வள்ளுவர்-சாக்ரடீஸ்-சிவபெருமான் இவர்கள் மத்தியில் என்ன தொடர்பு?

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகு காட்சிகள்

வள்ளுவர்-சாக்ரடீஸ்-சிவபெருமான் இவர்கள் மத்தியில் என்ன தொடர்பு?

பேராசிரியர் ச.சுவாமிநாதன், எம்.ஏ., (பிரித்தானியா)


"பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்."

குறள் 580

"பழகியவர்கள், நண்பர்கள் எவரேனும் விஷத்தையே கொடுத்தாலும் அவருடைய மனம் நோகக் கூடாதே என்பதற்காக அதையும் கூடக் குடித்துவிடுவார்களாம், நாகரிகமான பண்பு உடையவர்கள்" இவ்வாறு கூறுகிறார் திருவள்ளுவர்.


யாரை மனதில்கொண்டு வள்ளுவர் இப்படி எழுதினார். இந்திய, வெளிநாட்டு இலக்கியங்களைப் படித்தோருக்கு இப்படிப்பட்ட இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வரும்.

நஞ்சை உண்டு புகழ் பெற்ற சிவபெருமானும், கிரேக்க நாட்டுப் பேரறிஞன் சாக்ரடீசும் நம் நினைவுக்கு வருவார்கள். இது விஷயத்தை, பாரதியும், மாணிக்க வாசகரும்,  நற்றிணை பாடிய ஒரு புலவனும் கூடக் குறிப்பிடுகின்றனர்.

"முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்"

நற்றிணை பாடல்--355

"அச்சமில்லை, அச்சமில்லை
அச்சமென்பதில்லையே
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டு
போதினும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே--

பாரதியார்

"நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி"
போற்றித்திருவகவல்--மாணிக்கவாசகர்

இவ்வாறு வள்ளுவனும், நற்றிணைப்பாடல் பாடிய பெயர் தெரியாத ஒரு புலவனும், பாரதியும், மாணிக்கவாசகரும் பாடிய இந்த நஞ்சு (விஷம்) விஷயம் சுவையான ஆராய்ச்சிக்குரியது. மாணிக்கவாசகரைப் பொறுத்த மட்டில் இந்த வரிகள் நிச்சயமாக சிவபெருமானையே குறிக்கிறது. ஆனால் ஏனைய மூன்று புலவர்களும் யாரை வைத்து இப்படிப் பாடினார்கள்?!

வள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்கால மொழியியல் ஆராய்ச்சிகள் அவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று காட்டுகின்றன.

எப்படியானாலும் இதற்கு முன் வாழ்ந்தவர் தான் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ். அவர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழர்களுக்கும், கிரேக்கர்களுக்கும் மிகப் பெரிய அளவில் வணிகத் தொடர்பு இருந்ததை 'யவனர்' பற்றிய சங்ககாலக் குறிப்புகள் காட்டுகின்றன. ஆகையால் சாக்ரடீஸ் நஞ்சுண்டு இறந்த சம்பவத்தை வள்ளுவரும், நற்றிணைப் புலவனும் பாடியிருக்கலாம்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளியேறிய நஞ்சை, சிவபெருமான் விழுங்கப் போய், அதைப் பார்வதி தடுத்ததையும் சங்க காலப் புலவர் ஒளவையார் பாடியுள்ளார். "நீலமணி மிடற்று" இறைவன் (புறம் 91) என்று போற்றுகிறார். சிவபெருமானை விஷத்தைச் சாப்பிடும்படி வேண்டிக் கொண்டது அவருடைய நண்பர்களான தேவர்கள்தான்.

பாரதியார் நமது காலத்தில் வாழ்ந்த கவிஞர். அவர் சாக்ரடீஸையோ, சிவபெருமானையோ மனதில் கொண்டிருக்கலாம்.
சாக்ரடீஸ் என்ற அறிஞன் கிரேக்க (கிரீஸ்) நாட்டில் வாழ்ந்தான். அந்த தத்துவ அறிஞனின் புரட்சிகரமான கருத்துக்களை ஏற்காத கிரேக்க ஆட்சியாளர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்தனர். ஏதென்ஸ் நகர வழக்கப்படி அவருக்கு விஷம் கொடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த விஷத்தை அவர் கையில் கொடுத்தவர்கள் அவருடைய நெருங்கிய நண்பர்கள்தான். அதை அவர் புன்முறுவலுடன் வாங்கிக் குடித்ததாக வரலாறு கூறுகிறது. சாக்ரடீஸ் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியை மனதிற்கொண்டே வள்ளுவன் இப்படிக் குரல்-குறள் கொடுத்தான் என்றாலும் மிகையில்லை.

விஷம் கொடுத்து ஒருவரைக் கொல்லும் வழக்கம் பழங்காலத்தில் மட்டும் இருந்தது என்பதல்ல. இன்றும்கூட அமெரிக்காவில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, விஷ ஊசி போட்டு தண்டனையை நிறைவேற்றுகின்றனர். மின்சார நாற்காலியில் கொல்லுவதைவிட விஷ ஊசியால் கொல்லுவது மனிதாபிமானம் மிக்கதாம்!!!!

--Geetha Sambasivam 23:10, 19 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 19 நவம்பர் 2011, 23:12 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,756 முறைகள் அணுகப்பட்டது.