மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 4

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Anaichathan.jpg
கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்பெண்ணே!
காசும்பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!


ஆனைச்சாத்தன் என்பது ஒரு குருவி வகை. எப்போவும் கிளுகிளுனு பேசிக்கொண்டே இருக்கும், அதோட கொஞ்சம் சோம்பேறியும் கூட. குயில் காலங்கார்த்தாலே எழுப்பி விட்டதுன்னா, இது மெதுவா காக்கைக்கும் அப்புறமா எழுந்திருக்கும், அத்தகைய ஆனைச்சாத்தன் கூட எழுந்துவிட்டது, கீசு கீசுனு பேச ஆரம்பிச்சுட்டதுனு இங்கே சொல்றாள் ஆண்டாள்.

2thiruppaavai.jpg

கீகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே!= இந்த ஆனைச்சாத்தன் கூட எழுந்து கொண்டு கீசு கீசுனு சொல்றது கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சொல்றாப்போல் இருக்காம். ஆ, அவைகளின் பேச்சொலி கேட்கவில்லையா பெண்ணே,


காசும் பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ= ஆய்ச்சியர்கள் எல்லாரும் எழுந்திருந்து தயிர் கடைகிறார்கள்.
பானையில் மத்து மோதும் ஓசை, தயிர் சிலுப்பும்போது எழும் ஓசை, ஆய்ச்சியர்களின் கை வளைகளின் கிண்கிணி நாதம், அவர்கள் கழுத்து ஆபரணங்கள் அங்குமிங்கும் அசையும்போது எழும் ஒலி என ஒரே சத்தமாய் இருக்கே! இது எதுவுமா உனக்குக் கேட்கவில்லை, அடி பெண்ணே, என்ன இப்படி ஒரு பெருந்தூக்கம் தூங்குகிறாயே? உனக்கு என்ன பேய்க்குணம் வந்துவிட்டதோ?


நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!


தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!=


நீ அருமையான நாயகப்பெண்ணாயிற்றே, நாங்கள் கேசி என்ற அரக்கனைக்கொன்றதன் மூலம் கேசவன் என்ற பெயர் பெற்ற கண்ணனைப்பாடிப் புகழ்ந்துகொண்டிருக்கிறோம். நீ அதைக் கேட்டுக்கொண்டே படுத்திருக்கிறாயே? ஆனால் அந்தப் பெண்ணுக்கோ இதுவும் ஒரு சுகம்தான் போலிருக்கு. இவர்கள் கேசவனின் புகழைப்பாடப் பாட அதைப் படுத்துக்கொண்டே கேட்பதில் பெரும் ஆநந்தம் கொள்கிறாளோ என்னமோ.


ஒளிபொருந்திய முகத்தை உடைய பெண்ணே, வா, வந்து கதவைத் திறப்பாய் என்கிறாள்.

3thiruppavai.jpg

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பறந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம்சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்!


இப்போ வானமோ வெளுத்துவிட்டது. எருமைமாடுகளும் கறவை முடிந்து மேயக்கிளம்பிவிட்டன. நீ இன்னுமா எழுந்திருக்கவில்லை என்கிறாள் ஆண்டாள்.


அவள் அழைக்கும் பெண்ணோ கண்ணன் மனதுக்கு நெருங்கியவளாய் இருக்கணும். அதனால் அவளைக் கோதூகலமுடைய பாவாய் என அழைக்கிறாள்.


கோதூகலமுடைய பாவாய், கீழ்வானம் வெளுத்து எருமைகள் எல்லாம் புல் மேயக் கிளம்பிவிட்டனவே. நீ என்ன இன்னும் எழுந்திருக்கவே இல்லையா? இங்கே வானம் என்பது ஆகாயத்தைக் குறித்தாலும் நம் உள்ளத்தையும் குறித்துச் சொல்லப் பட்டிருக்கலாம். நம் உள்ளம் தூய்மையாக வெளுத்து எந்தவிதமான தோஷங்களும் இல்லாமல் நிர்மலமாய் இருத்தலையே இங்கே சொல்லி இருக்கவேண்டும். அதேபோல் எருமையும் இங்கே நம் அறியாமையைக் குறிப்பதாய் இருக்கவேண்டும். அறியாமையில் மூழ்கி மூழ்கி நாம் ஆங்காங்கே தடங்கித் தடங்கி மெல்ல மெல்ல இறைவன் திருவடியை நோக்கிப் பயணிக்கிறோம். எருமை மாடுகள் மேயப் போனாலும் மேய்ச்சல் நிலத்துக்கு நேராய்ப் போவதில்லை அல்லவா? அதே போல்! வழியில் அதுபாட்டுக்குப் படுத்துக்கும், நிற்கும், தண்ணீரைக் கண்டால் வாலால் அடித்துச் சேற்றைக் குழப்பும். இப்படியே நாமும் அந்த எருமை மாட்டைப் போலவே வாழ்க்கையின் அனைத்து ரசங்களிலும் ஆழ்ந்து போய் மிகவும் தாமதமாகவே இறைவனைத் தேட ஆரம்பிக்கிறோம்.


(இது எல்லாமே என்னையே சுட்டுவது போல் இருக்கே! )


மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை= ஆனால் இங்கே வந்திருப்பதோ பரமனுக்குப் ப்ரீதியான பிள்ளைகள் அன்றோ, அவன் மனதுக்கு அண்மையில் இருப்பவர்கள் அன்றோ. இவர்கள் வெகுவிரைவில் அவர்கள் போகவேண்டிய இடத்துக்குச் சென்றுவிடுவார்களே, அதுவரையிலும் அவர்களைப் போகாமல் உனக்காகத் தடுத்து நிறுத்தி உள்ளேன்.



கூவுவான் வந்து நின்றோம்!
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம்சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்! =


பெண்ணே, நீ கண்ணனுக்கு மிகவும் பிடித்தவள் அன்றோ? நாங்கள் முன்னாலேயே இது இது செய்யவேண்டும் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். இப்போது உன்னை இங்கேயே விட்டு விட்டுச் சென்றால் கண்ணன் நீ வந்திருக்கிறாயா எனக் கேட்டால்?? என்ன சொல்வோம் பெண்ணே! கண்ணனைப் பாடி அவன் புகழைப் பாடி வாழ்த்துவோம். கண்ணன் கம்சன் சபையில் மல்லர்களை வென்றான், கேசி என்ற அசுரனை வென்றான். பகாசுரன் என்னும் கொக்கசுரனை வென்றான். இப்படி அனைத்து அரக்கர்களையும் வென்ற தேவாதிதேவனாகிய கண்ணனின் திருவடியை நாம் போற்றிப் பாடினால் , "ஆஹா, நாம் நம் அடியார்களைத் தேடிப்போகவேண்டியதிருக்க அவர்களே இங்கு வந்துவிட்டார்களா?" என்று கண்ணன் நமக்கு அவன் அருளை மழையாகப் பொழிவான்.


--Geetha Sambasivam 08:55, 4 ஜூன் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 ஜூன் 2011, 09:02 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,726 முறைகள் அணுகப்பட்டது.