கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனையப் பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பால்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
மனதுக்கு மிகவும் மகிழ்வைத் தரும் பாடல் இது. இந்தப் பாடலைப் பாடியபோது நோன்பு முடிகிறது. அதுவரையிலும், நெய்யுண்ணாமல், பாலுண்ணாமல், நாட்காலும் நீராடி, மையிட்டு எழுதாமல், மலரிட்டு முடியாமல் இருந்த பெண்கள் இப்போது நெய்யும், பாலும் சேர்த்து கூடவே இனிப்பான வெல்லமும் சேர்த்து அக்கார அடிசில் செய்து கண்ணனுக்கு மட்டுமல்லாமல் அவர்களும் உண்டு, நமக்கும் கொடுக்கிறார்கள். கண்ணனின் பிரசாதம் அல்லவோ?? ஆகவே அனைவருமாய்க் கூடி இருந்து குளிரவேண்டும் என்கிறாள் ஆண்டாள். எது கொடுத்தாலும், என்ன கிடைத்தாலும் மனது திருப்தி அடையாது. போதும் என்ற வார்த்தை வாயில் இருந்து வராது. ஆனால் போதும்னு நாமே சொல்லும்படி வைப்பது ஒருவருக்கு அன்னம் படைக்கும்போதுதான். வயிறு கொள்ளும் அளவுக்குத் தானே உண்ணமுடியும்?? அதிகம் உண்ண முடியாதே? ஆகவே உண்பவர்கள் வெகு விரைவில் போதும் திருப்தி என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் வயிறைப்போல் அப்போது மனமும் குளிர்ந்து இருக்குமல்லவா?? அதான் கூடி இருந்து குளிர்ந்து அநுபவிப்பது.
இந்தப் பொங்கலையும் பாவம் ஆண்டாளுக்கு அவள் காலத்திலே பண்ணி கண்ணனுக்குக் கொடுக்க அவளுக்கும் கொடுத்து வைக்கலை. கண்ணனுக்கும் கிடைக்கவில்லை. அதுவும் அழகர் மலை நம்பிக்கு. திருமாலிருஞ்சோலையின் பரமசாமிக்கு. அதுக்காக எத்தனை நூற்றாண்டுகள் காத்திருந்தார்கள் இருவரும். ஆண்டாள் தரப்போகிறாள் என்று வருஷா வருஷம் அழகர்மலைக்கள்ளர் எதிர்பார்க்க, ஆண்டாளோ ஒவ்வொரு வருஷமும் பாடலைத் தவிர வேறேதும் கொடுக்காமல் இருக்க, ஏமாந்து போய்க்கொண்டிருந்தார் திருமாலிருஞ்சோலை நம்பி. கடைசியில் இங்கேயும் ஆண்டாளுக்கு உதவிக்கு வந்தவர் ஸ்ரீராமாநுஜர் தான். முன்னொரு பாடலில் செந்தாமரைக்கையால் சீரார் வளை ஒலிப்ப அவர் கண்ட ஆண்டாளைத் தம் சகோதரியாக ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமாநுஜர் அவளின் நாச்சியார் திருமொழியின் இந்தப் பாடலைப் படித்துப் பார்த்து மனம் உருகினார்.
"ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் (9:6)
நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?
அழகான மணம் வீசும் மலர்கள் நிறைந்த பொழில்கள் நிரம்பிய மாலிருஞ்சோலை நம்பியான எம்பெருமானுக்கு நான் நூறு தடாவில் வெண்ணெயும், நூறு தடா நிறைய அக்கார அடிசிலும் வைப்பதாய்ச் சொன்னாளாம். நூறு தடா என்பது நூறு அண்டாக்கள். இப்போதும் ( இப்போவுமானு தெரியலையே?) மதுரையில் பெரிய கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு அண்டாவில் தான் சாதம் வடிப்பார்கள். பெரிய பெரிய அண்டாக்களில் சாதம் வடித்துக் காடாத்துணி அல்லது வெள்ளை கதர் வேட்டியைக் கஞ்சி வடிய வாயில் கட்டி வடிய வைப்பார்கள். அந்தப் பழக்கம் ஆண்டாள் காலத்திலும் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. அம்மாதிரி நூறு அண்டாக்கள் நிறைய வெண்ணெயும், நூறு அண்டாக்கள் நிறைய அக்கார அடிசிலும் படைப்பதாய் வேண்டிக்கொண்டாளாம். பல ஆண்டுகள் நிறைவேறாமல் இருந்த இந்தப்பிரார்த்தனையைப் பற்றிப் படித்த ஸ்ரீராமாநுஜர் தாம் திருமாலிருஞ்சோலை சென்ற போது அங்கே உள்ள நம்பிக்கு ஆண்டாளின் பெயரில் நூறு தடா வெண்ணெயும், நூறு தடா அக்கார அடிசிலும் சமைக்கச் சொல்லிப் படைத்து வழிபட்டார்.
பின்னர் அவர் சென்றது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு. அங்கே ஆண்டாளின் தனிக்கோயிலுக்குப் போனபோது, "வாருமையா, என் அண்ணாரே!" என்ற இனிமையான குரல் கேட்க, ஸ்ரீராமாநுஜரும், கூட வந்த சீடர்களும் குரல் எங்கிருந்து வருகிறதெனப் பார்க்க. மூலஸ்தானத்தில் இருந்த ஆண்டாள் விக்ரஹம் அவர்கள் கண்ணெதிரே நடந்து வந்து நின்று, மீண்டும், " வாருமையா என் அண்ணாரே", என அழைக்க, பின்னர் புரிந்ததாம் ஸ்ரீராமாநுஜருக்குத் தாம் ஆண்டாளின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அவளுக்காக நிறைவேற்றிக் கொடுத்ததால் ஆண்டாளுக்கே அண்ணனாகிவிட்ட கதை! அது முதல் திருமாலிருஞ்சோலை மட்டுமில்லாமல் தென்மாவட்டங்கள் அனைத்திலும், முக்கியமாய்ப் பாண்டியநாட்டுப் பெருமாள் கோயில்கள் அனைத்திலும் இந்தக் கூடாரைவல்லித் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப் படும். அன்று எல்லாக் கோயில்களிலும் நெய் சொட்டும் சர்க்கரைப் பொங்கல் தான் நிவேதனம். இன்னிக்கு எங்க வீட்டிலும்! :D ஆண்டாள் பிறந்த வீட்டுக்கு இதைத் தொடர்ந்து வருவதாகவும் ஐதீகம். இப்போது பாடலின் பொருளைப் பார்ப்போமா?
கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம் பெறு சம்மானம்= கண்ணனோ நம் வேண்டுகோளுக்கு இணங்கி வந்துவிட்டான். அவன் சாதாரணமானவன் அல்ல. கூடாரை அதாவது மனதினால் அவனைக் கூடாதவர்களையும் அவன் வென்று ஆட்கொள்ளுவான். அவர்களும் ஒருவிதத்தில் கண்ணனைத் தானே நினைக்கின்றனர். அவன் அடியார்களான நாம் பக்தியினால் நினைக்கிறோம் எனில் அவர்கள் கண்ணனிடம் கொண்ட வெறுப்பால், அவனை எவ்வாறு வெல்வது என நினைக்கின்றனர். ஆனாலும் அவர்களையும் வென்று ஆட்கொள்கிறான் கண்ணன். அதுவும் இவனோ பசுக்களையும் ரக்ஷிக்கும் கோவிந்தன். வாயில்லா ஜீவன்களை ரக்ஷிப்பவன் வாய் பேசும் நம்மிடம் உள்ள மூடத்தனத்தைக் கண்டு நம்மை வெறுப்பானா? மாட்டான்! பசுக்கள் அவனிடம் போய் எங்களை ரக்ஷிப்பாய் என்றா கேட்டன? இல்லையே? ஆகவே இவனுக்குத் தொழிலே இது தான் ரக்ஷகன் இவன்.
அத்தகைய கோவிந்தனைப் பாடி நாம் அடைவது வெறும் முக்தி தானா?? இந்த நாடே அல்லவோ நம்மைப் புகழும்? உண்மைதானே? எப்போவோ ஆண்டாள் எழுதி வைச்ச இந்தப் பாடல்களின் மூலம் ஆண்டாளின் புகழ் பரவித்தானே இருக்கிறது?? நாடு புகழும் பரிசு வேறு என்ன வேண்டும்? எதுவும் வேண்டாம். ஆனாலும் ஆண்டாள் ஒரு பெரிய லிஸ்டே வைத்திருக்கிறாளே?
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனையப் பல்கலனும் யாமணிவோம்=சூடகம் என்னும் கைவளை, தோள்களில் பூட்டிக்கொள்ளும் தோள்வளை, காதில் அணியும் தோடு, மேல் செவியில் போட்டுக்கொள்ளும் செவிப்பூ போன்றவையும் கால்களில் அணியும் பாடகம் என்னும் அணியும் அணிந்து கொள்வார்களாம். கண்ணன் வரலை, வரலைனு காத்திருந்தது போய்க் கண்ணனும் வந்துவிட்டான். நோன்பும் முடிந்துவிட்டது. நிவேதனமாய்ச் சர்க்கரைப் பொங்கலும் பொங்கியாகிவிட்டது. குளித்து ஆடை அணிய நல்ல பட்டாடை வேண்டுமே? ஆகவே கண்ணனிடம் ஒவ்வொன்றாய்க் கேட்கிறாள் ஆண்டாள்.
வெளிப்படையாக இவை அணிகலன்கள் என்று தோன்றினாலும் உள்பொருளாக கைவளையல் கைக்குப் போடும் காப்பாகவும், தோள்வளைகள் என்பது வைணவர்கள் தங்கள் கைகளில் குத்திக்கொள்ளும் சங்கு, சக்ர முத்திரைகளாகவும், காதில் தோடாக அணிவது எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய என்பதாயும் செவிப்பூவும் இரண்டு மந்திரங்களாயும் பாடகம் என்பது புகழ்ந்து கூறும் ஸ்லோகங்களாகவும் கூறுவர். ஆகவே இத்தனையும் கண்ணன் தங்களுக்குக் கொடுக்கவேண்டும் என ஆண்டாள் எதிர்பார்த்ததில் வியப்பில்லையே?
ஆடையுடுப்போம் அதன் பின்னே பால்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!= அணிகலன்கள் மட்டும் போதுமா?? ஆடை வேண்டாமா? ஆயிற்று, குளித்தாயிற்று, கண்ணனைப் புகழ்ந்து பாடிக்கொண்டே இருக்கிறோம். ஆடைகள் அணிந்து அணிகலன்கள் அணியவேண்டியதுதான் பாக்கி. கண்ணனுக்குச் சாற்றிய துணிகளே இவர்களுக்குப் பிரசாதமாய்க் கிடைத்தாலும் சரி. இங்கே வெளிப்படையாய் ஆடை என்பது உள்பொருளில் கண்ணன் ஞானத்தை ஆடையாக அவர்கள் அறியாமைக்குக் கொடுக்கவேண்டும் என்றே கேட்கிறாள். இத்தனைக்கும் பின்னரே பால்சோற்றை மூட நெய்பெய்து, மூட நெய் பெய்து என்றால், அந்தப் பால் சோறு முழுதும் முழுகுமாறு நெய்யைக் கொட்டி, பின்னே? நூறு தடா வெண்ணெய் என்றால் சும்மாவா? அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்றால் கையால் அள்ளிச் சாப்பிடவேண்டும். என்னதான் ஸ்பூன் நாகரீகம் என்றாலும் கை நம்ம கை, பிறர் பயன்படுத்த முடியாத ஒன்று. நாம் மட்டுமே பயன்படுத்துவோம் நம்ம கைகளை. ஸ்பூனெல்லாம் அப்படி இல்லை. அந்தக் கைகளால் எடுத்துச் சாப்பிடும்போது முழங்கை வழியாய் நெய்யும், பாலும் வழிய வேண்டுமாம்.
சமைச்சதும் அவ்வளவு பெரியதாக. சாப்பிடுவதும் அவ்வளவு பெரியதாக. அதும் ஒருத்தர் ரெண்டு பேரெல்லாம் இல்லை. எல்லாருமாய்க் கூடி இருந்து குளிர்ந்து, சளசளனு உற்சாகப் பேச்சுப் பேசிக்கொண்டே சாப்பிடலாம் என்கிறாள். இங்கே உட்பொருளாகப் பாலும், நெய்யும், வெல்லமும், அரிசியும் கலந்த சோறு எவ்வாறு இனிக்குமோ அவ்வாறு கண்ணனின் கனியமுதில் நாமும் ஒன்றாய்க் கலந்து அவனருளாலே அவனோடு இணைந்து நித்ய சூரிகளாய்க் கூடி இருப்போம், இன்புற்று மகிழ்வோம் என்கிறாள் ஆண்டாள்.
கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்றன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினாலுன்றன்னைச்
சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!
கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்= அடியவர்களுக்குக் கேட்டதை எல்லாம் கொடுக்கும் கண்ணன் இங்கே ஆண்டாளிடமும், மற்ற கோபியரிடமும் என்ன கொண்டு வந்தீர்கள் எனக் கேட்கிறான் போலும். ஆண்டாள் நாங்க என்ன கொண்டு வருவோம் அப்பா?? நாங்கள் அனைவரும் சாதாரண இடைக்குலத்துப் பெண்கள் தானே? தினம் பொழுது விடிந்தால் பாலைக் கறந்துவிட்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு மேயவிட்டுவிட்டுக் கையில் கொண்டு போகும் கட்டுச்சோற்றை உண்போம். எங்களுக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் எதுவும் அறியமாட்டோம். சாதாரணமான அறிவு கூட எங்களிடம் இல்லை. எங்களிடம் இருப்பது உன்னிடம் நாங்கள் காட்டும் அன்பு மட்டுமே. அதுவும் இந்த ஆயர் குலத்தைத் தேடி வந்தல்லவோ நீ பிறந்திருக்கிறாய்?? இருந்திருந்தும் இந்தக் குலத்தை உய்விக்கவேண்டும் என்று தோன்றி உள்ளதே உனக்கு?
அடடா, இதைவிடப் பெரிய புண்ணியம் எங்களுக்கு வேண்டுமா?? வாராது வந்த மாமணியாக நீ எங்கள் குலத்திலெ எங்களுக்கு நடுவே பிறந்து, வளர்ந்து, இருக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோமே, அதுதான் அப்பா நாங்கள் செய்த பெரும்புண்ணியம்!
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! = அப்பா, உனக்குக் குறை ஒன்றும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். நீ எங்களிடையே வந்து பிறந்து எங்கள் குலத்தைப்பெருமைப்படுத்தியதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே, குறை எதுவுமே இல்லை, கோவிந்தா! பாதாளம் வரை பாயும் அறியாமையுடையோராகிய நாங்கள் உன்னால் அன்றோ குறை அறியாமல் இருக்கிறோம்! எங்கள் அறியாமையைப்போக்கி உன் கருணையால் எங்களை உய்விக்க வந்திருக்கிறாயே, இதை விடவும் பெரும்பேறு வேறு என்ன வேண்டும்? எங்களுக்கு என்ன குறை அப்பா? எதுவும் இல்லை. உன் கருணை தான் வேண்டும். ஆனால் அதையும் நாங்கள் கேட்கும் வரையில் நீ காத்திருக்காமல் அள்ளி அள்ளிப் பொழிகிறாய்.
உன்றன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் = உன்னோடு எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த உறவை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜென்ம ஜென்மங்களுக்கும் ஒழிக்க முடியுமா? அப்பா, நீ எங்களுக்கு ரத்த சம்பந்தமான உறவு மட்டுமல்ல. நீயே நாங்கள், நாங்களே நீ. இருவரும் ஒன்றே. எங்களைப்பிறக்கப் பண்ணிய நீ தேடிப்பிடித்து வந்து எங்களில் ஒருவனாயும் பிறந்து எங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் உறவாக்கிக்கொள்கிறாய். இதைவிட வேறு என்ன வேண்டும்? அப்பா, நாங்கள் ஏதுமறியாப்பிள்ளைகளாய் இருக்கிறோம்.
அன்பினாலுன்றன்னைச்
சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பவாய்! = உன்னிடம் நாங்கள் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பினாலும், பாசத்தினாலும் ஏதேனும் உன்னைச் சொல்லி இருப்போம். உன்னைச் சீண்டி இருப்போம். உன்னை ஏ, கோவிந்தா, மாடு மேய்ப்பவனே என்றெல்லாம் கூப்பிட்டிருப்போம். உன்னைக் கடிந்து பேசி இருப்போம். இதெல்லாம் உன்னிடம் கொண்ட உரிமையால் அன்றி வேறல்ல. கண்ணா, எங்கள் இறைவா, எங்களிடம் இவற்றை எல்லாம் ஒரு குற்றமாய்க்கண்டு எங்களைச் சீறி வெறுத்து ஒதுக்கிவிடாதே. எங்களை உன்னோடு சேர்த்து ஆட்கொள்வாய். நாங்கள் அனைவரும் உனக்கே உரியவர்கள். உன் சொந்தம், உன் உடமை, உன் சொத்து. ஆகவே எங்களுக்கு மோக்ஷத்துக்கான வழியைக் காட்டி அருள்வாய்.
--Geetha Sambasivam 10:04, 6 ஜூலை 2011 (UTC)