மெய்யறிவுச் சிந்தனை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

மெய்யறிவுச் சிந்தனை

கி. லோகநாதன், 1988 Dr K. Loganathan

படலம் 1: தெளிவியல்

1.

இவ்வுலக வாழ்வின் நோக்கத்தினை அறிந்து கொள்ளும் முயற்சியே மெய்யறிவுச் சிந்தனை. அண்டங்களாக பேரண்டங்களாக பகிரண்டங்களாக விரிந்திருக்கின்றது இப்பிரபஞ்சம். இந்த விரிவான தோற்றத்திலே ஓர் அணுவாக இப்பூமி. இப்புமியில் ஓர் அற்புதமாக பல உயிர்வகைகளின் தோற்றம். காலத்தொடு வளர்ந்து வந்துள்ள அவற்றின்
பரிணாமம், அந்த பரிணாமத்தின் ஒர் உய்ரந்த விளைவாக மானிடத் தோற்றம்; அந்த தோற்றத்திலே தன்னைப்பற்றி, இந்த உலகைப் பற்றி சிந்திக்கும் திறன், அந்த அறிவின் திறத்திலே, இந்த பரிணாம முதிர்ச்சியிலே எல்லாவற்றையும் ஓரளவு முழுகாட்சியாகக் கண்டவன் உள்ளத்திலே, இந்த உலக வாழ்வின் நோக்கந்தான் என்ன என்றவோர் கேள்வி எழுகின்றது-- புறத்தின் ஊடே அகத்தை நோக்கி

2.

ஏன் இது எழுகின்றது?

இந்த நோக்கத்தை அறிந்தால்தான், வாழ்வினை ஓர் குறிக்கோளுடன், ஓர் இணக்கத்துடன், மனவுறுதியோடு நன்று தீது யாதென்ற தெளிவுடன் அறிந்து அமைத்துக்கொள்ள முடியும். எவ்வாறு வாழ்வது? எரதைத் தேர்வது? யாது உசிதம்? யாது உசிதமற்றது? யாதை வேண்டுவது? யாதை வேண்டாதிருப்பது? என்ற வினாக்களுக்கெல்லாம் ஐயம் திரிபற விடையிருப்பது, இந்த ஆழ்நோக்க அறிவே!

இது மானிட ஒழுகியல் அடிப்படை நியதி.

2.1

நோக்கினை தெளிவாய் உணர்ந்தக்காலே . வாழ்வினை செம்மையாய் அமைத்தல் ஒவ்வும்.

ஒருவனோடு உறவாடுகின்ற பொழுது, அவன் நோக்கத்தினை பழுதற அறிந்து அதற்குத் தக எதிர்வினைகள் செய்யுங்காலே, அவனோடு இணைந்து இயங்குகின்றோம். இந்த உறவாடு நிகழ்ச்சிகளில் , அவனது நோக்கம் தெளிவாக காணவரவில்லை எனில், ஐயம் மயக்கம் தயக்கம் நிலையற்றத் தன்மை உறுதியின்மை தடுமாற்றம் என்பனபோன்ற உயிர்நிலைகள் ஏற்பட்டு வேதனைகளையும் வெறுப்பையும் மனக்கசப்பையும் தோற்றுவிக்கும். நோக்கம் பழுதறத் தெளிவாய் உணரப்படுமே எனில், இத்தகைய அவல நிலைகள் தோன்றா.

2.2

பிபஞ்சச் செலவின் நோக்கத்தினை அறியவேண்டுமெனும் வேட்கை வாழ்வின் அடிப்படையை அறியாதிருபதால் எழுகின்ற அவலங்களைப் போக்கத்தான்.


3.

இந்த ஆழ்நோக்க அறிவே வாழ்வின் அவலங்களைப் போக்கும் மருந்து. வாழ்விற்குத் தெளிவு தந்து, மெய்க்கோளைத் தந்து, இதனை நோக்கிச் செல்கின்றோம் ஆகவே இவ்வாறு செலல் வேண்டும் என்ற மனவுறுதியினை பயப்பிக்கின்றதால், அஃது பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகின்றது.

4

சடப்பொருள்கட்கு நோக்கம் இல்லை என்பதால், நோக்கம் உண்டு என்ற அறிவு, இந்த பிரபஞ்சம் அறிவற்ற சடப்பொருட்களின் ஓர் பெரும் ஓட்டம் மாத்திரம் அல்ல, அதற்கு ஊடே ஓர் பேரறிவின் தொழிற்பாடு இருக்கின்றது என்றதோர் மறையறிவின் மேல் எழுவது.

5.

இத்தகைய மறையறிவினால்தான் இக்கேள்வி என்று துணிந்து, இந்த மறையறிவே பழுதான ஒன்று என்று முடிவு செய்து, ஆராய்ந்து அறிந்துழி இப்பிரபஞ்சத்தின் இயற்கை ஓர் பேரறிவின் தொழிற்பாடுகளை காட்டவில்லை, தோற்ற மாற்றங்கள் உண்மை ஆனல் இவற்றிற்குக் காரணமாய் உட்புதைந்து வெளிப்படாது கிடக்குமோர் பேரறிவின் தொழிற்பாடுகள் உண்டு என்பதை மறுத்து, இயந்திரம் போன்று தானியங்கியாய் ஓர் குறிப்பின்றி செல்கின்றது இவ்வுலகு என்று முடிப்போரே உலகாயதர் ஆகும்.

6.

இவர்கள் பல திறத்தர். எல்லாமே சடம் என்பார் ஒருவகையர்: எல்லாமே அறிவென்பார் இன்னொரு திறத்தர். இவர்கட்கு இடையில், எண்ணற்ற பிற வகையர். விசாரித்துத் தெரிந்து கொள்க.

7.

இத்தகைய உலகாயத கொள்கைகளை மறுத்து, இப்பிரபஞ்சம் ஓர் பேரறிவொடு கலந்து இயங்குகின்ற ஒன்றே என்று அந்த மறையறிவினை தெளிபொருளாக்க வந்ததே மெய்கண்டாரின் சிவஞானபோதம் எனும் அற்புத ஞான நூலாகும். எந்த முறையியலைக் கொண்டு மெய்கண்டார் அந்நூலின் வழியாக இறையுண்மையை திறன்பட நிறுத்துகின்றார் என்பதை இனிக் காண்போம்


படலம் இரண்டு: முறையியல்

8.

ஒன்று முடியவே பிறிதொன்று விளைகின்ற நிகழ்ச்சி கோர்வையினை உலகெங்கும் காண்கின்றோம். ஒன்று முடிதலும் அதனால் பிறிதொன்று விளைதலும் இயற்கை அல்ல. ஏனெனில் இயற்கை என்றால் என்றும் மாறாத தன்மையோடு இலங்குவது என்பதே கருத்து. முடிக்கப்படுவதால் ஒன்று முடிகின்றது, தானேயாய் ஒன்று முடியாது. தோற்றுவிக்கப்படுதலால் அதனின்று பிறிதொன்று விளகின்றது. ‘முடித்தல்’ என்பது ‘பிறிதொன்றைவிளைவிக்க வேண்டும்’ என்ற கருத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது என்று உணர்ந்தக்காலே முடிதல்-விளைதல் என்று ஒன்றினைப் பற்றி ஒன்று வளர்கின்ற கோர்வை தன்மையை, நிரலை அதிகார முறைமையினை நாம் புரிந்துகொள்ள முடியும்

8.1

உலகில் யாதும் மாற்றமின்றி இல்லை என்பது உண்மையாக, எல்லாமே இந்த முடிதல்-விளைதலென்ற முறையில் திதிபடுபொருளாக இருக்கின்றது. இஃது உலகினை ஓர் பெரும் நூலென திறன்பட ஆழ ஆராய்ந்துழி எழும் உலகறிவாகும். இந்த உலகினை ஊன்றி நாம் கண்டு, அதன் இயல்பினை வெளிப்படுத்தும் தன்மையை கற்பனையின்றி அதுவேயாகி காணுற்றால் தெளிவுப்படும் உலகறிவாம்

8.2

இவ்வறிவு உண்மை என்பதற்கு வேறு சான்றுகள் தேவை இல்லை. இவ்வறிவு ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும்காட்டவொல்லா உலகின் நேரறிவு. உலகினை நுண்ணிதின் ஓர் நூலெனத் திறன்படக் காண இவ்வறிவு தானே உதயமாகும்.

9.

இவ்வாறு உலகின் உள்ளீடுகளாய், ஆங்கே இருப்பதாய் உணரப்படும் முடிதலும் விளைதலும் செய்வினைகளே. இனி எந்தவொரு செயலும் நோக்கமின்றி நிகழ்ச்சியாகாது என்பதால், அவற்றை செயல்கள் என்று கணித்துணரும் மாத்திரையானே, அச்செயல்கட்கு நோக்கமுண்டு என்ற நோக்கவறிவும் மெய்யாகிறது.

9.1

இனி நோக்கம் என்பது ஓர் அறிவுப் பொருட்பாலே தோன்றுகின்ற ஒன்று என்பதால், ஓர் பெருந்நொக்கத்தோடு செயல்படுகின்ற பேரறிவு ஒன்று உண்டு என்பதுவும் மெய்யறிவாகின்றது,

10.

இனி முடித்தலும் விளைவித்தலும் ஒரே நோக்கின் இரு செயல்நிலைகள் என்பதால், முடித்தலுக்கும் ஓர் அறிவும் விளைவித்தலுக்கு பிறிதொன்றுமாய் இருக்க முடியாது. நோக்கம் ஒன்றாக அப்பேரறிவும் ஒன்றே யாம்.

10.1

இதுவே சிவஞான போதம் முதல் சூத்திரம் கூற வரும் மெய்யறிவாகும். இங்கு உலகின் புறவுரு அறிவிலிருந்து புதையுரு அறிவிற்குச் செல்வதையும் காண்க, காணவரும் முடிதலும் விளைதலும் புறவுருவாக, ஊகித்து உணரப்படும் அதன் மூலமாகிய பேரறிவு புதையுரு அறிவாகும்.

குறிப்பு: பிரபஞ்சச் செலவில் புதையுண்டு கிடக்கும் ஆழ்நோக்கத்தையே தொல்காப்பியர் ‘பாலது ஆணை’ என மெய்கண்டார் ‘இறைவனது ஆணை’ என்பார். இதுவே எல்லார் உள்ளத்திலும் இருக்கின்ற Fundamental Intentionality என்பது, முத்தி வேட்கை என்பதுவும் இதுவே


படலம் மூன்று: மதிப்பியல்

11

இனி நன்றென தீதென நினைகின்ற சிந்தையின் உள்ளீடுகளாய் நன்றேயாய் தீதேயாய் நிலவுகின்ற நிலமைகள் விளங்குகின்றன. தீதேயாய் நிறக் அவலமும், நன்றேயாய் நிற்க அமைதியும் கிடைப்பது அனுபவ உண்மை என்பதால், நன்றேயாய் நிற்குமோர் நந்நிலையை நோக்கிய நோக்கமே இப்பேரறிவின் நோக்கம்

12.

தான் அது அல்லாவிடில் தான் அதைத் தோற்றுவியாது, தோற்றுவிக்கவும் முடியாது என்பதால், முடித்தலும் விளவித்தலும் என்றவாறு இப் பிரபஞ்சத்தை தொழிற்படுத்தும் அதேப் பேரறிவு, நன்றேயான் தற்பண்பு உடைய ஒன்று என்றும் நாம் துணியலாம்.

13.

நன்றேயான ஒன்றிற்கு நன்றல்லால் ஒன்று தோன்றாது என்பதால், நன்றென்றும் தீதென்றும் ஒருங்கே கண்டறிந்து நன்றென தீதென இருவினைப்படும் அறிவு பேரறிவிற்கு வேறுபட்ட ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். இதனால் சிற்றுயிர்களாகிய ஆன்மாக்களும் எண்ணற்றன என்றும், அவை பாசம பந்தம் உடைய பசுக்கள் என்றும் அறிகின்றோம்.

13.1

நன்றேயாய் பேரறிவாகிய இறைவன் நிற்க, தீதென நிற்பதாக இந்த இறைவனுக்கு எதிராக, இறைவனையே மறுப்பதாக, பசுவிற்கும் இறைவனுக்கும் வேறாக ஓர் பொருள் இருக்க வேண்டும். அதுவே பாசங்களில் ஒன்னறாகிய மூலமலமாகிய ஆணவ மலம் என்பதாம்.

14.
நன்றென்ப தனைத்தும் இறைவனின் தற்பண்புகள். இன்னிலை என்பது இறைவனோடு இணங்கி நன்றேயாய் நிற்கின்ற நிலை. தீதென்ப தனைத்தும் ஆணவ மலம் என்பதால், வாழ்கையில் வரும் துன்நிலைகள் அனைத்தும் ஆன்மா இந்த மூல மலத்தொடு பந்தப் பட்டு அதற்கு ஆளாகி இருப்பதால் வருவது,

14.1

இறைவனோடு இணங்கி நன்றேயாய் நிற்கின்ற இகபர வாழ்க்கையே செம்மார்ந்த வாழ்க்கை, அத்தகைய வாழ்க்கைக்கு இட்டுச் செல்வதே திருநெறி, செந்நெறி சன்மார்க்கம். இதற்கு மாறாக மூலமலத் தாக்கத்திற்கு ஆளாக்கி தீய வழிகளில் சென்று அல்லற்பட வைப்பது துந்நெறி யாகும். பாவங்களையே செய்ய வைத்து துன்பங்களையே அனுபவிக்கத் தரும்

15.

சைவ சித்தாந்தம் காட்டும் நெறியே இச்செந்நெறி, உண்மையான சன்மார்க்கம். பிறவெல்லாம் ஆணவ மலம் உண்டெனக் கண்டு அதனின்று விலக வேண்டும் என்று வற்புறுத்தாதலின், பிழை நெறியாகும். இன்பமே எந்நாளும் மகிழத் தரும் பண்பு அந்நெறிகட்கு இல்லை

15.1

முடிவில் இந்த சைவ சன்மார்க்கமே பேரின்பமே புசிக்கத் தரும் வீடுபேறு அடையத் தந்து ஆன்மா அருளே வடிவாய் நிற்கவும் தந்து மீண்டும் பிறவாமையை ஈட்டித் தரும் என்பதாம் ஆணவ மலம் கண்டு அதன் தொடக்கிணை போக்கி சுத்தமாக வேண்டும் என்று போதிக்காத எந்த மார்க்கமும் சன்மார்க்கம் ஆகாது.


படலம் நாங்கு : இறைவடிவியல்

16.

எல்லா இறைவடிவங்களும் ஓர் வகையில் இறைவனது வெளிப்பாடுகளே. உண்மையான ஆனால் பகுதிப்பட்ட உலகியல் அறிவோடு மெய்யான இறையுணர்வும் கலந்திருக்கும் உள்ளத்தில் உதயமாகுவதே இறைப் பெருவடிவங்கள் ஆகும். பகுதி உலகறிவே வடிவப் பேதங்களுக்கு காரணமாக அமைகின்றது. உலகறிவினை நீக்கிவிடின். அஃதை கழன்று அகன்றுவிடின், உருவ அருவ சிந்தனைகட்கும் அப்பாற்பட்ட ஓர் தெளிவாய் தித்திப்பாய் தீதற்ற நித்தியமாய் இறைபொருள் விளங்கும். இஃதே இறைவனது அகளள நிலை-- அங்கு உருவ பேதங்கள் இல்லை- உருவங்களே இல்லை என்பதின்.

17.

பகுதிப்படு உலகியல் அறிவிற்கேற்ப பல்வேறு இறைவடிவங்கலள் உதிக்கின்றன. தானேயாய் உருவாகின்றன என்பதால் அவை கற்பனைகள் அல்ல--- அறிவின் தொழிற்பாட்டினால் அவை தோன்றுவதில்லை. அருளால் உளத்தில் ஒரு தருணத்தில் உதயமாக, அறிவு அதனை உணர்ந்து வெளியாக்குகின்றது.

17.1

இதனால் இறைவன் தன்னை பல்வேறு வடிவங்களில்,ஆன்மாக்களின் அறிவு நிலைக்கு ஏற்ப தன்னை வெளிப்படுத்தி அருளுகின்றான் என்பது மெய்யறிவாகின்றது. ‘ எவ்வாறு காண்பான் அறிவு தமக்கு எல்லை , அவ்வாறு அருள் செய்வன் ஆதி பாரபரன் தானும்’ என்பார் திருமூலர்

17.2

இதனால் ஓர் இறைவடிவம் தன்னுள் ஓர் ஆழமான மெய்ஞானத்தை அகப்படுத்தி நின்று அதனை ஒருவாறு ஆன்மாக்கள் கண்டறிந்து ஞான வளர்ச்சியை அடையவேண்டும் என்ற இறை போதகம் அங்கு உண்டு. இதுவே இறைவடிவப் பொருளியல் (Hermeneutic Semiotics) எனும் ஆய்வுத் துறையாகும்.

18.

வெளிப்படும் ஓர் இறைவடிவினை அல்லது தொடர்வுடைய வடிவ தொகுதியினை மையமாகக் கொண்டமைவதே ஓர் சமயமாகும். சைவம் வைணவம் சாக்தம் என்றெல்லாம் வருவது இதன் காரணமாகவே. இந்நிலையில் எவ்வடிவம் எவ்வகை ஆழமான ஞானத்தை உணர்த்தி நிற்கின்றதோ அதனை அறிய வேண்டும் என்ற முனைப்பு மழுங்க, இப்பேதங்கள் சமய வெறிகளாக மாறுகின்றன, பலவகைய பிணக்குகளும் வெடிக்கின்றன.

18.1

எல்லா இறைவடிவங்களையும் மதித்து தக்க முறையில் வணங்கித் தொழுது, உணர்த்தப்படும் பொருள்தான் என்ன என்று தக்க முறையில் விசாரித்து அறிந்து, அந்த வடிவங்களின் பிடியிலிருந்து கழன்று உயர்ந்து, இறைவனின் சகள நிலை விட்டு அகள நிலைக்கு உயர்வோர், சமயபேதங்களைப் போற்றாது சமரசமே போற்றுவர்.

19.

ஓர் இறைவடிவம் அல்லது தொடர்புடையத் தொகுதி உணர்த்தும் ஆழ் ஞானத்தின் சொல்லாக்கமே தத்துவக் கோட்பாடுகள் அல்லது தரிசனங்கள ஆகும். இறைவடிவங்கள் அல்லது தொகுதிகள் பலவென, தத்துவக் கோட்பாடுகளும் பலவாகின்றன. இவற்றையெல்லாம் தொகுத்து ஒருங்கே இணைத்து முழுதாக காணும் பொழுதே பழுதற்ற மெய்ஞானம் பிறக்கும்.

20

இங்கு ஒவ்வொரு தத்துவக் கோட்பாட்டையும் முழுதான மெய்ஞ்ஞான அடிப்படையில் தேர்ந்து யாது முழுதல்லவோ அதனை பரபக்கம் ஆக்கி, முழுதான மெய்யான ஞானத்தை சுபக்கமாக்குதலே சரியான தத்துவ முறையியல் ஆகும்.

20.1

இந்த பரந்த விரிந்த உலகில் சைவ சித்தாந்த திருநெறியே இவ்வாறான் முறையியலை கொண்ட தனிச் சிறப்பினை உடையது. இதனால்தான் தமிழச் சிந்தனை பாரம்பரியம் சிந்தனை சுதந்திரத்தை போற்றும் ஒன்றாக விளங்குகின்றது.


படலம் ஐந்து: சாதனாவியல் அல்லது கல்வியியல்

21

அறிவுகளைச் சூழ்ந்து மும்முமலங்களும் அதிலும் குறிப்பாக மூல மலமாகிய ஆணவ மலம் இருப்பதால். உயிரறிவு அணுத்துவப் பட்டு சிற்றறிவாகிறது. அறியாமையுடன் கூடிய ஒன்றாகிறது. பரத்துவம் எனும் இயல்பினை சுட்டாது அணுத்துவம் பெற்று அஞ்ஞான இருளால் அல்லற்படும் ஒன்றாய் ஆகின்றது. இந்த அஞ்ஞான இருள் முற்றிலும் நீங்கத்தான் ஆன்மாக்கள் அணுத்துவம் நீங்கி பரத்துவம் எய்தி மகிழும். அட்டமா சித்திகள் எனும் சித்திகளைப் பெற்று தானும் பேரறிவாகச் சுடரும். இறைவனோடு முற்றிலும் ஒத்துப் போய் நிற்கும்

21.1

அணுத்துவம் போக்கி சிற்றறிவினை பேரறிவாக்கும் இருள் நீக்கமே மெய்யான் கல்வி. கற்றல் முறையாகச் செல்கிறது என்பதை உணர்த்தும் அடையாளமாக அமைவது எண்சித்திகள் படிப்படியாக வந்து உரித்தாகுவதே. தொலைவிலுணர்தல் திரிகால ஞானம் கூடுவிட்டு கூடு பாய்தல், அதாவது இன்னொரு ஆன்மாவை உட்புகுந்து அதுவே தானாகி நின்று அதனை துல்லியமாக அறிவது போன்ற திறன்களை எடுத்துக்காட்டாக இங்கு கூறலாம்.

21.2

உறக்கனவுகள் விழிக் கனவுகள் என்பவற்றின் வழியாக தொலைவிலுணர்தல் எதிரது அறிதல் உட்புகுந்து உணர்தல் போன்றவற்றை மெய்யான சித்திகளின் முதற்படி என்று கூறலாம்.

22.

இருளை நீக்குவது அருட்பதிவு என்பதால், அருளின் பதிவே மெய்க் கல்வி. இந்த அருட்பதிவினை ஆன்மாக்கள் மாட்டு மெய்யாக்குவதே உண்மைச் சாதனங்கள் ஆகும்.

22.1

இந்த அருட் சத்தி உடம்பில் குண்டலினி சத்தியாக இருக்கின்றது. தக்க சாதனகங்கள் வழியாக அதனை எழுப்பி, மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கிச் செலச் செய்து உச்சிக் கமலம் அடையச் செய்து, ஆங்கு அமுதம் புசிக்க வைப்பதே எல்லா சமயங்களின் மெய்யான சாதனம். இதன் வழியே தான் முடிவான வீடுபேறு.

23.

அருளின் பதிவே இருள் நீக்கம் என்பதால், இந்த இருள் நீக்கமே மெய்யறிவினைத் தரும் சிறந்த கல்வி என்பதால், மெய்ச் சாதனங்கள் வழி வரும் சமய நெறி கற்றல் நெறியே.

24.

எந்த ஆதாரத்தில் குண்டலினி சத்தி எழும்பி செயல்படுகின்றதோ, அந்த ஆதாரத்திற்கு ஏற்ற முறையில் ஆன்மாவின் அறிவின் எல்லையுமாக, குணங்களும் ஒழுக்கங்களும் அமையும். இந்த ஆதார நிலைகளை தெளிவுபடுத்த உதவும் ஓர் கலையே ஆகமவுளவியலின் தருத் தேர்வு போன்றவை யாகும்


25.

ஒவ்வொரு ஆதார சக்கர நிலைக்கு ஏற்ப இறைவன் தன் சத்தியோடு அங்கு தோன்றி, அந்த ஆதார தலத்திற்கு ஏற்ற மந்திர வடிவங்களில் தோன்றி ஆன்மாக்களை ஆட்கொண்டு இரட்சிப்பான். உயிர்கள் இவ்வாறு தோன்றும் இறைவடிவங்களைத் தொழுது தான் அதுவாகி நின்று பின் கழன்று அதனின் மேலொரு ஆதாரத் தலம் சென்று ஆங்குள்ள இறைவடிவங்களைப் பற்றித் தொழுது ஒன்றாகி நின்று மகிழ்ந்து பின் கழன்று, இவ்வாறு தொடர்ந்து உயர உயரச் சென்று வளர்வது உலகில் காணவரும் உண்மை என்பதால் இறை வடிவங்கட்கு உயர்வு தாழ்வு கற்பிக்கப்படும். மூலாதாரத்திற்கு அண்மையில் இருப்பன கீழானவை. அதற்கும் கீழே இருப்பவை மரையான இறைவடிவங்கள் - மானுடர்கள் தெய்வமாக மதிக்கப்படுதல் போன்றவை. மூலத்திற்கு உயர்ந்த ஆதார சக்கரங்களில், இருப்பவை மேலான தெய்வங்கள். முடிவான திருசிற்றம்பபலத்தில் தனக்குத் தானே தலைவனாகிட தற்பர தரிசனம்

25.1

தனகுத் தானே தலைவனாய், எல்லா ஆதாரத் தலங்களுக்கும் தாரகமாய், ஆனால் அதேபொழுது அப்பாலாய், சங்கற்ப மாத்திரையால் திருநடம் புரிந்து ஐந்தொழில்கள் இயற்றி ஆன்மாக்கள் தான் காட்டும் தன பல வடிவங்களைக் கண்டு தன்போல் ஆகுமாறு வசித்து அருள்பாலிக்கும் பேரருளானனே பரசிவன்.

25.2

பரசிவனிற்கு மேம்பட்ட தெய்வம யாதுமில்லை. தன்னையேத் தான் தோற்றியும் மறைக்கவும் வல்லவன் அவன் ஒருவனே

26.
பரசிவ தரிசனம் அனுபவிக்கத் தருவதும் அதற்குத் துணையாக இருக்கக்கூடிய சாதனங்களே மெய்யான சாதனங்கள்.

26.1

இத்தகைய சாதங்களால் விளையும் ஞானத் தெளிவுகளே மெய்யுணர்வுகள் ஆகும்.

27.

எல்லா தத்துவங்களையும் கழன்ற நிலையே அருள்நிலை. அந்நிலையில் ஆவதே பரசிவ தரிசனம். அதனைக் கடத்தல் ஆகாது. பரசிவ தரிசனத்தோடு அகன்றிடும் அகற்சி முயற்சிகள் அனைத்தும்.

27.1

இதனாலேயே அத் தரிசனம் பரமுத்தி யாகின்றது.

28.

இறைவனின் பேரறிவோடு உயிர்களின் விரிவறிவு பேதப்படாது ஒன்றுதலால் இந்த பரசிவ தரிசனம். பொருளில் வேறாயினும் பேரறிவுத் தன்மையில் வேறில்லை. இதுவே சித்தாந்தம் கூறும் ஒருமை. இதுவே வேதாந்த அத்துவிதத்திற்கு வேறான சித்தாந்த அறிவத்துவிதம்-- அறிவில் ஒன்று, பொருளில் வேறு.

28.1

வேதாந்தம் பொருள் அத்துவிதம் கூறி இடர்பட சித்தாந்தம் அறிவத்துவிதம் கூறி சுடர்விடும்.

29.

உயிர்களின் வளரறிவு நதியினைப் போன்றது, இறைவனின் பேரறிவு கடலைப் போன்றது, நதி கடலிற்கலக்க பிரித்தறிய வாராதது போல, அறிவின் பரப்பிலே தன்மையிலே பண்பிலே ஆன்மா முத்தி நிலையில் இறைவனோடு ஒன்றாகின்றது, ஆன்மா தற்போதம் இழந்து இறைவனது பேரறிவே தன்னறிவாய் நின்றிலங்கி சிவத்தன்மையோடு விளங்குகின்றது. வெளியினின்று காண சிவமாகவேத் தோன்றும் ஆன்மா, உள்நிலையில் இறையருளாலேயே அந்நிலை எனவறிந்து இறைவனுக்கு யாண்டும் தொழும்பாகவே நிற்கும்.

30.

முத்தியில் ஆன்மாவின் பொருள்நிலை, சமட்டியாகிய பெருங்கடலில் யாங்கும் வியாபித்து நிற்கும் வியட்டியாகிய உப்பினைப் போன்றது. வளரறிவாய் வரும் ஆன்ம அறிவின் முடிவான நிலை இது,

முற்றும்




பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"https://marabuwiki.org/index.php?title=மெய்யறிவுச்_சிந்தனை&oldid=10871" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 24 ஏப்ரல் 2012, 07:11 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,741 முறைகள் அணுகப்பட்டது.