பொங்கலோ பொங்கல் ! 1மரபு விக்கி இருந்துதைப்பொங்கலுக்கும் கிருஷ்ணருக்கும் சம்பந்தம் உண்டா என்றால் உண்டு. கிருஷ்ணரின் மகன் ஆன சாம்பன் என்பவன் துர்வாச மஹரிஷி வந்தபோது அவரைக் கேலி பேசியதால் அவன் உடல் நலம் கெட்டுப் போய் தோல் நோயால் பீடிக்கப் பட சாபம் கிடைத்தது. அந்த சாபத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் கிருஷ்ணரும், துர்வாசரும், அவனை சூரியனைப் பூஜிக்கச் சொல்கின்றனர். சந்திரபாகா நதிக்கரையில் சூரியனைப் பூஜிக்கின்றான் சாம்பன் அந்த நாள் தான் மகர சங்கராந்தி எனச் சொல்லப் படுகின்றது. முனிவர்களின் பத்தினிகள் அங்கே நதிக்கரையில் ஒன்று கூடி சூரிய பகவானை வேண்டி விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டு வந்தார்கள். சாபம் நீங்க நதிக்கரைக்குச் சென்ற சாம்பன் தானும் அதுபோல் விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்கின்றான். அதுவே மகர சங்கராந்தி எனச் சொல்லப் படுகின்றது.
இந்தப் பண்டிகை இந்தியா பூராவும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப் படுகின்றது. அஸ்ஸாம்,மணிப்பூர் போன்ற இடங்களில் "போகாலி பிகு" என்ற பெயரில் இந்த விழா அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் "லோகிரி" என்று அழைக்கப் படுகின்றது. குஜராத், மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் "மகர சங்கராந்தி" என்ற பெயரில் அழைக்கப் படுவதுடன் அன்று எள்ளுடன் சேர்த்த இனிப்புகளையும் பரிமாறிக் கொள்வார்கள். பஞ்சாப், ஹரியானாவில் சோளப்பொரி, அரிசி போன்றவற்றில் இனிப்புச் சேர்த்து நெருப்பில் இட்டு ஆடிப் பாடுவார்கள். காஷ்மீரத்தில் இந்நாளில் பருப்பு, அரிசி, நெய் கலந்த கிச்சடி செய்து அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டாடுகின்றனர்.
இலங்கையில் மார்கழிமாதம் முழுதும் வீட்டில் கோலம் போடும்போது சாணப் பிள்ளையார் பிடித்து வைத்து, அவை மொத்தத்தையும் சேர்த்து பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையாரை வழிபட்டுப் பிள்ளையார் பொங்கல் எனக் கொண்டாடுவார்கள் எனத் தெரிய வருகின்றது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சங்கராந்தி அன்று புண்ணிய கால ஸ்நானம் என்னும் வழிபாடு முக்கியமாய்க் கருதப் படுகின்றது. அன்று கங்கை, யமுனை, நர்மதை போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவதைச் சிறப்பாய்க் கருதுகின்றனர். நம் மாட்டுப் பொங்கல் போன்று அங்கேயும் கோபூஜை செய்வதுண்டு. அவ்வளவு ஏன்?? அமெரிக்கா என்ற பொதுவான பெயரில் அழைக்கப் படும் யு.எஸ்.ஸிலும் நவம்பர் மாதம் அறுவடை முடியும் நேரம், அந்த வருஷத்து விளையும் காய், கனிகளை வைத்து "Thanks Giving Day" என்று கொண்டாடுகின்றனர்.
கிருஷ்ணாவதாரத்தில் சூரிய வழிபாடு நதிக்கரையில் செய்யப் பட்டதாய்ச் சொல்லப் பட்டாலும், அதற்கும் முன்னரே ராமாயண காலத்தில் ஸ்ரீராமர், ராவணனை வெல்வதற்காக அகத்தியரின் அறிவுரைப்படி ஆதித்ய ஹ்ருதயம் படித்து சூரியனுக்காக விரதம் இருந்து, பின்னர் போருக்குப் புறப்பட்டதாய் வால்மீகி சொல்கின்றார். சூரியனை வழிபடுவது என்பது தொன்று தொட்டு இருந்து வந்திருக்கும் ஒரு வழிபாடு ஆகும். நம் கண்ணுக்கு அன்றாடம் தெரியும் நிதரிசனக் கடவுள் சூரியனே ஆகும். தென் திசையில் பயணித்துக் கொண்டிருந்த சூரியன் தன் பயணத்தை வடதிசைக்கு மாற்றும் நாளே உத்தராயன புண்ணியகாலம் என்றழைக்கப் படுகின்றது. இந்த வடதிசைக்கு சூரியன் மாறும் நாளே தை மாதம் முதல் தேதியன்று நம் தமிழ்நாட்டில் பொங்கலாகக் கொண்டாடப் படுகின்றது. சூரியன் இல்லையேல் மழையும் இல்லை, மண் வளமும் இல்லை, தட்பமும், வெப்பமும் இணைந்த சூழலில் தான், பயிர், பச்சைகள் செழிப்பாய் வளரவும் முடியும். ஆகவே விஞ்ஞான ரீதியாகவும் சூரிய ஒளி இன்றி எதுவும் செய்ய முடியாதல்லவா? அதற்கான நன்றி நவிலலே பொங்கல் என்றும் கூறலாம்.
போகி அன்று பழையன கழித்து, புதியன வாங்குவதையும், வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்தும் கொண்டாடுகின்றோம். இந்தப் பொருட்களை எரிக்கும்போது சிறு குழந்தைகள் "போகி மேளம்" என்றதொரு சிறு கருவியால் கொட்டி ஆடிப் பாடிக் குதிப்பார்கள். எங்க தெருவிலே இன்னிக்குக் காலை 3 மணியிலிருந்தே போகி கொட்ட ஆரம்பிச்சு, ஒருவழியா ஆறு மணியோட முடிஞ்சது. இதற்கான காரணம் என்ன என்று சொல்லுவதென்றால் அதற்கும் கண்ணனே வந்துடறான் முந்திக் கொண்டு. இந்திரனுக்கு மற்றொரு பெயர் போகி என்பதாகும். மழையைப் பொழிய வைக்க இந்திரனை வணங்குவதுண்டு. மழை பொழிய வைக்கும் இந்திரனுக்கு நன்றியாகவே தை முதல்நாள் அறுவடை ஆகும் பயிர்களை படையலாக வைத்து வணங்கும் வழக்கம் இருந்து வந்ததாய்த் தெரிய வருகின்றது. ஸ்ரீ கிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ந்து வந்தபோது இம்மாதிரி தை மாதம் இந்திரனுக்கு விழா எடுக்கும் நாள் வந்தபோது கிருஷ்ணர் கோகுலத்து மக்களை இந்த வழிபாட்டை நியாயமாய் கோவர்த்தனகிரிக்கும், அவற்றை எல்லாம் படைத்துக் காத்து ரட்சிக்கும் வாசுதேவன் ஆகிய ஸ்ரீமந்நாராயணனுக்கே செய்யவேண்டும் என்றும், ஆகையால் அவனின் அம்சம் ஆன சூரியநாராயணனுக்கு இந்த வழிபாட்டைச் செய்யும்படிக்கும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
ஆத்திரம் அடைந்த இந்திரன் கோகுலத்திலும், சுற்று வட்டாரத்தில் இதுவரை காணாத அளவுக்குப் பேய் மழையாகப் பொழிய, கோகுலமே நிலை குலைந்தது. கண்ணனோ சற்றும் கலங்காமல் கோவர்த்தனகிரியைக் குடையாய்ப் பிடித்து மக்களைக் காப்பாற்றினார். கோகுலத்தின் ஒரு ஈ, எறும்புக்குக் கூட துன்பம் நேராமல் பாதுகாத்தார். (இது பற்றி பின்னர் விரிவாய்ப் பார்ப்போம்). இந்திரன் வெட்கம் கொண்டு ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைய அவர் சங்கராந்திக்கு முதல்நாளை இந்திரன் பெயரால் போகிப் பண்டிகை எனக் கொண்டாடுவார்கள் என அவனை சமாதானம் செய்தாராம்.காளிங்க மடுவில் குதித்துக் கண்ணன் காளிங்கனை வதம் செய்தபோதும் இந்த மாதிரி ஒரு போகி நாள் என்றும், அன்று கண்ணனுக்குக் காளிங்கனின் விஷம் ஏறாதபடிக்கு ஆயர்பாடிச் சிறுவர்கள் தீ மூட்டி, பறை கொட்டி இரவு முழுதும் தாங்களும் விழித்திருந்து, கண்ணனும் தூங்காமல் விழித்திருக்கும்படிச் செய்தனர் என்றும் அதன் காரணமாகவே போகியன்று பறை கொட்டும் வழக்கம் ஏற்பட்டதாயும் தெரிய வருகின்றது.
இனி பொங்கல் பற்றிய விபரங்களை அடுத்துப் பார்ப்போம்!
--Geetha Sambasivam 07:41, 25 ஜூலை 2011 (UTC)
|