பூம்புகாரில் அடிக்கடல் தொல்லியல் புலனாய்வுகள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி


பூம்புகார், சங்க காலத்தின் பெரும்புகழ்ப் போற்றலுக்கு உரிய சோழர்களின் நாடறிந்த தலைநகராயும் துறைமுக நகராயும் திகழ்ந்து காவேரி ஆறு வங்கக் கடலுடன் கூடும் இடத்தில் (இற்றை நாகப்பட்டின மாவட்டத்தில்) சூழமைவு கொண்டுள்ளது. இந்நகர் காவிரிக்கு கரையின் இரு புறத்தும் நான்கு காவதம் வரையான நீளத்திற்கு தன் சிறகுகளைப் பரப்பி இருந்தது என்று நம்பப்படுகின்றது.


இந்நகருக்கு கல்வெட்டு மற்றும் இலக்கிய மேற்கோள்கள் உள்ளன. கி.மு. 2 ஆம் நூற்றாண்டினதாக நாள்குறிக்கத்தக்க சாஞ்சிக்கு அருகே உள்ள பார்அட்டு (Barhut) கல்வெட்டு ஒன்றில் இந்நகரத்தின் சோமா என்ற பௌத்தத் துறவாட்டி ஒருத்தி ஒரு குவிமாடத்தின் (stupa) அடைப்பிற்காக பலகக்கல் ஒன்றை நன்கொடையாக ஈந்தாள் என்று சொல்லப்பட்டு உள்ளது.


பண்டை நாள்களில் பூம்புகார் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டு உள்ளது இதாவது, புகார், காவிரிப்பூம்பட்டினம், காகந்தி, சம்பாபதி, சோழப்பட்டினம் மற்றும் காவேரிப் பண்டப்பெருநிலையம் (Kaberis Emporium) என்று.


சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியனவும், பிராகிருத ஆக்கங்களான மிலிந்தபனகா, அபிதம்மவதரம், புதோஹவகட்டகதா, பௌத்த சாதகங்கள் தவிர அயலார் குறிப்புகளான தாலமியின் நிலநூல், எரித்திரியக் கடலைச் சுற்றிச்சூழ்ந்த கடற்செலவு குறித்த மொட்டைச் செய்திகள் மற்றும் பிளைனியின் ஆக்கங்கள் போன்றனவும் இந்நகரின் தொல்பழமை குறித்தும், இந்நகர் மீதான மக்களிடையான மதிப்பு குறித்தும் ஒரு ஒளிவெள்ளத்தை எறிகின்றன.


பூம்புகார் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், நாளங்காடி என மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு இருந்தது. மருவூர்ப்பாக்கம் கடற்கரை மீதும் அதனை ஒட்டியும், பட்டினப்பாக்கம் மேற்குப் பக்கத்திலும், அதே நேரத்தே நாளங்காடி முன்னை இரு வட்டாரங்களுக்கு நடுவேயும் என இடம் கொண்டு இருந்தன.


மருவூர்ப்பாக்கம் அயல்நாட்டு வணிகரது குடியிருப்புகள், மணச்சரக்குகள் (spices), நறுமணப் பொருள்கள் (perfumes), மலர்கள் ஆகியன விற்கும் விற்பனையாளர்கள், பருத்தி பட்டு ஆடைகளை நெய்யும் நெசவாளர்கள், அருமணிகள் (precious stones) மற்றும் இறைச்சிவடிநீர் (gravy) விற்கும் கடைகளைக் கொண்ட தெருக்கள் தவிர கைவினைஞர்கள், இசைவாணர்கள், சிற்பிகள் மற்றும் வலைஞர்களால் அணிசெய்யப்பட்டுக் கிடந்ததாக வண்ணிக்கப்பட்டு உள்ளது.


பட்டினப்பாக்கத்தில் சிவன், முருகன், விண்ணன் முதலாயோர் கோவில்கள், அரண்மனைகள், அரசகுடி மரபினர், அமைச்சர்கள், படை அதிகாரிகள், செல்வச் சீர்மையுள்ள வணிகர்கள், பெரு நிலக்கிழார்கள் தவிர நடனமாடிகள் ஆகியோர் உறையும் பெரிய தெருக்கள் ஆகியன இடம்கொண்டிருந்தன.


நாளங்காடி மருவூர்ப்பாக்கத்திற்கும் பட்டினப்பாக்கத்திற்கும் இடையே ஒரு இயற்கையான சோலையில் இடங்கொண்டிருந்தது. இது இரு பகுதி குடியிருப்பாளருக்கும் எளிதில் அணுகத்தக்கதாய் இருந்தது.


மேலே குறித்துச்சொல்லப் பெற்ற பிரிவுகள் தவிர அங்கே இலவந்திகைச் சோலை, உய்யவனம், கவேரவனம், சம்பாபதிவனம் மற்றும் உவவனம் என்று அழைக்கப்பட்ட எண்ணற்றச் சோலைகளும் தோட்டங்களும் இருந்தன. வெள்ளிடைமன்றம், இளஞ்சிமீனபூமி மற்றும் பாவைமன்றம் எனப்படும் மன்றங்களும் அங்கிருந்தன.


அங்கு நோக்கர்களையும் (visitors) மகளிரையும் வரவேற்கின்ற தோரணவாயில் எனப்படும் மேற்புடைப்பு நுழைவாயில்களும், முத்துப் பந்தல் எனப்படும் முத்துக் கொட்டகைகளும் இருந்தன. இந்நகர் இளஞ்சேட் சென்னி, நளங்கிள்ளி, கரிகால்வளவன் என அடுத்தடுத்து அரசப்பட்டம் ஏற்ற சோழ அரசர்களால் ஆளப்பட்டு வந்ததாக நம்பப்படுகின்றது. பின்வரும் தமிழ்ப் புலவர்கள் இந்நகரைப் பிறந்தகமாகக் கொண்டவர்கள். அவருள் அடங்குவோர் காரிக்கண்ணனார், சேந்தன்கண்ணனார் மற்றும் மிகப் பலர் ஆவர். இத்துறைமுக நகரம் சங்க இலக்கியத்தில் தெள்ளிதாக வண்ணிக்கப்பட்டு உள்ளது. இது வாணிகச்சரக்கை சரியாக அளவிட்டு முறையாகச் சோழ முத்திரையிட்டு ஏற்றுமதி செய்யும் ஒரு சுறுசுறுப்பான துறைமுக நகரம். இதையொப்பவே, வட பகுதிகளினின்றும் அதேபோல் தெனகிழக்கு ஆசிய நாடுகளினின்றும் வாணிகச்சரக்குகள் (merchandise) இந்நகரில் குவியலுற்றன. கங்கைத்துறை வட்டாரம், ஈழம், சாவா ஆகிய இடங்களிலிருந்தும் இடையிடையே வந்து சேர்ந்த கப்பல்கள் மணச்சரக்குகள் முதலாய இறக்குமதிகளை ஏந்திவந்தன என்பதுவும் திரட்டப்பட்டு உள்ளது. இந்நகருக்கு வட இந்தியாவில் இருந்து, குறிப்பாக மராட்டியத்தில் இருந்து கலைஞர்களும், கட்டடக்கலைஞர்களும் கோவில்களையும் அரண்மனைகளையும், கட்டடங்களையும் பெருமனைகளையும் உருவாக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டனர் என்பதை நோக்குவதற்கு ஆர்வமாகவே உள்ளது.


அத்தகையதொரு வியப்பார்ந்த, பெருஞ்சிறப்புள்ள நகரம் இயற்கைப் பேரிடர் காரணமாக அடிக்கடலில் அமிழ்ந்துப் போய்விட்டதாகச் சொல்லப்படுகின்றது, அதோடு இந்தப் பேரழிவு சங்க இலக்கிய ஆக்கங்களில் அடிக்கடி குறித்துச்சொல்லப்பெற்று உள்ளது.


இருந்தபோதிலும், முழுவதுமாக நகரம் அமிழ்ந்துவிடவில்லை ஆனால் ஒரு பகுதி மட்டுமே கடலால் விழுங்கப்பட்டு எஞ்சிய பகுதி கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரையிலும் பழுதுபடாமல் (intact) மிஞ்சிநின்றதற்கு கல்வெட்டுகள் மற்றும் அப்பர் போன்ற சைவக் குரவர் தேவாரங்களில் இருந்து சான்றுரைக்கப்பட்டுள்ளது. அதைமுன்னிட்டு, புகார் நகரம் தன் புகழை, பெருஞ்சிறப்பை, முன்மேலாண்மை நிலையை (predominant status) 7 ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட இருத்திக் கொண்டிருந்தது என்ற கருத்து திரட்டப்பட்டு உள்ளது.


இத்தளத்தில் கடற்கரை மேல் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் கிள்ளையூரில் துறைக்களத்தையும் (wharf) , வானகிரியில் நீர்த் தேக்கத்தையும், மேலையூரில் பௌத்த விகாரையின் மீந்த எச்சங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததானது கடற்கரையின் நிலத்தடியில் ஒரு செழுமையானத் துறைமுக நகரம் நிலைப்பட்டிருந்ததற்கு சான்றுறுதி ஏந்துகிறது என்பதையோ அல்லது ஒரு நகரின் துறைமுக ஓதநீர் பகுதி (tidal zone) அல்லது ஓதவிடைப் பகுதி (intertidal zone) இருந்ததையோ தள்ளுவதற்கு இயலாது.


இதுகாறும் பூம்புகாரில் செய்யப்பட்ட அடிக்கடல் புலனாய்வுகள்:


1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையும், கோவாவில் உள்ள தேசியப் பேராழியியல் நிறுவனமும் இணைந்து பூம்புகாரின் புறக்கடற்கரைக் (off shore) கடல் மேல் ஒரு முதனிலை அளக்கை (preliminary survey) மேற்கொள்ளப்பட்டது.


முதனிலைப் புலனாய்வுகள் பக்கத் தடவியறி ஒநீநெ (side scan sonar > [sonar - Sound Navigation and Ranging - ஒலிவழி-நீரடி நெடுக்கமீடு]), எதிரொலி எழுப்பி (Echo sounder), காந்தமானி (Magnetometer) ஆகியனவற்றை அமர்த்தி மேற்கொள்ளப்பட்டன. இப் புலனாய்வுகள் வரைவிகளில் (graphs) சில திடமானச் சான்றுகளைக் காட்டின. மூன்று முகடுகள் அல்லது கட்டமைப்பு போன்ற மேடுகள் 2 முதல் 3 மாத்திரி (meter) உயரத்திற்கு நீருக்கு அடியில் இடம் அறியப்பட்டன. அதைமுன்னிட்டு, கடலின் தரைப்பரப்பிற்கு மூழ்கிகளை (divers) அனுப்பி முனைப்பானதும் விரிவானதுமான துருவியகழ்தல்களை (explorations) மேற்கொள்வதென முடிவுகொள்ளப்பட்டது.


தமிழ்நாடு மாநில அரசிடமிருந்து நிதியும் ஒப்புதலும் பெற்ற பிறகு அடிக்கடல் துருவியகழ்தல்கள் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாள் தொடங்கின.


அப்பருவத்தின் போது பொருள்களையும், வேலைப்பாடமைந்த பொருள்களையும் (artifacts) முதலில் இடம்காண நிலப்பூதியல் அளக்கையும் (geophysical survey) மேற்கொள்ளப்பட்டது. இவ் அளக்கை வால்டெய்ரில் உள்ள தேசியப் பேராழியியல் நிறுவனத்தின் (NIO) வட்டார நடுவத்தில் இருந்து வந்த ஒரு அறிவியலாளர் குழுவால் நடத்தப்பட்டது. இந்த அளக்கைப் பணி நாலரை அயிரி மாத்திரி (km) கடல்நோக்கில் (seaward) 70 அடி ஆழத்தில் ஒரு கலமுடவைக் (shipwreck) கண்டறிந்தது. இந்த உடைந்த கலம் எண்ணிறைந்த ஈய வார்ப்புக்கட்டிகளை வெளிப்படுத்தியது. அவற்றுள் சில ஒரு பக்கத்தில் ஆங்கிலத்தில் W. Blakett என்றும், மறுபக்கத்திலும் 1971 அல்லது 1972 என்றும் பொறிப்புகளைத் தாங்கி இருந்தன என்பது இக்கலமுடைவு சற்றொப்ப 1971.- 1972 ஆம் ஆண்டுகளில் அல்லது அதற்கும் சற்றே பின்னீடாக நேர்ந்திருக்கலாம் என்பதைச் சுட்டுகின்றது.


மேலும், இந்த அளக்கை கடற்கரையில் இருந்து 200 முதல் 300 மாத்திரிகள் (meters) தள்ளி ஆழமிலாநீரின் அடிக்கடலில் ஒரு கட்டமைப்புத் தொடரணியை கண்டுபிடிக்க வழிகோளியது. காவேரி கடலோடு கூடும் இடத்திலும் ஒரு கட்டமைப்புத் தொகுப்பும், அதோடு மற்றொன்று கலங்கரைவிளக்கத்திற்கு முன்பாகவும் இடம்காணப்பட்டன. மூழ்கிகளால் அது கவனமாக ஆயப்பட்ட போது அக் கட்டமைப்பு கடற்படுக்கைக்கு ஒரு மாத்திரி அடியில் கடல்மணலால் முற்றாக மூடப்பட்டுக் கிடந்தது அறியப்பட்டது. ஆனால் ஓத மணல் (tidal sand) இடப்பெயர்வு காரணமாக, அங்கே தெளிவான காண்புநிலை (visibility) இருக்கவில்லை. இருந்தபோதிலும், சில மணற்கல் பலகைகளும், ஒரு செங்கல்லும் சில பானைச்சில்லுகளும் திரட்டப்பட்டன. இக் காண்டல்கள்(finds), கடற்கரைக்கு அருகமைந்த அடிக்கடலில் தொன்மையான வாழிடம் ஒன்று நிலைப்பட்டிருந்ததற்கு சான்று தாங்குகின்றன.


மீளவும் மேல்தொடர்ந்த அளக்கைகள் சங்க காலப் பெருங் கட்டமைப்பு ஒன்று நிலைப்பட்டிருந்ததைச் சுட்டின. இம்முனைப்பான அளக்கை அது கடற்பாறை அல்ல ஆனால் மாந்தரால் செய்யப்பெற்ற கட்டமைப்பு என்பதை வெளிப்படுத்தியது. இது குறித்த அளவீடுகளும் (measurements), வரைவோவங்களும் (drawings) அணியமாக்கப்பட்டன, அதோடு ஒரு கட்டமைப்பின் சில கற்பலகை மாத்தரிகள் (samples) தரைப்பரப்பிற்குக் கொண்டு வரப்பட்டன.


இக்கட்டமைப்பு ஒரு கவியக்கோண (apsidal) நிலத்தளத் திட்டவரை உடையது. இதன் சுவர் 5 முதல் 6 மாத்திரிள் உயரமும் அதோடு 1 முதல் 2 மாத்திரிகள் திண்மமும் கொண்டதாக அளவிடப்பட்டது. கட்டமைப்பின் மொத்த நீளம் 20 மாத்திரிகள் மன்றும் அதன் அகலம் 15 மாத்திரிகள். அதைமுன்னிட்டு, இக்கட்டமைப்பு 15 X 20 = 300 சதுர மாத்திரிகள் உள்ளடக்கி இருந்தது. இது ஆழத்தில் 23.5 மாத்திரிகள் இருந்தது. இவ்விடம் மரபுவழியாக கரைப்பார் என அழைக்கப்பட்டது. இத்தளம் நாலரை அயிரி மாத்திரி (Km) கடல்நோக்கில் குறித்தறியப்பட்டது.அதைமுன்னிட்டு, இக்கட்டமைப்பு பண்டை நாள்களில் இந்நகரின் ஒரு பகுதியாய் இருந்திருக்குமானால் இங்கு நிலைப்பட்டிருந்த பூம்புகார் நகரம் உண்மையில் நாலரை அயிரி மாத்திரிகள் வரை விரிந்ததாய் இருக்கும். மீண்டும் 1993 ஆம் ஆண்டின் போது துருவியகழ்தல்கள் 28.01.1993 முதல் 28.02.1993 வரை ஒரு மாதத்திற்கு மேற்கொள்ளப்பட்டது.


துரப்பணச் செயற்பாடுகள் கடலின் தரை ஆய்வுகளுக்காக எதிரொலி எழுப்பி மற்றும் பக்கத் தடவியறி ஓநீநெ ஆகியவற்றின் துணையோடு மேற்கொள்ளப்பட்டன. இருப்புநிலையைப் பொருத்துவதற்காக சிறுதூர நெடுக்கன் (Mini ranger) மற்றும் கோள் இருப்புநிலை முறை (GPS> global positioning system) ஆகியனவும் கூட அமர்த்தப்பட்டன. துருவியகழ்தல்கள் ஓதவிடைப் பகுதியிலும் அதேபோல் தெற்கில் உள்ள வானகிரி மற்றும் வடக்கில் உள்ள மாயக்கன்குப்பம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியின் கடற்புறத்தே 5 முதல் 7 மாத்திரிகள் நீர்ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதில் முன்பு இடம்காணப்பட்ட கலமுடைவு (shipwreck) மற்றும் 23 மாத்திரி நீர்ஆழத்தில் உள்ள கல் கட்டமைப்பு ஆகியன குறித்து சில மேலதிக விளக்கங்கள் திரட்டப்பட்டன.


ஓதவிடைப்பகுதியில் நிகழ்த்திய துருவியகழ்தல்கள் (explorations) வானகிரியிலும் புகாரிலும் உறைகிணற்றின் மீதங்களை வெளிப்படுத்தின. சங்க காலத்துச் செங்கல் சுவர் ஒன்று கண்ணகி சிலைக்கு சில மாத்திரிகள் தெற்கே வெளிப்பட்டது. செங்கற்களின் அளவு 36 X 18 X 6 செ.மீ. என அளவிடப்பட்டது. இக்காண்டல்கள் (finds) கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு - கி.பி. 4 ஆம் நூற்றாண்டு வரையினதாக நாள்குறிக்கப்ட்டுள்ளன.


மீளவும், புகாரின் ஆழமிட்டுச் செய்கின்ற பணிகள் இரு தளங்களில் ஆயப்பட்டன (1) வானகிரிக்கு அருகே இற்றைக் காவேரியின் தொடுவாய் (2) புகாருக்கு வடக்கே காரைக்குடிக்கு எதிரில். 7 மாத்திரி ஆழத்தில் நிகழ்த்திய காற்றுயர்த்திச் செயற்பாடுகள் வானகிரியின் மூன்று கல்கட்டுமானத் தொடர்கோவைகளை வெளிப்படுத்தின.


கற்பலகைகள் 30X20X5 செ.மீ. இருந்து 65X40X10 செ.மீ, மற்றும் 60X35X10 செ.மீ. வரையான அளவின. ஒரு சில கருப்பு- சிவப்பு நிற மட்கலம், சிவப்புநிற மட்கலம், சாம்பல்நிற மட்கலம் மற்றும் வெளிர்மஞ்சள் மட்கலம் (buffware) ஆகியவற்றின் துண்டுகளும் திரட்டப்பட்டன, இவை மேற்சொன்ன இரு தளங்களது கட்டமைப்பு வளாகத்தின் சேர்ந்தபகுதியாய் ஆகுவன. புலனாய்வாளர்கள் கட்டமைப்புகளை மேற்குறித்த மட்கலங்களின் அடிப்படையில் நாள்குறித்துள்ளனர். அவர்தம் கருத்துப்படி, அவை கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு வரையானவை, ஆயினும் கருப்பு - சிவப்புநிற மட்கலத்தின் நாள்குறிப்பு, மார்ட்டிமர் வீலரது1944 ஆம் ஆண்டைய புதுச்சேரியின் அரிக்கமேட்டு ஆகழாய்வுகளுக்குப் பின்பு தமிழ்நாட்டில் அகழாய்ந்த எண்ணிறைந்த இரும்புக் கால மற்றும் முந்து இரும்புக் கால தளங்களின் ஒளிவெளிச்சத்தில் மாற்றப்பட்டுவிட்டது. அதைமுன்னிட்டு, கட்டமைப்பு மீதிமிச்சங்களுக்குக் குறித்தொதுக்கிய (assign) நாள்குறிப்பு திருத்திக்காட்ட வேண்டி உள்ளதோடு அதை கி.மு. 1 ஆம் ஆயிரஆண்டின் (millenium) தொடக்கம் முதல் கி.மு. 1 ஆம் ஆயிரஆண்டின் இடைக் காலம் வரை கொண்டு செல்லலாம். காட்டாக, கொற்கையின் கருப்பு - சிவப்புநிற மட்கலம் கி.மு. 795 க்கும், ஆதிச்சநல்லூரின் கருப்பு - சிவப்புநிற மட்கலம் கி.மு.1550 க்கும் நாள்குறிக்கப்பட்டுவிட்டன.


இத் துருவியகழ்தல்கள் முன்னர் குறிப்பிட்ட கலமுடைவு குறித்து இன்னும் சில விளக்கங்களை வெளிப்படுத்தின. புலனாய்வுகளின்படி கலமுடைவு 50 X 15 மாத்திரிகள் அளவுபட்டதாக இருந்திருக்க வேண்டும், அதோடு இது பிந்து நடுக்காலத்தாக குறித்தொதுக்கப் பட்டுவிட்டது. புகாருக்கு மூன்று காலம் சார்ந்த கட்டமைப்பு மீதிமிச்சங்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. காலம் I - உயர் அலை வரிக்கு மேல் (HWL). காலம் II - ஒரு மாத்திரி ஆழம் வரை. காலம் III - 5 முதல் 7 மாத்திரி வரையான ஆழம். இது பண்டைய புகார் நகருடைய விரிவுபட்ட அழுந்திய நிலையைச் (extensive submergence) சுட்டுவதோடு நாயக்கன்குப்பம் முதல் தரங்கம்பாடி வரையான வட்டாரம் துருவியகழப்பட வேண்டும் என்றும் கருத்துரைக்கப்பட்டது.


1994 ஆம் ஆண்டில் மேலும் துருவியகழ்தல்கள் (explorations) மேற்கொள்ளப்பட்டதில் கடலானது கடற்கரையையும் காவிரி ஆற்றின் தொடுவாயையும் மிகக் கடுமையாக அரிக்கின்றது என்பதை அவை வெளிப்படுத்தின. வானகிரிக் கோவிலின் தெற்கிலும் வடக்கிலுமாக கடற்கரை நெடுகலும் ஒரு அயிரி மாத்திரி நீளத்திற்கு ஓதவிடைப் பகுதியில் சில அகழிகள் போடப்பட்டன. இந்த அகழாய்வுகள் ஒரு சில உறைகிணறுகள், ஒரு பாவுதரை மற்றும் செங்கல், ஒரு செவ்வக மேடை கொண்ட ஒரு வீட்டின் தரை ஆகியவற்றை வெளிச்ச்த்திற்கு கொண்டு வந்தன.


மேற்சொன்ன துருவியகழ்தல்கள் கடலானது பண்டைய நகர் மேல் உள்நுழைவதையும் அதோடு அது கடற்கரை நெடுகலும் அந்நகரின் சற்றொப்ப 5 அயிரி மாத்திரி பரப்பையும், கடல்நோக்கில் இருந்து 2 அயிரி மாத்திரி காரைக்குடி முதல் சின்னவானகிரி வரையிலும் அதற்கும் மேல் தெற்காக உள்ள நிலப்பரப்பையும் கடலுள் அமிழ்த்திவிட்டிருப்பது தெரிகின்றது..


துருவியகழ்தல்கள் 23 மாத்திரிகள் வரையான ஆழ்ந்த ஆழத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும், அது மட்டுமே புகார் நகருடைய அமிழ்ந்த தன்மை குறித்த உண்மைப் படத்தை வெளிப்படுத்த முடியும்.


1994 ஆம் ஆண்டு ஆகத்து 18 இல் தொடங்கிய புறக்கடற்கரை (offshore) துருவியகழ்தல்கள் தோதில்லாப் பருவநிலையாலும், ஏற்பேயாத (unfavourable) வானிலையாலும்,சுன்ன காண்புநிலையாலும் (zero visibility) தொடரவியலாமல் போனது.


கடல்நீரோட்டமும் முரண்மையான வானிலையும் காற்றுயர்த்தச் செயற்பாடுகளையும் ஒளிப்படப் பிடிப்பையும் தடுத்துவிட்டன. அதைமுன்னிட்டு, புலனாய்வுகள் இடைக்காலத்திற்கு துருவியகழ்தல்களை நிறுத்துவைத்தன அதோடு அதை 1995 ஆம் ஆண்டில் பிப்ரவரி மார்சு மாதங்களில் தொடரத் திட்டமிட்டன. ஆனால் கெடுவாய்ப்பாகப், புலனாய்வுகள் இந்நாள் வரை தொடரப்படாமலேயே போயின.


மேல் உள்ள கட்டுரையை Under Water Archaeological Investigations at Poompucar என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). இதை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் தமிழாக்கித் தட்டச்சு செய்தவர் சேசாத்திரி. பின் வரும் கட்டுரை பூம்புகார் தொடர்பான ஆழிப்பொறியில் சார் கட்டுரை என்பதால் இதனுடன் இணைத்து வழங்கப்படுகின்றது.



--Geetha Sambasivam 07:19, 24 செப்டெம்பர் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 செப்டெம்பர் 2012, 07:19 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,403 முறைகள் அணுகப்பட்டது.