பொங்கலோ பொங்கல் 2மரபு விக்கி இருந்துபொங்கல் கொண்டாடுவது எப்போவுமே சிறப்பான ஒரு பண்டிகையாக இருந்து வருகிறது. உழவுத் தொழிலைச் சிறப்பித்து மட்டுமில்லாமல் அதற்கு உதவும் இயற்கை வளங்களையும் கொண்டாடும் ஒரு பண்டிகை இது. பொங்கலுக்கு எப்போவுமே சில வீடுகளில் புதுப் பானை வாங்குவாங்க. இன்னும் சிலர் இருக்கும் பானையையே சுத்தம் செய்து அலங்கரித்து வைப்பார்கள். மண்பானையிலும் பொங்கல் வைப்பது வழக்கமாய் இன்றளவும் இருந்து வருகின்றது. பொதுவாக அடுப்பு மூட்டி சூரியனைப் பார்த்த வண்ணமே பெரும்பாலோர் பொங்கல் வைக்கின்றனர். எங்க வீட்டில் பூஜை மட்டும் வீட்டுக் கிணற்றடியிலோ அல்லது முற்றம் இருந்தால் முற்றத்திலோ தான்.
பொங்கல் வைக்க நேரமும் பார்க்கிறதுண்டு. எங்க வீடுகளிலேயும், உறவினர் வீடுகளிலேயும், தை மாதம் பிறக்கும் நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டு அந்த நேரமே பொங்கல் வைத்து வருகின்றோம். சில சமயம் அது இரவு 9-00 மணிக்குக் கூட வரும். அன்று பூராவும் சாப்பிடாமல் இருக்கும்படி ஆயிடும். இந்த வருஷம் நல்லவேளையாக் காலை 8--30க்கு அப்புறம் தை மாதம் பிறந்துவிடுவதால், 9-00 மணிக்குப் பின்னர் பொங்கல் வைக்க நல்லவேளை என்று சொல்லப் பட்டது. அதுக்கு முன்னாலேயே சமையலை முடிச்சு வைத்துவிட்டுப் பின்னர் பொங்கல் வைத்து, சூரிய பூஜை செய்து முடித்துச் சாப்பிட 12-00 மணிக்கு மேலே ஆகி விட்டது.
பொங்கல் பானையை நல்லாத் தேய்த்துச் சுத்தம் செய்து சந்தனம், மஞ்சள், குங்குமம் தடவி, ஸ்வாமி அலமாரி இருந்தால் அதுக்கு முன்னால் கோலம் போட்டுப் பானையை வைத்து, மஞ்சள் கொத்து கட்டி, இஞ்சிக் கொத்து வழக்கம் உண்டானால் அதுவும் கட்டிட்டு, பின்னர் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து "பொங்கலோ பொங்கல்" சொல்லச் சொல்லிவிட்டு எல்லார் கையாலேயும் பாலைப் பொங்கல் பானைக்குள் விடச் சொல்லவேண்டும். சின்ன வயசில் போட்டி போட்டுக் கொண்டு தெருவுக்கே கேட்கிறாப் போல் பொங்கலோ பொங்கல் என்று நானும், என் தம்பியும் கத்துவோம். வழக்கம்போல் தம்பிக்குப் பாராட்டும், எனக்குத் திட்டும் பரிசாய்க் கிடைக்கும். கவலையே பட்டதில்லை. அது ஒரு காலம். ம்ம்ம்ம்ம் :( பின்னர் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி, வறுத்து வைத்த பாசிப் பருப்பை அதில் போட்டுப் பருப்புக் கரைந்ததும், வறுத்த பச்சரிசியை நன்றாய்க் களைந்து அதிலேயே போடவேண்டும். எங்க அம்மா வீடுகளிலே பொங்கல் கரைய விட தண்ணீர் அதிகம் சேர்ப்பது இல்லை. பாலிலேயே கரைய விடுவோம். அவரவர் வசதிக்கேற்ற மாதிரிச் செய்து கொள்ளலாம். ஒரு ஆழாக்கு (200 கிராம் அரிசி என்றால் குறைந்தது 50கிராமிலிருந்து 100 கிராம் பருப்பு ஆகும். ருசியைப் பொறுத்து) அதற்கு அரை லிட்டர் பாலாவது தேவைப்படும். பத்தலைனா தண்ணீர் சேர்த்துக்கலாம். நான் ஒரு மு.ஜா. மு. அக்காவாச்சே. ஒரு வாரம் முன்னாலே இருந்தே அரை கப் பாலாகச் சேர்த்து, சேர்த்து எடுத்துக் காய்ச்சி வச்சிருந்தேன். முதலில் புதுப்பாலைக் கொஞ்சம் விட்டுப் பருப்பைக் கரைய விட்ட பின்னர் காய்ச்சி வச்சிருந்த பாலையும் சேர்த்துக் கொண்டேன்.
வெல்லம் அவங்க அவங்க ருசிக்கு ஏற்றாற்போல் சேர்த்துக் கொள்ளவும். எப்படியும் அரை கிலோ வெல்லத்துக்கு மேல் வேண்டும் மேலே சொன்ன அளவு அரிசி, பருப்புக்கு. வெல்லம் சேர்ந்து வெல்ல வாசனை போகப்பொங்கல் கொதித்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, திராட்சை, தேங்காய் பல், பல்லாய்க் கீறிப் போட்டு வறுத்துப்பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காய், ஜாதிக்காய் வாசனைக்கு போடவும். வீட்டு முற்றம், கிணற்றடி, அடுக்குமாடிக் குடியிருப்பென்றால் சூரிய வெளிச்சம் படும் இடத்தில் சுத்தம் செய்து சூரியக் கோலம் போடவும். சிலர் வீட்டில் சந்திரனும் போடுவதுண்டு. சூரியன் வடக்கே நகருவதால் சூரியக் கோலமும் கொஞ்சம் வடக்கே போடணும்னு சொல்லுவாங்க. பின்னர் மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, வாழைப்பழம், கரும்பு, அரிசி, வெல்லம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சூடம், சாம்பிராணி, விளக்கு, மஞ்சள் பொடி, அட்சதை(மஞ்சள் தூளில் கலந்த அரிசி அட்சதை), தட்டு, கிண்ணங்கள், பசும்பால், தீப ஆராதனைத் தட்டுகள்,பூக்கள், மாலை கிடைத்தால் மாலை போன்றவற்றோடு உட்கார்ந்து முதலில் பிள்ளையார் பூஜை செய்து முடித்துவிட்டுப் பின்னர் சூரிய வழிபாடு செய்யவேண்டும். கற்பூர தீப ஆராதனைக்கு முன்னர் பொங்கலை செய்த பானையோடு கொண்டு வைத்து, கூடவே சாதம், பருப்பு, காய்வகைகள் போன்றவையும் வைத்து சூரியனுக்கு நிவேதனம் செய்யவேண்டும். பின்னர் கற்பூர தீபாராதனை செய்து விட்டுப் பின்னர் வீட்டில் ஸ்வாமி அலமாரியில் உள்ள தினமும் நிவேதனம் செய்யும் அனைவருக்கும் செய்துவிட்டுப் பின்னர் காக்கைக்குப் பொங்கல், சாதம், பருப்பு கொடுத்துவிட்டுப் பின்னர் விநியோகம் செய்ய வேண்டிய உறவினர், நண்பர்கள் இருந்தால் கொடுத்துவிட்டுச் சாப்பிடலாம்.
எல்லாத்தையும் விட முக்கியமானது இன்று பொங்கல் செய்யும் பானையையோ, அல்லது சாதம் வைக்கும் பானையையோ காலி செய்து இன்றே தேய்த்துச் சுத்தம் செய்யக் கூடாது என்பது ஐதீகம். பானை இன்று நிறைந்து இருந்தால் வருடம் பூராவும் இதே போல் நிறைந்து இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை! அடுத்த நாள் மாட்டுப் பொங்கல், கனுப் பண்டிகை இரண்டும் சேர்ந்து வருகின்றது. அது பற்றிப் பார்ப்போம். அடுத்த நாள் தை மாதம் இரண்டாம் தேதி மாட்டுப் பொங்கல், மற்றும் கணுப்பண்டிகை. இந்தக் கணுப்பண்டிகை காலையிலேயே முடிஞ்சுடும் என்பதால் அதை முதல்லே பார்ப்போமா?? கணுப்பிடி வைப்பது என்பது பெண்கள் மட்டுமே செய்யும் ஒன்று. தங்கள் உடன்பிறந்த சகோதரர்களின் நலனுக்காகச் செய்யப் படும் ஒன்று.தங்களோடு கூடப் பிறந்தவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்விலே சுகம் அடையவேண்டும் என வேண்டிக் கொண்டு செய்வது. சகோதரர்களே இல்லை என்றாலும் மற்ற ஆண்களை சகோதரர்களாக நினைத்துக் கொண்டும், சகோதரர்கள் இருந்தாலும், இன்னும் மற்ற ஆண்களை சகோதரர்களாக நினைத்துக் கொண்டும் செய்யலாம். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்குப் பிறந்த வீட்டுச் சீராகப் பணமோ, துணியோ கொடுப்பதுண்டு. தாய் வீடு பக்கத்திலேயோ அல்லது உள்ளூரிலேயோ இருந்தால் மதியம் சாப்பாட்டுக்கு சகோதரியை அங்கே அழைப்பதும் உண்டு.
மாட்டுப் பொங்கல் என்னும் கணுவன்று காலையில் முதல்நாள் சர்க்கரைப்பொங்கல் வைத்த பானையில் கட்டி இருக்கும் மஞ்சள் கிழங்கை எடுத்துக் கழுவி, ஸ்வாமி அலமாரியில் வைத்துவிட்டு, கை, கால் சுத்தம் செய்துகொண்டு, தானே அந்த மஞ்சள் கிழங்கை நுனியைக் கீறி விட்டுத் தன் நெற்றியிலும், கன்னத்திலும், கழுத்திலும் மூன்று முறை கீறிக் கொள்ளவேண்டும். பிறகு வீட்டில் உள்ள தங்களை விட வயதில் மூத்த பெண்மணிகளிடமும், அக்கம்பக்கத்தில் யாரானும் பெண்கள் அப்படி இருந்தால் அவர்களிடமும் கீறிக் கொள்ளலாம். முதல் நாள் செய்து மீந்திருக்கும் சர்க்கரைப் பொங்கல், மற்றும் அதற்கெனத் தயார் செய்த குழம்பு, எடுத்துக் கொள்ளவேண்டும். முதல் நாள் சாதத்தில்,தயிர் விட்டு, உப்பும் போட்டுப் பிசைந்து கொள்ள வேண்டும். இதை மஞ்சள் சாதம், குங்கும சாதம், தயிர்சாதம் என மூன்று வகையில் ஆக்கிக் கொள்ளவேண்டும். மஞ்சள் சாதம் மஞ்சளுக்கு வீட்டில் இருக்கும் பச்சை மஞ்சள் கிழங்கையே அரைத்துக் கொள்வது முன்பெல்லாம் வழக்கம். இப்போ யார் அம்மியிலெல்லாம் அரைக்கிறாங்க! அதனால் மஞ்சள் பொடியே கலந்து கொள்ளலாம். குங்குமம் கலந்து கொள்ளலாம். ரொம்பக் கலந்தால் அப்புறமாக் காக்காயெல்லாம் பயந்துக்கும்.
முன்பெல்லாம் நதிக்கரையில் வைப்பாங்களாம். அப்புறமா வீட்டு மொட்டை மாடியிலே வைப்பாங்க. இப்போ நதிகளே இல்லை, கரைக்கு எங்கே போறது? நம்ம வீட்டிலே மொட்டை மாடி இருக்கு. அதனால் அங்கே கணுப்பிடி வைக்கும் இடத்தைப்பெருக்கிச் சுத்தம் செய்து கோலம் போட்டு, செம்மண் இட்டுத் தயாராய் வைக்கணும். மஞ்சள் இலைகள் தான் போடணும் கணுப்பிடிக்கு. வெங்கலப் பானையில் கட்டிய மஞ்சள் கொத்தில் இலை எடுக்கிறாப் போல் இருந்தால் நல்லது. இல்லைனா வேறே இலை வைச்சுக்கணும். விலைக்கு வாங்கறவங்க இதை எல்லாம் எண்ணிப் பார்த்துட்டு மஞ்சள் கொத்து வாங்கணும். நாம விலைக்கு வாங்கற வழக்கமே இல்லை. இந்த சாதங்கள் தவிர, வெற்றிலை, பாக்கு, பழம்,தேங்காய், மஞ்சள், கரும்புத் துண்டுகள், சிலர் வீட்டில் தீப ஆராதனை காட்டும் வழக்கம் இருந்தால் அது, ஆரத்தி காட்டும் வழக்கம் இருந்தால் அதுவும் எடுத்துக் கொண்டு, ராகு காலம், எமகண்டம் இல்லாமல் பார்த்து கணுப்பிடி வைக்கணும். கணுப்பிடி வைச்சுட்டு உடனேயே குளிக்கணும்னு சொல்லுவாங்க. அன்று சமையலில் வித, விதமான சித்திரான்னங்கள் செய்வாங்க. சில வீடுகளில் துவையல், அப்பளம், பொடி இடம் பெறும். எங்க வீட்டிலே அது தான்! :(
நோவன செய்யன்மின் கொடிவன கேண்மின்
பதினைந்து வருடங்களே உயிர்வாழும் ஒரு பசுவின் பால் அதன் கன்றுக்குட்டிகள் வளர்ந்த பின்னும் தரும் பால் குறைந்த பட்சமாய் ஒரு நாளைக்கு 16,000 நபர்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்வதாய் ஓர் ஆய்வு கூறுகின்றது. ஆகையால் மாடு என்ற சொல்லுக்குப் பொருளே செல்வம் என்பது ஆகும் என்பதை நினைவு கூர்ந்து மாட்டுப் பொங்கலைக் கொண்டாடவேண்டும். மாட்டுப் பொங்கல் வரப் போகின்றது என்பதற்கு அத்தாட்சியாக முன்பெல்லாம் மாட்டின் கொம்புகளுக்கு பொங்கலுக்குப் பத்து நாட்கள் முன்பிருந்தே வர்ணம் அடிப்பார்கள். வசதி உள்ளவர்கள் கொம்பைச் சீவி, தங்கக் கொப்பி, பித்தளைக் கொப்பி, வெள்ளிக் கொப்பி போடுவதும் உண்டு. கழுத்தில் சலங்கை மணியும் கட்டுவதுண்டு. இங்கே வர மாடெல்லாம் மாட்டுப் பொங்கலன்னிக்குக் கூட அழுக்காவே தான் இருக்கு என்பது சோகமான விஷயம். மதுரையிலே அதிகம் பசுமாடுகள் தான் பார்த்திருக்கேன். எங்கோ ஒண்ணு, இரண்டு எருமை மாடு அப்போ பார்த்தால் அதிகம். மாட்டுப் பொங்கலன்னிக்குச் சாயங்காலமா ஊரிலே இருக்கும் அனைத்து மாடுகளும், சந்தைப் பேட்டையிலேயா, சந்தையிலேயா நினைவில்லை, அங்கிருந்து கிளம்பி நாலு மாசிவீதிகளும் வரும். பார்க்கப் போவோம். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்குச் சில மாடுகள் போகும். ரேக்ளா வண்டிகள் போட்டி நடக்கும். மாசி வீதியில் போட்டி எல்லாம் போடாட்டியும், சில ரேக்ளா வண்டிகள் ஒண்ணை இன்னொண்ணு துரத்திட்டுப் போகும். இதை அங்கே மாடு விரட்டல்" என்ற பெயரில் சொல்லுவாங்க.
.மாமனார் வீட்டிலே முதல் பொங்கல் போது பார்த்தேன், மதுரையிலே கொண்டாடறதுக்கும் அங்கேயும் வித்தியாசம் ஒண்ணும் இல்லை. அங்கே மாடுகள் கொட்டில் நிறைய இருந்ததால் ஒரே அமர்க்களமா இருந்தது. மதுரையிலே வீட்டிலே மாடு எல்லாம் வச்சுக்க முடியாது. உழவு மாடுகள், வண்டி மாடுகள், எருமை, பசு கறவை மாடுகள்னு இருந்தன. மாமனாரோடு கூடவே ஆட்களும் சேர்ந்து வந்து சுத்தம் செய்து, மாடுங்களையும் குளத்திற்கு அழைத்துப் போய் சுத்தம் செய்து அலங்கரித்துக் கொல்லையிலே அல்லது மாட்டுக் கொட்டாயிலே பூஜை பெரிசாய் நடக்கும். சாம்பிராணி, தீபாராதனை போது வெளிச்சம் பார்த்து மாடுங்க மிரளும். பிறகு மாடுங்களை அவிழ்த்து ஒண்ணொண்ணா விரட்டி விடுவாங்க. ஊரை ஒரு சுத்து சுத்திட்டுத் தானே கொட்டிலுக்கு வந்துடும். எப்போ வரும்னு தெரியாது. அங்கே இதை "மாடு மிரட்டல்"னு சொல்லுவாங்க. நிஜமாவே மாடுங்க மிரண்டும் போகும். இம்மாதிரி ஒரு நாலைந்து பொங்கல் மாமனார் இருந்த கிராமத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாடி உள்ளோம். . இதைத் தவிர ஊர்கூடிப் பொங்கல் வைத்து, மாடுகளுக்குப் படைத்து, பெரிய அளவில் வழிபாடுகள் செய்வதும் உண்டு. தென் மாவட்டங்களின் கிராமங்களில் இப்போதும் அம்மாதிரியே கொண்டாடப் படுகின்றது. அப்போது மாட்டுச் சொந்தக்காரர்களும், மாட்டைப் பாதுகாப்பவர்களும் தவிர, பெண்கள் அங்கே திடலுக்குச் செல்வதில்லை என்றும் இந்த வழிபாடு முடிய இரவு மூன்று மணியாகும் என்றும், மறுநாளே ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் சொல்கின்றனர்.
--Geetha Sambasivam 07:50, 25 ஜூலை 2011 (UTC)
|