புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்!
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்= ஆண்டாள் பாட்டுக்கு முந்தைய பாட்டில் ஸ்ரீராமனைப் பற்றிப் பாட ஆரம்பித்தாலும் ஆரம்பித்தாள், சில கோபியருக்குக் கோபம் வந்திருக்கு போல! அவங்க இங்கே மறுபடியும் கிருஷ்ணனைத் துதிக்க ஆரம்பிச்சாச்சு! புள்ளின் வாய்க் கீண்டானை என்பது இங்கே பகாசுரன் கொக்காய் வந்து கிருஷ்ணனைக் கொல்ல வந்தபோது அந்தக் கொக்கின் வாயைக் கண்ணன் பிளக்க முயன்றதைக் குறிக்கும். அதைக் குறித்துச் சில கோபியர்கள் பாட, ஆண்டாளோ விடாமல் ஸ்ரீராமனையே குறித்துச் சொல்கிறாள். நாலு பெண்கள் சேர்ந்தாலே பேச்சு அதிகம். இங்கேயோ பாகவதர்களின் விசேஷம் வேறே. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று ப்ரீதி. அது போலத் தான். ஆண்டாள் பாட்டுக்குப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை அப்படினு முந்திய பாடலின் தொடர்ச்சியாக ராவணனின் பத்துத் தலைகளையும் ஸ்ரீராமன் அறுத்ததைக் குறிப்பிடுகிறாள். அப்படிப் பட்ட பரம்பொருளின் கீர்த்திகளைப் பாடிக்கொண்டே போவோம்.
பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!= இங்கே பிள்ளைகள் என்று கூறி இருப்பது மீண்டும் பாவை நோன்பு நூற்கும் பெண்களையே. தென்மாவட்டங்களில் இன்றும் பெண்குழந்தைகளைப் பெண்பிள்ளை என்று கூறுவதும், ஏ, பிள்ளே, என அழைப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. மேலே ஒருத்தி ஸ்ரீகிருஷ்ணனையும், மற்றொருத்தி ஸ்ரீராமனையும் பாட ஆரம்பிக்கவும், ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டால் வேலைக்காகாது என இன்னொருத்தி, சரி, சரி, எல்லாப் பெண்பிள்ளைகளும் பாவை நோன்புக்காக நதிக்கரைக்குப் போய்ப் பாவையைப் பிடித்து வைத்து வழிபாட்டுக்கு ஆரம்பிக்கப்போகிறார்கள். அதோடயா?? ஆச்சரியமான வாநிலை அறிக்கையும் தருகிறாள் ஆண்டாள் இங்கே. வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று என்கிறாள். சுக்கிரன் உதயம் ஆகி வியாழ கிரஹம் அஸ்தமனம் ஆகிவிட்டதாம். ஆகையால் பொழுது விடிந்துவிட்டதே? இன்னுமா நீ தூங்குகிறாய்?? அந்தக் காலகட்டங்களிலே பெண்கள் கிரஹ சஞ்சாரங்களை எல்லாம் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்பவர்களாய் அறிவு நிரம்பி இருந்திருக்கின்றனர். மற்றப் பறவைகளும் காச், மூச்சென்று கத்த ஆரம்பிச்சாச்சு, ஏ பெண்ணே, மலர் போன்ற கண்களை உடையவளே,
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்! = சீக்கிரம் வந்து நதியில் ஆழ்ந்து அமுங்கிக் குளிரக் குளிரக் குளித்தால் குளிரெல்லாம் போய்விடும். அதாவது ஸ்ரீகிருஷ்ண பக்தி அநுபவம் என்ற நதியில் மூழ்கி முங்கி எழுந்தால் நம் பாவங்களாகிய குளிர் போய்விடும். மேலும் தாமதம் ஆவதற்குள்ளாக சும்மாக் குளிருது, குளிருதுனு பொய் சொல்லி நடிக்காமல் வா, பெண்ணே!
இங்கே நம் மனம் ஒரு சமயம் ஈஸ்வர பக்தியில் ஆழ்ந்தாலும் மற்றொரு சமயம் வெளி உலக இன்பங்களில் ஆழ்கிறதைக் குறிக்கிறது. அதை விடுத்து மனப்பூர்வமாய்க் கண்ணனிடம் பக்தி பூண்டு, அந்த பக்தி ரசமாகிய அமுதக் குளத்தில் முங்கி மகிழ்வோம்.
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்= ஆண்டாள் இப்போது இன்னொரு பெண்ணின் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. இத்தனைக்கும், இவள் நாளைக்கு நானே வந்து உங்களை எல்லாம் முதல்லே எழுப்புவேனாக்கும்னு சொல்லி இருந்தாள். இப்போ அசையக் கூட இல்லை!
அடி, பெண்ணே, உங்க வீட்டுக் கொல்லைப்புறத்திலே, அந்த நாட்களில், இப்போவும் சில ஊர்ப்பக்கம் கொல்லையைப் புழக்கடைனு சொல்வதுண்டு. முன்பெல்லாம் கிணறு மட்டுமில்லாமல் வீட்டுப் பெண்கள் குளிக்கவென்று சின்னஞ்சிறு குளம் கூட இருக்குமென்று என் அப்பா சொல்லி இருக்கிறார். அந்தக் குளத்தில் தாமரை, அல்லிபோன்ற மலர்கள் காணப்படுமாம். இப்போவும் தஞ்சை மாவட்டத்தில் சில கிராமங்களில் பகலில் மலரும் தாமரைப்பூக்கள் நிரம்பிய குளங்களையும் இரவில் மலரும் அல்லிப்பூக்கள் நிரம்பிய அல்லிக்குளங்களையும் காண முடிகிறது. அத்தகையதொரு குளம் இந்தப் பெண்ணின் வீட்டுக் கொல்லையில் இருக்கிறது. ஆண்டாள் மெதுவா எட்டிப் பார்க்கிறாள். தாமரைப்பூக்கள் மலர்ந்திருக்கும் அந்தக் குளத்தின் அல்லிப்பூக்களோ வாடிவிட்டன. மீண்டும் இரவில் நிலவைக்கண்டாலேயே மலரும். ஆகையால் அந்தப் பெண்ணை எழுப்ப இதுதான் சரியான நேரம், எழுந்திரு பெண்ணே, உன் வீட்டுக்கொல்லைப்புறத்தில் இருக்கும் வாவியில் தாமரைப்பூக்கள் மலர்ந்து அல்லிப்பூக்கள் கூம்பிவிட்டனவே.
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்= அது மட்டுமா, செங்கல்பொடியைப் போலச் சிவந்த காவிநிறமுடைய உடையை அணிந்த தவக்கோலம் பூண்ட சந்நியாசிகள், இங்கே அவர்களை வெண்பல் தவத்தவர் என்கிறாள் ஆண்டாள். வெற்றிலை போட்டால் பற்கள் வெண்மையாய் இராது. இவர்களோ சந்நியாசிகள். சந்நியாசிகள் வெற்றிலை போடக்கூடாது. அதனால் அவர்கள் பற்களும் வெண்மையாகவே இருக்கின்றன. அந்த சந்நியாசிகள் தங்கள் ஈசனின் கோயிலுக்குச் சென்று வழிபடச் செல்கிறார்கள். அந்தக் கோயில்களிலிருந்தெல்லாம் வழிபாட்டுக்கான சங்கநாதம் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்= அடியே, எங்களை முன்னாடி வந்து எழுப்புவேன்னெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாயே, ஏ நங்கையே , உனக்கு வெட்கமாய் இல்லையா? நீ சொன்னதெல்லாம் வெறும் பேச்சுத்தானா?? அதற்கு அர்த்தம் இல்லையா??
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!= சூரிய, சந்திரர்களைப் போல் விளங்கும், சங்கையும் சக்கரத்தையும் தன்னிரு திருக்கைகளில் தாங்கிக்கொண்டிருக்கும் தாமரை போன்ற விழிகளை உடைய அந்தக் கண்ணனை வந்து பாடு வா, பெண்ணே. தன் அழகான தாமரைக்கண்களால் நம்மைப் பார்த்து அருள் செய்வதோடு நம்மையும் அவனுக்கு அடிமையாக்கிக்கொள்கிறான் அந்தப் பரம்பொருள். அப்படி அவனுக்கு அடிமையாவோம் வா, அவன் புகழைப்பாடி ஏத்துவோம் என்கிறாள் ஆண்டாள்.
--Geetha Sambasivam 09:41, 6 ஜூலை 2011 (UTC)