வணங்கும் துறை பலபலவாக்கி 3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ஆனால் சமணத்தில் எவ்வளவுக்கெவ்வளவு தீவிரவாதம் இருந்ததோ அதற்கு நேர் மாறான அஹிம்சாமுறையும் துறவி அம்சங்களும் கூட இருந்தன. ஆனால் இப்படிப்பட்டவர்கள் பொது வாழ்வில் கலந்து கொள்ளமாட்டார்கள். மக்களுடன் உறவாடவும் விரும்பாமல் தமக்கென காட்டுப்பகுதிகளில் தனிமையோடு தவம் இருக்கப் பழகியவர்கள். மதுரைப் பக்கத்தில் சமணப் படுக்கைகள் இருப்பதை இப்போதும் காணலாம், ஆறடி மனிதர் அடங்கி ஒடுங்கி மூன்றடிக்குள் எப்படிப் படுத்துப் பழகினார்கள் என்பது எப்போதும் ஆச்சரியம் தரும். ஆனால் மிகக் கடுமையான விரதிகள் இவர்கள். இதற்கு நேர் மாறான வாழ்க்கையில் மடங்களில் வாழ்ந்து சுகமான அதிகார போதையும் கலந்து அனைவரையும் அடக்கி வாழ்ந்த சமணர்களால்தான் நாடு அந்தக் கால கட்டத்தில் ஒரு இருண்ட சூழ்நிலையில் இருந்தது.


சிலப்பதிகாரத்தில் இந்த இரண்டு நேரெதிர் பிரிவினரையும் இளங்கோ காட்டியிருக்கிறார். கோவலனும் கண்ணகியும் கவுந்தி அடிகளோடு மதுரைக்கு நடைப் பயணமாகச் செல்கையில் முதலில் சில சமண அடிகளைச் சந்திப்பார்கள். அவர்கள் திடீரென பூமியிலிருந்து மேலெழும்பி இந்த இளந்தம்பதிகளை திகைப்படையச் செய்வார்கள். கவுந்தி அடிகள் பயபக்தியுடன் அவர்களை வணங்குவதாகவும் ஆசி கோருவதாகவும் இந்தக் கட்டத்தில் வரும். இன்னொரு முறை இளங்கோ அதே வழியில் சில பூச்செடிகள் முட்கள் போன்றவற்றை கடக்க முற்படுவதை விவரிக்கும்போது, ஒருவேளை நடந்து செல்லும்போது அங்குள்ள புழு பூச்சிகளைக் கூட கொன்றுவிட நேர்ந்துவிடுமே என எண்ணி சமணர்கள் அவைகளை வலிபடாமல் விலக்குவதாக வரும்.


இந்த இருவேறுபட்ட நிகழ்ச்சிகள், அந்தக் கால சமயங்களைப் பின்பற்றியவர்கள் பற்றி நமக்கு ஏராளமான விஷயங்களை ஆய்வுக்கு அளிக்கிறது. சமணர்களில் மதத்தலைவர்கள் தந்திரவித்தையிலும், மருத்துவ முறைகளிலும் விசேஷ பயிற்சி பெற்றிருந்ததும், அந்த தந்திர வித்தைகளை பாமர மக்கள் மத்தியிலே ஒருவித பயபக்தியை உருவாக்கியதும் நமக்கு விளக்கிச் சொல்லும். இப்போதும் நாம் தந்திரத்தில் மாங்காய் வரவழைப்பவரிடம் மயங்குவதும், அவர் சொல்படி ஆடுவதும் (அது எந்த மதமானால் என்ன!) உண்மைதானே..


சமணமதத்தில் எப்போது தெய்வத்தன்மை போனதோ அப்போதே அது வெறுமையான மதமாகப் போய்விட்டதுதான். புத்தம் இன்னமும் வெளிநாடுகளில் பரந்து தெரிவதற்கு காரணம் புத்தம் சரணம் கச்சாமி எனும் தெய்வத்தன்மை வாய்ந்த அந்த மந்திரம்தான். இப்படி பௌத்தம் சொல்வதையும் சமணம் எதிர்க்கிறது. மகேந்திர பல்லவன் சமணனாக இருந்த சமயத்தில் எழுதிய நாடகம், மத்தவிலாஸம். (ஒரு குடிகாரனின் பிச்சை ஓடு) இந்த நாடகத்தில் பௌத்தர்களை பிராம்மணர்களின் வேதத்திலிருந்து அவர்கள் மந்திரங்களை திருட்டுத்தனமாகக் கற்று பரப்புவதாக குற்றம் சாட்டி நையாண்டி செய்கின்றான்.


அதே சமயத்தில் அரசர்களுக்கு, அமைச்சர்களுக்கு என ஒரு விலக்கையும், மக்களுக்கு என ஒரு விரதத்தையும் சமணமதம் தந்ததை மத்த விலாஸம் நமக்குத் தெரிவிக்கும். உண்மையான நோக்கத்தில் இந்த நாடகத்தில் இவ்விஷயங்களைச் சாடுகிறான் மகேந்திர பல்லவன். (இவன் இந்தச் சமயத்தில் அரசனாக இருந்திருக்கமுடியாது என்பது இந்த ஒரு விஷயத்தை வைத்தே புரிந்து கொள்ளலாம்). அடிமைகளாக மக்கள் தாங்களாகவே இருப்பதை எந்த அரசன் விரும்பமாட்டான்? அப்படிப்பட்ட அடிமைத்தனம் கொண்ட கல்வி சமணத்தால் மக்களுக்குப் பயில்விக்கப்படுகிறது என்பதும் மன்னர்களுக்கும் விருப்பமாகப்பட்டது. மேலும் சமணர்கள் கடுமையான விரத முறைகள் அரசர்களைப் பாதிக்காது என்ற மற்றொரு விருப்பமான முறையும் அரசர்களுக்கு மிகவும் பிடித்துப் போக, அவர்களும் இந்த மாபெரும் உதவியைச் செய்த சமணர்களைப் போற்றிவந்தனர். அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்தனர். சமணமதம் மற்ற மதங்களை வளரவிடாமல் தடுத்தது. குறிப்பாக சனாதன தர்மத்தின் வழிமுறையை மிகவும் பலமாக எதிர்த்தது.


சுதந்திரமான வகையில் தெய்வநெறிகளை அவரவருக்குத் தேவைப்படும் விதத்தில் பயன்படுத்த வகை செய்யும் நல்லதோர் மார்க்கமாக விளங்கிய வேத நெறியை அறவே வெறுத்தனர் சமணர். அவர்களோடு உறவு முறையில் எதிரிகளாக இருந்த பௌத்தர்களும் இந்த ஒரு விஷயத்தில் சமணர்களோடு துணை நின்றனர். வேதநெறிகளை விளக்கிச் சொல்லும் அந்தணர்களை அறவே ஒதுக்கினர். அந்தணர்கள் அழிவதை ஒரு கொள்கையாகவே கொண்டு, ‘விப்ரக்‌ஷ்யம்’ எனும் மந்திர வார்த்தையாக எப்போதும் நாவில் கொள்பவராக சமணர்கள் விளங்கினார்கள் என்பதைக் காட்டும் குறிப்புகள் கிடைத்தன. விப்ரக்‌ஷயம் என்றால் அந்தணர் அழிவது. அந்தணர்கள் வழிபடும் கோவில் குளங்களை அழிப்பது, -


(ஐந்தாம் நூற்றாண்டில் திருவாரூர் கமலாலயம் என்ற குளத்தைக் கட்ட திருவாரூர் அன்பர்கள் அவ்வூர் அரசனைக் கேட்டதாகவும், பொதுவாகவே குளம் வெட்டுவது சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருப்பதால் மன்னனும் மானியம் வழங்கியதாகவும், இந்த குளம் கோயிலுக்குச் சொந்தம் என்ற விதத்தில் புண்ணிய தீர்த்தம் என்று அந்தணர்கள் பெயர் சூட்டி பொது மக்களை கோயிலுக்கு வருவதை அதிகமாக்கி விடுவார்கள் என்ற அச்சத்தால் அந்த ஊர் சமணசங்கம் இந்தக் குளம் கட்டுவதை எதிர்த்ததோடு, அந்தக் குளம் வெட்டுபவர் பலரையும் ஏதேனும் சாக்கிட்டு மன்னர் மூலமாக மரணதண்டனை வாங்கித் தந்ததையும் சில விவரங்கள் சொல்கின்றன).


ஆறாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில்தான் தருமசேனர் என்ற சமணர் மூலமாக சமணம் அழியத் தொடங்கிய வரலாறு ஆரம்பித்தது. எந்த ஒரு ஸ்தாபன மதமும் வெறுமைத்தனமாக செயல்படும்போது அது அழியத்தான் வேண்டும் என்ற விதி வகைக்கு உட்பட்டுதான் சமணம் அழிந்தது. தெய்வத்தன்மையும் பக்தியும் மக்களுக்குப் புரிய வைக்கும் முறையில் புரியவைக்கப்படும்போது, ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்களே, அந்த அம்மி அளவு கூட கனமில்லாத கொள்கை கொண்ட சமணமதம் பக்திமயம் எனும் சூறாவளிக்காற்று வரத்தொடங்கிய உடனேயே ஆட்டம் காண்பிக்கத் தொடங்கியது. தர்மசேனர் எனும் சமணமதத்தலைவர் சூலை நோய்க்கு ஆட்பட்டு அதிலிருந்து மீளமுடியாத ஆறாத் துயரத்தோடு இருக்கையில் அவர் அவர் சகோதரியின் அழைப்பின் பேரில் தமிழகம் திரும்புகிறார்.


(தருமசேனர் வரலாறு மேற்கு மலைத்தொடர் காடுகளில் சமணர் பிரபலங்களாக இருந்தபோது மிகப் பெரிய ஆச்சாரியராக இருந்தார் என்பது சில விவரங்களால் அறியப்படுகின்றன. இந்திரகிரி, சந்திரகிரி போன்ற இடங்களில் - சிராவணபெலகொலா இங்குதான் இருக்கிறது - சமணர்களின் கடந்த கால வரலாறு பற்றி நிறைய செய்திகள் கிடைக்கிறது. சிற்பங்கள், வண்ணச் சித்திரங்கள் என ஏராளமாக அங்கே காணக் கிடைக்கின்றன.


தங்கள் குழுவிலிருந்து மிகப் பலமான ஆச்சாரியார், கற்றறிந்த வல்லுநர் ஒருவர் வழி தவறிப்போவதாகவே, தருமசேனர் தமிழகம் திரும்பியதை சமணர்கள் புரியத் தலைப்பட்டனர். அவர் திரும்பவும் சமணம் திரும்புவதை எவ்வகையாலும் செய்தே தீர வேண்டும் இல்லையேல் அவருக்கு தண்டளைகள் மிகக் கடுமையான விதத்தில் அமையும் என்பதே சமணர்களின், அவர்களது மதத்தலைவர்களின் முடிவாக இருந்தது.


இன்னும் வரும்.

எழுத்தும் ஆக்கமும் வி.திவாகர்


--Geetha Sambasivam 20:38, 24 அக்டோபர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 அக்டோபர் 2011, 20:38 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,641 முறைகள் அணுகப்பட்டது.