கவிஞர் மா. உலகநாதன்
தமிழில் தோன்றிய நாடக இலக்கியங்களில் முதன்மையாகப் போற்றப்படுவது பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை இயற்றிய "மனோன்மணீயம்" தான்.
முழுவதும் செய்யுள் நடையிலேயே அமைந்து, இலக்கிய வளம் அமையப் பாடப்பெற்ற இந்நூலைக் கற்றோரும், மற்றோரும் புகழ்ந்து போற்றி வருகின்றனர்.
வரலாற்றுத் தொடர்புடையது போன்றும் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது போன்றும் காணப்படுகின்ற இந்த நாடகக் கதை, உண்மையில் கற்பனைக் கதையே. இலிட்டன் பிரபு என்னும் ஆங்கிலேயர் எழுதிய இரகசிய வழி (The Secret Way) எனும் நூலைத் தழுவி மனோன்மணீயத்தை ஓர் இன்பியல் (comedy) நாடகமாக்கியுள்ளார் சுந்தரம் பிள்ளை.
இயற்கை வர்ணனையையும், இலக்கிய நயத்தையும், கருத்துச் செறிவையும், கற்பனையையும், தத்துவப் பொருளையும், உலகியல் உண்மைகளையும், பிற அரிய கருத்துகளையும் ஆசிரியர் செந்தமிழ்ச் சுவையோடு செழிப்புற அமைத்துள்ளார்.
அமைப்பால் நாடகமாகவும், கருத்தால் காப்பியமாகவும், அழகுற அமைந்திருப்பது பெ.சுந்தரம் பிள்ளையின் தமிழ்ப் பற்றுக்கும், இலக்கியப் புலமைக்கும் எடுத்துக்காட்டாகும்.
இது தமிழ் மொழியின் சிறந்த கலைச்செல்வங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
பிள்ளையவர்கள், தமிழ்த்தாய்க்குப் புதிய தொண்டு செய்ய எண்ணியே இந்த நாடகக் காப்பியத்தை இயற்றியதாகச் சொல்கிறார். இதில் உவமைச் சிறப்புகள் மிகுந்து காணப்படுகின்றன. அழகிற்கும், உறுதிக்கும் உவமை கையாளப்படுகிறது.
"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையரு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன்னுதிரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்
ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.
- தமிழ் தெய்வ வணக்கம்.2
ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற முத்தொழிலைச் செய்கின்ற ஆதியந்தமில்லா ஆண்டவன் ஒரு நாளும் முதுமையடைவதே இல்லை. மாறாக, எப்பொழுதும் ஒரே தன்மைத்தாய் இருக்கிறான். இளமையும், மூப்பும் நீங்கிய நிலை அவன் நிலை.
அதுபோலவே, திராவிட மொழிகளான கன்னடமும், களிதெலுங்கும், மலையாளமும் தமிழ் மொழியின் வழி வந்தவை. ஏனைய திராவிட மொழிகளுக்கெல்லாம் தமிழ் தாய்மொழி போன்றது. மொழிகள் பலவற்றை ஈன்றாலும், தமிழின் இளமை குன்றவில்லை. இளமையைக் காப்பதில் இறைவனும், தமிழும் ஒன்றே என்கிறார்.
பெண்கள், குழந்தைகளாக இருக்கும்போது உள்ளம் வேறு, செயல் வேறாக இருப்பதில்லை. ஆனால், குழவிப்பருவம் மறைந்து மங்கைப் பருவம் அடையும் போது கன்னியர் நிலையே வேறு; அவர்கள் உள்ளொன்று எண்ணி, புறமொன்று பேசுவர்.
உள்ளம் வேறு; மொழி வேறு; அவர்களின் பேச்சு அவர்தம் உள்ளத்தின் உண்மை நிலையைக் காட்டாது. அவர்களின் உள்ளமும், வாக்கும், போக்கும், புளியம் பழமும் அதன் தோடும் (ஓடும்) போல ஒட்டியும் ஒட்டாமலும் அமைந்திருக்கும் என்றார்.
"குழவிப் பருவம் நழுவுங் காலை
களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
புளியம் பழமுந் தோடும் போலாம். (அங்கம் - 1,களம் - 4,வரி:-167 - 169)
"சித்திரமும் கைப்பழக்கம்", என்பார்கள்.
அத்தகைய சித்திரக் கைப்பழக்கம் வல்ல ஒருவன், திரைச் சீலையில் வண்ணமுறத் தீட்ட வேண்டும் என்று தொடங்கப்பட்ட ஓவியம், அவன் தூரிகைக்கோல் தொடத் தொட, உருவம் இன்னதென்று தோன்றா நிலை மாறி இன்ன உருவம் என்று அறியுமாறு புலப்படும். அதுபோன்றே, கதிரவன் பன்னிறக் கதிர்கள் உலகில் படப்பட கண்ணெதிரில் உள்ள உருவம் தோன்றாத நிலையில் மண்டியிருந்த இருள், உலகில் உள்ள பொருள்கள் நன்கு புலப்படுமாறு, சிறிது சிறிதாக மறைய காலையில் தோன்றுகிற காட்சி மனதுக்கும் கண்ணுக்கும் இனிமையான ஒன்று. அது நன்று என்கிறார்.
"ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில்
தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுத்
தூரியந் தொடத் தொடத் துலங்குதல் போல,
சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத் தொட
உருவு தோன்றா வணம் ஒன்றாய்ச் செறிந்து
கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து
சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத்
தோன்றுமித் தோற்றம் நன்றே. (அங்கம் 2, களம் 2, வரி:- 4 - 11)
இவ்வாறெல்லாம் காரணம் கண்டு புகழ்ந்தும், போற்றியும், மருண்டும், மயங்கியும், வியந்தும், விடையிறுத்தும், சீர்தூக்கியும் அத்தனை இலக்கியங்களையும் ஆய்ந்த சுந்தரம்பிள்ளைக்கு தான் ஒரு நாடகக் காப்பியம் செய்த பணியில் ஒரு நிறைவு, அடக்கம் பிறக்கிறது. அதை அப்படியே பதிவும் செய்துள்ளார்.
"வெள்ளியது எனினும் விளங்குநின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிரலணியாக்
கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே. - (சுரிதகம்)
என்று தமிழ்த்தாயை நினைந்தேத்தி தம் தமிழ்ப்பற்றைப் புலப்படுத்துகிறார்.
நன்றி:- தினமணி
--Ksubashini 18:56, 17 மே 2010 (UTC)