மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள் - கோதமை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

rajam rajam@earthlink.net
to மின்தமிழ் mintamil@googlegroups.com




கோதமை

மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெறும் ஒரு பெண் கோதமை.

கோதமை என்பவள் யார்? இவளுக்கும் மணிமேகலைக்கும் என்ன தொடர்பு?


சாரங்கலன் என்ற ஒருவன் ஓர் இடத்தைப் பார்க்கிறான்; அது ஏதோ கட்டுக் காவல் உடைய ஒரு நகரம் என்று நினைத்து அங்கே போய்விடுகிறான். ஆனால், பாவம் அவனுக்குத் தெரியாது அது என்ன இடம் என்று.

(சார்ங்கலன் போன இடத்தின் காட்சியை இங்கே விவரித்தால் சிலருக்கு அருவருப்பு உண்டாகலாம். அதனால் விட்டுவிடுகிறேன்.)

சுருக்கமாகச் சொல்லப்போனால் ... ஒரு நல்ல காவல் உடைய நகரம் என்று நினைத்துச் சார்ங்கலன் போன இடம் ஒரு சுடுகாடு.

அங்கே பார்த்ததும் கேட்டதும் சார்ங்கலனுக்குப் பீதியை உண்டாக்கிவிட்டன.

மிகவும் கடுமையான துயரம் அடைந்து, அந்த இடத்தை விட்டு நீங்கி, எல்லாத் திசையிலும் கேட்கும் வகையில் அலறிக்கொண்டே போகிறான். போனவன், "கொடிய முதுமையான பேய்க்கு என் உயிரைக் கொடுத்தேன்" என்று சொல்லிக்கொண்டே தன் அன்னையின் முன்னால் விழுந்து உயிர் நீங்குகிறான்.

"வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என-த்
தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும்"

(இதில் "மெய்" என்ற சொல்லாட்சி கவனிக்கத்தக்கது. உடல் என்பது உயிருக்கு ஒரு கொள்கலம்தான் என்ற கருத்தை அது வலியுறுத்துவதாகக் கொள்கிறேன். இலக்கணத்திலும் உயிர், மெய் என்ற சொல்லாட்சி நினைக்கத்தக்கது.)

சார்ங்கலனின் அன்னையின் பெயர் கோதமை. அவள் ஒரு பார்ப்பனனின் மனைவி. அவளும் அவள் கணவனும் கண் பார்வை இழந்தவர்கள்.

அலறியபடியே தன் மகன் தன் முன் விழுந்தது தெரிந்து கோதமை அலறுகிறாள்.

"மகன் மெய் யாக்கையை மார்புறத் தழீஇ
ஈமப் புறங்காட்டு எயிற்புற வாயிலில் ..."

[சுருக்கமான பொருள்: தன் மகனுடைய உடலை மார்போடு தழுவி எடுத்துக்கொண்டு அந்த ஊர்ச் சுடுகாட்டின் எல்லைக்குப்போய் ...]

அப்படிப் போனவள் ... காவிரிப்பூம்பட்டினத்துக் காவல் தெய்வம் ஆகிய சம்பாபதியிடம் முறையிடுகிறாள்.

"பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இ-த்
தீத்தொழிலாட்டி என் சிறுவன் தன்னை
யாரும்-இல் தமியேன் என்பது நோக்காய்;
ஆருயிர் உண்டது அணங்கோ? பேயோ?
துறையும் மன்றமும் தொல்வலி மரனும்
உறையுளும் கோட்டமும் காப்பாய்; காவாய்
தகவிலை கொல்லோ, சம்பாபதி ..."


[சுருக்கமான பொருள்: சம்பாபதி! பார்ப்பானுக்கும் எனக்கும் கண் இல்லை. நான் தீய வினை உடையவள். எனக்குத் துணை வேறு யாரும் இல்லை என்பது உனக்குத் தெரியாதா? என் சிறுவனுடைய உயிரை உண்டது அணங்கா? பேயா? நீதான் இந்த ஊரின் நீர்த்துறைகளையும், பொது மன்றத்தையும், முதிர்ந்த மரங்களையும் அங்கேயெல்லாம் இருக்கும் தங்குமிடங்களையும் கோட்டங்களையும் காப்பவள். ஆனால் நீ என் சிறுவனைக் காப்பாற்றவில்லையே. இது தகுமோ?]

இப்படிப் புலம்பிய கோதமை முன் பொன் நிறம் உடைய சம்பாபதி தோன்றுகிறாள்.

"நடு இரவில் என்னை அழைத்தாய், உனக்கு என்ன ஆயிற்று, சொல்" என்று சம்பாபதி கேட்கிறாள்.

கோதமை சொல்கிறாள்: "எனக்குத் துணை யாரும் இல்லை. ஒன்றும் அறியாத என் பாலகன் ஈமப் புறங்காட்டுப் பக்கம் போனான். அவன் உயிரை உண்டது அணங்கோ, பேயோ. தெரியவில்லை. உறங்குகிறவன்போலக் கிடக்கிறான் பார்."

சம்பாபதி மறுமொழி சொல்கிறாள்.

"அணங்கும் பேயும் ஆருயிர் உண்ணா;
... ... பேது கந்தாக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது;
மா பெரும் துன்பம் நீ ஒழிவாய்!"

[சுருக்கமான பொருள்: அணங்கும் பேயும் அருமையான உயிரை எடுத்துக்கொள்ளமாட்டா. இவனுடைய ஊழ்வினையே விவரம் இல்லாத அச்சம் காரணமாக வந்து இவனுடைய உயிரைக் கொண்டுபோயிற்று. மிகக் கொடிய துன்பத்தை நீக்கிக்கொள்.]

கோதமை மீண்டும் வேண்டுகிறாள். தன் உயிரை எடுத்துக்கொண்டு தன் மகன் உயிரைத் தந்தால் அவன் தன் கணவனைக் காப்பாற்றிவர முடியும் என்பது அவள் வேண்டுதல்.

"என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்தருளில் என்
கண்-இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும்;
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு"

[சுருக்கமான பொருள்: "என் உயிரை எடுத்துக்கொண்டு இவன் உயிரை மீட்டுத் தந்தால், கண் இல்லாத என் கணவனை இவன் காப்பாற்றுவான். என் உயிரை எடுத்துக்கொள்; இவன் உயிரைத் தந்து அருள்."]

மிகவும் இரக்கம் கொண்டவளாய்ச் சம்பாபதி சொல்கிறாள்:

"ஐயம் உண்டோ? ஆருயிர் போனால்
செய்வினை மருங்கில் சென்று பிறப்பு எய்துதல்;
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆரிடர் நீக்குதல்
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று; நீ இரங்கல்!"

[சுருக்கமான பொருள்: "அருமையான உயிர் போனபிறகு தன் செய்வினைக்கு ஏற்றபடிப் போய் ஒரு பிறவி அடையும். இதில் ஐயம் உண்டோ? அப்படிப் போன உயிரை மீட்டுக் கொண்டுவந்து உன் கொடிய துயரத்தைப் போக்குவது எனக்கு இயலாது. நீ மனம் தாழாதே."]

"கொலை அறமாம் எனும் கொடுந்தொழில் மாக்கள்
அவலப் படிற்றுரை ஆங்கு அது மடவாய்!
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர்
இலரோ இந்தப் புறங்காட்டு
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்;
நிரயக் கொடுமொழி நீ ஒழி"

[சுருக்கமான பொருள்: கொலை என்பது அறம் என்று சொல்லும் கொடிய தொழில் செய்யும் மாக்களின் கடும் சொல் அது. உலக மன்னர்களுக்காகத் தம் உயிரைக் கொடுப்பவர் இல்லையா? இந்த ஈமப் புறங்காட்டில் அரசர்களுக்கு என்று அமைந்த கோட்டங்கள் ஆயிரம் உண்டு. நரகத் துயர் தரும் கொடிய சொல்லைச் சொல்லாதே.]

கோதமை தன் உயிரைக் கொடுத்துத் தன் மகன் உயிரை மீட்கலாம் என்று நினைப்பது தவறான கருத்து என்று சம்பாபதி குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

கோதமை தன் எதிர்பார்ப்பைச் சொல்கிறாள்.

"தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை
நான்மறை அந்தணர் நன்னூல் உரைக்கும்;
மாபெரும் தெய்வம் நீ அருளாவிடின்
யானோ காவேன் என் உயிர் ஈங்கு"

[சுருக்கமான பொருள்: நான்கு மறைகள் ஓதும் அந்தணரின் நூலில் சொன்னபடித் தேவர்கள் வரம் கொடுப்பார்களே. மிகப் பெரிய தெய்வமாகிய நீ எனக்கு அருள் செய்யாவிட்டால் நான் என் உயிரைக் காத்துக்கொள்ளமாட்டேன்.]


சம்பாபதி அதற்கு மறுமொழி சொல்கிறாள்.

"ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது
ஆழித் தாழி அகவரைத் திரிவோர்
தாம் தரின் யானும் தருகுவன்"

[சுருக்கமான பொருள்: ஊழிமுதல்வன் மட்டுமே உயிரைக் கொடுக்க முடியும். அவனைத் தவிர இந்தச் சக்கரவாளம் ஆகிய தாழியின் உள்ளே திரிகிறவர் யாரேனும் உயிர்களைத் தர முடிந்தால் நானும் தர முடியும்.]


இப்படி உரைத்த தெய்வம், "என் ஆற்றலைப் பார்" என்று சொல்லிவிட்டு ... சக்கரவாளத்தில் வரம் தரும் இயல்பை உடைய எல்லாரையும் அழைத்து, கோதமையின் துயரத்தைப் போக்கும்படிக் கேட்கிறாள்.

"நால்வகை மரபின் அரூபப் பிரமரும்
நானால் வகையின் உரூபப் பிரமரும்
இருவகைச் சுடரும் இரு-மூ-வகையின்
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும்
பல்வகை அசுரரும் படு துயர் உறூஉம்
எண்வகை நரகரும் இருவிசும்பு இயங்கும்
பன்மீன் ஈட்டமும் நாளும் கோளும்
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து
வரம் தரற்கு உரியோர் தமை முன் நிறுத்தி
அரந்தை கெடும்; இவள் அருந்துயர் இது என..."

[சுருக்கமான பொருள்: அரூபப் பிரமர், உரூபப் பிரமர், சூரியன், சந்திரன், ஆறுவகைத் தெய்வங்கள், பலவகை அசுரர், எட்டு வகை நரகங்களில் துயரம் அடைந்துகொண்டிருப்பவர்கள், பலவகை விண்மீன்கள், கோள்கள் ... இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய சக்கரவாளத்தில் வரம் கொடுக்கும் ஆற்றல் உடைய எல்லாரையும் அழைத்து, "இவளுடைய துன்பத்தை நீக்குங்கள்; இவள் துன்பம் இத்தகையது" என்று சொல்ல ... ]

சம்பாபதியின் அழைப்பில் வந்த எல்லாரும் அவள் கோதமைக்குச் சொன்னதையே தாங்களும் சொல்ல, கோதமையின் மனத்துயரம் நீங்குகிறது. இறந்த தன் மகனின் உடலை ஈமச் சுடலையில் வைத்துவிட்டு அந்த இடத்தைவிட்டுப் போகிறாள்.

இதன்பிறகு கோதமை பற்றிய குறிப்பு இல்லை.






கோதமையின் கதைக்கும் மணிமேகலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை.

மணிமேகலை தன் கைக்கு எட்டாததால் உதயகுமரன் ஏமாற்றத்துடன் போனபிறகு மணிமேகலா தெய்வம் மலர்வனத்துக்கு வருகிறாள். மணிமேகலை, சுதமதி இருவரும் ஏன் அங்கே இருக்கிறார்கள் என்று கேட்டு, அவர்கள் எப்படி அங்கேயிருந்து திரும்பிப் போவது என்று சொல்லும் முறையில் அவளுக்கும் சுதமதிக்கும் உரையாடல் நடக்கிறது. அப்போது சுதமதிக்கு அந்த ஊரில் இருக்கும் சக்கரவாளக் கோட்டம் எப்படி உண்டானது என்று மணிமேகலாதெய்வம் விளக்குகிறாள். அங்கேதான் கோதமையின் கதை இடம் பெறுகிறது.

கோதமை கதை மிகச் சிறிய கிளைக்கதை. ஆனாலும் அதன் கருத்துச் செறிவைப் பாருங்கள்!

கோதமைக்கும் சம்பாபதிக்கும் இடையே நடக்கும் உரையாடல் மூலம் எவ்வளவு உண்மைகள், நம்பிக்கைகள் தெரியவருகின்றன!

ஊழ்வினையின் வலிமை, அணங்கும் பேயும் உயிர் உண்ணாமை, ஓர் உயிருக்காக இன்னோர் உயிரைக் கொடுத்துப் பயனில்லை என்ற உண்மை, இறந்த உயிர் மீண்டும் பிறக்கும் என்ற கருத்து, போன உயிரை மீட்க யாராலும் முடியாதது, ஊழி முதல்வன் ஒருவனைத் தவிர வேறு யாரும் உயிர்களைப் படைக்க முடியாமை, தேவர்களாலும் வரம் கொடுக்க இயலாமை, ... இப்படி அந்தக் காலத்தில் நிலவிய நம்பிக்கைகளை முன்னிறுத்தவே கோதமையின் கதை காப்பியத்தில் பின்னப்பட்டதாகத் தோன்றுகிறது. அதோடு, காவிரிப்பூம்பட்டினத்தில் அந்தக் காலத்தில் சுடுகாடு எப்படி இருந்தது என்றும் சக்கரவாளம் போன்ற ஓர் அமைப்பு இருந்தது என்றும் ஓரளவு தெரிந்துகொள்ள முடிகிறது.

பவுத்த சமய நம்பிக்கைகள் நிறைந்த கதை கோதமை கதை.


இது உண்மையில் நடந்த கதையா என்பதை நிறுவவோ மறுக்கவோ இயலாது, அது தேவையும் இல்லை என்று தோன்றுகிறது.




அன்புடன்,
ராஜம்

--Ksubashini 18:30, 26 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 26 நவம்பர் 2011, 18:30 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,043 முறைகள் அணுகப்பட்டது.