மீனா சுந்தர்
காதலும், வீரமும், களிநடம் புரியும் பழந்தமிழ் நூல் "முத்தொள்ளாயிரம்". சேரன், சோழன், பாண்டியன் என்ற மூவேந்தர்களைப் பற்றி தொள்ளாயிரம் வெண்பாக்களில் புகழ்ந்து பாடும் பாக்களின் தொகுப்பே இந்நூல்.
2,700 பாடல்களில், தற்சமயம் கிடைத்திருக்கும் பாடல்கள் 110 மட்டுமே.
இந்நூலை இயற்றிய புலவர் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
காதலை,ஒரு புதிய பரிமாணத்தோடு காட்டும் அழகியல் உணர்வுகளை முகிழ்க்கும் பாடல்கள்
இதில் இடம் பெற்றுள்ளன. மகள் மீது தாய்கொண்ட உண்மையான அக்கறையின் வெளிப்பாட்டை
மனத்திரையில் காட்சிப்படுத்துகிறது.
முத்தொள்ளாயிரப் பாடல்களில்,
சேர மரபினரை கோதை,குடநாடன்,வஞ்சிக்கோ என்றும்,
சோழ மரபினரை நீர்நாடன்,கிள்ளி,காவிரி நீர்நாடன்,வளன் என்றும்,
பாண்டிய மரபினரை மாறன், தென்னவன்,வழுதி, செழியன் என்றும்
குறிப்பிடப்படுவதைக் காணலாம்.
சேர மன்னனாகிய கோதை என்பவன், மலர் மாலையை அணிந்து வீதியில் பவனி வருகிறான்.
மாலையிலுள்ள மலர்களை ஆராய்ந்து வண்டுகள் மொய்க்கின்றன.
இளமையின் வாசலில் அடியெடுத்து வைக்கும் அழகுப் பதுமைகள் ஓர் அழகிய காவலனைக் கண்டால் என்ன செய்வர்?
இளங்கன்னியர் மனம் என்னாகும்?
அழகுக் காவலன் கன்னியர் மனதைக் கவர்ந்திழுத்து கொள்ளையிட்டு விடுவானே!
இத்துன்பம் ஈன்றவள் அறியாததா?
குதிரைபூட்டிய தேரில் விரைந்து செல்லும் அவனைக் காணவேண்டி இளம்பெண் ஒருத்தி வாசலுக்கு விரைகிறாள்.அவனைக் கண்டால் தன் மகள் நிலை என்னாகும் என அஞ்சுகிறாள் அப்பெண்ணின் தாய்.காதல் நோய்கொண்டு கன்னியவள் தவிப்பாளே! மன்னவனை நினைத்தே மனதுக்குள் குமைவாளே! தானிருக்கும் உலகம் மறந்து பெருந்துன்பத் தீயில் கருகுவாளே! என்றஞ்சியபடி அத்தாய்,வீட்டுக்கதவை இழுத்துப் பூட்டி விடுகிறாள்.
ஆனால்,மகள் என்ன செய்தாள் தெரியுமா?
அன்னை அவ்விடம் விட்டு அகன்று சென்றதும், ஆவல் பொங்க மகள் கதவைத் திறக்கிறாள்.
மீண்டும் அங்கே வந்த அன்னை கதவை அடைக்கிறாள்.
மீண்டும் மகள் கதவைத் திறக்கிறாள்.
இவ்வாறு தாய் அடைப்பதும், மகள் திறப்பதுமாய் அக்கதவுபடும்பாடு சொல்லிமாளாது.
அன்னையர் அடைக்க மகளிர் திறக்கவுமாய் அத்தெருவில் உள்ள வீட்டுக் கதவுகளின் குமிழ்கள்
எல்லாம் தேய்ந்து போயின.
அதாவது, மகளின் காதல்பயிர் மனதில் செழித்து வளர வளர, வீட்டுக் கதவுக் குமிழ் தேய்ந்து
கொண்டேயிருந்தது என்பதை உணர்த்துவதாய் பாடல் ஒன்று படைக்கப்பட்டுள்ளது.
அப்பாடல் வருமாறு:
"தாயார் அடைப்ப மகளிர் திறந்திட
தேய்ந்திரிந்த குடுமியவே ஆய்மலர்
வண்டுலாவும் கண்ணிவயமான் தேர்க் கோதையை
கண்டுலாவும் வீதிக்கதவு. - (முத்தொள் - பாடல்.10)
எப்பொருளாயினும் அதிகம் பயன்படுத்தினால் தேய்ந்து போவது இயற்கை.
ஆனால்,அன்னையர் அடைப்பதாகவும், மகள் திறப்பதாகவும், அதனால் கதவு தேய்வதாகவும் ஓர்
அழகிய கற்பனை, நம்மை இரசனையின் உச்சத்துக்குக் கொண்டுசெல்கிறது.
இப்பாடல் தாய் என்ற உன்னத உறவின் மேன்மையை, கடமையை, மகள் மீது கொண்ட
அக்கறையின் வழி அழகுறநிறுவி நிற்கிறது.
கிராமங்களில் இன்றைக்கும்,மகளின் திருமணம் முடியும்வரை, மகளின் வாழ்க்கை குறித்த கவலையும்,நல்வரன் கண்டு நல்வாழ்வை ஏற்படுத்தித்தரும் அக்கறையும்,அதுவரை மகளின் மனம்
சஞ்சலப்படும் வகையில் ஏதும் நடந்துவிடக்கூடாதே என்கிற பொறுப்புணர்ச்சியும்
பெற்றோரிடம் இருந்து வருவதைக் காணலாம்.
இந்தப் பொறுப்புணர்ச்சி ஓர் உளவியல் சார்ந்த தற்காப்பு நடவடிக்கையாகவே படுகிறது.
மேலும், இருண்மையுடன் எழுதப்படும் புலவர்களின் எழுத்துகள் புரியவில்லை என்றும்,எளிய
சொற்களால் புரியும் வண்ணம் எழுதுகிறார்கள் கவிஞர்கள் என்பதையும் விளக்கும் வண்ணமாய்,
"புலவர் அடைப்ப கவிஞர் திறப்பர்", என்னும் சொல்லாடல் இப்பாடலில் இருந்தே
தோன்றியிருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
நன்றி:- தினமணி
--Ksubashini 18:53, 17 மே 2010 (UTC)