ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 7மரபு விக்கி இருந்து
இவர்களுக்குள் வாக்குவாதம் நடக்க அதற்குள்ளாக தில்லிப் படைகள் ஆற்றில் இறங்கித் தாக்க முன்னேறும் தகவல் கிடைத்தது. ஹொய்சளப் படை வீரர்கள் வழிகாட்ட தில்லிப் படை முன்னேறியது. அனைவரும் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகளோடு வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தலைமை வகித்து நடத்தி வந்தவன் உல்லு கான் என்னும் தளபதி. தில்லி சுல்தானாக இருந்த கியாசுதீன் துக்ளக்கின் மூத்தகுமாரன் ஆன இவனே முகமது-பின் – துக்ளக் என்ற பெயரில் பிரபலமடைந்தவன். அங்கே கோயிலையே கோட்டையாக மாற்றிய வண்ணம் ஊர்க்காரர்கள் அனைவரும் போருக்குத் தயாரானார்கள். பட்சிராஜன் தோப்பு என அந்நாட்களில் அழைக்கப் பட்ட கருடன் சந்நிதியைச் சுற்றி இருந்த தோப்புக்கள் எல்லாம் ஆட்கள் நடக்க முடியாதபடிக்கு முட்கள் பரப்பப்பட்டு, முட்களால் ஆன பந்துகள் தூவப்பட்டுக் காணப்பட்டன. இவற்றில் மனிதரோ, குதிரைகளோ செல்ல முடியாது. எதிரிப் படைகள் முன்னேறி தெற்கு வாயிலுக்கு வராமல் இருக்கச் செய்த இந்த முன்னேற்பாடுகள் எல்லாமும் வீணாகத் தான் போயின.
அவற்றின் இடையே கால்களை வைத்து எதிரிப்படைகள் முன்னேறினார்கள். ஆனால் வடக்கு வாயிலுக்கு வந்த படைகள் உடனடித் தாக்குதலில் ஈடுபடாமல் சற்றே பின்னோக்கிச் சென்று ஸ்ரீரங்கத்தின் மக்களைச் சரணடையும்படியும், கோயிலில் உள்ள சகலவிதமான ஆபரணங்கள், நகைகள், பொருட்கள், தானியங்கள் அனைத்தையும் சுல்தானுக்குச் சமர்ப்பிக்கும்படியும் ஆணையிட்டனர். ஆனால் ஊர் மக்களோ தங்களுக்கு அரசன் அந்த ரங்கராஜன் ஒருவனே எனவும், அவன் யாருக்கும் கப்பம் கட்டும் நிலையில் இல்லை என்றும் ஈரேழு பதினான்கு உலகுக்கும் அதிபதியானவனைக் கப்பம் கட்டச் சொல்லும் உரிமையும் எவருக்கும் இல்லை எனவும் அறிவித்தனர். போர் ஆரம்பித்தது. அரங்கன் தென்காவிரிக்கரையில் தேசிகருக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அரங்கன் அடுத்து எங்கே சென்றான், தேசிகர் அரங்கனைச் சேர்ந்தாரா என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.
கோயிலில் இருந்தவர்களை வெளியேற்ற நினைத்தால் எவரும் வெளியேற மறுத்தனர். கோயிலிலேயே தங்குவதாய்க் கூறினார்கள். அரங்கன் முன்னிலையில் அவனுக்காக நாட்டியம் ஆடும் பெண்மணிகளும் கோயிலுக்குள்ளேயே தங்கினார்கள். சற்றும் பயமே இல்லாமல் அனைத்தையும் அரங்கனிடம் ஒப்படைத்துவிட்ட அந்தப் பெண்கள் போரிடச் செல்லும் ஆண்களுக்காக உணவு தயாரிப்பதில் முனைந்தனர். கோயிலின் அந்தணர்கள் அனைவரும் வாளும், கத்தியும், கதையும் ஏந்தி யுத்தத்துக்குத் தயாரானார்கள். உல்லுகான் அனுப்பிய செய்தியில் அனைத்துச் சொத்துக்களையும் சுல்தானிடம் ஒப்படைக்கச் சொல்லி இருந்ததை மறுத்த அவர்கள், தாங்கள் அனைவரும், இந்த ஸ்ரீரங்கமும், கோயிலும் அதன் சொத்துக்களும் ரங்கநாதனுக்கே அடிமை எனவும், அவர்களுக்கு ராஜா ரங்கராஜாதான் எனவும் கூறி அடிபணிய மறுத்தனர். இன்னொரு பக்கம் ஒரு அரசனுக்கு ஐந்து அரசனாகப் பாண்டியர்கள் பிரிந்து நிற்பதையும் அவர்கள் ஒற்றுமையின்மையால் நேரிட்ட இந்தத் துன்பத்தை எண்ணியும் மனம் கலங்கினார். தாங்கள் அனுப்பி வைத்த அழகிய மணவாளர் எங்கே இருக்கிறாரோ என நினைத்து வருந்தினார்கள்.
கோயிலின் தலைமை அதிகாரியான ஸ்ரீரங்கராஜநாத வாதூல தேசிகர் தலைமையில் 12,000 வைணவர்கள் அந்நியப் படையெடுப்பை எதிர்க்கத் திரண்டனர். ஒரு பக்கம் போர்த் தந்திரங்களும், பயங்கர ஆயுதங்களையும் ஏந்திய வலுவான படை. இங்கேயோ எந்தவிதமான உதவிகளும் இல்லாமல் தங்கள் மனோபலத்தையும் அரங்கனையுமே நம்பிய மக்கள். எனினும் மிகவும் உத்வேகமாக எதிர்த்து நின்றனர். எதிரிகள் வடக்கு வாசலில் காவல் நின்ற பஞ்சு கொண்டான் என்பவரை எதிர்த்து உள்ளே புகுந்தனர். இந்த வடக்கு வாசல் ஆர்ய படாள் வாசல் எனப் படுகிறது. வட மாநிலங்களிலிருந்து வந்த “கெளட” தேசத்து அரசர் கொடுத்த பொருளைக் கோயில் நிர்வாகம் வாங்க மறுக்கவே தம் தேசத்து ஆர்ய அந்தணர்களை நியமித்து அந்தப்பொருட்களை அங்கே பாதுகாத்து வைத்திருந்த காரணத்தால் இந்தப்பெயர் என்கிறார்கள்.
வடக்கு வாசலில் காவல் இருந்த வில்லிதாசரின் மகன் குலசேகரனையும், பஞ்சு கொண்டானையும் எதிர்த்து உள்ளே புகுந்த வீரர்கள் 12,000 அந்தணர்களையும் கொன்று குவித்தனர். பஞ்சு கொண்டானும் உயிர் நீத்தார். குலசேகரன் எவ்வாறோ தப்பி விட்டான். அரங்கனைத் தேடி அவனும் அவனுடன் இன்னும் சிலரும் சென்றனர். உயிர் நீத்த அந்தணர்களில் சுதர்சன பட்டர் என்னும் பெரியாரும் ஒருவர். இவர் நடாதூர் அம்மாள் அவர்களின் சீடர் ஆவார். அவரிடம் அமர்ந்து பாடம் கேட்டு “சுதபிரகாசிகை” என்னும் பிரம்மசூத்திர வியாக்யானம் ஆன ஸ்ரீ பாஷ்யத்துக்கு விளக்கவுரை எழுதியவர். அந்த சுதபிரகாசிகையையும், தம்மிரு மகன்களையும் அங்கே பிணங்களுக்கு நடுவே மறைந்திருந்த வேதாந்த தேசிகரிடம் பராசர பட்டர் என அழைக்கப்பட்ட சுதர்சன பட்டர் ஒப்படைத்தார்.
மூலவரான ரங்கநாதரைக் கல்சுவரால் மறைக்க ஏற்பாடு செய்த வேதாந்த தேசிகர், ரங்கநாயகித் தாயாரையும்ம் அங்கிருந்த வில்வ மரத்தடியில் ஒளித்து வைக்க ஏற்பாடு செய்தார். அவரை அழகிய மணவாளரின் ஊர்வலத்தோடு சேர்ந்து செல்லும்படிக் ஓயில் அதிகாரிகள் வேண்டியும் அவர் போக மறுத்தார். அவர் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு அழகிய மணவாளரைத் தூக்கிச் சென்றவர்கள் தேசிகர் பின் தொடர்வதற்கு ஏதுவாக உலர்ந்த இலைகளையும், துளசிக் கொத்துக்களையும் போட்டுக்கொண்டு சென்றிருந்தார்கள். ஆனால் இங்கே கோயிலில் தங்கிய வேதாந்த தேசிகருக்கு இப்போது ஒரு மாபெரும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. சுதர்சன பட்டரின் குழந்தைகளையும், சுதபிராகாசிகையையும் மறைத்துக் கொண்டு ஒளிந்திருந்த வேதாந்த தேசிகர் அங்கிருந்து கிளம்பினார். கிரஹண காலத்துச் சூரியன் போல மறைந்திருக்கும் அரங்கனை மீண்டும் எவ்விதமான இடர்ப்பாடுகளும் இல்லாமல் தாம் தரிசிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு கிளம்பினார் தேசிகர்.
--Geetha Sambasivam 14:47, 6 ஜனவரி 2013 (UTC)
|