மரபும் - மரபுடைத்த மரபும் - 3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

மரபும் - மரபுடைத்த மரபும் - 3


முதல் இரண்டு பாகத்தையும் படித்து முடித்தப் பிறகோ, படிக்கவே முடியாமல் கண்கள் பிதுங்கிப் போய் திணறியோ,

"இப்போ என்னதான்ப்பா சொல்ல வர்றே?", என்று கேள்வி எழுந்தாகி விட்டதா?


இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.

மரபுக் கவிதை பக்தரையும், நவீனத்துவக் காதலரையும் ஒருவருக்கொருவர் பேச விட்டோம் என்றால் போதும். அந்த அடிதடியில் தானே நமக்கு ஓரளவு விஷயம் புரிந்து விடும்.

எதையுமே கட்டுரையாக மட்டும் படித்துக் கொண்டே போக யாருக்குப் பிடிக்கும்? அந்த இம்சை வேண்டாம் என்றுதானே எவ்வளவு வேகமாக பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு வெளியே வர முடியுமோ அவ்வளவு விரைவாக ஓடி வந்திருக்கிறோம்.

அதே ஒரு குழுமத்திலோ, மேடையிலோ, பத்திரிகையிலோ இரண்டு பேர் கோமணம் கிழியும் அளவிற்கு வாய் சண்டைப் போட்டால், நேரம் போவதே தெரியாமல் படிக்கத் தோன்றுகிறது.

அந்த சண்டை முடிந்து விட்டால், என்னடா இப்படி சுருக்கமாக முடித்து விட்டார்களே என்ற ஏக்கம் பொங்குகிறது. இந்த மாதிரி நேரத்தில் மகாமாயை இருப்பது உண்மைதான் என்பது போல் தோன்றுகிறது.

மேதாவி எனும் ஆசனத்தின் நான்கு கால்களாய் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்பவைகளே எப்போதும் இருக்கின்றன. அவையோ மறைந்திருக்கும் யாரோ ஒருவரது புருவ அசைவில் நடமிடுபவை.

எந்த நொடியிலும் அந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பவரை ஆட்டி விட முடியும்.


எங்காவது இரண்டு அறிஞர்கள் இருக்கிறார்கள் என்றால் ஏன் ஓடிப் போய் பார்க்கிறோம்? அதுவும் ஒரு அறிஞரை விட இரண்டு அறிஞர்கள் இருக்கும்போது என்ன விசேஷம்?

கண்டிப்பாக அங்கே அருமையான சண்டை நிகழக் கூடிய வாய்ப்பு உண்டு.

யார் அழகி என்று நீருபிக்க இரண்டு பேர் சண்டைப் போட்டு, தெருவெல்லாம் புரண்டு, துணி கிழிந்து, சாக்கடையில் குளித்து கோரமாக நிற்பர். அவர்களைப் பார்த்து அந்த தெருவில் திரியும் பைத்தியமே மிரண்டுப் போய் ஊரை விட்டே ஓடி விடும். ஊருக்கோ அருமையாக "Mud Fight" காட்சி கிடைக்கும். வாசலில் அமர்ந்துக் கொண்டு காபி சாப்பிட்டவாறே நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.

இணையத்திலும் இதே நிலைதான். ஏதாவது நல்ல விஷயத்தை எழுதினால் அந்த இடத்தில் இருக்கும் ஈ கூட முகத்தை இரண்டு முறை தடவி விட்டுக் கொண்டு பறந்துப் போய் விடும்.

விதண்டாவாதமாக எழுதும் இழைகளுக்கும் யாரும் வரமாட்டார்கள்.

ஆனால் ஓரளவு நாமறிந்த பெரியவர்கள் ஏதாவது இழையில் எழுதும்போது கவனம் அதில் போகிறது. அப்போதும் அதை முழுக்கக் கவனிக்க முடியாது. அதே இழையில் இன்னொரு மஹானுபாவரும் வர வேண்டும். அவரும் நாம் ஓரளவு மதிக்கும் அறிஞராய் இருக்க வேண்டும். அதன் பிறகு ........The Show Begins!

நான் பெரியவனா, நீ பெரியவனா என்பது போல் நகைச்சுவைத் ததும்பும் சண்டை லோகத்திலேயே ஏதும் கிடையாது.

அதே போல் இரண்டு மேதைகள் கோரமாக சண்டையிட்டு முடிவில் எந்தக் கொள்கையையும் நிலை நாட்ட முடியாமல் கருவிக் கொண்டே விலகுவதும்தான் ஆதி காலந் தொட்டு நிகழ்ந்திருக்கிறது.


ஆனால் அப்படி அவர்கள் சண்டையிடும்போது உதிர்க்கும் சொற்களை, ஆர்வத்தோடு கவனிக்கும் மஹா ஜனங்கள், வரிக்கு வரி மனதில் பதியும் வண்ணம் ஆர்வத்தோடு கவனிக்கின்றனர்.

ஒரு விஷயத்தை மற்றவர் அறிவதற்கு எது குறுக்கு வழி என்றால் அதை ஒரு சண்டையில் வெளியிடுவதுதான் என்று அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.


எனவே அதே முறையில், மரபுக்கவிதை பக்தரையும், நவீனத்துவக் காதலரையும் முட்ட விட்டு, அவர்கள் பேசுவதை கேட்கும் வாய்ப்புக் கிடைத்தால் ஓரளவு விளக்கம் பெறலாம்.


அடுத்தப் பகுதியில் அப்படி இருவர் நம் குழுமத்தில் இருந்தால், அவர்கள் ஒரு இழையில் அடித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள் என்பதை அப்படியே இடுகிறேன். அவர்கள் அப்படி பேசுவதில் கூடுமானவரை உண்மை இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். நேரடியாக அப்படி அடித்துக் கொள்வதை பல இடங்களில் பார்த்து, அவர்கள் பேசியதும் மனதில் பதிந்திருப்பதால் என்னால் அதை அப்படியே சொல்ல முடியும்.

மேலும் அவர்கள் பேச்சின் நடுவே 'இவர்களா இப்படி பேசுகிறார்கள்' என்று நம்பவே முடியாத அளவிற்கு சொற்கள் வரும். அதுதான் இயல்பாக இருக்கும் என்பதால் எடிட் செய்யாமல் இடுகிறேன்.

கண்டிப்பாகத் தொடரும்)





செல்வ குமரன்
தேதி - 04/05/2011

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 5 மே 2011, 13:15 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,738 முறைகள் அணுகப்பட்டது.