மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

திருப்பாவை மூன்றாம் பாடல்

Trivikrama.jpg

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்


அருமையான பாடல். வைணவர்களின் கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும், கோயில்களிலும் வாழ்த்திப்பாடும்போது இந்தப்பாடல் தவறாமல் பாடப்படும். அத்தகையதொரு உலகளாவிய நன்மைக்கான வேண்டுதல் இந்தப் பாடலிலே அடங்கி இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே ஆண்டாள் பரமனை


ஓங்கி உலகளந்த உத்தமன் என்று அழைக்கிறாள். மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் அறிவோம். ஒவ்வொரு அவதாரத்திலேயும் ஒவ்வொருத்தரை மஹாவிஷ்ணு அழித்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அந்த அரக்கர்களைக் கொல்லவென்றே அவதாரம் செய்திருக்கிறார். ஆனால் வாமன அவதாரம் அப்படி அல்ல. என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாம், அப்படித்தான். மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம அவதாரங்களில் அதுவும் அந்த நரசிம்ம அவதாரத்தில் எதிர் எதிர் சிந்தனைகளான + - ஒன்று சேரவும் ஈசன் தோன்றி நரசிம்மனை அழித்தான். கடுமையான கோபம் கொண்ட அவதாரம், மஹாலக்ஷ்மியே பக்கத்தில் போக அஞ்சினாளாம்.

Vamaan.jpg

அதுக்கடுத்து இந்த வாமன அவதாரம். சின்னஞ்சிறு பிரமசரியப் பிள்ளை. பிரமசரிய விரதம் இருக்கிறது. பிரமசாரி ய விரதத்தில் பிக்ஷை எடுத்துத் தான் சாப்பிடணும். இந்தப் பிள்ளையும் வந்து பிக்ஷை கேட்கிறது. மஹாபலிச் சக்கரவர்த்தி யாகங்கள் செய்து இந்திர பதவியை அடையப் போகிறான். இதுவோ கடைசி யாகம், இதை முடித்தால் இந்திரனை விடவும் உயர்ந்த பதவியை அடையலாம். ஆனால் அவனுக்கோ மோக்ஷம் காத்திருக்கிறது. சிரஞ்சீவி பதவி காத்திருக்கிறது. ஆகவே யாகத்துக்கான முன்னேற்பாடுகளாய் தானங்கள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டான் மஹாபலி. எல்லாம் முடிஞ்சாச்சுனு நிச்சயமாத் தெரிஞ்சுண்டு சாவகாசமா நம்ம ஆள் போறார் நமட்டுச் சிரிப்போடு. சின்னத் தாழங்குடையைப்பிடிச்சுண்டு, காலிலே கட்டைச் செருப்போடு வரும் சின்னப் பிள்ளையைப் பார்த்த பலிக்கு சந்தோஷம், ஆகா, இந்தப் பிள்ளையின் தேஜஸ் என்ன?? யாரோட பிள்ளை இவன்??


அதுக்குள்ளே சுக்ராசாரியாருக்கு மூக்கிலே வேர்க்க அவரோ பலியிடம் எச்சரிக்கிறார். அப்பா, உன் யாகத்தைக் கெடுக்க வந்த பிள்ளை இவன். காசியபரின் புத்திரன் என்ற பெயரில் வந்திருக்கும் இவன் வேறு யாரும் இல்லை. சாட்சாத் அந்த மஹாவிஷ்ணுவே. நீ பாட்டுக்கு அவசரப் பட்டு வாக்குக் கொடுத்துவிடாதேனு சொல்றார். ஆனால் மஹாபலியோ , "குருவே, மஹாவிஷ்ணுவே வந்து கேட்கும்போது கேட்பதைக் கொடுப்பது என் அரச தர்மம். அரச தர்மத்தை நான் மீற மாட்டேன்." என்று சொல்லிவிடுகிறான். வந்துட்டார் வாமனனும். யாசகமும் கேட்டாச்சு.


"குழந்தாய், என்னப்பா வேண்டும்?"


அரசே, என் காலடியால் மூன்றடி மண் கொடுத்தால் போதும்!" குழந்தை தானே? தன் சின்னஞ்சிறு காலைக் காட்டுகிறது. அது பென்னம்பெரிய காலாகப் போறதுனு பலி கண்டானா? ஆனால் சுக்ராசாரியார் கண்டுவிட்டார்.


குறுக்கே போக, பலியோ வாக்குக் கொடுக்கிறான். பூமி தானம் சும்மா சரினு சம்மதிக்கிறதோடு போயிடாது. சாஸ்திரோக்தமா தாரையும் வார்க்கிறான் பலி. அப்போவும் சுக்ராசாரியார் வண்டாய் மாறி நீர் விடும் கெண்டியின் கண்ணை அடைத்துக்கொள்ள, ஒரு தர்ப்பைக்குச்சியால் அவர்கண்ணையே குத்துகிறான் வாமனச் சிறுவன். பின்னர் தாரையும் வார்த்து, சின்னஞ்சிறு கால் பென்னம்பெரிய காலாக ஆகிறது. ஒரு கால் மேலே, மேலே, மேலே போக, அங்கே தேவாதிதேவர்கள் அந்தக் கால் விஷ்ணுவின் கால்னு தெரிஞ்சு பாதபூஜை செய்ய அந்த நீர்தான் , அழகர் மலையில்,"நூபுரகங்கை"னு வந்துட்டு இருக்கு. எங்கே இருந்து எங்கேயோ போயிட்டேன்?? அட?? திருப்பாவை எங்கே போச்ச்ச்ச்???


ம்ம் பிடிச்சாச்ச். இங்கே பலியை வாமனன் சம்ஹாரம் செய்யவில்லை. அவனைப் பாதாளத்துக்கு அதிபதியாக்கிச் சிரஞ்சீவியாக வாழ வழி செய்கிறான். அதனால் இங்கே வாமனனை ஓங்கி உலகளந்த உத்தமன்னு ஆண்டாள் சொல்கிறாள். அதோட பகவான் மூன்றடி எடுத்து வைத்ததில் சகலவிதமான ஜீவராசிகளுக்கும் அவரது ஸ்பரிசம் கிடைத்திருக்கிறது. எப்படி பிட்டுக்கு அடிவாங்கிய பரமனின் அடி ஒவ்வொரு ஜீவராசிக்கும் பட்டதோ அப்படியே. அப்பாடி ஒருவழியா விட்ட இடத்தைப் பிடிச்சாச்ச்..
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்= நதிக்கரையில் பாவை நோன்புக்கு என அம்மனைப் பிடித்து வைத்து வழிபடுவார்கள். அந்த அப் பாவைக்கு மலர்கள் சாற்றி வழிபடுவதற்காக நீராடிவிட்டு வரவேண்டும். அதற்காக நாம் நீராடச் செல்வோம் தோழியரே. இந்த அருமையான பாவை நோன்பை நாம் நூற்பதால்,


தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து= நாட்டிலே தீமை என்பதே இராமல் அனைத்தும் ஒழிந்து போய் ஒவ்வொரு மாதமும் மூன்று முறை முறையே மழை பெய்து நீர் வளம், சிறந்து, அதன் மூலம் நில வளமும் செழிக்கும்.


ஒவ்வு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள்= செந்நெல் செழுத்து ஓங்கி வளரும், வயலில் பாய்ச்சி இருக்கும் நீரில் குளத்து நீரோ என மயக்கம் கொண்ட மீன்கள் பாய்ந்தோடி மகிழ்ந்து விளையாடும்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப= குவளைப் பூக்களின் மகரந்தத்தில் {போது=மகரந்தம்) வண்ண விசித்திரமான வண்டுகள் தேன் குடிக்க வந்து கண்கள் செருகி


மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும்


தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி =தயங்காமல் வந்து செழிப்பான கறவைப்பசுக்களின் பெருத்த மடியில் இருந்து இரு கைகளாலும் பாலைக் கறக்கக் கறக்க அவையும் வஞ்சனை என்பதே இல்லாமல் வள்ளலைப் போல் குடங்களை நிறைத்துக்கொண்டே இருக்குமாம். ஆகவே என்றும் வற்றாத நிறைந்த செல்வத்தைத் தரும் இந்த விரதத்தை நாம் அனைவரும் கடைப்பிடிக்கலாம் வாருங்கள் பெண்களே.


திருப்பாவை நான்காம் பாடல்


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!


ஆழி மழைக்கண்ணா= ஆழி இங்கே கடலையும் குறிக்கும், வருணனையும் குறிக்கும், பரமன் கைச்சக்கரத்தையும் குறிக்கும். ஆனால் இந்த முதல் ஆழி என்பது வருணனைக் குறிக்கிறது. நாட்டில் மழை சரிவரப் பருவம் தப்பாமல் பொழிந்தாலே நிலவளம் செழிக்கும். அதற்கு மழை பொழிய வேண்டுமெனில் எப்படி?? பள்ளியிலே படிச்சதை ஆண்டாள் சர்வ சாதாரணமாக அப்போவே சொல்லிட்டுப்போயிட்டாள். கடல் நீர்தான் ஆவியாக மாறி மேகங்களுக்குள் புகுந்து மழையாகப்பொழிகிறது என்பதைச் சின்ன வயசிலேயே படிச்சிருக்கோம் இல்லையா?? அதனால் முதல் ஆழியை வருணன் என எடுத்துக்கொள்ள வேண்டும், அடுத்த ஆழியைக் கடல் என எடுத்துக்கணும்."ஆழி மழைக்கண்ணா!" வருணணைக் கூப்பிட்டு = இங்கே ஏன் கண்ணா என்கிறாள் என்றால் மழை பொழியும்போது வருணன் கண்ணனின் அருள் மழையை நினைவூட்டுவதாயும் கொள்ளலாம். கண்ணனின் கரியநிறத்தைப் போன்ற மேகங்கள் அவன் நிறத்தை நினைவூட்டுதலையும் கொள்ளலாம். ஆண்டாளே வேண்டுகிறாள் இதே பாடலில், "ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து" என.


ஒன்று நீ கை கரவேல்= ஏ, வருண பகவானே, உன் கருணையை நிறுத்திவிடாதே. என்கிறாள்.


அந்த ஆழி மழை எப்படிப் பொழிகிறது? ஆழியுள் புக்கு முகர்ந்து கொடு ஆர்த்தேறி= கடலினுள் புகுந்து மேலெழும்பி ஆவியாக மாறி மேகங்களுக்குள் புகுந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தமாய் இடியோசையுடன் வேகமான பெருமழையாகப்பொழிந்து எங்கள் மேல் பொழிவாயாக.
வருணனை மழைபொழியுமாறு வேண்டும் ஆண்டாள் அதற்கு அவனை எவ்வாறு இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறாள். மழைமேகங்கள் கருத்து இருப்பவை கண்ணனின் நிறத்தைக் குறிக்கின்றன. கண்ணனின் சங்கு இடியோசை போல் எழுந்து தீமைகளை ஒழித்து அடியார்களுக்குக் கருணை என்னும் மழையைப் பொழிகிறது. அவன் கைச்சக்கரமோ தீயவற்றை வேரோடு அறுத்துத் தள்ளுகிறது. அந்தச் சங்கையும் சக்கரத்தையும் போல் வருணனின் இடியும், மின்னலும் இருக்கவேண்டுமாம். இடியோசையும், மின்னலும் அவன் கைச் சக்கரத்தையும், சங்கையும் குறிக்கும். இந்த மழைமேகங்களையும் அவை நீருண்டு கன்னங்கரேல் எனக் கருத்து இருப்பதையும் பார்க்கும் ஆண்டாளுக்குக்கண்ணன் உருவமும் அவன் கரிய திருமேனியும் நினைவில் வருகின்றன.


ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கருத்து= மஹா பிரளயத்துக்கும் முந்தையவனாய் ஆதி முதல்வனாய் இருக்கும் அந்த நாராயணனைப் போலவே அவனுடைய நிறம் போலவே நீயும் கருமை வண்ணத்தோடு வருவாய் என்பது இங்கே பொருள்,


பாழியம்தோளுடைய பற்பநாபன் கையில்= அழகான தோள்களை உடைய பத்மநாபன் என்று பொருள். பரமன் தன் நாபியிலிருந்து பிரம்மாவை சிருஷ்டிக்கிறான். அதுவும் பத்மம் என்னும் தாமரை மலரில் தோன்றச் செய்து அதில் பிறப்பிக்கிறான். அந்தப்பிள்ளையைத் தன் திருத்தோள்களால் ரக்ஷிக்கவும் செய்கிறான். அத்தகைய பற்பநாபன் கைகளில்


ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து= ஆழி இங்கே சக்கரம் என்னும் பொருளில் வரும். நாராயணனின் கைச்சக்கரம் எப்படி மின்னுகிறது?? அத்தகைய சக்கரத்தைப் போல் ஏ, வருணனே, நீயும் உன் மின்னலை மின்னச் செய்வாயாக. அவனுடைய வலம்புரிச்சங்கின் நாதம் எவ்வாறு ,பூம்ம்ம்ம்ம்ம்ம்ம் என வருகிறதோ அதே போல் இடியை இடிக்கச் செய்வாயாக.


தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்= சார்ங்கம் இங்கே வில்லைக் குறிக்கும். சிவன் கையில் இருப்பது சாரங்கம். விஷ்ணுவிற்கோ சார்ங்கம். இரண்டுக்கும் ஒரு சின்னப் புள்ளியில் வேறுபாடு என்பதையும் கவனிக்கவும். இங்கே சார்ங்கம் என்பது வில். வில்லை ஏந்தியவன் ஸ்ரீராமன். ஸ்ரீராமனின் வில்லானது அம்பை மழையாகப் பொழியும். பகைவரை அழிக்கும். ஸ்ரீராமனின் வில்லில் இருந்து வரும் சரமழைபோல் அப்படி மழையை நீயும் பொழியச் செய்வாய் வருணனே என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.


அடுத்தது பிரார்த்தனை, தனக்கு மட்டுமா?? அனைவரும் வாழப் பிரார்த்திக்கிறாள்.


வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்


நாங்களும் வாழ உலகினில் பெய்திடமாட்டாயா வருணனே.


இப்போது நாங்கள் மார்கழி நீராடி மகிழ்ந்து எம்பிரானைக் கும்பிட்டுப் பிரார்த்தனைகள் செய்கிறோம். உன் கொடையை எண்ணி நாங்களும் மகிழ்வோம் என்கிறாள் ஆண்டாள். ஆண்டவனின் உதார குணத்தை இங்கே சுட்டுகிறாள் ஆண்டாள். பரமனைத் தஞ்சமடைந்தால் அவன் கருணை மழை நமக்குக் கிடைக்கும். குறைவில்லாது காத்து ரக்ஷிப்பான். குறைவில்லா அனுகிரஹம் செய்யக் கூடிய பெருமானை வழிபட்டால் அனைத்துத் துன்பங்களும் நீங்கி இன்ப மழை வர்ஷிக்கும்.

--Geetha Sambasivam 12:01, 5 ஏப்ரல் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 ஜூன் 2011, 08:42 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,801 முறைகள் அணுகப்பட்டது.