’வணங்கும் துறைகள் பலபலவாக்கி’என்ற பாடல் நம்மாழ்வாரின் முதல் பத்தில் வரும் பாடல். எல்லா மதங்களையும் உருவாக்கி, அங்கு தலைவனையும் காட்டி, தெய்வத்தையும் நாட்டி, அங்கும் உன் மூர்த்தியையே பரப்பி வைத்தாய்’ என்ற சர்வதர்மம் பேசும் பாடலாக அமையும். அந்தப் பாடலின் முதல் வரிகளையே இங்கு தலைப்பாகக் கொண்டுள்ளோம்.
ஆனால் சமண பௌத்த மதங்களில் தலைவர்கள் உண்டு, தெய்வங்கள் இல்லை. மகாவீரரையும் புத்தரையும் தங்கள் நாயகனாக அவர்கள் சுவீகரித்துக் கொண்டார்களே தவிர, எந்தக் காரணத்துக்காக புத்தரும் மகாவீரரும் தோன்றினரோ அந்தக் காரணங்களை வெளிப்படையாக ஒரு சில நூற்றாண்டுகளிலேயே கைவிட்டுவிட்டார்கள் என்றே சொல்லலாம். புத்தருக்குப் பின் வந்த மதாதிபதிகள் ஒவ்வொருவரும் ஒரு கொள்கையைக் காட்டினார்கள். சமணர்களும் அவ்வாறே. வடநாட்டில் பௌத்தருக்கும் சமணருக்கும் அவர்கள் ஆளும் அரசர்கள் மூலம் கடும் போர்களை ஒருவருக்கொருவர் சந்திக்கவேண்டியதாயிற்று. கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு காரவேலராசனின் உதயகிரி கல்வெட்டு ஒன்றில் (புவனேஸ்வரம்) சமணமதத்தார்கள் பௌத்தர்களை ‘எதிரிகள்’ அழிந்து போனார்கள் என்றே எழுதிவைத்தனர். இது இருக்க.
தமிழகத்தில் பௌத்தவாதிகளை விட சமணவாதிகளே மிகத் திறமையான முறையில் ஆதிக்கம் செய்தனர். பௌத்தம் தமிழகத்துக்கு வடக்கே ஆந்திரத்தில் மிக ஆழமாகக் காலூன்றியது. சமணம் கர்நாடகத்திலும் தமிழகத்திலும் பலத்தைச் சாதித்தது.
வடநாட்டில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய குப்தவம்சம் மிகப் பெரிய அளவில் வெற்றியடைந்து வேதத்தின் புகழ்பாடும் சனாதன தர்மத்தை வெகுவாகப் பரப்பியது. குப்தர்கள் மிகப் புத்திசாலித்தனமாக பௌத்தத்தையும், சமணத்தையும் எதிர்க்காமலேயே வடநாட்டின் முக்கிய பகுதியிலிருந்து வெளியேற்றினர். சமணமதம் பூர்த்தி, அதே சமயம் தென்னகத்தில் ஆண்டு வந்த பல்லவர்கள் தங்கள் வம்சத்தை வேதோத்தம வம்சம் எனக் கூறிக்கொண்டாலும், சரியான ஆளுமை அமையாத துரதிருஷ்டத்தினால் மற்ற மதத்தினர் பரவுவதையும் அவர்களின் ஆளுமையையும் பல்லவ அரசர்களால் ஒதுக்க முடியவில்லை. சிம்மவிஷ்ணு எனப் பெயர் கொண்ட பல்லவமன்னர் (கி.பி.530-580) சமணர்களுக்கு தமிழகத்தில் ஆற்காட்டுப் பகுதியில், கிராமங்கள் ஒதுக்கியும் அவர்கள் கல்வி முறையை மேம்படுத்தவும் ஏற்பாடு செய்து இரண்டு கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்துகிறார். (இதுதான் தமிழக ஆட்சியாளர் ஏற்படுத்திய முதல் கல்வெட்டுகள் என்று காண்க). அவர் மகனான மகேந்திர பல்லவன் எப்படி முதலில் சமணமதத்தானாக மாறினான் என்பது அறியாமல் போனாலும், அவன் சமண மதத்திலிருந்து ’சிவஸ்வரூபமான லிங்கத்தினால் திருத்தப்பட்ட அறிவைப் பெற்று. அது இந்த உலகத்தில் நீண்டகாலம் பரவும் வகை செய்ததாக’ திருச்சி மலைக்கோட்டையில் ஒரு கல்வெட்டாக தன் சுய கதையை செதுக்கியுள்ளான் என்பதும் சரித்திரம் நமக்குச் சொன்ன சான்றுகள்.
, சமணமதம் எப்படிப்பட்ட ஸ்தாபன மதமாக இருந்து மக்களை ஆட்டி வைத்தது என்பதை பெரிய புராணப் பாடல்கள், திருமுறைப்பாடல்கள் நமக்கு விரிவாக விளக்குகின்றன. நாம் சற்று நடுநிலையாக நம் பார்வையை நாலாபக்கத்திலும் செலுத்தினோமென்றால் சில விவரங்கள் கல்வெட்டு மூலமும், இலக்கியம் மூலமும் சமணர்களின் வன்முறைச் செயல்களை அதுவும் அதன் கடைக் காலமான ஆறாம் நூற்றாண்டு, ஏழாம் நூற்றாண்டு காலகட்டத்தில் காணலாம்.
மிக ஏராளமான அளவில் மூளைச்சலவை செய்யப்பட்ட கல்வியை இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் வழங்கி அவர்களுக்கு தெய்வத்தின் மேல் இருக்கும் பக்தியை மாற்றி, தம் தலைவர்கள் மேல் ஒரு பயத்தை உருவாக்கியது. வேதம் பாடுவோரை இகழ்ந்தும், வேதபாடசாலைகளை அழித்தும், தெய்வ நெறி பேசுவோரை ஒழித்தும், கோயில்கள் இருந்தால் பூசனை நடவாதுப் பார்த்துக் கொள்வதும் அத்தெய்வங்களை இகழ்ந்தும், பிடிவாதமாக ’உயிர்’த்தியாகம் செய்தாவது தம் மதத்தைப் போற்றியும், மற்ற மதங்களின் செல்வாக்கை அழித்தும் வந்தனர். தீக்குளிப்பு என்பது தமிழகத்தில் மிகப் பழைய காலம் தொட்டே வருவது இவர்கள் செயலால் மிக அதிகமாக அறியலாம்.
வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள்
நின்பால் பொறுப்பரியனகள்பேசில் போவதே நோயாகி
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமாநகருளானே!
திருவரங்கப் பெரும் கோயிலில் அருள்கின்ற பெருமானே! உனது பெருமையை மற்றவர்கள் கூறுவதைப் பொறுக்காமல், அதை வெறுத்து இந்த மொட்டை அடித்த சமணர்களும், உனது அருளை அறியாத பாக்கியமில்லாத பௌத்தர்களும், உன்னைப் பற்றி பொறுக்கமுடியாத பல வார்த்தைகளைத் தொடந்து கூறுவாராகில் - ஒன்று, அந்தச் சொற்களைக் கேட்டு நான் உயிர் விடவேண்டும், அல்லது, உன்னை அவதூறு பேசுவார்களின் தலையை அப்போதே அறுத்துத் தள்ளுவதே தர்மம்,
இந்தப் பாட்டைப் பாடியவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார். இந்தப்பாடல் நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் இன்றும் திருவரங்கக்கோயிலில் மங்களாசாஸனப் பாடலாகப் பாடப்படுகிறது. திருத்தொண்டரடிப்பொடியாழ்வார் சாதாரணமான பிராம்மண குலத்தில் பிறந்து, பூக்கள் கொய்து அரங்கனுக்கு மாலை செய்து, அவன் அருள் பெற்று, அவனையே ஆழ்ந்து ஆழ்ந்து தோய்ந்து பாடிய பாடல்களில் மேலே கண்டதும் ஒன்றாகும்.
பூக்களைக் கொய்யும் கையால் வாளெடுத்து சமண பௌத்தவாதிகளை அவர்கள் நாத்திகம் பேசுவதாலேயே அவர்கள் கழுத்தை நறுக்கிக்கொன்றுவிட வேண்டுமென ஏன் பாட வேண்டும்? நாத்திகம் பேசுவது பாரதத்தில் சாதாரணமான செயல்தான். சமணர்களின் கொள்கையே நாத்திகம்தான் என்கிறபோது அதை ஏன் எதிர்ப்பானேன். கண்டும் காணாமல் போய் தம் வேலையான பகவானை மட்டும் பிரார்த்தித்துப் போய்க்கொண்டிராமல் இப்படி வீராவேசமாய் ஒரு அப்பாவிப் பிராம்மணர், அதுவும் பிற்காலத்தில் ஆழ்வாராக அடையாளம் காட்டப்படுபவர் இப்படி பாடலாமா.. அவருக்கு ஏன் பொறுமை போகவேண்டும். உடனே போய் அவன் கழுத்தை நறுக்கிக் கொன்றால் என்ன என்று ஏன் ஆவேசப்படவேண்டும்?
இதற்குத் தகுந்த பதில்கள் அந்தக் காலகட்டத்திலிருந்தே உரையெழுதப்பட்டு வெளிவந்த ஆச்சாரிய ஆழ்வார் பாசுர உரைகளில் கிடைக்கிறது.
இந்தப் பாடல் சில வரிகளுக்கு ஆச்சாரிய விளக்க உரை கீழே தரப்படுகிறது:
சமணர் முண்டர்: மொட்டையடித்துள்ள சமணர்கள்
வெறுப்போடு: எப்படிப்பட்ட வெறுப்பு - திருவிழா நாட்களில் எம்பெருமான் வீதிகளில் வரும்போது அதனை நிறுத்துவதற்காக இவர்கள் தூக்குப் போட்டுக் கொண்டு சாவார்கள். (அப்படி திருவீதியில் ஒருவன் சவமானால் பெருமாள் திருவீதி எழுந்தருளுவது நின்று போய் உலா இல்லாமலேயே வந்த வழியே திரும்பி கோயிலுக்குள் எடுத்துச் செல்ல வேண்டியதுதான்) எம்பெருமான் எழுந்தருளும்போது திருச்சின்னம் என்னும் வாத்திய ஒலி கேட்டால் அது ஏதோ மரண வீட்டு ஒலி போல கேட்டு, தரையிலும் சுவற்றிலும் தம் மொட்டை மண்டையை முட்டிக்கொண்டு ரத்தம் வர நிற்பாராம்).
ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் திருவரங்கப் பெரிய கோயில் என்றல்ல, எல்லாக் கோயில்களிலும் இதுதான் நிலை. தெய்வத்தின் புகழ் பாடக் கேட்காமல் செவியை மூடிக்கொண்டு அலறும் அவர்கள் நிலையை சற்று நாம் கற்பனையாக மனக் கண்ணில் பார்த்தோமேயானால், இந்தக் கால கட்டத்தில் வேடிக்கையாக இருக்கும். ஆனால் இந்தக் காட்சி அந்தக் கால கட்டத்தில் நிதர்சனம். இன்னொன்று இப்படி தம்மைத் தாமே தற்கொலை செய்து தியாகம் செய்வோரை எல்லாம் சமண மதக் குருக்கள் கைவிடவில்லை. அவர்களுக்கு ஆங்காங்கே சமாதி எழுப்பித்து ஆராதனை செய்து, அவர்கள் தியாகங்கள் மிகப் பெரிதாகப் போற்றப்பட்டன. இவர்கள் தியாகம் பெரிதாக்கப்படும்போதெல்லாம் மற்ற சமணர்கள் கூட அவர்களை அறியாமலே இப்படி ஒரு திவ்ய பதவி கிடைக்க அந்தப் பெருமக்கள் எத்தனை புண்ணியம் செய்தனரோ, தாமும் அவர்கள் போல வாழ்ந்து தியாகம் செய்தல் நம் தர்மமன்றோ என்று ஒரு முட்டாள்தனமான போக்கை தம்முள் உண்டாக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த எண்ணத்தை சமண மத குருமார்கள் நன்றாகவே தமது மத வளர்ச்சிக்காக ஊட்டி வளர்த்தனர்.
இன்னும் வரும்
எழுத்தும் ஆக்கமும் வி.திவாகர்
--Geetha Sambasivam 20:30, 24 அக்டோபர் 2011 (UTC)</i>