rom rajam rajam@earthlink.net
to மின்தமிழ் <mintamil@googlegroups.com>
date Thu, Dec 29, 2011 at 3:26 AM
இதற்கு முந்திய பதிவு (மணிமேகலைக் காப்பியக் கதைகள் -- ஆண்கள் -- உதயகுமரன் (பகுதி 1); December 27, 2011 8:44:37 AM PST).
அடுத்த பகுதி இங்கே தொடர்கிறது.
+++++++++++++++++++++++++++++++++++
உதயகுமரன் (பகுதி 2)
மலர்வனத்தில் பளிக்கறைச் சுவர்வழியே தோன்றிய மணிமேகலையின் உருவம் உண்மையான, உயிருள்ள ஒரு பெண்ணாக உதயகுமரன் கைக்கு அகப்படாமல் ... ஒன்று அல்ல பல பதுமையாகவே தோன்றிப் போயிற்று, பாவம்!
ஒரே நம்பிக்கை உதயகுமரனுக்கு: "கங்குல் கழியின் என் கையகத்தாள்." அதுவும், சித்திராபதி உதவியினால் மணிமேகலையை அடையலாம் என்ற நம்பிக்கை. படுக்கையில் துயில்கொள்ளாமல் தவிக்கிறான். அந்த உதயகுமரன் முன்னால் தோன்றுகிறாள் ஒருத்தி; ஆனால், அந்த ஒருத்தி அவன் ஏங்கித் தேடிய மணிமேகலை இல்லை; அங்கே தோன்றியவள் மணிமேகலையைக் காக்கின்ற மணிமேகலா தெய்வம்.
மணிமேகலையை மணிபல்லவத்தீவில் வைத்துவிட்டு நேரே இவனிடத்தில் வந்த அந்த மணிமேகலாதெய்வம் சொல்வது என்ன?
மன்னவன் என்பவன் தன் நிலைமையிலிருந்து தவறக்கூடாது என்ற அறிவுரை; உதயகுமரன் எதிர்பாராத ஒன்று!
"... ... மன்னவன் மகனே!
கோன் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்;
கோள் நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும்;
மாரி வறங்கூரின் மன்னுயிர் இல்லை;
மன்னுயிர் எல்லாம் மண்-ஆள்-வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்"
[சுருக்கமான பொருள்: மன்னவனுடைய மகனே! அரசன் தன் நிலையிலிருந்து மாறுபட்டால் கோள்கள் தங்கள் நிலையில் மாறுபடும். கோள்கள் தங்கள் நிலையிலிருந்து மாறினால் மழை பெய்யாமல் வறட்சி உண்டாகும். மழை வறண்டால் உலகத்து உயிர்கள் ஒன்றும் இல்லாமல் போய்விடும். அப்படியானால், 'உலக உயிர்கள் எல்லாம் தன்னுடைய உயிர்' என்று கருதும் தகுதி மண்ணுலகை ஆளும் வேந்தனுக்கு இல்லாமல் போய்விடும்.]
எதற்கு இந்தப் பீடிகை போடுகிறாள் இந்த மணிமேகலா தெய்வம்?
தவ வழியில் செல்லவிருக்கும் மணிமேகலைமேல் மனம் வைக்காதே என்று அறிவுறுத்தத்தான், வேறு எதற்கு?
"தவத்திறம் பூண்டோள்தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிக"
[சுருக்கமான பொருள்: தவவழிப் பட்டவள்மேல் (மணிமேகலைமேல்) வைத்திருக்கும் கீழ்ப்பட்ட எண்ணத்தை நீக்கு.]
மணிமேகலை இன்னும் தவநிலையை மேற்கொள்ளவில்லையே; அப்படியிருந்தும் மணிமேகலாதெய்வம் இப்படிச் சொல்வது சரியா?
விளக்கம் கிடைக்கிறது.
உதயகுமரனைப் பார்த்து அறிவுரை சொன்ன மணிமேகலாதெய்வம் நேராக அந்த மலர்வனத்துக்குப்போய், அங்கே தூங்கி வழிந்துகொண்டிருக்கும் சுதமதியை எழுப்பி நடந்ததைச் சொல்கிறாள். மணிமேகலைக்கு அவள் அறவழிப்படும் காலம் வந்தது; அதனால் அதற்குரிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
"ஆதிசால் முதல்வன் அறவழிப் படூஉம்
ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு" என்று.
அதனால்தான் மணிமேகலையை வான்வழியாக எடுத்துப்போய் "வஞ்சம் இல்லாத" மணிபல்லவத்தில் விட்டுவைத்திருப்பதாகவும், அங்கே மணிமேகலை தன் பழம்பிறப்பை உணர்ந்தபின் இங்கே திரும்புவாள் என்றும் உறுதி சொல்கிறாள்.
இது இவ்வாறிருக்க ... நம் உதயகுமரன் என்ன செய்கிறான்? மணிமேகலையை நினைத்துத் துவண்டுகொண்டிருக்கிறதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை ... அதாவது ... சித்திராபதி தலை காட்டும்வரை.
இதற்கு இடையில் ...
மணிபல்லவத்திலிருந்து மணிமேகலை அமுதசுரபியுடன் காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்து, அறவண அடிகளின் வழிகாட்டலில், பிக்குணிக்கோலத்தில் ஊர் மக்களுக்கெல்லாம் உணவளிக்கிறாள்.
ஊர் மக்கள் எல்லாரும் "உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த மதுமலர்க்குழலாள் வந்து தோன்றி, பிச்சைப் பாத்திரம் கையில் ஏந்தியது திப்பியம்" என்று வருந்துகிறார்கள்.
காயசண்டிகை என்பவளின் தீராப் பசியை மணிமேகலை தீர்க்கிறாள். காயசண்டிகை சொன்னபடி ... சக்கரவாளக்கோட்டத்தில் உள்ள உலக அறவியில் பலரும் பசியுடன் இருப்பதைத் தெரிந்துகொண்டு அங்கே போகிறாள். அங்கே போய், "ஆபுத்திரன்கை அமுதசுரபி இது; ஏற்போர் யாவரும் வருக!" என்று கூவி அழைக்கிறாள். உணவைத் தேடிக் கூடும் உயிர்கள் செய்த ஒலி ஊர் முழுவதும் பரவுகிறது!
அங்கேதான் சிக்கலும் தொடங்குகிறது!
மணிமேகலை அளித்த உணவுக்காக ஊரில் எழுந்த ஒலி சித்திராபதியின் காதுகளில் சென்று சுடுகிறது. அவளைப் பொருத்தவரை, மணிமேகலை என்பவள் கணிகை குலத்து ஆடலரசி மாதவியின் மகள்; பிச்சைப் பாத்திரம் ஏந்தி ஊர் அம்பலத்தில் திரியும் பெண் அல்லள்; அரசிளங்குமரன் உதயகுமரனால் ஆளப்படவேண்டியவள்!
உதயகுமரன் என்ற உலகை ஆளும் வண்டு அருந்தும் வண்ணம், இந்த மணிமேகலை கையில் இருக்கும் பிச்சைப் பாத்திரத்தைப் பிறர் கைக்குக் காட்டிவிட்டு, அவளை அவனுடைய பொன் தேரில் ஏற்றிக் கொண்டுவராவிட்டால் ... என்று வஞ்சினம் மொழிகிறாள்.
நெஞ்சு சுடப் பெருமூச்சு விட்டுக்கொண்டு, சில பெண்களோடு சேர்ந்து, வியர்வை கோத்த முகத்தோடு, தேரோடும் வீதிவழியே போய், இளங்கோ வேந்தன் இருப்பிடம் சேர்கிறாள்.
அங்கே அவள் காணும் காட்சி: வண்டும் தேனினங்களும் ஒலிக்கும் மணல் பரப்பிய ஓர் இடம். பவழத்தூண். பசும்பொன்னால் ஆகிய சிவந்த சுவர். ஒளி திகழும் முத்து விதானம். ஒளி பரவிய பெரிய பளிங்கு மண்டபம். மான் ஊர்தி. தூய மலர்ப் பள்ளி. இரு பக்கமும் மாலையணிந்த பெண்கள் வெண்ணிறச் சாமரை வீசுகிறார்கள். இந்தச் சூழலில் உதயகுமரன் இருக்கிறான்.
சித்திராபதி உதயகுமரனின் திருவடிகளைத் தொழுது ஏத்துகிறாள்.
உதயகுமரன் பல்லைக் காட்டி, நக்கல் செய்கிறான் ("திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு")!
"மாதவி மணிமேகலையுடன் எய்திய
தாபதக் கோலம் தவறு இன்றோ?" என்று கேட்கிறான்.
மாதவி மணிமேகலையோடு சேர்ந்து மேற்கொண்ட தவக் கோலத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கிறதா? என்பது அவன் கேள்வி.
சித்திராபதிக்கு அது பொறுக்கவில்லை! "பெறுதற்கரிய சிறப்புடைய வகையில் குருகு ஒன்று (=="மாதவி") கரு உயிர்த்தது; அப்படிப் பிறந்தது (=="மணிமேகலை") ஒருதனிச் சிறப்போடு ஓங்கிய திருமணிக் காஞ்சியாகத் திகழ்வது. அது பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய நாடகம் விரும்ப, நலம் எல்லாம் அமைந்து, தகுந்த பக்குவம் அடைந்தது. அந்த மலர் அவிழ்ந்த நேரத்தில் உதயகுமரன் என்ற வண்டு அதை உண்ணவேண்டும் என்ற விரைவினால் இங்கே வந்தேன். அது (=="மணிமேகலை"), இந்த வியப்பான பெரிய ஊரில், பாழ்பட்ட ஒரு பரந்த வெளியில் இப்போது இருக்கிறது." என்று வெளிப்படையாகத் தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறாள்.
என்ன ஒரு வெளிப்படையான விவரிப்பு, பாருங்கள்!
இப்படிச் சித்திராபதி சொன்னதைக் கேட்ட உதயகுமரன் நிலை என்ன?
ஓங்கிய கடலில் ஒரு கலம் உடைந்து அதனால் தாக்கப்பட்டவனுக்குப் பிடித்துக்கொள்ள ஒரு பெரிய புணை (=='தெப்பம்') கிடைத்ததுபோல உணர்கிறான். இப்போது சித்திராபதிதான் உதயகுமரனுக்குப் புணை.
தன் உள்ளத்து உணர்வைக் கொட்டிச் சொல்ல உதயகுமரனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு! மலர்வனத்தில் தான் மணிமேகலையைப் பார்த்ததையும் பிறகு நடு இரவில் ஒரு தெய்வம் வந்து தனக்கு அறிவுரை சொன்னதையும் சொல்கிறான்.
"(மலர்வனத்தில்) அஃது ஓர் ஓவியம் என்று நினைத்து விலகிப் போகப் பார்த்தேன். அப்போது ... அவளுடைய அந்தக் காந்தள் கைகள் சற்றும் பிணியவிழாத தன் இள மார்பகத்தைச் சிறிதே நெரித்தன; முத்துப்போன்ற பற்களின் இடையே குறுநகை அரும்பியது; கண்களின் வீச்சு செவியளவு ஓடியது. பளிங்கின் வெளியே தெரிந்த அந்தப் பவளப்பாவை என் உள்ளத்தைக் கவர்ந்துகொண்டாள். என் உயிரைத் தாங்கிக்கொண்டு நடு இரவில் இருந்தேன். அப்போது பொன் திகழும் உடம்பை உடைய ஒருத்தி (== "மணிமேகலா தெய்வம்") வந்து, (மன்னவனின்) செங்கோல் திறத்தை விளக்கிச் சொல்லி, தவம் செய்கிற அவளுடைய (=="மணிமேகலையுடைய") தொடர்பை நீக்கிவிடவேண்டும் என்றாள். இது தெய்வச் செயலா? திப்பியமா? எனக்குப் புரியவில்லை."
சித்திராபதி சிரிக்கிறாள்.
"அந்த எண்ணத்தைக் கைவிடுக குரிசிலே!" என்று தொடங்கி, தேவர்களுக்குக்கூடக் காமக் கள்ளாட்டு மயக்கத்தில் தெரிகிறவை சில உண்டு என்று விளக்குகிறாள். இந்திரன் ஆயிரம் கண் பெற்றது, மேரு மலையில் தீக்கடவுளின் மனைவி ஏழு முனிவர்களின் மனைவியருள் அருந்ததி தவிர்த்துப் பிற மனைவியர் வடிவு எடுத்துத் தன் கணவனின் வேட்கையைத் தவிர்த்தது ஆகிய புராணச் செய்திகளைக் கூறுகிறாள். பிறகு தன் கணிகைக் குல இயல்பை விளக்குகிறாள். கன்னிக் காவல் இல்லை; திருமணக் காவல் இல்லை; நெஞ்சத்து உறுதியினால் தன்னைக் காத்துக் கணவனையன்றிப் பிற தெய்வத்தைத் தொழாத குடிப்பிறப்பும் இல்லை. கொண்டி மகளிர் என்பவர் நாட்டு மக்கள் காணும்படி நல்ல அரங்கத்தில் ஏறி, கண்வலை வீசி, கண்டோர் நெஞ்சத்தைக் கொள்ளைகொண்டு, பண் தேர்ந்த மொழியினால் (மக்களின்) பொருள்களைக் கவர்ந்துகொண்டு, வண்டுபோல் போய்விடுகிறவர்கள். அத்தகைய கொண்டி மகளிரை வகையான முறையில் பிணிப்பது அல்லவா மன்னவனுக்கு முறை?
மணிமேகலாதெய்வம் சொன்ன "கோன் முறை"க்கும் சித்திராபதி சொன்ன "கோன் முறை"க்கும் எவ்வளவு வேறுபாடு, பாருங்கள்!
சித்திராபதியின் சொற்களுக்குப் பெரிய வெற்றி! உதயகுமரன் உள்ளம் உடனே பிறழ்கிறது! தேரில் விரைந்து ஓடுகிறான், மணிமேகலை திரிந்துகொண்டிருக்கும் அம்பலத்தை நோக்கி.
(தொடரும்)
++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்,
ராஜம்
--Ksubashini 11:36, 30 டிசம்பர் 2011 (UTC)