விநாயக சதுர்த்திக்கான கொழுக்கட்டை வகைகள்மரபு விக்கி இருந்துவிநாயகர் சதுர்த்திக் கொழுக்கட்டை செய்யும் விதம். முதல் முறை உருண்டை கொழுக்கட்டை. இரண்டு கிண்ணம் அரிசி மாவு, ஒரு கிண்ணம் தூளாக்கிய வெல்லம், தேங்காய்க் கீறல்கள், ஏலக்காய், நீர். இதற்கு அரிசி மாவும் சரியாய் இருக்கும். இல்லாவிட்டால் பச்சரிசி ஒரு கிண்ணம் எடுத்துக் களைந்து கொண்டு நீரில் ஊற வைக்கவும். அரிசி ஒரு மணி நேரமாவது ஊறிய பிறகு நீரை வடித்துவிட்டுப் பின் மிக்சியில் மாவாக்கவும். மாவைச் சூடு வர வெறும் வாணலியில்/கடாயில் வறுத்துக்கொள்ளவும். பின் ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் ஒரு கிண்ணம் நீரைச் சுட வைக்கவும். நீர் கொதித்து வரும்போது தூளாக்கிய வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் நீரில் கரையும்போது தேங்காய்க்கீறல்களைச் சேர்த்துவிட்டு, அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். நன்கு கிளறவும். மாவு நன்கு வேக வேண்டும். நன்கு வெந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும். சிறு சிறு உருண்டைகளாய்ப் பிடிக்கவும். ஒரு இட்லிப் பானையில் நீர் ஊற்றி, இட்லித் தட்டில் அல்லது ஒற்றைத் தட்டில் எண்ணெய் தடவி, அல்லது இலை/துணி போட்டுப் பிடித்த உருண்டைகளை வைத்துப் பத்து நிமிடம் வேக வைக்கவும். பின் வெளியே எடுக்கலாம். பொதுவாய் இந்தக் கொழுக்கட்டையைப் பிடி கொழுக்கட்டை என்று சொல்வதுண்டு. பெரும்பாலும் விநாயகருக்கு வேண்டிக்கொண்டு நினைத்த காரியம் பூர்த்தியானால் இந்தப் பிடி கொழுக்கட்டை செய்து விநியோகம் பண்ணிப் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வார்கள். அடுத்துப் பூரணக் கொழுக்கட்டை. பொதுவாய் இதுதான் விநாயக சதுர்த்திக்குச் செய்வார்கள். இது வெறும் தேங்காய்ப் பூரணம், கடலைப்பருப்புப் பூரணம், எள் பூரணம், உளுந்துப் பூரணம் என நான்கு வகைகளில் செய்வது உண்டு. தேங்காய்ப் பூரணம்: தேங்காய் சிறிது ஒன்று. ஏலக்காய் நாலைந்து பொடித்துக்கொள்ளவும். பாகு வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன் தூளாக்கியது. வெல்லம் ரொம்பச் சேர்த்தால் பூரணம் கொழுக்கட்டையில் இருந்து வெளியே வந்துவிடும். தேங்காயை உடைத்துத் துருவிக் கொள்ளவும். ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் தேங்காய் துருவலோடு வெல்லத்தையும் சேர்க்கவும். நீர் சேர்க்கவேண்டாம். வெல்லத்தில் உள்ள நீரும் தேங்காய் துருவலில் உள்ள நீருமே போதுமானது. வெல்லமும் தேங்காய்த் துருவலும் நன்கு கலக்கவேண்டும். நன்கு கலந்து பூரணம் உருட்டும் பதம் வரும்போது இறக்கி ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும். கடலைப்பருப்புப் பூரணம்: கடலைப்பருப்பு ஒரு சின்னக் கிண்ணம், வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள். ஒரு சின்னக் கிண்ணம் கடலைப்பருப்பை எடுத்து வறுத்து ஊற வைக்கவும். ஊற வைத்த பருப்பை வேக வைத்து அதோடு வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அரைத்த விழுது தளர இருந்தால் நான் ஸ்டிக் கடாயில் போட்டுச் சிறிது நேரம் கிளறினால் கெட்டியாகிவிடும். ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும். எள் பூரணம்: ஒரு சிலர் கடலைப்பருப்புப் பூரணத்திலேயே எள்ளையும் வறுத்துப் பொடித்துச் சேர்ப்பார்கள். சிலருக்குத் தனியாக எள் பூரணம் செய்வார்கள். உளுந்தம் பூரணம்: உளுந்தைக் களைந்து கல்லரித்துக்கொண்டு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறியதும் வடிகட்டிவிட்டுப் பின்மிக்சியில் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து உளுத்தம்பருப்பை அரைக்கவும். ரொம்ப நைசாக அரைக்கவேண்டாம். என்றாலும் பருப்பும் தெரியக் கூடாது. அரைத்த விழுதை ஒரு ஒற்றைத் தட்டில் எண்ணெய் தடவிப் பரப்பி இட்லிப் பானையில் வேக வைக்கவும். குச்சியால் அல்லது ஒரு கரண்டி நுனியால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது வெளியில் எடுத்து ஆறவிடவும். கடாயில் தாளிக்க எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை சேர்க்கவும். வெந்த உளுத்தம்பருப்பு விழுதைச் சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவலும் சேர்க்கவும். பூரணம் உதிர் உதிராக வந்ததும் கீழே இறக்கவும். விரும்பினால் எலுமிச்சம்பழம் ஒரு மூடி பிழிந்து கொள்ளலாம். நான்கு பூரணங்களும் ரெடியாயிடுச்சு. இப்போ மேல் மாவு தயாரிக்கும் முறை. அரிசி நல்ல பச்சரிசியாக இருத்தல் நலம். தமிழ்நாடு என்றால் ஐஆர் இருபது அரிசி கிடைக்கும், மற்ற இடங்களில் உள்ளவர்கள் நல்ல பச்சரிசியாகப் பார்த்து எடுத்துக்கொள்ளவும். யு.எஸ். , கனடா என்றால் அமெரிக்கன் லாங் கிரெயின் ரைஸ் சரியாய் இருக்கும். அரிசி 250 கிராம். வேக வைக்க நீர் ஒரு சின்னக் கிண்ணம், ஒரு சிட்டிகை உப்பு. ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய். அரிசியை நன்கு களைந்து நீரில் ஊற வைக்கவேண்டும். குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஊறினால் நல்லது. ஊறிய அரிசியை நீரை வடித்துவிட்டு மிக்சியில் போட்டுத் தேவையான நீரை மட்டும் கொஞ்சமாய் ஊற்றி நல்ல நைசாக அரைக்கவும். கையால் தொட்டால் மாவில் கரகரப்புத் தெரியக் கூடாது. நல்ல சில்க் மாதிரி வழவழப்பாக இருக்க வேண்டும். மாவை எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் நீர் ஒரு சின்னக் கிண்ணம் ஊற்றி ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போடவும். நீர் நன்கு கொதிக்கவேண்டும். இப்போது அரைத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொட்டிக் கிளறவேண்டும். மாவு நிறம் மாறும் வரை நன்கு கிளறிக் கொள்ளவும். மாவு நன்கு வெந்ததும் பந்துபோல் திரண்டு வரும். எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து எண்ணெயும், சூடான நீரும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும், உள்ளே கட்டிகள் இல்லாமல் நன்கு பிசைய வேண்டும். இந்த மாவில் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்துக் கிண்ணம் போல் செய்யவும். தேவையான பூரணத்தை உள்ளே வைத்து நிரப்பவும். இப்படிக் கொழுக்கட்டைகள் செய்து விட்டு இப்போது அவற்றை வேகவிடவேண்டும். இட்லிப் பானையில் நீர் ஊற்றி இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டைப் போட்டு அதில் செய்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து வேகவிடவேண்டும். ஏற்கெனவே வெந்த மாவு என்பதால் அதிக நேரம் விடவேண்டாம். கொழுக்கட்டைகள் மேலே எண்ணெய் கசிந்தாற்போல் நீர் வந்து வேர்த்துவிட்டிருக்கும். அப்போது எடுத்துவிடலாம். ஒரு சிலர் மாவை நீர் விட்டு அரைக்காமல் நீரை வடித்துவிட்டு மாவைப் பொடியாக்கியும் வைத்துக்கொள்வார்கள். இது அவரவர் செளகரியம் போல் செய்து கொள்ளலாம். அடுத்துப் பால் கொழுக்கட்டை இதற்கும் அரிசி தேவை. வெல்லம், தேங்காய் பெரிதாக ஒன்று. ஏலக்காய். அரிசி 250 கிராம். பாகு வெல்லம் 300/400 கிராம், தேங்காய் பெரிதாக ஒன்று, ஏலக்காய். தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு ஒரு சிட்டிகை. அரிசியை நன்கு ஊற வைக்கவேண்டும். ஊறிய அரிசியை தேங்காய் துருவல் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். தனியாக வைத்துக்கொள்ளவும். பெரிய தேங்காயை எடுத்து உடைத்துத் துருவிப் பாலை எடுக்கவும். முதல் பாலைத் தனியாக வைக்கவும். அடுத்த இரண்டு முறை எடுக்கப் படும் தேங்காய்ப் பாலை ஒன்றாக வைத்துக்கொள்ளவும். வெண்கல உருளி/கடாயில் ஒரு கிண்ணம் நீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து ஒரு முட்டை நல்லெண்ணெய் அல்லது நெய் விடவும். நீர் கொதித்து வரும்போது அரைத்த மாவைப்போட்டுக் கிளறவும். நன்கு பந்து போல் மாவு வரும்வரை கிளறவும். ஆற வைத்துச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு இருக்கலாம். இப்போது இன்னொரு உருளி/கடாயில் கொஞ்சம் போல் நீர் விட்டு வெல்லத்தைப் போடவும். வெல்லம் கரைந்து வரும்போது இரண்டாம் முறை, மூன்றாம் முறை எடுத்த தேங்காய்ப்பாலை விட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து வரும்போது உருட்டி வைத்துள்ள உருண்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் போடவும். முதலில் போட்டவை வெந்து மேலே மிதந்து வரும்போது அடுத்த முறை போடலாம். இப்படி எல்லாவற்றையும் போட்டதும், சிறிது நேரம் சேர்ந்து கொதிக்கவிடவும். பின் கீழே இறக்கி ஆற வைத்து முதல் தேங்காய்ப் பாலையும் ஏலக்காய்ப் பொடியையும் சேர்க்கவும்.. சிலருக்கு இந்த உருண்டைகளை நேரே தேங்காய்ப்பாலில் போடும்போது அவை கரைந்துவிடுமோ என யோசிப்பார்கள். அவர்கள் உருட்டி வைத்ததும் உருண்டைகளை இட்லிப் பானையில் வேகவிட்டு வைத்துக்கொள்ளவும். தேங்காய்ப் பால், வெல்லத்தோடு சேர்ந்து நன்கு கொதிக்கும்போது கொழுக்கட்டை உருண்டைகளைச் சேர்க்கலாம். இம்முறையில் உருண்டைகள் உடையாது.
ரவையில் செய்யும் நெய்க்கொழுக்கட்டை: பொதுவாக இதை கணபதி ஹோமத்துக்கோ, அல்லது நவகிரஹ ஹோமம் போன்றவை செய்யும் முன்னர் செய்யப் படும் கணபதி ஹோமத்துக்கோ தான் முதல்நாளே செய்து வைத்துக்கொள்வது வழக்கம். இன்றைய நாட்களில் பெரும்பாலான பெண்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் அவங்க ஓரளவு நம் வழக்கப்படி பண்டிகைகள் கொண்டாடும்போது பாரம்பரிய உணவு வகைகளைச் செய்யமுடியாமல் திண்டாடுகிறார்கள். அவங்க விநாயக சதுர்த்திக்கு இந்த ரவைக் கொழுக்கட்டையைச் செய்து கொள்ளலாம். வேலைக்குப் போகும் பெண்கள் விநாயக சதுர்த்திக்கு முன்னர் வரும் ஏதாவது விடுமுறை நாளில் இதைச் செய்து (ருசி பார்க்காமல்) ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு விநாயக சதுர்த்தி அன்று நிவேதனத்துக்குப் பயன் படுத்தலாம். இதுவும் பதினைந்து நாட்களுக்குக் குறையாமல் இருக்கும். இதற்குத் தேவையான பொருட்கள் பார்ப்போமா? பூரணம் செய்ய: ஒரு சின்னக் கிண்ணம் தேங்காய் துருவல், 1/2 கிண்ணம் வெல்லம் தூளாக்கியது, ஏலக்காய்ப் பொடி. மேல் மாவிற்கு: சன்னமான நைஸ் ரவை ஒரு கிண்ணம். ஒரு சிட்டிகை உப்பு, பிசைய அரைக்கிண்ணம் பால். (காய்ச்சாத பாலும் பயன்படுத்தலாம்.) பிசையும்போது தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய். பொரிக்கவும் நெய் அல்லது எண்ணெய் தேவையான அளவு. முதலில் முன் கூறியபடி தேங்காய்ப் பூரணம் வெல்லத்தூள் சேர்த்துச் செய்து ஏலப் பொடி சேர்த்து ஆற வைக்கவும். ரவையில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாலைச் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் பாலும் ரவையும் ஊறிக்கொண்டு கெட்டியாக ஆகி இருக்கும். இப்போது அதைக் கைகளில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொண்டு நன்கு பிசையவும். சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும்வரை நன்கு பிசையவும். அரை மணி நேரம் வைக்கவும். பின்னர் சப்பாத்திக்கல்லில் இந்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை எடுத்துக்கொண்டு மெலிதான சப்பாத்தியாக இடவும். ஒரு வட்டமான மூடியால் இட்ட சப்பாத்தியில் கத்திரித்து எடுக்கவும். சிறு சிறு வட்டமானக் குட்டிக் குட்டிச் சப்பாத்திகள் நாலைந்து கிடைக்கும். இவற்றில் செய்து வைத்த பூரணத்தை நிரப்பிக் கொழுக்கட்டைக்கு மூடுவது போல் மூடவும். இம்மாதிரி எல்லா மாவையும் பூரணம் நிரப்பிச் செய்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் (சூடானதும்) அடுப்பைச் சிறிதாக எரிய விட்டுச் செய்து வைத்த கொழுக்கட்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். பொன் நிறமாகப் பொரியும் போது எடுத்துவிடலாம். மேலே கரகரப்போடும் உள்ளே பூரணத்தின் மிருதுவோடும் சாப்பிடச் சுவையாக இருக்கும். காரக் கொழுக்கட்டை முதலில் மிக்சியில் ஊற வைத்த பருப்பு வகைகளையும் மிளகாய்வற்றல், தேங்காய்துருவலஓடு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதைத் தனியாக வைத்துக்கொள்ளவும்.
--Geetha sambasivam 13:10, 13 செப்டெம்பர் 2010 (UTC)
|