மணிமேகலைக் காப்பியக் கதைகள் -ஆண்கள் - உதயகுமரன் (பகுதி 1)

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

from rajam rajam@earthlink.net
to மின்தமிழ் <mintamil@googlegroups.com>

முன்னுரை


மணிமேகலைக் காப்பியத்தில் உதயகுமரன் தலைகாட்டும் இடங்கள் மிகச் சிலவே. அந்த ஒவ்வொரு சூழலையும் மிக அழகாகக் கொண்டுபோகிறார் காப்பிய ஆசிரியர்.


முதலில் உதயகுமரன்பற்றிய நிகழ்ச்சிகளைச் சில தொடர்களில் பார்ப்போம். பிறகு தொகுப்பாக அவனைப் பற்றிப் பேசுவோம்.

உதயகுமரன் -- பகுதி 1


ஆழமான இலக்கியப் பயிற்சி இல்லாத பொது மக்களுக்கு உதயகுமரன் எப்படி அறிமுகம் ஆகிறானோ தெரியவில்லை. மணிமேகலைக் காப்பியத்தில் அவனைப் பற்றிச் சொல்லப்படும் பகுதிகளிலிருந்து எனக்குத் தெரியவருவதை இங்கே சொல்ல நினைக்கிறேன்.

உதயகுமரன் யார்? அவனுக்கு மணிமேகலைக் காப்பியத்தில் என்ன வேலை?

உதயகுமரன் அறிமுகமாவது எப்படி?

"மதி மருள் வெண் குடை மன்னவன் சிறுவன்
உதயகுமரன்"

[சுருக்கமான பொருள்: நிலவைப்போல உள்ள வெண்மையான குடையைக் கொண்ட மன்னவனின் மகன்.]


மன்னவனின் மகனாகிய அந்த உதயகுமரன் காப்பியத்தில் எப்படி நுழைகிறான்?

காலவேகம் என்ற ஓர் யானை மதம் பிடித்து ஓட ... பாகரும், பறையடிப்போரும் பிற மக்களும் அலறி ஓடுகிறார்கள். அந்த மதயானையை அடக்கிவிட்டு வருபவனாக நமக்கு அறிமுகம் ஆகிறான் உதயகுமரன். இளமைத் துடிப்புடன் வரும் இவன் முருகனோ என்று யாரும் தவறாக எண்ணிவிடமுடியாது; ஏனென்றால் இவன் முருகனைப்போலக் கடப்ப மாலையை அணிந்திருக்கவில்லை. இவன் அணிந்திருப்பது சோழருக்கு அடையாளமான ஆத்தி மாலை.

"விடு பரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி,
கடுங்கண் யானையின் கடாத்திறம் அடக்கி,
அணித்தேர்த் தானையொடு அரசிளங்குமரன்
மணித்தேர்க் கொடுஞ்சி கையால் பற்றி,
காரலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன்"

[சுருக்கமான பொருள்: கட்டுப்பட்டதிலிருந்து விடுபட்ட குதிரையைப்போல விரைவாகப் போய், அந்த யானையின் மதத்தை அடக்கி, அணிவகுத்த தேர்ப் படை புடை சூழ, தன் தேரில் உள்ள கொடுஞ்சி என்ற பகுதியைக் கையில் பிடித்துக்கொண்டு வருகிறான். இவன் கார் காலத்தில் மலர்ந்த கடப்ப மலர் மாலையை அணிந்திருப்பவன் [== "முருகன்"] இல்லை என்பதைத் தெரிவிக்கும் வகையில் ஆத்தி மாலையை அணிந்து வருகிறான்.]

(குறிப்பு: இங்கே அந்த யானை களிமயக்குற்றுச் சுழன்று திரிந்தது எப்படி என்று காப்பியத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தி அக்காலத்தில் வங்கம் ஒன்று சிதைந்த நிலையை விவரிப்பதுபோல் இருக்கிறது. மிகவும் பயனுள்ள விவரம்.)


யானையை அடக்கிய உதயகுமரன் நேராக அவனுடைய அரண்மனைக்கா போகிறான்? இல்லை, இல்லை! அங்கேதான் தொல்லை தொடங்குகிறது, அவனுக்கு மட்டுமில்லை, மணிமேகலைக்கும்! உதயகுமரன் நாடக மகளிர் வாழும் வீதிவழியே வருகிறான். அங்கே யாரைப் பார்க்கிறான்? ஆடகப்பொன்னால் அழகு செய்யப்பட்ட ஒரு மாடத்தில், பூக்கள் பரப்பிய ஒரு பள்ளியில், ஒரு பெண்ணோடு சேர்ந்து மயங்கி, மகரயாழ் ஒன்றைத் தழுவிக்கொண்டு, வரைந்தெடுத்த பாவைபோல (அசையாது) கிடந்த நண்பன் எட்டிகுமரனைப் பார்க்கிறான்.

நண்பன் எட்டிகுமரன் இருந்த நிலை உதயகுமரனைக் குழப்பியதுபோலும். அதனால் கேட்கிறான்: "இந்தப் பெண்ணொடு சேர்ந்து மயங்கி இருக்கிறாயே; உனக்கு என்ன துன்பம்?"


எட்டிகுமரன் சொல்கிறான். ஒரு செப்பினுள் மூடி வைக்கப்பட்ட மலர்போலத் தன் உண்மையான நலம் வாடிய மணிமேகலை மலர்வனம் நோக்கிப் போனதைப் பார்த்தானாம். உடனே, கோவலன் அடைந்த துயரம் தன் நினைவுக்கு வந்தது என்றும் அதனால் தன்னுடைய யாழ் இசையில் பிசகு ஏற்பட்டது என்றும் சொல்கிறான்.


அது கேட்டு உதயகுமரனுக்கு என்ன உணர்வு ஏற்பட்டது? நண்பன் எட்டிகுமரனின் மனக்கவலை பற்றியா, அல்லது கோவலன் பட்ட கொடுமை பற்றியா? இரண்டுமில்லை! மாறாக, அவன் மனம் மகிழ்கிறது. ஏன்? ஆ, மணிமேகலை மலர்வனத்துக்குப் போயிருக்கிறாள். தானும் அங்கே போய் அந்த மணிமேகலையைத் தன் தேரில் எடுத்துக்கொண்டு வந்துவிடலாம் என்ற ஆவல் அவனை உந்துகிறது.


நண்பனின் கவலையைப் பற்றிக்கேட்ட இவன் அந்த நண்பனுக்கு ஆறுதல் சொல்லவேண்டாமா? சொல்லாமல், உடனே ... மூடியிருக்கும் மழையைக் கிழித்துக்கொண்டு ஓடும் நிலவுபோல ... மாடவீதியில் தன் மணித்தேரை விரைந்து செலுத்தி, அடர்ந்த பூம்பொழில் ஆகிய மலர்வனத்தின் வாயிலை அடைகிறான்.


அவனுடைய தேரின் ஒலி மணிமேகலையின் காதில் கேட்கிறது; அவள் பதறுகிறாள். "சித்திராபதியோடு சேர்ந்து நினைத்து இவன் என்மேல் உள்ளம் வைத்திருக்கிறான் என்று வயந்தமாலை முன்பு ஒருநாள் மாதவிக்குச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். அதனால் இப்போது அவன் இங்கே வருகிறான்போல" என்று சுதமதியிடம் சொல்கிறாள். அறிவார்ந்த சுதமதி உடனே மணிமேகலையை அங்கே இருக்கும் பளிக்கறையில் மறைவாகத் தங்கவைக்கிறாள்.


அரசிளங்குமரன் உதயகுமரன் அங்கே எப்படி வருகிறான்? பலமலர்கள் நிறைந்த பொழிலில் பகலவன் முளைத்ததுபோல, எல்லா இடங்களிலும் ("பூமலர்ச் சோலையும் புடையும் பொங்கரும்") தன் தாமரைச் செங்கண் பார்வையைச் செலுத்தித் துழாவி, மணிமேகலையைத் தேடி ... அங்கே வந்து சேர்கிறான்.


ஆனால் அவன் கண்ணுக்குத் தட்டுப்படுவது யார்? சுதமதி! சுதமதியைப் பார்த்தவுடன் கல கல என்ற ஒலியோடு சூழ்ந்து வரும் படையோடு விரைந்து ஓடும் தன் தேரை நிறுத்துகிறான்.


சுதமதிமேல் அவனுக்கு என்ன ஆசை? ஒன்றுமில்லை. இவள் ஏன் இங்கே வந்து நிற்கிறாள் என்று அவனுக்கு வியப்பு.


அந்த அரசிளங்குமரன் சொல்வது என்ன?

"... ஆருமில் ஒருசிறை
ஒருதனி நின்றாய், உன் திறம் அறிந்தேன்"

[சுருக்கமான பொருள்: யாரும் இல்லாத இந்தப் பக்கத்தில் தன்னந்தனியாக நிற்கிறாய். உன்னைப்பற்றி எனக்குத் தெரியும்.]


சுதமதி-மாருதவேகன் பற்றி உதயகுமரனுக்குத் தெரியும். அதனால், அவள் அப்படித்தான் மலர்வனம்போன்ற இடங்களில் திரிவாள் என்று நினைத்தான்போலும்.


தொடர்ந்து உதயகுமரன் கேட்பது மணிமேகலையைப் பற்றி. அவளைத் தேடித்தானே அவன் இங்கே வந்தான்!


"வளர் இள வன முலை மடந்தை மெல்லியல்
தளர் இடை அறியும் தன்மையள்கொல்லோ?
விளையா மழலை விளைந்து மெல்லியல்
முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தனகொல்?
செங்கயல் நெடுங்கண் செவி மருங்கு ஓடி
வெங்கணை நெடுவேள் வியப்பு உரைக்குங்கொல்?
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை
தானே தமியள் இங்கு எய்தியது உரை"

[சுருக்கமான பொருள்: வளர்ந்துவரும் அழகிய மார்பகம் உடைய மெல்லியல்பு கொண்ட அவள், தன் இடையின் தளர்ச்சியை அறிவாளோ? அவளுடைய மழலை பக்குவப்பட்டுவிட்டதா? அவளுடைய சிறு பற்கள் முத்துப்போல் வரிசையாக வளர்ந்துவிட்டனவா? செம்மையான கயல் போன்ற நீண்ட கண்களின் சுழற்சி அவள் செவியளவு ஓடி, காமனின் செயலை உணர்த்துமோ? பெரிய தவசிகள் இருக்கும் இடத்தைவிட்டு நீங்கி இங்கே தனியாக மணிமேகலை வந்தது ஏன்? சொல்லு.]


உதயகுமரனுடைய எண்ணம் நேரடியாக எங்கே போகிறது என்று பாருங்கள். மணிமேகலையின் உடல் உறுப்பு ஒவ்வொன்றையும்பற்றிக் கேட்கிறானே! ஏன்? மணிமேகலை தக்க பருவம் அடைந்துவிட்டாளா என்பது அவனுக்குத் தெரியவேண்டும். அப்போதுதான் அவனுக்கு அவள் கிடைக்க வாய்ப்பு உண்டு. தவம் செய்கிறவர்கள் இருக்கும் இடத்தைவிட்டு மலர்வனத்துக்குத் தனியே அவள் வந்ததுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கவேண்டும் என்பது அவன் எண்ணம்.


சுதமதிக்கு இக்கட்டான நிலை. மணிமேகலையைப் பாதுகாக்கவேண்டும்; அதே நேரத்தில் அரசிளங்குமரனை எதிர்த்து ஒன்றும் செய்யவும் முடியாது.


சோழ அரச பரம்பரைச் சிறப்பிலிருந்து தொடங்குகிறாள். "தான் இளமையாக இருப்பதற்காக நாணம் கொண்டு, முதுமைக்கோலத்தைப் புனைந்து நீதி உரைத்த சோழனின் (=='கரிகாலனின்') மருகனே" என்று அழைத்து, உதயகுமரனுக்கு அவனுடைய அரச பரம்பரையின் முறையை நினவுபடுத்துகிறாள்.


இளமை என்பதும் அதன் துடிப்பும் சில நேரங்களில் சிலர் ஆற்றவேண்டிய கடமைகளுக்குப் பொருத்தமில்லாமல் போய்விடலாம் என்ற பேருண்மையை இங்கே சுதமதி வெளிப்படுத்துகிறாள், இல்லையா?


சுதமதிக்கும் உதயகுமரனுக்கும் நடந்த உரையாடலைச் சுதமதி பற்றிய பதிவில் பார்த்தோம்.


அந்த உரையாடலுக்குப்பின் இனி இங்கே இருந்து பயனில்லை, மணிமேகலையைத் தன் பொன் தேரில் ஏற்றிக் கொண்டுபோக இயலாது என்று உணருகிறான் உதயகுமரன். இனி அவனுக்கு இருக்கும் ஒரே உதவி அந்தச் சித்திராபதிதான். அதை நினைத்துச் சொல்கிறான் ...


"வஞ்சி நுண்ணிடை மணிமேகலைதனைச்
சித்திராபதியால் சேர்தலும் உண்டு"

[சுருக்கமான பொருள்: சித்திராபதியின் உதவியால், வஞ்சிக்கொடிபோன்ற நுண்ணிய இடையை உடைய மணிமேகலையை அடையவும் முடியும்.]

அப்படிச் சொல்லிவிட்டு அந்தப் பொழிலில் தங்கி இளைப்பாறிவிட்டுப் போய்விடுகிறான்.

அப்படி, மணிமேகலையை மலர்ப்பொழிலில் பளிக்கறையின் சுவர் வழியாகக் கண்டும் அவளைக் கைப்பற்றமுடியாத நிலையில் பெரும் துயர் அடைந்து, மென்மையான படுக்கையில்கூடப் படுக்கமுடியாமல் தவிக்கிறான்.


"மணிமேகலைதனை மலர்ப்பொழிற் கண்ட
உதயகுமரன் உறுதுயர் எய்தி,
கங்குல் கழியின் என் கையகத்தாள் என,
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்"

[சுருக்கமான பொருள்: மணிமேகலையை மலர்வனத்தில் பார்த்த உதயகுமரன் (அவளை அடைய விரும்பியும் அடைய முடியாததால்) மிகவும் துன்பம் அடைந்து, விடிந்தவுடன் அவள் என் கைக்குக் கிடைப்பாள் என்று நினைத்து, மெல்லிய படுக்கையில் இருப்புக் கொள்ளாமல் இருந்தவன்.]

அப்போது என்ன நடக்கிறது?

(தொடரும்)


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்,
ராஜம்
--Ksubashini 11:32, 30 டிசம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 30 டிசம்பர் 2011, 11:33 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,130 முறைகள் அணுகப்பட்டது.