ஶ்ரீராமனின் பாதையில்- அயோத்தி 3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
அயோத்தியை நோக்கி! தொடர்ச்சி

சீதா கி ரசோயியில் பார்த்த குருமார்களின் படத்துக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த கதை மனதைக் கவர்ந்தது.

ஒரு விஷயம் முக்கியமாச் சொல்லணும். இங்கெல்லாம் செல்வதற்கு எல்லா இடங்களுக்கும் ஆட்டோ வராது. ஆட்டோ ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அங்கேயே நிறுத்தப்படும்.  அதுக்கப்புறமாக் குறைந்தது அரைகிலோ மீட்டரிலிருந்து ஒரு கிலோமீட்டர் வரை நடந்தே செல்ல வேண்டி இருக்கும்.  நிறைய நடை.  ஆட்டோவோ!  அதை ஆட்டோனு எல்லாம் சொல்ல முடியாது. டில்லியில் இருக்கிறவங்களுக்கு பட்பட்டினு ஒண்ணு பழக்கமாகி இருக்கும்.  இந்த ஆட்டோவுக்கும், பட்பட்டிக்கும் இடைப்பட்டது இது. ஒரே சத்தம்.  இதிலே ஆட்டோ ஓட்டுநர்கள் பாட்டு வேறே போட்டுடுவாங்க.  தெருவில் பின்னால் வண்டி வந்தாலோ, எதிரே வண்டி வந்தாலோ கண்கள் தான் கவனம் வைச்சுக்கணும்.  ஆனால் இந்த ஆட்டோக்கள் போடும் சப்தத்தில் முன்னாலும் பின்னாலும் வர வண்டிங்க தானாவே ஒதுங்கிடும்னு வைச்சுக்குங்க. :P  இந்த அழகிலே டிரைவருக்கு இருபக்கமும் இரண்டு பேர் உட்கார, உள்ளே மெயின் சீட்டில் எதிரும்புதிருமாக நாலும், நாலும் எட்டுப்பேர் உட்கார்ந்துக்கறாங்க.  இதைத் தவிரப் பின் சீட்டில் எதிரும் புதிருமாக ஆறுபேர் உட்கார்ந்துக்கறாங்க. கிட்டத்தட்டச் சென்னையில் டாடா டாக்சி என்ற பெயரில் ஓடும் வண்டியைப் போல் இருக்கை வசதி.  ஆனால் ஆட்டோ போல் அமைப்பு. ஆட்டோக்சினு சொல்லலாமோ!

இது முழுதும் நமக்கு மட்டும் வேண்டும்னா வண்டி ஓட்டுநரிடம் இதுக்காக சம்பிரதாயமான பேச்சு வார்த்தையில் பேசி முடிக்கணும்.  ஹிஹிஹி, இந்த ட்ரிப்பில் நாங்க ரொம்ப ரசிச்சது இது.  ஆட்டோக்காரரைக் கூப்பிட்டு நீங்க வரீங்களானு நாம கேட்டதுமே, அவங்க நம்ம கிட்டே உங்களுக்கு மட்டும் தனியா வர முடியாது. மத்த சவாரிங்களும் வருவாங்கனு சொல்லுவாங்க. அதுக்கு நாம் "இதை நாங்க ரிசர்வ்" செய்துக்கறோம்னு சொல்லணும்.  ரிசர்வ் கூடக் கிடையாது.  ரிஜர்வ்! :))) அப்போ ஓட்டுநர், தோ போலியே ந பாபு னு சொல்லுவார்.  மறுபடி நாம ரிஜர்வ் என்பதை உறுதி செய்யணும். அதுக்கப்புறமா இந்த வண்டியிலே நாம் ஏறிக்கலாம்னும், வேறே யாரையும் ஓட்டுநர் ஏத்த மாட்டார்னும் தெரிஞ்சுக்கலாம். :)) இதை வந்த அன்னிக்குக் காரிலே வந்ததாலே கவனிச்சு வைச்சுக்கலை.  அப்புறமாத் தான் புரிஞ்சது.

ஏற்கெனவே சாலைகள் மோசம்.  இதிலே இந்த வண்டிப் பிரயாணம் வேறே. வண்டி குலுக்கின குலுக்கல்லே என்னோட வயிறு உதரவிதானத்துக்கு மேலே வந்திருக்குமோனு சந்தேகம்.  இன்னும் போகலை! சாப்பாடெல்லாம் சாப்பிட்டுட்டுப் போனா அவ்வளவு தான். நல்ல வேளையா நாங்க காலம்பர குடிச்ச ஒரே ஒரு டீயோட கிளம்பி இருந்தோம்.  சரயு நதிக்கரையிலிருந்து ராம் தர்பார், சீதாகி ரசோயி பார்த்துட்டு, கோசலை, சுமித்திரை ஆகியோரின் அந்தப்புரங்களையும் பார்த்தோம். பின்னர்  தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடத்தை தரிசித்தோம்.  படங்கள் கீழே.  அதன் பின்னர் ஶ்ரீராம ஜென்ம பூமி பார்க்க வேண்டி ஆட்டோவில் கிளம்பினோம்.  ஶ்ரீராம ஜென்ம பூமியைக் காலை பதினோரு மணிக்குள் தான் பார்க்க முடியும்.  அதன் பின்னர் பகல் இரண்டு மணிக்குத் தான் திறப்பார்கள்.  நாங்கள் சென்ற சமயம் பதினெட்டாம் தேதி அங்கே ஏதோ கிளர்ச்சி என்பதால் அன்று காலை பதினோரு மணிக்கே ராமஜென்மபூமி செல்லும் சாலைகளை மூடப்போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  ஆகவே ஆட்டோ ஓட்டுநரும், வழிகாட்டியும் எங்களை தாக சாந்தி செய்து கொள்ளக் கூட விடவில்லை.  இதை முடிச்சுட்டு அப்புறமா எங்கே வேணாலும் போய்க்குங்க என்று சொல்லிவிட்டார்கள். ஆட்டோ ராம ஜென்ம பூமி நோக்கிச் சென்றது.

அதோடு இல்லாமல் ஶ்ரீராமன் பட்டாபிஷேஹம் செய்து கொண்டப்போ அவருடன் வந்த வாநர சேனைகள் எல்லாம் அயோத்தி சுற்று வட்டாரங்களிலேயே தங்கிட்டாங்க போல!  எங்கெங்கு காணினும் வாநரங்களடா! கையிலே எதுவும் கொண்டு போக முடியாது.  நாம் கொண்டு போகும் எந்தப் பொருளையும் ஆட்டோவில் (செருப்பைக் கூட) விட்டுட்டுப் பார்த்துக்கோப்பானு சொல்லிட்டுப் போக முடியாது.  அவங்களே மறுத்துடறாங்க.  வாநரங்கள் சர்வ சகஜமா உலவிட்டு இருக்குங்க. யாரையும் ஒண்ணும் பண்ணலைனாக் கூடக் கையிலே எதையும் எடுத்துட்டுப்போக யோசிக்க வேண்டி இருக்கு.


அங்குள்ள பிரபலமான ஆஞ்சநேயர் கோயிலின் ஆஞ்சநேயர்.



ராமர், சீதை, லக்ஷ்மணனோடும் ஆஞ்சநேயனோடும்


எல்லா இடங்களிலும் ஶ்ரீராமர் இப்படியே காணப்படுவதால் எது எங்கே எடுத்ததுனு கொஞ்சம் புரியாமல் போகிறது. :))))


இது சகல பரிவாரஃங்களோடு இருப்பதாகச் சொல்கின்றனர்.  கீழே சின்னச் சின்னதாக மற்ற மூர்த்தங்கள்.


புத்ர காமேஷ்டி யாகம் நடந்த இடத்தில் உள்ள சந்நிதி.  இங்கே குழந்தை இல்லாதவர்கள் வந்து வேண்டிக் கொண்டு ஆண்டு முழுவதுக்கும் பாயசம் நிவேதனம் செய்ய 200 ரூ வசூலிக்கின்றனர்.  குழந்தை பிறந்ததும், இங்கே கொண்டு வந்து பிரார்த்தனையை மணி கட்டி நிறைவேற்றுகின்றனர். மணிகள் கட்டியது படம் சரியாக வரலை.  பிரதிபலிப்பு அதிகமாப் போயிருக்கு. டெலீட் செய்துட்டேன். :(

அரசக் கோலத்தில் தசரதன் அமர்ந்திருக்க, ரிஷ்ய சிருங்கர், வசிஷ்டர், கெளதமர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள் சூழ நடத்தப்பட்ட புத்ர காமேஷ்டி யாகத்தில் பாயசக் கிண்ணத்தோடு வரும் புருஷன் படத்துக்கு நடுவே சிவப்பு உடையில். 

அயோத்தியை நோக்கி! பணமூட்டையுடன் நாங்கள்! :))))
ராம ஜன்மபூமி செல்லும் வழியில் கட்டவிருக்கும் ராமர் கோயிலின் மாதிரியையும் கட்டிக் கொண்டிருக்கும் இடத்தையும் காணலாம்.  அதைப் படம் எடுக்க முடியவில்லை.  அங்கிருந்து ஆட்டோவில் கொஞ்சம் பயணித்து ஶ்ரீராமஜன்ம பூமிக்குச் செல்லும் பாதையை அடைந்தோம். ஆட்டோ நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு  கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து சென்று வரிசையில் நிற்பதற்கான வாயிலை அடைய வேண்டும். அதற்கு முன்னர் நாம் கையில் கொண்டு போகும் சாமான்களை வைக்கும் லாக்கர்  உள்ளது.  அங்கே சென்றோம்.  ஶ்ரீராம ஜன்மபூமியைப் படம் எடுக்கக் கூடாது.  மொபைல்களும் அங்கே பயன்படுத்தக் கூடாது.  கைப்பைகளோ, அல்லது ப்ளாஸ்டிக் பைகளோ, துணிப்பைகளோ எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது.  வெறும் கையோடு தான் செல்ல வேண்டும்.

ஆகவே என்னோட கைப்பையை லாக்கர் வைத்திருக்கும் இளைஞரிடம் கொடுத்தேன்.  அதிலுள்ள பணங்கள், நகைகள் இருந்தால் எடுக்கச் சொன்னார். நகைகளே ஏதும் கிடையாது.  பணத்தை எடுத்தால் எங்கே வைச்சுக்கறது!  அங்கே பணமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் தங்குமிடத்துக்கு அன்றைய வாடகையை அன்றே கொடுத்தாக வேண்டும். இன்று மதியம் பனிரண்டு மணி மேல் அரை மணி நேரம் தங்கினாலும் ஒரு நாள் வாடகையைக் கொடுத்தாக வேண்டும்.  மேலும் ஏடிஎம் எங்கே இருக்குனு தேட வேண்டி இருக்கும். அதெல்லாம் யோசித்துப் பணமாகவும் இருந்தது.  சரி சின்ன பர்ஸில் வைக்கலாம் என சின்ன பர்ஸை எடுத்தேன்.  அருகிலிருந்த பாதுகாப்புக் காவலர் அதையும் மறுத்தார்.  அதுவும் எடுத்துச் செல்லக் கூடாது என்றார். நம்ம ரங்ஸோ வேட்டி கட்டிக் கொண்டு வந்திருக்கார்.  பான்ட் போட்டிருந்தால் பான்ட் பாக்கெட்டில் வைக்கலாம். என்ன செய்வது? அதுக்குள்ளாகப் பையைத் திரும்பக் கொடுத்த லாக்கர் இளைஞன், "நிறையச் சில்லறை இருக்கு,  அதையும் எடுங்க", னு சொன்னார். கைப்பையே கனம் தாங்காத அளவுக்கு கிட்டத்தட்ட முந்நூறு ரூபாய்க்குச் சில்லறை வைத்திருந்தோம்.  ஆங்காங்கே தேநீருக்கு, காபி, பழங்கள் வாங்கினால் சில்லறை இல்லாமல் சிரமப் படும் எனப் பத்து ரூபாய்க் காசிலிருந்து எட்டணா வரை சில்லறை இருந்தது.

எல்லாவற்றையும் காலி செய்தேன்.  அதுக்குள்ளே மேல்துண்டை எடுத்தார் நம்மவர்.  அதிலே கொண்டு போன ரூபாய்களையும் போட்டுச் சில்லறையையும் போட்டோம். ஒரு மூட்டையாகக் கட்டினோம்.  கொஞ்ச நேரம் ரங்க்ஸ் தூக்கிக் கொண்டு வந்தார்.  வழியெல்லாம் கிட்டத்தட்டப்பத்து இடங்களில் பாதுகாப்புச் சோதனை. அவங்களைப் போல் ஐந்து மடங்கு நம் வாநரர்களின் பாதுகாப்பு.  பாதுகாப்புக் காவலர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரளமாகப் பதில் சொல்ல முடிந்தது.  ஆகையால் பண மூட்டையோடு செல்ல எங்களை அநுமதித்ததோடு அவங்களோட கவலையையும் தெரிவிச்சு, என் புடைவைத் தலைப்பில் வைத்து மறைத்துக் கொண்டு குரங்குகளிடமிருந்து பாதுகாப்பாகச் செல்லும்படியும் கூறினார்கள். சுற்றிச் சுற்றிச் சுற்றி வழி சென்று கொண்டே இருந்தது.  ஆங்காங்கே பாதுகாப்புச் சோதனை!  அதே கேள்விகள், அதே பதில்கள்!

கிட்டத்தட்ட மீண்டும் ஒரு இரண்டு கிலோ மீட்டர் அந்த வரிசைக்கான சுற்றுவழியில் சுற்றிச் சுற்றிச் சென்றதும் திடீர்னு  "இதோ ராமஜென்மபூமி" என்று காட்டி வணங்கச் சொல்கின்றனர். ஶ்ரீராமர் குழந்தை வடிவில் மிகச் சிறிய உருவத்தில் காணப்படுகிறார். சுற்றிலும் ராணுவப்பாதுகாப்பு.  ராஜா அல்லவா?  மெய்க்காவலர்கள் புடைசூழக் காவலில் இருக்கக் காண முடிகிறது.  ஒரு பண்டிட் அங்கே சுற்றிலும் காவலர்கள் புடை சூழ அமர்ந்திருக்கிறார்.  "போலோ,  ஶ்ரீராம்லாலா கி ஜெய் !" என்ற கோஷம் எங்கும் எழுந்தது. ஆம் இங்குள்ள ஶ்ரீராமரைக் குழந்தை என்பதால் "ராம்லாலா" என அழைக்கின்றனர்.  பளிங்கினால் செய்த சிலையில் தங்கத்தால் கோட்டிங் செய்திருப்பதாகச் சொல்கின்றனர்.  ஶ்ரீராமர் விக்ரஹம் இருக்கும் இடத்துக்கும் நாம் தரிசனம் செய்யும் இடத்துக்கும் குறைந்த பக்ஷமாக ஐம்பது அல்லது அறுபது அடிக்கு மேலேயே இருக்கும்.  ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட பல்லக்கில் வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர். 

சற்று நின்று தரிசிக்கலாம்.  ஒண்ணும் சொல்வதில்லை என்றாலும் அடுத்தடுத்து மக்கள் வந்து கொண்டிருப்பதால் இரண்டு நிமிடத்துக்கு மேல் நிற்க முடிவதில்லை. விநயமாகவே நகரச் சொல்லி வேண்டுகோள் விடுக்கின்றனர்.  மீண்டும் அதே நாலு கிலோ மீட்டர் தூர நடை.  அதன் பின்னர் ஶ்ரீராமரின் உலோக விக்ரஹங்கள் சில வாங்கிக் கொண்டு அங்கே காத்திருந்த வழிகாட்டியுடன் அறையை நோக்கித் திரும்பினோம்.  அதற்குள்ளாக மணி பதினொன்றுக்கும் மேல்  ஆகிவிட்டதால் ஶ்ரீராமஜென்ம பூமியையும் மூடி விட்டார்கள்.  இனி மதியம் இரண்டு மணிக்குத் தான் திறப்பார்கள்.  அதோடு அங்கே மறுநாள் ஏதோ கிளர்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஏற்கெனவே தொலைக்காட்சிச் செய்திகள் மூலம் தெரிந்து கொண்டிருந்தோம்.  அதை உறுதிப் படுத்துவதைப் போல் அயோத்திக்குள் வரும் வழிகளை மூடிக் கொண்டிருந்தனர்.  அதனால் தான் எங்கள் வழிகாட்டியும் எங்களை அவசரப் படுத்திக் காலைத் தேநீருக்குப் பின்னர் எதுவும் உண்ணக் கூட அநுமதிக்காமல் எல்லாவற்றையும் காட்டிவிட்டார். :))))

அறைக்கு வந்து நேரே உணவு எடுத்துக் கொண்டு சற்று ஓய்வு எடுத்துக்கலாம் என்று போனோம்.  ஆட்டோக்காரர் மதியம் பார்க்க வேண்டியவைக்குத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசினார்.  அவை எல்லாம் அயோத்தியிலிருந்து 25, 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளவை.  ஒன்று ஶ்ரீராமன் சரயு நதியில் மறைந்த இடம் குப்தார் காட் என்னும் இடம்.  இன்னொன்று நந்திகிராமம்,  27 தீர்த்தங்களைக் கொண்டு வந்த இடம் ஒன்று , மணி பர்வதம் என்றொரு இடம்.  எங்களால் மணி பர்வதம் ஏற முடியாது என்று சொல்லிக் குறைச்சுக்கச் சொன்னோம். அவர் கூட்டித் தான் போவேன் என்றும் அங்கே போனப்புறம் ஏறுவதோ, ஏறாமல் இருப்பதோ எங்கள் இஷ்டம் என்றும் கறாராகச் சொல்லிவிட்டார். ஆட்டோக்காரரையும் அனுப்பிட்டுச் சாப்பிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு மதியம் கிளம்பத் தயாரானோம். 

--Geetha Sambasivam (பேச்சு) 09:23, 30 ஜனவரி 2014 (GMT)


பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 30 ஜனவரி 2014, 09:23 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,416 முறைகள் அணுகப்பட்டது.