தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள்
ச.சுவாமிநாதன் எம்.ஏ., (பிரித்தானியா)
பாண்டிய மன்னனுக்கு ஆபரேஷன்!
சங்க காலத்திற்குப் பின் தோன்றிய நூல்களில் மிகவும் சுவையான காவியம் சிலப்பதிகாரம். படிக்கப் படிக்கத் தெவிட்டாத நூல். இதனால்தான் சொற்தேரின் சாரதியாம் பாரதி தனது கவிதையில் "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்" என்று புகழ்கிறார். இந்த சிலப்பதிகாரத்தில் ஏராளமான அரிய செய்திகள் உள்ளன. இதனை தமிழ் இலக்கியத்தின் 'என்சைக்ளோபீடியா' (கலைக்களஞ்சியம்) என்றால் மிகையல்ல. இதனை எழுதிய இளங்கோவடிகள் நமக்குப் பொற்கைப் பாண்டியனின் கதையை வழங்குகிறார். பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அறுவைச் சிகிச்சை நடந்து, செயற்கைக் கை பொருத்தப்பட்ட செய்தியை இதிலிருந்து ஊகிக்கலாம். அக்காலத் தமிழகத்தில் மருத்துவ விஞ்ஞானம் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.
பொற்கைப் பாண்டியனின் (PANDYA WITH THE GOLD HAND)கதையைப் பலரும் அறிந்திருப்பார்கள். கீரந்தை என்ற அந்தணன் வெளியூர் செல்ல நேரிட்டது. அவன் மனைவியோ தனியாக வசிக்க பயப்படுகிறாள். அவனோ, "அன்பே, அஞ்சாதே, செங்கோல் வழுவாத பாண்டியனின் ஆட்சியில் ஒரு தவறும் நிகழாது." என்று ஆறுதல் கூறுகிறான்.
அந்தணன் இவ்வாறு கூறுவதை இரவு நேரத்தில் மாறுவேடத்தில் உளவு அறிய வந்த பாண்டிய மன்னன் கேட்டுவிட்டான். இதன் காரணமாக தினமும் அவ்வீட்டைக் கவனித்து சிறப்புப் பாதுகாப்புக் கொடுத்தான். ஒருநாள் இரவில் திடீரென்று அந்த வீட்டில் ஒரு ஆணின் குரல் கேட்டது. உண்மையில் அது அந்தப் பெண்ணின் கணவன் கீரந்தைதான். அவன் வெளியூரிலிருந்து திரும்பி வந்ததை அறியாத அரசன், அவசரப்பட்டு ஆராயாமல் கதவைத் தட்டிவிட்டான். உள்ளேயிருந்த அந்தணன் கீரந்தை, "யாரது?" என்று கேட்க, அவன் மனைவி, "பாண்டியன் ஆட்சியில் ஒன்றும் தவறு நிகழாது என்றீர்களே, பாருங்கள். இரவில் யாரோ கதவைத் தட்டுகிறார்களே!" என்று கூறுகிறாள். உடனே அரசன் அவர்களுடைய அச்சத்தைப் போக்குவதற்காக அந்தணர் தெருவிலுள்ள அத்தனை வீடுகளின் கதவுகளையும் தட்டிவிட்டு அரண்மனைக்குச் சென்றுவிடுகிறான். மறுநாள் காலையில் அந்தணர்கள் அனைவரும் அரசவைக்கு வந்து முறையிடவே, கதவைத் தட்டிய "கயவன்" தானே என்று கூறி அரசன், கையைத் தானே வெட்டிக் கொள்கிறான். அரசனின் நேர்மையை அனைவரும் பாராட்டுகின்றனர். உடனே அரசவை மருத்துவர்கள் அரசனுக்கு அறுவைச் சிகிச்சை (operation)மூலம் பொற்கையைப் (Gold hand)பொருத்துகின்றனர். அன்று முதல் அந்தப் பாண்டியனுக்குப் பொற்கைப் பாண்டியன் என்று பெயர். இது உரையாசிரியர்கள் தரும் தகவல். அக்காலத் தமிழகம் மருத்துவ விஞ்ஞானத்தில் முன்னேறி யிருந்ததால் பாண்டியனுக்குச் செயற்கையாகச் செய்த தங்கக் கையைப் பொருத்தினர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்நிகழ்ச்சியை "சிலப்பதிகாரம்", யாத்த இளங்கோவும், "பழமொழி நானூறு" எழுதிய முன்றுரை அரையனாரும் கூறுகின்றனர்.
"உதவா வாழ்க்கை கீரந்தை மனைவி
புதவக் கதவம் புடைத்தனன் ஓர் நாள்
'அரச வேலியல்லதியாவதும்
புரைதீர் வேலியில்லென மொழிந்து
மன்றத்திருத்திச் சென்றீர் அவ்வழி,
இன்றவ்வேலி காவா தோவெனச்
செவிச் சூட்டாணியிற் புகையழல் பொத்தி
நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று,
வச்சிரத்தடக்கை அமரர் கோமான்
உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தனக
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்திறை"
--மதுரைக்காண்டம்---கட்டுரைக்காதை---சிலப்பதிகாரம்.
பழமொழிப் பாடலும் இதே கதையைத தெரிவிக்கிறது.
"எனக்குத்தகவென்றால் என்பதே நோக்கித்
தனக்குக் கரியாவான் தானாய்த் தவற்றை
நினைத்துத் தன் கை குறைத்தான்;தென்னவனும்
காணார் எனச் செய்யார் மாணா வினை"
--பழமொழி
இன்னுமொரு பாட்டில் பொற்கைப் பாண்டியன் என்ற பெயரே குறிப்பிடப்படுகிறது.
"நாடு விளங்கொண்புகழ் நடுதல் வேண்டித்தன்
ஆடு மழைத் தடக்கையறுத்து முறை செய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்"
வாழ்க தென்னவன் புகழ்!
வளர்க மருத்துவ அறிவியல்!
--Geetha Sambasivam 01:29, 17 நவம்பர் 2011 (UTC)