மெய்கண்டாரின் அநாதிப் பொருளியல் - 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

மெய்கண்டாரின் அநாதி பொருளியல-2
முனைவர் கி. லோகநாதன், 15-7-12


12.0
மாயா மலத்துண்மை


இதுவரை அநாதிபொருளியலில் மெய்கண்டார் எவ்வாறு பதியுண்மையை பசுவுண்மையை மற்றும் பாசங்களில் முதலாகிய ஆணவ மலதுண்மையையும் அது எவ்வாறு இறைவனை பற்றாது அவனை நிமலனாக்கி ஆன்மாவை அநாதியேப் பற்றி அவனை சமலனாக்கியுள்ளது என்று கண்டோம். இவை அனைத்தும் அழிவிலுண்மைகள்--- அனைவரும் உடன்படுமாறு நூலிய அறிவியல் முறையில் காண்டிகைப் படுத்தப்பட்ட உண்மைகள். இனி அடுத்ததாக நாம் விசாரிக்க இருப்பது எவ்வாறு மெய்கண்டார் தனக்குரிய அந்த நூலிய அறிவியல் முறையில் மாயா மலத்துண்மையை நிறுத்thuகின்றார் என்பதே யாகும். இது மூன்றாம் சூத்திரத்திலும் நான்காம் சூத்திரத்திலும் காணக் கிடக்கின்றது.
மூன்றாம் சூத்திரம் இவ்வாறு செல்லும்:
>>>
சூத்திரம் 3:
உளது; இலது என்றலின்; எனது உடல் என்றலின்; ஐம்புலன் (அறிதலின்; ) ஒடுக்கம் அறிதலின்; கண்படில் உண்டிவினை இன்மையின்; உணர்த்த உணர்தலின்; மாயா வியந்திரத் தனுவில் ஆன்மா


நோக்கு: என் நுதலிற்றோவெனின், ஆன்மப் பிரகாசம் உணர்த்துதல் நுதலிற்று
>>>>
இதன்வழி அநாதிப்பொருளாக ஆன்மா உண்டோ இலையோ என்ற கேள்வி இங்கில்லை; ஆன்மாவின் பிரபஞ்சச் செலவில் இறைவனோடு இசைந்த வாழ்க்கையொடு மாயையோடு இசைந்த வாழ்க்கையும் அடங்கும்; அவ்வாறு அடங்கும் போதும் ஆங்கு ஆன்மா தனித்தவொன்றாகவே விளங்குகின்ற பேருண்மையை, பிரமாணத்தை உணர்த்துதல் நுதலிற்று இச்சூத்திரம் என்பதாம்.
இனி இச்சூத்திரத்தின் பொருள் இனிதே விளங்க, அதனை" மாயா இயந்திரத் தனுவில் ஆன்மா உளது, ஏனெனில் , இலது என்றலின், எனது உடல் என்றலின், ஐம்புலன் அறிதலின், ஒடுக்கம் அறிதலின், கண்படில் உண்டிவினை இன்மையின், உணர்த்த உணர்தலின்" என்றவாறு கொண்டு இங்கு பொருள் விளக்கம் தரப்படும்.
ஆன்மா தனித்த ஓர் பொருள், அது தேகம் அல்ல, மந்திரங்களின், தொகுப்பு அல்ல, உணர்வின் ஓட்டம் அல்ல, மனம் புத்தி போன்ற அந்தகரணங்களில் ஒன்றோ அல்லது அவற்றின் தொகுதியோ அல்ல என்றெல்லாம் கூறி. மாயா இயந்திரத் தனுவாகிய உடம்பில் இருந்தாலும் அது தனித்த ஓர் சித்துப் பொருளே என்கின்றார் மெய்கண்டார்.
12.1
ஒவ்வொரு உடலிலும் ஓர் ஆன்மா
இந்த மூன்றாம் சூத்திரத்தில் மிகவும் முக்கியமான காண்டிகை ஆறாம் படிமெய்யில் வருகின்றது. அங்குதான் ஆன்மாக்கள் ஒன்றல்ல, ஒரே பரபிரமத்தின் வெவேறு பிரதிபிம்பங்கள் அல்ல, ஒவ்வொரு உடலிலும் ஓர் தனி ஆன்மா எனவே எண்ணிறந்த ஆன்மாக்கள் உண்டு என்பதை நிறுத்துகின்றார்.
>>>>>
ஆறாம் படிமெய்

மேற்கோள்: இனி (வெவ்வேறாய் உடல்களில்) ஆன்மா உளது என்றது
ஏது: உணர்த்த உணர்தலின்
பொழிப்புரை: அவன் அறிந்தாங்கு அறிவன் என்று அறிவிக்க அறிந்து உபதேசியாய் நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.
>>>>>
விளக்கம்:
உலகில் கற்றலாகிய அறியாமை நீக்கம் நடந்துகொண்டே இருக்கின்றது. இதனால் பல்வேறு போதனைகளும் நடந்துகொண்டே இருக்கின்றது. ஒரேவோர் ஆன்மாதான் எல்லா உடல்களிலும் இருக்கின்றது, உடலால் எழும் உபாதிகளால்தான் ஆன்மா வெவ்வேறாகப் படுகின்றது எனில், ஓர் ஆன்மா கற்று அறியாமை போக்கி ஞானத் தெளிவு உற, அது எல்லா ஆன்மாக்கள் மாட்டும் சென்றடையவேண்டும், ஆயினும் அப்படிக் காண்கிலோம். கற்று ஞானத்தெளிவடைவது ஓர் ஆன்மாவின் முயற்சியை ஒட்டி அமைய, ஓர் ஆன்மா இதன்வழி அதிகத் தெளிவு பெற்று ஞானவகையில் பிற ஆன்மாக்களோடு ஒப்ப பக்குவத்தில் உயர்ந்து நிற்க, அதுபொழுது இவ்வாறு உயர்ந்தோன் போதிக்க இவ்வகையில் தாழ்ந்தோன் ஒருவன் அவனிடமிருந்து கற்கின்றான். மக்களிடையே அறிவித்து போதித்தலும், அறிவிக்க அறிந்து கற்று மலம் போக்கலும் நடந்துகொண்டே இருக்க, இது ஆறறிவு அற்ற உயிரினங்களிடையே கூட காணப்படுவதாக இருக்க, இவ்வாறு போதிப்பதாயும் பிறகு இன்னோரிடத்தில் இன்னொருவன் போதிக்க கற்பதாயும் அறிவு நிகழ்ச்சிகள் மெய்யாகி நிற்பதால், ஒவ்வொரு உடலிலும் தனித்தனி ஆன்மாக்கள் உண்டென்கிறார் மெய்கண்டார் இங்கு.

இந்த சூத்திரத்தின் கடைசி படிமெய் தனிச் சிறப்புடையது. அதனை காண்டிகைப் படுத்தும் போது கீழே வரும் எடுத்துக்காட்டு தரப்படுகின்றது.
>>>>>
எடுத்துக்காட்டு 3.7.1
கலையாதி மண் அந்தம் காணில் அவை மாயை
நிலையாவாம் தீபமே போல் -- அலையாமல்
ஞானத்தை முன்னுணர்ந்து நாடில் , அத்தனுவாந்
தானத்தில் வேறாகும் தான்

இதன் பொருள்;
கலையாதி மண் அந்தம் காணில் அவை மாயை, நிலையாவாம் தீபமே போல்:
கலை என்பது மூலமாயையின் பல்வேறு திரிபுகளாம், பரிணாம வடிவங்களாம். பிரதிட்டா கலை, நிவிர்த்தி கலை, வித்தியாகலை, சாந்தி கலை சந்தியாதீத கலை என்றவாறு மூலமாயை விரிந்து நின்று உலகத்து எல்லாப் பொருட்களுமாய் நிற்கும். இப்படிப்பட்ட கலைகள் முதல், மண் ஈறாக கற்பனைபோக்கி உள்ளவாக் காணும்போது , இவை மூல மாயையின் திரிபுகளாகவும் மேலும் , தீபமேபோல் அறியாமை இருளைக் கிழித்து அறிவினை ஒருவாறு கண்டறிய உதவுமெனினும், மாறி மாறி அத்தீபமேபோல் தோன்றி நின்று அழியக்கூடிய நிலையற்ற பொருள்களாகும்.
காலவுணர்வுடனேயே இந்தக் கலைகளால் வரும் அறிவெலாம் என்பதால் இஃது. குறிப்பறிவாக குறிப்புக்காலவுணர்வோடும், சுட்டறிவாக சுட்டுக்காலவுணர்வோடும் , இவற்றால் ஆகும் அறிவெலாம் என, அவை நிலயற்றதாயிற்று.
அலையாமல் ஞானத்தை முன்னுணர்ந்து நாடில்:
இவ்வாறு மாறி மாறி தோன்றியவாறு மூவினைப்பட்டேச் செல்லும் இந்த மாயாகாரியத் தொகுதியோடு பந்தப்பட்டு அவை அலையுமாபோல் அலையாது; முன்னும் ஒருவாறு அறிந்திருப்பதாய் ஆயினும் வேண்டிய தெளிவின்றி கிடப்பதாகிய சிவஞானத்தை யாதென்று இன்னும் தெளிய;
அத்தனுவாந் தானத்தின் வேறாகும் தான்:
வாழ்வதற்கு ஓர் இரூப்பிடமாகவும் அல்லது தானமாகவும், அதுபொழுது அதனோடு ஒட்டிநின்று அறிய பல்வேறு அசத்தறிவுகளையேத் தருவதாகவும் இரூக்கும் அத்தனுவினின்று , காலத் தொடக்கற்று யாண்டும் சலிப்பிலாது மாற்றமிலாது நிற்கும் சிவஞானம் யாதென்று விசாரித்தவாறு நிற்கும் தானாகிய ஆன்மா அதனின்று வேறு என்பதை உணர்தல் வேண்டும் என்பதாம்.

மாயையைத் திரித்து பல்வேறு மந்திரங்களால் அதனைக் கட்டி, பற்பல செயல்களை செய்வதற்கு உறுதுணையாக யந்திரங்கள் பலவற்றைக் கொண்டிருக்கும் தனுவாகிய இவ்வுடல், அசத்தறிவுகளை பெறுவதற்கே ஏதுவாய் நிற்பது. மேலும் மூவினைப்படுந் திறத்தால் அவற்றைப் பற்றி எழும் அறிவெலாம் காலவுணர்வோடும் வரும் பேற்றில் அசத்தறிவுகளேயாம். தீபங்களைப் போல ஒளிர்ந்து பிறகு மாறுவதும் இல்லாது போவதும் செய்யும். ஆன்மாக்கள் அவற்றோடு உடங்கியைந்து நிற்க அப்படிப்பட்ட அசத்தறிவுகளையேப் பெற்று, ஆகவே தானும் அந்த மாயாகாரியங்களில் ஒன்றென நினைக்கவும் செய்யும். ஆயினும் ஏற்கனவே தெளிவற்றவொன்றாய், இப்பொழுது அகத்தில் புதைக்கப்ப்ட்டு கிடப்பதாய் இருக்கின்ற சத்துமின்றிய அசத்துமின்றிய சிவசத்தாக விளங்கும் சிவஞானத்தைத் தெளிவதே தன் ஆய்வின் நோக்கெல்லாம் என்று ஒர் ஆன்மா அறியும்போது, தான் இதனை நோக்கிச் செல்லும் அச்சிறப்பால், அந்த மாயாத் தனுவோடு ஒட்டியவாறு இருந்தும் அதனின்று சித்தாகியத் தான் வேறு என்று உணரும் என்றவாறு.
முன்னுணர்வாக ஏற்கெனவே அகத்தேக் கிடக்கும் சிவஞானத்தை இன்னும் இன்னும் தெளிவதற்கு உழைக்கும் ஒரு சித்துபொருளே தான் என உணர, தான் அறியாமையில் கிடக்கின்றோம் என்றும், அந்த அறியாமையின் காரணமாக இதுவரை மாயாமல பந்தத்தில் கிடந்து, சித்தாகியத் தன்னை அசித்தாகக் கருதி வாழ்ந்துள்ளோம் என்று உணர்ந்து அந்த மாயாமல பந்தத்தைத் துமிக்கும் என்றுமாம். மாயாகாரியப்பொருட்களோடு மயங்கிக் கிடந்து ஞானசொரூபனாகிய தன்னின் சொரூபத்தை உணராது மயங்கிக் கிடத்தலே மாயாமலபந்தம் என்று இதனால் தெளிவாக்கப்படுகின்றது.
12.2
முத்தி முன்னறிவு


ஆன்மாவிற்கு முத்தி முன்னறிவு உண்டு. எத்தனையோ பிறப்புகள் எடுத்தாலும் பக்குவத்தில் உயர்ந்து மானிடப் பிறப்பு எடுக்கும்போது, யாதோ ஓர் வகையில் இந்த முத்தியைப் பற்றிய முன்னறிவு இருக்கத்தான் உள்ளுணர்வாக உணர்ந்து ஓர் வகைய சமய வாழ்க்கையில் நாட்டம் கொள்கின்றது. இந்த முன்னறிவே அதன் தனிச் சிறப்பாக அமைய, அது மாயா எந்திரத் தனுவாகிய இவ்வுடம்பில் அசித்தாகிய இவ்வுடம்பில் இசைந்து பற்பலக் கற்றுக்கொண்டே அதன் வழி ஞானம் வளர்த்துகொண்டே வீடுபேற்றை நோக்கிச் செல்லும் ஓர் சித்துப்பொருள் ஆகின்றது.
இந்த முத்தி முன்னறிவே ஆன்மாவை இறைவனிடமிருந்து வேறுபடுத்துவதோடு, உடம்பின் மூலப்பொருட்களாகிய சுத்த அசுத்த மாயை என்பவற்றிலிருந்து வேறுபடுத்தியும் அதேபொழுது அவையின்றி உயிர்க்க முடியாத ஒன்றுமாக ஆன்மாவின் இயல்பு காண்டிகையாகின்றது. இந்த மாயைகளினால் வருகின்ற அறிவுகளும் உண்ரவுகளும் தீபமே போல ஒன்றைக் காட்டி அழிந்துபோக, அழியாத ஒன்றாக இந்த முத்தி வேட்கை அதனின் முத்தி முன்னறிவு இருக்க, அதுவே ஆன்ம தனித்த ஓர் பொருள் என்று காட்டுவதோடு அநாதி என்றும், எண்ணற்ற வெவ்வேறு ஆன்மாக்கள் உண்டென்றும் காட்டி நிற்கின்றது.
இயலிய நூனெறி செல்லாத ஐரோப்பியர்களும் பிறரும் இதனைக் கண்டு காண்டிகை படுத்தமுடியாது சமய வாழ்க்கையை ஓர் அறிவியல் துறையைச் சார்ந்த ஒன்றாக அவர்களால் காணமுடியாது போய் இன்றளவு ஞானக் குருடுகளாகவே இருக்கின்றனர்.
13.0
காட்டல் காணல் கற்றல்
இதுவரை எவ்வாறு மெய்கண்டார் தமது ஏரணவீயத்தின் வழி ஆழமான உள்ளுணர்வாக திருமூலரால் மொழியப் பட்ட பதி பசு பாசம் அநாதி எனும் அநாதிபொருளியலில், பதியினைப் போல் பசுக்களும் அநாதி என்பதொடு பாசங்களில் ஆணவ மலமும் மாயா மலமும் அநாதி என்று காட்டியுள்ளார் என்பதை விளக்கியுள்ளோம். இனி அடுத்ததாக காட்ட விருப்பது கன்மமும் அநாதி என்பதே. எவ்வாறு இதனைக் காட்டுகின்றார்?
இதன் முதல் படியாக ஆன்மாக்கள் இறைவன் காட்டத்தான் தாம் காண்கின்றன என்பதொடு இந்தக் காணலே கற்றலும் ஆகிட, அதன் வழியே தான் கன்ம ஈட்டமும் அதன் நீக்கமும் நடைபெருகின்றன என்பதை அவர் எவ்வாறு காண்டிகை படுத்துகின்றார் என்பதைக் காண்போம்
இது தொடர்பாக மேலே விரிக்கப்பட்ட நாங்காம் சூத்திரத்தின் இரண்டாம் படிமெய்யக்கு ஓர் எடுத்துக்காட்டாக வரும் ஓர் வெண்பாவைக் காண்போம்.
>>>>
இரண்டாம் படிமெய்
மேற்கோள்: இனி, இவ்வான்மா சகச மலத்தினால் உணர்வு இன்று என்றது.
ஏது: அதுதான் ஞான திரோதமாய் மறைத்துக்கொடு நிற்றலான்.
எடுத்துக்காட்டு 4.2.1

மாயாதநு விளக்காம் மற்று உள்ளங் காணாதேல்
ஆயாதாம் ஒன்றை அது அதுவாய் -- வீயாத
வன்னிதனைத் தன்னுள் மறைத்து ஒன்றாங் காட்டம்போல்
தன்னை மலம் அன்று அணைதல் தான்.

இதன் பொருள்:
மாயாதநு விளக்காம்:

மேலே மாயாமலத் தொந்தனையால், அநாதிபொருளாகிய மூலமாயையொடு பந்தித்து தக்கவோர் மாயாவியந்திரத் தநுவை ஆன்மா உடலாகப் பெற்று வாழும்போது, அவ்வுடல் தன்னியல்பின் காரணமாக மறைபோக்கி பற்பலவற்றை விளக்கென காட்டி நிற்கும்.
இது எவ்வாறெனில், ஆன்மாவிற்கு அதன் பக்குவத்திற்கு ஏற்ப ஓர் உடல் அமைய, அந்த உடலில் அந்த ஆன்மா தொடர்ந்து இனிதே வாழ அதற்குத் தக ஒரு புவனமும் ( an ecological reality) அமைகின்றது. மேலும் அந்த புவனத்தில் பற்பலச் செய்து உணவு, உறையுள் போன்ற உயிர் வாழ்தற்குத் தேவையான அடிப்படைகளை ஈட்டிக்கொள்ள , யந்திரங்கள் நின்று செயல்படும் பல கரணங்களும் உண்டு. இவை புறக்கரணங்கள் என்றும் அந்தகரணங்கள் என்றும், அவற்றைச் செலுத்தும் கலையாதிகள் உள்ளந்தகரணங்கள் என்றும் பலவாகும். மேலும் மந்திரயந்திர சொரூபங்களே மாயையைத் திரித்து இவ்வாறெல்லாம் விளங்குவதென்ன, ஆங்கே அவற்றை அதிட்டித்து நிற்கும் தெய்வங்களும் உண்டென, ஆன்மா கண்டு அறியுமாபோல் இவை ஒன்றினைக் காட்டி அருளுவதால், இவ்வுடல் விளக்கு எனப்பட்டது என்பதாம்.

மற்று உளங் காணாதேல்:

இவ்வாறு ஒரு யந்திரத் தனுவாக அமையும் உடலைக் கொண்டு அதற்கேற்ப அமையும் புவனத்து விடயங்களை கரணங்கள் வழி கண்டு, நூலியப் பார்வையும் தேற்றி இரட்டுரு உடைய நூலெனக் கண்டு காணவரும் புறுவுருவிற்கும் நிமித்த காரணமூலமாய் ஒரு புதையுரு மறைவாக இருப்பதைக் காணாதேல், பிறகு பொறிலியப் பார்வைக்கும் அதனை ஆளாக்கி மெய்யாதென்று அறிய முனையாதேல்;

ஆயாதாம் ஒன்றை அது அதுவாய்:

இயலிய நூனெறி வழாது நூலென நூலியப் பார்வைக்குப் படும் ஒன்றை அப்பார்வை வழியும் பிறகு பொறிலியப் பார்வை வழியும் ஆயாது போம் என்றவாறு.

'அது அதுவாய்" ஒன்றினை ஆய்தல் என்பது, அதுவென ஒன்றினை சுட்டியறியும்போதும் அல்லது குறித்து நிற்கும்போதும், அப்பொருள் தன்னை எவ்வாறு காட்டி நிற்கின்றதோ அவ்வாறே பிழையின்றி தற்போத சேட்டைகளை எல்லாம் ஒடுக்கி பொருளோடு அதுவேத் தானாகி நின்று இயலியமாக (as it discloses itself from within itself) அறிவதாகும். இங்கேயே "வினையின் நீங்கி விளங்கிய அறிவு" சனிக்கும். இதற்குப் புறம்பாக பிராந்தி ஞானம், விபரீதவுணர்வு, மித்தியாவறிவு (misperceptions, distortions, illusions, delusions etc) போன்ற இவை சித்தப்பிரமையால். மனக்கலக்கத்தால், பெரும்பீதியால், விரக்தியால், உளத்தடிப்பால், மதவெறியால் இன்னும் இதனைப் போன்ற பிற அறிவின் பிறழ்ச்சி நிலைகளால் வருவனவாம். இங்கேயே ஆரோபிதங்கள்( imaginative projections) அத்தியாசங்கள் (illusory distortions) போன்றவை.

இங்கு ஒன்றை நூலியப் பார்வையின் நூலெனப் பார்க்கவே, புறவுரு புதையுரு எனும் அப்பொருளின் இரட்டுரு தென்பட, அதுகொண்டு மறையாக நிற்கும் புதையுருவின்மேல்தான் ஆய்வு நாட்டம் பிறக்குமென்றும் உணர்த்தப்படுகின்றது. எது வெளிப்பட்டு பிரகாசமாக தெளிஞானமாக நிற்கின்றதோ, அதன்மேல் ஆய்வு நாட்டம் எழாது; மறைஞானமாக நிற்பதின்மேலேயே அம்மறை நீக்கும் பொருட்டு ஆய்வுச் சிந்தனை , தோன்றும் என்றவாறு. இவ்வாறு ஆய்வுச் சிந்தனை தோன்றிய பிறகு, சிற்சில சமயங்களில் உண்மைதான் யாதென்று உறுதிசெய்வான் பொருட்டு பொறிலியப் பார்வைக்கும் பெயர்வதுண்டு. ஆயவேண்டும் எனும் எழுச்சியைத் தருவது, புறவுருவின் வழி புதையுருவொன்றினைக் காட்டாதேக் காட்டும் நூலியப்பார்வையே என்பதை ஓர்க.

வீயாத வன்னிதனை மறைத்து ஒன்றாங் காட்டம்போல்:

ஒரு மரக்கட்டையானது, நூலியப் பார்வைக்கு இரட்டுரு பொருளாய் தென்பட்டு வெளிப்பட்டு நிற்கும் புறவுருவின் உள்ளே வெளிபடாது நிற்கும் நெருப்பை புதையுருவாய் காட்டாதேக் காட்டும் வகையில், இவ்விரண்டு உருக்களையும் அத்துவிதமாய் இரண்டற்ற நிலையில் தான் ஒன்றென காட்டி நிற்குமாபோல்;

தன்னை மலம் அன்று அணைதல் தான்:

ஆன்மாவெனப் படும் அதனை நூலியப் பார்வையிற் காண, அதற்கும் இரட்டுரு உண்டென்றும் , புறவுருவாகிய பற்பல அறிவுத் திறன்களோடும் அவாக்களோடும் திகழும் அதற்கு , ஆங்கே அதன் புதையுருவாக அணுத்துவந் தரும் ஆணவமலமும் அத்துவிதமாக இரண்டற்று கிடக்கின்றது என்பதைக் காணமுடியும் என்பதாம்.
13.1
சைவ சித்தாந்த மறைஞானவியல். (The Saiva Theory of Unconscious)
இதுவரை மெய்கண்டார் விளக்கியவற்றை தொகுத்துப் பார்க்கும் பொழுது , ஓர் நுட்பமான பார்வையியல் வழி , ஏன் ஓர் ஆன்மா ஞானச் செய்திகளில் இறங்கவேண்டும் பற்பலவற்றைப் பற்றி நின்று கண்டு கற்றுத் தேரவேண்டும் என்பதற்கு ஒரு விளக்கம் கிடைக்கின்றது.
ஞானதிரோதகம் இருவகைப்படும். ஒன்று நூலியப் பார்வையில் மூவினைப்படும் உலகினைக் கண்டு அதற்கு மூலமாக சங்கார காரணனாக இறைவன் இருப்பதை உணர்ந்து அவனது தற்சொரூப அறிவு அங்கு இல்லாதுபோக, அதன் காரணமே இறைவன் தன்னை ஆன்மாக்களுக்கு மறைத்து வைப்பதுதான். இது மறைப்பு எனும் பஞ்சகிரித்தியங்களில் ஒன்றாகிய திரோதகம் ஆகும்.
இதற்கு வேறாக இருப்பது ஆணவ மலத்தின் வரும் ஞான அந்தகாரமாகும்.
ஓர் ஆன்மா தன்னையேத் தான் மறித்து நோக்கி தன்னை ஓர் நூலெனக் காண, அதன் புறவுருவாக எளிதல் காணவரும் குணங்கள் திறன்கள் என்பவற்றுள் புதையுருவாக ஒன்று நின்று இந்த ஞானசெய்திகட்கு ஊக்கமாக , அவற்றை ஆன்மா அறியாதே செலுத்துவதாக இருப்பதைக் காணும். அதுவே யாண்டும் அணுத்துவந் தரும் வகையில் தன்னை கீழாலவத்தைகள் வழி இழுத்துகொண்டே இருப்பதையும் காணும். ஆன்மாக்களை அணுத்துவப் படுத்தவேதான் அதன் வசிப்பும் இருட்பேய் வகையான சேட்டைகளும் திகழ்வதைக் கண்டே, அதனை வெல்லுவான் பொருட்டு இறையருளோடு கூடி அறிவிலே தெளிவினைத் தரும் ஞானச் செய்திகள் பலவற்றை செய்வதாகும். எங்கு ஞானசெய்தியோ, அங்கு அகத்துக் கிடக்கும் ஆணவமலத்தோடு போர்தொடுக்கப்படுகின்றது, எங்கு ஞானவாகையோ அங்கு ஆணவத்தின் வலு, அப்பேயின் பிடி துமிக்கப்படுகின்றது.

13.2
உணர்வின் புதைவு


இனி சுடர்ஞானத்தை, இருக்கின்ற தெளிஞானத்தை, ப்ராய்ட் (Freud) யுங் (Jung) போன்றார் கூறுவதுபோல, மறைஞான நிலைக்குத் தள்ளுவதே அல்லது புதைப்பதே ஒவ்வும் இது ஒவ்வாதென கூறப்படின், உண்மை அதுவல்ல என்றவாறு. சுடர் ஞானமாய் மிளிர்ந்த வொன்றை அவ்வாறு தொடர்ந்து நிலவாது செய்யும் வகையில் புதைத்து கீழே தள்ளுவது வேறு; சிவஞானமே பரஞானமே பிரகாசிக்கவொட்டாது அணுத்துவத்தைத் தர போராடும் ஆணவப்பேயின் சேட்டைகளால், சிவஞான உணர்வின்றி பரஞான உணர்வின்றி கிடப்பது வேறென்று உணர்க. மிளிர்கின்ற ஞானங்கள் அகப்பாதலம் தள்ளப்படுவது (suppression, reppression etc) வெறுப்பு அச்சம் அருவருப்பு பீதி குற்றவுணர்வு என்பனபோன்ற தற்போத சேட்டைகளால் ஆகுவது, மனோவியாதிகட்குக் காரணமாகி, சித்தர்கள் கூறுவது போன்று பலவகையான நோய்களுக்கு காரணமாகிய சாபங்களாகத் திகழ்வதாகும். மனோமருத்துவம் வழி இவ்வாறு தள்ளப்பட்டதை மீண்டுமெழச் செய்து சுடர்ந்து பிரகாசிக்கச் செய்யமுடியும். இனி இவ்வாறான மனோமருத்துவ உத்திகளால் தீர்க்கப்படாததாய், சமயஞ் சான்ற, இறையருட் பதிவை ஈட்டத் தரும் சரியா கிரியா யோகம் ஞானம் போன்ற உத்திகளாலேயே போக்கப் படுவதாய் திகழ்வதே ஆணவமலத் தாக்கம் என்பதாம். அறிவினை சிற்றறிவாக்குவதும், சுட்டியும் குறித்தும் அறிகின்ற நிலக்கு ஆளாக்குவதும் அதன்வழி காலவுணர்வோடு திகழச் செய்வதும் இந்த அநாதியே பற்றி நிற்கும் ஆணவமலத் தொடக்கினால்தான் என்றறிக.
இனி ஆணவமலத் தொடக்கினால் அமையும் சிற்றறிவுப் பண்பால், இறையருள் கிட்டாது போகும் தருணங்ககளில் எழக்கூடிய பிறவியச்சம் மரணபயம் போன்ற மனக்கலக்கங்களால் நிலவுகின்ற ஞானங்கள் புதைக்கப்படலாமென, ஆணவமலத் தொடக்கினால் தான் இத்தகைய மனோவியாதிகளின் மூலங்களாகிய ஞானப்புதைவுகள் என்று கூறவும் வருவதைக் காண்க. மேற்கொண்டு இதனைத் தெளிய அடியேனது அழிவிலுண்மை எனும் ஞானப்பனுவலைக் காண்க.

ஆன்மாக்கள் மாட்டு சுட்டறிவும் ஆகவே சுட்டுக்கால உணர்வும் திசையுறு வெளியுணர்வும் தோன்றுதற்குக் காரணமாக இருப்பது இந்த ஆணவமலம் என்று தெளிக. சிவஞானமும் அதற்கு அடிகோலும் பரஞானமும் இதன் தாக்கத்தால் விளங்காது போகின்றன்மையின் அது ஞானதிரோதகம் எனப்பட்டது.
இனி இதற்கும் கன்ம மலத்திற்கும் என்ன தொடர்பு? அடுத்து இதனை சிறிது விளக்குவம்
14.0
உயிர்களின் இருவினைத் திறன்


மெய்கண்டாரின் போதமும் ஏனைய பல சைவ சித்தாந்த பனுவல்களும் ஆன்மாக்களுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பதாகிய புனருற்பத்தியை மெய்யென சாதிக்கும் நோக்கில் ஆன்மாக்களின் செயல்திறணைப் பற்றி ஓர் விரிவான விளக்கத்தைக் கொண்டுள்ளன. இதன்வழி கன்மமாகிய இருவினை உண்டு என்பதைக் காட்டி ஆன்மாக்களால் செய்யப்படும் வினைகள் புண்னியம் என்றும் பாவமென்றும் இருதிறத்ததாகும் என்றும் இதற்கு மூலமாக இருப்பது உலகிலும் அனைவர் உள்ளத்திலும் நீங்கா நிற்கும் இறையாணை என்றும் பகரும், செய்யப்படும் செயல்களை அறிந்து அவற்றின் கன்மப் பலன் ஊட்டுபவன் இறைவனே என்றும் தெரிக்கும்
ஆனால் ஊட்டப்படும் கன்மம் ஏன் ஓர் மலமாகும்?
பிறந்து வாழ்ந்து பற்பல செய்து அதன்வழி ஈட்டபப்டும் கன்மத்தாலேயே அடுத்த பிறப்பின் இயல்பு என்பதின், மறுபிறப்பின் பண்பினை உறுதி செய்யும் இது ஓர் கட்டாகுவதின் அதுவும் ஓர் மலமாகின்றது. எடுத்த பிறப்பிற்கு ஏற்பவே அனுபவிக்கும் செயல்திறன்கள் என்பதின் இவ்வாறு. ஆறறிவு மானிடப் பிறப்பிலேதான் மொழித் திறன் அமைகின்றது, பிற வகைப் பிறப்புக்களில் இப்படிப்பட்ட மொழித்திறன் இல்லை என்பதைக் காண்க. ஓர் வகையான கன்மம் மானிடர்கட்கு மொழிஉஇத்திறனைத் தர, பிற வகைப் பிறப்புகக்டு அது இல்லாது போக அது அமையாது போய்விடுகின்றது.
இது சிவஞான போததத்தின் இரண்டாம் சூத்தித்தில் அறியக் கிடக்கின்றது. காண்க
>>>
சூத்திரம் 2(விரி) (ஆன்மாக்களாகிய ) அவையே (இறைவன்) தானேயாய் இருவினையின் போக்குவரவு புரிய ஆணையின் (இறைவன்) நீக்கமன்றி நிற்குமன்றே


நோக்கு: என் நுதலிற்றோ வெனின், (ஆன்மாக்களுக்கு) புனருற்பவம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று

இதன் பொழிப்பாவது:

மேலே அநாதிப்பொருட்களாக உளவென்று உணர்த்தப்பட்ட பொருட்களாகிய, எண்ணிறந்த அணுக்களாகியப் பசுக்கள், ஆணவமலம், அந்தமாதியாகிய பதி, மூலமாயை எனும் இவற்றுள் , சித்துப்பொருட்களாகிய பசுக்கள் , இறைவனது விட்டகலாது நிற்கும் ஆணையின் வழி செய்யப்படும் புண்ணிய பாப விணைகட்கு ஏற்ப கன்மங்கள் ஈட்டி பிறந்திறந்து பிரபஞ்சச் செலவில் போக்கு வரவு புரிந்துகொண்டிருக்க, இறைவனோடு செய்கின்ற வினைகட்கு ஏற்ப பயன்களைக் கொடுத்தவாறு ஆயினும் ஆன்மாக்களின் வினைகளாலும் அவற்றிற்குத் தக பயனைத்தருவதாலும் தான் தாக்குறாதே விளங்கும் தலைவனாய் தனியனாய் நீக்கமற நிற்பன் என்பது.
>>>>>>
இதனை இன்னும் விளக்கும் வகையில் சைவத்தில் அடங்கி கிடக்கின்ற ஓர் வினைத்திறன் விளக்கத்தைக் காண்போம் (Saiva Theory of Actions). இது ‘சித்தாந்தத் திருநெறி’ எனும் எனது சிறு நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
14.1
சைவத்தின் வினைத்திறன் கோட்பாடு
ஆன்மாக்களால் செய்யப்படும் வினைகள் பலதிறப்படும். கீழே ஓர் வகைய பாகுபாட்டைக் காணலாம்
>>>>
12.0
நாங்கு தன்மைய வினைகள் உண்டு: உழற்சி வினைகள், கழற்சி வினைகள், ஊழ்ச்சி வினைகள், மலர்ச்சி வினைகள் என அவை வரும். எல்லா வினைகளும் எஞ்சாது இந்த நாங்கு வகைக்குள் அடங்கும் கீழாலாவத்தைகளின் வீழ்ச்சி வினைகளையும் உள்ளடக்கினால் ஐந்து வகையாகும்
12.1
இவற்றில் தனக்கென இச்சைகளைத் தேற்றி அவற்றை அடையும் முகத்தானே , அந்தகரணங்கள் புறக்கரணங்கள் துணைக்கரணங்கள் போன்றவற்றை முடுக்கி சுத்த அசுத்த மாயாகாரிய உலகின்மேல் செய்யப்படும் வினைகளே உழற்சி வினைகள்.
தனக்கோர் ஆதாயம் கருதியே செய்யப்படும் கருவி வினைகள் (instrumental action) எனினும் ஒக்கும். இச்சைக்கு உகந்ததாய் விளைவுகளைத் தோற்ற நல்லதென்றும் அல்லவைத் தீயதென்றும் இனிய இன்னா என்ற வகையிலேயே செயல்களை மதிக்கும் போக்கு வளரும்.
12.2
இவற்றின் வழி தற்கல்வியுமில்லை, இறைகல்வியுமில்லை. நோக்கெல்லாம் தான் இச்சிக்கும் விளைவினை கொண்டுவருவதிலேயே குவிந்து நிற்பதின் ஆன்மாவும் இறைவனும் பின்புலப்படுத்தப்படுகின்றனர். அதனால் அறியாது விடப்படுகின்றனர்.
12.3
அதுவென சுட்டி அறிவதற்கு வரும் பொருள்கள் மேலேயே ஆர்வமும் செயல்களுமென, உழற்சி வினைகளால் பாசக்கல்வியே மெய்யாக, மாயாகாரியபொருட்களின் அறிவே மிகும். முடிவில் இறைவனது கிரியா சத்தியின் வெளிப்பாட்டினை, அது அவ்வாறு என்று உணராதேயே , மகிழ்வதில் முடியும். இறைவனை பஞ்சகிருத்தியச் சிவன் என்று அறியாதசிவராத்திரியில் யாண்டும் விட்டு நீங்காது கிடப்பர்.
12.4
சுட்டுணர்வில் பட்டு அந்த சுட்டுணர்விலேயே தொடர்ந்து கிடக்குமாறு செய்வதின், இத்தகைய வினைகள் வீடுபேற்றிற்கு உதவாது, மீண்டும் மீண்டும் பிறந்துழல்வதிலேயே ஆன்மாக்களை வீழ்த்த அவை உழற்சி வினைகள் ஆகின்றன

13.0
சார்ந்ததன் வண்ணமாய் மயங்கி அவையே தானாகி நிற்கும் ஆன்மாக்கள், அந்த மயக்கம் நீங்கி, அந்த தத்துவங்களிலிருந்து கழன்று தற்கல்வித் தாக்கி, தான் தானாய் ஆகுவதற்கு ஏதுவாயவே கழற்சி வினைகள்.
13.1
ஆன்மாக்கள் சித்துப்பொருட்கள், அசித்தோடு சமைந்து நிற்பினும் அவை பொருள் வகையில் வேறு என்ற உணர்வோடு முகிழ்பவையே கழற்சி வினைகள்
13.2
சுட்டுணர்வோடு வரும் உலகியல் காலமும் திசையுறு வெளியுணர்வும் கடந்து குறிப்புக்கால உணர்வும் திசையற்ற சுத்தவெளியுணர்வும் தலைப்படல் இங்கு என்பதின் அவை கழற்சி வினைகள் ஆகின்றன. அதனின் மாயாகன்ம பந்தங்களும் படிப்படியாக நீங்கத் தொடங்குகின்றன.
13.3
ஆன்மதரிசனம் தந்துகொண்டே இருக்கும் கழற்சி வினைகளின் முடிவு ஆன்மச் சுதந்திரம் --- உலகியல் இன்பங்களுக்கு அடிமைப் பட்ட பரதந்திரனாக இருக்கும் ஆன்மாவை உண்மையான சுதந்திரன் ஆக்குவது. தான் உண்மையில் யார்க்கும் குடியல்லாத ஒருவன் என்று அறியத் தருவது. சுயத்தின் மீட்சிக்கு வித்திடுவது.

14.0
கழன்று கழன்று செல் ஆன்மா ஆனவமலத்தின் உண்மையை அறியவரும். அதுபொழுது அதுவே தன்னை சிற்றறிவினதாக்கி சார்ந்ததின் வண்ணமாய் திகழச் செய்து தன்னறிவின்றி கிடக்கச் செய்தது என்று உணர்ந்து, அந்த பொல்லாத ஆணவமலத்தின் பிடியிலிருந்து விடுபடும் நோக்கொடு செய்யப்படும் வினைகளே ஊழ்ச்சி வினைகள் ஆகும்.
14.1
சுத்த சிவப் பிரகாசத்து இறைவனோடு நெருங்கி நின்றாலன்றி இவை கூடாமையின், ஊழ்ச்சி வினைகளின் நோக்கு இறைவனைக் கண்டு அவனோடு ஒருங்கியைந்து நிற்றல் என்பதாக அமையும்.
14.2
இத்தகைய ஊழ்ச்சி வினைகளால் ஆணவமலத்தின் பிடி தளர்தலின், பக்குவ முதிர்ச்சி உண்டாகும். கற்றளிப் பெயர்ச்சிகள் மெய்யாக பதவூழிகளும் (moving towards higher stages of development) மெய்யாகும்
14.3
ஊழ்ச்சி வினைகளால் ஆகக்கூடியதே இருவினை ஒப்பு எய்தல்; செய்கின்ற வினைகள் புண்ணியமா? பாவமா? நந்நயமா? அந்நயமா? என்றெல்லாம் மதித்தல் (judgements) கடந்து இறையருளோடு ஒன்றித்துச் செயல்படும் நிலை.
14.5
இத்தகைய ஊழ்ச்சி வினைகளாலேயே மாயாமல பந்தங்கள் , அதிலும் குறிப்பாக ஆணவமலத் தொடக்கு அறுத்தல் மெய்யாகும்

15.0
ஆணவமல நீக்கம் மெய்யாக, காலவுணர்வும் பரகாலவுணர்வேயாக, உணர்வும் பரனுணர்வேயாக, எஞ்சி நிற்கின்ற இறைவனது திரோபவமே நீக்குதற்குரியாத இருக்க, அந்நிலையில் ஆற்றப்படும் வினைகளே மலர்ச்சி வினைகள் ஆகும்.
15.2
பரனுணர்வின் தேற்றம் "தான்" "தனக்கு" என்ற அகந்தைக் கெட வைத்தலின், தற்போதம் யாதுமின்றி, முற்றிலும் சிவபோதத்தில் அழுந்தி செய்யப்படும் வினைகளே மலர்ச்சி வினைகள். இவற்றின் வினைமுதல் இறைவனே யாகும்
15.3
இதனின் மலர்ச்சி வினைகள் ஆன்ம அறிவு தேற்றாது சிவவறிவுத் தேற்றும். இறைவன் தன்னைத் தானே ஆனமாக்களுக்கு உணர்த்துதல் இங்கு நடக்கும். இதனின் மலர்ச்சி வினைகளைக் காணக் காண சிவஞானம் வளரும்.
15.4
மலர்ச்சி வினைகளின் முடிவு , அந்நியம் போக்கி அனைத்தொடும் சிவ அன்பு மேவர, அவையேத் தானாகி அநந்நிய நிலைத் தலைப்படுதலாம். இதனின் சிவசத்தாகிய சிவஞானத்தில் முற்றிலும் அழுந்தலாம்.

16.0
சமயம் என்பது தற்போத செருக்கின் உழற்சி வினைகளின் உழைப்பு கெடுத்து, தற்கல்வி வளர்க்கும் கழற்சி வினைகளில் ஈடுபாடு மிகுத்து, பதிக்கல்வி வளர்த்து பக்குவதில் உயர்ந்திடச் செய்யும் ஊழ்ச்சி வினைகளை ஊக்குவித்து, திரோதகம் நீக்கும் மலர்ச்சி வினைகளை ஆற்றும்படி ஈர்த்து சிவஞானம் மகிழும்படிச் செய்து வீடுபேறு அடையச் செய்யும் ஓர் வாழ்க்கை முறையே.
16.1
அறியப்படா அறிவு என்ற ஒன்றில்லை; காணப்படாப் பொருள் என்ற ஒன்றில்லை. தக்க வினைகளை தக்க முறையில் ஆற்றினால் தக்கபொழுது இறையருளால் அறிவு தானே வரும்; பொருளும் காட்சியாகும்.
16.2
எவ்வறிவினையும் எப்பொருளினையும் எவ்வுயிரும் காணுதல் கூடும். ஒருவனுக்கே ஒரு சிலருக்கே ஒருசில அறிவுகள் என்பது பேதமை.
17.0
இந்தப் பேதமை இல்லாது அமைந்த நெறியே திருநெறி; சித்தாந்தத் திருநெறி.
>>>>
இவற்றையெல்லாம் தொகுத்து. சைவம் கொண்டிருக்கின்ற கனமக் கோட்பாட்டையும் அது எவ்வாறு ஐரோப்பியர்கள் பெரிதும் போற்றும் பதியில்லா டார்வினின் கூர்தல் அறத்திற்கு (Darwin’s Theory of Evolution) வேறாக போதித்துக் கொண்டே இருக்கும் இறைவனது அருளாலேயே ஆன்மாக்கள் மேலான பிறப்புக்கள் எடுத்து முடிவில் வீடுபேறு உற்று பிறப்பு அறுக்கின்றன, மீண்டும் பிறவாமை எய்துகின்றன என்பதை விளக்குவம்.

15.0
மரணமும் கூர்தலும் வீடுபேறும்


ஆன்மா அநாதி என்பதின் அதற்கு அழிவில்லை. பிறப்புற்று பின் மரணமடையும் போது மாயாவியந்திரத் தனுவாகிய உடம்பு அழியுமேத் தவிற ஆன்மா அழிவதில்லை. அது மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து இவ்வாறு உழன்று பிரபஞ்சச் செலவில் பட்டு, தக்க வினைகள் ஆற்றினால், இறையருளின் மேலான பிறப்புக்கள் பெற்று முடிவில் வீடுபேறு உற்று மீண்டும் பிறவாமை அருளப் பெற்று இறைவனோடு ஒருங்கியைந்து சிவலோகம் புகும்.
இவ்வாறான ஆன்ம பிரபஞ்சச் செலவில், கன்மம் என்ற மலத்திற்கு எங்கே இடம் உண்டு? ஆணவம் மாயை என்ற இரண்டு மலங்கள் போதுமே எனில், போதாது, இவற்றிற்கு வேறாக பாரம்பரியமாக வரும் ஆன்மாக்களின் புனருற்பத்திக்கும் கூர்தலுக்கும் முடிவில் வீடுபேறு உற்று மீண்டும் பிறவாமை மகிழ்தற்கும் கன்மம் என்றவோர் கட்டு ஆணவதிற்கும் மாயைக்கும் வேறாக ஆன்மாக்களை பந்தித்து நிற்கும் ஒன்றாக அநாதிபொருளாக இருக்கின்றது என்பதை நாம் அறியவேண்டும். இதை எப்படி மெய்யுணர்வாக காண்டிகைப் படுத்துவது?
ஐரோப்பிய அறிவியல் கூறுவது போல, இயற்கையே எல்லாம் செய்யும், இயற்கையில் பல மாற்றங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன, ஆங்கு வாழும் உயிர்கள் உண்டாகும் சூழ்நிலை மாற்றங்கட்கு ஏற்ப தம்மை மாற்றிகொள்ளாவிட்டால், அழிந்து நாசமாகிவிடும், எவ்வுயிர் தக்க மாற்றங்களை அடைகின்றதோ அவை அழியாது நின்று வளரும், பிறப் பிற பிறப்புகட்கும் இடம் தரும். ( Natural selection, survival of the fittest) இப்படித்தான் ஓர் செல்லு(cell) நுண்ணுயிர்கள் வளர்ந்து வளர்ந்து கூர்ந்து குரங்கு போன்ற உயிர்களாகி பின் இன்னும் கூர்ந்து ஆறறிவு மானிடர்களாக பிறந்துள்ளன என்று அவர்கள் இறைவனையும் கூறாது கன்மத்தையும் கொண்டு வராது உயிர்களின் கூர்தலை விளக்கிச் செல்வர்.
ஜீன்ஸ் (genes)என்பதைக் கொண்டு வருகின்றனர் ஆனால் அவை எப்படி வருகின்றன மாறுகின்றன முத்திக்கு ஏதுவாகின்றன முடிவில் இல்லாது போகின்றன என்பதற்கெல்லாம் விளக்கம் இல்லை. இந்த ஜீன்ஸ்கலும் அறிவில்லாத சடப்பொருட்களேயாம்

15.1
மாயைக்கு முத்தி அறிவு உண்டா?


ஐரோப்பியர்கள் சிந்தனையில் முத்தி மோட்சம், வீடுபேறு என்ற கருத்தே இல்லை. அவர்கள் போற்றும் கிறித்துவம் போன்ற சமயங்களில் இறைவன் அநாதி முத்த சித்துரு என்ற கருத்தும் இல்லை.
இயற்கை என்பது மாயையின் பல்வேறு விருத்திகள் , இந்த உலகமே இயற்கையே, தனுகரணபுவன போகம் எனப்படும் இந்த இயற்கையே ஓர் பிரமிக்கத் தக்க மாயாவியந்திரம் தான், ஆனால் அது சடப் பொருள் என்பதின் அது அறிவற்றது. ஓர் உயிர் வாழ்தற்கு வேண்டிய பலவற்றைத் தந்தாலும் அது சித்துப் பொருளாகிய உயிரை அறியாது, ஓர் உயிர் செய்யும் வினைகளைக் கண்டு அவ்ற்றிக்கேற்ற பயன்களைத் தராது.
மேலும் மிக முக்கியமான ஒன்றாக நாம் கருத்வேண்டிய ஒன்று இருக்கின்றது. இந்த மாயாமலம் பல்வேறு தனுகரணபுவன போகங்களைத் தரவல்லதாயினும், அதற்கெல்லாந் இடந்தரும் ஒன்றாக இருந்தாலும், உயிர்கட்கு முத்திமுன்னறிவு உண்டு, அதற்குத் தக அவை உயர்ந்து உயர்ந்து சென்று முடிவில் வீடுபேறு அடைய உதவும் வகையில் தக்க தனுகரணபுவன போகங்களைத் தரவேண்டும் என்பது அதனால் முடியாத ஒன்றாகும். தீபமே போல் ஆன்மாக்க்களுக்கு ஒளி தந்து காணுதலுக்கு உதவி அறிவினை வளர்க்க உதவுமேத் தவிற, அதுவே திரிந்து திரிந்து புதியப் புதிய தனுக்களையும் கரணங்களையும் புவனங்களையும் அருளி முடிவில் பிறப்பே அறுத்து வீடுபேறு நல்க முடியாது.
இது ஆணவமலத்தாலும் முடியாது என்பதால், எப்படித்தான் நடக்கின்றது?
15.2
கன்மத்தை ஊட்டுவதும் நீக்குவதும் இறைவனே
இறைவன்தான் அநாதி முத்த சித்துரு என்பதின் உயிர்கள் கூர்ந்து கூர்ந்து முடிவில் வீடுபேறு அடையும் வகையில் உதவுவது இறைவனைத் தவிற அசித்துப்பொருளாகிய இயற்கை அல்ல, அதன் மூலமாகிய மாயையும் அல்ல. இனி கன்மம் ஏன் வேண்டும், இறைவன் மாத்திரம் போதாதோ வெனில், இங்கு இந்த கூர்தலுக்கு ஓர் கட்டு இருபதைக் காணவேண்டும்
ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுப்பதும் அதன் ஊடே உயர்ந்து உயர்ந்து கூர்தலும் மரபுவழி பட்ட ஓர் பேரியக்கமாகும். ஓர் பிறப்பெடுத்து அப்பிறப்பில் பல விணைகளையாற்ற அவற்றில் கழற்சி வினைகள் இருந்தால், அடுத்து வரும் பிறப்பு சற்று பக்குவத்தில் உயர்ந்ததாக அமைய , இந்தப் பிறப்பினை உறுதி செய்யும் ஓர் பிறப்பு வித்து, ஓர் பிறப்பிற்கு அச்சினைத் தரும் ஓர் வித்து தேவைப்படுகின்றது. இந்த வித்டே உயிரோடு ஒன்றித்து நின்று, மரணமடைந்து வாழ்ந்த உடம்பினை இழந்த போதிலும், ஆன்மாவின் புரியட்ட தேகத்தில் ஓர் அங்கமாக நின்று அடுத்த பிறவி அமையும் போது, அந்த மாயையைத் திரித்து எய்தியுள்ள பக்குவத்திற்கு ஏற்ப ஓர் தனுகரணபுவன போகத்தை அடையுமாறு இது செயல்படும். இந்த பிறப்பீனும் வித்தே கன்மம் ஆகின்றது. இதனை ஊட்டுவதும் மாற்றுவதும் முடிவில் ஊட்டாது விடுவதும் இறைவனே யாகும். இதனை மெய்கண்டார் கீழ்வரும் உதாரண வெண்பாவில் விளக்குகின்றார்.
>>>>
எடுத்துக்காட்டு 2.2.2.
அவ்வினையைச் செய்வதனில் அவ்வினைஞர் தான்சென்றங்கு
அவ்வினையைக் காந்த பசாசம்போல் -- அவ்வினையைப்
பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல்
ஆர்தாம் அறிந்து அணைப்பார் ஆங்கு

இதன் பொருள்:

காந்தப் பசாசம்போல், அவ்வினையை பேராமல் ஊட்டும் பிரானின்:

ஒரு காந்தம் ஓர் இரும்புத் துண்டினை தன்பால் வசிப்பதுபோல, எல்லா உயிர்களோடும் அத்துவிதமாய், இறைவன் தானே என்று எண்ணும்படியாக நின்று, தன்பால் நெருங்கும்படியாக வசித்து, அந்த வசிப்பின் காரணமாக பற்பல வினைகளை அவ்வான்மாக்கள் ஆற்றும்படியாக அவர்களை ஆட்டுவிக்கின்றான் இறைவன். ஆன்மாக்கள் பலவாறு இயங்கி பற்பல செய்வதற்கும் ஏதுவாய் 'அது நான்' 'அது நான்' என்றவாறு "அது" வெனும் நுதிப்புக்களை ஆன்மாக்கள் உள்ளத்திலே பதியவைத்து, அதே பொழுது தான் அதனால் சலிப்புறாதும் நிற்கின்றான்.

அவ்வினைஞர் தான் சென்றங்கு அவ்வினையைச் செய்வதனில்:

இவ்வாறு எழும் நுதிப்புக்களைப் பற்றிட , அதனால் அது தானாக வேண்டும் என்ற விருப்பும் எழ, நோக்கொன்று தேற்றி ஒரு வினைகர்த்தாவாக இருப்புநிலை பெற்று, ஒரு வினையை ஆன்மாக்கல் செய்கின்றன. "அது" வெனும் நுதிப்புக்களை ஆன்மாக்கள் தாமே உதிப்பியா. தன்னோடு , தன்னறிவோடு அத்துவிதமாக பிரிப்பின்றி நிற்கும் இறைவனே அதனை அகத்தே ஊட்டுகின்றான். அதனால்தான் செயல் ஒன்றினைச் செய்யவேண்டும் என்ற முனைப்பே எழுகின்றது.

அவ்வினையை பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல்:

இவ்வாறு நுதிப்பொன்றினைத் தேற்றி, ஓர் ஆன்மா ஒரு செயலைச் செய்யும்படி ஆட்டுவிக்கும் இறைவனாலேயே, அதன் பயன்களையும் நுகரும் பேறு கிட்டும் என்பதாம்.
ஏன் இவ்வாறு? செய்யும் வினையே அதன் பயனைத் தாராதோ? வெனின்;

ஆர்தான் அறிந்து அணைப்பர் ஆங்கு:

ஒருவன் செய்யும் ஒரு வினையின் தரத்தினை; அது உழற்சியதா, கழற்சியதா, ஊழ்ச்சியதா அல்லது மலர்ச்சியதா என்பதனை சடப்பொருட்களாகிய சுத்தாசுத்த மாயைகளாலும் , அணுத்துவப்பட்டு அல்லல் உறும் சித்துப்பொருட்களாகிய ஏனைய ஆன்மாக்களாலும் முடியாது போக எஞ்சி நிற்கின்ற சித்துப்பொருளாகிய பதியினாலேயே அது ஆகக்கூடியது என்றாயிற்று.
மரணமுற்று உடலை இழந்தும் உலகவாழ்வினை இழந்தும் புரியட்ட தேகத்தோடு பரலோகத்தில் எங்கோ திரியும் நிலையில், சமயங்களும் சமயக் குரவர்கள் போதனைகளும் கொள்கைகளும் கோட்படுகளும் நன்னெறி அறிவுகளும் ஞான நூற் தெளிவுகளும் மறந்துபட்ட நிலையில், ஒன்றுமின்றியதாய் ஆன்மா நிற்கும். ஆயினும் அந்நிலையிலும் ஆன்மாக்களை விட்டகலாதிருப்பது இறைவன் ஒருவனேயாம். அவனே வாழும்போது பல நுதிப்புகளைக் கொடுத்து , ஆன்மாக்களை பற்பல வினைகள ஆற்றும்படி செய்தவன் ஆதலின், அவற்றின் பயன்களை இந்நிலையில் ஊட்டவும் செய்வன் என்பதாம். அவ்வாறு அறிந்து ஊட்டுதற்கு வேறு யாரும் இல்லை என்பதாம். ஒரு பிறப்பெடுத்து வாழும்போது, நல்லதெது கெட்டதெது என்பதை உலகும் உலக மாந்தர்களும் தத்தமக்கு ஏற்ற வகையில் உணர்த்தக் கூடுமெனினும், உடலற்றும் உலகற்றும் கிடக்கும்போது , இவையெல்லாம் போயகல அகலாது உடனிருப்பது இறைவனே யாதலால், வினைப்பயன்களை அறிந்தும் அடுத்த பிறப்பிற்கு ஏன்றதை புதிதாக அருளுபவனாகவும் அதனின் பக்குவத்தில் கூரும்படி செய்பவனாகவும் இறைவனே இரூக்கின்றான், வேறு யாதுமில்லை என்றவாறு. முற்பிறப்பை நோக்க, வரும் பிறப்பு கூர்தலில் சிறந்திருப்பதின் இது ஏனையவற்றால் ஆகாது இறைவனாலேயே ஒல்லும் என்பது.
இவ்வாறு நுகர்விப்பது வாழும்போதும் இல்லையெனில், புண்ணிய பாப அறிவே அகத்து எழாது போம் என்பதையும் கவனிக்க. ஆயினும் இருவினை சிந்தனை உலகியல் உண்மையென, இறைவனே கன்மங்களை தருவதும் அவற்றைத் தராது போவதும் உண்மையாயிற்று.
இனி இது உண்மையெனில், ஓர் பிறப்பில் பக்குவ முதிர்ச்சி மெய்யாகும்போது, அதுவும் இறைவனது செயலால்தான் என்று கூற வருமா?
இதை அடுத்துக் காண்போம்

16.0
சிவபோதம் பதவூழி பக்குவ முதிர்ச்சி


டார்வின் (Darwin) போன்றவர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் யாரும் கொண்டிராத ஓர் கூர்தல் தெரிவை (Evolutionary Theory) தமிழச் சைவர்கள் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மேலே கண்டோம். இதனை ‘சிவபோத கூர்தல் தெரிவு” என்று நாம் கூறலாம். உயிர்கள் செய்கின்ற வினைகளை அறிந்து அவற்றிற்கேற்ப கன்ம பலங்களை ஊட்டியும் கழித்தும் இல்லாது போக்கியும் ஆன்மாக்களை உய்விக்கின்றான் இறைவன், வீடுபேறு மகிழ வைக்கின்றான் இறைவன் என்று கண்டோம்
இங்கு பிரபஞ்சச் செலவில் ஆன்மாக்கள் பதவூழிகள் பெற்று பக்குவத்தில் உயர்தல் சைவர்கள் அறியாத ஒன்றல்ல. மானிக்கவாசகர் தமது சிவபுராணத்தில் இதனைப் பாடியுள்ளார் என்பதைக் கண்டுள்ளோம். இந்த வீடுபேறு அடைதல் ஓர் கட்டாயம் அல்ல, தானே இயல்பாக அமைந்திடும் ஒன்றும் அல்ல. மானிடப் பிறப்பு வரை முன்னேறிவிட்ட ஓர் ஆன்மா இந்தப் பிறப்பில் வீடுபேறு அடையலாம் அல்லது மீண்டும் மீண்டும் பிறந்து உழலுமாறும் கன்மத்தை ஈட்டலாம். ஆயினும் பதவூழிகள் பெற்று பக்குவத்தில் உயர்தல் நடக்கின்ற ஒன்றே, இல்லையேல் சிவஞானிகளாக யாரும் இருக்க முடியாது. ஆயினும் தொல்காப்பியர் திருவள்ளுவர் காரைகால் பேயார் அப்பர் திருஞானசம்பந்தர் நனம்மாழ்வார் திருமூலர் போன்று எத்தனையோ ஞானிகளை தமிழகம் கண்டுள்ளது. இவர்கள் வீடுபேற்றை மிக நெருங்கி விட்ட சிவஞானிகளாக பெரிதும் உயர்ந்து நிற்பது உண்மையே; இவர்கள் தொல்காப்பியர் அன்றே கூறியுள்ளதைப் போல ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முதல்வன்” ஆகும். மாந்தர்கள் எப்படி இப்படிப்பட்ட ஞானிகள் ஆகி ஏனைய மக்களை உயர்த்தும் பொருட்டு உபதேசங்கள் பலவற்றை மொழிந்து செல்ல முடியும்?

16.1
ஐரோப்பியச் சிந்தனையில் சிவஞானிகள் இல்லை


ஐரோப்பிய தரிசனங்கள் எதிலும் பதவூழிகள் பெற்று பக்குவத்தில் உயர்ந்து உயர்ந்து ஒருவன் சிவஞானியாகி முடிவில் இறையருளால் வீடுவேறு அருளப்பெற்று பிறப்பறுக்க முடியும் என்ற கருத்து இல்லை. பியாஜே (Piaget) போன்றோர் குழந்தைகளைன் அறிவு வளர்ச்சியை ஆய்ந்து தெளிந்து இயல்பான வளர்ச்சியிம் காரண்மாக பல பதவூழிகள் பெற்று முடிவில் ஏறக்குறைய வயது 12 அளவில் ஏரணச் சிந்தை கைவந்த சிந்தனாகரும பதம் அடைகின்றனர், அதற்கு மேற்பட்ட பதவூழிகள் இல்லை என்று கூறி சென்றுள்ளனர். பிராய்ட் யுங் போன்றோர், சித்தம் பேதலித்து சுயம் இழந்த நிலையிலிருந்து மீண்டும் சுயத்திற்கு திரும்புவதே மானிட வளர்ச்சி என்று கூறி அதனோடு நிறுத்தி விடுகின்றனர். வேறு சிலரோ IQ எனப்படும் அறிவுத் திறன் என்பதை அளந்து சிந்தனைத் திறனில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று ஆடுகின்றார்களேத் தவிற, பக்குவத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று அளந்து கூறும் திறமை இல்லாதே இருக்கின்றனர். காரணம் அவர்கட்கு சைவம் கூறும் சிவபோதக் கூர்தல் தெரிவி இல்லாது போனதுதான்.
சைவத்தில் இந்தக் குறை இல்லை. எவ்வாறு உயிர்களின் கூர்தல் சிவபோதத்தால் மெய்யாகின்றதோ அதேப் போலத்தான் எடுத்துவிட்ட பிறப்பில் பதவூழீகள் பெற்று பக்குவ முதிர்ச்சி மகிழ்தலும், அவர்களில் சிலர் சிவஞானிகள் ஆகி வீடுபேறுப் பெற்று மீண்டும் பிறவாமை உறுதலும் ஆகும்.
இதனை பல்வேறு கோணங்களில் விளக்கியுள்ளனர் தமிழ் அறிஞர்கள். தசகாரியங்கள் வழியாக மேலான மறையாயுள்ள தத்துவங்களையும அறிந்து அதன்வழி உயர்தல் என்பதாக ஒன்று. ஆறு ஆதாரத் தலங்கள் உண்டெனக் கொண்டு அவற்றில் ஞானம் வளர்த்து உயர்ந்து உயர்ந்து சென்று மேலான ஆதாரத் தலங்கள் அடைந்து உயர்தலல் என்றவாறும் சிந்தித்துள்ளனர். மேலும் பார்வைகளை பொறிலியப் பார்வை நூலியப் பார்வை நுதலியப் பார்வை பரப்பார்வை சிவப்பார்வை அதீதப் பார்வை என்றெல்லாம் கண்டும் முடிவில் பார்வையற்ற பார்வை எய்தி சிவஞானம் புசிப்பதோடு சிவத்துடன் வேறற நின்று வீடுபேறு மகிழ்தல என்றவாறும் கண்டுள்ளனர். இது அடியேனது அழிவிலுன்மை எனும் பெரும்நூலில் வருகின்ற ஒன்றாகும்

16.2
மெய்கண்டாரின் விளக்கம்


பாசத்தளைகளில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா இறைவன் காட்ட பல கண்டு செயல்களில் இறங்கி சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் என பஞ்சாவதித்தனாக வாழும் என்றும் தனது நாங்காம் சூத்திரத்தில் கூறியுள்ளார் என்பதைக் கண்டோம். இப்படிப்பட்ட அவத்தைகளில் விழுந்து பல அனுபவங்களைப் பெற்று கற்றுக் கற்று மேம்பட்டு இலாடத் தானத்தே ஐந்தவத்தைகள் எய்தி சிவஞனாம் மகிழ ஓர் ஆன்மா சிவஞானி ஆகின்றனது என்று ஆன்மாக்களின் பக்குவமுதிர்ச்சியை பதவூழிகளை அவத்தைகள் வழி கணிக்கின்றார். இது நான்காம் சூத்திரத்து உதாரண வெண்பா வழியாக நலமே விளக்கப்படுகின்றது,
>>>>
எடுத்துக்காட்டு 4.3.2

இலாடத்தே சாக்கிரத்தை எய்திய வுள்ளம்
இலாடத்தே ஐந்தவத்தை எய்தும் -- இலாடத்தே
அவ்வவ் இந்திரியத்து அத்துறைகள் கண்டதுவே
அவ்வற்றின் நீங்கலது வாங்கு.

இதன் பொருள்:
இலாடத்தே (தெளி)சாக்கிரத்தை எய்திய உள்ளம்:
புருவ நடுவாகிய ஐயம் திரிபு போன்ற யாதுமில்லாத தெளிஞானத்தின் இலாடதானத்தே, மறைகள் விளங்கும் ஞானங்களை எல்லாம் தெளிஞானமாக்கி மாணறிவுகளாகப் பெற்று மகிழ்ந்தவாறு ஆன்மா இருக்கும் என்பதாம்.
அதாவது, சாதாரண சாக்கிராவத்தைக்கு மேலான சிந்தனைத் தெளிவின் வரு தெளிசாக்கிரமே பிற அவத்தைகளைவிட , விழித்தவாறே அனுபவிக்கத் தருதலின், மிகவும் சிறப்புற்றிருப்பதாம். இந்நிலைக்கு எந்த ஞானம் கொண்டு வரப்படுகின்றாதோ, அதுவே ஆன்மாவின் உடமைப்பொருளாக, அந்நியமிலாது அதுவே ஆன்மாவாக நிற்கத் தருவதாம். இப்படிப்பட்ட தெளிசாக்கிரத்தை அடைகின்ற ஆன்மா;

இலாடத்தே ஐந்து அவத்தை எய்தும்:

இத்தானத்தில், உலகத் தொந்தனையிலிருந்து கழன்றிருப்பதால் வரும் மேலான விழிப்பு நிலையில் இருந்துகொண்டு, பிறபிற அவத்தைகளில் எழும் ஞானங்களை அவற்றின் மறைபோக்கி, தெளிவாகும் விடயங்களை இன்னும் சிந்தித்து அலசி தெளிஞானமாய் சமைத்து மகிழும் என்றவாறு.

இங்கு பொறிலியப்பார்வையின் சாதாரண சாக்கிரத்தில் எழும் அறிவுகளோடு ஏனைய பார்வைகளிலும் எழும் ஞானங்கள் அனைத்தையும் சிந்தித்து ஐயம் திரிபறத் தெளிந்து தெளிஞானங்களாக்கி, உத்தேசங்கள் எடுத்தமொழிகள் என்றெல்லாம் விட்டகன்று மேற்கோள்களாக , நிகமனங்களாகக் கொண்டு சிறப்பதாம். காட்டாக, சொப்பனாவத்தையை இலாடத்திற்குக் கொண்டு வருவதென்பது, கண்ட கனவுகளை மறந்திடாது நினைவில் இருத்தி, பிறகு அஃதோர் பைசந்தி மொழி வகையில், சின்னமொழி ஆட்டுவென , அதனை பெயர்த்துப் பெயர்த்து (interprete) வழக்கியல் மொழிக்குக் கொண்டு வந்து, காணுகங்களும் காருகங்களுமே (percepts and concepts) ஆடும் வகையில் தெளிஞானமாக்கி (indubitable consciuosness) மகிழ்வதாகும். கனவில் 'புனலாடுதல்' என்று வர, அதனை ஓர் சின்னமொழி (symbolic language) எனக் கொண்டு அது உணர்த்த வருவதை "இறையருட்பதிவின் காரணமாக உடல் நலம் பெறுதல்" என்று பெயர்த்து மெய்ப்பொருள் காண்பது போன்றதாம். ஓர் கனவும் அத்தகு ஞானோதயங்களும் எப்பொழுது இவ்வாறு பெயர்க்கப்பட்டு (interpreted) அவற்றின் மெய்ப்பொருள் இஃதென தெளியப்படுகின்றதோ அப்பொழுதே தெளிஞானப் பொருளாய், இலாடதானத்தின் விடயமாய் ஆக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட வளர்ச்சியே இலாடதானத்தில் ஐந்தவத்தை எய்துவதாகும்.

இலாடத்தே அவ்வவ் இந்திரியத்து அத்துறைகள் கண்டதுவே:

இவ்வாறு தெளிஞானத் தானமாகிய இலாடத்தே, சாதாரண சாக்கிராதி அவத்தைகளையும், அவ்வவ் அவத்தைகளைத் தரும் பசுகரணங்கள், சிவகரணக்கள் போன்றவற்றையும், மேலும் தென்படா பற்பல மறைநிலங்கள் தென்படுமாறு ஒவ்வொரு அவத்தை நிலையிலும் புதியப்புதிய நுழைவுகள் பெற்று, இதுவரை காணாத முறையில் மறைக்கப்பட்டிருந்த ஆய்வுத் துறைகளை இந்த அகயாத்திரையில் கண்டு, பிறகு தெளிசாக்கிரத்தில் அவற்றை மறந்திடாது நினைத்து அலசி பெயர்த்து வழக்கியல் மொழிக்குக் கொண்டு வந்து தெளிஞானமாக்கி அறிந்து மகிழும் அதுவே:

அவ்வவற்றின் நீங்கலது வாங்கு:

அந்தந்த அவத்தைகளில் மீண்டும் விழாமுறையில் கழன்று விடுதி பெறுவதாகும்.

எது தொடர்ந்து தெளிவற்ற மறைஞானமாகவே தொடர்கின்றதோ, அதன்மேல் ஆன்மாக்களுக்கு ஆர்வங் குறையாதேத் தொடரும். இவ்வாறான முறையில் ஞானதிரோதகம் நிற்க, அதனை நீக்குவான் பொருட்டு ஆன்மா ஆங்காரப்பட்டு முனைந்தெழுந்து நிற்கும். இனி தெளிஞானத்தின் இலாட தானத்தில் இவற்றைக் கொண்டு வந்து, ஐயம் திரிபு யாதுமில்லா தெளிஞானவிடயமாக ஆக்கிவிட, அதன்மேல் ஆர்வம் தானே கெடும் என்பது. தொடர்ந்து அலசி விசாரித்து தெளிய வேண்டியவொன்றாக அல்லாதுபோதலின் இவ்வாறான மாற்றம் என்பது.

இப்படி யார் செய்கின்றார்களோ அவர்களே பக்குவத்தில் உயர்ந்து மேலான பதங்கள் மகிழ்வர் என்பதாம்.
17.0
சைவ ஞானத்தெளிவியல் ( Saiva Theory of Psychic Illumination)


இந்த எடுத்துக்காட்டில், சமய வாழ்க்கையை ஓர் நூலிய அறிவியல் துறையாக வளர்த்துவிட்ட மெய்கண்டார், அதற்கு அடிப்படையான ஞானத்தெளிவியல் தொடர்பான தமது தெரியத்தை (theory) இலைமறை காயாகவே விளக்கி இருக்க அதனை மேலும் விளக்கக் கருதி இன்னும் சில வார்த்தைகள இங்கு. சமாயாதீத சைவத்திற்கு, தகுந்த சாதனங்களே தேவையானது; மக்களை அடிமைப் படுத்தி தம்மையே தொழ வைத்து இறைவனை மறக்கச் செய்யும் அற்ப குரவர்கள் தேவையில்லை. இதனைப் போன்ற சித்தர்களும் தீர்க்கதரிசிகளும் வழிகாட்டிகளாக அமைவரேத் தவிர இறைவனது இடத்தில் அமரக்கூடியவர்கள் அல்ல. தொழ வேண்டியது இறைவனையே, மற்று யாரையும் யாதையும் அல்ல.
மேலே விளக்கியவாறு ஆன்மாக்கள் பற்பல கழற்சி வினைகளைச் செய்ய , அதனின் தத்துவக் கழற்சிகளுக்கு ஆளாகி, பொறிலிய நூலியப் பார்வைகளோடு நுதலியப் பார்வைகள் பல பெற்று அவற்றின் அமையும் சாக்கிரம் சொப்பனம் போன்ற பஞ்சாவத்தைகளை அனுபவங்கள்ளாக தூய்த்து வாழும் என்பதைக் கண்டோம். இது அனைவருக்கும் அமையக் கூடியது, சாதி மத பேதங்களை எல்லாங் கடந்த ஓர் ஆன்மப்பொது (psychological universal) என்பதையும் கண்டோம். இந்த அவத்தைகள் மறைபொருளாகவே பற்பல உலகங்களை ஆங்கிருக்கும் பொருட்களை அனுபவ பூர்வமாக அறியத் தர, அவையே வைகரியாதி மொழிகள் வழி அகத்தே இருத்தப்படுகின்றன. சமய வாழ்க்கை என்பது அதனோடு அமையாது, அதன் முடிவானவோர் துறையாக, நூலிய அறிவியல் (Hermeneutic Science) சான்ற தெளிஞானவியல் அமைகின்றது. இங்குதான், சாக்கிராதி அவத்தைகளின் அறியப்படுவனவற்றை, பெயர்த்தறிந்து இலாட தானத்தின் தெளிஞானமாக ஆக்கும் பணி அமைகின்றது. இதன் வழியே தான் சிவஞானம் பகிழப்பெற்று அதன்வழி , வள்ளுவப் பெருந்தகை முன்மொழிந்த, பற்றற்றான் பற்றும் பற்றப்படுகின்றது என்பதாம். மேற்குலகில் இந்த தெளிஞானவியலை டேகார்டு (Rene Descartes ) என்பார் தொடக்கி வைத்தாலும் அது நலமே வளராது போய்விட, சைவ சிந்தனையில் அது ஆழ வேரூன்றி நலமே வளர்ந்துள்ளதை கண்டு நாம் பெரிதும் மகிழவேண்டும்.
இந்த தெளிஞானவியலின் அடிப்படையானது, சாக்கிராதி அவைத்தைகளின் ஆகுவனவற்றை வைகரியாதி மொழிகள் வழி நினைவில் இருத்துவதோடு, அவற்றைப் பெயர்த்து வழக்கியல் மொழிக்குக் கொண்டு வந்து, தான் ஐயம் திரிபற உணர்வதோடு பிறருக்கும் உணர்த்தும் வகையில் தெளியவேதான், அது தெளிஞானமாகி , எவ்வித ஐயப்பாட்டிற்கும் இடந்தராத மாணறிவாகி ஆன்மாக்களின் ஞானவேட்கைகளை ஆகவே எல்லா வேட்களையும் போக்குகின்றது என்பதாம். எவ்வகை அறிவும் இவ்வாறான இலாடதானத்து தெளிஞானம் ஆக்காவிடில், ஓர் வகை ஐயப்பாடு உடன் நீங்காவகை இருந்துகொண்டே, அதனை தெளிவாக்கி உணருமாறு வேட்கைகளை பிறப்பித்துக் கொண்டே இருக்கும். எப்பொழுது இவ்வாறு பெயர்த்து அம் மறைநிலன் தெளிஞானம் படுத்தப்படுகின்றதோ, அப்பொழுதே அது தொடர்பான வேட்கைகளும் அறும் என்பதாம்.
இத்தகைய மறைஞானங்களை தெளிஞானங்களாக மாற்றுவிக்கும் கற்றலில் அடங்கும் பெயர்ப்பாதி வினைகளே, ஊழ்ச்சி வினைகள் எனப்படும். இவற்றின் வழியே தான் அநாதியே அகத்துக் கிடக்கும் அஞ்ஞானம் போக்கி மெய்ஞானம் பெற முடியும் என்பதாம். யாவன் முயன்று இந்த கழற்சி ஊழ்ச்சி யாதி வினைகளை செய்கின்றானோ அவனுக்கு எவ்வித தடையுமின்றி உரித்தாகும் இந்த மேலான நிலை என்பதின், அனவருக்கும் சாத்தியமாக கிடக்கும் ஒன்றே இதுவெனப் படுகின்றது. பொறிலிய நூலியப்பார்வைகளோடு நுதலியப்பார்வைகள் வழியும் உலகத்து நிகழ்ச்சிகளைப் பார்த்துத் தெளியும் போது, ஆங்கு எவ்வாறு உலகத்து நிகழ்ச்சிகள் அனைத்தும் இறைவனது திருவிளையாடல்களால், பஞ்சகிருத்தியங்களால் மெய்யாக்கப் படுகின்றன வென்றும், இவையே எண்வகை புத்திகளாகவும் அறியப்பட்டு அவை எவ்வாறு ஆன்மாக்களுக்கு எண்வகை சித்திகளை அருளுகின்றது என்பதுவும் தெரியவரும் என்பதாம். இங்கேயே இறைவனை எண்குணத்தனாக கண்டுவக்கும் பேறும் கிட்டுமென்பதாம்.

இனி இதனையுங் கடந்து, துரியாவவத்தைகட்கு ஆளாகி, அதன்வழி நுதலியப்பார்வையை இன்னும் ஆழமாக்க, மந்திர யந்திர தோற்றமும் செயற்பாடும் புரிய வர, இறைவனை மந்திர சொரூபியாக கண்டு மகிழும் பேறு கிட்டும் என்பது. உலகெங்கும் புறத்தே பலவாகத் தோன்றினும், அகத்தே அனைத்தும் மந்திர யந்திரங்களின் தொழிற்பாடே என்ற தெளிவும் மிகும். இவ்வாறான தெளிவு இன்னும் மிக அதுபொழுது, இறைவனை பஞ்சகிருத்தியனாகக் கண்டு மகிழும் பேறும் உண்டாம். இந்த துரியத்தின் மேன்நிலைகளில், சிவப்பார்வை வந்தமைய, நாதமும் விந்துவும் அதிசூக்குமை மந்திர வடிவாகிய ஓங்காரத்தோடு ஒன்றாய் நிற்கின்ற மூலவடிவாகிய அருட்பெருஞ்சோதி வடிவில் இறைவனை தரிசிக்கும் பேறு உண்டாம். இனி இதன் பிறகு துரியாதீத அவத்தையை தெளிசாக்கிர இலாட தானத்திற்கு கொண்டு வரும் போதே, சிவப்பார்வையின் மேலாகிய அதீதப் பார்வையும் இன்னும் அதற்கும் மேலதாகியதும் முடிவானதுமாகிய பார்வையற்ற பார்வையும் அமையும். அப்பார்வையில் சுட்டென யாதும் இலாது போதலின், அதனின் காலவுணர்வுங் கழற்றப்படுதலின், அதுவே சிவசத்தாகிய சிவஞானம் தரும் என்பது. வாழ்க்கையின் எல்லாத் தேடல்களுக்கும் மூலமாகிய ஞானத்தேடலை முடிவிற்கு கொண்டுவரும் தெளிஞானமே இச்சிவஞானமாம், பார்வையற்ற பார்வையின் மேற் பார்வை இல்லை என்பதின்.
இவ்வாறு பற்பல அவத்தைகளை பெறுவதோடல்லாது, அவற்றை தீர சிந்தித்துப் பெயர்த்து தெளிஞானமாக்கிக் கொண்டே சென்றால், முடிவில் எல்லை ஞானமாகிய சிவஞானமே ஞானமாக அமையும் ; இதனை ஈட்டித்தரும் சிந்தனைவேள்விகளே இங்கு ஊழ்ச்சி வினைகள் எனப்படுகின்றன. எத்துறையை இவ்வாறு தெளிஞானமாக்குகின்றோமோ, அதனின்று விடுபட்டு இன்னும் ஆழமான பிறிதோர் துறைக்குச் செலும் பேறு வாய்ப்பதால், இத்தகைய ஊழ்ச்சி வினைகள் பக்குவ முதிர்ச்சிக்கும் , கற்றளி( ஆதாரத் தல) பெயர்ச்சிகட்கும் காரணமாக அமைகின்றதைக் காண்க.

இனி இவ்வளர்ச்சியை மேலே விளம்பியவாறு ஓர்வகை கூர்தல் வளர்ச்சியாக(evolutionary development) கொள்ளவும் முடியும். எவ்வாறெனின், பொறிலியப்பார்வைகள் போன்ற பார்வைகள் யாதும் அற்று சுத்தஞானக் குருடாகக் கிடக்கும் நிலை கேவலாவத்தை என்றும், இந்தப் பார்வைகள் வந்தமைய அதன்வழி பற்பல கண்டு ஞானம் புசிப்பது சகலாவத்தை என்றும், ஊழ்ச்சி வினைகள் வழி இவற்றை தெளிஞானமாக்கி மகிழ்வது சுத்தாவத்தை என்றும் நிலயவத்தைகளை அறிந்து கொள்ளலாம். இவற்றில் , சகாலவத்தையே எல்லா ஆன்மாக்களுக்கும் இயல்பான தொன்றாக, சமயஞ் சார்ந்த வாழ்க்கை அதனின்று மேலாலவத்தைகட்குக் கொண்டு செல்ல, அதற்கு எதிரான நாத்திக வாழ்க்கை, கேவாலவத்தைக்கு கீழே இழுக்கும் கீழாலவத்தைகளத் தரும் என்பதுமாம்.

இத்தகு சுத்தாவத்தை நிலலைகளில் படவேதான், ஆணவத்தொடக்கிலிருந்து கழன்று சுத்தமாகும் சூழல் பிறக்க, இங்கேயே அணுத்துவம் போக்கிய பரஞான நிலைகள் அனுபவிக்க வரும் என்றது. சகலாவத்தை நிலைகளில், குறிப்புக்கால உணர்விலிருந்து கழறாதே ஆன்மா உலக அனுபவங்களைப் பெற்று சுட்டுணர்வு ஆகவே சுட்டுக்கால வுணர்வு திசையுறு இடவுணர்வுகளையே அறிவின் முதற்பொருளாகக் கொண்டு உழலும். இந்த குறிப்பு நிலையிலிருந்து சுட்டுநிலைக்குப் பெயர்ந்து சுட்டுனர்வுகளை மகிழ்வது, அந்த ஆணவமலத் தொடக்கினால்தான். தெளிஞானத்தை வளர்த்து வளர்த்து இலாடதானத்தே ஐந்தவத்தைகளின் உட்பொருளையெல்லாம் தெள்ளறிவுப் பொருளாக மகிழும் ஆன்மா, இந்த ஆணவ மலத் தொந்தனையால் வரும் ஞானதிரோதகத்தைப் போக்கி, அதனின் சகலாவத்தை நிலையிலிருந்து கழன்று பரஞானங்களையேத் தரும் சுத்தாவத்தை மகிழும் என்றது. இங்கு எஞ்சி நிற்பதாகிய மறைப்பு, சிவஞானத் திரோதகமே என்ன, அதனின் சுட்டுகால உணர்விற்குப் பெயரா குறிப்புக்கால உணர்வினையே காலவுணர்வாக நின்று வாழும். இந்நிலையில் இறையருளின், இறைவனிடமிருந்து அந்நியமா நிற்பது கழற்சியுற, இந்த குறிப்புக்கால உணர்வாகிய பராவவத்தைக் காலவுணர்வும் இல்லாதுபோம் என்றவாறு. எவ்விதக் காலவுணர்வும் தலைப்படாத நிலையில் அறிவில் சுடர்ந்து நிற்கும் ஞானமே சிவஞானமென, ஊழ்ச்சி வினைகளின் முடிவு அறிவின் இந்த எல்லைநிலை என்றது.

17.1
முடிவுரை

தமிழர்களது சைவத்தில் தவிற பாரதத்திலும் மற்றும் வேறு எந்த நாட்டிலும் சரி, மானிடர்களின் பக்குவ முதிர்ச்சியை பதவூழிகளை இவ்வாறு விளக்கவில்லை என்பதைக் கண்டு, அதனை செவ்வே செய்யும் மெய்கண்டாரை நலமே போற்றுக.

மெய்கண்டாரின் அநாதிப் பொருளியல் முற்றும்



பங்களிப்பாளர்கள்

Ulagankmy

இப்பக்கம் கடைசியாக 18 ஜூலை 2012, 07:41 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,746 முறைகள் அணுகப்பட்டது.