rajam rajam@earthlink.net
to மின்தமிழ் <mintamil@googlegroups.com>
இந்தப் பதிவு மிகச் சிறிய ஒரு கதையை உள்ளடக்கியது. கோவலனின் தந்தை மாசாத்துவான் எப்படி மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெறுகிறான் என்பதைத் தெரிவிக்கவும் அந்தக் கதையின் உள்ளே பொதிந்திருக்கும் வரலாற்றுக் குறிப்புகளைக் கண்டறியவும் இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன்.
மாசாத்துவான்
இந்தப் பதிவு மாசாத்துவானைப் பற்றியது. மாசாத்துவான் என்பவன் யார்? சிலப்பதிகாரத்தில் அவனைப் பற்றிக் கேள்விப்படுகிறோம் -- அவன் கோவலனின் தந்தை என்று.
மாசாத்துவான் எப்படி மணிமேகலையில் இடம் பெறுகிறான்? இங்கே பார்ப்போம்.
வஞ்சி மாநகரில் பலவகைச் சமயத்தினரின் கடைப்பிடியைப் (== சமய வாதத்தைப்) பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்கிறாள் மணிமேகலை.
அதற்குப் பிறகு, அந்தச் சமய வாதிகளுடன் உரையாடுவதற்காகத் தான் மேற்கொண்ட ஆண் கோலத்திலேயே, அறவண அடிகளையும் தாய்களையும் (== மாதவி + சுதமதி) தேடிப் போகிறாள்; வஞ்சி மாநகரத்தின் எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்கிறாள்; கடைசியில் இந்திர விகாரத்துக்கு வருகிறாள். அந்த இடம் புத்த தேவனின் நல்லறத்தைச் சொல்லுகிறவர்கள் தங்கும் இடம்.
"அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும்
இந்திர விகாரம் என எழில் பெற்று
நவை அறு நாதன் நல்லறம் பகர்வோர்
உறையும் பள்ளி"
[சுருக்கமான பொருள்: அந்தரத்தில் திரியும் சாரணர்கள் இறங்கிவந்து இனிமையாகத் தங்கும் இந்திர விகாரம் போன்ற அழகுடன் திகழும், குற்றம் இல்லாத தலைவனின் நல்ல அறத்தைச் சொல்லுகிறவர்கள் தங்கியிருக்கும் பள்ளி.]
அங்கே மணிமேகலை யாரைப் பார்க்கிறாள்?
கோவலனின் தந்தை மாசாத்துவான் அங்கே இருக்கிறான். அந்த மாசாத்துவானை மணிமேகலை பார்க்கிறாள்.
அவர்கள் எப்படி ஒருவரை ஒருவர் இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள் என்று காப்பியம் சொல்லவில்லை.
மாசாத்துவான் "கோவலன் தாதை மாதவம் புரிந்தோன்" என்று நமக்கு அறிமுகம் ஆகிறான். அவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.
மாசாத்துவானின் பாதங்களைப் பணிந்து, எல்லாக் கதையையும் சொல்கிறாள் மணிமேகலை -- தன் பாத்திர தானம், தானத்தின் பயனால் சாவக மன்னன் (== புண்ணியராசன்) குறை ஒன்றும் இல்லாமல் உலகை ஆளும் செல்வப்பயன், அவன் மணிபல்லவத்துக்கு வந்து தன் முற்பிறப்பை (== ஆபுத்திரனாக) உணர்ந்தது, அவன்முன் தெய்வம் தோன்றி அவனுடைய துயரத்தைத் தணித்தது, மாநகர் ஆகிய காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டதும் அதனால் அறவண அடிகளும் அவளுடைய தாயரும் (== மாதவி + சுதமதி) இந்த வஞ்சி நகருக்கு வந்தது, சாவக மன்னன் தன் நாட்டுக்குப் போனபின் தான் இங்கே வந்தது, பொய்த்தோற்றத்தோடு (== ஆண் வடிவத்தில்) பல சமயவாதிகளின் கோட்பாடுகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டது, அந்தச் சமய வாதங்கள் தனக்குச் சரியாக இல்லாததால் "நாதனுடைய" நல்லறங்களைக் கேட்க விரும்பி இங்கே அறவண அடிகளைத் தேடி வந்தது ... இப்படி எல்லாச் செய்திகளையும் சொல்கிறாள்.
அவளுக்கு மறுமொழியாக ... கோவலன் தாதையாகிய மாசாத்துவான் தான் தவம் மேற்கொண்ட காரணத்தை முதலில் சொல்கிறான்:
"தூயோய்! என்னுடைய நல்வினைப் பயனால் உன்னை நான் பார்த்தேன்! உன் தாதையும் (== தந்தையான கோவலனும்) தாயும் (== கண்ணகியும்) செய்த தீவினையினால் செழுமையான நகரம் (== மதுரை) கேடு அடைய, அவர்களும் இறந்தனர். அதைக் கேள்விப்பட்டு ... இல்வாழ்க்கை என்பது மாயம், செல்வமும் யாக்கையும் தினையளவுகூட நிலைப்பதில்லை என்று உணர்ந்தேன்; அதனால் மாதவம் மேற்கொண்டேன்."
தொடர்ந்து, அவன் அந்த வஞ்சி மாநகருக்கு வந்த காரணத்தைச் சொல்கிறான்.
"குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை
விடர்ச்சிலை பொறித்த வேந்தன்"
குடக்கோச் சேரலன் என்பவன் முன்பு ஒரு நாளில் இந்தப் பொழிலில் தங்கியிருந்தபோது ... இலங்கைத் தீவில் இருந்த சமனொளி என்ற மலைக்குப்போய் அதை வலம்வந்து மீண்ட தரும சாரணர் இங்கே வந்தார்கள்.
அப்படி,
"இலங்கா தீவத்துச் சமனொளி என்னும்
சிலம்பினை எய்தி வலம்கொண்டு மீளும்"
தரும சாரணர் இங்கே வந்து ஒரு கல் தலத்தில் இருந்தார்கள். அவர்களை விருந்தோம்பினான் அந்தச் சேரன். அவர்கள் அவனுக்குப் பிறப்பின் துன்பம், பிறவா இன்பம், ... இன்ன பிற உண்மைகளை எடுத்துச் சொன்னார்கள்.
அந்த நாளில் ... உன் தந்தைக்கு ஒன்பது (9) தலைமுறைக்கு முற்பட்ட கோவலன் அதைக் கேள்விப்பட்டான். அவன் அந்தச் சேர மன்னனுக்கு நெருங்கிய தோழன் ("நீங்காக் காதற் பாங்கன்"); அதனால், தானும் அந்த நல்லறம் கேட்டு, முன்னோர் மூலம் தனக்கு வந்ததும் தன் முயற்சியால் தான் ஈட்டியதும் ஆகித் தனக்கு இருந்த எல்லாப் பொருளையும் ஏழே (7) நாட்களில் இரவலர்க்குக் கொடுத்து, தவம் புரிந்து, சுகதனுக்காக ( == புத்த தேவனுக்காக) வானளாவிய மலையில் ஒரு வெள்ளிய சயித்தம் (== ஆலயம்) அமைத்தான்.
அந்தச் சயித்தியத்தைக் கண்டு வணங்குவதற்காக நான் இங்கே வந்தேன். நான் இங்கே இருந்தபோது, காவிரிப் பட்டினத்தைக் கடல் கொள்ளும் என்று கேள்விப்பட்டு இங்கேயே தங்கிவிட்டேன்.
இப்படி, கோவலன் தாதை (== மாசாத்துவான்) தான் காவிப்பூம்பட்டினத்திலிருந்து வஞ்சி மாநகரத்துக்கு வந்து தங்கிய கதையை மணிமேகலைக்குச் சொல்கிறான்.
பிறகு, கோவலனும் கண்ணகியும் பிற்காலத்தில் ஒரு நாளில் கபிலையில் பிறந்து "நாதனின் நல்லறத்தை"க் கேட்கும் அந்த நாளில் தானும் அந்த அறநெறியைக் கேட்க இருப்பதாகச் சொல்கிறான்.
அறவண அடிகளும் மாதவியும் சுதமதியும் இப்போது கச்சி மாநகரத்தில் இருப்பதாகவும், காஞ்சி நகரம் எப்படிச் சீரழிந்திருக்கிறது என்றும் மழையில்லாமல் வறுமையினால் பிச்சை இடுவோர் இல்லாமல் போனதால் அறவண அடிகளும் மாதவியும் சுதமதியும் அங்கே போயிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறான்.
பிறகு காஞ்சி நகருக்குப் போய் அதைக் "காத்தல் நின் கடன்" என்று மணிமேகலையைக் காஞ்சி நகரம் செல்லத் தூண்டுகிறான்.
பாட்டன் அறிவுரைப்படி ... மணிமேகலையும்
"கொடி மதில் மூதூர்க் குடக்கண் நின்று ஓங்கி
வட திசை மருங்கின் வானத்து இயங்கி ..."
"தொடு கழற் கிள்ளி துணையிளங்கிள்ளி" காவலனாக இருக்கும் கச்சி மாநகரத்துக்கு வந்து சேருகிறாள்.
++++++++++++++++++++++++++++++++++
தெய்வ நிலையில் இருக்கும் கண்ணகியைக் கண்டு வணங்குவதற்காக, கண்ணகி கோட்டத்துக்கு மணிமேகலை போனதைப் பற்றிப் பார்த்தோம். இங்கே படிப்பது ... மணிமேகலை மாசாத்துவானை நேரில் பார்ப்பது.
இந்த மாசாத்துவான் கதை சிறியது, ஆனாலும் கதையில் புதைந்திருக்கும் சிறு சிறு குறிப்புகள் வரலாற்றுக்கு உதவலாம்.
வஞ்சி மாநகரில் இந்திர விகாரம் என்ற அழகுடன் அமைந்திருந்த ஓர் இடம், அது அந்தர சாரணர் வந்து தங்கும் இடம், மாசாத்துவான் அங்கே வந்து சேர்ந்த வகையும் தங்கிய நோக்கமும், பாட்டனிடம் ஒரு சிறு குழந்தைபோல் கதை சொல்லும் மணிமேகலையின் மனப்பாங்கு, குடக்கோச் சேரலனுக்கும் சிலப்பதிகாரக் கோவலனின் ஒன்பது (9) தலைமுறைக்கு முற்பட்ட ஒரு கோவலனுக்கும் இடையே இருந்த நெருங்கிய நட்பு (சேர-சோழ நட்பு), தரும சாரணர் இலங்கைத் தீவின் சமனொளி மலையை வலம் வந்தபின் வஞ்சிக்கு வருதல், அங்கே தங்கியிருந்து அறம் உரைத்தல், வஞ்சியில் ஒரு மலையில் இருந்த வெண்மையான பவுத்த சயித்தியம், காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டது, ... இன்ன பிற.
+++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்,
ராஜம்
--Ksubashini 10:41, 4 டிசம்பர் 2011 (UTC)