மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:020மரபு விக்கி இருந்து
இந்த விஷ வட்டத்திலிருந்து வெளியே ஒருவர் செயல் படுவது என்பது எழுபது வருட காலமாக நாம் வளர்த்து செழித்து இருக்கும் நிலையில் சாத்தியமில்லை. ஏனெனில் இந்தச் செயல் பாடுகளுக்கு ஒரே அளவுகோல் இன்னும் அதிக வருமானம், இன்னும் அதிக மக்களை எட்டுதல். எவ்வளவுக்கு எவ்வளவு அதிக வருமானத்தையும் மக்கள் தொகையையும் வேண்டுகிறோமோ அவ்வளவுக்கு நாம் தாழ்ந்து தான் போக வேண்டும். அது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை ஏனெனில் எவ்வளவு தாழ்ந்தாலும் அது வெற்றிப் படமாகிவிட்டால், அதோடு சமூக அந்தஸ்து, பணம், புகழ், அதிகார மையங்களின் நெருக்கம் எல்லாம் கிட்டி விடுகின்றன.
பாலசந்தரும், கமலஹாஸனும் தான் என்னவோ உலகத்தரமான படங்களைப் பார்ப்பதாகவும் தமிழ்த் திரைப்பட உலகில் இவர்கள் பெரிய மாற்றங்களையும், புரட்சியையும் சாதித்துவிட்டதாகவும் சொல்லிக்கொண்டாலும் அதை இந்தத் தமிழ் சமூகமும் அங்கீகரித்து விட்டாலும், அவர்கள் தமிழ் சினிமாவை சினிமாவாக மாற்றிவிடவில்லை. இன்னமும் அவர்களுக்கு அது சந்தைப் பொருள் தான். சந்தைக்கேற்ப தயாரிக்கும், தயாரிக்கப்படும் பொருள் தான். சந்தைக்காகத் தயாரிப்பது வேறு. தான் நினைத்ததைத் தயாரித்து அதைச் சந்தைக்கு எடுத்துச் செல்வது வேறு. இது வார்த்தைகளில் விளையாடும் சமாசாரமில்லை. இரண்டும் வேறு வேறு குணத்தவை. வேறு வேறு உலகைச் சார்ந்தவை.
இதைப் புரியவைப்பது கடினம். அவரவர்களாகத் தாமே புரிந்து கொண்டால் தான் உண்டு. நிஜமும் பாவனைகளும் ஒன்றே போலத் தான் தோன்றும். சார்ஜ் உள்ள பாட்டரியும் சார்ஜ் தீர்ந்த பாட்டரியும் ஒன்றே மாதிரித்தானே இருக்கும். ஒன்றில் உயிர் இருக்கும். மற்றது அதை இழந்தது. கவிதையும் அப்படித்தான். கவிதை போலவே இருக்கும் செய்யுளும். ஒன்று உணர்வுள்ளது. மற்றது வார்த்தைகளின் கூட்டம். பொய்யான சிரிப்புக்கும் ஆத்மார்த்தமாக மனம் மலர்வதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து தான் தெரிந்து கொள்ளவேண்டும். அதை நிரூபிக்க இயலாது. எல்லாம் ஒன்றே போல இருக்கும். சிவாஜி கணேசன் சினிமாவுக்கு வந்த போதே ஒரு அசிங்கமான, வார்த்தை வாந்தி பேதியுடன் தான் வந்தார். அதற்கேற்ற முக பாவங்களுடன். அது கலையல்ல. ஆபாசம் என்பது இன்று வரை புரிந்து கொள்ளப் படவில்லை என்று தான் தோன்றுகிறது. அதன் ஆட்சி இரண்டு தலைமுறைக்கு நீண்டு விட்டது. அந்த வார்த்தை வாந்தி பேதியும் அதோடு வந்த இது பேதி தான் என்று சொல்லும் முகபாவனையும் லட்சியமாயிற்று. சிகரமாயிற்று. அவர் திலகமும் ஆனார். இன்று அந்தப் புள்ளியிலிருந்து தள்ளி நகர்ந்து வந்துவிட்டாலும், அந்தத் திலகத்துக்கு ஆராதனையும் அபிஷேகங்களும் நிற்கவில்லை. இது சொல்வது என்ன? சிவாஜி மறைந்து விட்டாலும் அவர் பிரநிதித்துவப் படுத்திய உலகம் மறையவில்லை. அதெல்லாம் பிதற்றல் என்று சொல்லும் ஒரு ஜீவனை இன்றைய சினிமா உலகத்தில் காணமுடியாது. அந்தப் பீடத்திற்கு மலர் மாலை சார்த்துவது தொடர்கிறது.
இந்த ஒரு அசிங்கம், ஒரு பிதற்றலைப் பற்றியது இல்லை. வெவ்வேறு விதப் பிதற்றல்கள், அசிங்கங்கள் காலத்துக்கேற்ப சந்தையின் தேவைகளுக்கேற்பக் கண்டுபிடிக்கப்பட்டு அவையே விதிகளாகின்றன. அன்று சிவாஜி டான்ஸ் ஆட வைகை அணையோ உதகையோ போதுமாக இருந்தது. இன்று மச்சுபிச்சுவுக்குப் போகவேண்டியிருக்கிறது. சில விதிகள் மீறப் படாதவை. சினிமாவுக்காகக் கதைகள் தயாரிக்கப் படுகின்றன. கதைகளில் மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன. மிஷ்கினையே எடுத்துக் கொள்ளலாம். அவரது யுத்தம் செய் ஒரு தயாரிப்புக் கதை. சொந்தமாகத் தயாரித்தாரா, இல்லை கோகோ கோலா பெப்சி கோலா போல வெளிநாட்டு லைசன்ஸ் வாங்கி உள்ளூர்த் தண்ணி சேர்த்து தயாரிக்கப்பட்டதா என்று தெரியாது. அதில் வரும் எத்தனை திருப்பங்கள், எத்தனை வன்முறைக்காகக் கற்பிக்கப் பட்ட சம்பவங்கள், எந்த திருப்பத்தையாவது, எந்த பாத்திரத்தையாவது நாம் ஒரு தர்க்க ரீதியில் சிந்திக்க முடிகிறதா, அல்லது ஏற்க முடிகிறதா? எல்லாம் தயாரிப்பு. மனித மனம் இப்படியெல்லாம் திடீர் மாற்றங்கள் பெறுமா, பெறுமென்றால் அதற்கான பின்னணி இருக்க வேண்டும். அதெல்லாம் இல்லாது, அர்த்தமற்ற திடீர்த் திருப்பங்களும், திடீர் மனித மன மாற்றங்களும், வலிந்து புகுத்தப்படும் சம்பவங்களும், அந்தச் சம்பவங்களின் கோரமும், ஏதோ ஒரு எஃபெக்ட்டுக்காக தயாரிக்கப்பட்டவையாகவே தோன்றுகின்றன. டாப் ஆங்கில் ஷாட் மாதிரி. சிலையாக நெடு நேரம் நிற்பது மாதிரி.
யுத்தம் செய் படத்தில் தெருக்காட்சிகள் சில வருகின்றன. ஒரு தெருக்காட்சி கூட அதன் இயல்பில் நாம் நம்பத்தகுந்த வகையில் இருக்கவில்லை. நாலைந்து பேரை ”நீ இந்தக் கோடியிலிருந்து அந்த முனைக்கு நடந்து போ. அங்கேயிருந்து இந்த முனைக்கு மூணு பேர் நடந்து போகட்டும்,” என்று சொல்லி நடக்க வைத்தது மாதிரிதான் இருக்கிறது. ஒரு ஜீவன் கூட, ஒருத்தர் நடை கூட இயல்பாக, இல்லை. எல்லாம் சொல்லி நடக்க வைத்தது. மாதிரி தான். சேரன் தலையைக் குனிந்து கொண்டு விரைப்பாக நிற்கிறாரே, அதுவும் மிஷ்கினின் புகழ் பெற்ற இயக்கம் போலத் தான் தெருக்காட்சிகளும். அந்தக் காலத்தில் முப்பது நாற்பதுகளில் இப்படித்தான் ஸ்டுடியோக்குள் அமைத்திருக்கும் தெருக் காட்சியில் எதிரும் புதிருமாகச் சிலரை நடக்க வைப்பார்கள். அதிலிருந்து கொஞ்சம் கூட இயக்குனர்களின் தொழில் திறன் வளரவில்லை. தெருவில் நடக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை இருக்கும். மனதில் என்னவோ ஒடிக்கொண்டிருக்கும். அவரது உடை வேறுபட்டிருக்கும். நடை ஒவ்வொருவருக்கும் அவரவரது அவசரத்தை மன நிலையைப் பொறுத்து மாறும். ஒவ்வொருவரும் தனித் தனி ஜீவன்கள். அவரவர் கவலைகள். சிந்தனைகள். உத்பல் தத்தின் நாடக மேடையில் கூட மனிதர்கள் கூட்டமாகக் காணும் காட்சிகள் ஒவ்வொரு மனிதனையும் தனித் தனி தோற்றங்களில் தனித் தனி பாவனைகளில் காணாமுடிந்திருக்கிறது. முப்பது பேர் முப்பது விதமாக இருப்பார்கள் முப்பது பாவனைகளின் செயல் தோற்றங்களில் இருப்பார்கள். நாடக மேடையில் பார்வையாளர்களுக்குக் கூட்டம் தான் தெரிய வேண்டுமே ஒழிய முப்பது தனி மனிதர்களை அல்ல என்று உத்பல் தத் நினைப்பதில்லை. பார்வையாளர்கள் கவனிக்கிறார்களோ இல்லையோ, நடப்பு வாழ்க்கையில் முப்பது பேர் ஒரு கூட்டத்தில் கூட முப்பது விதமாகத் தான் காட்சி தருவார்கள் என்ற நினைப்பில் உத்பல் தத் தன் நடிகர்களுக்குப் பயிற்சி தருவார்.
ஜெயகாந்தன் உன்னைப் போல் ஒருவன் திரையிட்டிருந்த சமயம். தில்லியில் ஒரு நாள் ஒரு காட்சி திரையிட்ட போது வந்திருந்தார். 1963 – 1964 ஏதோ ஒரு வருடம்,. சரியாக நினைவில் இல்லை. அந்தச் சின்னப் பையன் பெரியவரின் முன் நின்று கொண்டிருக்கிறான். தனித்து விடப்பட்ட பையன். அவனை ஆதரிக்கும் பெரியவர். அவர் ஏதோ சொல்கிறார். இவன் அமைதியாக நின்று கேட்டுக்கொண்டிருக்கிறான். மிக நன்றாக வந்திருக்கிறது அந்தக் காட்சி. பையன் அழவில்லை. நீண்ட வசனம் பேசவில்லை கத்திக் கதறவில்லை. என்று பேசிக் கொண்டிருக்கும் போது ஜெயகாந்தன் சொன்னார். சின்னப் பையன் எப்படித் தன் உணர்ச்சிகளை முகத்தில் காட்டுவான்? ஆதலால் அவனை “நீ சும்மா தலையைக் குனிந்து கொண்டு நில்லு போதும்..” என்று சொன்னோம். பையனைப் பின்னாலிருந்து ஷாட் எடுத்தாலே போதும் அதுவே எல்லாம் சொல்லி விடும் என்று நினைத்தோம்” என்று சொன்னார். நமக்கு அனேக சமயம் சில சௌகரியக் குறைவுகளே, சில வசதிகள் இல்லாது அதை நிரப்பச் செய்யும் நிர்ப்பந்தங்களே புதிய முயற்சிகளைத் தோற்றுவித்துவிடுகின்றன.
அப்போது பேச்சின் இடையில் ஒரு விஷயம் வந்தது. ஒருவர் சொன்னார், ஸ்ரீதர் தன் படத்தில் ஒரு நோயாளி படுத்திருக்கும் ஷாட்டுக்காக ஒரு ஆஸ்பத்திரிக்கே சென்று காட்சி அமைத்ததாகச் சொல்லியிருக்கிறார். புதுமை இயக்குனர் ஸ்ரீதர் எவ்வளவு யதார்த்ததுக்கு முயன்று இருக்கிறார் என்பதைச் சொல்ல அந்த சம்பவம் சொல்லப்பட்டது “ஜெமினி கணேசன் இரவில் நிலாவைப் பார்த்துக்கொண்டே வாராயோ வெண்ணிலாவே, கேளாயோ என் கதையை….” என்று பாடுவது நினவுக்கு வந்தது….” எவ்வளவு யதார்த்தம் என்று வியப்போடு நினைத்துக் கொண்டேன். ”அதற்கு ஜெயகாந்தன் உடனே சொன்னது, “ ஆமாம், ஏன்யா, உங்க வீட்டு அறையில் ஒரு மூலையிலே ஒரு கட்டிலைப் போட்டு அந்த ஆளைப் படுக்க வைத்து எடுத்தா பத்தாதா? ஒரு ஆஸ்பத்திரியையே வாடகைக்கு எடுத்து என்ன அதிகம் சாதிச்சிருக்காங்க. எதுக்கு எவ்வளவு தேவைங்கிறதை யோசிக்கறதில்லையா. பணம் இருக்கு. செலவழிக்கிறாங்க.” என்றார்.
நேற்று பார்த்த ஒரு இரானிய படம். ஜாஃபர் பனாஹியினது. சர்க்கிள். அதில் ஒரு இளம் பெண். கர்ப்பமாக இருக்கிறாள். கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும். தனக்குத் தெரிந்த ஒரு நர்ஸ் வேலை செய்யும் ஆஸ்பத்திரிக்குப் போகிறாள். ஆனால் அந்த நர்ஸ் உதவி செய்ய மறுத்துவிடுகிறாள். உதவ எண்ணமில்லை என்றல்ல. அது பெரிய ஆபத்தில் வந்து முடியும். என்ற காரணத்தால். அந்தப் பெண் ஆஸ்பத்திரிக்குள் கழிக்கும் சுமார் 20 நிமிடக் காட்சியை, அந்த ஆஸ்பத்திரியின் சூழல் முழவதையும் சிருஷ்டித்து இயக்கியிருக்கும் திறன் வியக்க வைக்கிறது. நம் சினிமாத் திரையில் ஏன் ஹிந்தி சினிமாத் திரையில் கூட 20 நிமிடம் என்ன, ஒரு மின் வெட்டில் தோன்றி மறையும் காட்சியாகக் கூட அந்த மாதிரியான காட்சி அமைப்பும் சுற்றிக் காணும் ஆஸ்பத்திரியின் சூழல் நடவடிக்கைகள் எவ்வளவு இயற்கையா உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். எவ்வளவு ஏற்பாடுகள், தொழில் திறன், அதற்கு வேண்டும். ஜாஃபர் பனாஹியின் ஒவ்வொரு படமும் இத்தகைய சூழலை உருவாக்குவதில் ஒரு சிகர சாதனையே நம் முன் நிறுத்தி விடுகிறார். அந்தப் பெண் கவலையுடன், பதற்றத்துடன் அலையும் ஒரு பஸ் ஸ்டாண்ட் காட்சியும்,கூடத்தான். அதுவும் 10-15 நிமிடங்களுக்கு நீள்கிறது. வெங்கட் சாமிநாதன் --Ksubashini 22:02, 11 நவம்பர் 2011 (UTC) |