞ்சத்தில் பிறந்திறந்து உழலும்.
10.0
செய்யப்படும் செயல்கட்கு வடிவு தந்து மெய்யாக்க உதவுவது, அச்செயல்களால் ஆகக்கூடிய மாற்றங்களை நிலைப்பிப்பது, செயல்கள் மெய்யாக துணைக்கரணங்களாக இருக்கும் மாயாவியந்திரத் தனுவின் உருவினையும் தொழிற்பாட்டையும் இவற்றோடு தொடர்புடைய ஏனைவற்றையும் நிறுத்துவது, மாயையில் புதைந்து கிடக்கும் மூலக்கான்மியம் ஆகும்.
10.1
அக்கரசக்கரங்களாலியன்ற மந்திரசொரூபங்களாகிய இவை பல்வேறு யந்திரங்களாகத் திகழும். இத்தகைய காமியங்களே ஓர் ஆன்மாவால் ஆகக்கூடிய வினைகளை , அறிவின் எல்லையை நிறுத்துவதின் வழி நிறுத்தும்.
11.0
பகுத்தறிந்து தெளியும் போக்கிற்குத் தடையாக நின்று, சுத்த அசுத்தமாயா பொருட்களின்மேல் மயங்கி, உண்மையை மித்தை என்றல், மித்தையை உண்மையென்றல், ஏற்றிகூறல் , திரித்துக் காண்டல் , மயங்கிக் காணல், மதமாச்சரியம் பேசல் போன்ற மயக்க அறிவுகட்குக் காரணமாக இருப்பது மாயாமலம் என்பதாம்.
11. 1
உடலெடுக்கும் அனைத்து உயிர்களுக்கும் இயல்பாகவே இந்த மாயாமலம் உண்டு. இல்லையேல் ஓர் மாயாவியந்தரத் தனுவாகிய உடம்பொடு பிறத்தல் நடவாதுபோம்.
11.2
இந்த மாயமல பந்தம் விட்டு நீங்காது செய்யப்படும் செயல்களால் தெளிவின்மையேத் தொடரும் என்பதின் இன்பத் துன்ப உணர்வுகளோடு மனக்கலக்கம் குழப்பம் விரக்தி வேதனை போன்ற உளநிலைகளும் தோன்றும்
11.3
யாண்டு ஓர் உயிர் இச்சாஞானக்கிரியா சொரூபி ஆயிற்றோ, ஆண்டே அதற்கு மும்மல பந்தம்
11.4
ஆனவமலத்தால் வரும் ஞானவிருளை கடிந்து போக்கு முகத்தானே வரும் ஊக்கமே, இச்சைகளாக மாறி , உயிர்கள் மாயாகன்ம மலங்களை பந்திக்குமாறு செய்கிறது.
சாதனாவதிகாரம் அல்லது சமயவதிகாரம்.
12.0
நாங்கு தன்மைய வினைகள் உண்டு: உழற்சி வினைகள், கழற்சி வினைகள், ஊழ்ச்சி வினைகள், மலர்ச்சி வினைகள் என அவை வரும். எல்லா வினைகளும் எஞ்சாது இந்த நாங்கு வகைக்குள் அடங்கும்
12.1
இவற்றில் தனக்கென இச்சைகளைத் தேற்றி அவற்றை அடையும் முகத்தானே , அந்தகரணங்கள் புறக்கரணங்கள் துணைக்கரணங்கள் போன்றவற்றை முடுக்கி சுத்த அசுத்த மாயாகாரிய உலகின்மேல் செய்யப்படும் வினைகளே உழற்சி வினைகள்.
தனக்கோர் ஆதாயம் கருதியே செய்யப்படும் கருவி வினைகள் (instrumental action) எனினும் ஒக்கும். இச்சைக்கு உகந்ததாய் விளைவுகளைத் தோற்ற நல்லதென்றும் அல்லவைத் தீயதென்றும் இனிய இன்னா என்ற வகையிலேயே செயல்களை மதிக்கும் போக்கு வளரும்.
12.2
இவற்றின் வழி தற்கல்வியுமில்லை, இறைகல்வியுமில்லை. நோக்கெல்லாம் தான் இச்சிக்கும் விளைவினை கொண்டுவருவதிலேயே குவிந்து நிற்பதின் ஆன்மாவும் இறைவனும் பின்புலப்படுத்தப்படுகின்றனர். அதனால் அறியாது விடப்படுகின்றனர்.
12.3
அதுவென சுட்டி அறிவதற்கு வரும் பொருள்கள் மேலேயே ஆர்வமும் செயல்களுமென, உழற்சி வினைகளால் பாசக்கல்வியே மெய்யாக, மாயாகாரியபொருட்களின் அறிவே மிகும். முடிவில் இறைவனது கிரியா சத்தியின் வெளிப்பாட்டினை, அது அவ்வாறு என்று உணராதேயே , மகிழ்வதில் முடியும். சிவராத்திரியில் யாண்டும் விட்டு நீங்காது கிடப்பர்.
12.4
சுட்டுணர்வில் பட்டு அந்த சுட்டுணர்விலேயே தொடர்ந்து கிடக்குமாறு செய்வதின், இத்தகைய வினைகள் வீடுபேற்றிற்கு உதவாது, மீண்டும் மீண்டும் பிறந்துழல்வதிலேயே ஆன்மாக்களை வீழ்த்த அவை உழற்சி வினைகள் ஆகின்றன
13.0
சார்ந்ததன் வண்ணமாய் மயங்கி அவையே தானாகி நிற்கும் ஆன்மாக்கள் , அந்த மயக்கம் நீங்கி, அந்த தத்துவங்களிருந்து கழன்று தற்கல்வித் தாக்கி, தான் தானாய் ஆகுவதற்கு ஏதுவாயவே கழற்சி வினைகள்.
13.1
ஆன்மாக்கள் சித்துப்பொருட்கள், அசித்தோடு சமைந்து நிற்பினும் அவை பொருள் வகையில் வேறு என்ற உணர்வோடு முகிழ்பவையே கழற்சி வினைகள்
13.2
சுட்டுணர்வோடு வரும் உலகியல் காலமும் திசையுறு வெளியுணர்வும் கடந்து குறிப்புக்கால உணர்வும் திசையற்ற சுத்தவெளியுணர்வும் தலைப்படல் இங்கு என்பதின் அவை கழற்சி வினைகள் ஆகின்றன. அதனின் மாயாகன்ம பந்தங்களும் படிப்படியாக நீங்கத் தொடங்குகின்றன.
13.3
ஆன்மதரிசனம் தந்துகொண்டே இருக்கும் கழற்சி வினைகளின் முடிவு ஆன்மச் சுதந்திரம் --- உலகியல் இன்பங்களுக்கு அடிமைப் பட்ட பரதந்திரனாக இருக்கும் ஆன்மாவை உண்மையான சுதந்திரன் ஆக்குவது.
14.0
கழன்று கழன்று செல் ஆன்மா ஆனவமலத்தின் உண்மையை அறியவரும். அதுபொழுது அதுவே தன்னை சிற்றறிவினதாக்கி சார்ந்ததின் வண்ணமாய் திகழச் செய்து தன்னறிவின்றி கிடக்கச் செய்தது என்று உணர்ந்து, அந்த பொல்லாத ஆணவமலத்தின் பிடியிலிருந்து விடுபடும் நோக்கொடு செய்யப்படும் வினைகளே ஊழ்ச்சி வினைகள் ஆகும்.
14.1
சுத்த சிவப் பிரகாசத்து இறைவனோடு நெருங்கி நின்றாலன்றி இவை கூடாமையின், ஊழ்ச்சி வினைகளின் நோக்கு இறைவனைக் கண்டு அவனோடு ஒருங்கியைந்து நிற்றல் என்பதாக அமையும்.
14.2
இத்தகைய ஊழ்ச்சி வினைகளால் ஆணவமலத்தின் பிடி தளர்தலின், பக்குவ முதிர்ச்சி உண்டாகும். கற்றளிப் பெயர்ச்சிகள் மெய்யாக பதவூழிகளும் (moving towards higher stages of development) மெய்யாகும்
14.3
ஊழ்ச்சி வினைகளால் ஆகக்கூடியதே இருவினை ஒப்பு எய்தல்; செய்கின்ற வினைகள் புண்ணியமா? பாவமா? நந்நயமா? அந்நயமா? என்றெல்லாம் மதித்தல் (judgements) கடந்து இறையருளோடு ஒன்றித்துச் செயல்படும் நிலை.
14.5
இத்தகைய ஊழ்ச்சி வினைகளாலேயே மாயாமல பந்தங்கள் , அதிலும் குறிப்பாக ஆணவமலத் தொடக்கு அறுத்தல் மெய்யாகும்
15.0
ஆணவமல நீக்கம் மெய்யாக, காலவுணர்வும் பரகாலவுணர்வேயாக, உணர்வும் பரனுணர்வேயாக, எஞ்சி நிற்கின்ற திரோபவமே நீக்குதற்குரியாத இருக்க, அந்நிலையில் ஆற்றப்படும் வினைகளே மலர்ச்சி வினைகள் ஆகும்.
15.2
பரனுணர்வின் தேற்றம் "தான்" "தனக்கு" என்ற அகந்தைக் கெட வைத்தலின், தற்போதம் யாதுமின்றி, முற்றிலும் சிவபோதத்தில் அழுந்தி செய்யப்படும் வினைகளே மலர்ச்சி வினைகள். இவற்றின் வினைமுதல் இறைவனே யாகும்
15.3
இதனின் மலர்ச்சி வினைகள் ஆன்ம அறிவு தேற்றாது சிவவறிவுத் தேற்றும். இறைவன் தன்னைத் தானே ஆனமாக்களுக்கு உணர்த்துதல் இங்கு நடக்கும். இதனின் மலர்ச்சி வினைகளைக் காணக் காண சிவஞானம் வளரும்.
15.4
மலர்ச்சி வினைகளின் முடிவு , அந்நியம் போக்கி அனைத்தொடும் சிவ அன்பு மேவர, அவையேத் தானாகி அநந்நிய நிலைத் தலைப்படுதலாம். இதனின் சிவசத்தாகிய சிவஞானத்தில் முற்றிலும் அழுந்தலாம்.
16.0
சமயம் என்பது தற்போத செருக்கின் உழற்சி வினைகளின் உழைப்பு கெடுத்து, தற்கல்வி வளர்க்கும் கழற்சி வினைகளி ல் ஈடுபாடு மிகுத்து, பதிக்கல்வி வளர்த்து பக்குவதில் உயர்ந்திடச் செய்யும் ஊழ்ச்சி வினைகளை ஊக்குவித்து, திரோதகம் நீக்கும் மலர்ச்சி வினைகளை ஆற்றும்படி ஈர்த்து சிவஞானம் மகிழும்படிச் செய்து வீடுபேறு அடையச் செய்யும் ஓர் வாழ்க்கை முறையே.
16.1
அறியப்படா அறிவு என்ற ஒன்றில்லை; காணப்படாப் பொருள் என்ற ஒன்றில்லை. தக்க வினைகளை தக்க முறையில் ஆற்றினால் தக்கபொழுது அறிவு தானே வரும்; பொருளும் காட்சியாகும்.
16.2
எவ்வறிவினையும் எப்பொருளினையும் எவ்வுயிரும் காணுதல் கூடும். ஒருவனுக்கே ஒரு சிலருக்கே ஒருசில அறிவுகள் என்பது பேதமை.
17.0
இந்தப் பேதமை இல்லாது அமைந்த நெறியே திருநெறி; சித்தாந்தத் திருநெறி.
சித்தாந்தத் திருநெறி முற்றும்