டோரண்டோ போவதற்கு விமான டிக்கட் வாங்கியாயிற்று. அது நேராக கனடாவிலிருந்து லுஃப்தன்சாவின் பெயரில் வந்த பணம். சரி வீட்டை விட்டு வெளியூருக்கு போகிறோம் என்றால் வெறும் கையை வீசிக்கொண்டா போவார்கள்? வழியில் பயணத்தின் போது ஏதாவது சாப்பிட காசு வேண்டாமா? விமானத்தில் சாப்பாடு கொடுத்து விடுவார்கள் சரி. ஆனால் ஃப்ராங்க் ஃபர்ட்டில் காலை போய்ச் சேர்ந்தது மறு விமானத்திற்கு நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டும். காலையில் பசிக்காதா? அங்கு ஏதாவது சாப்பிட வேண்டுமே. பின் டோரண்டோவில் பதினைந்து நாள் இருக்கப்போறோம். கடை கண்ணிக்குப் போனோம். ஏதோ ரெஸ்டாரண்டுக்கு போனோம். அப்போது நம் செலவுக்கு ஏதாவது வேண்டாமா? பின் வெளி நாட்டுக்குப் போனோம் என்றால் சும்மா திரும்பி வந்தால் மிகுதி இருக்கும் வாழ்க்கை நிம்மதியாகக் கழியுமா என்ன? அங்கே என்ன வாங்குவது? திருநெல்வேலி போனால் அல்வா வாங்கலாம். வாரணாசி போனால் புடவை வாங்கலாம். பழனி போனால் பஞ்சாமிர்தம் வாங்கலாம். டோரண்டோவில் என்ன வாங்குவதாம்? ஃப்ராங்க்பர்ட்டில் என்ன வாங்குவதாம்? ஒரே குழப்பமாக இருந்தது. எதற்கும் கொஞ்சம் பணத்தை டாலராக மாற்றி வைத்துக்கொள்வது நல்லது என்று சொன்னார்கள். சொன்னார்களா அல்லது எனக்கே தோன்றியதா? இப்போது நினைவில் இல்லை. சொன்னார்கள் என்றே வைத்துக்கொள்ளலாம். பாதுகாப்பானது. டிராவல் ஏஜென்ஸியிடமே 100 டாலர் வாங்கி வைத்துக்கொள்ளலாமா? போதுமா? சரி 150 டாலர் வாங்கி வைத்துக்கொள்ளலாம். என்ன ஆயிற்று? கிட்டத்தட்ட 6000 ருபாய்க்கு மேல். அதற்கு மேல் டாலராக மாற்றுவதற்கு கமிஷன் வேறு. ஆமாம். 6000 ரூபாய்க்கு என்ன வாங்குவது? டாலரை வைத்துக்கொண்டு ஃப்ராங்க்பர்ட் விமான நிலயத்தில் என்ன டீ சாப்பிடமுடியுமா? காஃபி சாப்பிட முடியுமா? "Herr (whoever you are), இது ஜெர்மனி, மார்க் இருக்கா?" என்று அந்த ஜெர்மன் டீக்கடைக்காரன் சொன்னால் என்ன செய்வது? அங்கே டீ சாப்பிட என்று இப்பவே கொஞ்சம் சில்லரையாக மார்க் வாங்கிக் கொள்வதா? என்ன செய்வது? ஆமாம், டோரண்டோவில் கனடியன் டாலர் அல்லவா கேட்பான்? எவ்வளவு கனடியன் டாலர், எவ்வளவு ஜெர்மன் மார்க் மாற்றி வைத்துக்கொள்வது? ஒரே குழப்பமாக இருந்தது. ஆமாம் அமெரிக்க டாலர் உலகம் எல்லாம் செலாவணியாகாதோ? முன்னர் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் டிபார்ட்மெண்டிலிருந்து டோக்கியோ போன நண்பனிடம் அமெரிக்க டாலர் தானே வாங்கிக் கொடுத்தேன்? ஞாபகம் வந்தது. சரி பார்த்துக்கொள்ளலாம். எல்லாத்தியும் குழப்பிக்கொள்ளக்கூடாது என்ற தெளிவு பிறந்தது.
விமானம் இரவு பன்னிரண்டு மணிக்கு கிளம்பியது. அது என்ன பன்னிரண்டு மணிக்கு? காலையில் எட்டு மணிக்கோ என்னவோ ஃப்ராங்பர்ட் போய்ச்சேரும் என்று சொன்னார்கள். இதிலேயும் வெள்ளைக்காரன் தன் சௌகரித்தைத் தான் தேடிக்கொள்கிறான். இந்தியாவிலிருந்து கிளம்புகிற விமானமும் வந்து இறங்குகிற விமானமும் நடு ராத்திரி வருவானேன்? அவனுக்கு மாத்திரம் சுகமாக காலை நேரத்தில் ஊர் போய்ச் சேருவானாக்கும்? இன்னமும் வெள்ளையனின் காலனியாதிக்கம் இப்படியெல்லாம் தொடர்கிறதோ என்கிற சந்தேகம் எனக்கு. யாரும் எதுவும் முணுமுணுக்கக் கூடக் காணோம். வெஜிடேரியனா நீங்கள்? என்று என் பக்கம் மாத்திரம் வந்து ஒருத்தி கேட்டுப் போனாள். இந்த விமானத்திலேயே நான் ஒருத்தன் தான் வெஜிடேரியனோ? என்ன கொடுப்பானோ? அடுத்து, "வைன் ஜூஸ்...... எது வேணும்? " என்று கேட்டாள் கொஞ்ச நேரம் கழித்து ஒரு வண்டியைத் தள்ளிக்கொண்டே. வைன் இருக்கும்போது ஜூஸ் யாருக்கு வேணும். இன்னும் ஸ்டிராங்கா ஏதும் கொடுக்கக்கூடாதோ, கொடுப்பார்களோ? இது நாள் வரை என் விமானப் பயணங்கள் 2 அல்லது 3 மணி நேரத்திற்கு மேல் போனது கிடையாது. அதுவும் இரவு ஒன்றரை மணிக்கு விழித்திருந்து சாப்பிடும் அனுபவம் இருந்ததில்லை. வைன் அருந்திக்கொண்டிருக்கும்போது சாப்பாடும் வந்தது. எல்லோருக்கும் என்னென்னவோ கொடுத்தார்கள். எனக்கு தனியாக வெஜிடேரியன் வரும் என்றார்கள். அது வந்தது. என் இரு பக்கத்திலும் என்னென்னமோ வித விதமாக பல கலர்களில் வைத்திருப்பதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் வந்தது. வந்ததைப் பார்த்தால் எதையோ வேக வைத்தது ஒரு சின்ன கிண்ணம் போன்ற தட்டில். ரொட்டி, பின் என்னமோ இனிப்பு. வயிற்றெரிச்சலாக இருந்தது. மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்கும் கொடுத்ததில் பாதிகூட எனக்குக் கொடுக்கும் சாப்பாடு இராது போலிருந்தது. வெள்ளைக்காரன் என்ன வெஜிடேரியன் என்றால் இளப்பமாக நினைத்துக் கொண்டிருக்கிறானா? ஏன் இந்த பக்ஷபாதம்? ஆனால் சொல்ல முடியாது. உள்ளுக்குள் புழுங்கிக் கொள்ளவேண்டியது தான். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான் போலும். இவர்களிடம் வெங்காய சாம்பாரும் உருளக்கிழங்கு கறியும் கேட்கவில்லை. அதற்காக இப்படியா? இதான் ஏசியன் வெஜிடேரியன் போலும். மங்களூர் உடுப்பி வெஜிடேரியனா கேட்கமுடியும்?
எதையோ சாப்பிட்டேன். வயிறு நிரம்பவில்லை. பக்கத்திலிருந்தவர்கள் சாப்பாட்டைப் பார்த்த எரிச்சல் வேறு. டிவி பெட்டியில் ஏதோ அமிதாப் பச்சன் படம் ஓடிக்கொண்டிருந்தது. தூக்கம் வந்துவிட்டது தூங்கி விட்டேன். காலையில் பல்தேய்த்து விட்டு வந்து உட்கார்ந்தால், ஏழரையோ எட்டோ இருக்கும். ஃப்ராங்க்பர்ட்டில் இறங்கப் போகிறோம் என்றார்கள். விமானம் தரையிறங்கியது. விமானத்தை விட்டு வெளியே வந்தால் விமான தளம். உலகிலேயே மிகப் பெரிய, மிக விஸ்தாரமான விமான தளம் கொண்ட நிலயம் அது என்று படித்திருக்கிறேன். எது எப்படியோ, வாழ்க்கையில் முதல் தடவையாக அந்நிய மண்ணில் காலடி வைத்திருக்கிறேன். அந்நிய விமான நிலையத்தில் காலடி வைத்தால் அன்னிய மண்ணில் காலடி வைத்தாகிவிடுமா? அப்போது நான் என் ஜீவன் பற்றிய இரண்டு ஆருடங்களை(கை ரேகை) நினைத்துக் கொண்டேன். ஒன்று நாற்பது வயதுக்கு மேல் நான் வாழ மாட்டேன். இரண்டு, வெளி நாட்டு பயணம் என்பது என் ஜாதகத்தில் இல்லை. இவை இரண்டும் என்னை ஒன்றும் தீவிரமாக பயமுறுத்தவில்லை. சின்ன வயதில் யாரோ சொன்ன ஆரூடங்கள். அவ்வப்போது நினைவுக்கு வரும். ஏதோ பழைய சம்பவங்கள் நினைவுக்கு வருவது போல ஒரு சாதாரண விஷயம் தான். ஆதலால் விதியை வென்ற பகுத்தறிவு தரும் இறுமாப்பு உணர்வு எதற்கும் இதில் இடமில்லை. தமிழ் சினிமாவாக இருந்தால் இங்கு சிவாஜி குறைந்தது 15 நிமிடங்கள் வீர வசனம் பேச இது தகுதியான இடம் தான். தமிழ்த் தாய் பெற்ற வீரப் புதல்வர்களையெல்லாம் அவ்வப்போது நினைவு கொள்வது சந்தர்ப்பத்திற்கேற்ப எனக்கு வந்துவிடுகிறது.
விமான நிலயத்தின் மிகப் பிரம்மாண்ட விஸ்தாரத்தில் நடந்து சென்றேன். வாஷ் ரூமில் பல் தேய்த்து வெளியே வந்தேன். ரெஸ்டாரெண்ட் ஒன்று தெரிந்தது. நம்மூரில் மாடர்ன் ப்ரெட்டும் சாயாவும் விற்கும் கடைபோல. விலைப்பட்டியலைப் பார்த்தேன் முதலில். எல்லாம் யூரோவில் பட்டியலிடப்பட்டிருந்தது. என்னிடம் இருந்தது அமெரிக்க டாலர். அமெரிக்க டாலர் கிட்டத் தட்ட ரூபாய் 41க்குச் சமம். ஏறும் இறங்கும். யூரோ 55-56 ரூபாய்க்குச் சமம். நான் கணக்குப் போட்டுப் பார்த்தேன். ஒரு கப் காஃபி சாப்பிட்டல் 178 ரூபாயோ என்னவோ அழவேண்டும். இந்த ரேட்டில் என்னத்தைச் சாப்பிடுவது, எவ்வளவு பணம் அழுவது? பீர் நிறைய வகைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. எனக்கு எந்த பீர்களில் ஒரு தராதரமும் தெரியாது. ஒன்று மட்டும் கணக்கிடத் தெரிந்தது. யூரோ எவ்வளவு எழுதியிருந்தது என்று இப்போது நினைவில் இல்லை. ஆனால் ரூபாய்க் கணக்கில் ஒரு பீர் கேன்(can) 234 ரூபாய்க்கு யூரோ கொடுத்தால் கிடைக்கும் என்று மனத்தில் கணக்கிட்டுக்கொண்டது நினைவில் இருக்கிறது. ஒரு கப் காஃபி 178 ரூபாய் கொடுத்துச் சாப்பிடுவதற்கு அதைப் போல் மூன்று மடங்கு அதிகம் கொள்ளும் பீர் கேனை 234 ரூபாய்க்கு வாங்கலாம் என்று தோன்றிற்று. 1957-ல் ஒரு நாள் நல்ல தில்லி கடுங்கோடையில் நானும் என் அறை நண்பன் துரைராஜும் மூன்று ரூபாய் கணக்கில் மூன்று பீர் பாட்டில் வாங்கிவந்து சாப்பிட்டது நினைவுக்கு வந்தது 12 அல்லது 12.30 மணிக்கு விமானத்தில் சாப்பாடு கிடைக்கும் அது வரை பசி எடுக்காமல் காலம் தள்ள வேண்டும். பீர் வாங்கலாம் என்று தீர்மானித்தேன். இங்கு அடிப்படையில் ஒரு தஞ்சாவூர் கிராமத்தானின் மூளை வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். முடிவு எடுத்துவிட்டேனே தவிர 234 ரூபாய் நம்மூரில் கொடுத்தால் குறைத்தது நாலு பாட்டில்களுக்கு மேல் பீர் கிடைக்கும். இந்த கேனில் நம்மூர் ஒரு பாட்டில் பீரின் முன்றில் ஒரு பங்கு கூட இந்த ஒரு கேன் பீர் இல்லை. இதையெல்லாம் கணக்குப் பண்ணி நொந்து என்ன பயன்? 1960-ல் தமிழில் எழுதத் தொடங்கியபோது, இப்படியெல்லாம் கூட விளைவுகளை ஃப்ராங்க்ஃபர்ட்டில் சந்திக்க நேரிடும் என்று யார் எண்ணியிருக்கக் கூடும்? பத்து அமெரிக்க டாலர் நோட் ஒன்றைக் கொடுத்தேன். நல்ல வேளையாக கடைக்காரன் அவரவர்க்குத் தகுந்தபடி ஜெர்மன், இங்கிலீஷ், ஃப்ரெஞ்சு என எல்லா பாஷைகளிலும் பேசினான். தைர்யமாக பீர் கேட்டேன். என்ன பீர் வேண்டும் என்று கேட்டான். ஏழெட்டு பீர் வகைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. எதை என்று நான் கேட்பது? பட்டியலில் இரண்டாவதாக இருக்கிறதே அதைக் கொடு என்றேன். அதைப் படித்து சரியான உச்சரிப்பில் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அவன் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அவனுக்கு இதெல்லாம் பழக்கமானது தான். ஆங்காங்கே ஹரியானா ஜாட்டுகளையும், அம்ரித்சர் சர்தார்ஜிகளையும் பார்த்தேன். என் பத்து டாலர் நோட்டை எடுத்துக்கொண்டு மிச்சப் பணத்தை யூரோ நாணயங்களாகக் கொடுத்தான். ஆக 400 ரூபாய் கொடுத்தால் ஒரு பீர் கேனுக்கான காசு போக இவ்வளவு தான் மிஞ்சுகிறது.
பீர் கேனை எடுத்துக்கொண்டு நான் தனியாக ஒரு இடத்தில், சுற்றி எல்லோரையும் பார்க்கும்படியான ஒரு நடு இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். என்னென்னவோ சாண்ட்விச் அது இது என்று சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மூன்றாம் உலக ஏழை நாட்டின் ஏழைக் குடும்பத்தானுக்கு ஃப்ராங்பர்ட்டே ஆனாலும் இது போதும். நிறைய நேரம் இருக்கிறது 12 மணிக்குத் தான் டோரண்டோ போகும் விமானம் வரும். மெதுவாக சாப்பிடலாம். அவசரம் இல்லை. பீரை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக ஏதோ கிடைக்காது கிடைத்த அமிர்தம் போல சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். பொழுது போகணுமே. "இங்கே உட்காரலாமா, இடம் காலிதானே?" என்ற குரல் கேட்டது. பின்னாலிருந்து ஒரு இளம் தம்பதியர். உட்காரச் சொன்னேன். இருவரும் தெலுங்கில் பேசிக்கொண்டார்கள். "ஒரு காபி சாப்பிடலாம். வேறு ஒன்றும் வேண்டாம்." என்றாள் இளம் பெண். ஒருவேளை ஒன்றிரண்டு மணி பிரயாணத்தில் போக வேண்டிய இடம் போய்ச் சேர்பவர்களாக இருக்கும். ஒரு 500 ருபாய் நோட்டை எடுத்துக்கொண்டு, "இதை மாத்திக்கொண்டு வரேன்" என்று அந்த வாலிபன் போனான். எல்லா உலக கரன்ஸியையும் யூரோவாக மாற்றிக் கொடுக்கும் ஒரு பூத் அங்கேயே பக்கத்தில்தான் இருந்தது. பின்னர் அந்த மாதிரி பூத்களை அந்த விமான நிலயத்தில் நிறைய ஆங்காங்கே பார்த்தேன். சிறிது நேரத்தில் அவன் இரண்டு கப் காஃபியோடு திரும்பி வந்தான். காஃபியை மேஜைமேல் வைத்து கையில் இருந்த சில்லரையையும் மேஜை போல் வைத்தான். இது தான் மிஞ்சியது என்றான். என்னமோ நம்மூர் சாயா கடையில் 5 ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு போய் இரண்டு கப் டீ வாங்கி மிச்சம் 50 பைசா 25 பைசா நாணயங்களை மேஜைமேல் எறிவது போன்ற பாவனை இருந்தது. சீக்கிரம் டோரண்டோ போய்ச் சேரவேண்டும். இப்படி 500 ரூபாய் நோட்டுக்களாக காபி கடையில் கொடுத்து நாம் வாழமுடியாது என்று நினைத்துக் கொண்டேன்.
இரண்டு இலங்கை அன்பர்கள், அவர்களை தரமணி நாடகப் பட்டறையில் சந்தித்திருக்கிறேன். பழக்கமானவர்கள். 3 லக்ஷம் ரூபாய் ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து ஜெர்மனி போகக் காத்திருந்தார்கள். இவ்வளவு பெரிய தொகையை அவன்கிட்டே கொடுத்து ஜெர்மனி போய் என்னய்யா பண்ணப்போறீங்க, அங்கே போய் நாடகமா போடமுடியும்? என்றுகேட்டேன். அவர்கள் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அது பெரும்பாலான ஈழத்து அகதிகள் கையாளும் சமாச்சாரம் தான் என்று தெரியவந்தது. ஜெர்மனி போய் அங்கு அகதிகளாக ரிஜிஸ்டர் செய்துகொண்டால், வேலை கிடைக்கும். வேலை கிடைக்கும் வரை வேலை இல்லாதோர்க்கான மான்ய உதவி கிடைக்கும். அதில் மிச்சம் பிடித்து விட முடியும். அதை ஊருக்கு அனுப்பினால் குடும்பமே அதில் காலம் தள்ளிவிடமுடியும் என்றான். இப்படி நிறைய பின்னால் நான் கேட்டு வந்திருக்கிறேன். அந்த மான்யமே ஒப்புக்கு வயிறு பசிக்காமல் இருக்கக் கொடுப்பது. அதில் இவர்கள் சாப்பிட்டு மிச்சத்தில் குடும்பமே பிழைக்கும் என்றால்......இரண்டு கப் காஃபிக்கு 500 ரூபாய் நம்மிடமிருந்து பிடுங்கினால் தான் இது சாத்தியம் என்று நினைத்துக் கொண்டேன்.
வெங்கட் சாமிநாதன்/12.4.08