பொடி வகைகள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொடி வகைகள்:-


தனியாப் பொடி(கொத்துமல்லி விதை):-


தேவையான பொருட்கள்:-


தனியா விதைகள் 200கிராம், உளுத்தம்பருப்பு 50 கிராம், கடலைப்பருப்பு 50 கிராம், மிளகாய் வற்றல் 50கிராம்(காரம் தேவை எனில் கூட்டியோ, தேவை இல்லை எனில் குறைத்தோ எடுத்துக்கொள்ளலாம்.)கட்டிப் பெருங்காயம் அல்லது பெருங்காயத் தூள், கல் உப்பு, புளி(தேவையானால்) வெல்லம்(தேவையானால்)


செய்முறை:- தனியா, உ.பருப்பு, க.பருப்பு,மி.வத்தல், உப்பு இவற்றை எண்ணெய் விடாமல் தனித்தனியாகப் பொன்நிறத்தில் வறுத்து எடுத்துக்கொண்டு ஆற வைக்கவும். பின் சிறிது நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஊற்றிக்கொண்டு பெருங்காயத் துண்டானால் பொரித்துக்கொள்ளவும். பெருங்காயப்பொடி எனில் கடுகு தாளித்துவிட்டு அதிலேயே போடவும். புளியையும் எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும். பின்பு முதலில் பருப்புக்களைப் பொடி செய்து கொள்ளவும். தனியாவைச் சேர்த்துக் கொஞ்சம் அரைத்ததும், பிறகு கடுகு, பெருங்காயம், புளி சேர்த்துப் பொடித்துக்கொண்டு, நன்கு பொடியானதும் வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். நன்கு கலந்து ஆறியதும் ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். வெறும் சாதம் சூடாக வடித்துக்கொண்டு இந்தப் பொடியைப் போட்டுக்கொண்டு நல்லெண்ணையோ நெய்யோ ஊற்றிக்கொண்டு சாப்பிடலாம். தனியா சேர்ப்பதால் வாய் சுவையின்மை குறைந்து,ஜீரணம் ஆகிப் பசி எடுக்கும்.


பருப்புப் பொடி முதல் முறை:

துவரம்பருப்பு 100 கிராம், மிளகாய் வற்றல் பத்து, மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயப் பொடி அல்லது துண்டுப் பெருங்காயம் பொரித்துப் பொடி செய்து கொள்ளவும். உப்பு தேவைக்கேற்ப.


மேற்சொன்ன எல்லாச் சாமான்களையும் நன்கு சுத்தம் செய்துகொண்டு வெறும் சட்டியில் வறுத்துக்கொள்ளவும். தனித்தனியாக வறுத்தல் நல்லது. பிறகு உப்பையும் வறுக்கவும். எல்லாவற்றையும் மிக்சி ஜாரில் போட்டுப் பொடி செய்யவும். மிளகாய் வற்றல் பிடிக்காதவர்கள் வெறும் மிளகு மட்டும் சேர்த்தோ, அல்லது மிளகாய் வற்றலைக் குறைத்துப் போட்டோ செய்து வைத்துக்கொள்ளலாம்.


பருப்புப் பொடி இரண்டாம் முறை:

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு மூன்றும் சம அளவில் எடுத்துக்கொள்ளவும். எல்லாம் சேர்ந்து 150 கிராம் இருந்தால் மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் பதினைந்து, பெருங்காயம் பொடி அல்லது முன் சொன்ன முறையில் பொரித்தது, உப்பு தேவைக்கேற்ப. எல்லாவற்றையும் வெறும் சட்டியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். இந்தப் பொடியை எல்லாப் பருப்புக்களையும் எண்ணெய் விட்டு வறுத்தும் செய்யலாம். வறுக்கையில் கறிவேப்பிலையும் சேர்க்கலாம். ஆனால் எண்ணெய் விட்டு வறுத்தால் சீக்கிரமாகப் பயன்படுத்த வேண்டும்.


அங்காயப் பொடி எனும் ஐங்காயப் பொடி:

இது பிரசவம் ஆனவர்களுக்கும் உடல் நலத்துக்கும், வயிற்றுக்கோளாறுகளுக்கும் நல்லது. பொதுவாக உணவு ஜீரணம் ஆகாமல், வாந்தி, வயிற்றுப் போக்கு என்று இருக்கும் சமயம் சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டு நல்லெண்ணெய் காய்ச்சி ஊற்றிச் சாப்பிட்டால் பேதி மட்டுப்பட்டு வாயில் உணவின் சுவை தெரிய ஆரம்பிக்கும். 


தேவையான பொருட்கள்:


தனியா 50 கிராம், வேப்பம்பூ சம அளவு, சுண்டைக்காய் வற்றல் 50 கிராம், மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் ஒரு டேபிள் ஸ்பூன், சுக்கு ஒரு துண்டு, வெல்லம் ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் எட்டு, உப்பு தேவைக்கேற்ப, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, பெருங்காயப் பொடி ஒரு டீஸ்பூன்.


வேப்பிலைக்கட்டி எனும் நாரத்தை இலைப்பொடி:

தனி நாரத்தை இலை, பறித்துக் கழுவிக் காயவைத்து ஆய்ந்தது, இரண்டு கிண்ணம், எலுமிச்சை இலை இரண்டு கிண்ணம், மிளகாய் வற்றல், உப்பு, ஓமம் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் பொடி செய்தது ஒரு டீஸ்பூன். மேற்சொன்ன சாமான்களை லேசாக வாணலிச் சூட்டில் பிரட்டிக்கொண்டு நன்கு இடித்து வைக்கலாம். இடிக்க முடியாதவர்கள் மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.


வாங்கிபாத் பொடி:

மிளகாய் வற்றல் 50 கிராம், தனியா 50 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு 50 கிராம் சரிசமமாக. லவங்கப்பட்டை ஒரு துண்டு, கிராம்பு இரண்டு, பெருங்காயம் பொரித்துப் பொடித்தது ஒரு டீஸ்பூன், கொப்பரை ஒரு மூடி துருவிக்கொள்ளவும் அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை ஒரு பிடி. உப்பு தேவையான அளவு.


பட்டை, லவங்கம், கொப்பரை தவிர மேற்சொன்ன சாமான்களைத் திட்டமாக எண்ணெய் ஊற்றித் தனித்தனியாகப் போட்டு வறுத்துக்கொள்ளவும். லவங்கப்பட்டையையும், லவங்கத்தையும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். கொப்பரை/தேங்காய் துருவலையும் வெறும் வாணலியில் வறுக்கவும். எல்லாவற்றையும் நன்கு ஆறவிட்டுப் பின் மிக்சியில் பொடி செய்து வைக்கவும். கத்தரிக்காய்ச் சாதம் செய்கையில் கத்தரிக்காயை வதக்கிச் சேர்த்தபின்னர் இந்தப் பொடியைப் போட்டுக் கலக்கவும்.


தோசை, இட்லிக்கு மிளகாய்ப்பொடி:

மிளகாய் வற்றல் 100 கிராம், கடலைப்பருப்பு ஒரு கிண்ணம், உளுத்தம்பருப்பு இரண்டு கிண்ணம், பெருங்காயம் ஒரு துண்டு, கறுப்பு எள் 50 கிராம், வெல்லம் தேவையானால் ஒரு டேபிள் ஸ்பூன் பொடி செய்து, உப்பு தேவைக்கு ஏற்ப.


அடுப்பில் வாணலியைப் போட்டு வெறும் வாணலியில் கறுப்பு எள்ளையும் , உப்பையும் வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போன்றவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.

பெருங்காயத்தைப் பொரித்துக்கொள்ளவும். மிக்சி ஜாரில் முதலில் மிளகாய்வற்றல், உப்பு, பெருங்காயத் துண்டு, வெல்லம் ஆகியவற்றைப் போட்டுப் பொடிக்கவும். பின்னர் பருப்பு வகைகளைச் சேர்த்துப் பொடித்துக்கொண்டு கடைசியில் எள்ளையும் போட்டுப் பொடிக்கவும். நன்கு கலந்து வைக்கவும். இட்லி, தோசை போன்றவற்றிற்குச் சட்னி செய்யாமல் இதைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

--Geetha Sambasivam 15:32, 25 செப்டெம்பர் 2011 (UTC)

  

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=பொடி_வகைகள்&oldid=9013" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 14 டிசம்பர் 2011, 13:04 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 7,308 முறைகள் அணுகப்பட்டது.