ரெ.கார்த்திகேசுவுடனான (மலேசியா) பேட்டி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற்குழு மின்தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கின்றார் பேராசிரியர் டாக்டர்.ரெ.கார்த்திகேசு. Nov-Dec 2009

(மின்னாடல் 002)




தமிழ்த்தேனீ: எந்த வயதில் எழுத ஆரம்பித்தீர்கள்? எழுதவேண்டும் என்கிற சிந்தனை எப்போது பிறந்தது உங்களுக்கு? அப்படி எழுதவேண்டும் என்கிற சிந்தனை பிறந்ததற்கு தூண்டுகோலாக அமைந்த நிகழ்ச்சி எது? அல்லது உங்களை எழுதத் தூண்டியவர் யார்?


பதில்: தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு படித்த போது சிறுவர் பத்திரிகைக்ளுக்கு எழுத ஆரம்பித்தேன். அதற்கு அடிப்படைத் தூண்டுதல் தமிழ்வேள் என்று எங்கள் நாட்டில் அறியப்படும் கோ.சாரங்கபாணி. அவருடைய தமிழ் முரசு நாளிதழில் “மாணவர் மணி மன்ற மலர்” என்ற சிறுவர் இதழை ஆரம்பித்து மாணவர்களை எழுதத் தூண்டினார். அங்கே சின்னஞ்சிறு நீதிக்கதைகள், கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். அந்தப் பழக்கம் என்னுடன் கலந்து விட்டது. வாழ்நாள் வரை இருக்கிறது. என் பெற்றோரின் ஆதரவும் இருந்தது. ஆசிரியர்களும் ஊக்கப்படுத்தினார்கள்.

இன்னம்பூரான்:  எனது கணிப்பில், கல்வி நிறுவனங்கள் கற்றுக்கொடுப்பவை எல்லாமே நற்பயன் தருவதில்லை, எந்த நாட்டிலும். எனவே, படித்து தெளிவடைந்த பெற்றோர்கள், களையெடுப்பது நலமே. நான் அவ்வாறு செய்ததுண்டு. நான் கல்வித்துறையை சார்ந்தவன் அல்ல. எனது கூற்றைப் பற்றி, பேராசிரியராகிய உங்களது அனுபவம்/கருத்து/செய்முறை அறிய விழைகிறேன்.

பதில்: கொஞ்சம் மாற்றிச் சொல்லலாம். கல்வி நிறுவனங்கள் கற்றுக் கொடுப்பவை எல்லாமே பயனுள்ளவை அல்ல. அல்லது பயனுள்ளவை/தேவைப்படுபவை எல்லாவற்றையும் கல்வி நிறுவனங்கள் கற்றுக் கொடுத்துவிடுவதில்லை. பெற்றோர்களும் சமுகமும் மேலதிகக் கல்வியை ஊட்டவேண்டியது அவசியம்தான். (களையெடுப்புக்கு என்ன தேவை என விளங்கவில்லை.) குடும்பப் பாரம்பரியம், விழுமியங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பெற்றோர்தான் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் கல்வி நிறுவனம் நடுநிலையாகத்தான் (neutral) இருக்க வேண்டும்.

திவாகர்: இது சிந்தனையைப் பற்றிய கேள்வி. எனக்கு தனிப்பட்ட விதத்தில் மலாய் மற்றும் ஈழத்தமிழர் அவர்தம் எழுத்து இவற்றில் பெரு மதிப்பு உண்டு. காரணம் அவர்தம் சிந்தனை தாய்த் தமிழக எழுத்தாளர் சிந்தனையை விட ஒரு நேர்முகத்தில் செல்வது போலவும், அந்த சிந்தனையில் தெளிவு சற்று அதிகம் காணப்படுவதாகவும் ஒரு நினைப்பு. (இந்த வகையில் அவர்கள் சைவத்தில் வைத்துள்ள ஈடுபாடும் மதநம்பிக்கைகளை குழப்பிக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று கூட நினைப்பு உண்டு). என் நினைப்பு சரியா என்று விளக்கவும். ஒருவேளை சரியென்றால் அதன் பின்னணி என்ன என்று சொல்லவும். (பி.கு. தாய்த் தமிழக எழுத்தாளர்களைப் பற்றி குறை சொல்லும் நோக்கம் அல்ல இந்தக் கேள்வி) அனுபவம் நிறைந்தவரான உங்கள் கருத்து தெரிந்து கொள்ள ஆவல்.

பதில்: தமிழகத்துக்கு வெளியே பிறந்து வாழும் இந்தத் தலைமுறைத் தமிழர்களின் சிந்தனை தமிழகத் தமிழர்களின் சிந்தனைப் போக்குகளிலிருந்து மாறியிருப்பது இயற்கையே. அவர்கள் வாழும் பல்லினச் சூழ்நிலை அவர்கள் சிந்தனைகளை cross-fertilization செய்திருக்கிறது. ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட சிந்தனைப் பாரம்பரியத்திலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டு பழக்கப் படுத்திக் கொள்ளுகிறார்கள்.

சைவம், தமிழ்ப்பற்று,கலாச்சாரப் பற்று ஆகியவை அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது என நீங்கள் சொல்கிறீர்கள். சரியே. ஏனெனில் அந்நியச் சூழலில் எங்கள் மரபுகளைப் பாடுபட்டுப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த தற்காப்பு உணர்வு எங்களுக்குச் சில அரப்பணிப்பு உணர்வுகளையும் தியாக உணர்வுகளையும் தோற்றுவித்துள்ளது. ஓர் உதாரணத்துக்கு மலேசியாவில் இன்று தமிழ்க் கல்விப் போதனையைக் காப்பாற்ற வீதியில் இரங்கி அரசாங்கத்தோடு போராடிக் கொண்டிருக்கிறோம். இது ஒற்றுமை உணர்வைத் தோற்றுவித்துள்ளது. பலர் தங்கள் நேரத்தை, உழைப்பை,பணத்தை இதற்காகத் தியாகம் செய்கிறார்கள்.

இதனால் எங்களுக்குள் சண்டைகள் இல்லை என்று சொல்ல முடியாது. உட்சண்டைகள் நிறைய இருக்கின்றன. அது வேறு கதை.

கண்ணன் நா.: தாங்கள் தமிழ் எழுத்தார் என்ற பெரும் தொகுப்பில் விழுந்தாலும், தாங்கள் மலேசிய எழுத்தாளர் என்று பெருமிதம் கொள்ளும் பொழுதுகள் எவை?

இப்பின்னணியில் எவ்வெவ்வகைகளில் தமிழக இலக்கிய சூழலை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்றமுடியும்?


பதில்: நான் மலேசியன் என்பதிலும் தமிழ் எழுத்தாளன் என்பதிலும் மிகப் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டுள்ளேன். சிறியதான ஒரு மலேசியத் தமிழ் வாழ்வை ஒரு மிகப் பெரும் தமிழ் உலகுக்கு எடுத்துச்சொல்லும் வாய்ப்புக் கிடைத்திருப்பதே நான் பெருமிதம் கொள்ளும் பொழுதுகள். ஆனால் விரிந்து பரந்த தமிழுலகம் அதை அவ்வளவாகக் கவனிப்பதில்லை என்பதும் கவனித்தாலும் காட்டிக் கொள்வதில்லை என்பதும் என் ஏமாற்றங்கள். நான் பல மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை தமிழ் நாட்டார் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறேன். ஆனால் அவற்றுக்கு எந்த ஒரு எதிரொலியும் கிடைப்பல்லை. ஆகவே இது ஒரு monologue ஆகவே இருந்து வருகிறது.


ஆனால் எங்களை விடவும் உயர்ந்த தரமுள்ள இலங்கைப் படைபுக்களுக்கும் கூட இந்த நிலைதான் என்பது எனக்குப் புரிகிறது. ஆகவே தமிழ்த் தலைநிலப் படைப்புக்களைத் தவிர மற்றவை ஒரு ஒதுங்கிய ஆறு போலத்தான் ஓட வேண்டி இருக்கிறது. இவற்றின் முக்கியத்துவம் தமிழ் இலக்கிய உலகில் இன்னமும் உணரப்படவில்லை. எப்படித் தஞ்சைக் கோவில் தன் கோபுர நிழல் தரையில் விழாத அளவுக்குப் பெரிதாக இருக்கிறதோ அப்படி இருக்கிறது தமிழக இலக்கியப் பரப்பு. ஆகவே அவர்கள் பார்வை இப்பக்கம் விழுவதில்லை. புலம் பெயர்ந்தோர் இலக்கியம் அதன் தனி விழுமியங்களுக்காக தனியாகக் கவனிக்கப் பட்டு அதற்குரிய இடம் கொடுக்கப்படுவது முக்கியம் ஆகும்.


ஏ சுகுமாரன்: தாங்கள் படைப்புகளை எழுதி முடித்ததும் அவைகளை நீங்கள் கண்டு வியந்ததுண்டா ? இது எங்கிருந்து வந்தது மூளையில் இருந்தா அல்லது வெளியில் இருந்து வந்ததா ? இத்தனை நாள் இந்த உருவகப் படைப்பு ஏன் பதுங்கி இருந்தது ? எங்கே பதுங்கி இருந்தது ?
என்று வியந்ததுண்டா? இல்லைஎன்ற ஒரு சொல் மிக எளிது ! தங்கள் சற்று ஆழமானவர் என்பதால் இதைக் கேட்கிறேன் .

பதில்: ஆமாம் சுகுமாரன், அப்படி உணர்ந்தது உண்டு. எழுதுவதற்கு முன் நான் கொஞ்சமாகத் திட்டமிடுதல் உண்டுதான். “இதைப் பற்றி இப்படி எழுதலாம்” என ஒரு கருவும் கதைப் பின்னலும் மேக மூட்டமாக மனதில் நிற்கும். ஆனால் அதை எழுதத் தொடங்கிய பின் நிகழ்வது வேறு. திட்டமிடாத வாசகங்கள், கற்பனைச் சம்பவங்கள், பின்னல்கள் அனைத்தும் வந்து விழும். எழுதும் வேகத்தில் அவற்றை நின்று பார்த்துக் கொண்டிராமல் எழுதி விடுகிறேன். பின்பு படிக்கும் போது எப்படி இது வந்தது என்ற வியப்பு வருவதுண்டு. எழுதும் செயலில் மூளையின் கற்பனா பகுதியில் பல சுரப்பிகள் நீரை வார்க்கின்றன போலும். இது எழுத்தாளனின் கட்டுப்பாட்டில் இல்லை. இதை ஆங்கிலத்தில் the flow என சாதாரணமாகச் சொல்லி விடுகிறார்கள். “கற்பனை ஊற்று” எனத் தமிழில் சொல்லலாமா? திட்டமிடப்படாத இயற்கை ஊற்று.


சுபா: கேள்வி: 1962 முதல் 1975 வரை மலேசிய வானொலியில் (RTM 6)ஒலிபரப்பாளராக இருந்திருக்கின்றீர்கள். மலேசிய வானொலி நிகழ்ச்சிகளில் உங்களின் ஆரம்ப காலப் பணிகள் எப்படிப்பட்டவை? அப்போது தங்களோடு பணியாற்றிய ஏனைய தமிழ் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், அறிவிப்பாளர்கள் பற்றி பகிர்ந்து கொள்ள முடியுமா? தாங்கள் பொறுப்பில் இருந்த சமயத்தில் நடந்த மறக்க முடியாட ஒரு நிகழ்வினைப் பற்றி பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில்: என் வாழ்க்கை வரலாற்றை நான் என்றாவது எழுத நேர்ந்தால் இந்த அத்தியாயம் மிகச் சுவையுள்ளதாக அமையும். மலேசிய வானொலியில் 1961இல் ஒரு அறிவிப்பாளராகச் சேர்ந்தேன். அந்த கட்டத்தில் பாலா என்னும் பெரிய ஆளுமை அங்கு வந்ததும் என்னைத் தனது தம்பியாகத் தத்தெடுத்துக் கொண்டதும் எனக்கு வாய்த்த வரங்கள். (பாலா பற்றிய என் வலைப்பூ கட்டுரை இருக்கிறது.) நானும் என் கடின உழைப்பாலும் கற்பனை வளத்தாலும் ஓரளவு குரல் இனிமையாலும் முன்னேறினேன். 1965-1968இல் பகுதி நேர அறிவிப்பாளர் வேலை பார்த்தவாறு மலாயாப் பல்கலைக் கழகத்தில் என் இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்தேன். ஒலிபரப்புத் துறையின் மேல் இருந்த ஆர்வத்தாலும் பாலாவின் மேல் உள்ள பாசத்தாலும் மீண்டும் வானொலிக்கு வேலைக்குப் போனேன். பட்டதாரியானதால் வேலை உயர்வைக் கொடுத்து நிர்வாகியாக்கி விட்டார்கள். ஆகவே ருசி போய்விட்டது. 1974 வரை பல்வேறு நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்து என் ஒலிபரப்பு வாழ்வைத் துறந்து கல்வித் துறைக்கு வந்தேன்.
நான் தீவிர ஒலிபரப்பாளனாக இருந்த போது என்னுடன் வேலை பார்த்த உயர்ந்த ஆளுமைகள் சிலர். கவிஞர் கா.பெருமாள்;கிட்டத்தட்ட பாரதி போன்ற கம்பீரம் உள்ளவர். யாருக்கும் வணங்காதவர். ஆனால் குள்ளமாகக் கருப்பாக ஒரு கிராமத்தார் போல் இருப்பார். கொஞ்சமாகத் தமிழ் மட்டுமே படித்தவர். ராங்கிலவாசம் கிடையாது. எனக்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வானொலியில் தயாரிப்பாளராகச் சேர்ந்தார்.

அவர் வேலை தேடி வானொலிக்குப் போனபோது மேலாளராக இருந்தவர் ராமன் என்னும் ஐயர். அவருக்கு உதவி இராமச்சந்திர ஐயர். இந்த இரண்டு ஐயர்களிடம் வேலை கேட்கப் போன பெருமாள் பெரியாரை ஆதர்சமாகக் கொண்ட சுயமரியாதைக்காரர். ராமனிடம் சென்ற போது “போய் இராமச்சந்திரனைப் பார்!” என அனுப்பினார். இராமச்சந்திரனைப் பார்த்த போது “போய் ஏதாகிலும் எழுதிக்கொண்டு வா, அப்புறம் பார்க்கலாம்” என்று அலட்சியமாகச் சொல்லியிருக்கிறார்.

பெருமாளுக்கு இந்த இரண்டு ஆசாமிகளும் தன் சுயமரியாதையைச் சோதிப்பதாக ஒரு எண்ணம் ஏற்பட்டு விட்டது. அந்தக் கோபத்தோடு உட்கார்ந்து ஒரு கவிதை நாடகம் எழுதினார். நாடகம் ஏகலைவன் – துரோணர் பற்றியது. தலைப்பு “கட்டை விரல்” துரோணர் ஏகலைவனின் கட்டைவிரலைக் குருதட்சிணையாகக் கேட்டாரல்லவா! அதனை பிராமணன் – திராவிடன் என்ற பார்வையில் வைத்து எழுதியது. அதிலிருந்து ஒரு மேற்கோள். விரல் இழந்த ஏகலைவனின் பாட்டன் பேசுகிறான்:


“கல்லாத மாணாக்கன் கட்டைவிரல் வாங்கி விட்டபொல்லாத் துரோணா, புல்லா நீ போ! போ!! போ!!!
வனவேடன் கைவிரலை வாங்கிவிட்ட வேதியனே,
உனக்கு இது தகுமோ, உன்குலத்தார் செய்தொழிலோ?”

ஆரியர் குலவழக்கோ! ஆசாரமீதோ சொல்?
நேரியல்பு அற்ற உனை நிலம் விழுங்க மாட்டாதோ!......பூணூல் உனக்கெதற்கு போடு கழுத்தில் சுருக்கு!நாணமில்லா உன்போன்றோர் நனிவாழ ஞாயமுண்டோ?”

நான் இதை அவரின் கவிதா திறத்துக்கு உதாரணமாய்ச் சொல்லவில்லை. அதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. ஆனால் இரண்டு பிராமணர்களிடம் வேலை கேட்டுப் போன மனிதர் அவர்கள் பார்வைக்கும் பரிசீலனைக்கும் வைக்கும் படைப்பு இப்படியென்றால் அவருடையச் சுயமரியாதைச் சிந்தனை எத்தனை வலுவானதாக இருந்திருக்க வேண்டும்?

இதன் பின்கதையைச் சொல்லுகிறேன். இராமச்சந்திர ஐயர் பிரதியைப் பார்த்தவுடன் எரிச்சல் பட்டது இயற்கை. “போ போ” என விரட்டி விட்டார். ஆனால் ராமன் ஐயர் மிகப் பெரும் மனசுள்ளவர். (பின்னாளில் இவர் சிங்கப்பூர் அரசுக்கான இந்தோனேசியத் தூதுவராகப் பதவி வகித்தார்.) அவர் இராமச்சந்திரனைக் கூப்பிட்டு அந்தக் கட்டைக் கவிஞர் என்ன ஆனார் என்று கேட்டிருக்கிறார். “அவர் பிராமணத் துவேஷி. சரிப்பட்டு வரமாட்டார்” என இவர் சொல்ல அவர் “பிரதியைக் கொடு நான் படித்துப் பார்க்கிறேன்” என்று வாங்கிப் படித்திருக்கிறார். அவருக்கு அதன் அருமை புலப்பட்டுவிட்டது. உடனே பெருமாளைக் கூப்பிட்டு வேலை கொடுத்தார்.
பிற்கதைக்கு இன்னொரு பிற்கதை: இந்தப் பிரதியை நாடகமாகத் தயாரிக்க ராமன் உத்தரவிட்டார். அதில் கதை சொல்லியாக (narrator) தாமே இருந்தார். அவர் குரல் ஒரு baritone குரல். அதில் அந்தப் பிராமணனைத் திட்டித் தீர்க்கும் பாட்டனின் பாத்திரத்தை இராமச்சந்திர ஐயருக்கே தந்தார். கவிதை நாடகம் மலேசிய வானொலியில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. 1959இல் ஒலிபரப்பானது.

“கட்டை விரல்” பின்னர் நூலாகவும் வந்தது. அதில் தனது முன்னுரையில் “இந்தியப் பகுதியின் தலைவர் பெருமதிப்புக்கு உரிய எஸ்.இராமச்சந்திரன் அவர்கள்” என பெருமாள் குறிப்பிட்டிருக்கிறார். இராமச்சந்திரன் பின்னாளில் பெருமாளின் godfatherஆக இருந்தார்.

சுபா, ஒருவர் கதையே இத்தனைப் பெரிதாகிப் போனதே! இனி நாகசாமி பாகவதர், பைரோஜி நாராயணன், வானொலி நடிகையர் திலகம் துளசி கிருஷ்ணன், நடிப்புத் திலகம் தோமஸ் மேத்தியூஸ் ஆகியோருடனான என் நாட்களை எப்படிச் சொல்லி முடிப்பேன்! என் சுய சரிதை வந்தால் படித்துக் கொள்ளுங்கள்.

சீதாம்மா:  நீங்கள் ஓர் படைப்பாளி. அதிகமாகப் படிக்கின்றவரும் கூட. நாம் அப்படி பலரின் படைப்புகளைப் படித்துவரும் பொழுது இதைப் போன்று ஒன்று நாம் அவசியம் படைக்க வேண்டும் என்று ஓர் சின்னக் குரல் மனத்தில் எழுந்திருக்கலாம்.அப்படி ஒன்று இருந்தால் அதைப் பற்றிக் கூறுங்கள்.
என் பதில்களுக்கு ஓர் பதில் பாட்டுப் பாடினீர்கள். பொன்னியின் செல்வன், மோகமுள், வியாசர் விருந்து. உடனே எனக்குள் ஓர் அவா பிறந்துள்ளது. இந்த மூன்றைப் பற்றியும் நாம் தனி ஆவர்த்தனம் செய்யலாம். ஆனாலும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தை அடக்க முடியவில்லை. மோகமுள் மற்றவரை வசீகரிக்கும் காரணம் என்ன? ஒரு சொல் பதில் கூடாது. சில வரிகளாவது வேண்டும்.

மூன்றாவது வேண்டுகோள்: உங்கள் மனத்தில் இன்றும் பசுமையாக ஊஞ்சலாடும் நினவினைக் கூறவும்.


பதில்:  சீதாம்மா!யாரைப் போல் எழுத வேண்டும் என்ற கேள்விக்கு நீண்ட விடை வேண்டும். காலந்தோறும் மாறுபடும். 12 வயதில் எங்கள் நாட்டு எழுத்தாளர் நா.வரதராசன் போல் ஆகவேண்டும் என விரும்பினேன். அவருடைய சிறுகதைகள் விடாமல் உள்ளூர் இதழ்களில் வரும். பின்னர் பழம்பெரும் எழுத்தாளர் மா. இராமையா. அப்புறம் தமிழ்வாணன் என் வாழ்வில் வந்தார். கல்கியை ருசித்தவுடன் மற்றதெல்லாம் மறந்து விட்டது. ஆனால் கல்கி கற்பனையில் கூட எட்டிப் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தார். அகிலனைப் போல் பல கதாநாயகிகள் ஒரே நேரத்தில் காதலிக்கும் ஆதர்ச கதாநாயகனை உருவாக்கும் ஆசை இருந்தது. அதன் பின்னர் வளர வளர “அவரைப் போல் இவரைப் போல்” எழுத வேண்டும் என்ற ஆசைகள் இல்லை.

ஆனால் படிப்பதற்காகத் தேர்ந்தெடுத்த ஒரு பட்டியல் உண்டு. மிக நீளம். (நம் அனைவருக்குமே அந்தப் பட்டியல் நீளமாகத்தான் இருக்கும்.) மிக முக்கியமானவர்களைச் சொல்லுகிறேன். ஆக மேலே மு.வரதராசன். இவர் ஒருவரின் நூல்கள் மட்டுமே அனைத்தையும் நான் படித்திருக்கிறேன். பின்நாளில் என்னைப் பைத்தியமாக அடித்தவர் பாலகுமாரன். அவருக்கப்புறம்தான் சுஜாதா. தி.ஜானகிராமனைப் பின்னாளில்தான் படிக்க ஆரம்பித்தேன். “மோகமுள்” இன்னமும் நெஞ்சில் தைத்திருக்கிறது.


இவற்றின் பின் படித்தவர்களில் எனக்கு ஒரு விமர்சனப் பார்வை வந்து விட்டதால் நிறை காண்பதைவிடக் குறை காண்பதையே அதிகம் மனம் நாடுகிறது. இது ஒரு சாபம். எந்த புனைகதையையும் ஒரு முற்சார்பு இல்லாமல் படிக்க முடிவதில்லை. ஆனால் அந்த முற்சார்பையும் வென்று என்னை வியக்க வைத்தவர்களில் முதன்மை ஜெயமோகன். மேலும் அம்பை, சு.ரா., நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், வாசந்தி, உமாமகேஸ்வரி. பட்டியல் முற்றுப் பெறவில்லை.

“மோகமுள்”இன் மாயம் என்ன? அதன் இயல்புத் தன்மைதான் முதலாவது. கல்கி கூட தன் பாத்திரங்களுக்கு அரிதாரம் பூசுகிறார். ஆகவே கொஞ்சம் செயற்கை இருக்கிறது. ஆனால் தி.ஜா.வின் பாத்திரங்களில் அந்த செயற்கைத் தன்மை இல்லை. பாத்திரங்களின் மனங்களில் ஓடும் எண்ண ஓட்டத்தையும் அவர் மிக இயல்பாகவே கூறுகிறார். அவர் வருணிக்கத் தேர்ந்தெடுக்கும் வாழ்வின் தருணங்கள் மிக நுண்ணியமானவை.

ஆனால் இவையெல்லாம்தான் தி.ஜா.வின் மந்திரங்கள் என்று சொல்லி விட முடியாது. மேலே சுகுவுக்குச் சொன்ன படி தி.ஜா. எழுதும் போது நிகழும் கற்பனா ஊற்று வாசகனையும் பற்றிக் கொள்வது. ஒரு ரசாயனம். போங்கள்! என்னால் அறிவு பூர்மாக விளக்கத் தெரியவில்லை.
தமிழில் இதுவரை வந்துள்ள நாவல்களில் முதலிடத்தில் வைக்கத் தக்கது மோகமுள் என்றே நான் நம்புகிறேன். வேறொரு வாசகர் வாதிடலாம். நான் எதிர்வாதம் செய்ய மாட்டேன். என்னது என்னதுதான்.


விஜய்: கதைகள் - ஒரே முறையில் முழு புத்தகமாக வெளிவருவது நல்லதா அல்லது தொடர்களாக வந்த பிறகு புத்தகங்களாக வருவது நல்லதா?


பதில்: சிறுகதைகளைப் பொறுத்தவரை இரண்டாவது வகைதான் இப்போது பழக்கமானதாகிப் போனது. புதினங்களில் பல புதிதாக எழுதப்படுகின்றன. எனக்கு இரண்டும் சம்மதம்தான். “போத்திக்கினே படுத்துக்கலாம்; படுத்துக்கினே போத்திக்கலாம்.”


நா. கணேசன்: நீங்கள் கலந்துகொண்ட உலகத் தமிழ் மாநாடுகள் பற்றிய அனுவங்களை எழுதுங்கள்.

 

பதில்: முதல் தமிழாராய்ச்சி மாநாட்டில் மலேசியாவில் நான் ஒரு அலுவலகப் பணியாளனாக இருந்தேன். (அப்போது நான் மாணவன்.) தமிழறிஞர்களை நேருக்கு நேர் சந்திப்பதும், பேசுவதும் பிரமிப்பான அனுபவங்கள். நெடுஞ்செழியன், குழந்தைசாமி, தெ.பொ.மீ., மு.வ. எல்லோரும் வந்திருந்தார்கள். தவத் திரு தனிநாயகம் அடிகளாரின் தமிழ் ஈடுபாடு, ஆய்வுத் திறன், நிர்வாகத் திறன், உலகளாவிய தமிழ் நோக்கு ஆகியவற்றை அருகிலிருந்து பார்க்கும் பெரு வாய்ப்பும் அப்போது கிட்டியது. பலமுறை என்னை வீட்டுக்கு அழைத்து ஒயின் கொடுத்து உபசரித்தும் உள்ளார்.


தஞ்சைத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு கட்டுரை எழுதப் பதிந்து கொண்டேன். அவர்கள் எனக்கு பதிலே போடவில்லை. (அப்போது நான் பேராசிரியர்.) பலமுறை கடிதமும் தொலைநகலும் அனுப்பியும் பதில் இல்லை. அந்த அலட்சியத்தைப் பொறுக்க முடியாமல் “இனி நீங்கள் கூப்பிட்டாலும் வரமாட்டேன்” என கோபமாக ஒரு கடிதம் எழுதி அதன் நகலை மலேசியத் தலைவர் சாமிவேலுவுக்கும் அனுப்பினேன். சாமிவேலு கடைசி நாளில் என்னை அழைத்துத் தான் செல்லும் தனி விமானத்தில் (ஆனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமானது) தம்முடன் அழைத்துச் சென்றார். ஜெயின் சிறப்பு விருந்தினர்களாகப் போனோம். அதன் பிறகு அரச போகம்தான். ஆனால் ஜெ நடத்திய மாநாட்டுக்கு வெளியிலான அரங்கங்களுக்குத்தான் செல்ல முடிந்தது. பல்கலைக் கழக மாநாட்டுக்கு யாரும் செல்வதாகக் காணோம். மூன்றாம் நாள் ஜெயின் உபசாரங்களை மறுத்து விட்டு ஒரு நாள் முழுவதும் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து பார்த்து வந்தேன். இந்த மாநாட்டில்தான் சிவத்தம்பி வெளியேற்றப்பட்டார் அல்லவா? இந்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து “கொல்ல வரும் புலி” என ஒரு சிறுகதை எழுதினேன். என் தொகுப்பு ஒன்றில் அது உள்ளது. (டிஜிட்டல் பிரதி இல்லை.)


இரண்டாம் முறை மலேசியாவில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் கட்டுரை வாசித்தேன். அது எங்கள் நாட்டின் தமிழ் இதழ்கள் பற்றியது. வேறு மாநாடுகளுக்குச் சென்றதில்லை.

 

கேள்வி: இந்தியாவுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் பழைய நீண்ட தொடர்புகள் உண்டு.

சிங்கை, மலாயாவில் இவ்வாய்வுகளில் ஆர்வம் காட்டவில்லையே?

ஏன் இது?ஒரே ஒரு விலக்கு பேராசிரியர் சிங்காரவேலு. அப் பேராசிரியரின் கட்டுரைகள் யாவும் தொகுத்து ஆங்கிலம், தமிழ் இரண்டுமாக வரவேண்டும். முரசு நெடுமாறன் நூல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெளிவந்துள்ளது. நீங்களும் ஒன்று எழுதலாமே.பேராசிரியர் சிங்காரவேலு அவர்களின் கட்டுரைகள் நூல் வடிவில் வரவேண்டும். அச்சாக முயற்சி எடுத்தால் என்னால் ஆனதைச் செய்து தருகிறேன்.


பதில்: இந்திய-தென்கிழக்காசியத் தொடர்புகள் பற்றி தமிழில் அதிகம் வரவில்லை என்று சொன்னால் சரிதான். ஆங்கிலத்தில் நிறைய வந்திருக்கிறது. ஒரு முக்கியமான மையம் Institute of Southeast Asian Studies (ISEAS). சிங்கப்பூரில் உள்ளது. தனிநாயகம் அடிகளாருக்கு அப்புறம் சிங்காரவேலுதான் அதிகம் செய்திருக்கிறார். அவருடைய படைப்புக்களைக் கேட்டு வாங்குவது கடினம். அவரின் நடுப்பெயரில் “காரம்” இருப்பதைக் கவனித்திருக்கலாம். நான் தமிழ் என்று வந்தால் அடிப்படையில் புனைகதையாளன். ஆய்வு என்று வந்தால் என் துறை mass communication. ஆகவே வரலாறு, மொழி ஆராய்ச்சியில் எனக்குப் பங்கு ஒன்றும் இல்லை. அந்தத் துறைகளில் முறையான பயிற்சி பெற்றவனும் அல்ல. சில கருத்துரைகள் மட்டுமே எழுதியுள்ளேன்.

நரசய்யா:  சிங்கையில் மகிழ்நன் இல்லத்தில் கலந்துரையாடுகையில், நீங்கள் அன்றைய காலைப் பொழுதில் பின் நவீனத்துவத்தைப் பற்றிப் பேசப்பட்டதாகச் சொன்னீர்கள். post modernism என்பதின் நேர் மொழிபெயர்ப்புதான் பின் நவீனத்துவம் என்பதைத் தவிர தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் நவீனத்துவம் என்பதே இல்லையென்றும் ஆகையால் பின் நவீனத்துவம் என்பது வெறும் மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தையே என்று ஏற்றுக்கொள்ளும் பலரில் நான் ஒருவன் என்பதால் எனது கேள்வி. தமிழில் முக்கியமாக சிறுகதை இலக்கியத்தில் நவீனத்துவம் தொடர்ந்து பின் நவீனத்துவம் என்பதெல்லாம் வரையறுக்குமாறு உள்ளனவா? அவ்வாறாயின் உதாரணங்கள் கூற இயலுமா?

 

பதில்: நரசய்யா,அன்று காலை கருத்தரங்கில் நிகழ்ந்ததை மாலையில் பேசிக் கொண்டிருந்தபோது கூறினேன். கமலம் கிளப்பிவிட்டாரல்லவா?அதனால். அன்று காலை எம்.ஜி.சுரேஷ் கருத்தரங்கில் இருந்தார். பெரும்பாலும் பார்வையாளராக இருந்தார். இறுதியில் ஓர் இரண்டு நிமிடம் பேசியபோது, நா.கோவிந்தசாமியின் படைப்புக்களிலும் தான் பின் நவீனத்துவக் கூறுகளைக் கண்டதாகக் கூறினார். அவர் பின்நவீனத்துவ exponent. ஆகவே கூற்றில் உண்மை இருக்கலாம்.

ஆனால் இந்த ஆய்வாளர்கள் உங்கள் படைப்பிலும் என் படைப்பிலும்கூட பின்நவீனத்துவத்தைக் கண்டு பிடிப்பார்கள். “நான் அப்படி ஒண்ணும் எழுதலையே” என்றால், உனக்கென்ன தெரியும் என்பார்கள்.

பின்நவீனத்துவத்துக்கான சூத்திரம் என்னவென்று எனக்குத் தெரியாது. இப்போது உலகில் காணப்படும் எல்லா நவீனப் பொருள்களையும் கொள்கைகளையும் போட்டு உடைத்து மீண்டும் வேறு மாதிரி கட்டியெழுப்ப வேண்டும் என்று இவர்கள் நினைப்பதாகத் தெரிகிறது. அந்த ஆர்வத்தில் எல்லாவற்றையும் போட்டு உடைப்பதை வெற்றிகரமாகச் செய்கிறார்கள். கல்கியை உடைத்து,மு.வ.வை உடைத்து ஜெயகாந்தனையும் உடைத்துப் போட்டு விட்டார்கள். சு.ரா.வையும் அண்மையில் பின்நவீனத்துவ நாவல்கள் எழுதிய ஜெயமோகனையும் கூட உடைக்கிறார்கள். பெரிய demolition squad. ஆனால் புதிதாக இவர்கள் கட்டும் எதையும் நம்மால் (என்னால்) புரிந்து கொள்ளவோ ரசிக்கவோ முடியவில்லை. இதைச் சொல்லப் போனால் உனக்குப் புத்தி போதாது என்கிறார்கள். ஆகவே என்னிடம் நீங்கள் கேட்டுப் பயனில்லை. யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டால் எனக்கும் சொல்லுங்கள்.

துரைமணிகண்டன் வானதி: இன்று தமிழ் ஆசியக்கண்ட மொழி என்று பரவலாகப்பேசப்படுகிறது.

இது எப்பொழுது உலகு தழுவிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்படும்?
அதற்கு நம்மால் ஆன பணிகள் ஏதேனும் உள்ளனவா? இருந்தால் அருள் கூர்ந்து பதில் கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

பதில்: ஐயா, எனக்குத் தெரிந்த வரை உலக மொழியறிஞர்களிடையே தமிழ் ஒரு தொன்மையான மொழி என்றும் செம்மொழி என்றும் புரிதல் இருக்கிறது. அதில் பலர் மனம் தோய்ந்து ஆய்வுகள் செய்வதும் நீங்கள் அறிந்ததே. அந்த அளவில் அது உலக மொழிதான். ஆனால் அது இன்றளவும் உயிர்ப்புடன் இருந்து வாழ்ந்து வளரும் நவீன மொழி என்பது பெரிய அளவில் உலக அரங்கில் அறியப்படவில்லை. ஆங்கிலம், சீனம்,பிரெஞ்சு, ஜப்பானியம், கொரியன், ஜெர்மன்,ஹிந்தி என்ற வரிசையில் அது பெரும்பாலும் வைக்கப்படுவதில்லை. இதற்குக் காரணம் தமிழ் நாடு உலக அரங்கில் பெரிதாக எதையும் செய்து தன் இருப்பைக் காட்டிக் கொள்ளாததுதான். தற்காலத்தில் இரண்டு வகைகளில் உலக அரங்கில் தமிழ் இனம் பேசப்படுகிறது. முதலில் இலங்கையில் தமிழ்ப் புலிகளின் போராட்டம். இரண்டாவது தகவல் தொழில் நுட்பத்தில் தமிழர்கள் அவர்கள் உலக அளவில் சாதனைகள் புரிந்துள்ளது. ஆகவே இனம் அறியப்பட்டுள்ளது. மொழி அதன் உபவிளைவாக அறியப்பட்டுள்ளது. ஆனால் உலகின் நடப்பு முக்கியத்துவம் பெற்ற மொழிகளில் ஒன்றாக அது கருதப்படுவதில்லை. சுருங்கி வரும் உலகில் அந்த வாய்ப்பு அதற்கு இனி ஏற்படும் என்ற நம்பிக்கையும் இல்லை.

 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்:

கேள்வி: 1) இலக்கியம், வாழ்க்கை, ஆன்மிகம் இவற்றைப் பற்றி நீங்கள் உங்களுக்குளேயே கருதிக்கொள்வது என்ன?

பதில்: இலக்கியம், வாழ்க்கை இரண்டையும் நான் முற்றாகத் தோய்ந்து அனுபவிக்க எனக்குக் கொடுப்பினை இருக்கிறது. என் குடும்பம் அன்பான குடும்பம். பிள்ளைகள் வெற்றிகரமான பொருளாதார வாழ்வு வாழ்கிறார்கள். பேரப்பிள்ளைகளில் சிலர் என்னுடன் இருந்து என்னை வளர்க்கிறார்கள். ஆன்மீகம் இந்த வாழ்வில் எனக்கு ஊறுகாய் போல. அதன் இலக்கிய வெளிப்பாட்டை மட்டுமே நான் அனுபவிக்கிறேன். நீங்கள் எழுதும் வைணவ விஷயங்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கின்றன. ஆனால் இதன் அடிப் பகுதியிலும் முடிப் பகுதியிலும் எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. அடி முடியோடு தோய்ந்து நிற்கின்ற உங்களைப் போன்றவர்களைப் பார்க்கும்போது என்க்கு ஒரு ஏக்கம் ஏற்படுவது உண்மை. ஆனால் மாற்றம் ஏற்படுவதில்லை.


கேள்வி: 2) ஆழ்ந்த, நெடிய அனுபவத்தின் பின் வாழ்க்கையில், எழுத்தில் values என்பதற்கான இடம் யாதாகக் கருதுகிறீர்கள்?

பதில்: எழுத்தில் இரு விழுமியங்கள் இருக்க வேண்டும். முதலாவது இன்புறுதல். இங்கு எழுத்தால் துன்புறுதலும் இன்புறுதலே என்று எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு கதை படித்து அழுத பின்னர் “நல்ல கதை” என்று சொல்கிறோமல்லவா! இரண்டாம் விழுமியம் மனதை உயர்த்துதல். வாழ்க்கையில் நம்பிக்கையுறச் செய்தல். இது இரண்டையும் வைத்துக் கொண்டு ஜெகஜாலப் புரட்டுக்கள் செய்யலாம்.

கேள்வி: 3) உலகத்திலேயே முக்கியமான நூல்களைப் பத்திற்குள் அடக்க வேண்டும் என்றால் நீங்கள் தரும் நிரல் யாதாக இருக்கும்?

பதில்: இது பற்றி யோசித்ததுண்டு. எனக்கே எனக்கே உரிய பத்து நூல்களைத் தைரியமாக இங்கே எழுதுகிறேன். இவை நவீன நூல்கள். செம்மொழி இலக்கியங்களை நான் தொடவில்லை. ஆங்கிலமும் தமிழும் கதைகளும் கட்டுரைகளும் கலந்த பட்டியல்:
1. லூயிஸ் ஃபிஷர்: காந்தியின் வரலாறு:
2. கல்கி: அலை ஓசை

3. Pearl S.Buck: Good Earth
4. Norman Vincent Peale: Power of Positive Thinking

5. மு.வரதராசன்: அகல் விளக்கு

6. தி.ஜா.: மோகமுள்

7. பாலகுமாரன்: இரும்புக் குதிரைகள்

8. எஸ்.இராமகிருஷ்ணன்: கதாவிலாசம்

9. Richard Dawkins: The Blind Watchmaker

10. ஜெயமோகன்: காடு


கேள்வி:4) சிறுகதைக்குக் கதை முக்கியம் - கதை அவசியமில்லை -- இரண்டில் எது சரி?

பதில்: இதற்கு மூன்று விதமாக பதில்கள் உள்ளன: முக்கியம், முக்கியம், முக்கியம்.

கேள்வி:5) கவிதையைப் பற்றிய உங்களின் அந்தரங்கக் கருத்துகள் என்ன?

பதில்: அந்தரங்கம் ஒன்றும் இல்லை. பக்திக் கவிதைகளைப் படிக்கிறேன், திரும்பத் திரும்ப. திருமுறைகளும் வள்ளலாரும் ஏற்கனவே படித்ததுண்டு. தாயுமானார், பட்டினத்தாரும் சேர்த்தி. நா.கண்ணன்தான் பாசுர இலக்கியங்களில் ருசி ஏற்படுத்தினார். இப்போது மின்தமிழில் ஒரு கோஷ்டியே சேர்ந்து எழுதிக் கிறங்க அடிக்கிறீர்கள். நவீனம் என்று வரும்போது பாரதியார், பாரதிதாசன், இவர்களின் பரம்பரையினர். (இந்தப் பரம்பரை புதுக் கவிதை எழுந்த வேகத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. End of History?)

புதுக் கவிதைகளை அவ்வப்போதும் ஆங்காங்கேயும் படிக்கிறேன். ஆஹா என்ற வியக்கின்ற வேளைகள் உண்டு. தவிர இந்தக் கவிதைகளில் தீவிர ஈடுபாடு ஏதும் இல்லை.


கேள்வி: 6) எழுத்து ஒருவர் சிந்திப்பதை அப்படியே பிரதிபலிப்பதுவாய் இருக்க வேண்டுமா? அல்லது மற்றவர்க்குப் புரியும் படியாக எளிமையாக இருத்தல்தான் முக்கியமா?

பதில்:  சிந்தனை அசலாக இருப்பது முக்கியம். அதனை மொழி வாகனத்தில் ஏற்றும் போது அதை வாசகர் புரிந்து கொள்ள எளிமைப் படுத்தவே வேண்டும். ஆனால் சில வேளைகளில் ஒரு சொகுசு மொழியும் (sophistication) தேவைதான். எழுத்தாளன் வாசகனின் மட்டத்துக்கு வருவது பெரும்பாலும் தேவை; வாசகனை எழுத்தாளனின் உயரத்துக்கு உயர்த்துவது சில சமயங்களில் தேவை.


தி.க.திருவேங்கடமணி: ஆராய்ச்சிக் கட்டுரைகளை (Theses) இலக்கப் பதிவாக்கி சேகரித்துப் பாதுகாப்பதும், பயனாளருக்கு வழங்குவதும் இப்போது உலகளவில் வாடிக்கையாகி விட்டன. இருப்பினும் இன்னும் பல அறிவியல் பேராசிரியர்கள் அது சரியில்லை – எங்கள் கண்டுபிடிப்புகள் களவாடப்பட்டு விடுகின்றன என்கிறார்களே. ஆய்வுக் கட்டுரைகள் நூல்களாக வெளிவந்த பின்புதான் மின்னேற்றப்பட வேண்டும் என்ற வாதம் சரிதானா? அதனால் குறைந்தது ஓராண்டுக்காவது தகவல்கள் தாமதப்பட்டுப் போகாதா?

பதில்: இப்போதுதான் காப்புரிமை வந்து விட்டதே. முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புக்களை (அதன் விளக்கமான தீசிஸ் உட்பட) காப்புரிமை செய்து கொண்டு அவற்றை விற்றுப் பயனடைவதில் தவறு ஒன்றும் இல்லை. ஒரு கால கட்டத்துக்குப் பிறகு அவற்றைப் பொதுப் பொருள்களாக்கலாம்.


காளியம்மா பொன்னன்:

1) வெளி நாட்டில் பல வருடங்கள் வாழ்ந்த போது இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்தா? தமிழில் எழுத முடிந்ததா?

 

பதில்: படிப்புக்காகத்தான் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இருந்தேன். கவனமெல்லாம் படிப்பில் இருந்ததால் அப்போது தமிழில் எழுத அதிக கவனம் செலுத்தவில்லை. பெரும் இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை. இங்கிலாந்தில் தமிழ் பேசுவோர் சங்கக் கூட்டங்கள் சிலவற்றில் கலந்து கொண்டேன். லெஸ்டரில் சல்மான் ருஷ்டியைச் சந்தித்தது சுவையான அனுபவம். (சில நிமிடங்களே!)

 

2. தங்களுக்கு மிகவும் பிடித்த பெண் எழுத்தாளர் யார்? ஏன்?

பதில்: அம்பை. அவருடைய எழுத்தில் உள்ள புத்திசாலித்தனம், துணிவு, உலக நோக்கு எனக்கு மிகவும் பிடிக்கும். சொற்சிக்கனம் இருக்கும். சொல்லாட்சி மிகக் கூரியது.



3. வெளிநாடுகளில் ஒரு சொல்லுக்கு இத்தனை காசு என்ற ரீதியில் எழுத்தாளர்களுக்கு சன்மானம் கொடுக்கிறார்கள். ஆசிய நாடுகளிலும் . இவ்வாறான ஒரு நிலை வரும் சாத்தியம் உண்டா? வருவது நல்லது என்று நினைக்கிறீர்களா?

பதில்: ஆம். வரவேண்டும். அப்போதுதான் எழுத்தை நம்பி எழுத்தாளன் வாழ முடியும். இப்போதைய நிலையில் எழுத்தாளர்கள் மிகவும் சுரண்டப்படுகிறார்கள். எழுத்துக்குப் பொருளாதார மதிப்பு இல்லாததால் தரமும் பிரிக்க முடியவில்லை. இந்த நிலை மாற வேண்டும். மாறி வருகிறது என்றே நினைக்கிறேன்.

 

4. இசையிலும் நடனத்திலும் தங்களுக்கு ஈடுபாடு உள்ளதா?

பதில்: நிறைய. முக்கியமாக கர்நாடக இசை. எல்லாப் பாடகர்களையும் இளம் பாடகர்களையும் ஐபோடில் சேகரித்து வைத்திருக்கிறேன். குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா, பிரசன்னா வெங்கட்ராமன் அண்மையில் மிக இனிப்பான அதிர்ச்சிகள். சீனியர் பட்டியல் சொல்லி மாளாது. சினிமாப் படல்களில் ஜி.ஆர்.முதல் ஏ.ஆர்.வரை அனைவரையும் பிடிக்கும்.
இந்தி/உருது கஜலிலும் பஜன்களிலும் ஈடுபாடு உண்டு. ஹரிஹரன், பங்கஜ் உத்தாஸ், அனுப் ஜலோத்தா அண்மையில் அஜோய் சக்கரபர்த்தி.
இசைக்கு இடையே ஓய்ந்த நேரங்களில் பரதம். அலர்மேலுவள்ளியின் பரதத்துக்கு நான் ரசிகன். புதியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நர்த்தகி நடராஜ் அண்மையில் நடன உலகில் அதிர்ச்சி வைத்தியம் செய்து வருகிறார். அதே போல மலேசியா உலக அரங்குக்கு வழங்கிய ராம்லி இப்ராஹிம், மேவின் கூ, உமேஷ் ஷெட்டி,சங்கர் கந்தசாமி. எல்லாருடைய பின்புலன்களும் பிரமிக்க வைப்பவை. எந்தரோ மகானுபாவலு!

 

5. ஹாரி பாட்டர் புத்தகங்களைப் பற்றியும் அவற்றை எழுதியவரைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: படித்ததில்லை காளியம்மா. கேள்விப்பட்ட அளவில் சந்தோஷமாக இருக்கிறது. படங்கள் பார்த்திருக்கிறேன். பேரப்பிள்ளைகள் பக்கத்தில் இருந்து படத்தை எனக்கு விளக்கியிருக்கிறார்கள்.  

ஹரிகி: கவிதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அண்மைக் காலக் கவிஞர்களில் பாரதியைத் தவிர்த்து, உங்களைக் கவர்ந்த வேறு கவிஞர்கள்?

பதில்: கவிதை இலக்கிய வடிவங்களில் மிக உயர்ந்ததுதான். நான் மேலே ரங்கனாருக்குச் சொன்னது போல் பக்தி தோய்ந்த கவிதைகளை நான் மிகவும் ரசித்துப் படிக்கிறேன். அதனால்தான் பஜகோவிந்தமும் எனக்குப் பிடிக்கிறது. பாரதிக்குப் பின் அவரது தாசன் என்னைக் கவர்ந்தவர். நவீன கவிஞர்களில் வைரமுத்துவை ரொம்பவும் பிடிக்கும். அடுத்து மேத்தா, அப்துல் ரஹ்மான். இருண்மைக் கவிஞர்களில் பிடித்தவர்கள் என யாரும் இல்லை. பரவலாகப் படிப்பதுண்டு. இந்த இருண்மைக் கவிதைகளில் உண்மையை விட நடிப்பும் பாசாங்குமே அதிகம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இவர்களோ வைரமுத்து வகையறாக்களில்தான் பாசாங்கு அதிகம் என்கிறார்கள். அவரவர்க்கு அவரவரது.


ஒரு கவிஞன் சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறானா, அல்லது சொற்கள் தாமாகவே வந்து விழுகின்றனவா? இதைக் குறிந்த அண்மைக் காலக் கருத்தாங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


பதில்: கவிஞன் சொல்லைத் தேர்ந்தெடுக்கிறானா, சொற்கள் அவற்றைத் தாமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனவா? புனைவு எழுதும்போது சுரப்பிகளின் சாகசத்தினால் திட்டமிடப்படாத சொற்கள், சொற்றொடர்கள், கற்பனை வந்து நிகழ்வதை மேலே சொன்னேன். அது கவிதைக்கு இன்னும் பொருத்தம் அல்லவா? இது மூளையின் கற்பனா பகுதி நிகழ்த்தும் ரசவாதம். அறிவுப் பகுதி வேடிக்கை மட்டும் பார்க்கும் வேளைகள்.

 

ஷைலஜா: வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறதை பெருகிவிட்ட தொலைக் காட்சித் தொடர்களும் அதனைத் தொடர்ந்து ஆதரிக்கும் மக்கள்கூட்டமும் நிரூபிக்கிறது. இதற்குக் காரணம் வாசகர்களைக் கவர இயலாத,ரசனை இல்லாத எழுத்துக்களா அல்லது வாசகர்களின் மனப்பாங்கா?

பதில்: ஷை! இது ஒரு zero sum gameபோலப் பேசுகிறீர்கள். ஒன்று கூடினால் ஒன்று குறைகிறது என்பது போல. என் என்ணம் இரண்டுமே கூடியிருக்கின்றன என்பதுதான். புத்தகம் வாசிக்கும் மக்கள் பெருகியிருக்கிறார்கள். புத்தக விற்பனையே அதனை நிருபிக்கிறது. தொலைக்காட்சி இதுவரை படிப்பிலோ கலையிலோ நாட்டமில்லாத பாமர மக்களையெல்லாம் இழுத்து வந்து தனது பரப்பைப் பெருக்கிக் கொண்டுள்ளது. ஒன்றுக்கொன்று போட்டியில்லை.

கேள்வி: கன்னட இலக்கிய உலகைப் பொருத்தவரை விருதுகள் யாருக்குக் கிடைத்தாலும் அது தனக்குக் கிடைத்ததாக ஒவ்வொரு கன்னடக்காரரும் எண்ணுவது கன்னட இலக்கிய உலகின் பெரிய பலம். அதே நேரத்தில் தமிழிலே அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்கும் ஞானபீட விருது கிடைத்தபோது அதைத் தமிழருக்குக் கிடைத்த பெருமையாகக் கருதாமல் பலர் பல விதமாய்ப் பேசியதை நினைத்தால் இன்னமும் வருத்தமாக உள்ளது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இந்தப் போக்கு இப்போது கொஞ்சம் தணிந்து விவேகம் தலையெடுத்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். எப்போதும் முதலில் போர்க்கொடி தூக்கும் ஜெயமோகனே கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாய் அமைதியாகத்தானே இருக்கிறார். சு.ரா.வை தூக்கிப் பிடிக்கும் அவரது பரம்பரையினர் வேறு யாருக்குப் பரிசு போனாலும் புறம் பேசுவார்கள். இவர்களைத் தவிர மொத்தமாகத் தமிழுலகம் இந்தப் பரிசுகளைப் பார்த்துக் குதூகலிக்கத்தான் செய்கிறது. பரிசுத் தேர்வின் தரம் பற்றிய கேள்விகளை எழுப்புவோர் அதனை மிருதுவாகப் பேச வேண்டும். தனி மனிதர் தாக்குதலிலும் தூற்றலிலும் ஈடுபடக்கூடாது. கிடைத்திருப்பது சக, சகோதர எழுத்தாளனுக்குத்தானே! அப்படிச் செய்பவர்களுக்கு விமர்சன நெஞ்சத்தை விட பொறாமை நெஞ்சமே அதிகம் இருக்கிறது.

முடிவுரை:அடேயப்பா! தன்னைப் பற்றி அதிகம் பேசிக்கொள்ள விரும்பாத என்னை இவ்வளவு பேச வைத்து விட்டீர்களே! அந்த வாய்ப்பினைத் தந்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக கண்ணன், சுபா.


[[Category:]]

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 4 ஜனவரி 2010, 19:03 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,893 முறைகள் அணுகப்பட்டது.