மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள் 3மரபு விக்கி இருந்துமாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
ஆண்டாள் இந்தப் பாடல்களை எல்லாம் கோகுலத்துப் பெண்களை நோக்கியே பாடுவதாக அமைந்திருக்கிறது. தான் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆண்டாள் கோகுலமாய் நினைத்திருக்கலாம். என்றாலும் கண்ணன் இடைக்குலம் என்பதால் தன்னையும் ஒரு இடைப்பெண்ணாக நினைத்துக்கொண்ட ஆண்டாள் இன்னொரு இடைப்பெண்ணின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் இந்தப்பாடல் உள்ளது.
அந்த இடைப்பெண்ணோ மிகச் சாதாரணமானவள். தத்துவங்களோ, வேதமோ, வேதாந்தமோ, எதுவுமே தெரியாது. சாஸ்திர சம்பிரதாயங்கள் சரிவரத் தெரியாது, புரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் நம்முடைய பாப, புண்ணியங்களுக்கு ஏற்றாற்போல் அனைத்தும் நடக்கிறது என்பதே. அப்படி இருக்கையில் இத்தகைய விரதங்கள் இருப்பதால் என்ன பயன்?? பிழையுள்ள நமக்கு இதனால் தடை ஏதும் ஏற்படாதா? நம் கர்மவினை நம்மைச் சும்மாவிட்டுவிடுமா?? என்றெல்லாம் கேட்கிறாள். அதற்கு ஆண்டாள் அளிக்கும் விடையே இந்தப்பாடல் ஆகும். மாயனை மன்னு வடமதுரை மைந்தனை= மாயன் ஆன அந்த ஸ்ரீமந்நாராயணனை வடமதுரையின் மைந்தனை,
கண்ணன் பிறந்தது வடமதுரையில் அன்றோ. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே இருந்த மதுரை தென்மதுரை. ஆகவே வடமதுரை எனக் குறிப்பிட்டுச் சொல்கிறாள் ஆண்டாள். வடமதுரையில் பிறந்த வசுதேவனின் மைந்தன் ஆன கண்ணன்,
தூயபெருநீர் யமுனைத் துறைவனை= புனிதம் நிறைந்த யமுனைக்கரையில் பிறந்தவனை
யமுனைக்கரையில் பிறந்ததோடு ஆயிற்றா?? அந்த யமுனையைக் கடந்து கோகுலத்துக்கு அல்லவோ வந்தான்??
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை= யமுனையைக் கடந்து தகப்பன் தலையின் மேலே ஒரு கூடையில் வைத்துக் கொண்டு வந்து ஆயர் குலத்தினரிடம் நம்பிக்கையோடு தன் குலவிளக்கை ஒப்படைக்கிறான் வசுதேவன். எல்லாம் வல்ல அந்தப் பரந்தாமனுக்கே என்ன ஒரு நிலை! தாயைக்குடல்விளக்கம் செய்த தாமோதரனை= தேவகி பெருமைப்படும்படியாக அவள் வயிற்றில் பிறந்திருந்தாலும் கண்ணனின் லீலைகள் அனைத்தும் கோகுலத்திலே யசோதையே கண்டு அநுபவிக்கிறாள் அல்லவா?? தேவகித் தாயின் கர்ப்பத்தைப் பெருமைப்படுத்தும்படியாகப் பிறந்திருந்தாலும், ஆயர்குலத்தில் வளர்ந்து அங்கே யசோதை கையால் கட்டுண்டு கிடந்தவன் அன்றோ! கண்ணனின் விஷமம் பொறுக்கமாட்டாமல் கண்ணனைக் கட்டிவிடுகிறாள் யசோதை. அதனால் கண்ணனின் உதரம்=வயிற்றுப்பாகம் வடுவிழுந்துவிடுகிறதாம். அதனால் அவன் தாமோதரன். யசோதை கட்டினால் தான் என்ன?? அவனால் விடுவித்துக்கொள்ள இயலாதா? எனினும்தன் சக்தியை மறைத்துக்கொண்டல்லவோ இங்கே குழந்தையாய்க் காட்சி தருகிறான் கண்ணன்.
இத்தகைய எளிமையான கண்ணனை நாம்
தூயோமாய் வந்து நாம் தூமலர்கள் தூவித் தொழுது= இங்கே தூயோம் என்பது குளித்து நீராடி வருவதையும் குறிக்கும் அதே சமயம் மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் சுத்தமாய்க் கண்ணனை மட்டுமே மனதினால் கண்ணனை ஒருமுகமாய்ச் சிந்திப்பதையும் கூறும்.
வாயினால் பாடி மனதினால் சிந்திக்கப்= நம் மனம், வாக்கு, காயம் என அனைத்தினாலும் கண்ணன் ஒருவனையே சிந்திப்போம், அவனையே தொழுவோம், என்றும் கொள்ளலாம், அல்லது நம் கைகளால் மலர் தூவி அர்ச்சித்து, வாயினால் இனிய கீர்த்தனைகளைப் பாடி, மனதினால்கண்ணனை நினைக்கலாம் என்றும் கொள்ளலாம். ஆனால் இவற்றில் எதைப் பின்பற்றினாலும் அனைத்தும் கண்ணனுக்கே என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யவேண்டும். பூசலார் நாயனார் மனதிலேயே ஈசனுக்குக் கோயில் கட்டினார். கோயில் கட்டியதோடு மட்டுமின்றிக் கும்பாபிஷேஹமும் செய்ய நாளை நிச்சயித்தார். அதே நாள் பல்லவனும் கோயில் ஒன்றை உண்மையாகவே கட்டிக் கும்பாபிஷேஹம் செய்ய நாள் நிச்சயித்தான். ஈசனோ மன்னன் கனவிலே சென்று , "பூசலாரின் கோயில் கும்பாபிஷேஹத்திலேயே தான் உறையப் போவதாய் மன்னனின் கும்பாபிஷேஹத்துக்கு வர இயலாது." என்று கூறுகிறார். மன்னன் திகைத்துப்பூசலாரின் கோயிலைத் தேடிப் போக ஏழையான அவர் பொருளில்லாமல் மனக் கோயில் கட்டியது தெரியவருகிறது. அப்போது தான் மன்னனுக்கு உண்மையான பக்தி என்பதும் புரியவருகிறது. அப்படி நாமும் கண்ணனைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் இருக்கவேண்டும்.
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்= தீயில் இட்ட தூசைப் போல ஆகும், பெண்ணே. ஆகவே நீ சீக்கிரம் வா, நாம் பாவை நோன்பை ஆரம்பிக்கலாம்.
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
இப்போது ஆண்டாள் தன்னுடன் கண்ணன் புகழைப்பாட மற்றப் பெண்களையும் அழைக்க ஆரம்பிக்கிறாள். ஒரு மாதிரியாகத் தடங்கல் சொல்லிக்கொண்டிருந்தவர்களை எல்லாம் பரமனின் புகழையும், செளந்தர்யத்தையும் அவன் கருணையையும் விவரித்துக் கூறி அவனைச் சரண் என அடைந்தால் நம் அனைத்துப் பாவங்களும் தீயில் எரிந்த தூசைப் போல் எரியும் என்றவள், இப்போது மற்றப் பெண்களையும் கூப்பிடுகிறாள். ஒரு வீட்டிற்குச் சென்று அந்தப் பெண்ணை எழுப்புகிறாள். பெண்ணே எழுந்திரு என்கிறாள். அதுவும் எவ்வாறு?
புள்ளும் சிலம்பின காண்= அடி பெண்ணே, விடிந்துவிட்டதே? இங்கே புள் என்பது பறவைகளைக் குறிக்கும். பறவைகள் விடியலைக்கண்டு சந்தோஷத்தில் கத்திக் கூச்சல் போடுகின்றனவே! அதற்கு என்ன அழகான ஒரு தமிழ்ச்சொல்! சிலம்பின!
புள்ளரையன் கோயில்= புள்ளரையன் இங்கே கருடனைக் குறிக்கும் என்று சிலர் கூற்று. எப்படி ஆனாலும் அனைத்துக்கும் தலைவன் ஆன அந்த ஸ்ரீமந்நாராயணனையே இது சொல்கிறது. புள்ளரையன் பக்ஷிராஜாவான கருடனின் தலைவன் ஆன ஸ்ரீமந்நாராயணனின் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ = விடிந்து வெள்ளை வந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாகச் சங்கு ஊதுகிறார்களே அந்தச் சத்தம் கேட்கவில்லையா உனக்கு??
பிள்ளாய்! எழுந்திராய்! ஏ பெண்ணே! எழுந்திரு.
பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,= பால கிருஷ்ணனைக் கொல்ல அனுப்பப்பட்ட பூதனையின் நஞ்சு கலந்த பாலை உண்டானே கண்ணன், அது மட்டுமா? சகடாசுரன் வண்டிச்சக்கரத்துக்குள்ளே புகுந்துகொண்டு கண்ணனைக் கொல்லப் பார்த்தானே? கண்ணன் இதுக்கெல்லாம் அஞ்சவே இல்லையே? தன்னைக்கொல்ல வந்த பூதனையைக் கொன்றும், சகடாசுரனை அழித்தும் அவர்கள் மூலம் மேலும் நமக்குக் கஷ்டம் வராமல் காத்தானே அதை மறந்துவிட்டாயா பெண்ணே!
ஆனாலும் அந்தப்பெண் அதான் எல்லாம் முடிஞ்சாச்சே, அதனால் என்னனு மேலும் கேட்கிறாள்.
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை=ஆதிசேஷன் மேல் துயில் கொண்டிருக்கும் மூலவித்தான பரமனை. பரமன் ஒருவனே ஆதிவித்து, மூலவித்து, சகலமும் அவன் மூலமே வந்தது. அவன் ஒருவனே நிரந்தரம். அத்தகைய மூலவித்தான பரமன் வெண்மையான பாற்கடலில் அரவத்தின் மேல் துயில் கொண்டிருக்கிறான் என்றும் கொள்ளலாம். அல்லது யோக மார்க்கத்தில் உள்ளே இருக்கும் குண்டலினியை எழுப்பும் மூலகர்த்தாவாய் இருக்கிறான் என்றும் கொள்ளலாம்.
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் =அத்தகைய மூலவித்தைத் தியானித்துத் தவமும், யோகமும் இருக்கும் முனிவர்களூம், யோகிகளும் மெல்ல எழுந்து
அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்= "ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி" என்று கோஷிக்கிறார்களே, அந்த ஓசை உனக்குக் கேட்கவில்லையா? எங்கள் உள்ளமெல்லாம் குளிர்ந்துவிட்டதே! அந்தப்பேரொலி கேட்டே நாங்கள் உன்னை எழுப்ப வந்தோம். எழுந்திரு பெண்ணே! பரந்தாமனின் குணவிசேஷங்களைப் பற்றிக் கேட்டாலோ, பார்த்தாலோ, சொன்னாலோ உள்ளம் மயக்கம் கொள்ளும், என்றாலும் சிலரால் மட்டுமே விரைவில் அத்தகைய மோன நிலைக்குச் செல்ல முடிகிறது. சிலரால் அவரவர் கர்மவினையைப் பொறுத்து மெல்லத் தான் செல்ல முடிகிறது. ஆகவே கர்மவினையிலிருந்து சீக்கிரம் விடுபட நாம் சீக்கிரமாகவே அவன் திருவடியில் சரணடையவேண்டும். அதற்கு நமக்குத் தேவைப்படுவது எளிய பக்தியே.
--Geetha Sambasivam 08:26, 4 ஜூன் 2011 (UTC)
|


