முருங்கைக்கீரைச் சமையல் வகைகள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

முருங்கைக்கீரையில் செய்யும் உணவு வகைகள்:-

முருங்கைக்கீரைப் பருப்பு உசிலி:

தேவையான பொருட்கள்: முருங்கைக் கீரை ஒரு கட்டு, கடலைப்பருப்பு, து,பருப்பு இரண்டும் சமமாய்க் கலந்தது ஒரு கிண்ணம், மி.வத்தல், நாலில் இருந்து ஆறு வரை, உப்பு, பெருங்காயம்.


முருங்கைக் கீரை ஒரு கட்டு: வீட்டிலே முருங்கை மரம் இருந்தா கீரையை நல்ல இளங்கீரையாகப் பார்த்து பறிச்சுக் கொள்ளவும்.கீரையைப் பறிச்சோ அல்லது வாங்கியோ வச்சாச்சா? இப்போ கீரையை நல்லா ஆயணும். குச்சிகளை எல்லாம் ஆய்ந்து கீரையை மட்டும் தனியா எடுத்து நறுக்கி வச்சுக்கணும். நறுக்கினப்புறமா நல்லாத் தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி வைங்க கீரையை.


து.பருப்பு ஒரு கப், கடலைப்பருப்பு ஒரு கப் இரண்டையும் சேர்த்துக் கழுவி நனைச்சு வைக்கணும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊறட்டும். அப்புறமாய் மி.வத்தல் உப்பு தேவையான அளவு, பெருங்காயப் பொடி, அல்லது கட்டியானால் பருப்போடயே சேர்த்து ஊற வைச்சுடலாம். எல்லாத்தையும் நன்கு நைசாக அரைச்சுக் கொள்ளவேண்டும். அரைத்த கலவையை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டுக்கவும். அரைச்சதை எடுத்ததும் மிக்ஸி ஜாரில் கொஞ்சம் ஜலம் விட்டு மிச்சம், மீதி இருக்கும் பருப்புக் கலவையை எடுத்துக் கொண்டால் ரசத்துக்கு விளாவிடலாம். அது தனியா வச்சுப்போம். இப்போ பாத்திரத்தில் போட்ட பருப்புக் கலவையில் முருங்கைக் கீரையைச் சேர்த்து நன்றாய்க் கலக்கவும்.பருப்பும் கீரையும் ஒன்றோடொன்று நன்கு கலந்ததும் அதை இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும். வெந்த கலவையை ஒரு ஸ்பூனால் குத்தினால் ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.


வெந்த கலவை வெளியே எடுத்து ஆறினதும் உதிர்த்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும், இந்த அளவுக்குக் குறைந்த பட்சமாய் ஒரு கப் எண்ணெயாவது தேவை. எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்புப் போட்டு வெடித்ததும் கருகப்பிலை சேர்த்துப் பருப்புக் கலவையைக் கொட்டிக் கிளறவும். நன்கு உதிர்ந்து வரும் வரை கிளறவும். பின்பு சூடாக இருக்கும்போதே, மோர்க்குழம்பு அல்லது வத்தக்குழம்போடு பரிமாறவும்.



முருங்கைக்கீரைப் பொரியல்:

தேவையான பொருட்கள்: ஒரு கட்டு முருங்கைக் கீரை, பயத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், கழுவி ஊற வைக்கவும். தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், தாளிக்க எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, உப்பு தேவையான அளவு, மி.வத்தல். தேவை எனில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை.


மேற்சொன்ன மாதிரியில் முருங்கைக்கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நன்றாய்க் கழுவி வடிகட்டிவிட்டுப் பின்னர் ஊற வைத்த பாசிப்பருப்போடு சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் கடுகு, உ.பருப்பு, மி.வத்தல் தாளிக்கவும். வெங்காயம் தேவை எனில் வெங்காயமும் போட்டு வதக்கவும். வெங்காயம் போடாமலேயே நன்றாக இருக்கும்.பின்னர் வேக வைத்து வடிகட்டி வைத்திருக்கும் கீரை& பருப்புக் கலவையைச் சேர்க்கவும். சர்க்கரை தேவை எனில் ஒரு டீ ஸ்பூன் சேர்க்கவும். பின்னர் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். சாதம் சாப்பிடும்போது சாம்பார் சாதம், ரசம் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள நல்ல துணையான சைட் டிஷ் இது.


முருங்கைக் கீரைப் பொரித்த குழம்பு.

தேவையான பொருட்கள்: முருங்கைக் கீரை ஒரு கட்டு. பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி சேர்த்து நன்றாகக் குழைய வேக வைக்கவும். தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயம், மி.வத்தல், உப்பு. எண்ணெய், தாளிக்கக் கடுகு, உளுத்தம்பருப்பு.


மி.வத்தல், மிளகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு போன்றவற்றை வாணலியில் எண்ணெய் ஊற்றித் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும், தேங்காயையும் தேவையானால் வறுக்கலாம். பொதுவாய்ப் பச்சைத் தேங்காயே சத்து மிகுந்திருக்கும் என்பதால் வறுக்காமலே சேர்த்துக்கலாம். வறுத்த பொருட்களோடு தேங்காயையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.


முதலில் பருப்பை நன்கு வேக வைக்கவும். பின்னர் கீரையை நன்கு அலசிக் கழுவிவிட்டுத் தனியாக வேக வைக்கவும். வெந்த கீரையை வெந்த பருப்போடு சேர்த்துத் தேவையான உப்புப் போட்டு சற்று நேரம் வேக வைக்கவும். நன்கு வெந்ததும், அரைத்த கலவையைக் கொட்டிக் கிளறி விட்டுச் சற்று நேரம் குழம்பைக் கொதிக்க விடவும். சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கித் தேங்காயெண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு மி.வத்தல் தாளிக்கவும்.


மேற்சொன்ன முறையிலேயே முருங்கைப் பூவையும் நன்கு கழுவி, அலசிக்கொண்டு வேக வைத்துப் பொரித்த குழம்பு செய்யலாம்.


முருங்கைப் பூ கஷாயம்: தேவையான பொருட்கள்

முருங்கைப் பூ ஒரு கிண்ணம், சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன், காய்ந்த திராக்ஷை ஒரு டேபிள் ஸ்பூன்.தேவையான நீர்.


வெறும் வாணலியில் சோம்பை நன்கு வெடிக்கும் அளவுக்கு வறுத்துக்கொள்ளவும். குறைந்தது ஒரு லிட்டர் தண்ணீர் அதில் ஊற்றவும். இப்போது முருங்கைப் பூவையும், திராக்ஷைப் பழத்தையும் சேர்க்கவும். நன்கு வற்றி அரைக் கப் வரும் வரை கொதிக்கவிடவும். கர்ப்பிணிகளுக்கு நிறை மாசத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கவோ, அல்லது பிரசவ நேரம் எனில் வலியை அதிகரித்து சுலபமாகப் பிள்ளை பிறக்கச் செய்யவோ பயன்படும். வலி பொய் வலி எனில் இதைக் குடித்ததும் வலி நின்று விடும். உண்மையான பிரசவ வலி எனில் வலி அதிகரிக்கும்.(சொந்த அநுபவம்) ஆகவே மிகவும் அருமையான ஒரு கஷாயம் இது.


முருங்கைக்கீரை அடை:

முதல் முறை: புழுங்கல் அரிசி இரண்டு கிண்ணம், தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம். முருங்கைக் கீரை நறுக்கி ஆய்ந்து வைத்தது ஒரு கிண்ணம்.


புழுங்கல் அரிசியை நன்கு கழுவி ஊற வைக்கவும். பின்னர் கிரைண்டரில் போட்டு தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும். அரைக்கும்போதே உப்பும், பெருங்காயமும் சேர்க்கவும். வெளியே எடுத்து முருங்கைக்கீரையைச் சேர்த்து, அடைக்கல்லில்/ நான் ஸ்டிக் தவாவில் எண்ணெய் ஊற்றி அடைகளாகப் போட்டு எடுக்கவும். சாம்பார், தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னியோடு சாப்பிட சுவையாக இருக்கும். இதை வெறுமரிசி அடை என்பார்கள். இதிலேயே தேவை எனில் பச்சை மிளகாயும், இஞ்சியும் காரத்துக்குச் சேர்க்கலாம். பெரும்பாலும் காரமில்லாமலே செய்வார்கள்.


இரண்டாவது முறை: பச்சரிசி ஒரு கிண்ணம், புழுங்கலரிசி ஒரு கிண்ணம், து.பருப்பு ஒரு கிண்ணம், க.பருப்பு முக்கால் கிண்ணம், உளுத்தம்பருப்பு அரைக்கிண்ணம். மி.வத்தல் ஆறு, ப.மிளகாய் ஒன்று, உப்பு, பெருங்காயம், முருங்கைக் கீரை ஒரு கிண்ணம்.


எல்லாவற்றையும் நன்கு கழுவி அரிசியைத் தனியாகவும், பருப்பு வகைகளைத் தனியாகவும் ஊற வைக்கவும்.


மி.வத்தல் ஆறு, பச்சை மிளகாய் ஒன்று, உப்பு, பெருங்காயம் சேர்த்து அரிசியை முதலில் கிரைண்டரில் அரைக்கவும். அரிசி கொஞ்சம் அரைபட்டதும் பருப்புக்களைச் சேர்த்து அரைக்கவும். ரொம்ப நைசாக அரைக்கவேண்டாம், கொஞ்சம் கொரகொரப்பாகவே இருக்கட்டும். வெளியே எடுத்து நறுக்கி வைத்த முருங்கைக்கீரையைச் சேர்க்கவும்.


அடைக்கல்லில்/நான் ஸ்டிக் தவாவில் கொஞ்சமாய் எண்ணெய் விட்டு அடை மாவைப் பரத்தவும். அடைகளாகப் போட்டு எடுத்துச் சூடாகச் சாப்பிடவும். இதற்கும் சாம்பார், சட்னி நன்றாக இருக்கும். வற்றல் குழம்பும் இதனோடு ஒத்துப் போகும்.


--Geethasambasivam 08:35, 5 ஜூலை 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geethasambasivam மற்றும் Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 ஆகஸ்ட் 2011, 04:28 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 6,220 முறைகள் அணுகப்பட்டது.