மணி ஐயர் 2 - தொடர்ச்சிமரபு விக்கி இருந்துஉ.வே.சா. நினைவு மஞ்சரி முதல் பாகம் 9. மணி ஐயர் தொடர்ச்சி சகோதரர்கள் மணி ஐயருடைய தந்தையாராகிய சுப்பையரென்பவர் இராமநாதபுரம் ஸமஸ்தானத்தில் 'மானேஜரா'க இருந்த பொன்னுசாமித்தேவரிடம் உத்தியோகம் பார்த்து வந்தார். தேவருக்கு அவரிடம் மிக்க அன்பும் நம்பிக்கையும் உண்டு. அவருடைய பெருந்திறமையைக் கண்டு அவருக்குப் பொன்னுசாமித்தேவர் ஒரு பெருந்தொகையை ஒரு சமயத்தில் நன்கொடையாக அளித்தார். அதனைச் சுப்பையர் தம் குடும்பத்திற்கு உபயோகப்படுத்திக்கொள்ளாமல் அதைக் கொண்டு மதுரை ஶ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஒரு வேத பாடசாலையை ஏற்படுத்தினார். இன்னும் அது நடைபெற்று வருகின்றது. சுப்பையருக்குக் குமாரர்கள் மூவர். முதல் இராமசாமி ஐயரென்பவர். இரண்டாவர் சங்கரையரென்பவர். மூன்றாவரே சுப்பிரமணிய ஐயர்.
இவர்களுள் இராமசாமி ஐயர் சிலகாலம் தாசில்தாராக இருந்தார். பிறகு ஹூஸூர் சிரஸ்தேதாரானார்.
சங்கரையரென்பவர் மிக்க தைரியமும் திறமையும் உடையவர். அவர் சிவகங்கை ஸமஸ்தானத்திலும் இராமநாதபுரம் ஸமஸ்தானத்திலும் சிறந்த உத்தியோகங்களை வகித்து விளங்கியவர்; ஏழை ஜனங்கள் பால் இரக்கமுடையவர்; பெருங்கொடையாளி. தம்முடைய தமையனாரும் தம்பியும் சம்பாதிக்கும் பொருள்களை உசிதமாகவும் தாராளமாகவும் செலவிட்டு வந்தவர்; அவ்விருவருக்கும் குடும்பக் கவலையே உண்டாகாதபடி பார்த்து வந்தார்; அவருக்கு இராமநாதபுரம்,மதுரை முதலிய இடங்களில் மிக்க செல்வாக்கு இருந்துவந்தது.
மணி ஐயர் மதுரையிலே பிரபலமாக இருந்த காலத்தில் அவர் வைத்திருந்த பெட்டியொன்று காணாமல் போயிற்று. அதில் ஒரு முக்கியமான வழக்கின் சம்பந்தமான பத்திரங்கள் இருந்தன. அதனால் மணி ஐயர் சிறிது கலக்கமுற்றார்; சங்கரையரிடம், "அண்ணா, நான் என்ன செய்வேன்!" என்று விஷயத்தைத் தெரிவித்தார். அவர் மணி ஐயரைத் தேற்றி, "நீ கவலைப்படவேண்டாம். அப்பெட்டி எங்கே போயிருந்தாலும் வருவித்துத் தருகிறேன்." என்று தைரியம் கூறினார்.
"யாரோ திருடிக் கொண்டு சென்றுவிட்டதை இவர் எப்படி வருவிப்பார்?" என்று மணி ஐயர் எண்ணினார்.
சங்கரையருக்கு அப்பக்கங்களிலுள்ள மறவர்களும் கள்ளர்களும் பழக்கமானவர்கள். அவர்கள் அவரிடத்தில் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். தம்முடைய தம்பியின் பெட்டி களவு போய்விட்டதை அவ்விரு வகுப்பாரிலுமுள்ள தலைவர் சிலரிடம் அவர் சொன்னார். அடுத்த நாளே பெட்டி சங்கரையரிடம் வந்துவிட்டது. "எங்கேயிருந்து எப்படி வந்தது?" என்று யாருக்கும் தெரியவில்லை. அந்தப் பெட்டியை அவர் தம்பியிடம் கொடுத்து, "ஏதாவது பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறதா? பார்!" என்றார். மணி ஐயர் பார்த்தார். எல்லாப் பொருள்களும் முன் இருந்தபடியே இருந்ததைக் கண்டு அவர் அளவற்ற ஆச்சரியங்கொண்டார்.
மணி ஐயருக்குத் தம் தமையன்மார்களிடமும் அவர்களைச் சார்ந்தவர்களிடமும் என்றும் குறையாத அன்பு இருந்து வந்தது. சங்கரையர் காலமானபோது மணி ஐயர் மிக வருந்தினார்; "நான் இதுவரையிலே குடும்பபாரம் இன்னதென்று தெரியாமல் வாழ்ந்து வந்தேன். எல்லாவற்றையும் அண்ணாவே கவனித்து வந்தார். இனிமேல் குடும்பக்கவலை என்னைச் சார்ந்துவிட்டது." என்று கூறிக் கலங்கினார்.
தம்முடைய பந்துக்களைப் பாதுகாப்பதில் மணி ஐயர் மிகச் சிறந்தவர். அவர் பொருளைத் தமக்காகச் சம்பாதிக்கவில்லை. யாவருக்கும் பகிர்ந்து கொடுத்து அவர்கள் இன்புறுவதைப் பார்த்து மகிழ்வதே தம் கடமையாகக் கொண்டிருந்தார். தாம் செய்யும் உதவிகளைப் பிறர் அறியாதபடி செய்வார்.
அவர் சில பாடசாலைகளிலே கல்வி பயின்றார். வருஷந்தோறும் அவர் தம்முடைய கல்வித்திறமையினால் பரிசுகள் பெற்று வந்தார். மதுரையில் இருந்த பள்ளிக்கூடத்திலே படித்த பிறகு, மேற்படிப்புக்காக அவரைச் சென்னைக்கு அனுப்ப அவருடைய பெரியோர்கள் விரும்பவில்லை. அக்காலத்தில் அங்கே கலெக்டர் ஆபீஸில் இருந்த அவர் தமையனாராகிய இராமசாமி ஐயர் அவருக்கு இருபது ரூபாய் சமபளத்தில் ஒரு வேலை வாங்கி வைத்தார். கலெக்டராபீஸில் இருந்து கொண்டே வக்கீல் பரீக்ஷைக்குப் படித்து அதில் முதல்வராகத் தேர்ச்சி பெற்றார். பிறகு எப்.ஏ. பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தார். அப்பால் பி.எல். பரீக்ஷைக்கும் போய்ப் பட்டம் வாங்கி வக்கீல் ஸன்னது பெற்று மதுரையில் இருந்துவரலானார். இடையே சிலகாலம் தாசில்தாராக இருந்தார்.
மதுரையில் அவர் வக்கீலாக இருந்தபோது அவருக்கு வரவர மதிப்பு உயர்ந்து வந்தது. பெரிய வழக்குகளை அவர் ஏற்று வாதம் புரிந்தார்.
1870-ஆம் வருஷத்தில் அவர் மதுரை நகர பரிபாலன சபையில் கமிஷனராக நியமிக்கப் பெற்றார். 1880-ஆம் வருஷம்வரையில் அதன் தொடர்பு அவருக்கு இருந்து வந்தது. அக்காலத்தில் அவர் நகர்வாசிகளுடைய நன்மையைக்கருதிப் பல அனுகூலங்களைச் செய்தார். 1882- முதல் மூன்று வருஷங்கள் நகர பரிபாலன சபையில் தலைவராக இருந்தார். அக்காலத்தில் ஒரு சிங்காரச் சோலையை உண்டாக்கினார். நகரத்தைச் சார்ந்த சாலைகளில் மரங்களை வைத்து வளர்க்கச் செய்தார். அவற்றில் சில மரங்கள் பட்டுப் போயின.
அவர் தமிழ் நூல்களைப் படித்தும் படிப்பித்துக் கேட்டும் வரும் வழக்கமுடையவர். தமிழ் படித்தவர்களிடமிருந்து பல அரிய விஷயங்களைக் கேட்டுணர்ந்து பாராட்டுவார். அதனால் தமிழ் அகத்திணை நூல்களில் இன்ன இன்ன நிலத்திற்கு இன்ன இன்ன மரங்கள் உரியனவென்று கூறியிருப்பதை உணர்ந்து அவற்றை ஆராய்ந்து சாலைகளில் அவ்வந் நிலங்களுக்கு ஏற்ற மரங்களை வைத்து வளர்க்கச் செய்தார்.
அக்காலத்தில் மதுரையில் கலெக்டராக இருந்த க்ரோல் துரையென்பவர் மணி ஐயருடைய பெருமையை நன்கு அறிந்து அவரிடம் மிக்க அன்பு பாராட்டி வந்தார். மதுரைத் திருக்கோயிலைச் சுற்றியுள்ள மதிலுக்கு வெளியில் பல ஜனங்கள் குடிசைகள் கட்டிக் கொண்டிருந்தனர்; சிலருடைய வீடுகளும் இருந்தன; அவர்களால் பலவகை அசுத்தங்கள் உண்டாயின. அக்கோயிற் கும்பாபிஷேஹம் செய்வித்த அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தைச் சேர்ந்த நால்வருள் ஒருவராகிய வேங்கடாசலஞ் செட்டியார் அதுகண்டு மனம் வருந்தினார். நிவர்த்தி பண்ணுவதற்கு முயன்று பார்த்தார். அவரால் இயலவில்லை. மணி ஐயர் மிக்க இரக்கமும் அன்பும் உடையவரென்பதை அறிந்து அவரிடம் சென்று, "திருமதில் சிவபெருமான் வடிவமாயிற்றே! அதைச் சுற்றி ஜனங்கள் அசுத்தம் செய்கிறார்களே! இதைக் காண எனக்கு மனம் பொறுக்கவில்லை. நீங்கள் இதற்கு ஏதாவது வழி செய்யவேண்டும்." என்று முறையிட்டு வந்தார்.
மணி ஐயர் அவர் கூறுவதன் உண்மையையும் அவருடைய சிவபக்தியையும் உணர்ந்தார். உடனே க்ரோல் துரையினுடைய உதவியைப் பெற்று மதிற்புறத்தே இருந்தவர்களுக்கு வேறிடங்கள் வாங்கித் தந்தும் வீடுகட்டப் பணம் உதவியும் நிலத்துக்கு விலை தந்தும் அவர்களைத் திருப்தி செய்வித்தார். பின்னும் வசதியான இடங்களிலே அவர்களைக் குடியேற்றிப் பாதுகாத்தார். அப்பால் திருமதிலைச் சுற்றி நந்தவனம் அமைக்கச் செய்தார். அதைப் பாதுகாக்க அதைச் சுற்றி இரும்புகிராதியால் ஒரு வேலி போடச் செய்தார். அன்றியும் உள்ளே கிணறுகளை வெட்டுவித்துப் பூஞ்செடிகளுக்கு நீர் பாய்ச்சுதற்குரிய ஏற்பாடுகளும் செய்வித்தார். அந்த நந்தவனம் இன்றும் சிறப்பாக விளங்குகின்றது. கோயிலும் நந்தவனமும் சேர்ந்துள்ள அமைப்பு ஒரு பெரிய புஷ்பத்தோட்டத்தின் மத்தியில் அவ்வாலயம் இருப்பது போலத் தோற்றும். மணி ஐயர் அமைத்த நந்தவனத்தைக் கண்டு சிவநேசச் செல்வர்கள் யாவரும் மனம் குளிர்ந்தார்கள். வேங்கடாசலம் செட்டியார் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டு அவரை வாயார வாழ்த்தினார்.
ஆலய சம்பந்தமாக மணி ஐயர் செய்துவந்த நன்மைகள் பல. அவற்றை அறிந்த மதுரை நகரவாசிகள், 'இத்தகைய உபகாரியே ஆலயத்தை நிர்வாகம் செய்யவேன்டும்.' என்று எண்ணி அவரைத் தேவஸ்தான சபையின் அங்கத்தினராகத் தேர்ந்தெடுத்தார்கள். கோயிற்பணம் வீணாகாமல் ஆலய சம்பந்தமான காரியங்களுக்கே உபயோகப்படவேண்டுமென்ற கொள்கையையுடையவர் மணி ஐயர். ஆலயத்துக்குரிய பொருளை வீணாகச் செலவு செப்யவர்களிடத்தில் அவருக்கு உண்டான கோபம் மிக அதிகம். சில சமயங்களில் அத்தகையவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்படியும் செய்திருக்கிறார்.
கும்பகோணம் காலேஜில் நான் இருந்த காலத்தில் சில வழக்குகள் சம்பந்தமாக மணி ஐயர் கும்பகோணம் வருவதுண்டு. அக்காலங்களில் அவரைக் கண்டு பேசி இன்பமடைவேன். தாம் வாதிக்க வேண்டிய வழக்கின் சம்பந்தமாகச் சைவ சம்பிரதாயங்கள் சில தெரிய வேண்டியிருந்தன. சைவசமய நெறியென்னும் தமிழ் நூலினால் பல விஷயங்கள் புலப்படுமென்று அறிந்து அந்நூல் முழுவதையும் ஒரே இரவில் படித்து மொழி பெயர்த்து வைத்துக் கொண்டார்.
அவர் கோர்ட்டில் வாதம் புரியும்போது அவர் பேச்சைக் கேட்பதற்காகவே பலர் வருவார்கள். காலேஜானது கோர்ட்டுக்கு அருகே இருத்தலால் அங்குள்ள உபாத்தியாயர்களிற் பெரும்பாலோரும் மாணாக்கர்கள் பலரும் ஒழிவு நேரங்களிற் போய் அவர் பேச்சைக் கேட்டு மகிழ்வார்கள். அதன்பிறகு ஒருவாரம் வரையில் அவர் பேச்சைப் பற்றியே பேசிப் பாராட்டி வியப்பார்கள்.
--Geetha Sambasivam 22:30, 2 நவம்பர் 2011 (UTC) |