வணங்கும் துறை பலபலவாக்கி 4

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பிற மதங்களின் பிரச்சாரம், சண்டைகள், கட்டாயம், பணத்தாசை இவற்றையெல்லாமும் தாண்டி, நாம் யாரேனும் ஒரு மஹாத்மாவை நமக்கு நடுவே அடிக்கடி கண்டு, அவரது உபதேசங்களால் ஈர்க்கப்படுகிறோம்.அந்த மஹாத்மாவின் மீது பக்தி செலுத்தத் தொடங்கி, அதன் மூலமாக நமது மதத்தின் மீதுள்ள இறுக்கத்தை மேலும் அதிகப்படுத்திக் கொள்கிறோம்.மேற்கண்ட வார்த்தைகளில் உள்ள தீவிரமான உண்மையை ஏழாம் நூற்றாண்டு காலத்தில் தமிழகமே நிதர்சனமாகக் கண்டதாகத்தான் நமக்கு சரித்திர, பக்தி இலக்கிய ஆதாரங்கள் சொல்கின்றன.


ஒரு மகாத்மா இல்லை, இரண்டு மகாத்மாக்கள், ஒருவர் தர்மசேனர் என்கிற பூர்வாசிரமப் பெயரோடு தமிழகம் வந்து தமக்கை சொல் கேட்டு, சிவத்தின் அருளால் சிவத்தை நாவாரப்பாடி, உருகி, இத்தனை காலமாக இத்தகைய இன்பத்தைக் கண்டும் காணாமல் போனோமே என வருந்தி, அந்தத் தெய்வத்தன்மையாலேயே கடும் சூலை நோய் நீங்கப்பெற்று, மகிழ்ந்து தாய் மதமாகிய சைவத்துக்குத் திரும்பிய முதிர்ந்த அறிஞர் திருநாவுக்கரசு அடிகளாவார். இன்னொருவரோ, சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோதே சிவத்தின் அருளால் அன்னையின் தெய்வீகப்பாலருந்தி ஞானத்தையும் கடந்த தெய்வ ஒளி பெற்ற திருஞானசம்பந்தரான ஆளுடைப்பிள்ளை ஆவார்.


பெரியவர் சைவத்துக்குத் திரும்பிய போது அவருக்குத்தான் எத்தனை தொல்லைகள். பெரிய புராணம் விரிவாகச் சொல்லும். சமணர்களால் கொடிய நாகத்தின் விஷம் கொடுக்கப்பட்டது அவருக்கு, சிவனருளால் விஷம் முறிந்தது. சுண்ணாம்புக் காளவாயில் தூக்கிப்போட்டனர் சமணர்கள். சாதாரணமாக அதன் மூலம் வரும் புகைக்கே கண்கள் பொசிந்து போகும், போட்டவுடன் உடல் வெந்து கரைந்து போகும். ஆனால் அடிகள் சிவநாமத்தோடே எப்போதும் இருந்ததால் உடல் குளிந்து எழுந்து வந்தார். ‘நீவிர் எம்மை கல்லால் கட்டிக் கடலில் வீசினும் எம் நா நமசிவாயமே பேசும்’ என உறுதியாக இருந்த அவரை அங்கிருந்த மக்கள் ஆச்சரியமாகப் பேசினர். இந்த நிகழ்வுகள் எல்லாம் மக்களின் பார்வையில் மிகப் பெரியதொரு அதிசயம்தானே.. மக்கள் அதிசயப்பட்டு அந்தத் தெய்வ அருள் பெற்றவரைப் பேசியது. நாடு கடந்து அவர் அனுபவித்த அதிசயங்கள் பரவின. பாதிரிப்புலியூரில் (கடலூர்) அப்பர் சுவாமிகளுக்கு இழைத்த அநீதி கேட்டு ஓடோடி வந்த பல்லவராசன் மகேந்திரன் அவர் காலில் விழுந்தான்.


இங்கே ஒரு செய்தியை நோக்கவேண்டும். அந்தக் கால கட்டத்தில் ஊருக்கு ஒரு ராசா அல்லது மாவட்டத்துக்கு, மாகாணத்துக்கு ஒரு ராஜா என இருந்தனர். இவர்கள் அனைவரும் தத்தம் சிறு நாடுகளைப் பொறுத்தவரை சர்வாதிகார மனப்பான்மையுடைய அரசர்களே. இந்த அரசர்களுக்கெல்லாம் அரசனாக ஒரு பேரரசனை அவர்கள் ஏற்றனர். இந்த நிலை நாம் சுதந்திரம் அடையும் வரை வெவ்வேறு ரூபமாக, வடிவமாக, பாரதத்தில் இருக்கத்தான் செய்தது. சமீபத்தில் ஏ.கே செட்டியார் 1911 ஆம் ஆண்டில் எடுத்த போட்டோ ஆல்பம் ஒன்றை பிரிட்டிஷ் நூலகத்தில் பார்க்க நேர்ந்தது. அந்த ஆண்டில் புதிதாக இந்தியாவில் ஏற்றுக்கொண்ட தலைநகரமான டில்லியில் இங்கிலாந்து ஜார்ஜ் மன்னர் பேரரசு பதவியை ஏற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி அது. ஏராளமான அளவில் இந்த இந்தியநாட்டு ’மஹா’ ராஜாக்கள் வரிசையில் ஒன்றன் பின் ஒருவராக நின்று பலவிதமான காணிக்கைகளை அவருக்கு ‘சமர்ப்பித்துக்’ கொண்டிருந்த புகைப்படங்கள் பார்த்தேன். இதை அவர் திரைப்படச் சுருளாகக் கூட எடுத்திருந்தார் (இதுதான் இந்தியாவின் முதல் திரைப்படம் கூட). இதே முறையில் கலிங்கத்துப் பரணியில் சோழன் குலோத்துங்கனுக்கு எப்படியெல்லாம் வரிசையில் நின்று பதிநோராம் நூற்றாண்டு சிற்றரசர்கள் என்னவெல்லாம் பரிசளித்தனர் என்பதும் எழுதப்பட்டுள்ளது.


இதை எதற்கு எழுதுகிறேன் என்றால், திருநாவுக்கரசருக்கு கொடுமை செய்தவர்கள் சமணர்களும், அந்தச் சமணர்கள் உதவியால் கடலூர்ப்பகுதியை ஆண்ட பல்லவ சிற்றரசன் மட்டுமே ஆவான் என்பதற்கே. மகேந்திர மாமன்னன் காஞ்சிப்பகுதியில் இருந்து பேரரசு செய்த போது அப்பர் சுவாமிகளுக்கு நேர்ந்த கொடுமைகள் அவனுக்குத் தெரிய வந்தவுடன் அங்கிருந்து வந்து சமணர்களைத் தண்டித்தான், பேரரசனுக்கே உள்ள உரிமையில் சமணப்பள்ளிகளை இடித்தான் என்பதும், அங்கு குணபரேசுவரம்’ என்ற பெயரில் சிவன் கோயில் கட்டினான் என்பதும் சரித்திரம் சொன்ன செய்திகள். (குணபரன் என்பது மகேந்திரனின் இன்னொரு பெயர்). பின்புதான் சமண பௌத்தர்கள் தொல்லைகள் ஏதுமின்றி அடியவர் குழாம் புடை சூழ அப்பர் சுவாமிகள் வெகு சுதந்திரமாக பல திருத்தலங்கள் சென்றார். பரமசிவனை மனதார வேண்டிப்பாடினார். அங்கு அவரைப் பார்க்க வரும் அடியார் குழாமிடமும், பொது மக்களிடமும் தாம் முன்னர் சமணர்களிடம் பெற்ற கஷ்டங்களை விவரித்துப் பாடினார். அவர்கள் குறைகளைப் பட்டியலிட்டுக் காட்டினார். சமணர்களை மட்டுமல்லாது பௌத்தர்களின் குறைகளையும் சுட்டிக்காட்டினார். ஏன் பௌத்தமதக் குறைகளையும் பாடினார் என்றால் எளிமையான பதில்தான்.. ஒன்று போய் அந்த இடத்தில் அதே குறைகளுடைய இன்னொன்று ஒட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான், (ஏற்கனவே சமணர்களுக்கு எதிரிகளான புத்தமதத்தார் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக்காத்திருந்தனர், எப்போது அண்ணன் அழிவான், திண்ணை காலியாகும் என்பதாக) ஏறத்தாழ சோழ, பல்லவ நாடுகளைச் சேர்ந்த அனைத்து சமணமதப் பள்ளிகளையும், பௌத்த மடங்களையும் தமிழகத்திலிருந்து, ஒரு தெய்வ பக்தி மார்க்கமாகவே, மூடச் செய்த பெருமை பரமசிவனின் பரமபக்தரான திருநாவுக்கரசு அடிகளையேச் சாரும். அவருக்கு இந்த விஷயத்தில் மிகப் பெரிய உதவியாக இறைவன் அருளால் தோன்றியவர்தான் திருஞானசம்பந்தக் குழந்தையாகும்.


அவரைப்பற்றியும் )இந்த சமண, பௌத்த சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகப்) பார்ப்போம். சம்பந்தப் பெருமானால் சோழநாட்டில் மட்டுமல்ல, பாண்டிய நாட்டில் ஏற்பட்ட தெய்வநிலை மாற்றம் சாதாரணமானதல்ல. இன்றும் ஈழமக்கள் பௌத்தத்தில் சாராமல் சிவத் திருநாமத்தை ஓதிக் கொண்டிருப்பதற்கும் ஆதி காரணமும் சமபந்தப் பெருமானே ஆவார்.


இனியும் வரும்.


எழுத்தும் ஆக்கமும் வி.திவாகர்


--Geetha Sambasivam 20:48, 24 அக்டோபர் 2011 (UTC)

 

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 அக்டோபர் 2011, 20:48 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,451 முறைகள் அணுகப்பட்டது.