மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:022

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

திரும்பத் திரும்ப நான் வலியுறுத்துவது நம் பொதுப்புத்தியைத் தான். நாம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முன் தோன்றிய மூத்த குடி என்று நினைத்த போதெல்லாம் நம் பெருமையைச் சொல்வதில் எவ்வளவு அபத்தம் இருக்கிறதோ அவ்வளவு அபத்தம் நம் பொதுப் புத்தியைப் பயன்படுத்தாத நம் எல்லாச் சிந்தனைகளிலும் செயல்களிலும் இருக்கிறது. முதலில் நம் பெருமையைச் சொல்ல எல்லோரும் எடுத்து வீசும் இந்த கோஷமே ஒரு அபத்தம். நம் ஒவ்வொரு மடத்தனத்துக்கும் அலங்காரமான படாடோபமான தமிழில் ஒரு கோஷம் எப்போதும் தயாரித்து ரெடியாக வைத்துக் கொள்கிறோம் எடுத்து வீச. “அப்படீங்களா, இப்ப வரைக்கும் தெரியாம போச்சுங்களே, படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க சொல்றீங்க, அப்ப நிசமாத்தான் இருக்கணும், கேட்டுக்க வேண்டியது தான்” என்று ஒரு மடையன் வாய் பிளந்து விட்டானானால், உடனே அது மக்கள் குரலாகிவிடுகிறது. நாமும் கொண்டு வந்த மூட்டையை அவிழ்த்து, சரக்கு இங்கு விலை போகும் என்று படவே கடையைப் பரப்பிவிடுகிறோம்.


நம்ம புத்தி அப்படி. எந்த விதமான புதிய சிந்தனையும் புதிய நடைமுறையும் கைக்கு வந்ததும், இது விலை போகுமா? என்ற சந்தேகங்கள் நம்மை அரித்துக்கொண்டே இருக்கும். செய்ய மாட்டோம் சிந்திக்க மாட்டோம். பழைய பாதை, ஆகி வந்த பாதை, “மார்க்கெட்லே நல்லா போகுதுங்க” என்று சொல்லப்படும் சரக்கு தான் எப்போதும் எங்கும் எல்லா ரூபங்களிலும் வியாபித்திருக்கும். .. தனக்குச் சொல்ல, ஒன்று இருக்கிறது அதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு என்றுமே எதையுமே செய்தறியாத, மார்க்கெட்லே விலை போகிறது, நல்ல காசு பண்ணலாம் என்று எது தோன்றுகிறதோ அதைச் செய்யும் வியாபார மனது தான் சினிமாவில் அனைத்துத் துறைகளிலும் ஆட்சி செலுத்தும் மனம். இது இன்றைய கூத்து அல்ல. என்றுமே உள்ள கூத்து தான். இப்போது அது மிகவாக வலுவடைந்து, வேறு எப்படியும் சிந்திக்க வேண்டாதவாறு அதற்குக் கொள்கை, வெற்றி, கலை என்ற ஜரிகைத் தலைப்பாகை எல்லாம் சூட்டப்பட்டு அலங்காரமாக மேடையில் வீற்றிருக்கும் ஒன்று இது. யாரும் எந்த விதமான அடிப்படைக் கேள்விகளோ, வேறுபட்ட சிந்தனைகளோ எழுப்புவதில்லை. எழுவதில்லை.


ஆரம்பம் முதலே. 1891 லோ எப்பவோ லூமியேர் சகோதரர்கள் சலனப் படம் என்ற ஒரு புதிய தொழில் நுட்ப சாதனத்தைக் கண்டுபிடித்த போது, அவர்கள் அதைக் கொண்டு படம் பிடித்தது நீராவி என்ஜின் ஒன்று புகை கக்கிக் கொண்டு விரைந்து காமிராவை நோக்கி வருகிறது. அதாவது ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைகிறது. அதை முதலில் பார்த்தவர்கள் பயந்து ஓடினார்கள் என்பது செய்தி. இதே புதிய சாதனம் இந்தியாவுக்கு வந்த போது பட்கே எடுத்த முதல் படம் ராஜா ஹரீஷ் சந்திரா. மேடையில் நடிக்கப்பட்ட நாடகம். இது 1911-லோ என்னவோ நடந்தது. அதே தமிழ்நாட்டுக்கு வரும்போது எடுக்கப்பட்டதும் ஒரு நாடகம் தான். எம்.கே.தியாகராஜ பாகவதரும், எஸ்.டி. சுப்பலக்ஷ்மியும் சேர்ந்து பாடி நடித்த, நடித்துக்கொண்டிருந்த சக்கை போடு போட்ட நாடகமாக பிரபலமான, மக்கள் அபிமானததைப் பெற்று வியாபார ரீதியில் வெற்றி என்றும் பெருமை பெற்ற பவளக் கொடி என்ற நாடகம். அதிலும் அது சலனப் படமாகப் பிடிக்கப் படுவதற்காக தயாரிக்கப் பட்டதல்ல. தமிழ் நாடு பூராவும் சுற்றிப் பிரபலமாகிவிட்ட நாடக மேடைக் காட்சியையே அப்படியே படமெடுக்கப்பட்டது தான். ஒரு வம்பு தும்பு இல்லை. வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த நாடகத்தையே நாடக மேடை உருவிலேயே படம் எடுத்தார்கள். இப்படித்தான் ஒரு புதிய சாதனத்தை அதன் சாத்தியங்கள் என்ன, அது புதிதாக நமக்கு அளிக்க என்ன தனக்குள் கொண்டிருக்கிறது என்பது பற்றிய சிந்தனையே இல்லாமல், அப்படி எல்லாம் ஒன்றும் புதுசா செய்யலாமா வேண்டாமா என்று யோசித்து, முதல்லே விலை போகிறதைச் செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள் என்றும் சொல்லமுடியாது.


காமிரா இருக்கு. போட்டோ புடிச்சா மனுஷங்க நடக்கறதை, பேசறதை, அழுவறதைப் பாக்கலாம் கேட்க முடியாது தான். அது போதும். அதுவே புதுசு தான். லூமியேர் வாழ்க்கையின் ஒரு புதிய நாடகப் பண்பு மிகுந்த ஒரு காட்சியை அதன் சலனத்தைப் படம் பிடித்து புதிய பாதைகளைக் காட்டுகிறான். இங்கு நாம் அது நடந்து 30-40 வருடங்களுக்குப் பிறகு நடந்து கொண்டிருக்கும் பெயர் பெற்ற நாடகத்தைப் படம் பிடிக்கிறோம். அதாவது சொல்லப்படுவது, காட்சிப் படுத்தப் படுவது மாறவில்லை. அதன் வெளி வடிவம் மாறியிருக்கிறது. அதாவது அன்றாடம் நாம் பார்க்கும் முனியம்மாவுக்குப் புதிதாக உடை உடுத்தி மல்லிகா என்று பெயர் சூட்டி முன் நிறுத்தியிருக்கிறார்கள். அதே முனியம்மா தான். அப்பப்போ உடைதான் மாறும். பேரும் மாறும்.


வம்பு தும்பு இல்லாதது, கையைக் கடிக்காது, போட்ட பணம் திரும்பி வரும் என்ற குறைந்த பட்ச எதிர்பார்ப்பிலிருந்து மகத்தான வெற்றிப்படம் என்பது வரை எதிர்பார்ப்புகள் சிகரத்தைத் தொடும். எந்த சிந்தனை, அல்லது சிந்தனையின்மை முதல் படமாக பவளக்கொடி நாடகத்தை (சினிமா பாஷையில் – ப்ரூவ்டு சப்ஜெக்ட்) முதல் சலனப்படத்துக்குத் தேர்ந்ததோ அதே சிந்தனை தான் அடுத்து ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு புராணக் கதைகளே படமாக்கப்பட்ட. காரணம் கதாகாலட்சேபங்களில், நாடகங்களில், புராணக் கதைகள் ப்ரூவ்ட் சப்ஜெக்ட்.


ப்ரூவ்ட் சப்ஜெக்ட்!!! .இது போல இன்னும் சில வார்த்தைகள் அவ்வப்போது வரும் ஒரு காலத்தில் புழங்கிய இம்மாதிரி வார்த்தைகள் அடுத்த கட்டத்தில் புழங்காது. உதாரணங்கள்: சென்டிமெண்ட், நேடிவிடி, ப்ராஜெக்ட் இன்னோரன்ன, இவையெல்லாம் இப்போது வந்தவை. போகப் போக இவற்றைக் கற்றுக் கொள்வோம். ஒர் கால கட்டத்தில் ”அண்ணே” என்பது தமிழ் சினிமாவில் புழங்கிய பரிபாஷை. இப்போது சார் ஆகியிருக்கிறது. இன்றைய கால கட்டத்தில் ”அண்ணே”:க்கள் எல்லாம் வழக்கொழிந்த மொழி. அல்லது extinct species. சிம்பு கூட சார்-ஆக அந்தஸ்து உயர்ந்தாயிற்று. அந்தக் காலத்தில் வாலிக்கு சிவாஜி அண்ணே தான். இப்போது சிவாஜி மறைவுக்குப் பிறகு சிவாஜி கணேசனைப் பெயர் சொல்லாமல், ‘நடிகர் திலகம்” என்று தான் யாரும் சொல்ல வேண்டும். கருணாநிதியைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவது கருணாநிதியை மனம் வேதனைப் படுத்தும் பண்பாடற்ற செயல். அதை அவரே அடிக்கடி சொல்லி வேதனைப் பட்டிருக்கிறார். இங்கு கருணாநிதியை சினிமா ஆளுமையாகக் கணக்கிலெடுத்துத் தான் சொல்கிறேன். இங்கு அரசியல் பேசவில்லை. எப்படி சினிமா என்பதை இந்தத் தமிழ் சமூகம் புரிந்து கொள்ளாது, ஒரு நாடகமாக, அது கூடக் கலையாகப் பரிணமிக்கவில்லை. ஒரு தேர்ச்சியோ நயமோ அற்ற நாடகம் சினிமாவாகத் தொடர்கிறதோ, அப்படித்தான் இருநூறு முன்னூறு வருஷ நில பிரபுத்துவ மதிப்புகளும் வாழ்க்கையும் தான் தமிழ்சமூகத்தில் தொடர்கிறது. அது தான் சினிமாவிலும் அரசியலிலும் பரவியிருக்கிறது. மிக மோசமான ஒரு நிலப் பிரபுத்துவ மதிப்பும் வாழ்க்கையும். அரசியல் சினிமா இரண்டின் எல்லாக் கூறுகளையும் பார்க்கலாம். மலர்க் கிரீடம், பொன்னாடை, பட்டங்கள் மோகம், அர்த்தம் இழந்த அலங்கார வார்த்தைகள், தர்பார் சம்பிரதாயங்கள், இவையெல்லாம் சினிமா அரசியலாக, ,அரசியல் சினிமாவாக தோற்றத்திலும் உள்ளார்ந்த அர்த்தத்திலும் மாறி மாறி அவதாரம் எடுப்பதையும், சில சமயம் இரண்டு தோற்றங்களுமே ஒரே இடத்தில் சங்கமிப்பதையும் தமிழ் வாழ்க்கையில் பார்க்கலாம்.


அக்காலத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள் நாடக மேடையிலிருந்து வந்தவர்களாதலால் சினிமாவில் நடிப்பது வேறு, முற்றிலும் வேறு எனற எண்ணமே அவர்களுக்குத் தோன்றவில்லை. நடிகர்கள் மாத்திரமல்ல, இயக்குனர், பார்க்கும் மக்கள் எல்லோருக்குமே தான். நாடகத்தில் நடித்தது போல நடிப்பது தான் நடிப்பு என்று நினைத்தார்கள். அது போலவே கதை சொன்னார்கள். வசனங்கள் பேசினார்கள். நாடகத்தில் எழுதுவது போலவே உரத்த, அலங்கார, படாடோபமான, வசனங்கள் எழுதினார்கள். பேசினார்கள். அது கேட்கும் மக்களுக்கு அடுக்கு மொழி சுவைப்பது போல, அர்த்தமற்ற அலங்காரங்களைச் சுவைப்பது போல இதுவும் சுவையாக இருந்தது. புகழ் பெற்றது. சினிமா என்ற புதிய சாதனத்தைப் புரிந்து கொண்டிருந்தால், பவளக் கொடி வசனம் மாத்திரமல்ல, பின்னர் வந்த ஆர்ய மாலா, தூக்குத் தூக்கி, எதையெடுத்தாலும் சரி, எதுவும் மாறவில்லை. உதாரணத்துக்கு மந்திரி குமாரி, பராசக்தியிலிருந்து இன்றைய பொன்னர் சங்கர் வரை கருணாநிதியின் கதைபாணியோ வசனமோ அதன் குணத்தில் மாறாதிருப்பதைக் காணலாம். பொன்னர் சங்கர் நான் பார்க்கவில்லை. பார்ப்பேன் என்றோ, பார்க்க எனக்கு ஆவல் இருக்கும் என்றோ சொல்வதற்கில்லை. ஆனால் கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்தும் பத்திரிகை “தினகரன்” பொன்னர் சங்கர் படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்கிறது. அந்த விமர்சனம் தம் குடும்பப் படத்துக்கு எப்படி இருக்கணுமோ அப்படி இருந்தது. இருந்தாலும், அதில் கருணாநிதியின் வசனத்தை எடுத்துக்காட்டோடு பாராட்டுமுகமாக ஒரு சாம்பிள் வரி தந்திருந்தது.”ஆண்டவனுக்குப் படைக்கக் கொண்டு வரும் பிரசாதத்தை அர்ச்சகரே ருசி பார்ப்பதா?” இது அழகுபடுத்தியதற்கு உதாரணமாக இந்த வசனம் என்று சொல்லப்பட்டது. அவரது சமீபத்திய மூன்று நான்கு படங்கள் அவரது கதை வசனத்தில் வந்தனவே அவற்றிலிருந்து கொடுத்திருக்கலாம். நான் அவற்றின் துணுக்குகளையே பார்த்திருக்கிறேன்.


முழுப் படத்தையும் அல்ல. கருணாநிதியை நான் எடுத்துக்கொண்ட காரணம் அவர் தான் இந்த 60-70 கால நீட்சியில் தொடர்ந்து காணும் பெயர். ஆனால் இந்த நாடக பாணி, உயிர்த்துடிப்பில்லாத வசனம் என்பது தொடக்கத்திலிருந்தே இன்று வரை காண்பது. எனக்கு ஆர்ய மாலா வசனம் எழுதியது யார் என்று தெரியாது. சினிமாக் கதை வசனம் என்பது காட்சி ரூபமாக சொல்லப் படுவது, அதில் காட்சியும் பேச்சும் ஒன்றையொன்று தழுவி ஒரு முழுமை பெறுவது. வசனம் ஒரு பின்னமாகவும் காட்சி ஒரு பின்னமாகவும் ஒன்றிணைந்ததாக இருக்கவேண்டும். கருணாநிதிக்குப் புகழ் தந்த பராசக்தி வசனம் எல்லோருக்கும் தெரியும். நான் சொல்ல வேண்டியதில்லை. அது சினிமாவில் மாத்திரம் அல்ல கோர்ட்டிலும் கூட பொருந்தாதது. அது வெற்று வார்த்தை மழை. அது வாழ்க்கையுமல்ல.யாரோ அண்ணாதுரையின் ஆற்றலைப் புகழ்வதாக எண்ணிக்கொண்டு ஒரு விவரம் சொன்னார். ஒரே ராத்திரியில் உட்கார்ந்தவர் 200 பக்கங்களுக்கு கதையும் வசனமும் எழுதிக்கொடுத்தார்.அதில் ஒரு வரியைக் கூட எடுக்கவோ மாற்றவோ முடியாது என்று. அண்ணாதுரையும் தமிழ் நாட்டில் வழங்கும் நாடகங்களை ரசித்தவர் அந்த பாணியையே அலங்கார அடுக்குத் தமிழில் கொட்டியவர். அது வேறு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்,. சினிமா இல்லை. ஒரு கலைஞன் எழுதும் கதையுமல்ல. அவர் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட அரசியல் சமூக சீர்த்திருத்தக் கொள்கைப் பிரசாரத்தை மக்களைக் கவரும் வகையில் செய்தவராக இருக்கலாம். சினிமா இல்லை. அது போல கருணாநிதி என்ன, பெரும் புரட்சியைக் கொணர்ந்தவராக பாராட்டப்படும் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் எழுதுவதும் சினிமா இல்லை. அவருக்கும் சினிமா என்ற கலைச் சாதனத்துக்கும் ஒரு உறவும் கிடையாது. எல்லாம் வெவ்வேறு நாடக பாணிகள்.

வெங்கட் சாமிநாதன்

--Ksubashini 18:11, 26 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini, Geetha Sambasivam மற்றும் Na.Kannan

இப்பக்கம் கடைசியாக 11 ஆகஸ்ட் 2012, 14:05 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,536 முறைகள் அணுகப்பட்டது.