வணங்கும் துறை பலபலவாக்கி 5

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பாண்டிய நாட்டிலும் தமிழகத்தின் தெற்கேயும் பலமாக ஊன்றி, பாண்டிய மன்னனையும் தம் கைக்குள் போட்டுக் கொண்டு தங்கள் மதத்தை வளர்த்துக் கொண்டிருந்த சமணர்களை பிற பகுதியில் வெளியேற்றுவது போல வெளியேற்றியே தீரவேண்டுமென பாண்டிய அரசியார் கங்கணம் கட்டிக் கொண்டு திருஞானசம்பந்தர் அந்தச் சமயத்தில் இருந்த திருமறைக்காட்டுக்கு ரகசிய வீரர்களை அனுப்பினார். மதுரையில் இந்த அரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் மட்டுமே சிவநெறியைக் கைவிடாமல் காத்து நின்றனர். மன்னர் எம்மதமோ அம்மதமே தம் மதம் என்பது அந்தக் கால கட்டத்தில் சர்வ சகஜம்தான். வீரர்களும் பொதுமக்களும் சமணமதம் சார்ந்தவர்களாக இருந்ததால் கோயில்கள் பாழடைந்த நிலையில் இருந்தன. சமணப் பள்ளிகள் பல கோயில்களை ஆக்கிரமித்து அங்கிருந்து தம் மதக் கோட்பாடுகளை மக்களிடையே பரப்பிக் கொண்டிருந்தனர்.


இப்படித்தான் தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளாக இருந்தாலும், மகேந்திர வர்மனின் மனமாற்றத்தால் அன்று முதற்கொண்டு பல்லவர்களின் கட்டுப்பாட்டில் காவிரியாற்றின் வடகரையிலிருந்த சமணப் பள்ளிகள் மூடவேண்டிய நிலையில் பல சமண சமய ஆச்சாரியர்கள் காவிரியின் வடகரைப் பிரதேசங்களில் இருந்து குடிபெயரத் தொடங்கினர். களப்பிரர்களை அடித்து ஒடுக்கிய கடுங்கோன் எனும் மத்திம காலப் பாண்டியன் (சுமார் கி.பி 550 க்குப் பிறகு) மீண்டும் பாண்டிய ஆட்சி மதுரையில் ஏற்படக் காரணமானவன். இவனுடைய பேரனாகத்தான் கூன் பாண்டியன் எனப்படும் மாறன் என்பவன் மிகுந்த திறமையோடு பாண்டிய நாட்டைக் காத்து அதன் எல்லைகளை வடக்கே காவிரி ஆறு வரையிலும் தெற்கே இலங்கைத் தீவிலும் கூட தம் ஆட்சி அதிகாரத்தைப் பரப்பி வைத்தான் என்பதற்கு சரித்திரச் சான்றுகள் உள்ளன. இலங்கை மகாவம்சம், இந்த குறிப்பிட்ட ஆண்டுகள் ஆட்சிமுறை பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை என்பதாலேயே மௌனம் சம்மதம் என்ற பெயரில் இலங்கையிலும் மாறன் ஆளுமை ஒப்புக்கொள்ளப்பட்ட அளவிலேயே இருந்தது. இந்த கூன் பாண்டியனைத்தான் தங்கள் கைப்பிடிக்குள் கெட்டியாக வைத்திருந்து தம் காரியத்தை சாதித்துக் கொண்டிருந்தனர் சமணர்கள். (பின்னால் இவன் கூன் திருஞான சம்பந்தப் பெருமானால் நிமிர்த்தப்பட்டு ‘நின்ற சீர் நெடுமாறன்’ ஆனது இவன் பெயர்)


மேலும் இலங்கையில் புத்தம் மிகப்பலமாகக் காலூன்றியதால் அங்கு சமணம் இடம் பெற வாய்ப்பில்லாமல் போனது. பாண்டிய மாறன் காலத்திலும் சமணர்களால் இலங்கையில் புத்தர்களை மீறி செயல்படமுடியாமல் போனது ஒரு காரண-கார்யார்த்த (Strategic agreement) மாகவே ஒப்புக்கொள்ளப்பட்டது என்று எடுத்துக் கொள்ளலாம். (உனக்கு அந்தப்பகுதி, எனக்கு இந்தப் பகுதி, நீ இங்கே வராதே, நானும் அங்கே தலையிடமாட்டேன் - டீல்). ஆனாலும் தென்னிலங்கைப் பகுதி பாண்டிய நாட்டின் அருகே இருந்ததால் தமிழர்கள் அதிகம் வசித்தார்கள். அவர்களில் பலரும் சமண-பௌத்த மதங்களைத் தழுவி இருந்தததாக சில ஈழத்துக் கட்டுரைகள் படித்துள்ளேன். சமீபத்தில் தேவாரத் தளத்து நிறுவனர், ஈழத்துத் தமிழறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களோடு உரையாடுகையில் திருஞானசம்பந்தர் காலத்தில் பௌத்தம் மிகக் கடுமையான கட்டுக்கோப்போடு அங்கே (ஈழத்தில்) நிலவியதாகவும் இனம் இனத்தோடு சேரும் என்ற ஒரு கொள்கை ரீதியில் ஈழத்துத் தமிழின மக்கள் பாண்டிய மக்கள் சார்ந்திருந்த சமணத்தோடு மட்டுமல்லாமல், இலங்கை பௌத்தத்தோடும் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதும் திருஞான சம்பந்தர் ஈழத்து பௌத்தர்களுக்கு ஒரு மாபெரும் எதிரியாகத்தான் காட்சி அளித்தார் என்றும் பல தகவல்களைத் தெரிவித்தார். (இதைப் பற்றியும் ஒரு புத்தகம் எழுதுவதாகவும் உள்ளார்).


ஏற்கனவே இந்தக் கட்டுரை ஆரம்பத்தில் தெரிவித்தது போல ஒரு வெற்றுக் கொள்கையின் பிடிப்பில் பாண்டியநாட்டுப் பொதுமக்கள் அடிமை போல வேலை செய்தும், சமண ஆச்சாரியர்களுக்குப் பணிந்தும், தெய்வக் கொள்கையை மறுத்தும் இருந்த நிலையை மாற்ற திருஞானசம்பந்தரின் வருகை அங்குள்ள சிவநெறிச்செல்வர்களுக்கு மிக அத்தியாவசியத் தேவையாக இருந்தது. சம்பந்தர் இங்கு வரவேண்டுமென்றால் அந்த சிவநெறிச் செல்வர்களின் செம்மையான நோக்கம் நல்லதுதான். ஆனால் ஒரு மிகப் பெரிய பலம் பொருந்திய சிங்கத்தின் குகைக்குள் ஆயுதமில்லாமல் ஒரு குழந்தையைப் பலிகடாவாகத் தருவிக்கிறோம் என்பதாக அரசியோ, அமைச்சரோ அப்போது கருதவில்லை என்றுதான் தோன்றுகிறது.


கன்னிநா டமணர் தம்மாற்
கட்டழிந் திழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத்
தழுந்தமா தேவி யாரும்
கொன்னவில் அயில்வேல் வென்றிக்
குலச்சிறை யாரும் கூடி
இந்நிலை புகலி வேந்தர்க்
கியம்புமென் றிறைஞ்சி விட்டார்.


`சமணர்களால் பாண்டிய நாடு தன் நிலைமை அழிந்து, தங்கள் மன்னனும் அவர்களின் அறியாமைக்குட்பட்டு அழுந்த, அதைப் பார்த்து மாதேவியாரும், அச்சம் தரும் கூர்வேலை ஏந்திய வெற்றியுடைய குலச்சிறையாரும் கூடி இந்த நிலைமையைச் சென்று சீகாழி மன்னவருக்குச் (திருஞானசமபந்தப் பெருமானுக்கு) சொல்லுங்கள்\' எனக் கூறித் தங்களை அனுப்பியவற்றைக் கூற,


பெரிய புராணச் செய்யுளில் இப்படித்தான் கூறப்பட்டுள்ளது. ஆனால் திருமறைக்காட்டுத் திருத்தலத்தில் சம்பந்தரோடு இருந்த திருநாவுக்கரசர் இதை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தக் குழந்தையை இந்தச் சமயத்தில் அங்கு செல்லவிடுவது உசிதம் அல்ல என்று வெளிப்படையாகத் தெரிவிக்கிறார். எத்தனைதான் ‘கோள் சரியில்லை, நாள் சரியில்லை’ என நாவுக்கரசர் வெளிப்பார்வைக்குத் தெரிவித்துத் தடுத்தாலும், உள்ளூறப் பெரியவருக்கு, அந்தப் பொல்லாத சமணர்களின் கொடுந்தண்டனைகளை இந்த சிவக் குழந்தை அனுபவிக்க நேரும் என நனறாகவே உணர்ந்து அக்கொடுமைகளை ஏற்கனவே சந்தித்த அனுபவத்தில்தான் அப்பர் சுவாமிகள் தடுத்திருக்கிறார்.


ஆனாலும் பாண்டியநாட்டில் தம்மால் சிவநெறி சிறந்து விளங்கவும் வேத நெறி தழைத்தோங்க இக்காரியம் நடைபெற தெய்வசித்தம் உள்ளது என்று  திருஞானசம்பந்தர்  உணர்ந்ததால், அப்பர் சுவாமிகளைச் சோழநாட்டிலேயே தங்கச் செய்து விட்டு தம் அடியார்கள் சிலர் புடை சூழ மதுரைக்குப் பயணம் செய்கிறார்.


எத்தனை எளிதாக திருஞானசம்பந்தர் மதுரைக்குத் தருவிக்கப்பட்டாரோ அத்தனைக்கத்தனை எதிர்நிலையில் சமணர்கள் அவருக்கு தீங்கிழைக்க முயன்றனர். அவர் தங்கியுள்ள மடத்துக்கு மந்திரத்தால் தீக்கிரையாக்க முயன்று அது பலன் தராமல் போக தாமே முன்வந்து அவர் இருப்பிடத்தை தீக்கு இரையாக்க முன்வந்தபோதுதான் சாதுவான குழந்தையின் பலம் சமணர்களுக்குப் புரிந்தது. தம் இருப்பிடத்துக்கு இட்ட தீ சூலநோயாக மன்னனைப் பரவியதும், அதன் பிறகு சமணர்கள் வாதுக்கழைத்ததும்தான் அரசியாரும் அமைச்சரும் இத்தனை பெரிய தவறு செய்துவிட்டோமே என்று வருந்தினர். சாதாரணக்கூட்டமா அது, ஏற்கனவே ஒரு கொடுமையைச் செய்து விட்டு தமிழ்நாட்டின் அத்தனை மடத்துச் சமணர்களும் ஒன்று கூடி சூழ்ந்து கொண்டு ஒரு சிறு குழந்தையை வாதுக்கு வா, என்றழைத்தால் எப்படி.. அரசி பயந்து போய் பாண்டியனிடம் முறையிட்டதாக சேக்கிழார் எழுதுகிறார்,


தென்னவன் தன்னை நோக்கித்
திருமேனி எளியர் போலும்
இன்னருட் பிள்ளை யார்மற்
றிவர் எண்ணி லார்கள்
மன்னநின் மயக்க மெங்கள்
வள்ளலார் தீர நல்கும்


’இவர் அருள் பெற்ற சிறு குழந்தை, முதலில் வந்த காரியம் பாருங்கள். உங்கள் நோய் உங்களை விட்டு அகலவேண்டும்’.என அரசியார் மன்னவனை வேண்டுகிறார். அதற்குப் பிறகு ஆலவாயன் திருநீற்றினால் நடந்த நோய் நீங்கலும், கோபமுற்ற சமணர்கள் மறுபடியும் பிடிவாதமாக வாதுக்கழைக்க, புனல்வாதத்திலும், அனல் வாதத்திலும் ஆலவாயன் அருளால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டும், விதியின் இலக்கணத்துக்கேற்ப அத்தனை பேரும் கழுவேறுகிறார்கள்.


இந்தக் கழுவேற்றலைப் பற்றிப் பேசும்போது இப்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப இவ்விஷயத்தை எதிர்நோக்கக்கூடாது. அந்தக் கால ஆட்சி மன்னராட்சி. வாதங்கள், பிரதிவாதங்கள், பிடிவாதங்கள், குதர்க்க வாதங்கள் நிறைந்த காலம். பண்டிதர்களுக்கு இடையே நடக்கும் வாதங்கள் ஒரு ஒப்பந்தத்தின் கீழ்தான் நடைபெறும். இந்த வாதத்தை வென்றவர்களுக்கு அடிமையாகப் போவது, அல்லது ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி செய்வது என்பது இலக்கியங்கள் மூலம் நிறையக் காணலாம். ஆளவந்தார் எனும் யாமுனாச்சாரியார் என்ற ஆச்சாரியார் தனது இளம் வயதில் வாதம் செய்யத் தொடங்கி, அந்த வாதில் வென்று ராஜ்ஜியத்தில் பாதி பகுதியே பெற்றதாக வரலாறு உண்டு. திருவிளையாடல் புராணத்தில் கூட ஏமநாதர் வாதம் புகழ்பெற்றது. திருவரங்கத்தில் ராமாநுஜர் 18 நாட்கள் தொடர்ந்து வாதம் செய்ய கடைசி நாளான 18 ஆம் நாள் அந்த அரங்கன் திருவருளால் வாதத்தை வென்றதாக குரு பரம்பரை வரலாறு சொல்லும். ஆதி சங்கரர் அமரகோசருடன் செய்த வாதம் பிரசித்தமானது. அதில் கடைசியில் அமரகோசர் தோல்வியுற்று தாம் எழுதின அத்தனை ஓலைகளையும் (அமரகோசம் தவிர)அழித்தது இன்னொரு பக்கம். மாணிக்கவாசகர் புத்தகுருமார்களுடன் வாதிட்டு ஊமைப் பெண்ணைப் பேசவைத்து அவள் மூலம் அவர்களுக்கு பதில் கொடுத்தது திருவாசகத்தில் முத்தான ஒன்று.


ஆகையினால் வாதங்களில் தோற்றவர்கள் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி முறையாக நடப்பது அந்தக் கால கட்டத்தில் சர்வ சகஜம்தான் என்பது சமண எண்ணாயிரவர் கழுவில் ஏற்று உயிர் விட்டதில் தெரியும்.. ஆனால் ஒரு நாத்திக மதம் சிவனின் அருளால் ஒட்டு மொத்தமாக தமிழகத்திலிருந்து அழிக்கப்பட்டதன் அடையாளம்தான் இந்த இத்தனை பெரிய கழுவேற்றுதல் படலம். வேதம் ஓதும் திருநாட்டில் ஆங்காங்கே நாத்திகம் இருக்கலாம். ஆனால் நாத்திகமே முழுமையாக ஆக்கிரமித்து இருப்பதென்பது அந்த நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்வதாகும். அந்த அழிவிலிருந்து உய்விக்கவந்தவர்தாம் திருஞானசம்பந்தர்.


இன்னும் வரும்


எழுத்தும் ஆக்கமும் வி.திவாகர்


--Geetha Sambasivam 20:55, 24 அக்டோபர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 அக்டோபர் 2011, 20:55 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,605 முறைகள் அணுகப்பட்டது.