மணிமேகலைக் காப்பியக் கதைகள் - ஆண்கள் - உதயகுமரன் (பகுதி 3)

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

from rajam rajam@earthlink.net
to மின்தமிழ் mintamil@googlegroups.com

date Fri, Dec 30, 2011 at 3:05 AMஇதற்கு முந்திய பதிவு (மணிமேகலைக் காப்பியக் கதைகள் -- ஆண்கள் -- உதயகுமரன் (பகுதி 2); December 28, 2011 6:26:20 PM PST).

அடுத்த பகுதி இங்கே தொடர்கிறது.

+++++++++++++++++++++++++++++++++++

உதயகுமரன் (பகுதி 3)

சித்திராபதியின் தூண்டுதலால் மணிமேகலையை நாடி ஊர் அம்பலத்தைச் சேருகிறான் உதயகுமரன்.

அந்த மணிமேகலையோ ... ஊர் அம்பலத்தில் தன்னந் தனியளாக, ஒரு பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு, ஊர் மக்களுக்குச் சோறு கொடுத்துக்கொண்டு அவர்களின் வயிற்றுத்தீப் பசியைத் தணிவித்துக்கொண்டு ஒரு பாவைபோல நிற்கிறாள்.

மலர்வனத்தில் அதே பாவையைத் தனியளாகக் கண்டு, கவர்ந்து எடுத்து, தன் பொன் தேரில் கொண்டு போக அவன் ஏங்கினான்; அப்போது, உயிருள்ள ஒருத்தியாகக்கூட அவளைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவளையே இப்போது இங்கே உயிருள்ளவளாக, தனியளாகக் காண்கிறான், அதுவும் அவன் கைக்கு எட்டும் தொலைவில்.

அடடா, ஒரே ஒரு வேறுபாடு! இப்போது அவள் இருப்பது பிக்குணிக் கோலத்தில்; நின்றிருப்பதும் தனியாக, ஆனால் ஊர் அம்பலத்தில். உதயகுமரனின் காட்சி அரியதே!

ஆயினும் ... அந்த மணிமேகலைப் பாவையைக் கண்டவுடன், வரம்பில்லாத காமம் உதயகுமரனை ஆட்கொள்ளுகிறது. என்ன சொல்கிறான்?

"உன் உடம்போடு என் உள்ளத்தில் புகுந்து என் நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்ட வஞ்சகக் கள்வியே! நோன்பு வாழக்கையை மேற்கொண்டு நொந்துபோகச் செய்யும் தவ வாழ்க்கையை மேற்கொண்டு பிறர் கையிலிருந்து வாங்கி உண்ணும் வாழ்க்கையை ஏன் மேற்கொண்டாய்?" ... இப்படித்தான் கேட்க நினைக்கிறான்!

ஆனாலும் அப்படியா கேட்கிறான்? இல்லை, இல்லை!

"நல்லாய்! நல்ல தவம் புரிந்தது ஏனோ? சொல்!" என்று கேட்கத்தான் அவனுக்குத் துணிவு வருகிறது.

அப்போது இந்த மணிமேகலை எப்படி உணர்கிறாள்?

நான் விரும்பிய என் காதலன் இராகுலன் இவன். இவனுடைய அடிகளைத் தொழுதலும் தகுந்த செயலே என்று நினைத்து அவன் பக்கம் போனாலும், என் முன்கையைப் பற்றி அவன் இழுத்தாலும் பழைய (பிறவியில்) காதலன் என்பதனால் அவனுடைய சொல்லை மறுத்துச் சொல்லுதல் நல்ல செயல் அன்று ("நன்றி அன்று").

இப்படி நினைத்து நடுங்குகிறாள்; தெளிவில்லாமல் மயங்குகிறாள். ஆனாலும், அவன் கேட்ட கேள்விக்கு விடை சொல்லலாம் என்று துணிகிறாள்.

"பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது; இடும்பைக் கொள்கலம்;
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்"

[சுருக்கமான பொருள்: மக்களின் உடம்புக்கு ... பிறப்பதும், மூப்பு அடைவதும், நோய்வாய்ப்பட்டு வருந்துவதும், இறந்துபோவதும் இயல்பு. இது துன்பத்தை அடைத்துக்கொள்ளும் இடம். இதை உணர்ந்தேன். அதனால் நல்ல அறம் செய்வதை மேற்கொண்டேன்.]

உடலை வருத்தும் தவ வாழ்க்கையை மேற்கொண்டதற்கு என்ன காரணம் என்று உதயகுமரன் கேட்ட கேள்விக்குத் தக்க வகையில் தன் செயலுக்கு விளக்கம் சொல்லிவிட்டுத் தொடர்ந்து மணிமேகலை சொல்லுவது என்ன?

"மண்டமர் முருக்கும் களிறு அனையார்க்குப்
பெண்டிர் கூறும் பேரறிவு உண்டோ?
கேட்டனையாயின் வேட்டது செய்க"

[சுருக்கமான பொருள்: மண்டி வரும் போரில் ஈடுபட்ட ஆண் யானை போன்றவருக்குப் பெண்கள் சொல்லும் அறிவுரை உண்டோ? நான் சொன்னதைக் கேட்டாய் ஆனால், நீ விரும்பியதைச் செய்.]

"நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். இனி உன் விருப்பம்போல் செய்" இதுவே மணிமேகலையின் செய்தி.

இப்படிச் சொல்லிவிட்டு, மணிமேகலை அங்கேயிருந்த குச்சரக் குடிகைக்கு (== "கூர்ச்சர நாட்டுக் கட்டிட வடிவில் அமைந்த குடில்") உள்ளே போகிறாள். 'ஆடவர் செய்வது யாருக்குத் தெரியும்' என்று நினைக்கிறாள். மணிமேகலா தெய்வம் தனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திரத்தை ஓதி, காயசண்டிகை வடிவம் எடுத்து வெளியே வருகிறாள்.

உதயகுமரனுக்கு வியப்பு! அவனுக்குத் தெரிந்ததாகக் கண்ணில் பட்டது அந்தப் பிச்சைப் பாத்திரம் ஒன்றுதான். அது முதலில் மணிமேகலை கையில் இருந்தது. இப்போது இன்னொருத்தி (== "காயசண்டிகை") கையில் இருக்கிறது. அப்படி என்றால் ... அந்தப் பாத்திரத்தோடு குச்சரக் குடிகையின் உள்ளே போன மணிமேகலை என்ன ஆனாள்? அவள் எங்கே?

உதயகுமரன் தவிக்கிறான். குச்சரக் குடிகையின் உள்ளே போகிறான். அங்கே பல மண்பாவைகள் இருக்கின்றன. அங்கே இருக்கும் தேவியை வேண்டிப் பலவாறு புலம்புகிறான். மணிமேகலை எங்கே? காயசண்டிகையின் கையில் பாத்திரத்தைக் கொடுத்துவிட்டு மாயையால் இங்கே ஒளிந்து கொண்டாள் மணிமேகலை. இங்கே இருக்கும் பாவைகளுள் அவள் யார்? அவள் யார் என்று எனக்கு நீ காட்டிக் கொடுக்காவிட்டால் பல நாட்கள் ஆனாலும் இந்த இடத்தில் பழியாய்க் கிடப்பேன். இப்படியும் இன்னும் பலவாறாகவும் (மணிமேகலையின் வடிவை விவரித்துப்) புலம்பி, மணிமேகலை இல்லாமல் அந்த இடத்தைவிட்டுப் போகமாட்டேன் என்றும் சொல்லி அந்த முதிய தெய்வத்தின் அடிகளை வணங்குகிறான் உதயகுமரன்.

அப்போது அங்கிருந்த ஒரு சித்திரம் என்ன சொல்கிறது?

"எம் பெரிய தெய்வத்தின்முன், நீ சொல்வது என்ன என்று நினைத்துப் பார்க்காமல் நாக்கு வறண்டுபோகும்படியாகப் பேசத் துணிந்துவிட்டாய்!"

இப்படி ஒரு சித்திரம் சொல்ல ... உதயகுமரனுக்கு வியப்புக்குமேல் வியப்பு!

அன்று ஒரு நாள் ஒரு தெய்வம் (== 'மணிமேகலா தெய்வம்') வந்து இவள் (மணிமேகலை) பக்கம் வைத்த நினைப்பை அகற்றுவாய் என்று சொன்னதும் திப்பியம்! பலருடைய பசியைக் களையும் வகையில் இந்தப் பெண் (மணிமேகலை) தன் கையில் ஏந்திய பாத்திரமும் திப்பியம்! முதுபெரும் தெய்வத்தின் அடிகளின்கீழ் பிழை செய்தாய் என்று இப்போது ஒரு சித்திரம் சொன்னதும் திப்பியம்!

என்ன செய்வான், பாவம்!

சரி, இந்த எல்லாவற்றையும் பிறகு அந்த இளங்கொடி செய்யும் செயல்களின்வழியே தெரிந்துகொள்ளலாம் என்று முடிவு செய்கிறான்.

கொல்லன் உலைக்களத்துத் துருத்திபோலப் பெருமூச்சு வெளிவர, அங்கிருந்து போய்விடுகிறான்.

(தொடரும்)
அன்புடன்

ராஜம்

--Ksubashini 11:39, 30 டிசம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 30 டிசம்பர் 2011, 11:39 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,966 முறைகள் அணுகப்பட்டது.