விலங்கினங்களைப் பற்றிய அதிசய செய்திகள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தமிழ் இலக்கியக் காட்சிகள்


ச.சுவாமிநாதன், எம்.ஏ. (பிரித்தானியா)


விலங்கினங்களைப் பற்றிய அதிசய செய்திகள்


பழந்தமிழர்கள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் அபார முன்னேற்றம் அடைந்திருந்தனர். குறிப்பாக அறிவியல் முன்னேற்றம் அடைந்திருந்தனர். அறிவியலில் விலங்கியல் துறையிலும் (zoo logy), தாவரவியல் துறையிலும் (BOTONY) அவர்கள் கண்ட முன்னேற்றம் நம்மை வியக்க வைக்கிறது. கபிலர் என்னும் புலவர் தமது குறிஞ்சிப்பாட்டில் ஏறத்தாழ நூறு தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிட்டுத்தருகிறார். இதுபோன்ற ஒரு நீண்ட பட்டியல் உலகின் வேறு எந்த இலக்கியத்திலாவது இருக்குமா என்பது சந்தேகமே.


தமிழர்கள், விலங்குகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துப் பாடியிருக்கிறார்கள். இதில் சில செய்திகளை ஏற்கெனவே அறிவியல் உலகம் அறிந்துள்ளது. இன்னும் சில செய்திகளை இதுவரை விஞ்ஞானிகள் கூட கண்டுபிடிக்கவில்லை! இதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
ஆமையின் குட்டிகள் (பார்ப்புகள்) தாயின் முகத்தைப் பார்த்தவாறே வளருமாம். குறுந்தொகை (135), நற்றிணை (152) பாடல்கள் இந்தச் செய்தியை அளிக்கின்றன. இதை விஞ்ஞானிகள் இன்னும் உறுதி செய்யவில்லை.


வலப்பக்கத்தில் விழும் உணவை மட்டுமே புலிகள் உண்ணும். இடப்பக்கம் விழுந்தால் சாப்பிடாது என்று சங்கப்புலவர்கள் பலர் பாடி வைத்துள்ளனர். இதையும் விஞ்ஞானிகள் இதுவரை உறுதி செய்யவில்லை. என்றாவது ஒருநாள் இவ்விரு உண்மைகளையும் விஞ்ஞானிகள் உறுதி செய்தால், அதை முதலில் கண்டுபிடித்த பெருமை தமிழனையே சாரும்.


"கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து
இருங்களிறு ஒருத்தல் நல்வலம் படுக்கும்."


(இடப்பக்கம் விழுந்த பன்றியைச் சாப்பிடாமல் வலப்பக்கம் தானே அடித்து வீழ்த்திய யானையையே புலி உண்ணும்." என்று சோழன் நல்லுருத்திரன் பாடுகிறார். -புறநானூறு. 190)


இதே கருத்தை அகநானூறு 3,238, 252 பாடல்களிலும் காணலாம்.


குட்டிகளை தாய் முதலை கொன்று தின்றுவிடும் என்றும் நண்டுகள் பிறந்தவுடன் தாய் நண்டு இறந்து விடும் என்றும் ஒரம்போகியார் என்னும் புலவர் (ஐங்குறுநூறு-வரி 24) கூறுகிறார்.


பிராணிகள் கூட மனிதர்களைப் போல கனவு காணும் என்பதை மேலை நாட்டு உளவியலாளர்கள் (PSYCHOLOGISTS) அண்மைக்காலத்தில் தான் கண்டுபிடித்தனர். ஆனால் தமிழர்களை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து விட்டனர்.


"கூம்புமுகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை
வேங்கை விரியிணர் ஊதிக் காந்தள்
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி,, யானை
இருங்கவுட்கடா அம் கனவும்"


(யானைகளின் கன்னத்திலே வழியும் மதநீர் குறித்து வண்டுகள் கனவு காண்கின்றன என்று தாயங்கண்ணனார் என்ற புலவர் (அகம்--132) பாடுகிறார்.
கடற்காக்கைகள் சுவையான இரால் மீனைக் காண்பதாக வெண்ணாகினார் என்ற புலவர் (அகம் 170) கூறுகிறார்.


ஒவ்வொர் விலங்கும், பறவையும், பூச்சியினங்களும் குறிப்பிட்ட சில ஆண்டுகளோ, மாதங்களோ, நாட்களோ தான் உயிர் வாழும். புறநானூற்றுப் பாடல் 51-ல் ஐயூர் முடவனார் என்ற புலவர் ஈசல்கள் ஒரே நாளில் இறந்து விடும் என்ற அரிய உண்மையை எடுத்துரைக்கிறார்.


"நுண்பல் பிதலை அரிது முயன்று எடுத்த
செம்புற்று ஈயல் போல,
ஒரு பகல் வாழ்க்கைக்கு
உலமருவோரே!"


(பாண்டியன் மாறன்வழுதி போருக்குப் புறப்பட்டால் அவனது எதிரிகள் ஒரே நாளில் பிறந்து இறக்கும் ஈசல்களைப் போல அழிவராம்.)
பாலியல் (sex) பற்றிப் பேச நாம் வெட்கப் படுகிறோம். குரங்குகளுக்கும் கூட இந்த உணர்ச்சி உண்டாம். புணர்ச்சிக்குப் பின்னர் குரங்குகள் வெட்கப்படும் என்றும் நற்றிணை 151-ஆவது பாடல் கூறுகிறது.


சில பறவைகளும் விலங்குகளும் சிலபல காரணங்களுக்காக கற்களையும் மண்ணையும் உண்ணும். புறாக்கள் கற்களை உண்பதாக பட்டினப்பாலை (வரி 58) கலித்தொகை (56) அகநானூறு (271) பாடல்கள் கூறும்.


"பொறிவரிப் புறவின் செங்காற்சேவல்
சிறுபுன்பெடையொடு சேண்புலம் போகி
அரிமணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு"
(அகம்-- 271--செங்கண்ணனார்)


(ஆண்புறா அதன் பேடையுடன் சென்று பரற்கற்களை உண்ணும்)


இன்னும் எத்தனையோ சுவையான அறிவியல் செய்திகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. அவைகளை அடுத்த இதழில் காண்போம்.


--Geetha Sambasivam 13:38, 15 நவம்பர் 2011 (UTC)


Category:இலக்கியம்

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2011, 13:38 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 325 முறைகள் அணுகப்பட்டது.