புணர்ச்சிவிளக்கம் - 3
விந்தைப்புணர்ச்சியும் விளக்கமும்:
1) உடம்போடு உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - விதி.
இடுக்கண் + அழியாமை = இடுக்கணழியாமை
ண் + அ = ண என்றானது. அதாவது உடம்போடு உயிர்வந்து ஒன்றியது.
கதிரவன் + இல்லை = கதிரவனில்லை
வெல்லம் + இருக்கிறது = வெல்லமிருக்கிறது
2) தனிக்குறில்முன் ஒற்று, உயிர்வரின் இரட்டும் - விதி
மண் + ஆசை = மண்ணாசை
இதில், ண் என்னும் ஒற்றெழுத்தானது ஒரேயோரெழுத்திருப்பதையும் அது குறிலெழுத்தாயிருப்பதையும்பாருங்கள். இப்படிவந்ததான இந்த ஒற்றானது தனிக்குறில்முன்வந்தவொற்றெனப்படுகிறது, இதன்முன் உயிர்முதன்மொழிவரும்போது அந்த ஒற்றானது இரட்டித்துப்புணர்கிறது.
மண் + ஆசை = மண்ண் + ஆசை = மண்ணாசை
ஒற்று இரட்டித்து 'மண்ண்' என்றானபின்,
'உடம்போடு உயிர்வந்து ஒன்றுவதியல்பே' என்னும்விதிப்படிப்புணர்வதைப்பாருங்கள்.
இந்த விதியை தனிக்குறில்முன்வருகின்ற அந்தவொற்றுக்கும்வைத்தால் என்னாகும்?
மண் + ஆசை = மணாசை எனவரும்!
இது பொருந்தாதன்றோ? பேசுவோர் 'மண்ணாசை' என்று பேசியபிறகுதான், அதற்கு அதிலுள்ள இலக்கணத்தை இவ்வாறெல்லாம் விளக்கிவைத்தனரேயன்றி, இலக்கணத்தை வகுத்தபின்னர் மக்களை பேசவைத்திருக்கமாட்டனரென்பதை இந்த எடுத்துக்காட்டு விளக்குவதாயிருக்கிறதன்றோ?
அதுசரி,
களிமண் + அடுப்பு = இதெப்படிப்புணரும்?
இந்த ஒற்றானது, தனிக்குறில்முன்னுள்ளதாவென்றால் இல்லையென்பதே விடை.
அப்படியானால் இதை 'உடம்போயுயிர்வந்தொன்றுவதியல்பே' எனும்விதிப்படி,
'களிமணடுப்பு'
என்றுபுணர்த்தலாமாவென்றால், அதுதான்கூடாது!
ஏனெனில், 'களிமண்' என்பது ஒரு தொடர்மொழி. இதில் 'களி' என்னுஞ்சொல் சேராமுன்னரே, 'மண்' எனுஞ்சொல்லுடன் 'அடுப்பு' என்பதை 'தனிக்குறில்முன்...' என்னும்விதிப்படி, 'மண்ணடுப்பு' எனப்புணர்த்தி, அதனுடன் 'களி' எனுஞ்சொல்லை புணர்த்தவேண்டும் இப்போது,
களி + மண்ணடுப்பு = களிமண்ணடுப்பு எனவரும்!
முன் + அட்டை = முன்னட்டை
நம் + ஆள் = நம்மாள்
இவ்வாறு தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டிக்குமென்பது ஏற்புடையதாயிருக்கிறதன்றோ?
இக்காலத்தில், இந்த விதியை நாம் பின்பற்றுவதில்லை!
'மின் அஞ்சல்' என்றெழுதுவோம். இது பிழை. 'மின்னஞ்சல்' என்பதே சரி.
'மின் அட்டை' என்பது ஒவ்வொருவீட்டிலுமிருக்கும், பார்த்திருப்பீர்கள்! இதை 'மின்னட்டை' என்றெழுதியிருக்கவேண்டாமா?
இனி தனிக்குறில்முன் ஒற்றிருக்க அடுத்தசொல் உயிர்முதன்மொழியாயிருந்து ஒருவேளை அவை புணர்த்தப்படவேண்டியுமிருந்தால்,
'தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டிக்கும்' என்பது உங்களுக்கெல்லாம் தோன்றுமன்றோ?
இன்னும் பார்ப்போம்...
குற்றியலுகரப்புணர்ச்சி - பகுதி 3
பாகு காசு நாடு கோது சோறு
ஆகியவை நெடிற்றொடர்க்குற்றியலுகரங்களென்றும், அவற்றுள், 'நாடு சோறு' என்பவற்றைத்தவிரவுள்ள 'பாகு காசு கோது' என்பனவ்ற்றின் புணர்ச்சி எவ்வாறமையுமென்பதுபற்றியும் இதுவரை பார்த்திருக்கிறோம்.
இனி, 'நாடு சோறு' என்பவற்றின்புணர்ச்சியானது எவ்வாறமையுமென்பதையும்பார்ப்போம்.
'நாட்டுப்பற்று' என்றசொல்லை நாம் பயன்படுத்துகிறோம். இந்த சொல் எப்படிவந்ததென்றால், 'நாடு' என்றசொல்லும் 'பற்று' என்றசொல்லும் புணர்ந்ததால்வந்தது.
அப்படியானால், நாடு + பற்று என்பது 'நாட்டுப்பற்று என்றாவரும்? 'நாடுபற்று' என்றுவராது?
இந்த ஐயத்தை விலக்கும்பொருட்டு, நன்னூலில் ஒரு விதியுள்ளது. அது என்னசொல்கிறதென்றால்,
நெடிலோ டுயிர்த்த்தொடர்க் குற்றுக ரங்களுள் டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே
என்கிறது. அதாவது,
வேற்றுமைப்புணர்ச்சியின்போது,
நெடிற்றொடர்க்குற்றுகரமும் உயிர்த்தொடர்க்குற்றுகரமும் தம்முடைய ஈற்றெழுத்தானது டகரமாகவோ றகரமாகவோயிருக்குமானால், அவை இரட்டித்துப்புணரும்.
இதன்படிபார்த்தால், 'நாட்டாலுண்டானபற்று' என்னும் வேற்றுமைப்பொருளையுடையதான 'நாட்டுப்பற்று' என்பது,
நாடு + பற்று = நா-ட்-டு + பற்று (ஒற்று இரட்டியது)
= நாட்டுப்பற்று
எனவந்ததென்பது விளங்கிக்கொள்ளத்தக்கதாயிருக்கிறதன்றோ?
'சோற்றுப்பானை' (சோற்றையாக்கத்தேவையானபானை) என்பதைப்பார்த்தால், இது,
சோறு + பானை = சோ-ற்- று = சோற்றுப்பானை
எனவந்ததென்பது விதிப்படி சரிதானே?
'நெடிலோடுயிர்த்தொடர்' என்றதனால், நெடிற்றொடர்க்குற்றுகரத்தைப்போலவே உயிர்த்தொடர்க்குற்றுகரங்களும்புணரவேண்டுமன்றோ? அவற்றையும்பார்ப்போம்.
முசுடு + கால் = முசுட்டுக்கால்
(முசுடு - பழுப்புநிறமுடைய ஒருவகை எறும்பு)
தவிடு + எண்ணெய் = தவிட்டெண்ணெய்
கயிறு + நீளம் = கயிற்றுநீளம்
வயிறு + வலி = வயிற்றுவலி
ஆக, நெடிற்றொடரிலும் உயிர்த்தொடரிலும் டகரறகரங்கள் குற்றியலுகரமாகும்போது, வேற்றுமைப்புணர்ச்சியில் அவை இரட்டித்துப்புணருமென்றது விளக்கப்பட்டது.
பிறதொடர்கள்:
வன்றொடர்:
கொக்கு + கால் = கொக்குக்கால்
உப்பு + கல் = உப்புக்கல்
மென்றொடர்:
குரங்கு + கால் =குரங்குக்கால்
அன்பு + கட்டளை =அன்புக்கட்டளை
ஆய்தத்தொடர்:
எஃகு + பெட்டி = எஃகுப்பெட்டி
- இவற்றில் வலி மிகுந்தது
(இடைத்தொடர்க்குற்றியலுகரத்தில் வழக்கிலுள்ள பெயர்ச்சொற்கள் இல்லை.)
விளக்கம்: டாக்டர் பொன்முடி