தட்டச்சு செய்து உதவியவர்: ச.கணேசன், பெங்களூர்
ஒரு கலாசாலையில் வேலை பார்ப்பது எளிதான காரியமன்று. உபாத்தியாயருக்கு அடிக்கடி கோபம் வரும்படி மாணாக்கர்கள் நடப்பார்கள். பாடம் சொல்லும் முறை, அடக்கியாளும் முறை இரண்டிலும் நல்ல பழக்கம் இருந்தாலன்றி ஒரு கலாசாலையில் காலந்தள்ள முடியாது. ஆசிரியர்களிடத்திலுள்ள குறைபாடுகளையெல்லாம் விளம்பரப்படுத்துவதில் மாணாக்கர்களுக்கு ஒரு தனி ஊக்கம் இருக்கும். ஆனால் தம்முடைய ஆசிரியர் சிறந்தவரென்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்கு உண்டாகும் அன்பு வேறுவிதமாகவே இருக்கும் . தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் ஆசிரியர்களை அவர்கள் போற்றி வருவார்கள். அத்தகைய மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உண்டாகும் அன்பு மிக உயர்ந்தது; ஆசிரியராக இருக்கும் கால முழுவதும் இன்பமாக இருப்பதற்கு அவ்வன்பே உதவி செய்யும்; இல்லையெனில் ஏதோ கடமைக்கு வேலை பார்த்ததாகத்தான் முடியும்.
1880-ஆம் வருஷத்தில் கும்பகோணம் காலேஜில் வேலையில் நியமிக்கப்பெற்று அதுமுதல் 1903-ஆம் வருஷம் வரையில் அவ்விடத்திலும், அப்பால் 1919-ஆம் வருஷம் வரையில் சென்னைப் பிரஸிடென்ஸி காலேஜிலும் வேலைபார்த்துவந்தேன். ஏறக்குறைய 40 வருஷகாலம் கலாசாலை உபாத்தியாயராக இருந்துவரும் நிலை இறைவனருளால் எனக்கு ஏற்பட்டது. கும்பகோணம் வருவதற்கு முன்பு நான் திருவாவடுதுறை மடத்தில் படித்துக்கொண்டும் பாடஞ்சொல்லிக்கொண்டும் இருந்தேன்; பிரஸிடென்ஸி காலேஜிலிருந்து விலகிய பின்பும் சிதம்பரம் ஸ்ரீ மீனாட்சி தமிழ்க் காலேஜில் பாடஞ்சொல்லியதுண்டு. ஆயினும் கும்பகோணத்திலும் சென்னையிலும் இருந்த காலமே என்னுடைய தமிழ்ப் பணியில் ஒரு சிறந்த பகுதியாக அமைந்தது.
நான் காணும் கனவுகளில், கலாசாலையிற் பல மாணாக்கர்களிடையே இருந்து அவர்களுடைய உத்ஸாகமான செயல்களையும் அவர்கள் பேசும் பேச்சுக்களையும் அறிந்து மகிழுங் காட்சிகளே பல. தம்முடைய குடும்பத்தையே மறந்துவிட்டுக் கல்விகற்றல் ஒன்றையே நாடிப் பறவைகளைப்போலக் கவலை யற்றுப் படித்து வந்த மாணாக்கர்களுடைய கூட்டத்திடையே பழகுவதைப் போன்ற இன்பத்தை வேறு எங்கும் நான் அனுபவித்த தில்லை. அவர்களுடைய அன்பை நினைத்தாலே என் உள்ளத்தில் ஒரு புதிய ஊக்கம் உண்டாகும். அந்தக் காலம் போய்விட்டதானாலும் அக்காலத்து நிகழ்ச்சிகளின் நினைவு இன்னும் என் மனத்தில் இருக்கிறது. அதனால், நான் நினைக்கும்போதெல்லாம் உள்ளத்தால் மீண்டும் கலாசாலையிலிருந்து பாடஞ்சொல்கிறேன்; இன்புறுகிறேன்.
இக்காலத்து மாணாக்கர்களுக்கும் அக்காலத்து மாணாக்கர்களுக்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டு. நல்ல பொருளை நல்ல பொருளென்று உணர்ந்து பாராட்டும் சக்தி அவர்களுக்கு இருந்தது. தெய்வபக்தி, மரியாதை, அடக்கம் முதலியன அவர்களால் உயர்ந்த குணங்களாகக் கருதபட்டன. அத்தகைய மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்வதற்குப் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டுமென்றே நான் கருதினேன்.
இளைஞர்களுக்கு விளையாட்டுத்தனம் இருப்பது இயல்பு. வகுப்பில் சில விளையாட்டுக்களை மாணாக்கர்கள் காட்டுவார்கள். ஆயினும் அவற்றை அடக்கும் முறையில் அடக்கினால் அவர்கள் பெட்டிப்பாம்புபோல் ஆகிவிடுவார்கள்; பின்பு தாம்செய்த குற்றத்திற்கு இரங்குவார்கள். அவர்கள் பெருங்குற்றம் செய்தார்களென்றும், அதற்குத் தண்டனை விதிப்பதற்குரிய அதிகாரி தாமென்றும் எண்ணுவது ஆசிரியருக்குத் துன்பத்தையே விளைக்கும். உலகியல்பு நன்றாகத் தெரியாத அவர்கள் பேதைமையாற் செய்கிறார்களென் றெண்ணிப் பிரியமாக நல்லறிவு புகட்டினால் அவர்கள் வணங்கிவிடுவார்கள்.
வகுப்புக்களில் யாரேனும் குற்றம் செய்தால் அம்மாணாக்கரைச் சுட்டி, "ஏன் இங்ஙனம் செய்தாய்?" என்று வெளிப்படையாகக் கேட்பது என் வழக்கம் அன்று. அவர் செய்த குற்றத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, பொதுவாக, இத்தகைய குற்றங்களைச் செய்வதால் மாணாக்கர்களுடைய அபிவிருத்திக்கே பாதகம் நேருமென்று, பாடத்தில் ஒரு சந்தர்ப்பத்தைக் கற்பித்துக் கொண்டு குறிப்பாகச் சொல்வேன்; அல்லது ஒரு கதையைக் கூற ஆரம்பித்து அதன் முகமாக, அத்தகைய குற்றம் செய்வது கெடுதலென்பதைப் புலப்படுத்துவேன். இதனால் குற்றஞ் செய்த மாணாக்கர் மனம் வருந்தி இரங்கித் தனியே என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்பார்; பிறகு திருந்தி விடுவார்.
மாணாக்கர்கள் செய்யும் இத்தகைய விளையாட்டுச் செயல்களில் ஒவ்வொன்றும் விநோதமாக இருக்கும். ஆசிரியர்களாக இருந்தவர்கள் யாவரும் இத்தகைய செயல்களைப்பற்றி அனுபவத்தில் நன்கு அறிந்திருப்பார்கள். இவற்றை விஷமமென்றோ, குறும்பென்றோ, அசட்டுச்செயலென்றோ கூறுவதைவிட விளையாட்டென்று சொல்லுவதே மிகவும் பொருத்தமாக எனக்குத் தோற்றுகிறது. இத்தகைய மாணாக்கர் விளையாட்டுக்களில் எனக்கு இப்பொழுது ஞாபகம் வந்த சிலவற்றை எழுத விரும்புக்ன்றேன்.
அண்டருலகம்
நான் கும்பகோணம் காலேஜில் சேர்ந்தவுடன், என்னைத் தம்முடைய ஸ்தானத்தில் வைத்து உபகாரம்செய்தவரும் எனக்கு முன் அங்கே தமிழாசிரியராக இருந்தவருமாகிய வித்வான் ஸ்ரீ தியாகராச செட்டியார் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லும் முறையை எனக்குக் கற்பித்தார். அதற்கு முன் ஆங்கிலப் பள்ளிக்கூடத்திற் பாடஞ் சொல்லும் பழக்கம் எனக்குச் சிறிதும் இல்லை. மடத்திற் பாடஞ் சொல்லிக் கொடுப்பதற்கும் காலேஜில் பாடஞ் சொல்லிக்கொடுப்பதற்கும் எவ்வளவோ வேற்றுமையுண்டு.
பாடஞ் சொல்லும்போது செய்யுளைப் படிக்கச் செய்து அதிலுள்ள விஷயத்தைச் சுருக்கமாக முதலிற் சொல்லிவிடுவேன்; அப்பால் கடினமான பதங்களுக்கு உரைகூறுவேன். இயன்றவரையிற் பிள்ளைகளை இசையுடன் படிக்கச் சொல்வேன். இசைப்பயிற்சி யில்லாதவர்களை வற்புறுத்தமாட்டேன். படிக்கும்போது சொற்கள் நன்றாக விளங்குமாறு பிரித்துத் திருத்தமாகப் படிக்கும்படி கற்பிப்பேன். முதல்நாள் நடைபெற்ற பாடத்தில் மறுநாள் கேள்வி கேட்ட பிறகே புதுப்பாடத்தைத் தொடங்குவது எனது வழக்கம்.
ஒருமுறை எப்.ஏ. முதல்வகுப்பில் நைடதம் பாடஞ்சொல்லி வந்தேன். அதில் இந்திரப்படலம் பாடமாக அமைந்திருந்தது. ஒருநாள் வழக்கம்போல் முதல்நாள் நடந்த பாடத்திற் கேள்வி கேட்டுக்கொண்டுவந்தேன். ஒரு செய்யுட்பகுதியாகிய, 'அண்டருலகத்திறைவீ னவ்வுழி யிருப்ப' என்பதிலுள்ள அண்டருலகமென்பதன் பொருளென்னவென்று ஒரு மாணாக்கரை கேட்டேன். அவர் சிறிதும் யோசியாமல் 'நாகருலகம்' என்று சொன்னார். அவர் சொல்லும் விடை என்காதில் விழுவதற்குமுன் வகுப்பில் உள்ள பிள்ளைகள்யாவரும் கொல்லென்று சிரித்தார்கள். சிலர் சிரப்புத் தாங்கமாட்டாமல் வாயைத் துணியாற் பொத்திக்கொண்டனர். விடைகூறியவர் பிழையாகக் கூறினாரென்பது யாவருக்கும் தெரியும். ஆனால் அதற்காக இவ்வளவு சிரிப்பு ஏன்? என்று நான் நினைத்தேன். விடை சொன்ன மாணாக்கரும் ஒன்றும் விளங்காதவரைப்போல் நின்றுகொண்டிருந்தார். நான் எல்லோரையும் சும்மாயிருக்கும்படிக் குறிப்பித்துவிட்டு, "ஏனப்பா நாகருலகம் என்றாய்? என்று கேட்டேன். அவர் மிக்க மயக்கத்தை உடையவராய்ப் பிள்ளைகளையும் என்னையும் மாறிமாறிப் பார்த்துப் பசபச வென்று விழித்தார். அவர் ஒன்றும் சமாதானம் கூறவில்லை யென்பதை யறிந்த வேறொரு மாணாக்கர் எழுந்து, இங்கிலீஷில் அண்டர் (Under) என்பதற்குக் கீழென்று பொருள். அண்டருலகம் என்பதைக் கீழுலகமென்றெண்ணி இப்படிக் கூறினாரென்று தோற்றுகின்றது என்று சொன்னார். பின்புதான் எனக்கு விஷயம் விளங்கியது.
ஸம்ஸ்கிருதமும் தமிழும் கலந்த தொடர்மொழிகளே தமிழில் வருவதுண்டென்றும், இங்கிலீஷ் கலந்த மொழிகள் வருவதற்கு நியாயமில்லையென்றும், இங்கிலீஷ் இந்நாட்டுக்கு வருவதற்கு முன் இருந்த நைடத ஆசிரியருக்கும் இங்கிலீஷுக்கும் சம்பந்தமே யில்லையென்றும் ஒருவாறு சொல்லி அம்மாணாக்கரை உட்காரச்செய்தேன்.
அப்பால், "பாடம் படிக்கும்போது வார்த்தைகளை நன்றாக ஆராய்ந்து படிக்கவேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் எந்த உருவத்திலிருந்து எப்படி மாறி வந்ததென்று தெறிந்துகொள்வது நலம். எந்தச் சொல்லுக்கும் மனம்போனபடி பொருள் செய்யக் கூடாது. வடமொழிப் பதங்களாக இருந்தால் அவற்றினுடைய மூலத்தை அறிந்துகொள்ள வேண்டும் " என்று மற்ற வகுப்புப் பிள்ளைகளுக்குஞ் சொன்னேன்.
வயலிலுள்ள முத்துக்கள்
நைடதம் நாட்டுப்படலத்தில் உள்ள,
"அருமறைக் கிழவ ருள்ளத் தவாக்கெட வன்பி னல்கும்
பெருநிதிக் குப்பை யோடு பெய்புனல் பெருகி யோடி
வரிவளை யலறி யீன்ற மணியிள நிலவு காலும்
திருவநீள் கழனி தோறுஞ் செந்நெலை வளர்க்கு மாதோ"
என்ற பாடலை ஒருமுறை பாடஞ் சொல்ல நேர்ந்தது.
"நிடத நாட்டிலுள்ள செல்வர்களின் பெருங்கொடையையும் வளத்தையும் கூறுவது இச்செய்யுள். அரிய வேதத்தை உணர்ந்த அந்தணர்களுடைய உள்ளத்திலுள்ள ஆசை நீங்கும்படி அந்நாட்டிலுள்ளோர் அன்போடு பெரிய திரவியத்தொகுதிகளைத் தானமாக அளிப்பார்கள். அங்ஙனம் தானஞ் செய்யும்போது தாரை வார்க்கும் ஜலம் ஓடிச்சென்று வயல்களிற் பாய்ந்து அங்குள்ள செந்நெற் பயிரை நன்றாக வளரச் செய்யும். அம்முத்துக்களின் ஒளி இளநிலவைப்போல இருக்கும்" என்று பொருள் சொல்லி அரும்பதங்களுக்குப் பொருளும் வேறு விசேடங்களும் சொன்னேன். அப்படிச் சொல்லி முடித்தவுடன் வகுப்பிலிருந்த மாணாக்கர்கள் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். அப்பொழுது ஒரு மாணாக்கர் எழுந்து நின்றார். அவருக்கு 12 பிராயம் இருக்கும். "ஏன் நிற்கிறாய்?" என்று கேட்டேன். "இந்தப் பாட்டில் ஒரு சந்தேகம் உண்டாயிற்று" என்றார்
நான் : சொல்லலாமே !
மாணாக்கர் : யாசகத்துக்கு வருகிறவர்கள் வயல்களை யெல்லாம் தாண்டிக்கொண்டுதானே ஊருக்குள் வரவேண்டும்? அப்படி வரும்போது வயல்களிள் முத்துக்கள் நிரம்பியிருப்பதைப் பார்பார்களே. அவற்றை எடுத்துத் தங்கள் மடியிலே கட்டிக் கொண்டு போய் விற்றுச் செல்வத்தை யடையலாமே! எதற்காக அவர்கள் யாசிக்க வேணடும்?
இப்படிக் கேட்டவர் உண்மையில் அறியாமையால் கேட்கிறாரென்பது எனக்கு தெரியும். நல்ல குணமுடையவராதலின் இயற்கையாகவே அவர் சந்தேகித்துக் கேட்டாரென்று உணர்ந்தேன். இத்தகைய வருணனைகளை அவர் முன்பு படித்திருக்கமாட்டாரென்று தோற்றியது. " இந்தப் பாட்டினுடைய தாத்பரியம் நிடத நாட்டில் தர்மவான்கள் அதிகமாக இருந்தார்களென்பதுதான். அதைச் சாதுர்யமாக இவ்வாசிரியர் வருணித்திருக்கிறார். இப்படிச் சொல்லுவது கவிகளுடைய இயல்பு. இதைக் கவிமத மென்று சொல்லுவார்கள். இந்த வருணனை உயர்வு நவிற்சி யணியென்னும் இலக்கணத்தின்பாற்படும். நாம் பேசும்போது கூடச் சில சமயங்களில் இயற்கைக்கு மாறான விஷயங்களைச் சொல்லுகிறோம். ஒரு குதிரையைப்பற்றிப் பாராட்டும்போது, 'அதுவா! மணிக்கு நூறுமைல் போகாதா!' என்கிறோம். ஒருவனுடைய ஆற்றலைச் சொல்லுகையில் , 'இவன் அவனை எடுத்துச் சாப்பிட்டு விடுவான்' என்று கூறுகிறோம். ஒருவருடைய கைராசியை, 'நீ தொட்டதெல்லாம் பொன்னாகுமே!' என்று புகழ்கிறோம். இத்தகைய வார்த்தைகளுக்கு உள்ளவாறே பொருள் கொள்ளக்கூடாதல்லவா? உப்பில்லாமல் கலக்கஞ்சி குடிப்பவனென்று ஒருவனைப் பாராட்டினால், உடனே கலக்கஞ்சியை முன்னே வைத்து, 'இதைக் குடி' என்று சொல்லிவிடலாமா? மற்றவர்கள் சிரமப்பட்டுச் செய்யும் காரியத்தை எளிதில் முடிப்பவனென்றுதானே கொள்ளவேண்டும். இதுபோலவே கவிகள் தங்கள் நூல்களில் வருணனைகளை அமைத்திருக்கிறார்கள். ஒரு நகரத்தினுடைய மதில் உயர்ந்து கற்பக மரத்துக்கு வேலியாக இருக்குமென்று சொல்வார்கள்; மதில் மிக உயர்ந்ததென்பது தான் கருத்து. ஒரு நகரத்தை வருணிக்கும்போது வீதியின் இரு பக்கத்திலுமுள்ள தென்னமரங்கள் மிக உயர்ந்து வளர்ந்திருத்தலால் சூரியனுடைய குதிரைகள் மேலே போகும்போது மிதிக்க அம் மரங்களிலுள்ள இளநீர்கள் உடைந்து அவற்றிலிருந்து நீர் வீதிகளில் ஓடிச் சேறாவதற்குக் காரணமாகுமென்று சொல்லியிருப்பார்கள். அந்தச்சேற்றில் நெல் விளைக்கலாமே யென்று கேட்கலாமா? தென்ன மரங்கள் மிக்க செழிப்புடையனவென்ற கருத்தை மட்டும் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படி உள்ள வருணனைகள் நம் தேசபாஷைகளில் மிக அதிகம்" என்று சொன்னேன். அம் மாணாக்கர் ஒருவாறு சமாதானமடைந்து உட்கார்ந்தார். ஆனாலும் முழுச் சமாதானமும் அடைந்தாரா வென்பது எனக்குச் சந்தேகமாகவே இருந்தது.
மற்ற வகுப்பிலுள்ள பிள்ளைகளுக்கும் இத்தகைய சந்தேகங்கள் நேராமலிருக்குமாறு இவ்வருணனைகளை உள்ளபடியே பொருள் செய்து கொண்டு அதன்மேல் ஆராய்ச்சி செய்வது விபரீதமாகுமென்றும், கவியினுடைய கருத்தை யறிந்து சந்தோஷிக்க வேணடுமென்றும் சொன்னேன்.
எங்கள் ஐயா
ஸ்ரீ தியாகராசசெட்டியார் காலேஜ் வேலையிலிருந்து விலகிய பின்பும் சில மாதங்கள் கும்பகோணத்தில் மகாதளம் பேட்டைத் தெருவில் இருந்து வந்தார். ஒவ்வொருநாளும் காலேஜ் வேலை முடிந்தவுடன் மாலையில் அவர் வீட்டுக்குச் சென்று பார்த்துப் பேசியிருந்துவிட்டுத் தெரிந்து கொள்ளவேண்டியவற்றைக் கேட்டுவருவேன்.
அக்காலத்தில் எப்.ஏ. பரீட்சைக்கு நைடதத்தில் ஒரு பகுதி பாடமாக இருந்தது. செட்டியார் வேலையிலிருந்து நீங்கும் போது அதில் ஒரு பாகத்தைச் சொல்லி முடித்திருந்தார். நான் வேலைக்குவந்த பிறகு எஞ்சியிருந்த பாகத்தைப் பாடஞ் சொன்னேன்.
ஒருநாள் வழக்கம்போல் காலேஜ் வேலை முடிந்தவுடன் தியாகராச செட்டியாரைப் பார்க்கச் சென்றேன். அங்ஙனம் செல்லும் பொழுது, என்னுடன் சில மாணாக்கர்களும் வந்தார்கள். மகாமகக்குளத்தைச் சுற்றிக் கரையில் ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதரால் மிக அழகாகக் கட்டப்பெற்ற பதினாறு சிவாலயங்கள் உண்டு. அவற்றுள் மேல்புறமாக இருக்கும் ஆலயம் ஒன்று ஜபம் செய்வதற்கும் மாலைவேளையில் இருந்து பொழுதுபோக்குவதற்கும் வசதியாக இருக்கும்.
அங்கே தியாகராச செட்டியார் இருநதார்; உடனிருந்த இராமகிருஷ்ணபிள்ளை யென்ற ஒரு மாணாக்கருக்கு ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருவிடைக்கழி முருகன் பிள்ளைத் தமிழைப் பாடஞ் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பொழுது நாங்கள் போய் உடன் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம். பாடஞ் சொல்லிவந்த செட்டியார் ஒரு செய்யுட்பகுதியை விளக்கி அதற்கநூகூலமாகக் கம்ப ராமாயணத்திலிருந்து ஒரு செய்யுளைச் சொன்னார். சொல்லும்போது அவர் உள்ளமுழுதும் கம்பர் வாக்கிற் பதிந்தது; மிகவும் உருகி அச் செய்யுளைப் பாராட்டினார். அப்பொழுது அங்கே வந்திருந்தவரும், மகாமகக்குளத்தின் மேல்கரையில் வசிப்பவரும், செட்டியாரிடம் பாடங்கேட்டு முதல் வருஷத்தில் பி.ஏ.பரீட்சை தேறியவருமாகிய பி.கோபாலையரென்பவர், செட்டியார் சொன்ன கம்பராமாயணச் செய்யுளை அடுத்துள்ள இரண்டு மூன்று பாடல்களைச் செட்டியார் சொல்லுகிறபடியே சொல்லிவிட்டு, "ஐயா அவர்கள் இந்தப் பாட்டுக்களைப் பாடஞ் சொல்லும்போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்!" என்று மிகப் பாராட்டினார்.
செட்டியார் உள்ளங்குளிர்ந்து என்னை நோக்கி, "இப்படிப் பிள்ளைகளுடைய மனத்திற்படும்படியும் அவர்களாகச் செய்யுட்களில் ஈடுபட்டு மனப்பாடம் செய்யும்படியும் நீங்கள் பாடஞ் சொல்லுவீர்களா?" என்று கேட்டார். "நான் என்ன சொல்வேன்! உங்களைப் போலச் சொல்வதற்கு யாரால் முடியும்? நீங்களெங்கே! நானெங்கே! ஏதோ ஒருவாறு உங்களை நினைத்துக் கொண்டு சொல்லுவேன். உங்களைப்போல் பிள்ளைகள் பாடம் பண்ணிக்கொள்ளும்படி சொல்ல இயலாது" என்று பணிவாகச் சொன்னேன். செட்டியாருக்கு இந்த வார்த்தைகளைக் கேட்டதில் உள்ளத்துள் சிறிது திருப்தி யுண்டாயிற்றென்பதை அவர் முகம் புலப்படுத்தியது.
அப்பொழுது என்னுடன் வந்தவருள் ஒருவரும், முற்கூறிய கோபாலையருடைய வீட்டிற்கு அடுத்தவீட்டில் வசிப்பவரும், எப்.ஏ. வகுப்பில் படித்துக்கொண்டிருந்தவரும், தைரியசாலியுமாகிய எம். ராமசந்திரையரென்பவர் கனைத்துக்கொண்டு செட்டியாருடைய முகத்தைப் பார்த்தார்; "என்ன ஐயா சொன்னீர்கள்! என் கண்ணுக்குமுன் எங்கள் ஐயாவை இப்படிக் கேட்கிறீர்களே. இந்தத் தர்மசங்கடமான கேள்வியை நீங்கள் இவர்களைக் கேட்கலாமா? இவர்களும் என்னால் முடியாதென்று சொல்லிவிட்டார்கள். எனக்கு மிக்க வருத்தமாயிருக்கிறது. நீங்களே இவர்களை வேலையிற் சேர்க்கும்போது நல்ல படிப்பாளியென்றும் நன்றாகப் பாடஞ் சொல்லுவார்களென்றும் சொல்லியிருககிறீர்களே; அப்படிச் சொல்லிவிட்டு இப்பொழுது எங்களுக்கு முன்னே இப்படிச் சொல்வது நன்றாக இல்லையே! இவர்கள் நன்றாகத்தான் பாடஞ்சொல்லுகிறார்கள்; மனத்திற்படும்படியே கற்பிக்கிறார்கள்" என்றார்.
செட்டியார் : அதெல்லாம் சரி; பாடமாகும்படி சொல்வாரா என்று தான் கேட்டேன்.
ராமசந்திரையர்: ஏன் சொல்லமாட்டார்கள்? இவர்கள் சொல்லும்போதே செய்யுட்கள் தாமாக எங்களுக்குப் பாட மாகிவிடுகின்றன.
செட்டியார் : அப்படியானாற் சில செய்யுட்களைப் பாராமற் சொல்லுவாயா?
ராம் : அதில் என்ன தடை? இதோ, ஒப்பிக்கிறேன்; கேளுங்கள்.
இவ்வாரு சொல்லிவிட்டு அந்த மாணாக்கர் தம்முடைய பாடமாகிய நைடதம், பிரிவுறு படலத்திலிருந்து சில பாடல்களைச் சொன்னார்; அப்பால், "போதுமா? இன்னும் சொல்ல வேண்டுமா?" என்றார்.
செட்டியாரோ அதோடு விடாமல், "நீ என் மாணாக்கன் தானே ?" என்றார். அவர் செட்டியாரிடம் சிலகாலம் பாடங்கேட்டவர்.
ராம் : ஆமாம்; ஆனாலும், இந்தப் பாடல்களெல்லாம் இவர்கள் சொல்லிக்கொடுத்தவை. நீங்கள் சொன்ன பாடத்திற் சில மறந்தாலும் மறந்திருக்கும்; இவர்கள் பாடத்தில் சிறிதளவும் மறதியில்லை. உங்கள் பிரிவினால் எங்களுக்கு வருத்தமில்லாதபடி பாடஞ் சொல்லி உங்கள் ஸ்தானத்தின் கௌரவத்தை இவர்கள் பாதுகாத்து வருகிறார்கள். அத்தகைய எங்கள் ஐயாவைப் பார்த்து நீங்கள் இப்படிக் கேட்கலாமா?
செட்டியார் : உன்னுடைய பழைய உபாத்தியாயரைப் பார்த்து இவ்வளவு தைரியமாகப் பேசலாமா ?
ராம் : எங்கள் புதிய உபாத்தியாயரைப் பார்த்து நீங்கள் மட்டும் இப்படிச் சொல்லலாமா? உங்களிடம் படித்த நான் இந்தத் தைரியத்தை உங்களிடமே கற்றுக்கொண்டேன்.
செட்டியார் சிரித்தார்; "நீ சொல்லியது சரி தான். நான் கொண்டுவந்து வைத்தவரைப்பற்றி நீ இவ்வளவு புகழ்ந்து பேசுவது எனக்குத்தான் முதலில் சந்தோஷத்தை அளிக்கிறது" என்று சாதுரியமாகக் கூறி முடித்தார்.
'செட்டியார் பாடஞ் சொன்ன இடத்திலிருந்து கற்பிக்க வந்திருக்கிறோமே; நாம் பாடஞ் சொல்வதில் பிள்ளைகளுக்கு எத்தகைய அபிப்பிராயம் இருக்குமோ!' என்று எண்ணியிருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி ஆறுதலையும் ஊக்கத்தையும் அளித்தது.