முத்தூற்றுக் கூற்றம்-கள ஆய்வு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

முத்தூற்றுக் கூற்றம்-கள ஆய்வு

எஸ்.ராமச்சந்திரன்



சங்க இலக்கியமான புறநானூற்றில், மாங்குடி கிழார் பாடிய பாடலொன்றில் (புறம் 24) கடற்கரையோரத்திலிருந்த நல்லூர் என்ற ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு மாவேள் எவ்வி என்ற வேளிர்குலச் சிற்றரசன் ஆட்சி செய்து வந்த செய்தி குறிப்பிடப் படுகிறது.


மாவேள் எவ்வியின் ஆட்சிப் பகுதிகளில் புனலம்புதவு, மிழலை, முத்தூறு ஆகிய ஊர்கள் அடங்கியிருந்ததாகவும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் இப்பகுதிகளை வென்றதாகவும் மாங்குடி கிழார் குறிப்பிடுகிறார்.
வேளிர் என்போர் மூவேந்தர்களுக்குப் பெண் கொடுத்து மண உறவு கொள்ளும் மரபுடையோராதலால், மாவேள் எவ்வியும் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் மண உறவு கொண்டவனாக இருந்திருக்கக் கூடும். எவ்வியின் ஆட்சிக்குட்பட்ட மிழலை, முத்தூறு ஆகிய ஊர்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்ட மிழலைக்கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய நாட்டுப் பிரிவுகள் கி.பி. 5-ம் நூற்றாண்டிலிருந்து வழக்கிலிருந்தமை கல்வெட்டுக்களால் புலனாகிறது. இத்தகைய நாட்டுப் பிரிவுகள், வேளாண்மை விரிவாக்கத்துடன் தொடர்புடையவை.


காடுகள் அழிக்கப் படுதல், புதிய நீர்ப்பாசன முறைகளும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப் படுதல் ஆகியன தமிழ்ச்சமூகம் வீர யுகத்திலிருந்து நிலப் பிரபுத்துவத்தை நோக்கி நடத்திய அணிவகுப்பின் தொடக்ககால நிகழ்ச்சி நிரல்களாகும். தமிழக வரலாற்றில் மிகவும் பழமையான நாட்டுப் பிரிவுகளுள் முத்தூற்றுக் கூற்றமும் ஒன்றாக இருந்ததென்பது புகழ் பெற்ற பூலாங்குறிச்சிக் கல்வெட்டின் மூலம் புலனாகிறது.*1 கி.பி. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டில், முந்நூற்றுக் கூற்றத்து விளமர் என்ற ஊர் குறிப்பிடப் படுகிறது.
முந்நூறு என்ற ஊரினைத் தலைமையிடமாகக் கொண்ட கூற்றம் என்ற நாட்டுப் பிரிவு பற்றி முதன் முதலில் இக் கல்வெட்டில்தான் குறிப்பிடப் படுகிறது. எனினும், சங்ககாலத்திலேயே இவ்வூரில் நெல்வயல்கள் நிரம்ப இருந்தன எனவும், வேளாண்மையுடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் வேளிர்கள் இவ்வூரில் வசித்ததாகவும் மேற்குறிப்பிட்ட புறநானூறு தகவல் தருவதால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வூர் நிலப்பிரபுத்துவத் தலைமையிடங்களுள் ஒன்றாக உருவெடுக்கத் தொடங்கிவிட்டதெனத் தெளிவாகிறது.


'வயலில் பாய்கின்ற நீரில் நீந்தும் மீனைப் பிடித்துத் தின்னும் நாரை, வைக்கோல் போரில் சென்று ஒடுங்கும் சிறப்பையுடையதும், பொன் அணிகலன்கள் பூண்ட யானைகளை உடைய பழமையான வேளிர்களால் உயர்வெய்தியதும், குவியல் குவியலாக நெல் விளைவதுமாகிய முந்நூறு' (கழனிக்கயலார் நாரை போர்விற் சேக்கும் பொன்னணியானைத் தொன் முதிர் வேளிர் குப்பை நெல்லின் முந்நூறு) என்று மாங்குடி கிழார் அழகாக வருணிக்கிறார். முத்தூற்றுக் கூற்றம் போன்றே மிழலை என்ற ஊரினைத் தலைமையிடமாகக் கொண்ட மிழலைக் கூற்றமும் பழமையான நாட்டுப் பிரிவேயாகும். *2


இவ்விரு கூற்றங்களும் இன்றைய புதுக்கோட்டை, பசும்பொன் மாவட்டங்களில் அடங்கியிருந்தன. மிழலைக்கூற்றத்துடன் அதலைக்கூற்றம் என்ற நாட்டுப் பிரிவும் சேர்ந்து கானாடு என்ற நாட்டுப் பிரிவு பிற்காலத்தில் உருவாக்கப் பட்டது என்றும், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி வட்டமும் திருமெய்யம் வட்டத்தின் கிழக்குப் பகுதியும் சேர்ந்ததே கானாடு என்றும் கருதப் படுகிறது. *3


முத்தூற்றுக் கூற்றம் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி வட்டமும் பசும்பொன் மாவட்டத்தின் திருவாடானை வட்டமும் சேர்ந்த பகுதி என்பது கல்வெட்டாய்வாளர்களின் கருத்தாகும். *4 புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள (ஆவுடையார் கோயிலுக்கருகிலுள்ள) திருப்புனவாசல், கி.பி.11,12 ஆம் நூற்றாண்டுகளில் முந்நூற்றுக் கூற்றத்திலடங்கிய ஓர் ஊராக இருந்தது என்பது அவ்வூர்க் கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்ட கல்வெட்டுக்களால் புலனாகின்றது. புறநானூற்றில் குறிப்பிடப் படும் புனலம் புதவு, திருப்புனவாசலாக இருக்கலாம்.*5 இவ்வூருக்கு அருகில், சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் எல்லையாக இருந்ததெனக் கருதப்படும் வெள்ளாறு ஓடுகிறது. அரசங்கரை என்ற இடத்தில் வெள்ளாறு ஐந்து கிளைகளாகப் பிரிந்து சற்றுத் தொலைவில் கடலில் கலக்கிறது. (இவ்வாற்றைப் பாம்பாறு என்றும் கூறுவதுண்டு.) ஆனால் பாம்பாறு அறந்தாங்கியருகே வெள்ளாற்றில் கலந்து விடுகிறது.
இதன் பின்னர் வெள்ளாற்றின் ஒரு கிளை மணமேல் குடியருகிலும் பிற கிளைகள் அரசங்கரையிலும் கடலில் கலக்கின்றன. புதவு என்ற சொல்லுக்குக் கதவு, வாயில் எனப் பொருள் உண்டு. புனலம்புதவு என்பது ஆறு கடலில் புகும் வாயில் எனப் பொருள்படக் கூடும்.


முந்நூற்றுக் கூற்றம் என்பது எப் பகுதியிலிருந்தது என்று அறிஞர்கள் வரையறை செய்திருப்பினும், முந்நூற்றுக் கூற்றத்தின் தலைமையிடமாகத் திகழ்ந்த "முந்நூறு" எங்குள்ளது எனக் கண்டறியும் முயற்சி இதுவரை மேற் கொள்ளப் படவில்லை. எனவே இம்முயற்சியில் ஈடுபட, புதுக்கோட்டை மாவட்டம் மேலப் பனையூரைச் சேர்ந்த தமிழாசிரியர் கரு. இராசேந்திரன் அவர்களும், புதுக் கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் சந்திரபோசு அவர்களும், இக்கட்டுரையின் ஆசிரியரும் முடிவு செய்தனர். முந்நூற்றுக் கூற்றத்தில் அடங்கிய ஓர் ஊராகக் கல்வெட்டுகள் கூறும் திருப்புன வாசலிலிருந்து இம்முயற்சியைத் தொடங்கினர்.


திருப்புனவாசலுக்கு அருகில், இராமநாதபுரம் சேதுபதி மன்னர் வரலாற்றில் இடம் பெற்ற ஓரியூர் உள்ளது. ஓரியூருக்குச் சிறிது தொலைவில் முத்துக்குடா என்ற கடற்கரையோரச் சிற்றூர் உள்ளது. இவ்வூரே முந்நூறாக இருக்கலாமோ என்ற ஐயத்தில் இவ்வூரும் சுற்றுப்புறங்களும் ஆய்வு செய்யப் பட்டன. முத்துக்குடாவில், கி.பி. 11-12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகக் கருதத்தக்கப் பானை ஓடுகளும், வீடுகளுக்குக் கூரை வேயப் பயன்பட்ட சொருகு ஓடுகளும், (Flat Tiles) சிதறிக் கிடக்கும் மேடுகள் சில கண்டறியப் பட்டன. ஆனால் சங்க காலத்தைச் சேர்ந்த தடயங்கள் எவையும் காணப்படவில்லை.


ஓரியூருக்கு அருகில், எஸ்.பி. பட்டினம் எனச் சுருக்கி வழங்கப்படும் சுந்தர பாண்டியன் பட்டினம் உள்ளது. இவ்வூரில் மிகவும் இடிபாடான நிலையில் வழிபாடு இன்றி ஒரு கோயில் காணப்பட்டது. காமாட்சி யம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயில் எனக் குறிப்பிடப் படும் இக்கோயில், சிவகங்கை ஜமீந்தார் மேற்பார்வையிலுள்ளது. இக் கோயிலில் சிதைந்த நிலையில் சில கல்வெட்டுக்கள் காணப்பட்டன. கி.பி. 13-ம் நூற்றாண்டுக்குரிய எழுத்தமைதியுடன் காணப்படும் இக்கல்வெட்டுகள் பாண்டியர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை. இக்கல்வெட்டுகளின் மூலம், இவ்வூரும், ஊரிலுள்ள சிவன், திருமால் கோயில்களும், 'முந்நூற்றுக் கூற்றத்து சுத்தவல்லியான சுந்தரபாண்டிய புரத்து தசரத ராம ஈஸ்வரமுடைய நாயனார் கோயில்' என்றும், 'தசரதராம விண்ணகராழ்வார் கோயில்' என்றும் வழங்கப்பட்டன எனப்படித்தறிய முடிந்தது. சுத்தவல்லி என்பது 'சித்த மெளலி' என்ற தொடரின் திரிபாகும். சித்தர் என அழைக்கப்பட்ட ஜைன தீர்த்தங்கரர் அல்லது கெளதம புத்தரின் உருவத்தை முடிமேல் தாங்கியவர்களை இத்தொடர் குறிக்கும். கி.பி. 12,13-ம் நூற்றாண்டுகளில், தமிழகக் கடற்கரைப் பட்டினங்களுக்கும், இலங்கைக்குமிடையே நிலவிய அரசியல் மற்றும் வணிகத் தொடர்புகளின் காரணமாக புத்தசமயம் இப் பகுதிகளில் பரவியிருந்ததென்பது வரலாற்று உண்மையாகும்.
முந்நூற்றுக் கூற்றமும் இக்கூற்றத்தை அடுத்திருந்த மிழலைக் கூற்றமும் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் சேர (கேரள) நாட்டுடனும் இலங்கையுடனும் தொடர்புடையனவாக இருந்தன என்பது இக் கல்வெட்டுகளில் காணப்படும் வேறு குறிப்புகளாலும் தெளிவாகிறது.


'மலை மண்டலத்துக்காந்தளூரான எறி வீர பட்டினத்து ராமன் திருவிக்ரமனான தேவேந்திர வல்லபப் பதினெண் பூமிச் சமயச் சக்கரவர்த்திகள்' என்பவர் இக்கோயிலின் நிர்வாகத்துடன் தொடர்புடையவராக இருந்தார் என்பது ஒரு குறிப்பாகும். தற்போது இச்சுற்று வட்டாரத்திலுள்ள பூவனூர் எனும் ஊர், அப்போது, 'மிழலைக்கூற்றத்து நடுவிற் கூற்றுப் பூவனூரான தென்னவன் காமணிச் சதுர்வேதி மங்கலம்' என வழங்கப்பட்டதென்பது மற்றொரு குறிப்பாகும். காமணி என்பது கிராமணி என்ற சொல்லின் சிங்களத்திரிபாகும். 'தென்னவன் காமணி' என்பது பாண்டியர்களுக்கும் இலங்கையருக்குமிடையே நிலவிய மண உறவுகளால் வழக்கிற்கு வந்த ஒரு பட்டமாக இருக்கலாம். இத்தொடர் பாண்டிய மன்னனையோ, அரச குலத்தவன் ஒருவனையோ குறித்திருக்கக் கூடும். *6 சிங்கள புத்த மதத் தொடர்பு எஸ்.பி. பட்டினத்தில் இருந்துள்ளது என்பதற்கு அடையாளமாக இக்கோயிலினுள், நின்ற நிலையில் காணப்படும் அழகிய புத்தர் சிற்பம் ஒன்று உள்ளது. இச்சிற்பம் கி.பி. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதத் தக்கது. இவ்வூரில் புத்தமதம் முற்றிலும் அழிந்த பின்னர், இச்சிற்பம் இக்கோயிலினுள் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.


முந்நூற்றுக் கூற்றத் தலைநகரினைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் மேலும் முனைப்புடன் ஈடுபடத் தீர்மானித்து, இப்பகுதியிலுள்ள, பொதுமக்களிடம் விசாரிக்கத் தொடங்கியதில், கடற்கரைப் பகுதியிலிருந்து விலகி, உள் நாட்டில் மித்திரா வயல் என்ற ஊர் இருப்பது பற்றிய செய்தி கிடைத்தது. முத்தூறார் வயல் என்ற பெயர்தான் மித்திரா வயல் எனத் திரிபடைந்ததோ என்ற ஐயம் ஏற்பட்டதால், இவ்வூருக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டது.


மித்திரா வயலில், கி.பி. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மருது சகோதரர்கள் வெட்டுவித்த ஊருணி ஒன்று உள்ளது. இந்த ஊருணியின் கரையில் உள்ள மேடான பகுதிகளில் கருப்பு-சிவப்புப் பனை ஓடுகள் (black and red-ware pottery pieces) சிதறிக் கிடக்கின்றன. எனவே இவ்வூர் சங்ககாலக் குடியிருப்பே எனத் தெளிவாயிற்று. இவ்வூருக்கு அருகில், கருவேலங்காடு எனப்படும் காட்டுப் பகுதியில், கண்மாய்க்கரையில் இடிபாடான சிவன் கோயில் ஒன்று காட்சியளிக்கிறது. இக் கோயிலின் நந்தி மண்டபத் தூண்களில் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 21 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்குரிய எழுத்தமைதியுடன்) பொறிக்கப்பட்டுள்ளது. அக் கல்வெட்டினைப் படித்துப் பார்த்ததில் இக்கோயில், 'பெரும்பூர் நாட்டு அண்டக்குடி ஆதி நாதீஸ்வரமுடைய நாயனார் கோயில்' என வழங்கப்பட்டதாக அறிய முடிந்தது. எனவே மித்திரா வயல் எனத் தற்போது அழைக்கப்படும் இவ்வூர் அக்காலத்தில் முத்தூற்றுக் கூற்றத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படவில்லை எனத தெரிய வந்தது.

மித்திரா வயலிலிருந்து சற்றொப்ப 10 கி.மீ. தொலைவில் தேர் போகி நாடு என்ற ஊர் உள்ளது என்றும், அவ்வூருக்குப் பேருந்தில் சென்று, அங்கிருந்து சில கண்மாய்களின் கரை வழியே நடந்து சென்றால் சிறுவாச்சி என வழங்கப்படும் ஊரினை அடையலாம் என்றும், சிறு வாச்சியினை 'முத்துநாடு சிறுவாச்சி' எனவும் குறிப்பிடுவதுண்டெனவும் மித்திரா வயலைச் சேர்ந்த சில பெரியவர்கள் தெரிவித்தனர். மேலும் அவ்வூர் பசும்பொன் மாவட்டம் தேவகோட்டை வட்டத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்தனர்.

தேர் போகி நாட்டை அடைந்து, தொடர்ந்து சில கண்மாய்களைத் தாண்டிச் சென்றபோது, கள்ளிக்குடி என்ற சிற்றூரில், இடிபாடான நிலையில் முட்புதர்களுக்கு இடையே ஒரு கற்கோயில் காணப்பட்டது. இக்கோயிற் சுவரில் கி.பி. 14- ஆம் நூற்றாண்டுக்குரிய எழுத்தமைதியுடன் பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டு பொறிக்கப் பட்டுள்ளது. இக்கல்வெட்டில், 'முந்நூற்று நாட்டுக் கள்ளிக்குடி' என்ற தொடரினைப் படித்தவுடன், முந்நூற்றுக் கூற்றத்துத் தலைநகர் அண்மையில் தான் உள்ளது என்பது உறுதியாயிற்று. முந்நூற்று நாடு என்பதே முத்து நாடு எனத் தற்போது வழங்கப்படுகிறது என்ற உண்மை தெளிவாயிற்று.

முத்துநாடு சிறுவாச்சி ஊரையடைந்து, ஊரிலுள்ள காளி கோயிலை அணுகி, அக்கோயிலின் குருக்கள் திரு. முத்துசாமி அவர்களை பற்றி விசாரித்தறியப் பட்டது.
திரு முத்துசாமி அவர்களுடன் தொடர்பு கொண்டு அவருடைய உதவியுடன், கோயில் உட்பட ஊரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் பார்வையிடப் பட்டன. கோயிலுள்ள காளியின் பெயர், முத்து நாயகி அம்மன் எனத் தற்போது வழங்கப் படுகிறது. கோயிலின் மூலத்தானத்திலுள்ள காளியின் சிற்பம் கி.பி. 10-11- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதற்குரியது. கோயிற் சுவரில் காணப்படும் பாண்டியர் காலக் கல்வெட்டு, கி.பி. 13-ம் நூற்றாண்டுக்குரிய எழுத்தமைதியுடன் பொறிக்கப் பட்டுள்ளது.

இக் கல்வெட்டு, "முந்நூற்......" என்ற குறிப்பினைத் தொடர்ந்து வரும் நான்கு வரிகள் பிற்காலத்தில் அழிந்து சிதைந்துள்ளன.

முத்து நாடு சிறு வாச்சியில் முத்துத் திடல், முத்துக்கண்மாய் முதலான இடங்கள் உள்ளன. முத்துநாட்டில் 42 சிற்றூர்கள் அடங்கியிருந்ததகாவும், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த வருவாய்த்துறை ஆவணங்களில் முத்துக்க்கண்மாய் என்பது முத்தூற்றுக்கண்மாய் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது என்றும் முத்துசாமிக் குருக்கள் தெரிவித்தார். மேலும் தமது தந்தையார் பெயர் முத்தானைக் குருக்கள் என்றும், தமது குடும்பத்தில் முத்து என்ற பெயர் தவறாமல் இடம் பெறும் என்றும் குறிப்பிட்டார். அவரது உதவியுடன் முத்துத்திடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, ஏராளமான அளவில் கருப்பு-சிவப்புப் பானை ஓடுகளும், பிற சங்ககாலப் பானை ஓடுகளும் கண்டறியப் பட்டன.

இப்பகுதி வறட்சியான பகுதியே ஆயினும் கண்மாய்ப் பாசனத்தால் வளமாக நெல் விளைகிறது. சற்றொப்ப 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இப்பகுதியைச் சேர்ந்த , 'சித்தடியான்' என்ற நெல் வகை மிகவும் சிறந்ததாகக் கருதப்பட்டது. முத்துநாடு சிறுவாச்சியை அடுத்து நெப்பி வயல் என்று வழங்கப்படும் ஊர் ஒன்று உள்ளது. 'நெற்பொலி வயல்' என்பதே இதன் சரியான பெயர் போலும். 'குப்பை நெல்லின் முந்நூறு' எனப் புறநானூறு வருணிப்பது உண்மைக்குப் புறம்பான வருணனையில்லை.

முந்நூறு என்ற சொல், முத்துப்போன்ற நீர் ஊறும் இடம் எனப் பொருள்படக்கூடும். நாற்று என்ற சொல் நாறு எனப்பெரிய புராணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. *7 மூட்டை என்ற சொல் மூடை என வழங்குகிறது. அது போல முந்நூற்று என்பதே முத்தூறு என ஆயிற்றுப் போலும். இப்பகுதியிலுள்ள கண்மாய்கள், இரண்டாயிரம் ஆண்டுக்காலப் பழமையுடையவனவாக இருக்கக் கூடும். கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் இவ்வூரிலிருந்து வணிகரும் வேளாளரும் கேரள மாநிலம் திருவல்ல வாழ் (திருவல்லாய்)ப் பகுதியில் குடியேறினர் எனத் தோன்றுகிறது. திருவல்லாய்ச் சாசனங்களில் முத்தூற்று மூலை, முத்தூறு போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. *8 இன்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலரின் குடும்பப் பெயர் (surname) முத்தூற்று என்றே உள்ளது*9 . இத்தகைய குடிப்பெயர்வு பற்றியும் விரிவாக, ஆழமாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். சற்றொப்ப இரண்டாயிரம் ஆண்டுக்காலமாக ஓர் ஊர், வரலாற்றில் எவ்வாறெல்லாம் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது என்பதை அத்தகைய ஆய்வு தெளிவாக விளக்கும். *10


அடிக்குறிப்புகள்.

1. பூலாங்குறிச்சிக் கல்வெட்டு- ஒய்.சுப்பராயலு, ராகவ வாரியார்- 'ஆவணம்' -இதழ். தொல்லியல் கழக வெளியீடு,
2. Historical Sketches of Ancient Deccan, by K.v. Subrahmanya Aiyer, Vol. I p. 116-120.
Annual Report on Ep. 1899 para. 50. S.I.I. Vol. III P. 197.
3. General history of Pudukottai State by S.Radha Krishna Iyer, p. 58. (published:1916).
4. சிலப்பதிகாரம் காடுகாண் காதையில் வரும், 'குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' என்ற வரிக்கு விசேடவுரையில் சோழ நாட்டுக்கும் எல்லைப்பகுதியில் முத்தூற்றுக் கூற்றம் அமைந்திருந்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அண்மையில் வெளிவந்துள்ள 'பாண்டி மண்டலத்தில் வாணாதிராயர்' என்ற நூலில் (ப.45) இதன் நூலாசிரியர் திரு வெ.வேதாசலம், முந்நூற்றுக் கூற்றத்தின் இருப்பிடத்தை வரையறுத்துக் கூறியுள்ளார். (பதிப்பு:தொல்லியல் தொழில் நுட்பப் பணியாளர் பண்பாட்டுக்கழகம், மதுரை)
5. திருப்புனவாசல் கோயில் தொடர்பான தேவாரப் பாடல்களும், அக்கோயிற் கல்வெட்டுகளும் ஊரின் பெயரைத் திருப்புனல்வாயில் என்றே குறிப்பிடுகின்றன. திருப்புனம் வாயில் எனக் குறிப்பிடவில்லை. புனம் என்ற சொல் புன்செய் நிலத்தைக் குறிக்கும். தேவார காலத்திலேயே (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு) வெள்ளாறும் கடற்கரையும் இவ்வூரை விட்டுச் சற்று விலகிச் சென்றிருக்கலாம். இது மேலும் ஆய்வுக்குரியது.
திருமுறை Annual Report on Epigraphy 1902.412.413.414.
6. 'தென்னவன் சிகாமணி' என்ற தொடரில் 'சி' எழுத்து கல்வெட்டு பொறிக்கும்போது விடுபட்டிருக்கவும் கூடும். ஆனால் மிழலைக்கூற்றத்துக் கருவூர்ப் பொன் பற்றி புத்தமித்திரனார் (வீரசோழிய ஆசிரியர்) போன்றோர் அப்பகுதியின் பெளத்த சமயத் தொடர்புக்குச் சான்றாகத் திகழ்கின்றனர். எனவே காமணி என்றே கொள்ளலாம்.
7. பெரிய புராணம், திருநாட்டுச் சிறப்பு. பா.12 (திருமலைச் சருக்கம்)
8.Travancore archeological Series T.A. Gopinatha Row Vol. II. p. 163 (தமிழ்ச்சாசனம்)
9. நேரில் விசாரித்தறியப் பட்டது.
10. திருப்புனவாசல் தவிர, இக்கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ள கோயில்கள் தொல்லியல் நிபுணர்களால் அறியப்படாதவை.



--Ksubashini 13:06, 30 மார்ச் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 2 ஏப்ரல் 2011, 08:06 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,894 முறைகள் அணுகப்பட்டது.