மரபும் - மரபுடைத்த மரபும் - 4

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

மரபும் - மரபுடைத்த மரபும் - 4


ஏதோ ஒரு குழும இழையில் மரபுக் கவிதையை ஆதரிப்பவரும், நவீனத்துவக் கவிதையை விரும்புபவரும் பதித்த எண்ணங்கள்:


2011/4/26 மரபு <marabuannaachi@dbkr.com>

மரபு என்ற பெயரைச் சொன்னாலே, பெருசுன்னு முடிவுக் கட்டி விடுகிற நிலைமை! இப்போ வருவதெல்லாம் கவிதையா? படிக்கறவனுக்கு எது சாதாரண மெயில், எது கவிதைன்னே தெரிவதில்லை.

நேற்று நான் மழையி்ல்
நின்றேன்!
நனைந்ததே தெரியவில்லை! அந்த
அளவு
மன வருத்தம்!


என்று ஒரு மடல் வந்தது.

இந்த கவிதையைப் பாராட்டி ஐந்து பேர் பின்னூட்டம் இட்டிருந்தார்கள். கடைசியில் அது கவிதையே இல்லை! ஏதோ தனிப்பட்ட மடலை மறந்துப் போய் குழுவுக்கு அனுப்பி விட்டிருக்கிறார். இந்த நேரம் பார்த்து கூகுளில் ஏதோ பிரச்சனை ஆகி வரிகள் உடைந்து உடைந்து வந்திருக்கின்றன. கவிதை என்று முடிவுக் கட்டி விட்டிருக்கின்றனர்.

இதற்குத்தான் அப்போதே கவிதை என்பதற்கு ஒரு இலக்கணத்தை வைத்திருந்தனர்.




2011/4/26 நவீனத்துவம்<modernist@dbkr.com>

கவிதைக்கு கவிதையே இலக்கணம் படைத்துக் கொள்ளும். கல் இயற்கையிலேயே அழகான சிற்பமாகத் தான் இருக்கிறது, அதை உடைத்து அதில் சிற்பத்தை பார்ப்பது மட்டுமா கலை?

ஆற்றில் புரண்டோடும் கூழாங்கல்லில் தெரியாத கலை வடிவமா? நின்றிருக்கும் மலையின் ஒவ்வொரு பாறையிலும் தெரியாத கலை வடிவமா?

இருக்கும் மலையை எல்லாம் சிற்பம் செதுக்க உடைத்துக் கொண்டே போய் விடுகிறோம். செதுக்கும்போது ஒருவராவது ஏற்கனவே இயற்கை செதுக்கி இருக்கும் சிற்பத்தை உடைக்கிறோம் என்று உணர்கிறார்களா?

இதுதான் கவிதை என்று நீங்கள் தீர்மானம் செய்கிறீர்! தீர்மானம் செய்வது உங்கள் மனம்! அப்படி தீர்மானம் செய்ய இலக்கணத்தை ஒரு சாக்காக மனம் வைத்துக் கொள்கிறது.


மேலே நீங்கள் கிண்டலடிக்கப் போட்டிருக்கும் மெயில் வரிகளில் கவிதை இல்லை என்கிறீர்களா?

சிறுதுளிப் பட்டாலே ஓடி போய் மறைவிடம் தேடும் ஒருவர், மழையில் தெப்பமாக நனைந்தும் அறியாது இருக்கிறார். மன வருத்தம் அந்த அளவு அவரை காய்கிறது!

இலக்கணத்தை வைத்துக் கொண்டாலும் ஒன்றைக் கவிதை என்று மனமே தீர்மானிக்கிறது. உண்மையில் மனதின் தீர்மானத்திற்கு இலக்கணம் என்ற துணை தேவையில்லை.

அதே மனம் இலக்கண உதவி இல்லாமல் ஒன்றை கவிதை என்று தீர்மானிப்பது எப்படி தவறாகும்?

மேலே கூகுள் உடைத்துப் போட்டிருப்பதில் நிச்சயம் கவிதை இருக்கிறது. எப்படி இயற்கையானது மலை, கூழாங்கல் என அனைத்திலும் சிற்பத்தை செதுக்கி இருக்கிறதோ அப்படி!

ஏற்கனவே இருக்கும் சிற்பங்களை இலக்கண உளி வைத்து நாசமாக்காதீர்!

Disclaimer: இதில் வரும் குழும உரையாடல்களும், நபர்களும் கற்பனையில் உருவானவர்கள்! ஆனால் அதே போன்றவர்களை பல இடங்களில், குழுமங்களில் சந்திக்க நேருவது தற்செயலான ஒற்றுமையே! :)


தொடரும்)

*****


செல்வ குமரன்
தேதி - 04/05/2011

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 5 மே 2011, 13:19 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,748 முறைகள் அணுகப்பட்டது.