சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்= கண்ணனும் வந்துவிட்டான். நோன்பும் முடிந்தாகிவிட்டது. கண்ணனைக் கண்ணார, மனமாரக் கண்டு களித்துக்கொண்டிருக்கிறோம். மேலும் கண்ணனிடம் கேட்பதற்கு வெறும் அணிகலன்களும், ஆடைகளும் மட்டுமா?? இல்லை, இல்லை அவை எல்லாம் வெறும் வெளிப்பார்வைக்கு வேண்டுமானால் ஆடம்பரமாக, அத்தியாவசியமாய் இருக்கலாம், நமக்கு வேண்டியது அதுவல்லவே/
அதிகாலையிலேயே கருக்கலிலேயே எழுந்து, தோழிகளையும் அழைத்துக்கொண்டு நீராடி நோன்பு வழிபட்டு, இப்போது நோன்பையும் முடித்துவிட்டு உன்னையும் கண்டு சேவித்துக்கொண்டோம் கண்ணா, உன் பொற்றாமரை அடியே எங்களுக்குக் கதி. வேறெதுவும் இல்லை அப்பா. அந்தப் பொற்றாமரை அடியைப் போற்றும் காரணம் என்ன தெரியுமா கேள் கண்ணா!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.= அப்பா, எங்களைக் கடைத்தேற்றவே இந்த ஆயர் குலத்தில் நீ பிறந்தாய். பசுக்களை நாம் ரக்ஷிக்கிறோமா, அவை நம்மை ரக்ஷிக்கிறதா? ஆயர்கள் எவருமே பசுக்களை மேய விட்டு அவற்றின் வயிறு நிரம்பாமல் உணவு உண்ண மாட்டார்கள். பசுக்களை அப்படி ரக்ஷிப்பார்கள். அத்தகைய குலத்தில் பிறந்து நீ எங்களை ரக்ஷித்து ஆட்கொள்ளாமல் இருப்பாயா? எங்களை உன்னுடன் ஐக்கியம் செய்து கொள்ளாமல் இருப்பாயா? அதுதான் நடக்கும் அப்பா, வேறு எதுவும் நடவாது.
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு= கோவிந்தா, கோபாலா, நாங்கள் வந்தது வெறும் பறை என்னும் வாத்தியத்துக்காக மட்டும் அல்ல, எங்களுக்குத் தேவை மோக்ஷம், முக்தி. அதுவும் எப்படிப்பட்ட முக்தி?? ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும், என்றைக்கும், எப்போதும், எந்தப் பிறவியிலும் உன்னோடு நாங்கள்
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!= உறவினர்களாகவே இருப்போம். நீ வந்து எங்கள் குலத்தைத் தேடிப் பிறந்துவிடு அல்லது எங்களை உன் குலத்தில் பிறக்கச் செய். உன்னைத் தவிர வேறொருவருக்கு நாங்கள் எந்தவிதத் தொண்டும் செய்ய மாட்டோம். உனக்கே நாங்கள் அடிமையாக இருப்போம். ஆகவே எங்களிடம் இருக்கும் மற்ற ஆசைகளை எங்களிடமிருந்து விட்டொழிக்க வேண்டி, எங்கள் மண்ணாசை, பொன்னாசை போன்ற எந்தவிதமான இவ்வுலக ஆசைகளும் எங்களிடம் ஒட்டாதபடிக்கு எங்களை மாற்றி அருள் புரிவாய் கண்ணா. எங்களுக்கு வேறு எதுவுமே வேண்டாம், நின்னருளே வேண்டும். உனக்கே நாங்கள் என்றென்றும் அடிமை.
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!
மார்கழி மாதம் முடிந்துவிட்டது. நோன்பும் முடிந்து விட்டது. கண்ணனும் வந்துவிட்டான். அவனிடம் வேண்டியதைக் கேட்கவும் கேட்டாயிற்று. இனி பொங்கல் கொண்டாடவேண்டியதுதான். ஆகவே இத்தனை நாட்களும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொன்றாய்ப் பாடிய பாடலைத் தான் பாடியதையும், அதை தினம் தினம் பாடலாம் என்றும், குறைவில்லாச் செல்வம் பெறலாம் என்றும் கூடப் பாடியோர், பாடலைக்கேட்டோர், இனி பாட இருப்போர் என அனைவரையும் வாழ்த்துகிறாள் ஆண்டாள். இதை பலஸ்ருதி என்று சொல்லலாம்.
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி= அமுதம் எடுக்க வேண்டிக் கடைந்த கடல் பாற்கடல். அதுதான் இங்கே வங்கக் கடல் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. வங்கம் என்பது இங்கே கப்பல்களையும் குறிக்கும். நம் மனதைக் கடலாகக் கொண்டால் அதில் மிதக்கும் அனைத்து எண்ணங்களும் கப்பல்கள் எனலாம். அத்தகைய மனதை இறைஅருள் என்னும் மத்தால் கடைந்து பகவானின் கடாக்ஷம் என்னும் அமுதத்தைப் பெறலாம். இன்னொரு பொருளில் பாற்கடலைக் கடைந்த போது அதில் இருந்து மா என்னும் மஹாலக்ஷ்மி தோன்றினாள். அவளை அடைந்தவன் ஸ்ரீமந்நாராயணன். மாவை அடைந்தவன் மாதவன் என்ற பொருளிலும் இங்கே வங்கக் கடல் கடைந்த மாதவனை என்று கூறுகிறாள் ஆண்டாள். அடுத்து கேசி என்னும் அரக்கனை அழித்தான் குழந்தை கண்ணன். ஆகவே கேசவன் என்ற பெயரும் பெற்றான். அந்த மாதவனை, கேசவனை இந்த ஆயர்பாடியின் கோபிகைகளான நாம், நிலவைப் போன்ற திருமுகம் கொண்ட அழகான பெண்கள் என்று கூறுகிறாள் ஆண்டாள். அந்த அழகான சேயிழையார் அனைவரும் சேர்ந்து கண்ணன் இருக்கும் இடத்துக்கே சென்று,
அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன= அவனிடம் வேண்டிப் பெற்றது இந்தப் பரமபக்தியாகிய அமுத ஊற்று. அதன் மூலம் கண்ணன் மனதை அவர்கள் வென்றார்கள். அவனிடமிருந்தே தங்களுக்கு வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார்கள். இவற்றை எல்லாம் தன் அளப்பரிய பக்தியால் உணர்ந்து பாடியது யார் தெரியுமா?? இப்பூவுலகுக்கே ஒரு அழகான அணி போல் விளங்கும் புதுவை என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருத்தர் இருக்கிறார். அவர் குளிர்ச்சியான மலர்மாலைகளைக் கண்ணனுக்குப் படைப்பார் தினமும், அந்த மாலைகளைப் பின்னர் கண்ணனின் பிரசாதமாகத் தானும் அணிந்து கொள்வார். ஆனால் அவர் மகளான கோதையோ தான் சூடிக் களைந்த பின்னரே கண்ணனுக்கு அணிவிப்பாள். கண்ணனுக்கும் அதுவே உவக்கும். அந்தப் பெரியவர் பெயர் பட்டர்பிரான் என அனைவரும் அழைக்கும் பெரியாழ்வார் ஆகும். அவருடைய திருமகள் தான் கோதை, என்னும் ஆண்டாள்.
சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்= அந்தக் கோதை சொன்ன தமிழ் மாலைகள் தாம் இந்தப்பாடல்கள். முப்பது பாடல்கள், இவை அனைத்தும் கோதை என்னும் ஆண்டாள் அடுத்து வருவோருக்கு அளித்த அருமையான பரிசு ஆகும். இந்தப் பரிசைத் தினம் தினம் தப்பாமல் சொல்லுபவர்களுக்குத் தன் நான்கு புஜங்களாலும்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!= சிவந்த வரியோடிய செந்தாமரைக் கண்களோடு கூடிய அழகிய இன்முகத்தை உடைய லக்ஷ்மிதேவியை மார்பில் சூடிய திருமால் எடுத்து அணைத்துத் தன் நெஞ்சோடு அவர்களைச் சேர்த்துத் தன் இன்னருளைத் தருவான். தன் அடியார்கள் தன் திருவருளைப் பெற்று இன்புறும் வண்ணம் அவர்களுக்குத் தன் இன்னருளைப் பொழிவான். இத்துடன் திருப்பாவை முடிகிறது.
திருப்பாவை உரைக்குத் துணை செய்தவர்கள்
உபய வேதாந்தி வேளுக்குடி திரு கிருஷ்ணன் அவர்கள், பொதிகைத் தொலைக்காட்சி உரைகள்.
உபய வேதாந்தி திரு அநந்தபத்மநாபாச்சாரியார் அவர்கள், ஜெயா தொலைக்காட்சி உரைகள்.
--Geetha Sambasivam 10:08, 6 ஜூலை 2011 (UTC)