எழுதியவர் : உ.வே.சாமிநாதய்யர்
தட்டச்சு செய்து அளித்தவர் : திருமதி.கீதா சாம்பசிவம்
__________________________________________________________________________________________________________
சென்னையில் இப்பொழுதுள்ள ராஜதானிக்கல்லூரி (Presidency College) ஆரம்பத்தில் ஒரு சிறு பள்ளிக்கூடமாக இருந்தது. அப்போது மாகாணப்பள்ளிக்கூடம் (Provincial School) என்ற பெயரால் அது வழங்கி வந்தது. அக்காலத்தில் அதில் வெவ்வேறு துறைகளில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் பற்பல அரிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிற் சிறந்த புகழ்வாய்ந்தவர்களாக விளங்கிய வித்துவான் தாண்டவராய முதலியார் முதலியவர்கள் அதில் தமிழ்ப்பண்டிதர்களாக இருந்தார்கள். அவர்களுள் ஒருவரான விசாகப்பெருமாளையரென்ற வீரசைவ வித்துவான் இலக்கணப் பயிற்சி பெற்றவர். அவர் இயற்றமிழாசிரியரென்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். அவருடைய சகோதரராகிய சரவணப் பெருமாளையரும் தமிழ்ப்புலமை மிக்கவர். இவ்விருவரும் சில நூல்களை இயற்றியுள்ளார்; சில பழைய நூல்களை பதிப்பித்துமிருக்கின்றனர். இவர்களிடத்திற் பாடங்கேட்ட சிறந்த மாணாக்கர்கள் பலர். தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதரென்பவர் அவர்களுள் ஒருவராவர்.
இவர் தமிழ்மொழியிற் பேரன்புடையவர்; சிறந்த நூற்பயிற்சியுள்ளவர். தம் ஆசிரியர் இயற்றிய பஞ்சலக்ஷண வினாவிடை, பாலபோதக இலக்கணமா கியவற்றையும் வேறு நூல்களாகிய நன்னூல் விருத்தியுரை, யாப்பருங்கலக்காரிகையுரை, தண்டிய லங்காரம், வச்சணந்திமாலை, விஷபிரதி விஷத் திரட்டு, அரபத்த நாவலர் இயற்றிய பரதநூல் முதலிய வற்றையும் ஆராய்ந்து பதிப்பித்திருக்கிறார். இவர் பல மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லியும் வந்தார்; சித்தூர் ஹைஸ்கூலில் பல வருஷங்கள் தமிழாசிரி யராக வேலை பார்த்தார்; திரிசிரபுரம் சி.தியாகராச செட்டியார் ஆறுமாதம் ஓய்வெடுத்துக் கொண்ட காலத்தில் கும்பகோணம் காலேஜிலும் பண்டிதராக இருந்து பாடஞ்சொன்னவர்.
மற்ற வித்வான்களோடு இவர் மனங்கலந்து பழகிப் பொழுது போக்குவார். இவரிடம் பொறாமையென்பது மருந்துக்கும் இல்லை. பழம்புலவர்களுடைய வரலாறுகளை அறிவதிலும் முன்னோர் பாடல்களைத் திரட்டுவதிலும் இவருக்கு மிக்க ஊக்கம் இருந்து வந்தது. எங்கே சென்றாலும், அங்கே வழங்கும் புலவர் வரலாறுகளையும் பழம்பாடல்களையும் கேட்டு இவர் தொகுத்து வந்தார். பலரிடம் வினாவி அவர்கள் எழுதியனுப்பும் தனிச்செய்யுட்களையும் சேர்த்து வந்தார். பழைய பாட்டொன்று யார் எதைச் சொன்னாலும் பொறுமையோடு கேட்டு எழுதிக் கொள்வார். இங்ஙனம் பலவகையாகச் சேர்த்துத் தனிப்பாடற்றிரட் டென்னும் புத்தகத்தை ஏறக்குறைய எழுபது வருடங்களுக்கு முன் வெளியிட்டார். இக்காலத்தில் பல தனிப்பாடற் றிரட்டுக்கள் உலாவு கின்றன. முதன்முதலில் அத்தகைய நூலை வெளியிட்ட பெருமை சந்திரசேகர கவிராஜ பண்டித ரையே சார்ந்ததாகும்.
இவர் என்பால் அன்புடையவராக இருந்தார். இவருடைய புத்தகத்திற் சேர்த்துக்கொள்ளும்படி நானும் பல செய்யுட்களை எழுதி அனுப்பியதுண்டு. அக்காலத்தில் நான் திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து வந்தேன். இவர் திருவாவடுதுறைக்கு வந்த சமயங்களில் இவரோடு மனமகிழ்ந்து பொழுதுபோக்கு வது எனக்கு வழக்கம். என்னுடைய தமிழாசிரியராகிய மகாவித்வான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்கள் காலம் சென்றுவிட்டமையால் பழைய நூல்களில் உள்ள சில சந்தேகங்களை அக்காலத்தில் இவரிடம் கேட்டுத் தெளிந்துகொண்டிருக்கிறேன். கோபம் சிறிதும் இல்லாமல் பொறுமையோடு இவர் பேசுவார்; விஷயங்களை ஆராய்வார்; பிறர் தூஷித்தாலும் கவனியார். தாம் தனிப்பாடல்களைச் சேகரித்த வரலாறுகளைப் பற்றி அவ்வப்போது சொல்வார். அவற்றை அக்காலத்திற்கேட்டபோது எனக்கு அளவிறந்த வியப்பு உண்டாகும். அவர் கூறியவற்றுள் ஒன்றை இப்போது தெரிவிக்கிறேன்.
சந்திரசேகர கவிராஜ பண்டிதர் சென்னையில் இருந்தபோது வண்ணார்பேட்டையிலுள்ள சஞ்சீவி ராயன் தெருவிற் சில வருஷங்கள் வசித்து வந்தார். ஒருநாள் இரவு நிலா நன்றாக எறித்தது. இராப் பிச்சைக்காரன் ஒருவன் வீடுதோறும் சென்று அன்னப்பிச்சை வாங்கிக்கொண்டே வந்தான். அவன் பல ஊர்களைச் சுற்றினவன். பல பாட்டுக்களை அவன் அறிந்திருந்தான். "அம்மா, பிச்சை" என்று மட்டும் சொல்லிப் பிச்சை வாங்காமல், இனிய சாரீரத்தோடு தமிழ்ப்பாடல்களைப் பாடி அன்னங்கேட்பது அவன் வழக்கம்.
பிச்சைக்காரன் பாடிக்கொண்டே சந்திரசேகர கவிராஜ பண்டிதர் இருந்த தெருவழியே வந்தான். அவனுடைய இனிய குரல் வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே வரச்செய்தது; பெண்டிர் அவன் பாட்டில் மயங்கி அவனுக்கு மனமுவந்து அன்னமளித்தனர்.
அவன் தெம்மாங்கு, வெண்ணிலாப்பாட்டு, பராபரக் கண்ணி முதலியவற்றைப் பாடுவான். ஒரு கண்ணியில் ஓரடியையே திருப்பித் திருப்பிப் பாடுவான். ஒரு தெரு முழுவதற்கும் அந்த ஒரு கண்ணியே அவனுக்குப் போதியதாக இருக்கும். அன்று வீசிய நிலாவொளியில் அவனுடைய ஞாபகம் நிலாவைப் பற்றிய பாட்டொன்றிற் சென்றது.
"ஊரைச் சுடுமோ" என்று அவன் ஆரம்பித்தான். தமிழ்ப்பாட்டாக யார் எதைச் சொன்னாலும் கேட்பதில் ஆவல்கொண்ட கவிராஜபண்டிதரை அந்த ஒலி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருவித்தது. பண்டிதர் பிச்சைக்காரனருகிலே சென்று நின்றார். அவன், "ஊரைச் சுடுமோ" என்னும் தொடரையே பலமுறை நீட்டியும், குறுக்கியும் சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்றான். பண்டிதருக்கோ அந்த நிமிஷத்தி லேயே பாட்டு முழுவதையும் அவன் சொல்லக் கேட்கவேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. அவனாகச் சொல்லட்டுமென்று காத்திருந்தார். "ஊரைச் சுடுமோ" என்பதற்குமேல் ஓரெழுத்துக்கூட அவன் வாயிலிருந்து வரவில்லை.
இவர் பொறுமையை இழந்தார்; "அந்தப் பாட்டை முழுவதும் சொல்லிவிடப்பா" என்று கேட்டார். பிச்சைக்காரன் தலையெடுத்துப் பார்த்தான். ஒன்றுமில் லாமற் பிச்சைவாங்குவதை விடச் சில பாட்டுக்களைப் பாடிப்பிச்சை வாங்க வெண்ணித் தான் பாடிவரும் பாட்டை ஒரு பெரியவர் கவனத்தோடு கேட்டு வருகிறா ரென்பதை அவன் உணர்ந்தபோது அவனுக்குச் சிறிது கர்வமும் உண்டாயிற்று.
"இதோ சொல்கிறேன்" என்று கூறி மறுபடியும், "ஊரைச் சுடுமோ" என்றே தொடங்கினான். "இவனுக்கு இதற்கு மேல் தெரியாதோ?" என்ற சந்தேகம் பண்டிதருக்கு உண்டாயிற்று. பலமுறை "ஊரைச் சுடுமோ" என்பதையே திருப்பித் திருப்பிச் சொல்லிவிட்டு அப்பால் பெரிய புதையலை வெளியிற்கொண்டுவந்தவன் போல அவன்,"உலகந்தனைச் சுடுமோ" என்றான்.
அதைக் கேட்ட பண்டிதர் அந்தப் பாட்டு ஒரு வெண்பாவாக இருக்கவேண்டுமென்று ஊகித்தறிந்தார். "பாட்டின் இனிமை முதலடியிலேயே ததும்பி நிற்கிறது! பின் அடிகள் எவ்வளவு இனிமையாக இருக்குமோ!" என்று ஏங்கினார்.
"ஐயா, நான் மறந்துவிட்டேன். தானாக வந்தால் வரும்; நானாக நினைத்தால் வருவதில்லை" என்றான் பிச்சைக் காரன்.
"யோசித்துப்பாரப்பா" என்று சொல்லிப் பண்டிதர் அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அன்ன மிடச் செய்தார். அவன் தன்னால் ஆனவரைக்கும் நினைத்து நினைத்துப் பார்த்தும் வரவில்லை. முதலடிக்கு மேலே பாடும் வழக்கம் அவனுக்கு இல்லை.
"பாட்டு முழுவதும் உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார் பண்டிதர்.
"நன்றாகத் தெரியும். எனக்கு ஒரு கிழவனார் அந்தப் பாட்டைச் சொல்லித் தந்தார். பிச்சைக்காரனுக்கு ஓரடி போதாதா? ஐயா!" என்றான் அவன்.
பண்டிதர் "எப்போதாவது பாட்டு முழுவதும் ஞாபகம் வந்தால் வந்து சொல்; இனாம் தருகிறேன்." என்றார்.
பிச்சைக்காரன், "என்னால் முடிந்தவரையிற் பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு அடுத்த தெருவுக்குப் போனான். பண்டிதருக்குத் தம் வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. அவன் உத்ஸாகங்கொண்டு ஒருகால் அடுத்த தெருவில் பாட்டு முழுவதையும் சொல்லக்கூடுமோவென எண்ணினார்; அவனைப் பின் தொடர்ந்தார். அவன் அங்கும், "ஊரைச் சுடுமோ" என்ற பாட்டையே பாடினான். தெருக்கோடியில் அவனுடைய வாயிலிருந்து இரண்டாவது அடியும் வந்தது:
ஊரைச்சுடுமோ வுலகந்தனைச் சுடுமோ
ஆரைச்சுடுமோ வறியேனே"
என்று அவன் பாடினான். பண்டிதர் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தார்; 'எத்தனை அழகான வெண்பா' என்று மகிழ்ந்தார். 'மற்றப்பகுதியும் இப்படியே இவன் வாயிலிருந்து நழுவி வராதா' என்று ஆவலோடு எதிர்பார்த்தார். அன்று அந்த இரண்டடிக்கு மேல் பிச்சைக்காரன் திருவாய்மலரவில்லை.
அப்பால் இரண்டு மூன்று நாட்கள், அன்னப்பிச்சை கேட்டு வந்த அவனிடம் இந்தக் கவியைப் பிச்சை கேட்டுக்கொண்டே பண்டிதர் தொடர்ந்து அலைந்தார். ஒரு பயனும் உண்டாகவில்லை. பிச்சைக்காரனும் நாள் முழுவதும் பாட்டை ஞாபகப்படுத்திப் பார்த்தான்; தோற்றவில்லை.
நான்காம் நாள் அவனுக்கு ஞானோதயமானது போலப் பாட்டின் பின்பகுதி உதயமாயிற்று. அதைக் கேட்ட பண்டிதர் சிறந்த குரு ஒருவரிடம் உபதேசம் பெற்றுப் பிரம்மானந்தத்தை அனுபவித்தவர் போலானார். பல வருஷங்கள் தவஞ்செய்து ஓர் அருமையான பிள்ளையைப் பெற்றால் தந்தைக்கு எவ்வளவு ஆனந்தம் உண்டாகும்! பண்டிதர் அடைந்த ஆனந்தம் அதைவிட அதிகமென்றே சொல்ல வேண்டும்.
பண்டிதர் பிச்சைக்காரனுக்கு 'இனாம்' கொடுத்தார். வேறு சில செய்யுட்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். அந்தப் பிச்சைக்காரன் தந்த பிச்சையாகிய பாட்டைத் தனிப்பாடற்றிரட்டிற் சேர்த்துப் பதிப்பித்தார். அது வருமாறு:-
- "ஊரைச் சுடுமோ வுலகந்தனைச் சுடுமோ
ஆரைச்சுடுமோ வறியேனே- நேரே
பொருப்புவட்ட மான நகிற் பூங்கொடியீ ரிந்த
நெருப்புவட்டமான நிலா."
பண்டிதர் பதிப்பித்த தனிப்பாடற்றிரட்டில் உள்ள மற்றப்பாட்டுக்கள் சிலவே அவருடைய ஞாபகத்தில் இருந்தன. அவற்றுள்ளும் இந்தப் பாட்டே அவருடைய மனத்தில் பசுமரத்தாணி போலப் பதிந்து நிலவியது.
- இது விரகதாபத்தால் வருந்திய தலைவி ஒருத்தி நிலாவொளியை வெறுத்துக்கூறியது.