பூண்டி அரங்கநாத முதலியார்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

எழுதியவர் : உ.வே.சாமிநாதய்யர்
தட்டச்சு செய்து அளித்தவர் : திருமதி.கீதா சாம்பசிவம்
_______________________________________________________________________________________________________

சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் விளங்கிய சிறந்த அறிஞர்களுள் ஒருவராகிய பூண்டி அரங்கநாத முதலியாரை இந்நாட்டினர் யாவரும் நன்கு அறிவார்கள்; பிற நாடுகளிலும் அவருடைய புகழ் பரவியுள்ளது. அவருடைய சரித்திரத்தைச் சிலர் எழுதியிருக்கிறார்கள்; பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குரிய சில பாட புத்தகங்களில் அவருடைய சுருக்கமான வரலாரு இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை உண்டாக்குகின்றது. பிராயம் முதிர முதிர உடலும் செல்வமும் முதிரவேண்டுமென்று கருதி அவற்றிற்குரியவற்றைச் செய்பவர்கள் பெரும்பாலும் மலிந்த இந்த உலகத்தில், நாளுக்கு நாள் பிராயம் முதிர்வதற்கு முன் அறிவு முதிரும் முயற்சிகளை மேற்கொள்ளும் கல்விமான்களே ஒரு நாட்டுக்கு ஆபரணமாகத் திகழ்பவர்கள்.


சிறந்த அறிவுடையோர்கள் போற்றும் பேரறிஞராக விளங்கியவர் அரங்கநாத முதலியார். இளமை தொடங்கியே அவருடைய வாழ்க்கை கல்வியினால் விளக்கமுற்றது. மாணாக்கராக இருக்கையில் அவருடைய கல்வித்திறமை வகுப்பிலுள்ள மற்றப் பிள்ளைகளுடைய திறமையைக் காட்டிலும் மேலோங்கி நின்றது. கல்வியைக் கற்பதும், கற்பிப்பதுமே அவருடைய வாழ்வாக அமைந்திருந்தன. அவரோடு பழகிய யாவரும், 'அவர் ஒரு பெரிய ஆச்சர்ய புருஷர்' என்றே வியந்து கூறுவர்.


திருவாவடுதுறையாதீனத்து வித்துவான்களாகிய ஸ்ரீ சிவஞானமுனிவர், கச்சியப்பமுனிவர், சுப்பிரமணிய முனிவர் முதலியவர்களை ஆதரித்து அவர்களைக் கொண்டு பல நூல்களை இயற்றுவித்த தொட்டிக்கலைக் கேசவ முதலியார் பரம்பரையினருக்கு உறவினரும், தமிழ்மொழியில் நல்ல பயிற்சியுள்ளவரும், பெரிய உத்தியோகத்தில் இருந்தவருமான சுப்பராயமுதலியாரென்பவ்ருடைய தவப்புதல்வராக அரங்கநாத முதலியார் 1844-ஆம் வருஷத்தில் பிறந்தார். அவருடைய முன்னோர் கள் தொண்டை நாட்டிலுள்ள பூண்டியென்னும் ஊரினரா தலின், பூண்டி அரங்கநாத முதலியாரென்று அவர் பெயர் வழங்கலாயிற்று.


அரங்கநாத முதலியார் தம்முடைய தந்தையாரிடத்திலும் வேறு பலரிடத்திலும் தமிழ்க்கல்வியும், பள்ளிக்கூடங்களில் ஆங்கிலக் கல்வியும் கற்றனர். அவர் ஒவ்வொரு பரீக்ஷையிலும் பரிசுகளைப் பெற்றார். எம்.ஏ. பட்டம் பெற்றவர்களிற் சிறந்தவராக விளங்கிய மையின், அவரை எம்.ஏ. அரங்கநாத முதலியார் என்று யாவரும் அழைப்பாராயினர். அவர் பிரஸிடென்ஸி காலேஜிலும், கும்பகோணம் காலேஜிலும் பல்லாரி புரொவின்ஷியல் ஸ்கூலிலும் முக்கிய ஆசிரிய ராகவும், இராசாங்கத்துத் தமிழ்மொழி பெயர்ப்பாளராகவும் இருந்து விளங்கினார். பலவகையான கல்விச் சபைகளிலும் வேறு பல ஸ்தாபனங்களிலும் அவர் உயர்ந்த ஸ்தானத்தை வகித்து வந்தார். 1893-ஆம் வருஷத்தில், தம் குணங்களையும் கல்விப் பெருமையையும் தமிழுலகம் நினைத்து நினைத்து இரங்கும்படி உயிர் நீத்தார்.


அவரோடு பத்து வருஷங்களுக்கு மேல் யான் பழகியிருக்கின்றேன்; அக்காலத்தில் அவருடைய தோற்றப் பொலிவையும், தமிழினிடத்திலும் தமிழ் கற்றாரிடத்திலும் அவருக்கிருந்த பேரன்பையும், அவருடைய நுண்ணறிவையும், பெருந்தகைமையையும் உணர்ந்து வியந்தேன்; அவருடைய அறிவாற்றலைப் பல பெரிய அறிவாளிகள் வாயாரப் புகழ்வதையும் பலமுறை காதாரக் கேட்டு இன்புற்றிருக்கின்றேன்.


அவரைப் பற்றி எனக்குத் தெரிந்த செய்திகள் பல. அவரோடு பழகிய காலத்தில் நானே அறிந்துகொண்டனவும், அவரே நேரிற் கூறியனவும், அவரோடு பழகிய பிறர் கூறியனவுமாகிய சில நிகழ்ச்சிகளை யாவரும் அறிந்து இன்புற வேண்டுமென்று கருதி இப்போது எழுதுகின்றேன்.

1. பொன்னரங்கப் பாட்டு

அரங்கநாத முதலியார் இளமை தொடங்கியே தமிழில் விருப்பமுடை யவர்; சென்னையிலுள்ள வித்துவான்கள் எங்கேயாவது பிரசங்கம் செய்தால், அங்கே தவறாமல் அவர் சென்று கேட்பார். சென்னையில் இருந்த கதிர்வேல் உபாத்தியாயரென்பவரிடத்தில் அவர் பல தமிழ் நூல்களைப் பாடங்கேட்டதுண்டு. காஞ்சீபுரம் சபாபதி முதலியார், புரச பாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியார் முதலிய வித்துவான் களோடு அடிக்கடி பழகித் தமக்குத் தமிழ் நூல்களிலுள்ள ஐயங்களைப் போக்கிக் கொள்வார். ஒருமுறை கேட்டவற்றை மறவாமல் நினைவிற் கொள்ளும் ஆற்றல் அவர் பால் சிறப்புற்றிருந்தது.


முதலியார் பள்ளிக்கூடத்தில் வாசித்துக்கொண்டிருந்த போது, அஷ்டா வதானம் சபாபதி முதலியார் புரசபாக்கத்திலுள்ள ஸ்ரீகங்காதரேச்வரர் கோயிலில் வாரந்தோறும் சைவப் பிரசங்கம் செய்து வந்தார். அக்காலத் தில், அத்தகைய பிரசங்கங்களைக் கேட்பதில் விருப்பமுடையார் பலர் இருந்தனர். சபாபதி முதலியாரோ மிக்க நா வன்மையுள்ளவர். ஆதலின், பிரசங்கத்தைக் கேட்கப் பெருங்கூட்டம் வரும். எல்லோரும் அமைதியுடன் இருந்து கேட்டு இன்புறுவர். அரங்கநாதமுதலியாரும் தவறாமற் சென்று கேட்டு வருவார்.


ஒருநாள் நிகழ்ந்த உபந்யாசத்தின் இடையே அஷ்டாவதானம் சபாபதி முதலியார் சிவனடியாரது பெருமையைப் பற்றிப் பேசுகையில் மிக அழகாக விஷயங்களை எடுத்துக் கூறித் தேவார திருவாசகங்களிலி ருந்தும் வேறு பல நூல்களிலிருந்தும் தக்க மேற்கோள்களை எடுத்துக் காட்டி யாவரையும் உவப்பித்தார். இடையே பிள்ளைப் பெருமாளை யங்கார் இயற்றிய திருவரங்கக் கலம்பகத்திலுள்ள செய்யுளாகிய,

                                  (ஆசிரிய விருத்தம்)

"பாதியா யழுகிய கால் கையரேனும்
பழிதொழிலு மிழிருவமும் படைத்தாரேனு
ஆதியா யரவணையா யென்பராகில்
அவரன்றோ யாம் வணங்கு மடிகளாவார்
சாதியாலொழுக்கத்தான் மிக்கோரேனும்
சதுர்மறையால் வேளிவ்யாற்றக்கோரேனும்
போதினான் முகன் பணியப் பள்ளி கொள்வான்
பொன்னரங்கம் போற்றாதார் புலையர் தாமே."

என்பதைக் கூறி, 'சாதி முதலியவற்றால் உண்டாகும் உயர்வு உயர் வன்று; இறைவனிடத்தில் பக்தியே எல்லாவற்றிலும் உயர்வுடைய தாகும்’ என்று விரித்துரைத்தார்.


அப்பொழுது கூட்டத்தினிடையே இருந்த அரங்கநாத முதலியார் எழுந்து நின்று, "ஐயா! சைவப் பிரசங்கம் செய்ய வந்த நீங்கள் அதற்கு மாறாகத் திருமாலைப் பற்றிய செய்யுளை மேற்கோளாகக் காட்டலாமா?" என்று கேட்டார்.


சபாபதி முதலியார், "என்ன அப்பா! அதுவும் பொன்னரங்கத்தைப் பற்றிச் சொல்லும் செய்யுள் தானே" என்று உடனே சொன்னார். சபையிலுள் ளோர் யாவரும், இவ்வளவு விரைவில் விடை சொன்னாரே என்று வியந்தார்கள். பொன்னரங்கமென்பது அழகிய ஸ்ரீரங்கமென்றும், பொன்னம்பலமென்றும் பொருள்படும்.


அரங்கநாத முதலியார், "பொன்னரங்கம் பொன்னம்பலமாகலாம்; ஆனால் அந்தப் பாட்டில் 'ஆதியாய் அரவணையாய்' என்றும், 'போதினான் முகன் பணியப் பள்ளி கொள்வான்' என்றும் இருப்பவற்றிற்கு என்ன சமாதானம் சொல்வீர்கள்?" என்று கேட்டார்.

பிரசங்கம் செய்த முதலியார், இதற்குச் சாதுர்யமாக விடை கூற வேண்டும் என்று எண்ணிச் சிறிது நேரம் யோசித்தார். அதற்குள் அரங்க நாத முதலியார், "ஆதியாய்-முதல்வனே, அரஹரனே, அணையாய் - என்பால் வந்து அருள் புரிவாயாக வென்றும், பள்ளி கொள்வானென்ப தற்குக் கோயில் கொள்பவனென்றும் அர்த்தம் சொல்லலா மல்லவா?" என்று மெல்லக் கேட்டார்.

சபாபதி முதலியார், அறிவு ஒளி வீசும் அரங்கநாத முதலியாருடைய கண்களை நோக்கினார்; தானே தடையை எழுப்பி விடையையும் சொல்லி விட்டான்; இவன் சிறந்த புத்திசாலி என்று உணர்ந்தார்; உண்மையறிஞராகிய அவர், தமக்கு முன்னின்ற இளைய உருவத்திலே கூரிய அறிவு விளங்குவதைக் கண்டு பொறாமையோ கோபமோ கொள்ளவில்லை; "ஆ!ஆ! மிகவும் அழகாக இருக்கிறது! இந்த இளமை யிலேயே இவ்வளவு கூர்மையான அறிவுடைய உனக்குச் சிவபிரான் திருவருளால் மேன்மேலும் அறிவு விளக்கமும் பெரும்புகழும் உண்டாகும்" என்று மனமார வாழ்த்தி அவ்விளைஞரை அருகில் அழைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார். அவையிலுள்ளோர் யாவரும் அவ்விளைஞருடைய அறிவின் திறத்தையும் அதனைப் பாராட்டிய பிரசங்கியாரது பெருந்தனமையையும் கண்டு வியந்தார்கள்.


2.மோசம் போனேன்.

அரங்கநாத முதலியார், கலாசாலையில் வாசித்த காலத்தில் ஒவ்வொரு வகுப்புப் பரீக்ஷையிலும் முதல்வராகவே தேர்ச்சி பெற்றார். 1862-ம் வருஷத்தில் மெட்ரிகுலேஷன் பரீக்ஷையில் இராசதானியில் முதல்வ ராகத் தேர்ச்சி பெற்றார். இங்ஙனம் தேர்ச்சி பெற்ற காலங்களில் அவர் பெறும் பரிசுப் புத்தகங்கள் வீட்டிற்கு வண்டியிலே வைத்துக்கொண்டு போகும்படி அவ்வளவு மிகுதியாக இருக்குமாம்.


பிரஸிடென்ஸி காலேஜில் அரங்கநாத முதலியார் பி.ஏ. வகுப்பிற் படித்து வந்தார். ஆங்கிலத்திலும் கணிதத்திலும் அவர் சிறந்த அறிவுடையவராக விளங்கினார். அக்காலத்தில் அக்காலேஜுக்குத் தலைவராக இருந்த ஸ்ரீமான் எட்மண்டு தாம்ஸன் துரையவர்கள் அவருடைய அறிவின் திறத்தையறிந்து அவரிடம் மிகவும் ஈடுபட்டு அன்புடன் நடத்தி வந்தார். அந்த வருஷப் பரிக்ஷையில் அவரே முதல்வராகத் தேர்ச்சி பெற்று அதற்குரிய பரிசையடைந்து தம் காலேஜுக்கும் தமக்கும் பெருமையை உண்டாக்குவாரென்று நிச்சயமாக எண்ணியிருந்தார்.


பரீக்ஷை நடைபெற்றது; பரீக்ஷையின் முடிவு காலேஜ் தலைவருக்குத் தெரிந்தது. அரங்கநாத முதலியார் ஆங்கிலத்தில் முதன்மை ஸ்தானம் பெறவில்லை. இதனையறிந்த தாம்ஸன் துரை மிக்க வருத்தமுற்றார்; தேடிய பொருளை இழந்தவரைப் போன்ற உணர்ச்சி அவருக்கு உண்டா யிற்று. அவர் அரங்கநாத முதலியாரை வரவழைத்து, "ஏன் இப்படி ஏமாற்றிவிட்டாய்?" என்று கேட்டார். "நான் நன்றாகத் தானே எழுதியி ருந்தேன்" என்றார் முதலியார். தாம்ஸன், தாம் நினைத்தபடி முதலியார் ஆங்கிலத்தில் முதல்வராக வாராமையைப் பற்றிக் கூறினார். முதலியார், "இதில் ஏதோ தவறு இருக்கவேண்டும். நான் ஒவ்வொரு வினாவிற்கும் தவறாமல் நன்றாக விடை எழுதியிருக்கிறேன்" என்று சொன்னதன்றித் தாம் எழுதியிருந்த விடைகளையும் தெரிவித்தார்.


அவ்வருஷத்தில் பரீக்ஷைத் தலைவராக இருந்தவரை அறிந்திருந்த தாம்ஸன் துரை தாமதம் செய்யாமல் உடனே முதலியாரை அழைத்துக் கொண்டு அவரிடம் சென்றார் அரங்கநாத முதலியார் எந்தப் பகுதியில் குறைவாக 'மார்க்கு'ப் பெற்றிருந்தாரோ அதனைத் திருத்தியவர் அவரா கவே இருந்தார். ஆதலின் முதலியாருடைய விடைக்கடிதத்தைத் தாம்ஸன் துரை பார்க்கவேண்டுமென்று விரும்பினார்.


திருத்தியவர்:- நான் எல்லாவற்றையும் நன்றாகப் பார்த்துத் தானே, 'மார்க்குகள்' கொடுத்திருக்கிறேன்.

துரை:- இவர் யாவரும் வியக்கத்தக்க அறிவையுடையவர்; ஆயினும் சாதாரண மாணாக்கரைப் போலவே தேர்ச்சி பெற்றிருக்கிறார். இதைக் காட்டிலும் இவர் தோல்வியுறுவது நல்லது. இவர் எழுதியனவாகக் கூறிய விடைகளை நான் கேட்டேன்; அவை மிகவும் நன்றாக இருக் கின்றன. அறிவாளிகளின் திறமையைப் பிரகாசப் படுத்துகின்ற உங்களி டம் பிழையிருக்குமென்று நான் கருதவில்லை. எதற்கும் அதை மீண்டும் ஒருமுறை பார்த்தால் நலமாக இருக்கும்.

திருத்தியவர், "தாங்கள் சொல்லும்பொழுது அதைக் கவனிப்பதைவிட எனக்கு வேறு என்ன வேலை ? " என்று கூறிவிட்டு அரங்கநாத முதலியாருக்குரிய எண்ணுள்ள விடைக் கடிதத்தை எடுத்து வந்தார்; வந்து, ஒவ்வொரு பக்கமாகக் காட்டி, காகிதங்களைப் புரட்டினார்; "நான் சரியாகத் தானே பார்த்திருக்கிறேன்; பாருங்கள்" என்று ஒரு பக்கத்தைக் காட்டிக் கொண்டே திருத்தியவர் கூறினார். அந்தப் பக்கத்தின் பாதியில் ஒரு கேள்விக்குரிய விடை முற்றிலும் எழுதப் பட்டிருந்தது; பின்னுள்ள பாதிக்கடிதம் எழுதப் படாமல் இருந்தது. அப்பொழுது முதலியார் மிகவும் ஆத்திரத்தோடு, "அந்தக் காகிதத்தையும் தள்ளுங்கள்" என்றார். பரீக்ஷகர் அப்படியே செய்தார். என்ன ஆச்சர்யம்! அந்தப் பக்கமும் அதற்கு மேலுள்ள பக்கங்களும் திருத்தப்படவேயில்லை.

"ஐயோ! மோசம் போனேனே!" என்று கூவினார் பரீக்ஷகர்;

"மன்னிக்கவேண்டும்; நான் அநியாயமாய் ஒருவருடைய புகழுக்குத் தடையாய் நின்றேன். இந்தப் பக்கம் பாதியோடு எழுதி விடப்பட்டதனால் இதற்கு மேல் விடைகள் இல்லையென்று எண்ணி மேலே பார்க்க வில்லை. பெரும் பிழை செய்துவிட்டேன். பொறுத்துக்கொள்ளவேண்டும். என் பிழையை அறிந்து கொள்ளும்படி செய்த தங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்!" என்று மனம் வருந்திக் கூறினார்.

திருத்தாத பகுதிகள் திருத்தப்பட்டன; அரங்கநாத முதலியார் முதல்வராக நின்றாரென்று சொல்லவும் வேண்டுமா? பி.ஏ., பரீக்ஷையில் முதல்வராகத் தேர்ச்சி பெறுபவருக்குரிய சிறந்த பரிசையும் அவர் அவ்வருஷம் பெற்றார்.

தம்முடைய உண்மையான கல்வித் திறமை, எதிர்பாராமல் நேர்ந்த இடையூற்றினால் மங்காமல் தப்பி விளக்கமுற்றதனால் அரங்கநாத முதலியாருக்கு உண்டான உவகையோ, அவருடைய ஆசிரியராகிய தாம்ஸன் துரைக்கு உண்டான உவகையோ, யாது அளவிற் பெரிதென்று அறிந்து கூறவல்லார் யார்?

(அரங்கநாத முதலியாரவர்களே என்னிடம் நேரில் கூறிய வரலாறு இது.)


3. வெறும் பண்டிதர்

கும்பகோணம் காலேஜில் அரங்கநாத முதலியார் சிலகாலம் ஆசிரியராக இருந்து வருகையில் அங்கே இருந்த மற்ற ஆசிரியர்கள் யாவரும் அவருடைய கல்வியாற்றலைக் கண்டு வியந்து அதனைத் தமக்கு எடுத்துக்காட்டாக மேற்கொண்டனர். புதிய விஷயமென்பது ஒன்று அவருக்கு இல்லை; எதையும் விரைவில் அறிந்து கொண்டு பிறருக்கும் கற்பிக்கும் ஆற்றல் அவர்பால் இருந்தது.


அக்காலத்தில் அக்காலேஜில் தமிழாசிரியராக இருந்தவர் திரிசிரபுரம் சி. தியாகராச செட்டியார். அவரிடம் முதலியாருக்கு நன்மதிப்பு உண்டா யிற்று; அவருடைய தமிழ்க் கல்வியின் ஆழத்தை உணர்ந்து அடிக்கடி அவர் வீட்டிற்குச் சென்று பார்த்து வருவார். முதலியார் அங்ஙனம் செய்ததைப் பொறாத ஒருவர் அவரிடம், 'செட்டியார் வீட்டிற்கு நீங்கள் போகலாமா? அவரோ வெறும் பண்டிதர்; தாங்கள் பெரிய புரொபஸர். நாங்களெல்லோரும் அவரிடம் மதிப்புடையவர்களே; ஆனாலும் அளவுக்கு மிஞ்சிப் போகமாட்டோம். தாங்கள் அவர் வீட்டிற்கு அடிக்கடி போவது தங்களுடைய கெளரவத்திற்கு ஏற்றதன்று. எங்களைக் காட்டிலும் உயர்வுடைய தாங்கள் அங்ஙனம் செய்வது எங்கள் மேல் அவருக்கு வருத்தத்தை உண்டாக்கும்." என்றனர்.


இதைக் கேட்ட முதலியார்," உங்களுக்குத் தமிழ்க் கல்வியறிவு உண்மையாக இருந்தால் இங்ஙனம் கூறத் துணிய மாட்டீர்கள். செட்டியாரவர்களுக்கு நம்மைக் காட்டிலும் சம்பளம் குறைவென்ற காரணத்தால் அவர்கள் நம்மிலுந் தாழ்ந்தவரென்று கருதுகிறீர்களா? பணத்துக்கும் கல்விக்கும் சம்பந்தமில்லையென்று உங்களுக்குத் தெரியாதா? பழைய காலத்தில் தமிழ் வித்வான்களும் ஸம்ஸ்கிருத வித்வான்களும் வறியவர்களாக இருந்தார்களென்பதும், அந்த வறுமையே அவர்களுக்கு உயர்வை உண்டாக்கியதென்பதும், முடியுடை மன்னர்களெல்லாம் அவர்களுடைய நட்பைச் சிறப்புடையதாகக் கருதி வந்தார்களென்பதும் சரித்திரத்தால் அறிந்த உண்மைகளல்லவா? நாமெல்லாம் வேறொரு நட்டாருக்குரிய பாஷையில் ஓரளவு படித்துவிட்டுத் தருக்கி நிற்கிறோம். செட்டியாரோ நம்முடைய தாய்மொழியை இளமை முதலே தக்க ஆசிரியரிடம் முறையாகக் கற்றுத் தமிழ்ச்சுவையில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்குத் தமிழ்தான் செல்வம்; இன்றைக்கு நம்மை வேலையிலிருந்து நீக்கிவிட்டால் நம் அறிவு நமக்கு உதவாது; அவர் விஷயமோ அப்படியன்று; தமிழுலகத்தில் எங்கே சென்றாலும் அவருடைய மதிப்பு வெளிப்படும். நாம் வேலையை உத்தேசித்துப் படித்தோம். அவர் இயற்கையாகவே தமிழில் சுவை கொண்டு படித்தவர். அவருடைய கல்வி மிகுதியைக் கேள்வியுற்ற கோபால ராவ் இந்தக் காலேஜுக்கு அவரை விரும்பி அழைத்தார்; அவரை மரியாதையுடன் பாராட்டவேண்டுவது நம் கடமை. அன்றியும் அவரைப் போன்றவர்கள் தங்களுக்கு வேண்டியதை நம்மிடம் சொல்ல மாட்டார்கள். அவர்களுடைய வீட்டிற்கு நாம் போய்ப் பழகினால்தான் அவர்களுடைய உண்மை நிலையை அறிந்து தக்கபடி உதவி புரியலாம். நமக்கு இந்த ராஜ்யத்திலேதான் மதிப்பு. பழைய காலமாக இருந்தால் அவர்கள் இருக்கும் நிலையே வேறு. செட்டியாருடைய அருமை தெரியாமல் 'அவர் வெறும் பண்டிதர்' என்று தாங்கள் சொன்னது குறித்து நான் மிக வருந்துகிறேன்" என்றார்.


கேட்ட அவர் தாம் சொல்லியதைப் பொறுத்துக்கொள்ளும்படி வேண்டிக் கொண்டார். முதலியாருடைய தமிழன்பை யாவரும் தெரிந்து கொண்டனர்.


4. அறியான் வினா

முதலியார் மிக்க தமிழ்ப் பயிற்சி யுடையவராதலின் சில சமயங்கள் வருஷ முடிவில் நடைபெறும் காலேஜ் வகுப்புப் பரீக்ஷைகளில் பரீக்ஷகராக இருப்பதுண்டு. ஒருமுறை பி.ஏ. வகுப்பிற்குக் கம்ப ராமாயணத்தில் ஒரு பகுதி பாடமாக இருந்தது. அதிலுள்ள ஒரு செய்யுள் பொருள் விளங்காவண்ணம் அச்சிடப் பட்டிருந்தது. பாடஞ் சொல்லிய தியாகராச செட்டியார் அந்தச் செய்யுள் வரும்போது, "இதற்குப் பொருள் விளங்கவில்லை. வேறு யாருக்கும் விளங்காது; ஆகையால் இதிற் கேள்வியும் வராது" என்று சொல்லி மற்றச் செய்யுட்களை மட்டும் கற்பித்தார்.


அவ்வருஷ முடிவில் நடைபெற்ற வகுப்புப் பரீக்ஷையில், பி.ஏ. தமிழ் வினாப் பத்திரத்தில், எந்தச் செய்யுளுக்குப் பொருள் கூறப்பட வில்லையோ அதில் ஒரு கேள்வி வந்திருந்தது. பிள்ளைகளில் ஒருவரேனும் அதற்கு விடையெழுதவில்லை; அவர்கள் செட்டியாரை அணுகி, " நீங்கள் இது விளங்காத செய்யுளென்றும், இதிற் கேள்வி வராதென்றும் சொன்னீர்களே; உங்களுக்கு விளங்காதது இப்பரீக்ஷ கருக்கு விளங்கியதனால் கேட்டிருக்கிறார்" என்று சொன்னார்கள். அந்த வினாப்பத்திரம் அரங்கநாதமுதலியார் ஸித்தம் செய்தது. பிறகு செட்டியார் முதலியாரிடம் சென்று, " இந்தக் கேள்வி கேட்டிருக் கிறீர்களே; இதற்கு என்ன பொருள் செய்து கொண்டீர்கள்?" என்று கேட்டார்.


முதலியார்: நீங்கள் என்ன சொன்னீர்கள்?

செட்டியார்: அது விளங்காத செய்யுள்; எனக்கு விளங்கவில்லையென்று சொல்லிவிட்டேன்.

முதலியார்: எனக்கும் விளங்கவில்லை.

செட்டியார்: விளங்காததைக் கேட்கலாமா?

முதலியார்: நீங்கள் இதற்கு என்ன பொருள் சொல்லியிருக்கிறீர்க ளென்று அறிந்து கொள்ளும்பொருட்டே நான் கேட்டேன். வினாவின் வகைகளுள் அறியான் வினா ஒன்றல்லவா ? இதை அந்த வகையிற் சேர்த்துக்கொள்ளுங்கள்.

செட்டியார்: தாங்கள் என்னை நேரில் கேட்டிருக்கலாமே; இந்தச் செய்யுள் எந்தப் பரீக்ஷகருக்கும் விளங்காதாகையால் இதிற் கேள்வி வராதென்று மாணாக்கர்களிடம் நான் சொல்லிவிட்டேன்; அதற்கு நேர்விரோதமாக இதில் நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள்; பிள்ளைகள் என் மண்டையை உருட்டுகிறார்கள்; இப்படி விஷப் பரீக்ஷை செய்யலாமா?

முதலியார்; இதைப் பற்றித் தாங்கள் கவலையுற வேண்டாம்; அந்தக் கேள்விக்கு 'மார்க்கு'ப் போடாமல் விட்டு விடுகிறேன்.

முதலியாருக்குச் செட்டியாரிடம் உள்ள மதிப்பும் அவருடைய உண்மைத் தமிழன்பும் இந்நிகழ்ச்சியால் நன்கு விளங்கும்.


முதலியார் சென்னைக்கு வந்த பின்பும் செட்டியாருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவதுண்டு. அவர் செட்டியார் இறந்ததாகக் கேட்டதும், மிகவும் வருந்தினார். அப்பொழுது அவர் கும்பகோணம் காலேஜில் இருந்த ஸ்ரீ ஸாது சேஷையரவர்களுக்கு ஆங்கில பாஷையில் ஒரு கடிதம் எழுதினார். அதிலுள்ள ஒருபகுதியின் கருத்து வருமாறு:-

சென்னை,
26 ஜனவரி, 1888.

"அன்புள்ள சேஷையா,

நேற்று இரவு ஹிந்துப் பத்திரிகையில், நம் தியாகராச செட்டியார் நீண்ட காலமாக அசெளக்கியமாக இருந்து திருச்சிராப்பள்ளியில் தேகவியோக மடைந்தாரென்று வாசித்தேன். ஸ்ரீ சாமிநாதையரிடமிருந்து வந்த கடிதத்தால் செட்டியாருடைய தேகஸ்திதி விரைவாக மெலிவுற்று வரு கின்றதென்று அறிந்திருந்தமையால், ஹிந்துவில் வெளியிடப்பட்ட இந்தச் செய்தியை எதிர்பார்த்திருந்தேன். தியாகராச செட்டியார் கும்ப கோணம் காலேஜிற்குச் செய்த உபகாரமும், ஒரு பண்டிதரென்ற வகையில் அவர் பெற்றிருந்த உயர்ந்த திறமையும் அவருடைய மாணக்கர், அபிமானிகளாகிய பலருடைய மரியாதைக்கும் பிரியத் துக்கும் அவரை உரியராக்கின. நீங்கள் ரூபாய் 500 சேகரிக்க முடியுமானால் பி.ஏ. வகுப்பில் தமிழில் முதல்வராகத் தேர்ச்சி பெறும் மாணாக்கருக்குப் புஸ்தகங்களாக 20ரூபாய் மதிப்புள்ள பரிசொன்றை அவர் பெயரால் ஏற்படுத்தலாம். கும்பகோணத்தில் நீங்கள் 450 ரூபாய் சேகரிக்க முடியுமானால், 500 ருபாயாக்குவதற்கு நான் 50 ரூபாய் தருவேன். இந்த விஷயத்தில் நீங்கள் ஊக்கங்கொண்டு அவருடைய பல மாணாக்கரையும் அபிமானிகளையும் அணுகுதற்குரிய உபாய மொன்றைத் தேடுவீர்களென்று நம்புகிறேன். திருவாவடுதுறை மடாதிபதி* உலகை நீத்துவிட்டாரே! என் செய்வது! இல்லையாயின் அவரிடமிருந்து நல்ல தொகையொன்றைப் பெறலாகுமே; இந்த விஷயத்தை நிறைவேறச் செய்வதற்கு என்னைக் காட்டிலும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்..........."


கீழ்காய் நெல்லி

கும்பகோணம் காலேஜில் அரங்கநாதமுதலியார் இருந்த காலத்தில் அந்த ஊர் ஒவ்வாமையால் அவருடைய தேகத்திற்கு அசெளக்கியம் நேர்ந்தது. அப்பொழுது அங்கே இருந்த தமிழ்ப்பண்டிதர் ஒருவர் வைத்தியத்திலும் பழக்கமுடையவராக இருந்தார். அவர் இலக்கண மாகவே பேசுவார்; திரி சொற்களைக் கலந்து பேசுவதில் அவருக்கு விருப்பம் அதிகம். பிறருக்கு எளிதில் விளங்கவேண்டுமென்பதை நினையாமல் தமிழ்நாட்டில் வழக்கத்தில் வந்த சில வேறுபாஷைச் சொற்களை அவ்வாறே வழங்காமல் மொழிபெயர்த்துக் கூறுவார். பிள்ளைகளிடம் பேசும்பொழுது, 'சிலேட்' என்று சொல்லாமல் கற்பலகை யென்றே சொல்வார்; பென்ஸிலை, எழுதுகோலென்றும், ரூல்கழியை உரூல் கழியென்றும், ரயிலென்பதை இரயிலென்றும், பேனாவை இறகென்றுமே வழங்குவார். இப்படிப் பேசினால்தான் தம்மைத் தமிழ்க் கல்வியிற் சிறந்தவராக யாவரும் கருதுவாரென்பது அவரது எண்ணம்


அரங்கநாத முதலியாருடைய நோயின் மூலத்தை யறிந்து மருந்து கொடுக்கும் பொருட்டு அப்பண்டிதர் வருவிக்கப் பெற்றார். அவர் வந்து கைபார்த்து இன்ன நோயென்று சொல்லிவிட்டு, ஒரு தைலம் காய்ச்ச வேண்டுமென்றும் அதற்குச் சில பச்சிலைகள் வேண்டுமென்றும் கூறினார். அந்தப் பச்சிலைகளைத் தேடிக் கொண்டு வருவதர்காக ஒருவனை அழைத்து வந்தார்கள். அவனிடம் தமக்கு வேண்டிய பச்சிலைகளைப் பண்டிதர் சொன்னார். உலக வழக்கில் வழங்கும் பெயர்களைக் கூறாமல் வைத்திய நூல்களிலுள்ளபடி அவர் சொன்னார்; அவற்றிற் சில அவனுக்குப் புரியவில்லை. "கீழ்காய் நெல்லி" என்று ஒரு பச்சிலையைக் கூறினார். அவனுக்கு அது விளங்கவில்லை. மீட்டும் அவன் என்னவென்று கேட்டான்; "கீழ் காய் நெல்லி" என்று ழகரத்தையும் யகரத்தையும் அழுத்தமாக உச்சரித்துச் சொன்னார் பண்டிதர். அவனோ அப்பொழுதும் தெரிந்து கொள்ளாமல் விழித்தான். "எண்ணெய் வடிக்கவேண்டும்; அதற்காகக் கீழ்காய் நெல்லி வேண்டும்" என்று பண்டிதர் விளக்கினார். அவன், "எனக்கு வெறும் நெல்லிக்காய் தான் தெரியும்; நீங்கள் சொல்வது எனக்குத் தெரியவில்லை" என்றான்.


இப்படிச் சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் அருகிலி ருந்த வைத்தியந்த தெரிந்த ஒருவர் சிரித்துக்கொண்டார். "கீளா நெல்லி யப்பா!" என்றார். அவனுக்கு அவர் சொன்னது ஒரு பெரிய விடு கதையை விடுத்தது போல இருந்தது; "கீளா நெல்லியா! இதை முந்தியே சொல்லியிருக்கக் கூடாதா? அவர் ஏதோ நெல்லி என்றுதானே சொன்னார்; எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்றான்.


இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த அரங்கநாத முதலி யாருக்கு மிக்க வியப்பு உண்டாயிற்று; அவர் பண்டிதரைப் பார்த்து, "உங்களுடைய தமிழ் இலக்கணத்தை இவனிடந்தானா காட்டவேண்டும்! இவ்வளவு நேரம் தொண்டைத் தண்ணீர் வற்றும்படி இவனிடம் சொன்னீர்களே. இவனுக்கு விளங்கும்படி வழக்கமாகவுள்ள பேரைச் சொல்லி யிருந்தால் இவ்வளவு கால தாமசம் உண்டாகாதே" என்றார்.


பண்டிதர்: நான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லையே. கீளா நெல்லியென்பது மரூஉ வழக்கல்லவா? கீழ்காய் நெல்லியென்பது தானே அதன் இயற்பெயர்? அதனைக் கூறுவதிற் பிழையென்ன?

முதலியார்: இவ்வளவு நேரம் அவனுடைய நேரத்தையும் உங்களுடைய வார்த்தைகளையும் செலவழித்தது தான் பிழை. "ஊருடன் கூடி வாழ்" என்பது உங்களுக்குத் தெரியாததன்றே. 'கீழ்காய் நெல்லி' என்று நீங்கள் அவனிடம் சொன்னால், அவன் அந்தப் பெயரைக் குறித்துக்கொண்டு ஆராய்ச்சி செய்யப் போகிறானா? அவனிடம் நமக்கு வேண்டியது அந்தப் பச்சிலை; அதைச் சீக்கிரம் கொண்டு வருவதற்கு எது வழியோ அதையல்லவா பார்க்கவேண்டும்; அவனிடம் 'கீளாநெல்லி' என்று முதலிலேயே சொல்லியிருந்தால், இவ்வளவு நேரத்தில் அதைக் கொண்டு வந்து கொடுத்திருப்பானே; நீங்கள் புஸ்தகம் எழுதினால் தான் 'கீழ்காய் நெல்லி' என்று எழுதவேண்டும்.


பண்டிதர் பேசாமல் வீடு சென்றார். அவருடைய தமிழறிவு உலகியலை யறியாமையால் சங்கடங்களை உண்டாக்கியது; முதலியாருடைய தமிழன்போ உலகியலோடு பொருந்து யாவருக்கும் நன்மையை உண்டாக்கிற்று.


ஆங்கிலேயர்களின் பாராட்டு

சென்னைச் சர்வகலாசாலையில் 1890-ஆம் வருஷத்தில் நடந்த பட்ட மளிப்பு விழாவில் அரங்கநாதமுதலியார் பிரசங்கம் செய்தார். அது பலரால் உயர்வாகக் கொண்டாடப் பெற்றது. 'புதிய இந்தியா' என்னும் நூலின் ஆசிரியராகிய ஸ்ரீமான் காட்டன் துரை என்பவர் அப்பிர சங்கத்தைப் பத்திரிகையிற் படித்து அதனுடைய பொருட்சிறப்பை யறிந்து ஈடுபட்டு, வலிந்து முதலியாருக்கு ஒரு கடிதம் எழுதிப் பாராட்டினாராம்; அது முதல் இருவரும் அடிக்கடி ஒருவர்க்கொருவர் கடிதம் எழுதும் வழக்கத்தை மேற்கொண்டனரென்பர்.


இந்திய கெஸட்டீயரென்னும் நூல் தொகுதிகளை (The Imperial Gazetteer of India) அரசாங்கத்தாரின் கட்டளைப்படி வெளியிட்டவராகிய ஸ்ரீமான் ஹண்டர் துரை (Sir William Wilson Hunter) என்பவர் அவற்றின் *இரண்டாம் பதிப்பைப் பின்னும் சில செய்திகளைச் சேர்த்து வெளியிட எண்ணினார். அதன் பொருட்டு இந்தியாவிலுள்ள பற்பல இடங்களுகும் சென்று அங்கங்கே உள்ள மக்களின் வழக்க ஒழுக்கங்கள்,நாகரீக நிலை, வியவசாய வியாபார நிலை, மரம் செடி கொடி விலங்கு பறவை முதலியவற்றின் தன்மை, சரித்திர சம்பந்தமான அடையாளங்கள் முதலியவற்றை ஆராய்ந்து தேடிப் பல செய்திகளைத் தொகுத்தார். இதற்காக அங்கங்கே உள்ள பேரறிஞர்களைத் துணையாகக் கொண்டார். அவர் தமிழ்நாட்டுக்கு வந்த காலத்தில் துரைத்தனத்தார் அவருக்குத் துணை புரியும்படி அரங்கநாத முதலியாரை நியமித்தனர்.


ஹண்டர் துரை முதலியாருடைய உதவியினால் பல செய்திகளை எளிதில் அறிந்தனர். அவருடைய ஆராய்ச்சித் திறமும் அறிவாற்றலும் அந்தத் துரையின் உள்ளத்தைக் கவர்ந்தன.


ஹண்டர் கும்பகோணத்திற்கு வந்திருந்தார். அக்காலத்தில் நான் அந்நகர்க் காலேஜில் வேலை பார்த்து வந்தேன். அந்தத் துரை ஒரே நாளில் காலையிலிருந்து பிற்பகல் 4- மணிக்குள் அவ்வூரைச் சுற்றிப் பார்த்து, அங்கங்கேயுள்ள தொழிலாளிகளின் நிலை, நகரத்தின் அமைப்பு, கோயில்களின் அழகு, இயற்கைப் பொருள்களின் தன்மை முதலிய வற்றைப் பற்றி அறிந்து கொண்டார். அன்று பிற்பகல் 4- மணிக்கு மேல் கும்பகோணம் காலேஜில் ஒரு பிரசங்கம் செய்தார். அதைக் கேட்கும் பொருட்டு அயலூர்களிலிருந்தும் பலர் வந்திருந்தனர்.


அவருடைய தோற்றமும் அவர் பேசிய அழகும் எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்தன; அவர் பல அரிய விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டு அரங்கநாத முதலியாரைப் பாராட்டிச் சில கூறினார்: "என்னுடைய தமிழ்நாட்டு யாத்திரையில் எனக்குப் பலவிதத்திலும் உதவி புரிந்த நண்பர் அரங்கநாத முதலியாரைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர் இந்தக் கலாசாலையில் சில வருஷங்கள் ஆசிரியராக இருந்தவராதலால் உங்களுக்கு அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனாலும் ஆங்கிலத்திலும், விஷயங் களை ஆராய்ந்தறிவதிலும் அவருக்குள்ள நுண்ணறிவை என்னைப் போல் அறிந்து மகிழும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்திராது. அவருடைய அறிவைக் கண்டு நான் வியந்தேன். அவர் ஒரு பெரிய ஆச்சர்ய புருஷரென்பதில் சந்தேகமே இல்லை, அவருடைய சிறந்த உதவியை நான் என்றும் மறவேன்" என்று அவர் கூறியதைக் கேட்ட யாவரும் அக மகிழ்ந்தார்கள்.


முதலியாருடைய ஆங்கில அறிவை ஆங்கிலேயரே புகழ்ந்து பாராட்டியது பெரிய சிறப்பல்லவா?

முற்கூறிய ஹண்டர் துரைக்கு அந்நகர் நேடிவ் ஹைஸ்கூலின் தலைவராகிய ராவ்பகதூர் அப்பு சாஸ்திரியார் ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்து அளிப்பதாக நினைத்தனர். அதற்குரியவற்றை அரங்கநாத முதலியாரோடு யோசித்துச் செய்தார். "வரவேற்புப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு விடை கூறுதற்குரியவற்றை யோசித்து வைத்துக் கொள்வதற்கு அந்தப் பத்திரத்தின் பிரதியொன்றை முந்தியே கொடுக்க வேண்டுமோ?" என்று ராவ்பகதூர் அப்புசாஸ்திரிகள் முதலியாரைக் கேட்டபொழுது, அவர் ”துரையவர்களுடைய பேனாவும் நாவும் எந்தச் சமயத்திலும் ஸித்தமாக இருக்கும்; அதலின் அப்படிச் செய்ய வேண்டுவது அவசியமில்லை" என்றார். அந்தத் துரை அரங்கநாத முதலியாரை எங்ஙனம் நன்றாக அறிந்திருந்தனரோ அப்படியே முதலியாரும் அந்தப் பேரறிஞருடைய அறிவினை அறிந்து அவரோடு பழகுவதில் மகிழ்ச்சியுடையவராக இருந்தார். "சான்றோர் சான்றோ பாலராப" என்பது உண்மையன்றோ? அரங்கநாத முதலியா ருடைய உயர்ந்த அறிவின் திறமை இயல்பாகவே எல்லோராலும் மதிக்கப்பெற்றாலும், அது ஹண்டர் துரையோடு சேர்ந்து உதவியதால் பின்னும் நன்கு வெளிப்பட்டுப் பெருமையையடைந்தது.


என் பழக்கம்

கும்பகோணத்தில் ஹண்டர் துரையுடன் அரங்கநாத முதலியார் வந்திருந்த காலத்தில் நான் அவரை முதன்முதலாகக் கண்டேன். அவரோடு நெருங்கிப் பழக அப்பொழுது சமயம் நேரவில்லை. ஆனாலும் அவரைப் பற்றிப் பிறர் கூறுவனவற்றைக் கேட்டவனாதலின் அவரிடத்து எனக்கு மிக்க மதிப்பு உண்டாயிற்று.


சென்னைக்கு நான் முதன்முதலாக வந்த காலத்தில் சேலம் ஸ்ரீ இராமசுவாமி முதலியாரவர்களுடைய பங்களாவில் தங்கியிருந்தேன். அப்பொழுது இவ்வூரிலுள்ள பல இடங்களுக்கு அவர் என்னை அழைத்துச் சென்று பல கனவான்களுடைய பழக்கத்தைச் செய்து வைத்தார்.


ஒரு நாள் பிரஸிடென்ஸி காலேஜிற்குப் போயிருந்தோம். அங்கே அரங்கநாத முதலியாரைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். அன்று அவர் தமிழ் நூல்களில் உள்ள சில வருணனைகளை எடுத்துக் காட்டி, "இவற்றின் நயங்களை யறிந்து கொள்ளாமற் சிலர் குறை கூறுகி றார்கள். கவிகளுடைய கற்பனாசக்தியை இவை எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டுகின்றன!" என்று சொன்னார். அவற்றைக் கேட்ட நான், ' ஆங்கிலத்தில் பல அரிய விஷயங்களை உணர்ந்த இவர் தமிழ்நூல் வருணனைகளைப் புகழ்ந்து பேசுவது இவருடைய தமிழன்பை வெளிப் படுத்துகின்றது; இவரிடம் பாடங்கேட்கும் பிள்ளைகளுக்குத் தமிழ்மொழி யினிடத்தும் அதிகப் பற்று உண்டாகும்' என்று எண்ணி வியந்தேன். அப்பொழுது நான் சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்க எண்ணி யிருப்பதை அவர்பால் தெரிவித்தேன். அவர் மிக மகிழ்ந்து அங்ஙனம் செய்வது அவசியமென்று கூறினார்.


சிந்தாமணியைப் பதிப்பிக்கும்பொருட்டு இரண்டாவது முறை நான் சென்னைக்கு வந்திருந்தேன். அரங்கநாதமுதலியார் ஒவ்வொரு நாளும் பிற்பகலில் 'காஸ்மொபாலிடன் கிளப்'புக்குச் சென்று பொழுது போக்குவது வழக்கம். அவரைக் காண எண்ணிய நான் இராமசுவாமி முதலியாருடன் அங்கே சென்று கண்டேன். அவர் அப்பொழுது 'பில்லியர்ட்ஸ்' விளையாடிக்கொண்டிருந்தார். எங்களை அவர் உட்காரச் சொல்லிவிட்டு, விளையாடிக்கொண்டும் என்னைப் பார்த்துக்கொண்டும்,

  • "என்னனைய முனிவரருமிமையவருமிடையூறென்
    றுடையரானால்
    பன்னகமு நகுவெள்ளிப்பனிவரையும் பாற்கடலும்
    பதும பீடத்
    தந்நகருங் கற்பகநாட் டணிநகருமணிமாட
    வயோத்தியென்னும்
    பொன்னகருமல்லாது புகலுண்டோ விகல் கடந்த
    புலவு வேலோய்"
    (கம்ப. கையடைப்.)

என்னும் செய்யுளைச் சொன்னார். கேட்ட நான், "நானல்லவோ அந்தப் பாடலைத் தங்களிடம் சொல்லி என் குறையைத் தீர்த்துக்கொள்ள லாமென்று எண்ணியிருந்தேன்!" என்றேன். அவர், "நீங்கள் இந்தச் செய்யுளைச் சொல்வீர்களென்று எனக்குத் தெரியும். அதைச் சொல்லும் சிரமத்தை உங்களுக்கு வைக்கக் கூடாதென்று நானே சொல்லி விட்டேன்" என்றார். அப்பால் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். சிந்தாமணியைப் பதிப்பித்து வருவதைத் தெரிவித்தேன். அவர் மகிழ்ச்சி யுற்றார்.


பின் ஒருநாள் அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன்; அவரைக்கண்டு,
(கட்டளைக்கலித்துறை)

"நந்தாத வான் பொரு ளைப் புலவோர்க்கு நயந்தளிக்கும்
சிந்தாமணியைப் பலருமெளிதுறச் செய்திடுவாய்
மந்தாரத் தோடெழிற் சந்தானம் போலிரு வான் பொருளை
வந்தார்க்களித்திடு மால் ரங்கநாதமகிபதியே"

என்ற செய்யுளைக் கூறினேன்; அன்றியும் பலரிடம் கையொப்பம் பெற்று நான் சிந்தாமணியின் பதிப்பைத் தொடங்கியிருப்பதையுஞ் சொன்னேன். அவர் உடனே உவந்து 50ரூபாய் தருவதாகக் கையொப்பமிட்டார்.

அக்காலமுதல் நான் சென்னைக்கு வரும்பொழுதெல்லாம் முதலியாரைக் கண்டு ஸல்லாபம் செய்யும் லாபத்தைப் பெற்றேன். அவரோடு பழகப்பழக அவருடைய குணங்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. அவருடைய தோற்றம் கம்பீரமாக இருக்கும். நறுக்கிவிட்ட தலைமயிர் பிடரியிலே வரிசையாகத் தொங்குவதும், முகத்தோற்றமும், பார்வையும் ஒரு சிங்கத்தின் நினைவை உண்டாக்கும். தைரியத்திலும் அவர் சிங்கத்திற்குக் குறைந்தவர்ல்லார். அவரிடத்தில் அறிஞர்களும் கனவான்களும் நன்மதிப்பு வைத்து மரியாதையுடன் பழகி வந்தார்கள். ஜட்ஜு முத்துசாமி ஐயர், பாஷ்யமையங்கார், சேலம் இராமசுவாமி முதலியார், புதுக்கோட்டையில் திவானாக இருந்த சேஷையா சாஸ்திரிகள், ஸ்ரீநிவாஸராகவையங்கார், கும்பகோணம் ரகுநாத ராயர், சோமு செட்டியார், பம்மல் விஜயரங்க முதலியார் முதலியவர்கள் அவருடைய நண்பர்கள்.


ஆங்கிலம் முதலியவற்றிற் சிறந்த பயிற்சியும் அன்பும் அவருக்கு இருந்தன; ஆயினும் தமிழினிடத்தில் அவருக்கு ஒரு தனி அன்பு இருந்து வந்தது. தமிழ்ச் செய்யுட்களிற் பல அவருக்கு மனப்பாடம் உண்டு. தமிழ்ச்சுவையை அவர் உணர்ந்து உணர்ந்து இன்புறும்பொழுது உடனிருப்பவர்களுக்கும் தமிழபிமானம் உண்டாகும். கவிகளுடைய கற்பனையின் உயர்வையும், மனோபாவத்தையும் தாமறிந்து கூறுவார்; 'இக்கருத்தை இப்படிச் சொல்லலாம்; இப்படியும் கூறலாம்; ஆனால் இந்தக் கவியைப் போல இவ்வளவு அழகாக வெளியிட முடியாது' என்று செய்யுட்பொருள்களை வியந்து பாராட்டுவார். கம்பராமாயணத்திலும் வேறு சில பிரபந்தங்களிலும் அவருக்கு ஈடுபாடு அதிகம். இக்காலத்தில் ஆங்கிலத்தில் அறிவுடைய பலர் ஆங்கிலத்திலேயே முதலில் நினைந்து பிறகு தமிழிலே பேசுகிறார்கள்; முதலியார் அத்தகையரல்லர்; அவர் ஒருமுறை, "நான் எதையாவது நினைக்கும்போது முதலில் தமிழிலே தான் நினைப்பேன். தமிழினால் உண்டாகும் இன்பம் இங்கிலீஷினால் உண்டாவதில்லை" என்று என்னிடம் சொல்லியிருக்கின்றார்.


பாடற்கடிதம்

சீவகசிந்தாமணியை நான் பதிப்பித்து வந்த காலத்தில் ருசியான பகுதிகளை முதலியாரிடம் அவ்வப்போது காட்டுவேன். அவர் அவற்றைப் பார்த்து அந்நூற் செய்யுட்களின் அருமையையும் உரையின் பெருமை யையும் அறிந்து இன்புறுவார்; பதிப்பு முறை அழகாக இருக்கின்றதென்று பாராட்டுவார்; அதனால் எனக்குப் பின்னும் ஊக்கம் மிகுதியாக உண்டாகும்.


சிந்தாமணிப்பதிப்பு 1889-ஆம் வருஷ முடிவில் நிறைவேறியது. அப்பொழுது எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கு இணையானதை என் வாழ்க்கையில் இதுகாறும் கண்டிலேன். அச்சுக்கூடத்திற்கு அந்தப் பதிப்புவகையில் நான் பணம் கொடுக்கவேண்டியிருந்தது. அதைக் கொடுத்துவிட்டுக் கும்பகோணம் செல்ல வேண்டியவன். கையிலோ பணம் இல்லை. கையொப்பமிட்ட அன்பர்களிடம் பணம் வாங்கிக் கொடுக்கலாமென்று எண்ணினேன். கைப்பிரதியை, "பைண்டு" செய்து சேலம் இராமசுவாமி முதலியா ரவர்களிடம் சென்று காட்டினேன்; பணம் வேண்டியிருப்பதையும் தெரிவித்தேன். அரங்கநாத முதலியாரிடம் சென்றால் அவர் உதவி புரிவாரென்று அவர் கூறினார். அங்ஙனமே நான் முதலியாரைப் பார்க்கச் சென்றேன்:'அவர் இந்தப் புஸ்தகத்தைக் கண்டால் அளவற்ற மகிழ்ச்சியை அடைவார்; நாம் பட்ட சிரமத்துக்கு அவருடைய சந்தோஷம் ஆறுதலையளிக்கும்; அவர் வாக்களித்த பணத்தையும் பெறலாம்; என்ற எண்ணத்தோடு போனேன். அவ்ர் வீட்டிற்குள் இருந்தார். நான் போனகாலம் பிற்பகல் நான்கு மணி. நான் வந்திருப்பதைச் சொல்லியனுப்பியபோது அவர், "நான் இப்பொழுது எம்.ஏ, பரீக்ஷைக்குரிய வினாப்பத்திரம் ஸித்தப்படுத்திக் கொண்டி ருக்கிறேன். இன்று மாலை ஏழுமணிக்குள் முடித்து அனுப்பிவிட வேண்டும். நாளைக்காலையில் வந்தால் பார்த்துப் பேசலாம்" என்று சொல்லிய னுப்பிவிட்டார். அவரைப் பார்த்துப் பேசவேண்டுமென்ற பெரு விருப்பத்தோடு சென்ற எனக்கு இது மனத் தளர்ச்சியை உண்டு பண்ணியது. மறுநாள் நான் கும்பகோணத்திற்குப் போகவேண்டியவனாக இருந்தேன். அதனால் மிக்க வருத்தமுற்று இராமசாமி முதலியாரிடம் சென்று அரங்கநாதமுதலியாரைப் பார்க்கமுடியாமையையும், மறுநாள் தங்க இயலாதவனாக இருப்பதையும், பிறவற்றையும் தெரிவித்தேன். பிறகு ஒரு நண்பரிடம் வேண்டிய பணம் கடனாகப் பெற்று அச்சுக் கூடத்திற்குக் கொடுத்துவிட்டுக் கும்பகோணம் போய்ச்சேர்ந்தேன்.


அரங்கநாதமுதலியாரைப் பாராமல் வந்தது என் மனத்தில் ஒரு குறையாகவே யிருந்தது. மறுநாட் காலையில் என் வரவை அவர் எதிர்பார்த்திருப்பாரென்றும் என்னைக் காணாமையால் வருத்தமுறக் கூடுமென்றும் எண்ணினேன். ஆதலின், கும்பகோணத்திற்குப் போன அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கினேன். அக்கடிதம் பாட்டுக்களாகவே எழுதும்படி நேர்ந்தது. அப்பாட்டுக்களின் கருத்து, 'நான் தங்களை நேரிற்கண்டு சிந்தாமணிப் புத்தகத்தைக் காட்டி ஸல்லாபம் செய்துவிட்டு வரலாமென்றெண்ணித் தங்கள் வீட்டிற்கு வந்தேன். என்னுடைய தெளர்ப்பாக்கியத்தால் தங்களைக் காணக்கூடவில்லை. ஆயினும் இராமசுவாமி முதலியாரவர்களிடத்தில் தங்கள்பாற் சொல்ல வேண்டியவற்றைத் தெரிவித்துவிட்டு இங்கே வந்தேன். தங்கள் திருமுகத்திலிருந்து வரும் வார்த்தைகளைக் கேட்கப் பெறாவிடினும், தாங்கள் எழுதும் திருமுகத்திலுள்ள வார்த்தைகளையேனும் காணச் செய்ய வேண்டும்' என்பது. அக்கடிதம் வருமாறு:-

(அறுசீர்க்கழிநெடிலடியாரிசிரிய விருத்தம்)

1. குலத்தினாற் புலவர் மெச்சுங்குணத்தினாற் பலநூலாயும்
புலத்தினாற்றிசையளக்கும் புகழினாற் புரையில் வாய்மை
வலத்தினாலடுத்தோர்த் தாங்கும் வன்மையால் வண்மை மிக்க
நலத்தினாற் பொலிய ரங்கநாதமா* முகிலீ தோர்க.

(புலம்-அறிவு, புரை-குற்றம்)

(மேற்படி வேறு)

2. திருத்தருமா முனிவனருள் தெள்ளியசிந்தாமணியைத்
திருவிலாதேன்
வருத்தமிக வாய்ந்தச்சிற் பதிப்பித்து முடித்தபெரு
மகிழ்வையோதும்
கருத்துடையேனாகியந்த நூலையுங்கைக் கொடு நின்னைக்
காண வந்தும்
பெருத்த வாக்கியமென்னைத் தடுத்தமையானினைக் காணப்
பெற்றிலேனால்.

(திருத்த்குமாமுனிகள்-திருத்தக்கதேவர், திரு-செல்வம்)

3. ஆயினுநின்னன்புடைமை யெள்ளளவு மகலாதென்
றகத்திற்கொண்டே
தாயினுமன்பமைந்திலகு மிராமசாமிக்குரிசில்
தன்பாற் பின்னர்
மேயினனின் பால் விளம்ப வெண்ணியவெலாமவன்பால்
விளம்பி வந்தேன்
நீயிரு வீரர்களுமோர் மனமுடையீரென்பதனை
நினைந்தேமன்னோ.

4. இது பொழுதிலெனக்கின்றி யமையாத தின்னதென
இயல்பாவோர்ந்த
மதுவிரவுந் தொடைப்புயத்து வள்லலே வெளிப்ப்டையா
வழங்கவென்னெஞ்
சதுதுணிவுற்றிலதானின் றிருமுகமாற்றங் கேட்கும்
ஆசையேற்குக்
கதுமெனவே மகிழ்வுமிக நினது திருமுகமாற்றம்
காணச் செய்யே.

(திருமுக மாற்றம்- வாய்ச்சொல், கடிதவாக்கியம், கதுமென-விரைவாக)

இரண்டு நாட்களுக்குப் பின் எனக்கு முதலியாரிடமிருந்து ஒரு கடிதமும் 50ரூபா உண்டியலொன்றும் வந்தன. ஏழு பாடல்களும் ஒரு குறிப்பும் அக்கடிதத்தில் இருந்தன. அவை வருமாறு:

(அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்)

1*பொறையினாற் பகையைத் தாக்கும் பொருள்படச் சீடர்க்கோதும்
முறையினான் மடமை நீக்கும் முத்தமிழ்க்கல்வித் தேர்ச்சி
நிறையினாலையம் போக்கும் நெடும்புகழ்த் தன்பேர்க்கொத்த
துறையினாலெளிதினாக்குந் தூயனிஃதுவந்து காண்க.

(மேற்படி வேறு)
2. மகமாற்றந்தணருவப்பமாற்றலர்தாமிகவடங்கவானோரேத்த
நகமாற்றாம் மில்லையுங்கை வில்லையுஞ்செய் நம்பாடி மறவா நண்ப
அகமாற்றமடைந்திலனீ துண்மையினியையமொழி அன்பினாற்பொன்
முகமாற்றம் கேட்டனையான் மொழியிணைத்துக் கவிபாட முயன்றிலேனால்
(மகம் ஆற்று அந்தணர்- யாகம் செய்யும் பிராமணர் . மாறலர்- பகைவர். நகமால் தம் இல்லையும் கைவில்லையும் செய்நம்பர்- தம்முடைய இருப்பிடத்தையும் கைவில்லையும் மலையாகச் செய்த சிவபெருமான். அகமாற்றம்-மனவேற்றுமை)

(கலிநிலைத்துறை)

3.பாடுந்திறனில னாயினுமறுமொழி பாவலநீ
நாடுந் திரனிலை நவிலர் கொருவகை துணிவுற்றேன்
கூடுந்திறனறி புலமைக் கவிஞரொடுறவாய்க் கூற்
வாழுந்திறனுறு செந்தமிழமுதச் சுவையோர்ந்தே
(கூற்றாடும்- பேசும்)

(எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

4. அன்றெனைக் காண நயந்தனையைய
அமையமொவ்வாமையாவமைவாய்ச்
சென்றனை நின்னைக் கண்டிலாக் குறைய
தென்னதே சிற்றறிவுடையேன்
ஒன்றல பலவாம் பிழை செயத் தகுமே
உத்தம குணமொருங் குடையாய்
கன்றினைக் காராக்களியுறக்காக்கும்
கனிவொடு கமித்தனின் கடனே.

(காரா- கார்காலத்திற்குரிய பசு. கமித்தல்- பொறுத்தல்)

(வெண்பா)

5. விரும்பார்க் கினியானென்னக் குறிபேர் மேலோன்
கரும்பார் சுவையின்பங்கண்டாநரும்பாகச்
சிந்தாமணியின் சிரப்பனைத்து மோர்ந்தனை
நந்தா மணியா நயந்து.

(விரும்பார்க்கு இனியான் - தன்னை விரும்பாதவர்க்கு இனிமை தாராதவன்; இஃது எதிர்மறை முகத்தால், விரும்புகின்றவர்க்கு இனிப்பவனென்னும் பொருளையுடைய நச்சினார்க்கினியன் என்னும் உரையாசிரியர் பெயரைக் குறித்தது. அரும்பாகம்- அரிய செய்யுட்பாகங்களையுடைய)

(கொச்சகக்கலிப்பா)
6. மருந்தனசீவகசிந்தாமணிக்குரையை மாண்புலவர்
விருந்தெனக்கொள் வகையளித்தாய் வேறியம்பல் வேண்டுமதோ
பெருந்திமிரம் போக்குவித்தாய் பேரறிவினாதவனைப்
பொருந்தீரம் பெற்றனையே புத்தகமும் பெற்றேனே.

(மருந்து- அமிர்தம், திமிரம்-இருள், அறியாமை. ஆதவனை-சூரியனை)

(வெண்பா)

7. மருந்தென சிந்தாமணியுரையின் மாண்பை
விருந்தெனக் கற்றோர் வியக்கப் - புரிந்தோய் நீ
பட்டபாட்டுக்குப் பகர்ந்தபடி யஞ்சல் வழி
விட்ட பாட்டுக்குமாமே.

(பட்டபாடு- பட்ட சிரமம், பகர்ந்தபடி- நான் முன்பு வாக்களித்தபடி. அஞ்சல்- தபால் விட்டபாட்டு- நீங்கள் அனுப்பிய செய்யுள்)

பிரமகுல திலகராகிய மகாஸ்ரீ வே. சாமிநாதையர் அவர்களுக்கு விஞ்ஞாபனம்.


என்னுடைய மூத்தகுமாரனாகிய சி. கல்யாணசுந்தரம் நானியற்றிய பொருளிலாப் பாட்டுக்குத் தாங்கள் பொருள்படவும் பாடுறவும் உரையிட வேண்டுமென விரும்புகிறான். ஏழையாகிய யானீட்டிய பொன் அவனுக்குத் தான் தேடாத பொன்னன்றோ! தான் தேடாத பொன்னுக்கு மாற்றுமில்லை, உரையுமில்லையெனக் கூறியவாறாமோ அல்லவோ அறியேன்.


மஹாஸ்ரீ சேலம் இராமசாமி முதலியாருக்கு அவர் கேட்டபடி ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டேன். இப்போது Bank of Madras-இல் மாற்றத்தக்க Cheque மூலமாய்த் தங்களுக்கு ஐம்பது ரூபாய் அனுப்பியிருக்கிறேன்.


இப்படி நான் கொடுத்த நூறு ரூபாயும் தங்களுடைய புலமையையாவது தாங்கள் எடுத்துக்கொண்ட உழைப்பையாவது அளக்கும் மாண்புடைய தன்றெனினும் என்னுடைய சக்திக்கியன்றதென மகிழ்ந்து கொள்வீராக.

அன்பன்,
பூ. அரங்கநாதன்.


இக்கடிதத்தைப் படிக்கும் அன்பர்கள் முதலியாருடைய தமிழ் அறிவையும், தமிழறிவைப் பாராட்டும் குணவிசேடத்தையும், அன்புக்கு வசமாகும் திறத்தையும் அறியலாம். இத்தகைய குணக்குன்றத்தோடு பழகிய நாட்களை நான் எங்ஙனம் மறக்க முடியும்! தாம் சிறிதளவு தமிழறிவு பெற்ற மாத்திரத்தில் தமக்குள்ள செல்வம், அதிகாரம் முதலிய பிற சிறப்புக்களால் தமிழ்ப்பெரும்புலவர்களையும் இரவலர்களாகவும் ஊழியர்களாகவும் எண்ணி யொழுகுவாரையும் இவ்வுலகம் கண்டிருக் கிறது; பெருக்கத்து வேண்டும் பணிவையே பேரணிகலனாகப் பூண்ட அரங்கநாத முதலியாரைப் போன்ற குணமணிகளையும் கண்டிருக்கிறது. முதலியாரைப் போன்ற பெருந்தகையினர் உலகுக்கு வழிகாட்டும் தலைமையை உடையரானமைக்குக் காரணம் அவர்களுடைய மாசற்ற எண்மையும், கைம்மாறு கருதாத பேரன்புமே யல்லவோ?

இந்தக் கடிதத்தைக் கண்ட என் மனநிலை இன்னப்டி இருந்ததென்று எழுதிக்காட்டுதல் அரிது. முதலியாரைக் காணாத குறை கடிதம் கண்ட வுடன் இருந்தவிடம் தெரியாமல் மறைந்தது; அவருடைய அன்பு என் உள்ளத்தை விழுங்கி நின்றது. அதனால் உடனே ஒரு பாடற் கடிதத்தை அவருக்கு எழுதி யனுப்பினேன்.


உண்மையை யுணர்ந்து பாராட்டி ஊக்கமளித்து அன்பு செய்யும் பெருந் தகையினருக்கு முன்பு கல்வியறிவு தானே ஒளிவிடும்; எதையும் கண்டித்து அடக்கும் தகையாளருக்கு முன் மிக்க கல்வியறிவு கூட ஓடி இருந்தவிடந்தெரியாமல் ஒளித்துக்கொள்ளும். அரங்கநாத முதலியாரு டைய கடிதம் என் உள்ளத்தைக் கிளரச் செய்தது; அவருடைய அன்பும் ஆதரவும் என்னை யறியாமல் ஊக்கத்தை உண்டாக்கின. அதன் பயனே பின்வரும் கடிதம்:

(அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்)

1. பூமேவு திருமகளும் பகலாங்கிலேயமொழிப் பூவை யுஞ்சீர்ப்
பாமேவு தமிழ்மகளும் புகழ்மகளுங்கொடைமகளும்
பயன் பெற்றோங்கத்
தாமேவி நடமாடு மாங்கமதாய்த் தான் விளங்கல்
சாற்றி யாங்கு
மாமேவு மெழிலரங்க நாதப்பேர் கொளுமண்ணல்
மகிழ்ந்து காண்க.

1. நித்தியநின் மலநிருவி காரநிரஞ் சனசிவத்தின்
நேயமென்றும்
மெத்திய சிந் தனையினொடுஞ் சத்தியவாக்குங்கொண்ட
விறலோய் நின்றன்
கத்தியமும் பத்தியங்களேழு நிதங்கண்டுமிகக்
களிக்கின்றேனப்
பத்தியங்கணினைப் பாராத் துயரமெனுமொரு நோயைப்
பறித்த மன்னோ.

(மெத்திய-மிக்க., கத்தியம்-வசனம். மத்தியம் - பாட்டு; வைத்தியர் கூறும் பத்தியமென்பது தொனி.)

3. தேனென்கோ பாலென்கோ தேனும் பாலுங்கலந்த
தெளிவேயென்கோ
வானென்கோ வுலகமரு மமுதென்கோ கரும்பென்கோ
வயங்கு கண்டு
தானென்கோ துயர்க்கடலைக் கடந்துசெல வெழுபுணையாச்
சாற்று கோபூ
மானென்கோ புகழரங்க நாதமுகினின் கவியின்
மாண்பை மன்னோ.

(என்கோ-என்பேனோ. வான் என் கோ உலகு அமரும் அமுது- தேவலோகம் என்னப்படும் தலைமையுடைய உலகத்தில் தங்கும் அமுதம்; கோ தலைமை கண்டு- கற்கண்டு. புணை-தெப்பம், பூமான் என்கோ- அரசனென்னப்படும் தலைவன்.)

(கலிநிலைத்துறை)

4. பாதித் திறனிலனாயினுமெனநவில் பாவொன்றே
பாடுந்திறனுனை யெனவே நன்கு பகர்ந்தோங்கும்
வாடும் பயிர்மலி மழைபெற்றாங்கு மனத்துன்பால்
வா தமினனுண் மகிழத் தயைசெய்து மகிழ்கோவே.

(அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

5. பொருளிலாப் பாட்டொன்று புகன்றனை நீ நவின்றசுவை
பொழியும் பாவைப் பொருளிலாப் பாடல்களென்பாடல் பொருளுள பாடல் புகழ்நின்பாடல்
பொருளோடு விரவியஞ்சல் வழிவந்த செயலொன்றே
பொருந்து சான்றாம்
பொருளிலாவெனையுமொரு பொருளாக் கொணயசகுணப்
புகழ்க்கோமானே.
(பொருள்-நல்ல கருத்து. பணம். அஞ்சல்-தபால்)

6. மொழியிணைத்துக் கலிபாட முயன்றிலே னெனநவின்ற
மொழிதான் மெய்யே
மொழியிணைத்துக் கவிபாட முயலலெமர் செயலதுபோல்
முயலாதான்ற
மொழியிணைத்துக்கவிபாடி மகிழ்வித்தல் நினதியற்கை
முறைமையாமால்
மொழியிணைத்துக் கவிபாடு மறிஞர்கள்பா மாலையணி
மொய்ம்பினானே.

(வார்த்தைகளை வருத்தப்பட்டுச் சேர்த்துக் கவிபாடாமல் இயல்பாக வேண்டிய வார்த்தைகள் வேண்டியவாறு அமையக் கவிபாடும் ஆற்றாலுள்ளாயென்பது கருத்து. எமர்-எம்மவர். ஆன்றமொழி- தாமாக வந்து அமைந்த மொழிகள். மொய்ம்பு-தோள்.)

(வெண்பா)
7. பட்டபாட்டுக்குப் பகர்ந்தபடி யஞ்சல்வழி
விட்டபாட்டிற்குமாமேயென்ற-மட்டில் சுவை
வெண்பா கரும்பாவென விளித்து மேவியதால்
நண்பாவென் சொற்றிடுவேன் நா

(வெண்பா, கரும்பா: முரண். கரும்பா என இனித்து- இது கரும்புதானோ என்று சொல்லும்படி இனிமை தந்து)

(அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)

8. அகமகிழ்ந்து விடுத்தவெழு பாடல் மகிழ்வெழுபாடல்
ஆனவன்றிச்
சகமகிழும் பிறர்கவியைத் தாழ்த்திமிசையெழு பாடல்
தாமாய் மேவும்
மிகமகிழ்ந்த வெழுபாடல் தமையெண்ணு பெண்ணுபுயான்
விளம்பலாலே
தகமகிழ்ந்தென் பாடல்களெண் பாடல்களாகுபுநின்னைச்
சார்ந்த மன்னோ.
(மிசை-மேலே, எண்ணுபு, எண்ணுபு-எண்ணி யெண்ணி, எண்பாடல்கள்-எண்ணும்பாடல்கள், எட்டுப்பாடல்கள்)


பகலும் இரவும்

பத்துப்பாட்டை அச்சிடுவதற்காக நான் சிலகாலம் சென்னையில் தங்கியிருந்தேன். திருமானூர் ஸ்ரீகிருஷ்ணையரென்பவர் எனக்கு உதவியாக உடனிருந்தார். இருவரும் ஒருநாள் காலை 8-மணிக்கு அரங்கநாத முதலியார் வீட்டுக்குச் சென்றோம். முதலியாரோடு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு முழுவதும் தமிழின் நயத்தைப் பற்றியும் பத்துப்பாட்டின் பெருமையைப் பற்றியுமே. தமிழ்ச் செய்யுட்கள் பலவற்றைச் சொல்லிச் சில நயங்களை எடுத்துக் காட்டினேன். அவரும் சில நயங்களை உரைத்ததோடு இங்கிலீஷிலும் அப்படியே உள்ளனவென்று எடுத்துக்காட்டினார். அப்பொழுது பலர் உடனி ருந்தார்கள். இப்படி நிகழ்ந்த பேச்சின் சுவையில் நான் பசியையும் மறந்தேன். முதலியாரும் உடன் இருந்தவர்களும் உண்ணச் செல்ல வில்லை. பிற்பகல் 3-மணிவரையிற் பேசிக்கொண்டிருந்தோம்; பொழுது போனதே தெரியவில்லை. அப்பால் விடை பெற்றுக்கொண்டு நானும் கிருஷ்ணையரும் சென்றோம்.


அன்று இரவு கிருஷ்ணையரையும் உடன் அழைத்துக்கொண்டு எனக்குத் தெரிந்தவராகிய ஒரு கனவானிடம் சென்றேன். அக்கனவானைக் கண்டு க்ஷேமம் விசாரித்த பிறகு பத்துப்பாட்டைப் பற்றி, "இது மிகவும் பழைய காலத்து நூல். பல அரிய விஷயங்களை உடையது; இப்போது இதனை அச்சிடுவதற்காக இங்கே வந்திருக்கிறேன்" என்று சொன்னேன். அவற்றை அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல், "இதெல்லாம் யாருக்குப் பிரயோசனம்? ஒருவருக்கும் புரியாத இந்தப் பாட்டு எதற்கு? பாட்டென் றால் எளியதாக இருக்கவேண்டும். ஒரு பாட்டே இவ்வளவு நீளமாக இருக்கிறதே; யார் படிக்கப் போகிறார்கள்! நீங்கள் இந்தப் புஸ்தகத்தைப் 'புரோஸ் ஆர்டராக' (Prose order) எழுதிவிடுங்கள். பத்திரிகைகளிற் போட்டு விடலாம். வசன நடையில் இருப்பதுதான் புஸ்தகம். இதை அச்சிட்டு வீணே கஷ்டப்படவேண்டாம்" என்றார். மிகவும் சந்தோஷிப்பாரென்று எவ்வளவோ ஆவலாக இருந்த நான் அதன் அருமையை எள்ளளவும் அறியாமல் இங்ஙனம் அவர் கூறவே, விரைவிற் பேச்சை முடித்துக் கொண்டு உடனே திரும்பிவிட்டேன்.


தெருப்பக்கம் வந்ததும் கிருஷ்ணையரிடம், "பகலில் மூன்று மணி வரையில் முதலியார் வீட்டில் பட்டினியோடு பேசினபோது என்ன சந்தோஷமாக இருந்தது! இங்கே எப்படி இருக்கிறது! பகலுக்கும் இரவுக்கும் எத்தனை வித்தியாஸமோ அத்தனை வித்தியாஸம் இருக்கிறதல்லவா? ஒரே நாளில் இந்த இருவகை அனுபவத்தையும் பெற்றோம்" என்றேன். 'நிழலருமை வெயிலில் தெரியும்' என்பது போல,முதலியாருடைய அருமையானது ரஸிகத்தன்மையில்லாதவர் களுடன் பழகும்போதெல்லாம் மிகவும் நன்றாகப் புலப்பட்டு வந்தது.


கச்சிக்கலம்பகம்

முதலியார் செய்யுள் இயற்றும் பழக்கத்தை மேன்மேலும் விருத்தி செய்துகொண்டு வந்தார். பிரபந்தங்களைப் படிக்கும்போது அவற்றின் சொற்பொருளமைதிகளையும் நயங்களையும் கவனிப்பார். அதனால் தாமும் ஏதேனும் ஒரு பிரபந்தம் இயற்ற வேண்டுமென்னும் ஆவல் அவருக்கு உண்டாயிற்று. அக்காலத்தில் பிரஸிடென்ஸி காலேஜில் தமிழ்ப்பண்டிதராக இருந்த தொழுவூர் வேலாயுதமுதலியாருடைய பழக்கத்தால் அவருக்குச் செய்யுள் செய்யும் ஆற்றல் நன்றாக உண்டாகி விருத்தியாயிற்று. இருவரும் ஒரு விஷயத்தைக் குறித்துப் போட்டி போட்டுக் கொண்டு பாடுவார்கள். வேலாயுத முதலியாரை அவர் ஒரு கலம்பகம் பாடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப்படியே அவர் திருவொற்றியூர்ப் படம்பக்கநாதரையும், கச்சி ஏகாம்பர நாதரையும் பாட்டுடைத்தலைவர்களாக வைத்து 'மகிழ்மாக் கலம்பகம்' என்ற ஒரு நூலை இயற்றினார். காயாறு ஞானசுந்தரையரென்ற வீரசைவக் கவிஞர் அந்நூலுக்கு அளித்த சிறப்புப் பாயிரத்தால் இதனையறியலாம். அச்செய்யுள் வருமாறு;

"பேசுமறைப் பொருளன்பர்கின்பூட்ட மாமகிழ்க்கீழ்ப்
பிரியாவாக்கம்
ஆசுகவி பொருந்தவருந் தமிழ்மாலயணிகென்ன
வறிவாற்சான்ற
வீசுபுகழ்ப் பூண்டி மகிழரங்கநா தன்சொல்ல
விளம்பினானால்
மாசிலருட் குரவன் வழியொழுகுவே லாயுதனாம்
வாய்மையோனே."

அந்நூல் 1887-ஆம் வருஷம் அச்சிடப் பட்டது. அது முதல் அரங்கநாத முதலியாருக்குத் தாமும் ஒரு கலம்பகம் பாடவேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. அது முதிர, முதிர, ஸ்ரீகாஞ்சீபுரம் ஏகாம்பர நாதரைத் தலைவராக வைத்துக் கச்சிக் கலம்பகம் என்னும் நூலைப் பாடி முடித்தார்.


நான் விடுமுறைக்காலங்களில் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு வருவேன். அந்தக் காலத்தில் பத்துப் பாட்டு அச்சிடப்பட்டு வந்தது. சென்னைக்கு வந்திருந்த காலங்களில் முதலியாரவர்களைக் காணாத நாள் இராது.


பல துறைகளிற் செல்வாக்கு மிக்க முதலியாரைப் பார்க்க வருபவர்கள் பலர். எவ்வளவோ உயர்ந்த பல பிரபுக்களும் வித்துவான்களும் வருவார்கள். அவரவர்கள் தங்கள் தங்கள் விலாஸம் அச்சடித்த சீட்டை அனுப்பித் தெரிவித்துச் சென்று பார்த்து வருவார்கள். சில சமயங்களில் பார்க்கமுடியாமல் அவர்கள் திரும்பிவிடுவதும் உண்டு. முதலியாரவர் களுடைய பலவேலைகளுக்கிடையே பிறர் சென்று அவர் காலத்தை வீணாக்குதற்கு அஞ்சுவார்கள். இந்த நிலையில், நான் போகும்போது மாத்திரம் சீட்டனுப்பாமலே எந்தச் சமயமும் வரலா மென்று அவர் சொல்லிவிட்டார். சிந்தாமணிப் புத்தகத்தைக் கொடுக்க வெண்ணி நான் சென்ற காலத்தில் பாராத குறைக்குப் பரிகாரம் செய்வார்போல இங்ஙனம் அவர் செய்தது எனக்கு வியப்பைத் தந்தது. நான் சென்ற காலங்களில் ஒரு தடையும் இராது. தமிழில் அவருக்கிருந்த பேரபி மானமே இதற்குக் காரணமாகும்.

முதலியார் கச்சிக் கலம்பகத்தை இயற்றிவந்தகாலத்தில் நான் சில சில பாடல்களைக் கேட்டதுண்டு. எனக்குத் தெரிந்த சில கருத்துக்களையும் தெரிவிப்பேன். அவர் மிக மகிழ்ந்து ஏற்றுச் சேர்த்துக் கொள்வார். பத்துப் பாட்டு அச்சிட்டு முடிந்தவுடன் நான் கும்பகோணம் சென்றேன்.


கச்சிக்கலம்பகம் முடிவு பெற்று 1889-ஆம் வருஷம் அச்சிடப் பட்டது. அதனை அரங்கேற்றவேண்டுமென்று பல அன்பர்கள் விரும்பியபடி, தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் உயர்தரக் கலாசாலையில் ஒரு பெரிய சபையில் அரங்கேற்றம் தொடங்கப் பட்டது. கிறிஸ்டியன் காலேஜில் தமிழ்ப்பண்டிதராக இருந்த சின்னசாமி பிள்ளை முதன்முதலில் கலம்பகத்துக்கு உறை கூறிப் பிரசங்கம் செய்தார்; தண்டலம் பாலசுந்தரமுதலியாரும், பச்சையப்பன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் முருகேச முதலியாரும் பின்பு அரங்கேற்றத்தை நடத்தி வந்தார்கள். அங்ஙனம் கலம்பகம் அரங்கேறி வருவதைக் கும்பகோணத் திலிருந்த எனக்கு அரங்கநாத முதலியார் ஒரு கடிதமூலமாக அறிவித்து "நீங்கள் வந்து இதனை அரங்கேற்ற வேண்டு மென்பது இங்குள்ள பலருடைய விருப்பம்; நானும் அப்படியே விரும்புகின்றேன்." என்று அன்புடன் எழுதியிருந்தார். மெய்யன்பராகிய அவர் விரும்பும் போது மறுத்தலும் கூடுமோ? அவர் விருப்பத்தின்படியே சென்னை வந்து சேர்ந்தேன்.


சென்னையிலுள்ள பிரபுக்களும் தக்க கனவான்களும் பண்டிதர்களும் பிற அறிஞர்களும் நாள்தோறும் அரங்கேற்றத்திற்கு வந்து கூடுவார்கள். நகரத்திலுள்ள முக்கியமானவர்களை ஒருங்கே பார்க்கவேண்டு மென்றால் அந்தக் கூட்டத்திலே பார்க்கலாம். நூற்றுக்கணக்கான பேர்கள் கூடியிருப்பார்கள்.


ஒவ்வொரு நாளும் பிற்பகலில் 4 அல்லது 5 மணிக்கு அப்பாடசாலை யின் வாயிலில் முதலியாருடைய வரவை எதிர்பார்த்துப் பலர் நின்றுகொண்டிருப்பார்கள். முதலியார் என்னை அழைத்துக்கொண்டு வருவார்; அங்குள்ள முக்கியமான கனவான்களை எனக்குப் பழக்கம் செய்து வைப்பார். எனக்கும் அவர்களுக்கும் பழக்கம் உண்டாவதற்கு வேறு வாய்ப்பு ஒன்றும் இல்லை; கலம்பகப் பிரசங்கத்தினாலே அவர்களுடைய பழக்கங்கள் எனக்கு உண்டாயின. முதலியாரவர்களிடம் அவர்களுக்கிருந்த பெருமதிப்பினால் அவருடைய சார்பு பெற்ற என்னிடமும் அவர்களுக்கு ஒருவகையான அன்பு உண்டாயிற்று. நாள்தோறும் சேலம் இராமசாமி முதலியாரும் வந்து கேட்டு வந்தார்.


பிரசங்கம் நடைபெறுகையில் ஒவ்வொருவரும் கலம்பகத்தின் பிரதி ஒன்றை வைத்துப் பார்த்துக்கொண்டு வருவார்கள். ஒரு பக்கம் முடிந்து மறுபக்கம் தொடங்கும்போது அந்தப் பக்கத்தை அவ்வளவு பேரும் திருப்புவார்கள்; காகிதம் மெல்லிதானாலும் சலசலவென்று ஓர் ஓசை கேட்கும்; கூட்டத்தின் மிகுதியை அந்த ஓசையே புலப்படுத்தும்.


ஒரு நாளுக்கு ஒரு பாடலோ அல்லது ஒரு பாடலின் ஒரு பகுதியோ தான் நடைபெறும். எனக்குத் தெரிந்த பல கலம்பகச் செய்யுட்களையும் பிறநூற் பாடல்களையும் நான் நினைத்தற்கு அப்பிரசங்கம் எனக்குப் பேருதவியாயிற்று. கச்சிக் கலம்பகத்திலுள்ள கருத்துக்களோடு ஒத்த பகுதிகளைப் பிற நூள்களிலிருந்து எடுத்துக் காடுட்ம்பொழுது அரங்கநாத முதலியார் மிக்க இன்பத்தை அடைவார்; கூட்டத்திலுள்ளவர்களும் மகிழ்வார்கள்; அவ்விரண்டும் சேர்ந்து எனக்குப் பின்னும் ஊக்கத்தை உண்டாகும். ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் பிரசங்கம் நடைபெறும்.


அக்காலத்தில் நான் எங்கேயாவது தெருவில் போய்க்கொண்டிருந்தால் திடீரென்று யாரேனும் ஒருவர் வந்து அஞ்சலி செய்வார்; அவரை நான் அறியாவிடினும் அவர் அன்புடனும் முகமலர்ச்சியுடனும், "கச்சிக் கலம்பகம் பிரசங்கம் செய்யும் ஐயாவல்லவா!" என்று சொல்லிப் பாராட்டுவார். இப்படிப் பலபேருடைய பாராட்டுக்களை நான் அடைந்தேன். இவ்வளவுக்கும் காரணம் அரங்கநாத முதலியார் என்பால் வைத்துள்ள அன்பேயென்பதை நினைக்கும்போது முதலியாருடைய கம்பீரமான குணத்தில் என் உள்ளம் மூழ்கி உருகும்.


கலம்பகத்தின் 3-ஆம் செய்யுளிலிருந்து நான் அரங்கேற்றத்தைத் தொடங்கினேன். அதுகாறும் சென்னையில் கூட்டத்திற் பேசியவ னல்லேனாதலின் என்னுடைய பிரசங்கம் வந்தவர்களுக்கு உவப்பாக இருக்குமோ இராதோவென்ற சந்தேகம் எனக்கு இருந்தது. மூன்றாம் செய்யுளுக்கு உரை சொல்லி வருகையில், "அவம் புரிவார் செயலை அழித்து உவக்கும் தாண்டவர்" என்ற பகுதிக்குத் 'தீங்கு செய்வார்களது செயல்களைப் போக்கி மகிழும் நடராசப் பெருமானே' என்று ஒரு பொருள் கூறிவிட்டு, "அவம் புரிவார்- சைவசமயத்துக்குத் தீங்கு புரிவா ராகிய ஜைனர்களுக்கு உரியதாகிய, செயலை- அருகக் கடவுள் வீற்றிருக்கும் அசோகமரத்தை, அழித்து- அச்சைனர் தோல்வியுற்ற மையால் அழியச் செய்து, உவக்கும் தாண்டவரென்றும் பொருள் சொல்லலாம். ஞானசம்பந்த மூர்த்தியின் மூலமாகப் பாண்டிநாட்டுச் சமணர்களுடைய பலம் கெடும்படி செய்தது பரமேசுவரருடைய திருவரு ளாதலால் இங்ஙனம் கூறப்பட்டது" என்றேன். கூட்டத்திலுள்ள யாவரும் சந்தோஷ ஆரவாரம் செய்தார்கள். அந்த ஆரவாரம் எனக்கிருந்த ஐயத்தைப் போக்கித் துணிவை உண்டாக்கிற்று. அதன்பிறகு ஊக்கம் பெற்றுப் பிரசங்கம் செய்து வரலானேன்.

கச்சிக் கலம்பகத்தின் 8-ஆம் பாடலாகிய

(கட்டளைக்கலித்துறை)
"சுகந்தரு கச்சிப் பதிவந்தடியார் துயர்களைவோர்
நகந்தரு மெல்லியற் காமவிழியிரு நாழிநெல்லால்
உகந்தரு முப்பத்திரண்டற மோம்பச் செ யுத்தமர்பா
தகந்தரு துன்பொழிப் பார்பணிவீரவர் தாண்மலரே"

என்பதற்கு உரை கூறுகையில், "உலகத்திலுள்ளாரை நோக்கி அறிவுறுத்தும் இந்தச் செய்யுள், செய்யுட்களில் ஒருவகையாகிய கட்டளைக் கலித்துறையாக அமைந்தது. யாப்பால் கட்டளைக் கலித்துறையாக அமைந்ததோடு, இன்ன வண்ணம் செய்கவென்று கட்டளையிடுவதனால் பொருளாலும் கட்டளைக் கலித்துறையாயிற்று' என்றேன். அதனைக் கேட்ட முதலியாரும் பிறரும் மகிழ்ந்தனர். வீட்டிற்கு வந்த காலத்தில், "என்னுடைய கலம்பகத்துக்கு உங்கள் பிரசங்கம் பெருமதிப்பு உண்டாக்குகிறது" என்றார் முதலியார். நான்,"உங்களுடைய நூலுக்கு உரை கூற வாய்த்ததே எனக்குப் பெரும்பேறல்லவா? அதிலுள்ள நயங்களை ஏதோ எனக்குத் தெரிந்தவளவிற் சொல்லுகின்றேன். உங்களுடைய அன்பு எனக்கு ஊக்கத்தை உண்டாக்குகின்றது. இவ்வளவு தக்க மனிதர்கள் கூடும் கூட்டத்தை நான் வலிய அழைத்தாலும் கூட்டமுடியுமா? என் பேச்சைப் பொறுமையாக இருந்து கேட்பார்களா? எல்லாம் உங்களுடைய சார்பின் பலம்" என்றேன்.

மற்றொருநாள், "என் கல்லனைய மனத்தூடுன் குடும்பத்தோடு மருவ வொரு தடையுமில்லை" என்ற பகுதியைப் பிரசங்கம் செய்கையி, "என் என்பதற்குச் சிறிதேனும் அறிவும் பற்றுக்கோடும் இல்லாது வருந்தும் என்னுடையவென்ரும், உன் என்பதற்குப் பரமகருணாநிதியாகிய நினதென்றும் பொருள் கொள்ளலாம். 'அந்தாமரையன்னமே நின்னை யானகன்றாற்றுவனோ' என்ற திருக்கோவையாரின் உரையில் பேராசிரியர் நின்னை என்பதற்கு இருதலைப் புள்ளினோருயிரேனாகிய யானென்றும் அச்சொற்களால் விளங்கினவென்று பொருளெழுதி யிருப்பதைப் பின்பற்றி இங்ஙனம் கொள்ள நேர்ந்தது. இப்படியே கம்பர் தசரதன் கூற்றாக,

"எற்றே பகர்வே னினியானென்னை யுன்னிற் பிரிய
வற்றே யுலக மெனினும் வானே வருந்தா தெனினும்
பொற்றே ரரசே தமியேன் புகழே யுயிரே யுன்னைப்
பெற்றேனருமை யறிவேன் பிழையேன் பிழையேனென்றான்'
என்னும் பாட்டில் உன்னை என்பதை என் உயிரினும் சிறந்த உன்னை யென்றும், பெற்றேன் என்பதைப் பல ஆண்டுகள் தவஞ்செய்து பெற்றேனாகிய யானென்றும் பொருள்பட அமைத்திருக்கின்றார்" என்றேன். முதலியார் அந்தக் கம்பராமாயணப் பாட்டில் மிக ஈடுபட்டார்.

பின்பு பி.ஏ. பரீக்ஷைக்கு அந்தப்பாட்டுள்ள பகுதி பாடமாக வந்தது. அப்போது அதனைப் பதிப்பித்தவரும் பிரஸிடென்ஸி காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்தவரும் ஆகிய ஸ்ரீநிவாஸாசாரியாரென்பவர் முதலியாரிடம் அப்புஸ்தகத்தைக் கொடுத்தார். முதலியார் அதைப் பார்த்துவிட்டு இந்தப் பாட்டைப் பார்த்தார்; உடனே அவரைப் பார்த்து, "நீங்கள் ஒரு தப்புச் செய்துவிட்டீர்கள்!" என்றார். அவர் திடுக்கிட்டார்; "தெரிந்தவரையில் சிரமப்பட்டுக் கவனித்துத்தானே பதிப்பித்தேன். என்ன பிழை இருக்கிறது?" என்று பயந்துகொண்டு அவர் கேட்டார். "உங்களுக்கு இதைப் பதிப்பிக்கத்தெரியவில்லை, இந்தப்பாட்டை இப்படியா பதிப்பிப்பது?" என்றார் முதலியார்.

"ஏன்? சரியாகத்தானே சீர்பிரித்துப்பதிப்பித்திருக்கிறேன்."

"இதன்பாலுள்ள 'உன்னை', 'பெற்றேன்' என்ற சொற்களைத் தங்க எழுத்திலல்லவா பதிப்பித்திருக்கவேண்டும்?" என்றார் முதலியார்.

அப்பொழுதுதான் அவர் முதலியாருடைய கருத்தை யறிந்து விம்மிதமுற்றார்.

கலம்பகத்தின் 10-ஆம் செய்யுள் 'வலைச்சியார்' என்னும் தலைப்பை யுடையது. மீன் விற்கும் ஒரு வலைச்சியைப் பார்த்து ஓரிளைஞன் கூறுவதாக அமைந்தது அது. அந்தப் பாட்டில் பலவகை யான மீன்களின் பெயர்களும் அவற்றோடு சம்பந்தமுடைய சொற்களும் தொனியில் அமைந்துள்ளன. அந்தப் பாட்டுக்கு உரை கூறுகையில், "இப்படி ஏதேனும் ஒருவகைப்பெயர்கள் தோற்றும்படி செய்யுள் செய்வது புலவர்கள் வழக்கம். தமிழ்ப் பிரபந்தங்களிலும் பிறநூல்களிலும் இத்தகைய செய்யுட்கள் பல உண்டு" என்று சொல்லி விட்டுக் கந்த புராணம், சேது புராணம் முதலியவற்றிலிருந்து சில செய்யுட்களை எடுத்துக் காட்டினேன். அவற்றுள் பின்வரும் அழகர் கலம்பகச் செய்யுளும் ஒன்று:

"அத்தியின் மத்தியிலேவிளங் காலினம் மாமகிழ
நித்திரை கொள்ளுந் தமாலத் துருவனிவனென்பதே
சத்தியமென்னப் புளிக்கீழ் மகிழந் தமிழ்க்கரசே
நித்திய மாலழகன்றமிழ் கூற முன்னின்றருளே."

இதைச் சொல்லிவிட்டு, "இது நம்மாழ்வார் விஷயமானது. இந்தப்பாட்டில் நம்மாழ்வார் புளியமரத்தின் கீழ் எழுந்தருளியிருப்பதை நினைந்து வேறு மரங்களின் பெயர்களும் சொல்லளவில் தோற்றும்படி ஆசிரியர் அமைத் திருக்கின்றார். இப்பாட்டில் அத்தி, ஆல், மா, மகிழ், தமாலம், புளி, அரசு என்னும் மரப்பெயர்கள் உள்ளன. இவற்றில் ஆல், தமாலம், புளி என்பன அம்மரப்பெயர்களையே சுட்டுகின்றன. மற்றவை மாமல்லாத வேறு பொருள்களைக் குறிப்பன. இவை யாவும் சேர்ந்து இந்தப்பாட்டில் பல மரங்களின் பெயர்கள் அமைந்தது போலத் தோற்றச் செய்கின்றன. பொருளால் வேறுபட்டாலும் சொல்லமைதியால் ஓரினப் பெயர்களைப் போல் தோற்றும்படி அமைக்கும் இந்த அரிய திறமை முதலியார வர்களிடத்திலும் இருக்கின்றது" என்று பிரசங்கம் செய்து வந்தேன்.


அந்தக் கூட்டத்தில் வந்திருந்த யாவரும் தமிழ்மொழியின் அணிய மைதியைப் பற்றி யறிந்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். ஸம்ஸ்கிருத வித்துவானும் பெரிய உத்தியோகஸ்தரும், ஆங்கிலப் பட்டம் பெற்ற வரும், உயர்ந்த சம்பளம் வாங்கி வந்தவருமாகிய ஒருவர் அரங்கநாத முதலியார்க்கு அருகில் இருந்தார். எல்லோரும் நான் கூறிய அழகர் கலம்பகச் செய்யுள் நயத்தைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கையில் அவர் மட்டும் வேறு யோசனை செய்துகொண்டிருந்தார் போலும் ! சிலர் ஏதேனும் ஒரு செய்யுளின் நயத்தைக் கூறுகையில் கேட்பவர்களிற் சிலர் அந்நயத்தை அறிந்து பின்பு ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு, அவர் கூறுவதையே கவனியாமல், 'இதில் இன்னும் அதிகமாக என்ன நயம் கூறலாம்? இவர் சொல்வதில் என்ன குற்றம் இருக்கிறது?' என்று அப்போதே யோசிப்பது வழக்கம். இந்த வகையைச் சேர்ந்த அந்தக் கனவான், நான் அழகர் கலம்பகச் செய்யுளுக்கு உரை முதலியன கூறி முடித்தவுடன், "ஐயா, நீங்கள் ஒன்றைச் சொல்லத் தவறி விட்டீர்கள்" என்றார். "அப்படியா! தயை செய்து அதைத் தெரிவிக்க வேண்டும்" என்றேன். "அந்தப்பாட்டில் மரப்பெயர்கள் தோற்றுகின்றனவென்று அவற்றைச் சொன்னீர்களே! அத்தியின் மத்தியிலே என்பதில் உள்ள மத்தியென்னும் மரப்பெயரை ஏன் எடுத்துச் சொல்லவில்லை?" என்றார். "மத்தியென்பது ஒரு மரப்பெயரென்று நான் கேட்டதில்லை; வடமொழியில் ஆதாரம் இருக்கிறது போலிருக்கிறது. இருந்தால் சொல்லவேண்டும்!" என்றேன்.


அவர், "ஏன்! மத்தியார்ஜுனமென்னும் பெயர் இருக்கிறதல்லவா? மத்தி அந்த ஸ்தல விருக்ஷமல்லவா?" என்றார். அவர் கேட்ட தொனியின் இயல்பு, 'உங்களுக்கு இந்த ஸாமான்ய விஷயங்கூடத் தெரியவில் லையே!" என்று இரங்குவது போல் இருந்தது.


"மத்தியார்ஜுனமென்பதன் மொழிபெயர்ப்பு இடைமருதென்பது. அர்ஜுன மென்பது மருதமரத்தின் பெயர். வடக்கே மல்லிகார்ஜுனமும் தெற்கே புடார்ஜுனபுரமும் இருப்பதால், மத்தியிலுள்ள திருவிடைமருதூர் மத்தி யார்ஜுனஎன்று வழங்கப்படுகின்றது. ஆகையால் மத்தியென்பது மரப் பெயரன்று" என்றேன்.


இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த முதலியார் தடை கூறியவர்பால் சிறிது சினம் கொண்டார்; அரங்கேற்றம் முடிந்தபின்பு யாவரும் விடைபெற்றுச் சென்றார்கள்; அவ்வுத்தியோகஸ்தரை மாத்திரம் முதலியார் இருக்கச் சொல்லி அவரை நோக்கி, "இவ்வளவு பெரிய கூட்டத்தில் உங்களுடைய கெளரவத்தை நிலைநாட்ட வேண்டு மென்று கருதி இப்படி ஆக்ஷேபம் செய்தீர்களோ! தெரியாத விஷயத்தைத் தெரிந்தது போலப் பாவித்துக்கொண்டு அந்த அஸ்தி வாரத்தின்மேல் அநாவசியமானவற்றைச் செய்வதைக் காட்டிலும் அறியாமை வேறில்லை. நீங்கள் பெரிய உத்தியோகம் வகிப்பதனா லேயே அதிகமான அறிவு வந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளலாமா? அவ்வளவு பெரிய கூட்டத்தில் நீங்களாக வலிய அவமானத்தை அடைந்தீர்களே. ஒரு விஷயத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு பேசவேண்டுமேயொழியச் சிறிதளவு தெரிந்த மாத்திரத்தில் முற்றும் தெரிந்ததாக நாமே நினைத்துக்கொண்டு பேச முன்வரக் கூடாது" என்று கண்டித்தார். கேட்டவர், "ஏன் இந்த ஸங்கடத்தில் அகப்பட்டுக்கொண்டோம்? " என்று எண்ணி வருந்தினார்.


இதனால் முதலியாரவர்கள் குற்றம் கண்டால் தைரியமாகக் கண்டிக்கும் இயல்பினரென்னும் எண்ணம் எனக்குப் பின்னும் உறுதிப்பட்டது.


இவ்வாறு கச்சிக்கலம்பத்திற் பல பாடல்கள் நான் பிரசங்கம் செய்தபின்பு கும்பகோணம் செல்லவேண்டியிருந்தமையின் முதலியாரிடம் விடை பெற்றுக்கொண்டேன். ஒருவரை யொருவர் பிரிவதில் இருவருக்கும் வருத்தம் இருந்தது; முதலியார், 'மேல்நாட்டார் தம்முடைய நண்பர்களுக்குத் தம் ஞாபக அறிகுறியாக ஏதாவது ஒன்றைக் கொடுப்பது வழக்கம். அதை அநுசரித்து, உங்களுக்கு நான் ஒன்று தர எண்ணி யிருக்கின்றேன்" என்று சொல்லிப் பேனா முள் (NIB) வைக்கின்ற சிறிய தகர டப்பி ஒன்றைத் தந்தார். அதனை மகிழ்ச்சி யுடன் பெற்றுக் கொண்டேன். இன்னும் அதனைப் பாதுகாத்து வருகின்றேன்.


நான் கும்பகோணம் சென்றபின் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும், சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்கத் தம்பிரானும் கலம்பக அரங்கேற்றத்தை நிறைவேற்றினார்கள். அக்காலத்தில் இவ்வரங்கேற்றத்தைப் பற்றிச் சிறப்பித்து, தொண்டை மண்டலம் பாடசாலையில் தமிழ்ப்பண்டிதராக இருந்த திருமயிலை சண்முகம் பிள்ளை சில செய்யுட்களைப் பாடியிருக்கிறார். அக்கலம்பகத்திற்குச் சிறப்புப் பாயிரமாக நான் பாடிய சில செய்யுட்கள் உண்டு.


கலம்பகத்தின் அரங்கேற்றம் நடந்து வந்த பொழுதும் அதன் பின்பும் சென்னை நகர் முழுவதும் அதன் பேச்சாகவே இருந்தது. அந்நூல் பிறகு காலேஜ் வகுப்புக்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டதுண்டு.


சிறந்த மேதாவி

தமிழ் நூல்களில் அரங்கநாத முதலியாருக்கு விருப்பம் அதிகமாய் உண்டு. பழம்பாடலானாலும் புதுப்பாடலானாலும் அதன் நயத்தை அறிந்து இன்புறுவார். புதிதாக அச்சிட்ட நூலை நான் கொடுத்தால் கொடுத்த அன்றிரவே அதனை முற்றும் படித்துவிட்டு மறுநாள் அதில் இன்ன இன்ன பகுதிகள் நன்றாயிருக்கின்றனவென்று சொல்லுவார்.


ஸ்ரீகச்சியப்ப முனிவர் இயற்றிய பூவாளூர்ப் புராணத்தை அச்சிட்ட காலத்தில் அதன் பிரதி ஒன்றை ஒருநாள் மாலையில் முதலியார வர்களிடம் கொடுத்துச் சென்றேன். அவரை மறுநாள் பார்க்கும் பொருட்டு, 'காஸ்மாபாலிடன் கிளப்புக்கு' நான் போயிருந்தேன். அப்பொழுது அவர் தம் நண்பர்களுடன் சீட்டாடிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டவுடன் இருக்கச் சொல்லி, "நீங்கள் கொடுத்த புராணம் மிக நன்றாக இருக்கின்றது" என்றார். "நீங்கள் எப்பொழுது வாசித் தீர்கள்?” என்று நான் கேட்டேன். "நேற்று ராத்திரியே படித்து விட்டேன்" என்று சொல்லிச் சீட்டாடிக் கொண்டே அப்புராணத்தில் இன்ன இன்ன பாகங்கள் மிக நயமாக இருக்கின்றனவென்று சொன்னார்; சில செய்யுட் பகுதிகளையும் ஒப்பித்தார். கேட்ட எனக்கு மிக்க வியப்பு உண்டாயிற்று.


சேலம் இராமசாமி முதலியார் இறந்த காலத்தில் நான் வருந்திப் பாடிய சில இரங்கற்பாடல்கள் சுதேசமித்திரனில் வெளியிடப்பட்டன. சில நாள் கழித்து நான் சென்னைக்குச் சென்றிருந்தேன்; அப்பொழுது அரங்கநாத முதலியாரது வீட்டிற்குப் போனேன். அங்கே அவர் தம்முடைய அறையில் சுதேசமித்திரனில் வெளிவந்த முற்கூறிய பாடல்களுள்ள பகுதியைக் கத்தரித்து ஓர் அட்டையில் ஒட்டித் தொங்க விட்டிருந்தார். அதைக் கண்ட யான், "இவற்றை நீங்கள் ஒரு பொருட்படுத்திக் கவனித் திருக்கிறீர்கள் போல இருக்கிறதே!" என்றேன். "ஆமாம்; நல்ல பாட்டை அறிந்து சந்தோஷியாவிட்டால் தமிழ் படிப்பதன் பிரயோஜனம் என்ன? இதுமட்டுமா? இன்னும் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு, "கிருஷ்ணசாமி!" என்று கூப்பிட்டார். அவருடைய மூன்றாங்குமாரனும் நல்ல அறிவாளியுமான கிருஷ்ணசாமியென்பவன் வந்தான்; "எங்கே; அந்தப் பாட்டுக்களைச் சொல்லு பார்ப்போம்" என்றார் முதலியார்; உடனே குமாரன் அவற்றைச் சொன்னான். "பார்த்தீர்களா!' என்று முதலியார் என்னைக் கேட்கையில் நான் சிறிது நாணிப்பின்பு, "நீங்கள் என்னை உயர்த்தி வைக்கிறீர்கள். எல்லாம் உங்களுடைய கரைகடந்த அன்பைப் புலப்படுத்துகின்றன." என்றேன்.


முதலியாருடைய ஆதரவினால் ஒருமுறை 'மெட்றிகுலேஷன்' வகுப்புக்குரிய தமிழ்ப்பாடபுத்தகத்தைப் பதிப்பிக்கும் நிலை எனக்குக் கிடைத்தது. அதுகாறும் தமிழ்ப்பண்டிதர்களுக்கு அப்பதவி கிடைப்ப தில்லை. வெறும் சம்பளத்தோடு அவர்கள் திருப்தியுறவேண்டி யிருந்தது. இங்கிலீஷ்ப் பட்டம் பெற்றவர்களுக்கே தமிழ் சம்பந்தமான பதவிகள் கிடைத்து வந்தன. பாடபுத்தகங்களையும் அவர்களே பதிப்பித்து வந்தார்கள். அரங்கநாத முதலியர் மிக முயன்று வாதாடிப் பண்டிதர்கள் பாட புத்தகங்கள் பதிப்பிக்கும் பதவியை அடையும்படி செய்வித்தார். முதல்முதலில் அதனைப் பெற்றவன் நானே.


பாடபுத்தக சபையர் இன்ன இன்ன நூல்களிலிருந்து செய்யுட்களைத் தேர்ந்தெடுத்து அமைக்கவேண்டுமென்று நியமித்திருந்தனர். அவற்றுள் அரிச்சந்திர புராணமும் ஒன்று. அந்தச் சபையில் ஒருவராக இருந்த முதலியார் எனக்கு அவ்வேலை கொடுக்கப் பட்டதை அறிவித்துவிட்டு, "அரிச்சந்திர புராணத்தில் எந்தப் பகுதியைச் சேர்த்தாலும் சேர்க்கா விட்டாலும் மயான காண்டத்திலுள்ள சந்திரமதி புலம்பற் பகுதியை மட்டும் விட்டு விடாதீர்கள். சோக ரஸத்தை எளிய நடையில் மிக அழகாக எடுத்துக் காட்டும் அந்தப் பகுதியைப் போன்றதை நான் வேறு எந்த நூலிலும் பார்த்ததேயில்லை" என்றார். நான் அவர் விருப்பப் படியே செய்தேன்.


இராமசாமி முதலியார் இறந்த பிறகு ஒருநாள் அவருடைய தகப்பனார் ஒரு சங்கீத வித்துவானைக் கொண்டு அருணாசல கவிராயர் இயற்றிய இராமாயணக் கீர்த்தனங்களைப் பாடும்படி செய்தார். அவர் பாட்டைக் கேட்கும்பொருட்டு அரங்கநாத முதலியர் சென்றிருந்தார். அங்கே போன பிறகு ஒருவரை அனுப்பி என்னை அழைத்துவரச் செய்தார். நான் அங்கே போனவுடன், "நீங்கள் இருந்தால் நான் நாலு காதுகளாற் கேட்பது போல இருக்கும்" என்றார். கேட்டு யாவரும் இன்புற்றோம். பிறகு முதலியார் அருணாசல கவிராயருடைய கவித்துவத்தைப் பாராட்டி னார். 'சொன்னார் ஸ்ரீராமன்' என்பதை பாடிக்காட்டி, "இந்த மாதிரி வார்த்தைகளும், ராகப் பொருத்தமும், வர்ணமெட்டும் அமைவது மிகவும் அருமை" என்று சொன்னார்.


*ஒருமுறை பல கல்விமான்களிடையே இருந்து அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது இங்கிலீஷ்ப் பாஷையில் பல அருமையான விஷயங்களிருக்கின்றனவென்று அவர்கள் பேசினார்கள். எவ்வளவோ சிறந்த கவிகளும், அறிஞர்களும் அம்மொழியை வளப்படுத்தி யிருக்கிறார்களென்றும், தமிழில் ஒன்றுமில்லையென்றும் சொன்னார்கள். தமிழைப் பற்றிக் குறை கூறுவதை முதலியாருக்குக் கேட்க மனங்கொள்ளவில்லை. இவர், "சூரிய மண்டலத்துக்கு எவ்வளவோ தூரத்தில் ஆயிரக்கணக்கான நக்ஷத்திரங்கள் இருக்கின்றன வென்று சொல்லுகிறார்கள். சில நக்ஷத்திரங்கள் சூரியனைக் காட்டிலும் பெரியனவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். சூரியனையே பார்த்து அனுபவிக்கத் தெரியாமல் நக்ஷத்திரங்களைப் பற்றிப் பேசுவதில் பிரயோஜனமில்லை. முதலில் தோன்றும் சூரியனைப் பார்த்துக் களித்து அப்பால் நக்ஷத்திரங்களின் பெருமையை அறிய முயற்சி செய்யலாம். அதைப் போன்றது தான் பாஷை விஷயமும். எவ்வளவோ சிறந்த விஷயங்கள் தமிழைக் காட்டிலும் வேறு பாஷை களில் இருக்கலாம். அதனால் தமிழை மறந்துவிட்டு மற்ற வற்றை ஆராய்வது நன்றாகுமா? முதலில் தமிழாகிய சூரியனைப் பற்றித் தெரிந்து கொண்டு அப்புறம் மற்றப் பாஷைகளாகிய நக்ஷத்திரங்களைத் தெரிந்து கொள்வது தான் முறை" என்று சொன்னார். உடன் இருந்த வர்கள், முதலியார் தம்மு டைய கருத்தைச் சிறந்த உபமானம் ஒன்றின் மூலமாக விளக்கிக் காட்டியதைக் குறித்து மிகவும் சந்தோஷ மடைந்ததோடு அவர் கூறியது நியாயமென்பதையும் உணர்ந்தனர்.


எதையும் விரைவில் படித்து ஞாபகம் வைத்துக்கொள்ளும் திறமை அவருக்கு இருந்தது. அவருடைய பேச்சும் எழுத்தும் அவருடைய ஞாபக சக்தியை நன்றாக வெளிப்படுத்தும், ஒரு முறை எழுதியதை மாற்றி எழுதுவதென்பது அவரிடம் இல்லை. எழுதும்போதே முடிந்த முடிபான கருத்துக்களாக அமைந்துவிடும். எழுதியதை மறுபடி படித்துப் பார்ப்பது மில்லை.

அரங்கநாத முதலியாருக்கு உதவியாசிரியராகச் சிலகாலம் பல்லாரி யில் இருந்தவரும், கும்பகோணம் கலாசாலையின் பிரின்ஸிபாலாக இருந்தவரும், என் நண்பரும், இப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருந்து வருபவருமாகிய ஸ்ரீமான் ஜே.எம். ஹென்ஸ்மன் அவர்கள் 16-4-36 இல் எழுதிய கடிதமொன்றில் முதலியாரைப் பற்றிச் சில செய்திகளைத் தெரிவித்திருக்கின்றார்கள். அவை வருமாறு:-

'அரங்கநாத முதலியாருடைய அறிவாற்றல் மிக உயர்ந்தது; அதைக் காட்டிலும் அவருடைய அன்பு சிறந்தது. நகைச்சுவையுண்டாகப் பேசுவதில் அவர் மிகவும் சமர்த்தர். பத்துப் பதினைந்து பேர் உள்ள கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டே இருப்பார். ஒவ்வொரு கணமும் அக்கூட்டத்திலுள்ளார் சிரித்தவண்ணமாகவே இருபார்கள். சில மனிதர்களுக்கும் நகைச்சுவைக்கும் வெகு தூரம்; அப்படிப்பட்டவர்கள் கூட முதலியாருடைய பேச்சினால் தம்மை மறந்து சிரித்துவிடுவார்கள்.


'முதலியாருடைய ஞாபகசக்தி அதிசயிக்கத்தக்கது. புஸ்தகத்திலுள்ள ஒரு பக்கத்தை அரை நிமிஷத்தில் படித்துவிடுவார்; என்ன ஆச்சர்யம்! அதைக்காட்டிலும் ஆச்சர்யம்; அந்தப் பக்கத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் அவர் ஞாபகத்திற் பதிந்துவிடும்! சென்ற நூறு வருஷ காலத்தில் அவருக்கு முன்னோ பின்னோ அவரைப் போன்ற மேதாவிகள் இருந்ததேயில்லை.'


அவருடைய சம்பாஷணை யாவராலும் விரும்பத்தக்கது. தம்மோடு வாதம் செய்பவர்களுக்குச் சமயோசிதமாக விடை கூறும் ஆற்றல் அவருடைய அறிவை வெளிப்படுத்தியது. அவரிடம் எத்தகையவர்களும் அடங்கிவிடுவார்கள்.


முதலியாருக்கு ஆயிரம் ரூபாய் சம்பளமானபோது, அவருடைய நண்பரும் மிகப் புகழ்பெற்ற வக்கீலுமாகிய ஒருவர், "நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? தினந்தோறும் ஒருமணி அல்லது இரண்டுமணி பாடம் சொல்கிறீர்கள். இந்தச் சம்பளம் உங்களுக்கு மிக அதிகம். நாங்கள் தொண்டைத் தண்ணீர் போக வாதாடுகிறோம்; நம்பர்க்கட்டுக் குவியல்களோடு போராடுகிறோம். எங்களுக்கு இவ்வளவு சுலபமாகப் பணம் கிடைப்பதில்லை" என்றார். உடனே முதலியார், "எங்களுக்கு இப்பொழுது செய்யும் வேலைக்காக் கொடுக்கும் சம்பளம் அல்ல இது; முன்பே சிரமப் பட்டுப் படித்து உழைத்திருக்கிறோமே. அதன் பயனே யாகும். நீங்களெல்லாம் அன்றன்று தேடிப் பிழைப்பவர்கள். நீங்களும், நாங்களும் சரியாவோமா?" என்றார்.


ஒரு காலத்தில், சென்னைச் சர்வகலாசாலை ஸிண்டிகேட்டில் வருஷ முடிவுப் பரீக்ஷைக்குரிய காலத்தை மாற்றவேண்டுமென்று தக்க கனவான் ஒருவர் ஒரு தீர்மானம் கொண்டு வந்தா. அதைத் தழுவிச் சில கனவான்கள் பேசினார்கள். அதை மறுத்துக் காரணங்காட்டி அரங்கநாத முதலியார் பேசினார். தீர்மானங்கொண்டுவந்தவர் மிகவும் கோபமடைந்து நெடுநேரம் முதலியாரைக் கண்டித்துப் பேசினார். ஸபை முடிந்தபிறகு முதலியாரை அணுகி, "நான் பேசியதில் ஏதாவது கோபம் உண்டா?" என்று கேட்டார். முதலியார், "நீங்கள் உங்களுடைய ஆத்திரத்தைக் கத்தித் தொலைத்தீர்கள்; நான் கூறிய ஆக்ஷேபங் களுக்குச் சரியான பதிலே இல்லை" என்றார். அரங்கநாத முதலி யாருடைய விருப்பப்படியே அத்தீர்மானம் நிறைவேறவில்லை. இச்செய்தியை முதலியாரே என்னிடம் கூறியிருக்கிறார்.


பிரிவு

எவ்வளவுக்கு எவ்வளவு அன்பு ஒரு பொருளினிடத்தே உண்டாகுமோ அவ்வளவுக்கு அவ்வளவு துன்பம் அப்பொருளைப் பிரிவதனால் உண்டாகுமென்று பெரியோர்கள் கூறுகின்றார்கள். அருமையும், அன்பும் உடையாரைப் பிரிவதிலும் பெரிய துன்பம் வேறில்லை. "பழகிய பகையும் பிரிவின்னதே" (நற்றிணை) என்ற அரிய வாக்கியம் இவ் வுண்மையை எவ்வளவு அழகாக உணர்த்துகின்றது!


முதலியாருடைய பிரிவினால் அவருடைய மெய்யன்பர்களுக்கு உண்டான துன்பத்துக்கு ஆறுதல் ஏது? 1893-ஆம் வருஷம் டிசம்பர் மாதம், 10-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்; அச்செய்தி சென்னையிலிருந்து எனக்கு எட்டியது. அப்பொழுது எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. துயர்க்கடலில் மூழ்கினேன். சிலர், "சரமகவி பாடவில்லையா?" என்றார்கள். "யாருக்காக இனிமேல் பாடவேண்டும்? தமிழ்ச்செய்யுள் நயத்தை யறிந்து ஈடுபட்டுப் பாராட்டும் அவர் ஸ்தானத்தில் இப்பொழுது யார் இருக்கிறார்கள்?" என்று நான் வருந்திக் கூறினேன். பின்பு சென்னையிலிருந்து சில அன்பர்கள் வற்புறுத்தி எழுதியிருந்தார்கள். அதன்பின்பு நான் இயற்றியவை வருமாறு:-

1. நண்பார் தருமரங்கநாதசுகு ணாகரவித்
திண்பார் புகழ்கல்விச் செல்வமுடைச் சிங்கமே
பண்பார் தருமுன்னைப் பார்த்தே பெருமகிழ்வை
உண்பார் வகுத்த வொளிதெங் ககன்றனையே.

2. தென்னாடு செய்த செழுந்தவமே தென்றொண்டை
நன்னாடு பெற்ற நலமார் மணிவிளக்கே
முன்னாடு சென்னை முளைத்த முழுமதியே
எந்நாடு சென்றாயீ தென்னேயோ வென்னேயோ.

3. பொன்னைப் பெறலாம் புகழ்பெறலாம் பூவலயந்
தன்னைப் பெறலாந் தகழயன்றால் யாவையுமே
பின்னைப் பெரலாம் பிறழா மனவலிசேர்
உன்னைப் பெறுமாறு முண்டோ வுரையாயே.

4. பனியார்1 சில சொற் பகர்ந்தே யுளங்குழைப்போய்
கனியாரினிமை கலந்தே சுவைகள்பல
தனியார் தமிழீனயந்தெரியவல்லார்தாம்
இனியாருனைப்போலினியாரினியாரே.

5. என்னே நலமாரிராமசாமிக்குரிசில்
முன்னேயகன்றான் மொழியுமவனைத் தொடர்ந்து
பின்னே நடந்தாய் பிரிவாற்றாத் தன்மையினோ
நன்னேய மார ரங்கநாத தயாகரனே.

6. நாவலோர் வாழ்த்தரங்க நாத நயசுகுணா
பாவலோர் பெற்றபெரும்பாக்கியமே செந்தமிழின்
ஆவலோடணையருங்குணங்கள் யாவையுமே
2மாவலோ யெவ்விடத்து வைத்தகன்றாய் சொல்லாயே.

(வேறு)
உனைப்போல வெவற்றையுமே யொழுங்காகச் செய்துமுடித்
துற்றோர் யாரே
உனைப்போலத் தமிழர்தலை சாயாமனிறுத்தவல்லோர்
உலகில் யாரே
உனைப்போல வலியார்க்கு மெலியார்க்கு மொப்பநடந்
துவந்தோர்யாரே
உனைப்போலப் பலகலையு மெளிதறிந்து கம்பீரம்
உடையோர் யாரே.

(வேறு)
8. 1தரங்க வேலை யனைய தாய சபையி டைப்பு குந்துநின்
றுரங்க லந்த வாங்கி லேய ரொருமொ ழிப்ர ஸங்கமங்
கரங்க நாத வள்ளல் போல வவர வர்வி உந்துதம்
சிரங்கரந்துளக்குமாறு செப்பவல்லர் யாவரே.
(வேறு)

9. எல்லா நலமுமினிதமைந்தோன் பூண்டிநகர்
நல்லான் புகழரங்க நாத முகிலிறந்த
பொல்லாத வோசையிடி போலே தமிழ்க்குயிலை
2வல்லாமை செய்து வருத்தத் திருத்தியதே.

அரங்கநாத முதலியார் இப்போழுது இல்லாவிட்டாலும் தமிழ்ச் செய்யு ளின்பத்தை அனுபவிக்குபோதெல்லாம் நான் இந்தக் காலத்தை மறந்து விடுகின்றேன். அவருடைய வீட்டுக்குள், கம்பீரமான தோற்றத்துடன் அவர் சில அன்பர்களோடு வீற்றிருக்க அவர்களோடு நானும் கலந்து தமிழ் விருந்த அனுபவிக்கும் காட்சியில் என் மனம் ஒன்றிவிடுகின்றது.

_______________________________________________________________________________________________________

அடிக்குறிப்பு

//திருவாவடுதுறை மடாதிபதி* = மேலகரம் சுப்பிரமணிய தேசிகரவர்கள்

அவற்றின் *இரண்டாம் பதிப்பை = இந்தப் புஸ்தகங்கள் முதலில் ஹண்டர் துரையினால் 1881-ம் வருஷம் 9 தொகுதிகளாக வெளியிடப் பட்டன. பிறகு அவை விரிவாக எழுதப் பெற்று 14 தொகுதிகளாக 1886-7-ஆம் வருஷங்களில் அவரால் வெளியிடப் பெற்றன; அவர் காலமான பிறகு அவை பல அறிஞர்களாற் பின்னும் விரிவு பெற்று 26 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன.

புலவு வேலோய்"
(கம்ப. கையடைப்.)= இது விசுவாமித்திரர் இராமரை அழைத்துச் செல்ல வந்தபோது தசரதரைப் பார்த்துக் கூறிய செய்யுள்.

1*பொறையினாற் பகையைத் தாக்கும் = தாக்கும், நீக்கும், போக்கும், ஆக்குமென்னும் எச்சங்கள் தூயனென்பதைக் கொண்டு முடிந்தன.

  • ஒருமுறை பல கல்விமான்களிடையே= இவ்வரலாற்றை, வெள்ளக்கால் மகாஸ்ரீ ராவ்சாஹிப் வெ.ப. சுப்பிரமணிய முதலியாரவர்கள் எனக்கு அன்புடன் தெரிவித்தார்கள்.

.1. பனியார்= குளிர்ச்சி
2 மாவலோ யெ= மிக வல்லவனே

1 தரங்க வேலை=அலையுடைய கடல்
2 வல்லாமை =ஒன்றும் செய்ய மாட்டாமை//


பங்களிப்பாளர்கள்

Dev

இப்பக்கம் கடைசியாக 7 மார்ச் 2010, 17:08 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,504 முறைகள் அணுகப்பட்டது.